Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? ஓர் இறுதிப் பரிசீலனை - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? ஓர் இறுதிப் பரிசீலனை - யதீந்திரா[/size]

தமிழர்களின் அரசியல் எதிர்காலத்திற்காக செயலாற்றிக் கொண்டிருப்பதாக கூறிக்கொண்டிருப்போரின் எதிர்காலம் என்ன என்னும் கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல நாட்களாக பலராலும் பல்வேறு வகையில் எழுப்பப்பட்டு வந்த மேற்படி கேள்விக்கு, ஒருவாறு இப்போது ஒரு தெளிவான பதில் கிடைத்துவிட்டதாகவே தெரிகிறது. அதாவது, தமிழரசுக் கட்சி உள்ளடங்கலாக ஐந்து கட்சிகளும் இணைந்து ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயற்படுவது ஒரு போதுமே சாத்தியப்படப் போவதில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுமா அல்லது இல்லையா என்னும் கேள்வி இனி நமக்கு தேவையற்ற ஒன்றாகும். இந்த இடத்தில் இப்பத்தி முன்னிறுத்தும் கேள்வி - அப்படியாயின் அடுத்து வெளித்தெரியும் தெரிவு என்ன? உண்மையில் இப்படியொரு கேள்வி எழுந்திருப்பது துரதிஸ்டவசமானதுதான். எந்த அமைப்பு தமிழ் மக்களின் தலையெழுத்தை திருத்தி எழுதப் போவதாக பலரும் நம்புகின்றனரோ, அந்த அமைப்பின் எதிர்காலமே இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

இறுதியாக ஐந்து கட்சிகள் சந்தித்துக்கொண்ட கூட்டத்தில், தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபட அறிவித்துவிட்டது. பழம்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சி, தனது தனித்துவத்தை இழக்கும் வகையில் எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்காது என்று அக்கட்சியின் உயர்பீடம் வெள்ளிடைமலையாக தெரிவித்துவிட்டது. பதிலாக, ஒரு புரிந்துணர்வு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் தொடர்ந்தும் ஓர் கூட்டமைப்பாக செயற்படலாம் என்னும் ஆலோசனையையும் தமிழரசு கட்சி முன்வைத்துள்ளது. இந்த உடன்பாட்டின் கீழும், கூட்டமைப்பு தற்போது இருப்பது போன்றே இருக்கும், ஒவ்வொரு கட்சியும் தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். வழமைபோல் தேர்தல் காலங்களில் மீண்டும் எவருக்கு எத்தனை ஆசனங்கள் என்பதில் மல்லுக்கட்டிக் கொள்ளலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவதானத்தில், இப்போது தமிழ் மக்களின் அரசியல் என்பது தேர்தல் காலங்களில் ஆசனங்களை பங்கிடுவதற்கான ஒரு பிரச்சனையே தவிர, வேறு பெரிதாக ஒன்றுமில்லை. இந்த இடத்தில் பிறிதொரு கேள்வியும் எழுகிறது - அப்படியாயின் ஏன் தமிழரசுக் கட்சி தவிர்ந்த நால்வரும் ஒன்றிணைந்து ஒரு வலுவான அரசியல் அமைப்பாக இயங்க முடியாது? அதில் என்ன தடை? இப்படி ஒரு கேள்விக்கு சென்றால் அடுத்து ஒரு பிரச்சனை எழுகிறது.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த, நான்கு கட்சிகளும் ஓர் கூட்டமைப்பாக தொழிற்படுவது பற்றிய கலந்துரையாடல்கள் சிலவும் ஏற்கனவே இடபெற்றுள்ளன. ஆனால் அங்கும் பிரச்சனைகள் ஏராளம். அங்கும் ஒரு விவாதம் எழுந்திருக்கிறது - அப்படியாயின் அதில் யார் தலைவர்? உதாரணமாக, மேற்படி நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து 'உதயசூரியன்' சின்னத்தில், ஓர் கூட்டமைப்பாக இயங்குவதென்று தீர்மானித்தால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர், ஆனந்தசங்கரிக்கு கூட்டமைப்பின் தலைவர் அல்லது செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டிவரும். ஆனால் அதில் அனைவரும் ஒருமித்த உடன்பாட்டிற்கு வர முடியவில்லை.

குறிப்பிட்ட நான்கு கட்சிகளுக்கும் ஓர் கூட்டமைப்பாக தொழிற்பட வேண்டுமென்னும் அக்கறை இருப்பினும், பரஸ்பரமான புரிந்துணர்வோ உடன்பாடோ இதுவரை ஏற்படவில்லை. பதிலாக, சந்தேகங்கள்தான் ஏராளமாக இருக்கின்றன. இந்த அடிப்படையில் பார்த்தாலும் குறிப்பிட்ட நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து இயங்குவது என்பதும் ஒரு முயல்கொம்பாகவே தெரிகிறது. இந்த அடிப்படையில் நிலைகொண்டு சிந்தித்தால், இந்த பத்தியாளரின் கணிப்பின்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது துண்டு துண்டாக சிதறிப்போகக் கூடிய ஒரு காட்சியாகவே தெரிகிறது. இனி அது எவ்வாறு துண்டு துண்டாகலாம் என்பதுதான் எஞ்சியிருக்கும் கேள்வி.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் நிலவிவருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமாக இருந்தபோதும், அதனை பகிரங்கப்படுத்தி, ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தவர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆவார். இதுபற்றி தொடர்ந்தும் குரல் எழுப்பியவரும் அவர்தான். இதன் காரணமாகவே கூட்டமைப்பின் முரண்பாடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தமிழரசுக் கட்சியின் தலைவரான இரா.சம்பந்தன் அவர்களுக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் இடையிலான முரண்பாடு போன்றே தோற்றம் காட்டியது. இதன் கீழ் தமிழரசுக் கட்சியினரைப் பொறுத்தவரையில் சுரேஸ் ஒரு பிரச்சனைக்குரிய நபராகவே பார்க்கப்பட்டார். அவர் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாக இருக்கிறது. எக்காரணம் கொண்டும், சுரேஸ் பிரேமச்சந்திரனது வேண்டுகோளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் தமிழரசுக் கட்சியின் உயர்பீடம் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாகவே, மட்டக்களப்பில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் சம்பந்தன் அவர்கள் வழங்கிய பேருரையில், இப்போது இருப்பது போன்றே தமிழரசுக் கட்சி எப்போதும் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் என்றவாறான வசனம் சேர்க்கப்பட்டிருந்தது. இதன் மூலம் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு தெளிவான செய்தியும் சொல்லப்பட்டிருந்தது. இதன் பின்னர் மீண்டும் கூட்டமைப்பின் உள் முரண்பாடு ஊடகங்களின் பேசுபொருளானது. இது பற்றி சம்பந்தன் அவர்கள் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில், நாங்கள் யாரின் மீதும் இந்தக் கருத்தை திணிக்கவில்லை, யாரையும் எங்களுடன் இருக்குமாறு நிர்ப்பந்திக்கவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் அப்போதே சம்பந்தன் அவர்கள் ஒரு தெளிவான செய்தியை குறிப்பிட்டிருந்தார். சுரேஸ் பிரேமச்சந்திரன் விரும்பினால் அவரது வழியில் செல்லலாம் என்பதுதான் அந்த செய்தி. ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரனால் அது இன்றுவரை முடியவில்லை. ஏன்?

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்வதில் சிரமப்பட வேண்டியதில்லை. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கமே சற்று சிக்கலான ஒன்றாகும். அந்த சிக்கல்களில் இருந்துதான் இன்றைய முரண்பாட்டை ஒருவர் மதிப்பிட வேண்டும். முதலில் இதற்கு 2009 இற்கு முன்னர் இயங்கிய த.தே.கூட்டமைப்பை விளங்கிக் கொள்வது அவசியமாகும். 2009 இற்கு முன்னர் கூட்டமைப்பு என்பது விடுதலைப்புலிகளின் புரிதலில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு அரசியல் வாசிப்பு வட்டமாகும். விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை வெறுமனே வாசிப்புச் செய்வதும், அது பற்றி ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வது மட்டுமே அன்றைய கூட்டமைப்பின் வேலையாக இருந்தது. விடுதலைப்புலிகள் தங்களுக்கான மக்கள் ஆதரவைக் கொண்டு, கூட்டமைப்பினை தேர்தலில் அமோக வெற்றிபெறச் செய்ததும், குறிப்பாக செ.கஜேந்திரன் போன்றவர்களை அதிக விருப்பு வாக்குகளில் வெற்றிபெறச் செய்ததும், கூட்டமைப்பை ஒரு பலமான அரசியல் அமைப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, பல்வேறு நாடுகளாலும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்த புலிகள், தாங்கள் ஜனநாயக அமைப்புக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை சர்வதேசத்துக்கு நிரூபிக்கும் வகையிலும், குறிப்பாக இரா.சம்பந்தன் போன்ற மூத்த மிதவாதத் தலைவர்களே தங்களுடன் கைகோர்த்திருக்கின்றனர் என்பதை காட்டும் வகையிலுமே கூட்டமைப்பை கையாண்டிருந்தனர்.

அன்றைய சூழலில் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த அரசியல் கட்சிகளும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் புலிகளை ஏற்றுக் கொண்டுமிருந்தனர். கூட்டமைப்பினர் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதற்கான நிகழ்சிநிரலையும் புலிகளே வழங்கி வந்தனர். உண்மையில் இந்தக் காலத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இரா.சம்பந்தன் வெளியுலகுக்கு அறியப்பட்டிருந்தாலும், புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்செல்வனே கூட்டமைப்பின் உண்மையான தலைவராக செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

இத்தகையதொரு நிலையில்தான், 2009இல் புலிகளின் அழிவு நிகழ்கிறது. புலிகளின் அழிவைத் தொடர்ந்து, அதுவரை புலிகளால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருந்த கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் கைகளுக்கு மாறுகிறது. அப்போது, கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருந்திருந்தாலும், தமிழரசுக்கட்சிக்கே சட்டபூர்வமான அதிகாரம் இருந்தது. தமிழரசுக்கட்சி தனக்குள்ள சட்பூர்வமான அதிகாரத்தைக் கொண்டு, கூட்டமைப்பின் தீர்மானிக்கும் இடத்தை இலுகுவாக எடுத்துக் கொண்டது. அதாவது விடுதலைப்புலிகளின் இடத்தை, தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டது. இந்த இடம்தான் முரண்பாட்டின் மையப் புள்ளி ஆகும். தமிழரசுக்கட்சி விடுதலைப் புலிகளின் இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டதும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வெளியேற்றத்தின் போது, இப்போது போர்க்கொடி தூக்கியிருக்கின்ற சுரேஸ் பிரேமச்சந்திரனும் அவர்களது வெளியேற்றத்தில் பங்களித்திருந்தார். இப்போது சுரேஸின் தவணை ஆரம்பித்திருக்கிறது. எனவே த.தே.கூட்டமைப்பில் ஏற்படப் போகும் அடுத்த உடைவு பெரும்பாலும் சுரேஸ் பிரேமச்சந்திரனில் இருந்தே ஆரம்பிக்கலாம். தமிழரசுக்கட்சியினர் தங்களுக்குள்ள சட்டபூர்வ தகுதியைக் கொண்டு, சுரேஸ் பிரேமச்சந்திரனை வெளியேற்றலாம். உதாணரமாக, அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கான ஆசனத்தை வழங்காது விடலாம்.

இவ்வாறான சூழலில் தொடர்ந்தும் ஒரு கூட்டமைப்பாக தொழிற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றனவா என்று பார்த்தால், ஒரு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. தமிழரசுக் கட்சி தவிர்ந்த நால்வரும் ஒன்றிணைந்து, கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யலாம். ஆனால் சில விட்டுக் கொடுப்புக்கள் தவிர்க்க முடியாதவை. கிடைக்கும் தகவல்களின்படி, செல்வம் அடைக்கலநாதன் நான்கு பேர் இணைந்து செயலாற்றும் திட்டத்தில் பெரியளவில் நாட்டம் காண்பிக்கவில்லை என்றே அறிய முடிகிறது. அடைக்கலநாதன் உடன்படாத பட்சத்தில், ஏனைய மூவரும் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்வது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இதில் ஒரு தெரிவு இருக்கிறது - விடுதலைப்புலிகளால் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்டபோது, ஆனந்தசங்கரி மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருக்கவில்லை. அன்றைய சூழலில் புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி), ஆகிய முன்று கட்சிகளும் இணைந்து (DTNA) 'ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்னும் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்திருக்கின்றனர்.

தற்போது இந்த அரசியல் கட்சியில் இருக்கும் 'ஜனநாயக' என்னும் சொல்லை நீக்கிவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் அதனை ஒரு கட்சியாக மாற்றிக் கொள்ள முடியும். இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படுமாயின், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வேறு எவருமே பதிவு செய்ய முடியாமல் போகும். அவ்வாறு நிகழ்ந்தால் செல்வம் அடைக்கலநாதன் ஒன்றில் கூட்டமைப்புடன் இருக்க வேண்டிவரும் அல்லது தனது அமைப்பை கலைத்துவிட்டு முற்றிலுமாக தமிழரசுக் கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டிவரும். ஆனால் இந்த விடயத்தை மேற்கொள்வதிலும் இரண்டு ஈ.பி.ஆர்.எல்.எப் என்னும் விடயம் தடைக்கல்லாக இருக்கிறது. சிலர் தங்களது தனிப்பட்ட விருப்பங்களை துறக்காது விட்டால். இதுவும் சாத்தியப்படப் போவதில்லை.

ஒப்பீட்டடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு புதிய கட்சியாக பதிவு செய்வதைக்காட்டிலும் ஏலவே இருக்கும் ஒன்றை பயன்படுத்திக் கொள்வது இலுகுவானதாகும். ஏனெனில் கூட்டமைப்பை புதிதாக பதிவு செய்வதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதை தாம் ஆட்சேபிப்பதாக 'அகில இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணி' (Akhila Ilankai Tamil United Front - AITUF) என்னும் அரசியல் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் ஒரு கடிதத்தை வழங்கியிருக்கிறது. அதாவது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ரி.என்.ஏ என்பது, முதல் முதலாக பயன்படுத்தப்பட்டது தமிழ்த் தேசிய இராணுவம் (Tamil National Army) என்னும் அர்த்தத்திலாகும். இலங்கையின் நாடாளுமன்ற விவாதங்களிலும் முன்னர் அவ்வாறே உச்சரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போன்றவர்களால் கூட இத்தகைய அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு, ரி.என்.ஏ என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மேற்படி கட்சியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுவதை தற்போதைய அரசாங்கம் விரும்பாதுவிட்டால் மேற்படி கடிதத்தின் அடிப்படையில் கூட்டமைப்பை நிராகரிக்கும்படி அரசு கோரலாம். தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது.

எல்லா வகைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதைக் காட்டிலும் தனியாக இருப்பது நல்லது என்னும் கருத்தும் ஒரிரு கட்சிகள் மத்தியில் காணப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதால் கட்சிக்கும் பயனில்லை மக்களுக்கும் பயனில்லை என்னும் கருத்தே அவர்களிடம் உண்டு. எனவே காலப்போக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாம் மேலே பார்த்தவாறான ஒரு வழியில் அல்லது கட்சிகள் தனித்து பயணிக்கின்ற ஒரு வழியில் உடைவுறுவது நிட்சயம். இது அதிக தூரத்தில் இல்லை. எனவே இத்தகையதொரு உடைவை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களது தனிப்பட்ட நலன்களை புறம்தள்ளி சிந்தித்தால் மட்டுமே ஒரு உருப்படியான முன்னேற்றத்தை காணமுடியும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=fef65452-73cb-4bf7-a801-ee67a97c2ad1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.