Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரவ சுவாமியும் கோனாச்சானாவும்

Featured Replies

வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இயற்பெயர் தெரியாது என்றுதான் சொல்வார்கள். எலக்சன் சமயத்தில் ஓட்டுப் போடுமிடத்தில்தான் இவரின் இயற்பெயர் அழைக்கப்படும். சங்கக்கடை மனேச்சர்கூட "கோவன்னா சங்கரப்பிள்ளை" என்று கூப்பன் மட்டையைப் பார்த்து முணுமுணுப்பாக வாசித்துவிட்டு உரத்து "கோனாச்சானா" என்றுதான் அழைப்பார். முறையாகப் பார்த்தால் "கோவன்னாச் சானா" என்றுதான் வரவேண்டும். இத்தவறை யாரும் கவனிப்பதாக இல்லை.

வயசென்று பார்த்தால் இவருக்கு ஒரு அறுபத்தைந்து மதிக்கலாம். கொஞ்சம் ஒல்லியான ஆனால் உறுதியான தேகம். சட்டை போடமாட்டார். சாரம் -அல்லது கோயில், குளம், விஷேசம் என்றால் வேட்டி அணிவார். மேலே போடும் துவாய், வேட்டியணியும் நாட்களில் நல்ல கைத்தறிச் சால்வையாக மாறும். நெற்றியில் எப்பவும் திருநீறு. போகிறவழியில் கோயில் இருந்தால் சந்தனத்தை எடுத்து நெஞ்சில் பூசுவார். சிக்கனம் எல்லாம் பார்க்காமல் நிறையப் அப்பி விடுவார். ஐந்து ஆறாம் வகுப்புவரை படித்திருக்கலாம். அந்தக் காலங்களில் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஆசாமியின் சிந்தனை எல்லாம் எப்போதும் "வயல், குளம், நெல்லு, குரக்கன், வெங்காயம் , மிளகாய், ஆடு, மாடு" என்றுதான் இருக்கும். வேறு எதைப்பற்றியும் கதைப்பதில்லை. நல்ல மனிசன், ஆனால் நல்ல மனிசனாக இருப்பதாற் கொஞ்சம் அப்பாவி.

வைரவ சுவாமியும் ஒரு அப்பாவிதான். கெட்டித்தனமாக நடந்து நல்லூர்க் கந்தன் மாதிரி ஒரு கோவிலில் குந்தியிருக்கத் தெரியவில்லை. மக்கள் ஊருக்கு ஊர் மரத்திற்குக் கீழே ஒரு சூலத்தை நட்டு இது உனக்குப் போதும் என்று சொல்லிவிட்டார்கள். சில ஊர்களில் பரிதாபப் பட்டு மூன்று பக்கமும் சுவர் வைத்து ஒரு 'தம்மாத்துண்டு" கோவில் கட்டி வைத்தார்கள். வைரவருக்கும் தணியாத ஆசை. ஒரு 'சோக்கான கோவிலில்' ஆறுகாலப் பூசையுடன் 'செற்றில்' பண்ண. இது சரிவராவிட்டால் சந்நிதி கோவில் மாதிரி ஒரு சுமாரானா கோவில் என்றாலும் பரவாயில்லை என்று ஒரு 'பிளான் B" உம் வைத்துள்ளார். முன்னமே சொன்னேன் வைரவர் கொஞ்சம் அப்பாவிதான். அவருக்கு பசையுள்ள ஒரு ஆசாமியின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்கு ஒரு கோவில் கட்டாமல் காலத்தைக் கடத்துகிறாயா?" என்று நைச்சியமாகச் சொல்லத் தெரியவில்லை. இரண்டு, மூன்று கமக்காரர்களின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்குக் கோயில் கட்டு" என்று நேரடியாகவும் சொல்லிப் பார்த்தார். முதல் ஆள் தீவிர பெரியார் பக்தர். "எடே உழைக்காத கள்ளா! ஓடித்தப்பு" என்று பாதி நித்திரையில் எழும்பிக் கத்தத் தொடங்கினார். இரண்டாவது ஆள் மறதி/மாறாட்டக்காரன். காலை நித்திரையால் எழுந்ததும், "அட, கோவிலுக்கும் பொங்கச் சொல்லி வைரவர் சொன்னவர்" என்று பெண்டாட்டிக்குச் சொன்னர். மனைவி சீரியஸ்ஸாக எடுக்கவில்லை. எனவே வைரவருக்குப் பொங்கல் கூடக் கிடைக்கவில்லை.

மூன்றாவது முறை வைரவருக்கு 'லக்' அடித்தது. பெரிய கிணற்றடி சின்னையா உடனே அலுவலைப் பார்க்க எண்ணினார். கையில் காசில்லை. அடுத்த போகம் வெங்காயத் தோட்டத்தைப் பத்தாயிரம் கன்றாக்கினார். வைரவருக்கு கோவில் வரப்போகுது என்று புரியத் தொடங்கியது. 'நல்லூர்க் கந்தசாமி" கோவில் மாதிரி இல்லாவிட்டாலும் இப்போதைக்கு ஒரளவு பெரிய கோவில் எனக்கு என்று கனவு காணத் தொடங்கினார் உடம்பும் பூரிப்பாக மாறி மினுமினுக்கத் தொடங்கியது. பெரிய கோவில் என்றால் நல்ல 'பொலிஷ்' ஆகவும் இருக்கவேண்டும்தானே. வைரவருக்கும் தான் கொஞ்சம் 'வெள்ளையாக' மாறினால் என்ன என்று ஒரு சின்ன ஆசையும் வந்தது.

கோவில் விடயத்தில் நடந்ததோ வேறை. கிணத்தடிச் சின்னையாவுக்குக் அடுத்த போகம் வெங்காயம் நல்ல விலைக்குப் போனது. லொறிக் கூலி, நாலம் குறுக்குத் தெரு 'கமிசன் கடைக்காரனின்' வெட்டுக்கள் எல்லாம் போயும் கையில் காசு கனக்க மிஞ்சியது. எல்லாம் "வைரவர் அருள்" என்று சொல்லிக்க கொண்டார். சொல்லிக் கொண்டாலும் "கனவை நம்பிக் கோவில் எல்லாம் கட்டவேண்டுமா?" என்றும் சற்று சிந்திக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை. என்றாலும் தெய்வக் குற்றம் ஏதாவது செய்ய வேண்டும். சின்னையர் அருகில் உள்ளா ஒரு கொல்லன் பட்டடைக்குப் போனார். திருப்பி வரும்போது நல்ல இரும்பில் 'அடித்த' ஒரு திரிசூலம் ரெடி. அன்றைக்குப் பின்னேரமே ஊருக்கு வடக்குப் புறம் இருக்கிற வெளிக்குப் போனார். வெறுமனே போகவில்லை. பெண்டாட்டி பிள்ளை, குட்டி, மூன்று கடகம் மோதகம், இரண்டு கடகம் வடை, இரண்டு பெரிய கதலி வாழைக் குலைகளுடன்தான் போனார். றோட்டுக் கரையில் இருகிற ஒரு சுமாரான சைஸ் மருத மரத்தைத் தேர்ந்தெடுத்தார். நிலத்தில் முறுகிப் பரவியிருந்த வேரில் திரிசூலத்தைக் கஷ்டப்பட்டுக் குத்தினார். இப்படித்தான் கண்டாமடம் வைரவர் கோவில் வந்த கதை.

வைரவருக்கும் கொஞ்சம் மனக்குறைதான். "மூன்று பக்கமும் சீமந்துச் சுவராவது கட்டியிருக்கலாம்" என்று முணுமுணுத்துக் கொண்டார்.

**************************

கண்டாமடம் வைரவர் கோவில் இருப்பது ஊரில் இருந்து கொஞ்சத் தூரம் தள்ளி. இன்னும் கொஞ்சத் தூரம் போனால் சுடலை. இடம் களிமண் தரை. வெங்காயம், நெல், குரக்கன் ,சாமி (சாமை) எல்லாம் விளையும் காணிகளும் அருகில். என்றாலும் வைரவர் கோவில் இருக்குமிடம் முள்ளுக்காடுகள் நிறைந்த இடம். இடைக்கிடை இருக்கும் வெறும் நிலத்தில் மழை பெய்யுங்காலங்களில் நல்ல பச்சைப் புல் முளைக்கும். பக்கத்தில் நல்ல தண்ணிக் கிணறும் உண்டு. பள்ளிக் கூடம் விட்டபின் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள், விடலைகள் இந்த இடத்தில் சந்திப்பார்கள். பெடியளுக்கு தினமும் ஆடு, மாடு மேய்ப்பது, கிட்டிப்புள் விளையாடுவது, வீட்டில் இருந்து களவாகக் கொண்டுவரும் தேயிலைத்தூள், சீனி, உடன் கறந்த பாலுடன் டீ போட்டுக் குடிப்பது என்று அலுத்துவிட்டது. வைரவருக்கும் வடை, வாழைப்பழத்துடன் படையல் கிடைப்பதுவும் அருகி விட்டது. இப்படி ஒருநாளில் தான் ஒரு பெடியன் வைரவருக்கு வேண்டுதல் வைத்தான், "வைரவரே எங்களுக்குத் 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தேவையில்லை. தினமும் வடை, மோதகம், புக்கை, வாழைப்பழம் என்று கிடைக்க வழி செய்வாய்" என.

வைரவருக்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விருபமில்லை. "யார் சொன்னது, இவங்களில் யாரோ ஒருவன் படித்து டாக்குத்தர், இஞ்சினியர், எக்கவுண்டன் என்று பின்னாட்களில் நன்றாக வந்தால் ஒரு பெரிய சோக்கான கோயில் எனக்குக் கட்ட மாட்டாங்களா என்ன?" என்று கணக்குப் போட்டார். இந்த இடத்தில் நீங்கள் சிரிக்கக் கூடாது. முன்னமே சொல்லி விட்டேனே வைரவர் ஒரு அப்பாவி என்று. அத்தோடு வைரவர் கணக்கிலும் 'வீக்'. இருக்கட்டும், வைரவர் அருள் பாலிக்கத் தீர்மானித்தார். அத்தோடு அவர் இப்பதான் 'தீடீரெனத் தெரிவதும் உடனே மறைவதும்' கலையைக் கற்கத் தொடங்கி சுமாரான வெற்றியும் ஈட்டுகிறார். (சிலவேளை சொதப்புகிறார், அநேகமாகச் சரிவருகிறது).

சிலநாட்கள் இப்படியே போய்விட்டது. வைரவருக்கும் இப்போது கனவிற் தோன்றி வேண்டுதல் அல்லது கட்டளை கொடுப்பதில் நம்பிக்கை குறைந்துவருகிறது. மக்கள் இதையெல்லாம் சீரியஸ் ஆக எடுகிறார்கள் இல்லை. இனிக் கொஞ்சம் 'வித்தியாசமாக' எதையாவது செய்வது என்று தீர்மானித்தார்.

ஒரு புதன்கிழைமை காலை பதினோரு மணி. கோனாச்சானா கண்டாமடம் வைர. கோவிலில் வந்து "அப்பனே, முருகா, வைரவா!" என்று ஒரு கும்பிடு போட்டார். பிறகு செவிகளைப் பிடித்துக் கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டார். கண்களை மூடாமலே வேண்டுதல்களைச் சொல்லத் தொடங்கினார்.

"பக்தா கண்களை மூடு" திடீரேன ஒரு குரல் மருதமரத்தில் இருந்து கேட்டது. குரலில் ஒரு தெய்வீகம். ஆனால் ஒருவித கம்பீரமான உத்தரவிடும் தொனி.

"ஐயா நீங்கள் ஆர்?" கோனாச்சானா கண்களைத் திறக்காமல் பயபக்தியாகக் கேட்டார்.

வைரவருக்குக் கடுப்பு. இந்தநேரம் இது "முருகன், சிவபெருமான், பிள்ளையாராக' இருந்தால் இப்படி ஒரு கேள்வி வருமா? என் குரலில் 'தெய்வீகத்தன்மை" போதாதா? எனறு ஒருவித சுய பச்சாபமும் வந்தது. என்றாலும் வைரவர் முடிவெடுத்ததை நிறைவேற்றியே தீருவேன் என்றிருந்தார்.

"பக்தா மேலே பார்"

"ஒண்டுமே தெரியல்லையே?"

"கண்களைத் திற பக்தா" ரொம்ப மினக்கெட்டுக் கனிவாகச் சொன்னார் வைரவர்.

இப்பதான் கோனாச்சானா கண்களைத் திறக்கிறார். மருத மரத்தில் ஒரு கரிய குண்டான ஒரு பேர்வழி. சுருட்டை முடி. கொட்டைப் பாக்கு முழி. பெரிய தொந்தி. ஆனால் உறுதியான உடல்வாகு.இரண்டு வேட்டைப் பற்களும் வாயை மூடியிருக்குப்போதே மிக மெலிதாகத் துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தன. இவரின் தந்தையார் இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது வைரவ சுவாமி எப்படி இருப்பார் என்று சொல்லியிருந்தார். எல்லாம் பொருந்தி வந்தது. ஆனால் இந்த வைரவர் கொஞ்சம் வயசாளி மாதிரி இருந்தார்.

"இது மெய்யா அல்லது யாரும் விளையாடுகிறார்களா?" என்று யோசிக்கும்போதே வைரவர் மறைந்து விடுகிறார். கோனாச்சானாவிற்கும் இது வைரவ சாமிதான் என்று புரிகிறது.

"பக்தா கண்களை மூடு" வைரவர் அவசரமாகச் சொல்கிறார். (கன நேரம் மறைந்திருப்பது சிரமம். அத்தோடு வைரவருக்கும் தன் 'மறைந்திருக்கும்" கலையில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.)

"எனக்குத் தினமும் வடை, மோதகம், புக்கையுடன் படையல் வைப்பாய். அத்தோடு பாயசமும் இருந்தால் நல்லது" வைரவர் கடைசியாகச் சொன்னது இதுதான். கோனாச்சான அரை மணித்தியாலம் கழித்துத்தான் கண்களைத் திறந்தார்.

vairavar%2B3%2Bvadai%2Bmaalai.jpg

**************************

கதை ஊரில் பரவி விட்டது. நினைத்ததைவிட அதிகம் பேர் நம்பினார்கள். நம்பியவர்கள் எல்லாம் அள்ளி வழங்க, வைரவருக்குத் தினமும் வடை, மோதகம், புக்கை, சிலநாட்களில் பாயசம் என்று வேட்டைதான். பின்பலனாக ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கும் தினமும் இவை கிடைத்தன. இது, இரு கிழமைகள் தொடர்ந்தன. மூன்றாம் கிழமையில் இருந்து வடை இருந்தால் மோதகம் இல்லை அல்லது மோதகம் இருந்தால் வடை இல்லை என்றாய் விட்டது. பிறகு அவற்றின் எண்ணிக்கைகளும் குறையத் தொடங்கியது. நாட் போகப் போக வடை மோதகமெல்லாம் மெலியத் தொடங்கின. ஆடு மேய்க்குக் சிறுவர்களுக்கு இப்போது ஆளுக்குப் பாதி வடை அல்லது மோதகம் கிடைத்தால் அதிசயம்.

தினமும் படையல் என்பது வாரம் ஒன்றாகியது. பிறகு அமாவாசை , பௌர்ணமி என்று சிறப்பு நாட்காளில் மட்டும். பிறகு எல்லாரும் வைரவரை மறந்து விட்டார்கள். வைரவர் மட்டும் கொண்ட கொள்கையில் பிடியாக இருந்தார்.

அன்றைக்கு ஒரு நல்ல பௌர்ணமி நாள். கோனாச்சானா தோட்டத்திற்கு இறைப்பு வேலை முடிந்து அலுத்துப் போய் கண்டாமடம் வைரவர் கோவிலில் "அப்பனே, முருகா, வைரவா!" என்று சொல்லிக்க் கொண்டு சாமி கும்பிடத் தொடங்கினார். இரவு எட்டு மணி இருக்கும். நிலவு உண்மையிலேயே இரவைப் பகலாக்கியமாதிரி எறித்துக் கொண்டிருந்தது.

"பக்தா கண்களை மூடு" அசரீரி கேட்டது. இவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். மரத்தில் அதே வைரவர்தான்.

"பொறுக்கிப் பயலே, என்னை ஏமாத்திறியா?" என்று அருகில் இருந்த நீண்ட கம்பைத் தூக்கிக் கொண்டு கோபமாக இவர் வர, மரத்தில் இருந்து குதித்து ஓடித் தப்பினார் வைரவர்.

-------------------------------------

படம் http://www.tamilmurasuaustralia.com/2010/07/blog-post_1486.html இலிருந்து

http://www.ssakthivel.com/2012/11/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.