Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு கொலை, கடத்தல் அச்சுறுத்தல்; புதிதல்ல"

Featured Replies

சம்பவம் 1

 

பேராசிரியர் மோகனதாஸ் துணைவேந்தராக இருந்தகாலப்பதியில் பல்கலைக்கழக மாணவர்கள் போர்நிறுத்தக் கண்காணிப்பு அலுவலகம் நோக்கி நடாத்திய அமைதிப் பேரணி இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு மிகமோசமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு மாணவர்கள் மட்டுமன்றி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் எனப் பலரும் துப்பாக்கிப் பிடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கப்பட்டனர்.

 

இத் தாக்குதலின் போது தன்னை துணைவேந்தர் என சிங்களத்தில் அறிமுகம் செய்த போதும் பேராசிரியர் மோகனதாசும் அவரோடு சேர்த்து அப்போதைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவச்சந்திரனும் மோசமாக தாக்கப்பட்டனர். படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவபீட மாணவர் ஒன்றியத் தலைவர் காண்டிபன் தலையில் படுகாயம் அடைந்து நினைவிழந்த நிலையில் பேராசிரியர் சிறிசற்குணராசாவின் துணிச்சலினால் வைத்தியாசாலையில் உரிய நேரத்தில் சேர்க்கப்பட்டமையினால் உயிர்பிழைத்தார்.

 

இப் போராட்டத்தில் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரனும் பங்கெடுத்திருந்தமையுடன் பல பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களுடன் போராட்ட களத்தில் அன்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தநிலையில் மீளத்திறக்கப்பட்டது.

 

483456_308330609270858_767824195_n.jpg



சம்பவம் 2

 

2006ம் ஆண்டு ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் பல்கலைகழக மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சக்கட்டம் பெற்றன.

 

பாதை மூடப்பட்டு மறுநாளே விஞ்ஞானபீட மாணவர் சிவசங்கர் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர் பிரதீபன் ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு முன்னதாக பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் இராணுவத்தினரால் தீவிரமான தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பல மாணவர்கள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டனர். அன்றையதினம் பல்கலைக்கழக மாணவர் பொது அறையில் இருந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவுசெய்யப்படவிருந்த பகீரதன் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்பட்டார்.

 

இச் சம்பவங்களை அடுத்து அச்சம் கொண்ட அப்போதைய மாணவர் ஒன்றியம் உடனடியாக தமது பொறுப்புக்களை புதியவர்களிடம் உரிய சட்டமுறைமையான ஏற்பாடுகள் இன்றி கையளித்து விட்டு இராணுவத்தினரால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து கடற்படையினரின் பாதுகாப்புடன் கப்பலேறி திருகோணமலை வழியாக வெளியேறிவிட்டனர். மிச்சமாயிருந்த யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தை மீளத் திறப்பதில் தமக்கு இயலத்தக்க வழிமுறைகள் பலவற்றிலும் முயன்றவண்ணமிருந்தனர். அதேவேளை பல்கலைக்கழக மாணவர்களுக்கான கொலை அச்சுறுத்தல் பகிரங்கமாக பத்திரிகை மூலமாக விடுக்கப்பட்டு அவர்கள் இலக்குகளாகக்கப்பட்டனர்



481025_308331189270800_1776723529_n.jpg



சம்பவம் 3

 

 

கொக்குவிலைச் சேர்ந்த விஞ்ஞான பீடமாணவர் நிருபராஜ் தனது வீட்டில் வைத்து கடத்தப்பட்டு மூன்று நாள்களின் பின்னர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் விடுவிக்கப்பட்டமையும் கலைப்பீட மாணவர் விஜயரூபன் கடத்தப்பட்டு (பின்நாளில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவராக இருந்து ஈ.பி.டி.பியின் வழியாக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் குதிக்க முயற்சி செய்து இயலாது போக செவ்வேளின் தலமையில் களம் இறங்கியவர்) விடுவிக்கப்பட்டமையும் முக்கியகடத்தல் விடுவிப்புக்களாக பதியப்பட்டன.

 

அதுபோன்று நெடுந்தீவைச் சேர்ந்த சசிக்குமார் என்ற கலைப்பீட மாணவன் பயண அனுமதி பெற புங்குடுதீவு கடற்படை முகாமுக்கு சென்று திரும்பும் வழியில் காணமல் போய் இன்று வரை அவர் தொடர்பில் தகவல் இல்லை. கடத்தப்பட்ட மாணவர்களின் விடுதலை தொடர்பில் அப்போதைய மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணியாகவிருந்த றெமிடியஸ் கருத்தத்தக்க பங்களிப்பை ஆற்றியிருந்தார். இன்று காலம் அவரையும் வெகுவாக மாற்றியிருக்கின்றது

 

261546_308332099270709_1189215812_n.jpg



சம்பவம் 4

 

ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் பகிரதன் அப்போதைய பதில் துணைவேந்தர் பேராசிரியர் குமாரவடிவேலின் விட்டுக்கொடுப்பற்ற சமயோசிதம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்ததரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பலன்கருதா சேவையினாலும் ஆறமாதங்கள் கழிந்தநிலையில் அனுராதபுரம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வராமலேயே சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்தார்.


அப்போது சுழற்சி முறையில் கலைப்பீடத்துக்கு உரித்தான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பதவியை ஏற்க ஆண் மாணவர்கள் எவரும் முன்வராத நிலையில் புவியியல்துறை மாணவி ஜெயந்தா அப்பதவியை துணிந்து ஏற்று யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் ஓர் மிக முக்கியமான வரலாற்றைப் பதிந்தார். அவருக்கும் கூட மிகவும் கீழ்த்தரமான முறையில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவாய் என்பதாக அச்சுறுத்தல்கள் கடிதங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்டவண்ணமேயிருந்தது.

 

401667_308332765937309_373671263_n.jpg

  • தொடங்கியவர்

சம்பவம் 5

 

சாவகச்சேரியில் வைத்து இந்துநாகரீகத்துறை மாணவர் சிவரஞ்சன், வரணியில் வைத்து அரசறிவியல் மாணவன் கமல்ராஜ், கொக்குவிலில் வைத்து ஊடகத்துறை மாணவர் நிலக்சன் என படுகொலைகளின் பட்டியலும்; நீண்டு கொண்டேயிருந்தது.

 

இறுதியாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த சமூகவியற்துறை மாணவன் புருசோத்தமன் பட்டப்படிப்பை நிறைவு செய்து இரண்டாம் மேல்நிலைவகுப்பில் சித்திபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் சகபாடியின் காட்டிக்கொடுப்பினால் துரோகத்தனமாக படுகொலை செய்யப்பட்டதுடன் அப்போதைய பருவகாலத்துக்குரிய கொலைகள் முற்றுக்கு வந்தன.

 

அதேவேளை விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகி பல்கலைக்கழக நிர்வாகத்தின் தலையீட்டால் விடுவிக்கப்பட்ட பின்னர் இராணுவதுணைக்குழுவாக செயற்பட்டு அதனால் விடுதலைப்புலிகளால் துரோகியாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவபீட மாணவர் சுகந்தீபன் சுட்டுக்கொல்லப்பட்டமையும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்த வன்முறைகளில் ஒன்றாக கவனம் கொள்ளப்படவேண்டியது. அத்துடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவரான யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் குணேந்திரன் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட தனது நண்பரினால் சுட்டுக்கொல்லப்பட்டமையும் பல்கலைக்கழக சுகாதார ஊழியர் பீற்றர் நாவற்குழியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டமையும் பல்கலைக்கழக வன்முறைகளுக்குள் பதியப்படவேண்டியது.

 

தொழிலாளி பீற்றரின் கொலைக்காக அன்று ஒரு நிமிடம் தன்னும் பல்கலைக்கழக ஊழியர்கள் தமது பணிகளை நிறுத்தியிருக்கவில்லை என்பதும் பலர் மறந்த செய்தியாகலாம்.



14527_308333235937262_1839243073_n.jpg



சம்பவம் 6

 

பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல தடவை மிரட்டப்பட்டதுடன் கடமை நேரத்தில் சீருடையுடன் வைத்து தாக்கப்பட்டு இரத்தம் சிந்தும் காயங்களையும் காணவேண்டியிருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மக்கள் வங்கி கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தரான வடமராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்த மாவீரர் நாளை அண்டிய ஒரு இரவுப் பொழுதில் சுட்டுக்கொல்லப்பட்டார்.



61287_308333635937222_233563335_n.jpg



சம்பவம் 7

 

 

இவ் வருடம் மாணவர் நினைவத்தீபம் ஏற்றிய பல்கலைக்கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுச்சின்னம் அதிகாலைவேளையொன்றில் அத்துமீறி உள்நுழைந்த இராணுவச் சீருடை தரித்தோரால் அடித்து நொருக்கப்பட்டதுடன் மிகவும் அநாகரிகமான முறையில் நினைவுச்சின்னப் பீடப்பகுதியில் மலசலம் கழித்துவிட்டும் சென்றனர்.

 

இது போன்றே படுகொலைசெய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாணவர் பொது வளாகத்தில் பேணிய நினைவிடமும் மாணவர்களின் படங்களும் ஒரு இரவுப்பொழுதில் அடித்து நொருக்கப்பட்டதுடன் அவர்களின் நினைவான சில செயற்பாடுகளை மேற்கொள்ள நிதி சேகரிக்கும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பெருந்தொகைப் பணமும் திருடப்பட்டது.



561115_308334042603848_1551947857_n.jpg



சம்பவம் 8

 

சில ஊழியர்களினதும் பல மாணவர்களினதும் அடையாள அட்டைகள் அடிக்கடி பறிக்கப்பட்டு அவற்றை அப்போது பிரபலமாகவிருந்த ஊரெழு இராணுவ முகாமுக்கு நேரடியாகச் சென்று பெறவேண்டியுமிருந்தது. பின்நாளில் பல்கலைக்கழக விடுதியின் உபகாப்பாளராகவிருந்த பிரேமச்சந்திரன் வழிப்பயணத்தின் போது கொலைமுயற்சியிலிருந்து தப்பி காலில் சூடுபட்டார்.அச்சுறுத்தலின் காரணமாக மிகுந்த பொருளாதாரப் பெறுமதிமிக்க தனது வேலையை இராஜினாமாச் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.பல்கலைக்கழக விரிவரையாளர் ரவீந்திரன் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டார்.


இக் கடத்தல்கள் கொலைகள் அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கு என்றும் ஒரு விசேடித்த தன்மையுண்டு. அது எதுவெனில் இவை நடைபெற்ற போது தமிழ் தேசியம் சார்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடாநாட்டில் இருக்கவில்லை. கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவி;ல்லை. மற்றைய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவைபற்றி அறிந்திருக்கவும் இல்லை. புலம்பெயர் உறவுகள் இக் கொலைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. யாழ்ப்பாண மாணவர்கள் மட்டுமே கண்டனங்களை விடுத்தார்கள்.வகுப்புக்களை புறக்கணித்தார்கள். பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடு ஒரு மணித்தியாலம் கூட தடைப்படாது நடைபெற்றது. ஏனெனில் அன்று மாணவர்களைத் தவிர மற்றையவர்கள் எல்லோரும் துப்பாக்கிகளுக்கு பயந்தவர்களாகவே இருந்தார்கள்.

 

இறுதிக்கட்டப் போர் தீவிரம் பெற்ற போதும் களத்தில் மாவீரர்களாக பல பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகினார்கள். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் படங்களை இணையத்தில் தேடிய போது அகப்படவில்லை. அந்தளவுக்கு அன்று அக் கொலைகள் கவனம் கொள்ளப்படவி;ல்லை. யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசி வசதிகூட துண்டிக்கப்பட்டிருந்த காலமாக அக்காலம் இருந்தமையும் அதற்கான காரணமாகவிருக்கலாம்.


2009க்குப் பின்னர் ஏற்பட்ட போர் ஓய்வுக்கு பின்னர் பல்கலைக்கழகம் மெல்ல மெல்ல தன்னை இயல்புநிலைக்கு கொண்டுவர முயற்சித்த போது மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலன் தாக்கப்பட்டார்.(தற்போது பட்டதாரி நியமனத்தில் அமைதியான அரசஉத்தியோகத்தராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்)அவருக்கு பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாணவர் ஒன்றிய செயலாளர் தர்சானந் தாக்கப்பட்டமையை அடுத்து தற்போது நான்கு மாணவர்களின் கைது என்ற இடத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான வன்முறை வந்து நிற்கின்றது.

 

பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக மாணவர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்குவது என்பது இன்று உள்ள புதிய விடயம் கிடையாது. ஆனாலும் அண்மைய மாணவர்கள் மீதான வன்முறை பல புதிய விடயங்களுக்கு வழி செய்துள்ளது. பரந்து விரிந்த ஊடகவெளியும் சமூகவெளியும் இன்றைய பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்தியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இலங்கையின் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து குரல் கொடுக்கும் சகோதரத்துவ நிலைக்கு வழிசெய்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும் தாம் வாழும் நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெம்பூட்டும் மதிப்பளிக்கும் கண்டனப் பேரணிகளுக்கு தயாராகும் நிலையை தோற்றுவித்துள்ளது. அரசுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் கரம் கோர்த்து ஆர்ப்பரிக்கும் நிலைக்கு வழிசெய்துள்ளது. தமிழர்கள் எம்மால் என்றுமே வெற்றி கொள்ளப்பட முடியாதவர்கள் எனும் பதிவை சமூகவலையமைப்பில் ஒரு சிங்கள மாணவி பதிவுசெய்யும் அற்புதமான நிலைக்கு அடிகோலியிருக்கின்றது. இத்தனை அருமையான ஓற்றுமையை ஒன்றுபட்ட நிலையை பல்கலைக்கழக மாணவர்கள் எப்படி இனவிடுதலைப் பயணத்துக்கான உரமாக இட முடியும் என்பது தொடர்பில் நாம் தீவிரமாக சிந்திக்கவேண்டும்.

 

-பல்லவன்-



480739_308334549270464_740376735_n.jpg

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.