Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் விழுங்கப்படும் திருகோணமலை! _11-நக்கீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் விழுங்கப்படும் திருகோணமலை! _11-நக்கீரன்

 

பறிபோய்விட்ட திருகோணமலை  - கோணேசுவரர் ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாசலில் பிரட்றிக் கோட்டை இருக்கிறது. சற்றுத் தள்ளி உட்புறமாகப் புத்தரின் பெரிய உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. கோணேசுவரர் ஆலயத்துக்குப் போவோர்கள் இந்தப் புத்தர் சிலையைக் கடந்தே செல்ல வேண்டும். புத்தரின் சிலைகள் சிங்கள – பவுத்த ஆக்கிரமிப்பின் சின்னமாக திருகோணமலை மாவட்டம் முழுதும் பரவலாக நிறுவப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பிரட்றிக் கோட்டை வாசலில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை ஆகும்.

கடந்த ஆண்டு சிங்கள இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட சம்பூரில் இருபது ஆண்டுகள் கழித்துப் போயா நாள் கொண்டாடப்பட்டதாக கொழும்பு நாளேடு ஒன்று பெருமிதத்தோடு செய்தி வெளியிட்டிருந்தது. சம்பூரில் நிலைகொண்டுள்ள இராணுவம் அங்கு ஒரு புத்த விகாரையைக் கட்டி உள்ளது. அடுத்த கட்டமாக அங்கு ஒரு பவுத்த தேரர் குடிபுகுவார்.

பிரட்றிக் கோட்டை போர்த்துக்கேயரால் 1623 இல் கட்டப்பட்டது. ஒல்லாந்தர் அந்தக் கோட்டையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து 1639 இல் கைப்பற்றினார்கள். ஒல்லாந்தர்கள் கோட்டையை விரிவாக்கினார்கள். ஆனால் 1672 இல் பிரஞ்சுப் படை அக்கோட்டையைத் தாக்கி அதனைக் கைப்பற்றியது.


1782 ஆம் ஆண்டு சனவரி 8 இல் பிரித்தானியப் படை பிரட்றிக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றியது. ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் நாள் பிரஞ்சுப் படை அதனை மீளக் கைப்பற்றியது.


1783 இல் பிரான்ஸ் பிரட்றிக் கோட்டையை பிரித்தானியாவிற்கு கையளித்தது. பிரித்தானியா அதனை ஒல்லாந்தருக்குக் கொடுத்தது. இறுதியாக பிரித்தானியா 1795 இல் பிரட்றிக் கோட்டையைத் தாக்கி மீளக் கைப்பற்றியது. 1948 இல் இலங்கை சுதந்திரம் அடையும் வரையும் கோட்டை பிரித்தானியர் கைவசமே இருந்தது.

 

ஒல்லாந்தர் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களை நிருவாக அடிப்படையில்  மூன்றாகப் பிரித்தனர்.

1. யாழ்ப்பாண நீதி மாவட்டம்

2. கொழும்பு நீதி மாவட்டம்

3. காலி நீதி மாவட்டம்

யாழ்ப்பாண நீதி மாவட்டம் என்பது தமிழர் வாழ்விடங்களான இன்றைய வடக்கு, கிழக்கு நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே ஒல்லாந்தர் தமிழர் நிலப்பரப்பை இலங்கைத் தீவின் ஏனைய நிலப்பரப்போடு இணைக்காமல் தனி நிருவாக அலகாக வைத்திருந்தனர் என்பது நோக்கத்தக்கது.


திருகோணமலையைக் கைப்பற்றுவதற்கு கொலனித்துவ நாடுகள் தங்களுக்குள் மோதிக் கொண்டதற்கு முக்கிய காரணம் அதன் இயற்கைத் துறைமுகமே. உலகின் 5 ஆவது பெரிய இயற்கைத் துறைமுகம் திருகோணமலையாகும். திருகோணமலையை மையமாகக் கொண்ட ஒரு கடற்படை இந்துப் பெருங்கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


பிரட்றிக் கோட்டை இன்று சிங்கள இராணுவத்தின் திருகோணமலை மாவட்ட தலைமையகமாகவும் அரசாங்க அதிபரின் அலுவலகமாகவும் பயன்படுத்தப்படுகிறது.


சீனன் குடாவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா கடற்படை அங்குள்ள ஒரு குன்றில் அருங்காட்சிக் கோபுரம் ஒன்றை நிறுவியுள்ளது. பிரித்தானியா காலத்து 3 பாரிய பீரங்கிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 5 கிமீ தூரத்துக்குச் சுடக்கூடிய வல்லமை வாய்ந்தவையாகும்.

 

1957 ஆம் ஆண்டுவரை திருகோணமலை பிரித்தானிய றோயல் கடற்படையின் முக்கிய தளமாக இருந்தது. கடற்படையில் பணியாற்றிய கடற்படையினர் பிரட்றிக் கோட்டையை குடியிருக்கப் பயன்படுத்தினர். அய்ம்பதுகளில் கடற்படையினரின் குடியிருப்புக்கு எனப் பல பங்களாக்கள் கட்டப்பெற்றன. இந்த பங்களாக்களில்தான் இன்று சிங்களப் படை அதிகாரிகள் குடியிருக்கின்றனர்.


1796 இல் கண்டி அரசு நீங்கலாக இலங்கையின் ஏனைய பகுதிகள் பிரித்தானியாவின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன. 1815 இல் கண்டி அரசின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம இராசசிங்கன் சிங்கள பிரதானிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவனும் அவனது குடும்பமும் பிரித்தானிய படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கண்டி அரசை சிங்கள பிரதானிகள் பிரித்தானியாவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியாவிற்குக் கையளித்தார்கள்.


1833 ஆம் ஆண்டு ஒக்தோபர் முதலாம் நாள் இலங்கையின் நிருவாகத்தை சீர்செய்யுமுகமாக கோல்புரூக் – கமெறூன் ஆணையம் இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்தது. இந்தப் பிரிப்பு நிருவாக வசதிக்காகச் செய்யப்பட்ட ஒன்றாகும்.

1) வட மாகாணம் – அனுராதபுரம் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் மன்னார். யாழ்ப்பாணம் அதன் தலைநகரம்.

 

2) கிழக்கு மாகாணம் – தம்பன்கடவை பிந்தனை கொட்டியாரம் பளுகாமம் பானமை திருகோணமலை மூதூர் மட்டக்களப்பு வெலிகந்தை குமண மற்றும் யால. மட்டக்களப்பு அதன் தலைநகரம்.

3) மேல் மாகாணம் (Western Province) - கற்பிட்டி, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கோட்ட, பாணன்துறை, களுத்துறை மற்றும் குருநாகல். தலைநகர் கொழும்பு.

4) தென் மாகாணம் – காலி தங்காலை மாத்தறை இரத்தினபுரி மற்றும் அம்பலாந்தோட்டை. தலைநகர் காலி.

5) மத்திய மாகாணம் – கண்டி, உடுநுவர, ஊவா. தலைநகர் கண்டி.


ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு ஒரு தமிழ் அலகும் கண்டிச் சிங்களவர்களுக்கு ஒரு அலகும் கரையோரச் சிங்களவர்களுக்கு இன்னொரு அலகும் என இலங்கை பிரிக்கப்பட்டிருந்தது. அந்த மூன்ற அலகுகளையுமே பிரித்தானியர் 5 மாகாணங்களாகப் பிரித்தனர்.

பின்னர் 1845 இல் வடமேற்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. அதன் தலைநகரம் குருநாக்கல். 1873 இல் வட மத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. இதில் வடமாகாணத்தில் இருந்த நுவரகலவேவா கிழக்கு மாகாணத்தில் இருந்த தம்பன்கடவை இணைக்கப்பட்டன. வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப்பற்று வட மேற்கு மாகாணத்தோடு இணைக்கப்பட்டது. அதன் தலைநகர் அனுராதபுரம். நாளடைவில் மாகாணங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

1904 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

இவ்வாறு மாகாணங்கள் உருவாக்கப்பட்ட போது பிரித்தானிய ஆட்சியாளர் தமிழர்களது மரபுவழி தாயகத்தை கணக்கில் எடுக்கவில்லை. எடுத்துக்காட்டாக தம்பன்கடவை தமிழ்ப் பகுதியாகும். ஆனால் அது கிழக்கு மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு வட மத்திய மாகாணத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் தோற்றம் கொண்ட இன மோதலுக்கு இந்தத் தவறு முக்கிய காரணியாகும்.

மேற் குறிப்பிட்ட 9 மாகாணாங்களில் 20 மாவட்டங்கள் இருந்தன. கீழ்க்கண்ட அட்டவணை 1, 1827 – 1981 ஆம் ஆண்டுவரை கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் பேசும் – சிங்களம் பேசும் மக்கள் தொகை விழுக்காட்டைக் காட்டுகிறது.

 அட்டவணை (1)
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் சிங்களம் பேசும் மக்கள் தொகை விழுக்காடு     

Table1.gif

 

 

 

1955 இல் மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட்டு மாகாணங்களின் எல்லைகள் மீள் வரையப்பட்டன.

 


கிழக்கு மாகாணம் – 10,440 ச.கிமீ இல் இருந்து 9,931 ச.கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.

 


வட மத்திய மாகாணம் – 10,352 ச.கிமீ இல் இருந்து 10,709 ச.கிமீ ஆக அதிகரிக்கப்பட்டது.

 


ஊவா மாகாணம் – 8,160 ச.கிமீ இல் இருந்து 8,478 ச.கிமீ ஆக உயர்த்தப்பட்டது.

 


தமிழர்களது தாயக நிலப்பரப்பு படிப்படியாக திட்டமிட்டுக் குறைக்கப்பட்டது.

 


1901 ஆம் ஆண்டு வட – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு19,100 ச.கிமீ ஆக இருந்தது. பக்கத்து சிங்கள மாகாணங்களோடு தமிழ்நிலப் பரப்பின் ஒரு பகுதி இணைக்கப்பட்டதால் அதன் பரப்பளது 7,500 ச.கிமீ ஆல் குறைக்கப்பட்டு விட்டது.

 


1948 இல் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 7,000 ச.கிமீ விழுங்கப்பட்டு விட்டது. வட மாகாணத்தில் 500 ச.கிமீ விழுங்கப்பட்டு விட்டது.

 


கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பாரிய சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக சிங்களவர் தொகை திருகோணமலை மாவட்டத்தில் 15.3 (1946) விழுக்காட்டில் இருந்து 33.6 விழுக்காடாக (1981) உயர்ந்தது. கிழக்கு மாகாணத்தில் அதே கால கட்டத்தில் 8.4 விழுக்காட்டில் இருந்து24.9 விழுக்காடாக அதிகரித்தது.

 


சிங்களக் குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழந்த தமிழ்மக்கள் சிறுபான்மையாக்கப்பட்டனர். 1960  ஆம் ஆண்டு அம்பாரை தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை துண்டாடி அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.  1976 இல் திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக சிங்களப் பெரும்பான்மை கொண்ட சேருவில தொகுதி உருவாக்கப்பட்டது.

 

டி.எஸ். சேனநாயக்கா மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களை குடியமர்த்துவதோடு நின்றுவிடவில்லை.  அவரது அடுத்து இலக்கு திருகோணமலை மாவட்டமாக இருந்தது.   அவர் திருகோணமலையில்  சிங்களவர்களைக் குடியமர்த்தி அதன் நிலப்பரப்பை அபகரிக்கும் முயற்சியில் இறங்கினார்.  அதற்காகக் கந்தளாய் குடியேற்றத் திட்டத்தைக் கையில் எடுத்தார். திருகோணமலை மாவட்டத்தில்  நீர்ப்பாசனத்துக்குத் தேவையான பல குளங்கள் காணப்படுகின்றன.  கந்தளாய் குளம்,  தம்பலகாமம் மற்றும் கிண்ணியாவில் உள்ள வயல்களுக்கு வேண்டிய தண்ணீரை வழங்குகிறது.  சேனநாயக்கா, 1948 இல்  கந்தளாய் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அதனை ஆழமாக்கி சீரமைத்து தென்னிலங்கைச் சிங்களவர்களை குடியேற்றினார். கந்தளாய் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பெருந்தொகையான சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டனர். 

 

மொத்த நிலப்பரப்பில் 77 விழுக்காடு சிங்களவருக்கும் 23விழுக்காடு தமிழர் – முஸ்லிம் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டன. திருகோணமலையில் வாழும் 86,000 சிங்களவர்களில் 40,000பேர் கந்தளாய் மேம்பாட்டுப் பகுதியில் வாழ்கிறார்கள்.

 

கந்தளாய் குடியேற்றத் திட்டம்  வெற்றிகரமாக முடித்த பின்னர்1950 ஆம் ஆண்டு அல்லை குடியேற்றத்தை டி.எஸ். சேனநாயக்கா கையில் எடுத்தார்.   திருகோணமலை விரிகுடாவுக்குத் தெற்கேயுள்ள வெருகல் ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டப்பட்டது. வெருகல் ஆறு மகாவலி கங்கையின் பல கிளை ஆறுகளில் ஒன்றாகும்.

 

1952 இல் டி.எஸ். சேனநாயக்கா இறந்த போது  காணி விவசாய அமைச்சராக இருந்த அவரது மகன் டட்லி சேனநாயக்கா அல்லை நீர்பாசனத் திட்டத்தை கட்டி முடித்தார்.  இந்த இடம் முன்னர் கொட்டியாரம் என அழைக்கப்பட்டது.  தமிழர்களும் சிங்களவர்களும் அப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் தமிழர்களே பெரும்பான்மை ஆக இருந்தார்கள்.   இருந்தும் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட காணிப் பங்கீட்டில் தமிழர்களுக்கு ஒரு சொட்டுக் காணியும் கொடுக்கப்படவில்லை.  சிங்களவர்களுக்கு 65 விழுக்காடும் முஸ்லிம்களுக்கு 35 விழுக்காடும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன.

 

இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் திருகோணமலையில் ஒரேயொரு செயலாளர் பிரிவுதான் இருந்தது. அதன் பெயர் கொட்டியார் செயலகப் பிரிவு என்பதாகும். இப்போது மூன்று செயலகப் பிரிவுகள் இருக்கின்றன. மூதூர், சேருவில, வெருகல் இந்த மூன்றுமே அந்தச் செயலகப் பிரிவுகளாகும்.  சிங்களவர்களுக்கு ஆக சேருவில 1960 இல் உருவாக்கப்பட்டது.  வெருகல் 1980 இல்  உருவாக்கப்பட்டது.  1981 இல் சேருவிலவில் வாழ்ந்த 20,187 பேரில் சிங்களவர் எண்ணிக்கை11,665 ஆக இருந்தது.

 

சிங்கள அரசுகள் முடிக்குரிய காணிகளில் மட்டும் சிங்களவர்களைக் குடியேற்றுவதோடு நின்றுவிடவில்லை. தமிழர்களது பரம்பரை கிராமம்களிலும் சிங்களவர்களை குடியமர்த்தினார்கள். கிராமம்களின் பெயர்களை நேரடியாக சிங்களத்துக்கு மாற்றினார்கள். அரிப்பு  சேருநுவர ஆக மாறியது. கல்லாறு  சோமபுரமாக மாறியது.  நீலப்பள்ளை  நீலபொல ஆகியது.  பூநகர் மகிந்தபுரம் ஆகவும் திருமங்கவி டெகிவத்தை ஆனது.

 

அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றம் அய்ம்பதுகளில் தொடக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முதலிக்குளம் ( மொறவேவா) பதவிக்குளம் பெரியவிளாங்குளம் போன்ற சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன.  

 

1976 ஆம் ஆண்டில் மூதூர் தேர்தல் தொகுதி ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக மாற்றப்பட்டது. சிங்கள மக்களுக்காக சேருவில என்ற புதிய தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி, தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி  அரசினால் உருவாக்கப்பட்டது.

 

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களப் பெரும்பான்மை சேருவெல தொகுதி 1976 இல் உருவாக்கப்பட்டது.  இது திருகோணமலையின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கியதாகும்.

 

 

 

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் 1881 இல் தமிழ் மக்களது விழுக்காடு 64.8 ஆக இருந்தது. இந்த விழுக்காடு 1981 இல் 36.4 விழுக்காடாகக் குறைந்துவிட்டது! அதே காலகட்டத்தில் சிங்களவர்களது விழுக்காடு 4.2 இல் இருந்து 33.6 விழுக்காடாக அதிகரித்து விட்டது. 

 

பிரதமர் திரு எஸ்.டபுள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க 1956 இல் வவுனியாவுக்குக் கிழக்கே பதவியா குடியேற்றத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். திருகோணமலை துறைமுகம் மூடியதை அடுத்து வேலையிழந்த மக்களுக்கு என்றே  இந்தத் திட்டம் தொடக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 595 தமிழர்களும் 453 சிங்களவர்களும் குடியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.  சிங்களக் குடியேற்ற வாசிகள் பவுத்த தேரர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு காணி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். தமிழர்கள் கட்டிய குடில்களுக்குள் சிங்களவர் வலோத்காரமாக குடிபுகுந்தார்கள்.  இதனால் பதவியா குடியேற்றத்திட்டம் முழுக்க முழுக்க சிங்களவர்களால் நிரப்பப்பட்டது.

 

சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 இல் மொறவேவா குடியேற்றத்திட்டத்தைத் தொடக்கினார்.   தமிழில் முதலிக்குளம் என அழைக்கப்பட்ட இந்த கிராமம் சிங்களத்தில் மொறவேவா என மாற்றப்பட்டது. 1981 இல் மொத்தம் 9,271 பேர் வாழ்ந்தார்கள். அதில் 5,101 பேர் சிங்களவர்கள். இவர்கள் எல்லோரும் வெளி இடங்களில் இருந்து கொண்டு வந்து குடியமர்த்தப் பட்டவர்கள்.

 

பெரியவிளான்குளம் சிங்களத்தில் மகாடிவுலுவேவா எனப் பெயர் மாற்றப்பட்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் அங்கு சிங்களக் குடியேற்றம் தொடக்கப்பட்டது.

 

திருகோணமலை மாவட்டத்தில் வேறு வழியிலும் சிங்களவர் தொகை அதிகரிக்கப்பட்டது. 1982 இல் சிங்கள மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக வாழ்ந்த அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த  பதவி சிறிபுர (5,953 சிங்களவர்)  பறணமதவாச்சி (827 சிங்களவர்) ஜெயந்திவேவ (4,274சிங்களவர்) திருகோணமலை மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.  இவ்வாறு ஒரே நாளில் சிங்களவரின் எண்ணிக்கை 11,059 பேர்களினால் அதிகரித்தது. மறுபுறம் தமிழர்களது விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

 

திருகோணமலையில் அரசு முன்னெடுத்த சிங்களக் குடியேற்றங்களுக்குப் புறம்பாக சட்டத்துக்கு மாறான அரசியல் நோக்கோடு கூடிய குடியேற்றங்களும் முடுக்கிவிடப்பட்டன.  திருகோணமலையை  பெரும்பான்மை சிங்களவர் கொண்ட மாவட்டமாக்குவது காலத்துக்குக் காலம் ஆட்சி பீடத்தில் இருந்த சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்தது. இதில் பச்சைக் கட்சிக்கும் நீலக் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து இருக்கவில்லை.

 

தமிழ் கிராமங்களை வளைத்து சட்ட விரோத குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.  குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், தென்னமரவடி போன்ற கிராமம்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள்.  இவ்வாறு மொத்தம் 10,750 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்றுவரை திருகோணமலை மாவட்ட அரசாங்க முகவராக ஒரு தமிழர் நியமிக்கப்படவில்லை. சிங்களவர்களே அந்த இடத்துக்கு நியமிக்கப் பட்டார்கள். காணி அதிகாரிகளும் சிங்களவர்களே. அய்ம்பது கடைசியில் மட்டும் Mc Heizer    என்ற ஒரு பரங்கியர் திருகோணமலை மாவட்ட அரசாங்க முகவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இப்போது திருகோணமலை அரசாங்க முகவராக இருப்பவர் முன்னாள் இராணுவதளபதி Maj. Gen. T.T. Ranjith de Silva ஆவார். (தொடரும்)

 

http://tamil24news.com/news/?p=34374

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.