Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் திரையில் நகைச்சுவைப் பஞ்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ்த் திரையில் நகைச்சுவைப் பஞ்சம்[/size]

அரவிந்தன், சந்திர. பிரவீண்குமார்

ஒரு முட்டாள் வேலைக்காரனிடம் அவனுடைய எஜமானன் அடிக்கடி வேலை சொல்வான். அவனிடம், ''திரு என்ற வார்த்தையை இனிமேல் சொல்லாதே'' என்று எஜமானன் ஒருமுறை சலிப்போடு சொன்னதை நிஜம் என நம்பிவிட்டான். அந்த வீட்டிற்கு திருடன் ஒருவன் இரவில் திருட வந்துவிட்டான். ''எஜமான்! டன் டிக்கிட்டு போறான் எஜமான்!'' என்று வேலைக்காரன் சொன்னது எஜமானனுக்குப் புரியவில்லை. திருடன் வந்திருப்பதை அவன் உணரும் முன்பாகவே அந்த திருடன் ஓடிவிட்டான். எஜமானன் வேலைக்காரனை நினைத்து நொந்துகொண்டார். இந்தக் காட்சி, 1940களில் வெளிவந்த 'வாழ்க்கை' என்ற படத்தில் வெளியானபோது மக்கள் குலுங்கி, குலுங்கி சிரித்தார்கள். அந்த எஜமானனாக பழம்பெரும் கதாநாயகன் டி.ஆர். ராமச்சந்திரன் நடித்திருந்தார். வேலைக்காரனாக அன்று பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கிய காளி என். ரத்தினம் நடித்தார். அந்த நகைச்சுவைக் காட்சிகளுக்காகவே அந்தப் படம் ஓடியது.

சமீபத்தில் ''அட்ட கத்தி'' என்றொரு திரைப்படம். கதாநாயகன் காதலில் தோற்றிருப்பான். அதை நினைத்து அவன் வருத்தத்தில் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயல்வான். ஆனால் சிரிப்புதான் அவனுக்கு வரும். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து போண்டா சாப்பிடுவார்கள். ஆனால் அவன் அதில் சேர்ந்துகொள்ள மாட்டான். ஒரு நண்பன் அவனை வற்புறுத்தியபோது, ''இந்த நேரத்தில் எப்படிடா''என்று கண்ணை கசக்குவான். சிறிது நேரம் கழித்து ஏதோ மறந்துவிட்டது போல நண்பனிடம் காட்டிக் கொண்டு, மீண்டும் கடைக்கு சென்று போண்டாவை முழுங்குவான். அந்த காட்சியில் திரையரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது. அந்த காட்சியில் கதாநாயகன் தினேஷ் தனது நடிப்பாற்றலை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைக்குக் கணிசமான இடம் உண்டு. ஒரு படத்தின் விற்பனைக்குப் பாடலைப் போன்றே நகைச்சுவை அவசியம். நகைச்சுவைக்காகவே ஏராளமான படங்கள் ஓடிய வரலாறு தமிழ்த் திரையுலகில் உண்டு. உதாரணமாக கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தைச் சொல்லலாம். பிரபலமான கதாநாயகனோ அல்லது அலாதியான கதையோ அந்த படத்தில் இல்லை. ஆனால் அந்தப் படத்தில் வந்த நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் பாடல்களுக்காகவும் அந்தப் படம் பெருவெற்றியை அடைந்தது. குறிப்பாக அதில் இடம் பெற்ற சாகா வரம்பெற்ற 'வாழைப்பழ ஜோக்' ஜப்பானில்கூடப் பிரபலம் அடைந்தது.

ஆனால் அண்மைக் காலமாகவே தமிழ்ப் படங்களின் கதாசிரியர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவருவதாக ஒரு குற்றச்சாட்டு பலமாக இருக்கிறது. என்.எஸ். கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ் போன்றவர்கள் கோலோச்சிய ஒரு துறையில் அவர்களுக்குப் பிறகு பெரிய ஆளுமைகள் உருவாகவில்லை என்றாலும் கவுண்டமணி, விவேக், வடிவேலு ஆகியோர் தத்தமது பாணிகளில் மக்களுக்கு நகைச்சுவை விருந்தைப் படைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். இந்தப் போக்கிலும் அண்மையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விவேக்கும் வடிவேலுவும் வெவ்வேறு காரணங்களால் பின்தங்கியிருக்கும் நிலையில் கடந்த ஓராண்டில் சந்தானம் தவிர வேறெந்த நகைச்சுவை நடிகரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உருப்பெறவில்லை.

ஆனால், சந்தானத்தின் நகைச்சுவையிலும் புதுமையோ கற்பனை வளமோ இல்லை என்று கூறப்படுகிறது. ''கவுண்டமணி செந்திலை மட்டும்தான் திட்டுவார். சந்தானம் எல்லோரையும் திட்டுகிறார். அவ்வளவுதான் வித்தியாசம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த சிறு தொழிலதிபரும் திரைப்பட ரசிகருமான எஸ்.எஸ். ராஜேந்திரன். தவிர, அவரது நகைச்சுவையில் ஆபாசம் தூக்கலாக இருப்பதாக உதவி இயக்குநரும் திரைப்பட விமர்சகருமான ஆர்.சி. ஜெயந்தன் கூறுகிறார்.

இந்தக் கருத்தை ராஜேந்திரனும் ஆமோதிக்கிறார். ''ஒரு கல் ஒரு கண்ணாடியில் போலீசில் மாட்டிக் கொண்டு அடிவாங்கும் போது சந்தானம் சொன்ன ஒரு கெட்ட வார்த்தையைத் திரும்ப சொல்லும்படி கேட்கிறார்கள். அப்போது சந்தானம் அந்த வார்த்தையைத் திரும்ப சொல்கிறார். இந்தக் காட்சி நகைச்சுவையாகச் சித்தரிக்கப்படுகிறது. இதெல்லாம் ஒரு நகைச்சுவையா?'' என்று வேதனையுடன் கேட்கிறார்.

விவேக்கும் பல படங்களில் ஆபாசம் தொனிக்கப் பேசியிருக்கிறார். இப்படி ஆபாசம் தூக்கலாக இருப்பதற்கு நகைச்சுவை நடிகர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களே ஆபாச வசனங்களைப் பேசுகிறார்கள். வில்லு படத்தில் நயன்தாரா விஜய்க்கு மார்பில் தைலம் தடவிவிடுவார். அதில் சொக்கும் நமது நாயகன், ''இப்படி செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா நெஞ்சுல அடிபடறதுக்கு பதிலா...'' என்பார். தியேட்டரில் விசில் பறக்கும். நயன்தாரா முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, ''வேற எங்க?'' என்று கேட்க, ''காலில் அடிபட்டிருக்கலாம்னு சொல்ல வந்தேங்க'' என்று சமாளிப்பார் இளைய தளபதி.

இது ஒரு சோறு (சேறு?) பதம்தான். இதுபோன்ற ஆபாசங்களை காமெடி என்னும் பெயரில் கமல் ஹாஸன், ரஜினிகாந்த் உள்படப் பல நாயகர்கள் கடைபரப்பியிருக்கிறார்கள். சகலகலா வல்லவன் படத்தில் சில வசனங்கள் மிக மோசமானவை. சிங்கார வேலன் படத்தில் ஒரு பாட்டில் வரும் சொற்களும் கமலின் அபிநயங்களும் ஆபாசமானவை. சந்திரமுகியில் வடிவேலுவின் மனைவியைக் கவர்வதுபோன்ற நடிப்பில் ரஜினி பேசும் சில வார்த்தைகள் சகிக்க முடியாதவை. விவேக், சந்தானம் போன்றவர்கள் இந்தப் போக்கை எல்லை மீறி எடுத்துச் செல்கிறார்கள். ''பல்வேறு கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகுதான் சந்தானம் தன் ஆபாச நெடியைக் குறைத்துக்கொண்டார்'' என்கிறார் ஜெயந்தன்.

நகைச்சுவை என்னும் பெயரால் தனிநபர்கள் மீதான தூற்றுதல் அதிகரித்து வருவதையும் ஜெயந்தன் சுட்டிக் காட்டுகிறார். இந்த வருடம் வெளியான 'மிரட்டல்' என்ற திரைப்படத்தில் சந்தானம் நகைச்சுவை என்ற பெயரில் கஞ்சா கருப்பு என்ற நடிகரை நாக்கூசும் வார்த்தைகளில் திட்டுவார் என்பதை ஒரு உதாரணமாக அவர் காட்டுகிறார்.

நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இப்போது அதிகமாகக் காணப்படுவதுதான் முக்கியமான பிரச்சினை. சில மனிதர்களின் உடல் அசைவு, உருவம் ஆகியவற்றைப் பிறர் கிண்டல் செய்வது இயற்கைதான். திரைப்படங்களிலும் இவை இடம்பெறத்தான் செய்யும். ஆனால் இது அத்துமீறிப் போகும்போதுதான் பிரச்சினையே. ''இருட்டுக்குப் பொறந்தவனே, கீரிப்புள்ள தலையா'' என்பது போன்ற சொற்கள் ஆழமான அவமான உணர்வை ஏற்படுத்துபவை. வானத்தைப் போல படத்தில் பிச்சைக்காரர்களை மிகவும் கேவலமாகப் பேசும் வசனம் வரும். பேரழகன் படத்தில் கூன் முதுகுள்ள சூர்யாவை விவேக் அவர் உடலை வைத்தே கிண்டல் செய்வார். அரவாணிகள், ஆத்திகர்கள், ஊனமுற்றவர்களை விவேக் பல படங்களில் கிண்டலடித்திருக்கிறார். ''நகைச்சுவை என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம். அது மற்றவர்களின் உணர்வுகளையோ, எந்தவொரு மதத்தையோ புண்படுத்தாத அளவிலோ அமைய வேண்டும்'' என்கிறார் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பட நகைச்சுவைகளை ரசித்துவரும் இல்லத்தரசி கலாவதி.

நகைச்சுவைக்கான பின்புலங்களும் திரும்பத் திரும்பப் பல படங்களில் ஒரே மாதிரி வருவதும் சலிப்பூட்டுகிறது. சில படங்களில் கதாநாயகர்களை வெறுப்பேற்றுவதற்காக நாயகிகள் நகைச்சுவை நடிகர்களைக் காதலிப்பதுபோல் நடிப்பார்கள். சிலவற்றில் காமெடியன்கள் நாயகிகளை ஒருதலைபட்சமாக காதலிப்பார்கள். இதுபோலப் பல படங்கள் வந்துவிட்டன.

நகைச்சுவை நடிகர் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டவர் அல்ல. எம்.ஜி.ஆரின் ரசிகரும், சிவாஜியின் ரசிகரும் நாகேஷின் ரசிகர்கள். ரஜினி ரசிகரும், கமல் ரசிகரும் கவுண்டமணி-செந்தில் ஆகியோரின் ரசிகர்களாக இருந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம். இதே விஷயம் விவேக், வடிவேலுவுக்கும் பொருந்தும். குழந்தைகள் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களின் ரசிகர்களாகவே இருப்பது வாடிக்கை. காரணம், அவர்களது செயல்கள் படத்தின் ஓட்டத்தைக் கலகலப்பாக்குகின்றன. எனவே நகைச்சுவை என்பது பல தரப்பினரையும் பல விதமான ரசனை கொண்டவர்களையும் பல்வேறு வயதினரையும் ஒருசேரக் கவரக்கூடியது என்பது வெளிப்படை. இப்படி எல்லோரையும் இணைக்கும் நாகரிகமான நகைச்சுவை இன்று தமிழ்த் திரையில் பஞ்சமாகிவருவதுதான் வேதனை. கதாநாயகர்களும் நகைச்சுவையாக நடிப்பதற்கு விஷேசமான காரணம் உண்டு. படத்தின் கதை சரியாக அமையாவிட்டாலும் நகைச்சுவைக்காகவே படம் ஓடிவிடும். குடும்பத்தோடு பார்ப்பதற்கும் இது ஏற்றது. எம்.ஜி.ஆர், சிவாஜிகூட நகைச்சுவையாக நடித்திருக்கிறார்கள். ரஜினி பல படங்களில் நகைச்சுவையாக நடித்திருக்கிறார். கமலுடைய நகைச்சுவைப் படங்கள் தனி முத்திரை பதித்தவை. கார்த்திக், எஸ்.வி. சேகர், பாக்கியராஜ், பாண்டியராஜன் ஆகியோரின் படங்கள் அவர்களது நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது. புதிய கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு நகைச்சுவை இயல்பாகவே வருகிறது.

இது தவிர இயக்குநர்கள் மௌலி, விசு, வி.சேகர் ஆகியோர் நகைச்சுவை சார்ந்த சமூகப் படங்களைத் தந்துள்ளார்கள். இந்தப் பட்டியலை எழுதிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் ஏறத்தாழ வெற்றியும் அடைந்துள்ளன. பழைய காலத்தில் என்.எஸ். கிருஷ்ணன் தனது சமூக அக்கறையை நகைச்சுவைக் கலந்து வெளிப்படுத்துவார். அவருக்குப் பிறகு சந்திரபாபு, நாகேஷ், ஆகியோர் பெரிய அளவில் மக்களைக் கவர்ந்தார்கள். தங்கவேலு, சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, வில்லன் நடிகர்களில் எம்.ஆர். ராதா, அசோகன் போன்றவர்களும் தமிழ்த் திரையின் நகைச்சுவைக்குப் பங்களித்திருக்கிறார்கள்.

''தேங்காய் சீனிவாசன் நடித்த சில காட்சிகள் நன்றாக இருக்கும். ஆனால் ரொம்பவும் சத்தமாகப் பேசி நடிக்கும் காட்சிகள் பிடிக்காது. அதேபோல கவுண்டமணி கதையின் பாத்திரத்தோடு கலந்து நகைச்சுவை செய்யும் போது நல்லா இருக்கும். வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' நல்லா இருந்தது. ஆனா மற்றபடி இப்ப வரும் காமெடில கூச்சலும், இரைச்சலும் மட்டுமே இருக்கு'' என்று கருதுகிறார் கலாவதி.

இன்றும் பல நகைச்சுவை நடிகர்கள் களத்தில் இருக்கிறார்கள். எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமைய்யா ஆகியோர் குணசித்திரம் கலந்து நடிக்கிறார்கள். ஆனால் சந்தானத்தின் டைமிங் கமெண்ட்களாலும் கூர்மையாலும் அவர் மட்டுமே முன்னணியில் இருக்கிறார். மேலும் நகர்ப்புற ரசிகர்களை கவர்வது அவருக்குக் கூடுதல் பலம். பல கதாநாயகர்கள் சந்தானம் படத்தில் இருப்பது தங்களது படத்துக்குப் பாதுகாப்பு என்று கருதுகிறார்கள். சந்தானத்தை நம்பிப் பூஜை போடுபவர்களும் இருக்கிறார்கள்.

சந்தானம் வருவதற்கு முன்பு விவேக்கும், வடிவேலுவும் தங்களது நகைச்சுவைகளால் கடந்த பத்து வருடங்களாக ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார்கள். ஆனால் விவேக் 'கருத்து கந்தசாமி'யாக வலம் வந்து எல்லாப் படங்களிலும் தனது 'கருத்தை' உதிர்த்துக்கொண்டே வருவது மக்களைச் சலிப்படையச் செய்கிறது.

வடிவேலுவின் காமெடி எல்லாத் தரப்பினரையும் கவர்கிறது. அவர் பேசும் வசனங்களும் அவரது குரலின் அசாத்தியமான தொனிகளும் மக்கள் மத்தியில் புதிய தொடர்பு சாதனமாகவே ஆகிவிட்டது. தமிழ் மக்களின் மொழியையே அவரது காமெடி ஓரளவுக்கு மாற்றியிருக்கிறது என்றும் சொல்லலாம். 'மறுபடியும் முதல்லேந்தா?', 'சார் இன்னும் டீ வரல', 'பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மன்ட் வீக்கு', 'நாங்களும் ரவுடிதான்' என்பன போன்ற வசனங்கள் தமிழ் வாழ்வின் பல்வேறு தருணங்களுக்குப் பொருந்திப் போகும் படிமங்களாகவே மாறிவிட்டன.

ஆனால் அண்மைக் காலங்களில் அவரது பாணி சலிப்பு ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. ''இன்னும் புதுசு புதுசா எப்படியெல்லாம் அடி வாங்கலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்'' என்று அவரே சொல்லுமளவுக்கு அது பழகிவிட்டது. தவிர, அரசியல் காரணங்களாலும் அவர் கடந்த ஓராண்டுக்கும் மேல் அஞ்ஞாத வாசம் இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் சந்தானத்தின் கை ஓங்கி, மற்ற பலரது பிரவேசமும் வளர்ச்சியும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் யாருமே பெரிய நகைச்சுவைக் கலைஞர்களாக உருப்பெறுவதற்கான அறிகுறி தென்படவில்லை என்பதுதான் சோகம். ''கிராமப்புற நகைச்சுவைகளில் சூரியின் நடிப்பும், நகர்ப்புற நகைச்சுவைகளில் சத்யனுடைய நடிப்பும் ஆறுதலளிக்கிறது'' என்கிறார் ஜெயந்தன்.

விவேக்கும் வடிவேலுவும் தங்களை மறுகண்டுபிடிப்பு செய்துகொண்டால்தான் மேலும் சிகரங்களைத் தொட முடியும். கருத்து சொல்வது, மிமிக்ரி செய்வது, அடி வாங்குவது, கதாநாயகியை ஒருதலையாகக் காதலித்து மூக்குடைபடுவது என்பன போன்ற அடிபட்டுத் தேய்ந்துபோன பாதையை விட்டுப் புதிய பாதையில் இவர்கள் பயணிக்க வேண்டும். நிஜ வாழ்விலிருந்து அங்கதம் ததும்பும் தருணங்களை எடுத்து அவற்றுக்குத் திரை வடிவம் தர வேணும். கதையோடு ஒட்டிய நகைச்சுவைப் பாத்திரங்களை உருவாக்க வேண்டும்.

நகைச்சுவையானது வாழ்க்கையின் ஓட்டத்தில் இருந்து வெளிப்படுவது. வித்தியாசமான கோணத்திலிருந்து பரிமளிப்பது. நிஜ வாழ்விலிருந்து யதார்த்தமான நகைச்சுவைகளைத் திரையில் கொண்டுவந்தால் அது நினைத்து நினைத்துச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். இல்லையேல் தலையில் அடித்துக்கொண்டு சிரிப்பாய்ச் சிரிக்க வேண்டியதுதான்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=cfe0346f-b934-4e78-9143-c7037728eab5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.