Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநாவின் மோசமான தோல்வி பிரான்ஸெஸ் ஹாரிசன் தமிழில்: கண்ணன், ஷாலினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐநாவின் மோசமான தோல்வி பிரான்ஸெஸ் ஹாரிசன் தமிழில்: கண்ணன், ஷாலினி
 
13 டிசம்பர் 2012
Sri%20Lanka%20war_CI.jpg
ஒரு போரில் 50,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக/காயம்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு யுத்தகளத்திலிருந்து கிடைத்திருப்பதாக, ஐநா சபை இன்று அறிவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உலகம் அதைக் கவனித்திருக்காதா? படுகொலையைத் தடுக்க முனைந்திருக்காதா? இலங்கைப் போர் பற்றி 2009ஆம் ஆண்டே ஐநா அமைப்பிடம் இத்தகவல் இருந்தது என்பது இப்போது நமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதை அமுக்கிவிட்டார்கள். இப்போது ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒரு உள் ஆய்வுக்கு உத்தரவிட்டதால் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
 
இலங்கை உள்நாட்டுப் போரில் ஐநாவின் செயல்பாடு ‘மோசமான தோல்வி’, இனி ‘மீண்டும் அப்படி நடக்கக் கூடாது’ என்று இந்த உள் ஆய்வறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ருவாண்டாவில் ஐநாவின் முந்தைய செயல்பாட்டைக் குறிப்பிட்டு அங்குக் கற்றிருக்கப்பட வேண்டிய பாடங்கள் கற்கப்படவில்லையென்றும் அவை இலங்கைக்குப் பொருந்தக்கூடியவை என்றும் கூறுகிறது. சிரியா விஷயத்திலாவது இலங்கையின் படிப்பினைகள் பயன்படுமென்று நம்புவோம். இலங்கைப் போரில் தப்பிப் பிழைத்தவர்களின் கதைகளைக் கூறும் ஒரு நூலின் ஆசிரியர்* என்ற முறையில் ஐநா அன்றே குரலெழுப்பியிருந்தால் என்ன நடந்திருக்கக்கூடும் என்னும் கேள்வி என்னை வாட்டுகிறது.
 
மேலும் அந்த அறிக்கை, ‘கொழும்பில் மேலதிகாரிகள் பலர் படு கொலையைத் தடுப்பது தங்கள் கடமையென்றே நினைக்கவில்லை’ எனக் குற்றஞ்சாட்டியுள்ளது. இது ஆகக் கடுமையான விமர்சனம். ஆனால் இது எப்படி நடந்தது, ஏன் அவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதற்கான காரணங்களை ஏற்கவே முடியவில்லை.
 
சார்லஸ் பெட்ரி தயாரித்த இந்த அறிக்கையின் முன்வரைவிலுள்ள தொகுப்புரையை ஐநா நீக்கிவிட்டது. அப்பகுதி, ‘ஐநா பாதுகாப்புக் குழுவும் செயலகமும் ஐநாவின் இலங்கைக் குழுவின் ஒத்துழைப்போடு படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையை உரக்க அறிவித்திருந்தால் பல்லாயிரம் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமென்று பலர் நம்புகிறார்கள்’ என்று கூறுகிறது.
 
ஐநாவின் பன்னாட்டு ஊழியர்கள், இலங்கையில் பெரும்பான்மையான மக்களின் படுகொலைக்கு இலங்கை அரசுதான் காரணம் எனக் கூறியபோதும்கூட, ஐநா உயரதிகாரிகள் விடுதலைப் புலிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்கள் என்பதை பெட்ரியினுடைய அறிக்கை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பக்கச் சார்பு இலங்கைப் போர் குறித்த உலகளாவிய ஊடகங்களில் ஒரு பக்கச் சார்பான செய்திகள் வெளிவருவதற்குக் காரணமாக அமைந்தது. ஏனெனில் இந்தச் சார்புநிலை மிகுந்த செல்வாக்கும் நம்பிக்கைக்குரியதுமான ஐநாவிலிருந்தே உருப்பெற்றது.
 
2009, மார்ச் 9ஆம் தேதி தனது பணியாளர்கள் தயாரித்த மரணம்/படுகாயம் அடைந்தவர்களின் பட்டியலையும் வெளியுறவுத் துறையினருக்கான செய்தி அறிவிப்பையும் ஐநா வெளியிடவில்லை. அந்தச் செய்தி அறிவிப்பு, ‘ஐநா பதிவுசெய்த, கிட்டத்தட்ட அனைத்துப் பொதுமக்களின் படுகொலைக்கும்/படுகாயங்களுக்கும் ராணுவத் தாக்குதல்களே காரணம்’ என்று குறிப்பிடுகிறது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக என்று அரசு வாக்களித்த ‘பாதுகாப்பு வலைய’த்திற்கு உள்ளே தான் படுகொலைகளில் மூன்றில் இரண்டு பங்கு நடக்கிறது என்பதை ஐநா அம்பலப்படுத்தத் தவறியது. இதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் இலங்கைக்கான ஐநாவின் வசிப்பிடப் பிரதிநிதி நீல் புஹ்னே மற்றும் துணைச் செயலாளர்கள் பலரும் அவர்கள் தயாரித்த படுகொலை/படுகாயம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த மறுத்து அவை சரிபார்க்கப்பட வேண்டியவை என்று கூறினார்கள். சார்லஸ் பெட்ரி தனது அறிக்கையில் இதை, செய்தி அறிவிப்புகளில் ஐநா ‘யதார்த்தத்தை எதிர்கொள்ள மறுத்தது’ என மழுப்பலாகக் குறிப்பிடுகிறார்.
 
ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பற்றிப் பேச முனைந்தபோது பான் கி மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார், நவி பிள்ளை அறிக்கையின் கடுமையைக் குறைக்க அவரைக் கட்டாயப்படுத்தினார் என்பதை இவ்வறிக்கையின் பின்னிணைப்புகளில் இணைக்கப்பட்டுள்ள அந்தரங்கச் செய்திப் பரிமாற்றங்களில் காண முடிகிறது. நவி பிள்ளையின் அறிக்கைகள் இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் ஒரே மட்டத்தில் வைத்துப் பார்ப்பதாகவும் விஜய் நம்பியார் புகார் கூறியுள்ளார்¢. உண்மையில் அந்தக் காலகட்டத்தில் நவி பிள்ளை தன் அறிக்கையில் குறிப்பிட்ட படுகொலை/படுகாயங்களின் எண்ணிக்கை குறைந்த மதிப்பீடுதான் என்பது ஐநாவுக்கே தெரியும். அதே காலகட்டம் பற்றி சார்லஸ் பெட்ரி அறிக்கை தற்போது குறிப்பிடும் எண்ணிக்கை, அப்போது நவி பிள்ளையின் அறிக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட மிக அதிகம். அதாவது படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,687. படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10,067.
 
இந்த எண்ணிக்கை போர்¢ பிராந்தியத்தில் பணியாற்றிய பாதிரியார்கள், தமிழ் மருத்துவர்கள், என்ஜிஓ பணியாளர்கள் மற்றும் புலிகளால் பிடித்துவைக்கப்பட்ட ஐநா பணியாளர்களால் சேகரிக்கப்பட்டவை. எல்லாச் சுதந்திர பார்வையாளர்களுக்கும் போர் பிராந்தியத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே சில ஊக்கமுள்ள ஐநா பணியாளர்கள் தொலைதூரத் தகவல் சேகரிப்புக் குழுவை உருவாக்கிக் கொழும்பிலிருந்தவாறே எல்லாச் செய்திகளையும் உறுதிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் தயாரித்த படுகொலை/படுகாயம் அடைந்தவர்கள் பட்டியல் என்பது மூன்று வெவ்வேறு நபர்களிடமிருந்து வந்த தகவல்களை உறுதிப்படுத்தித் தொகுக்கப்பட்டது. பெட்ரி அறிக்கை, இது மிகச் சிறந்த செயல்முறையைக் கொண்ட அருமையான நடைமுறை என்று கூறுகிறது. இந்த வழிமுறையில்தான் ஏப்ரல்வரை எட்டாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐநா உறுதிப்படுத்திக்கொண்டது. அதன் பின்னர் கடுமையான தாக்குதல்களுக்கிடையில் பதுங்கு குழிகளுக்கு வெளியே வந்து தகவல்களை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிட்டது.
 
srilanga-Graph---kc-156-final-copy.jpg
ஐநா பணியாளர்கள் தயாரித்த படுகொலை செய்யப்பட்டவர்கள்/படுகாயங்கள் அடைந்தவர்களின் எண்ணிக்கையை, போர் பிராந்தியங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஐநா தூதர்களே ஏற்க மறுத்து அவற்றின் நம்பகத் தன்மையைத் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தினார்கள் என்பதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிரியாவிலோ ஆப்கானிஸ்தானிலோ குறிப்பிடப்பட்ட படுகொலை எண்ணிக்கை சேகரிக்கப்பட்ட முறையைவிட இந்தத் தகவல்கள் அதிக கவனத்துடன் சரிபார்த்துத் தயாரிக்கப்பட்டவை என்பது கணக்கில் கொள்ளப்படவில்லை. அத்தோடு தொடர்ந்து இலங்கைப் போர் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணங்களில் ஐநா குறிப்பிடும் 1,00,000 மரணங்கள் என்ற எண்ணிக்கையும் கணக்கிலெடுக்கப்படவில்லை.
 
பெட்ரி அறிக்கையின் பின்னிணைப்புகளில் படுகொலை/படுகாயம் பற்றி அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. 2009இல் களத்திலிருந்த ஐநாவின் தகவலாளர்கள், 17,810 பேர் கொல்லப்பட்டதாகவும் 36,905 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் கொடுத்துள்ளனர். ஐநா குழு இந்த எண்ணிக்கையைப் பாதிவரை சரிபார்த்ததில் இந்த எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தார்கள்.
 
இந்தப் படுகொலையின் அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கை அன்றே அம்பலப்பட்டிருந்தால் உலக சமுதாயம் இலங்கை அரசை கண்டித்திருக்கும். பல மரணங்களையும் போருக்குப் பிந்தையப் பல அத்துமீறல்களையும் நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். பின்னர் ஒரு ஐநா அறிக்கை 40,000 பேர்வரை கொல்லப்பட்டார்கள் என்னும் தகவல் நம்பகத்தன்மை கொண்டது தான் என்று கூறுகிறது. பெட்ரியின் அறிக்கை இந்த எண்ணிக்கையையும் தாண்டிக் கடைசி ஐந்து நரக மாதங்களில் 70,000பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.
 
தம்முடைய நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு, துரோகம் இழைக்கப்பட்டு, துடிதுடித்து இறந்ததைக் கண்ட தப்பிப்பிழைத்தோருக்கு இதனால் ஆறுதல் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் பட்டினியால் தளர்ந்து, அழுக்கேறிக், குழிகளில் பதுங்கி வாழ்ந்தவர்கள். தாக்குதல்களின் இடைவெளியில் வலுவற்ற பாதுகாப்பு அரண்களிலிருந்து வெளியேறிச் சிதறிக்கிடக்கும் உடற்பாகங்களை நாய்கள் தின்பதற்கு முன்னர் தேடிப்பிடித்துப் புதைத்தார்கள். குடும்பங்கள் விரக்தியின் உச்சத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாக விரைவில் சாகடிக்கப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டனர். அன்பான பெற்றோர்கள் தப்பிப்பிழைப்பதற்கு எந்த வாய்ப்புமில்லை என்று தோன்றியதால் குழந்தைகளுடன் மொத்தமாகத் தற்கொலை செய்ய எண்ணினார்கள். மே 2009வாக்கில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் கைவிட்டு விட்டு ஓடினார்கள். துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தப்பிப்பிழைக்க பிணங்களை மிதித்தும் தாண்டியும் ஓடினார்கள். யுத்த களத்திலிருந்து அவர்கள் தப்பியதும் ஐநா பணத்தில் கட்டப்பட்ட தரமற்ற இடைக்கால முகாம்களில் கைதுசெய்து அடைக்கப்பட்டார்கள்.
 
நடந்துபோன பிழைகளை ஐநா இப்போது நேர்செய்ய விரும்பினால் பான் கி மூன் ஒரு பன்னாட்டு ஆய்வுக்குழுவை அமைத்து இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும். கடந்த ஆண்டு அவர் நியமித்த ஒரு நிபுணர்குழுவின் பரிந்துரை இதுவாகவே இருந்தது. ஆனால் போதுமான அளவு உலக நாடுகளின் ஆதரவு இல்லாததால் அதைச் செயல்படுத்த பான் கி மூன் தயங்கிவிட்டார். இந்த உள் ஆய்விலிருந்து நமக்குத் தெரிய வருவது, இதைச் செயல்படுத்த அவருக்கு அதிகாரம் உண்டென்று அவருடைய சட்டப்பிரிவே அவரிடம் அறிவுறுத்தியிருந்தும் அவர் பின்வாங்கியிருக்கிறார். இந்த உள் ஆய்வறிக்கை வெளியே கசிந்த பிறகு இலங்கை விஷயத்தில் நார்நாராகக் கிழிந்துகிடக்கும் ஐநாவின் நம்பகத் தன்மையை மீட்டெடுக்க இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிப்பது அவசியமான நடவடிக்கை. பலியானவர்களின் பல்லாயிரம் குடும்பங்களுக்குக் குறைந்தபட்சப் பரிகாரமாக பான் கி மூன் இதைச் செய்தாக வேண்டும்.
 
நன்றி காலச்சுவடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.