Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்யது பீடியும் இந்தியன் ஆமியும்

Featured Replies

அது 1988 ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை

 

bunker.jpg

 

 

"இண்டைக்குப் பள்ளிக்கூடமில்லை, சுண்ணாகம் லைபிறறிக்குப் போனால் தினத்தந்தியில் இருந்து பொம்மை, குமுதம் எல்லாம் வாசிக்கலாம்" என் உள்மனது துரத்த, அப்பா தன் மதிய உணவை உண்ட களைப்பில் கட்டிலில் மதிய நேரத்துக் கோழித்தூக்கம் போடும் நேரம் பார்த்து அவரின் பி.எஸ்.ஏ சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்காதவாறு மிதிக்கிறேன். அம்மா முத்துலிங்க மாமா வீட்டுப் பக்கம் போயிருப்பா அவ இருந்தால் சுண்ணாகம் பக்கம் எல்லாம் போக விடமாட்டார் என்ற அவநம்பிக்கை வேறு. அம்மா பயப்பிடுவதில் காரணம் இல்லாமல் இல்லை.

1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்ட பிறகு ஒவ்வொரு நாளும் கே.கே.எஸ் றோட்டுப் பக்கம் போறதே பெருங்காரியம் தான். எப்ப என்ன நடக்குமெண்டு தெரியாது. திடீரெண்டு சுத்தி வளைப்பு இருக்கும், றோட்டை மறிச்சு எல்லாரையும் நிக்க வச்சு விசாரணை நடக்கும், அதில் எத்தனை பேர் வீட்டுப் பக்கம் திரும்பி வருவினம் எண்டும் சொல்ல ஏலாது. அரைக்காற்சட்டை போட்ட என் வயசுக்க்காரருக்கு அப்படி ஒன்றும் இதுவரை பெரிய சிக்கல் இல்லை என்றாலும் அம்மாவுக்கு நான் வளந்த பெடியன்.

போன கிழமை இப்பிடித்தான் வழக்கம்போல சித்தப்பாவும், சிவலிங்கமாமா ஆட்களும் கடையைத் திறக்க யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போகேக்கை தாவடிச்சந்தியில் இருக்கிற சென்றி பொயின்ற் (காவலரண்) இல் வச்சி எல்லாரும் சப்பல் அடியாம். நோவெண்ணைச் சுப்பையாவுக்குத் தான் மவுசு, அவர் கொடுத்த நோவு எண்ணையை உடம்பு முழுக்கத் தடவி வைத்தியம் நடக்குது. எல்லாரும் இன்னும் கடைப்பக்கம் போகேல்லை. திடீரெண்டு எங்காவது ஆமிக்கு பெடியள் கிரனேட் எறிஞ்சு அசம்பாவிதம் நடந்தால் அகப்படுகிற சனத்துக்குத் தான் சங்கு ஊதுப்படும். இந்த விஷயத்தில ஆண், பெண், வயது வேறுபாடில்லை.

இப்பிடி ஒருக்கால் இணுவில் வெங்காயச் சங்கத்தடியில் பாண் பெட்டிக்குள் குண்டை வச்சு ஆமியின் காவலரணுக்குப் பக்கத்தில் வச்சுட்டுப் போய் அது வெடிச்சு ஆமிக்காரர் செத்தாப்பிறகு அந்தப் பக்கம் சரமாரியான துப்பாக்கிச் சூடு. எல்லாம் ஆருக்கு? போறவாற சனத்துக்குத் தான். அதிலும் குர்க்காக்காரர் பொல்லாதவை. குள்ளமான ஆமிக்காரர். இந்தியவையும் சீனாவையும் பிரிக்கிற எல்லைப்பிரதேசத்துக்காரர் இவை எண்டு அப்பா சொன்னவர். சீக்கிய ஆமிக்காரரைக் கண்டாலும் எனக்குச் சீவன் போகாத குறை தான். பள்ளிக்கூடம் போகும் போது எதிரில் ஏதாவது சென்றிப்பொயின்ற் இருந்தால் அந்தப் பக்கமே பார்க்காமல் நிலத்தைப் பார்த்துக் கொண்டு கிறுகிறுவெண்டு கடந்து போயிடுவேன். மாலை ஆறுமணிக்குள்ளேயே ஊரே அடங்கிப்போய்விடும்.

சரி, சைக்கிளை எடுத்தாச்சு இனிக் கோண்டாவிலில் இருந்து சுண்ணாகம் காண பி.எஸ்.ஏ வாகனத்தில் என் சவாரி. புத்தகம் படிக்கிற உருசியில் பயம் தெளிஞ்சுட்டுது. ஆனாலும் அஞ்சு மணிக்குள்ள திரும்பி வரவேணும் எண்டு மனம் எச்சரிக்கை மணியைப் போட்டது. மருதனார் மடத்தடியில் இராமநாதன் கொலிஜ் இற்குப் பக்கமா பெரிய ஒரு காவலரண் இருக்கு, அந்தச் சனியனைக் கடந்து போனால் நிம்மதி. ஆகா, அதையும் கடந்தாச்சு, சுண்ணாகம் லைபிரரிக்கு வந்தாச்சு. இரண்டு மணித்தியாலம் எப்பிடிப்போனதெண்டே தெரியேல்லை. புதுசா வந்த புத்தகங்களில் தேவையானதை மட்டும் படிச்சுட்டு லைபிரரி மணிக்கூட்டைப் பார்க்கிறேன், நாலரை காட்டுது. மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன்.
யாழ்ப்பாணத்துச் சோழகக் காற்று பி.எஸ்.ஏ.சைக்கிளை ஆட்டிப் பார்த்தது. அப்பா 1950 களில் வாங்கின சைக்கிளாம். இன்னும் அது தன் ஒறிஜினல் ஸ்டீல் என்ற தற்பெருமையோடு முப்பது வருஷத்துக்கு மேல் உழைக்குது. இப்ப வாற சைக்கிளெல்லாம் அமலா போல மெலிஞ்சு போயிருக்க, அப்பாவின் சைக்கிளோ கந்தசுவாமி கோயில் கிடா வாகனம் மாதிரி பெரிய சைஸ்.

வாசிச்ச புத்தகங்களை இரைமீட்டுக் கொண்டு வருகிறேன், திரும்பவும் மருதனார்மடச் சந்தி, திரும்பவும் இந்தக் காவலரணைக் கடந்து போகோணும் எண்ட துடிப்பு. அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காதே என்று மனம் ஏவல் விட றோட்டின் நேர்ப்பக்கம் பார்த்துக் கண்கள் நோக்க,


"ஏய்" என்றொரு குரல் காவலரண் பக்கமாக வருகிறது. இண்டைக்கு நான் துலைஞ்சன், கை காலெல்லாம் கறண்ட் ஏத்தினமாதிரி நடுங்க, பி.எஸ்.ஏ சைக்கிளின் பிறேக் கட்டை அழுத்தப்படுகிறது. காவலரணில் இருந்து ஒரு சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஆமிக்காரன். ஆளைப்பார்த்தால் ரண்டு பனை உயரம். தலைக்குத் தொப்பி, தொப்பிக்குள்ள கத்தி எல்லாம் இருக்குமாம். சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு பவ்யமாக
"யெஸ் சேர்" என்று சொல்கிறேன்.


உள்ளுக்குள் இரத்த நாளங்கள் எல்லாம் என்னைச் சோதித்துப் பார்க்குது.
தன் கையில் இருந்த ஒரு பீடிச்சரையைக் காட்டி ஒரு பீடிக்கட்டு வாங்கி வருமாறு சைகை மொழியில் சொல்கிறான் கொஞ்சம் ஹிந்தியும் வேறு. எனக்கு "ஏக் துஜே கேலியே"ஐ விட ஹிந்தி மொழி தெரியாதே. ஆனாலும் அவனுடைய சைகை மொழியை வைத்துக் கொண்டு


"ஒகே சேர்" என்று சொல்லிச் சைக்கிளை உழக்க,


திரும்பவும் "ஏய்"


இதென்னடா கோதாரி என்று திரும்பவும் அசட்டுச் சிரிப்போடு அவனைப் பார்க்க, பத்து ரூபா நோட்டை நீட்டுகிறான். வாங்கிக் கொண்டு மருதனார் மடப்பக்கம் உள்ள தேத்தண்ணிக் கடைக்குப் போய்,


"அண்ணை ஒரு பீடிக்கட்டு தாங்கோ"


கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டே பத்து ரூபாத்தாளை வாங்கிக் கொண்டு சில்லறையைப் பொறுக்குகிறார். இந்த வயசில தறுதலை பீடியெல்லாம் பிடிக்குதோ என்ற மாதிரியான ஒரு பார்வை அது. ஆர்.பி.ஜி பீடிக்கட்டு என் கையில். ஆர்.பி.ஜி பீடிகள் உள்ளூர்த்தயாரிப்பு, வீரகேசரியில் விளம்பரம் எல்லாம் பார்த்ததோட சரி, இப்பதான் அதைத் தடவிப்பார்க்க ஒரு வாய்ப்பு. அம்மா, இதையெல்லாம் கண்டால் கிணத்தில விழுந்துடும் மனுசி. தவமணி ரீச்சர்ர மேன் பீடிக்கட்டோட இருக்கிறது பெருமையா என்ன? எனக்கோ இந்த நூற்றாண்டில் கிட்டிய அவமானம் போன்றதொரு நிலை.

காவலரணுக்கு வந்து காத்திருந்த சீக்கியனிடம் கொடுக்கிறேன். ஆர்.பி.ஜி பீடிக் கட்டைச் சுழற்றிச் சுழற்றிப் பார்க்கிறான். சரி என் வேலை முடிந்தது என்ற நினைப்பில் சைக்கிளில் ஏற,


"ஏய்" மீண்டும் அவன் தான்.


"யெஸ் சேர்"

 

அந்த பீடிக்கட்டை வேண்டாம் என்ற தோரணையில் தலையை ஆட்டிவிட்டு மீண்டும் தன் கையில் இருந்த பீடிக்கட்டுச் சரையைக் காட்டுகிறான். அதில் தொப்பியோடு ஒரு முஸ்லீமின் படம் போட்டு "செய்யது பீடி" என்று போட்டிருக்கு. இப்ப விளங்கீட்டுது இவன் செய்யது பீடி வாங்கித் தரச் சொல்லிக் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு,


"ஒகே சேர்"

 

beedi.jpg


ஆர்.பி.ஜி பீடிக்கட்டு இப்போது மீண்டும் என் கையில். பழையபடி மருதனார் மடச் சந்தித் தேத்தண்ணிக் கடை. கடைக்காரர் என்னைக் கண்டு திகைத்திருக்கக் கூடும். படுபாவி அதுக்குள்ள ஒரு கட்டு பீடியைக் குடிச்சு முடிச்சிட்டானோ என்று.


"அண்ணை, இது எனக்கில்லை, பக்கத்து சென்றி பொயின்ற் ஆமிக்கு, செய்யது பீடி வேணுமாம், இருக்கோ அண்ணை"


இது நான்.


"உதைத் தாரும் தம்பி, நாங்கள் செய்யது பீடி விக்கிறேல்ல, சுண்ணாகம் போய்ப் பெரிய கடையளில் விசாரிச்சுப் பாரும்" என்றவாறே பீடிக்காசைத் தந்து பீடிக்கட்டை வாங்குகிறார்.


சைக்கிளைத் திருப்புகிறேன். பேசாமல் உடுவில் பக்கமாகக் கள்ளப்பாதையால் வீடு போய்ச் சேர்வமோ,ஆனால் அந்தச் சீக்கியன் எங்காவது அடையாளம் கண்டானென்றால் துலைச்சுப் போடுவானே, அவன்ர காசு வேற கையில். வேறு வழியில்லை என்று மனதைச் சமாதானப்படுத்தி,சுன்ணாகம் பக்கம் போய் நியூமார்க்கற்றில் இருந்த கடையொன்றில் செய்யது பீடியைக் கண்டு வாங்கிக் கொண்டு, மீண்டும் சோளகக் காத்தோடு போட்டி போட்டு மருதனார்மடம் காவலரண் பக்கம் வந்து அந்தச் சீக்கியன் ஆமியிடம் கொடுக்கிறேன்.


"கோ (go)" என்று சைகை செய்கிறான். (உதவி செய்தால் தங்க் யூ சொல்லவேணும் இந்த நேரம் பார்த்து அம்மா சொன்னது வளையம் வளையமாக நினைப்பில்)
ஒருமாதிரி வீடு வந்து சேர்ந்தால் அப்பா வீட்டுக்குப் பின்புறம் ஆட்டுக்குக் குழை வெட்டிக் கொண்டிருந்தார். சத்தமில்லாமல் கிணற்றடியில் முகம் கழுவி,சாமி கும்பிட்டுட்டுப் பாடப்புத்தகத்தை விரிக்கிறேன்,ஊரடங்கிய இரவில்

00000000000000000000000000000000000000000000000000000000
அதே 1988 ஆம் ஆண்டு இன்னொரு நாள் ஆனால் இது பாடசாலை நாளின் காலை நேரம்

பள்ளிக்கூடத்துக்கு வெள்ளனவே வந்தாச்சு, கோண்டாவிலில் இருந்து கொக்குவில் காண நடந்து வரவேணும். சண்டை நேரம் என்பதால் காலையில் நேரத்துக்கே ஆரம்பிச்சு இரண்டு மணிக்கெல்லாம் முடிந்துவிடும் பள்ளி.


எங்கட கொக்குவில் இந்துவிலும் இன்னமும் ஆமிக்காறர் காவலரண் வச்சிருக்கினம். பள்ளிக்கூடம் பக்கம் இயங்கும், ஆமிக்காரர் தங்கடபாட்டிலை காவலில் இருப்பினம். ஆனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எல்லாரும் துலைஞ்சம் எண்டு கணக்கு சேர் ஒருக்கால் சன்னமாகச் சொன்னவர்.


இன்னமும் பள்ளிக்கூட பிறேயர் நடக்கேல்லை, மாணவர்களும் வரவில்லை. என்னைப்போல ஒன்றிரண்டு பேர் தான். இணுவிலில் இருந்து சுதாவும் வந்து விட்டான். முதலாம் மாடியில் இருந்து மூண்டாம் மாடிவரை படிக்கட்டில் ஏறி ஓடி விளையாடிப்பார்ப்போம் என்ற அல்ப ஆசை தொற்றிக் கொள்ள நானும் சுதாவும் மேல் மாடி காண ஓடுகிறோம் படிக்காட்டுக்களால். வளைந்து நெளிந்த படிக்கட்டுப் பாதையால் ஓடுவது பெரிய சவால். கொஞ்சம் வழுக்கினாலேயே முப்பத்திரண்டு பல்லுக்கும் உத்தரவாதமில்லை. ஆனாலும் வயசு விடாதே. என்னைத் தாண்டி ஓடுகிறான் சுதா.

இரடா வாறன் என்று சொல்லிக் கொண்டே நானும் அவனை முந்துவதற்கு ஓடி மூன்றாம் மாடியை எட்டியாச்சு மேல் தளத்தில் அவன் ஓட நான் முந்த மொளார் என்று சறுக்கி விழுகிறேன். அம்மா என்று சத்தம் போட்டுக் கொண்டே குந்தி இருந்து முழங்காலைத் தடவுகிறேன். சீமெந்துப் பூச்சில் மறைந்த முழங்கால் தோலை மீறி இரத்தம் கொப்பளிக்கிறது. சுண்ணாம்போடு தடவிப்போட வெத்திலையைக் குதப்பிய அம்மம்மாவின் சொண்டு மாதிரிப் பீறுடுகிறது இரத்தம். மேல் தளத்தில் காவலில் நின்ற இந்தியன் ஆமிக்காறர் ஒருத்தர் வாறார். இப்போது காலில் ஏற்பட்ட காயத்தை விட ஆமிக்காறர் வந்து என் கன்னத்தைப் பதம்பார்க்கப் போறாரோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது. ஆள் நல்ல கறுவலான நெட்டை உருவம், ஹிந்திக்காறனா இருக்காது.
கிட்டவந்த அந்த ஆமிக்காறன் என் காலைத் தன் கையால் திருப்பிப்போட்டுப் பார்த்து விட்டு தன் யூனிபோர்ம் பொக்கற்றில் இருந்து ஒரு நாலைந்து கிழிசலான துண்டுகளை எடுக்கிறார். தன் நாக்கில் தடவி விட்டு ஒவ்வொன்றாகப் புண் இருக்கும் பகுதியில் ஒட்டுகிறார். அந்தத்துண்டுகள் அதே முஸ்லீம்காரர் உருவம் பொதிந்த "செய்யது பீடி"கட்டின் பேப்பர் என்று தெரிகிறது.


செய்யது பீடிக் கட்டின் பேப்பரைத் தன் நாக்கித் தடவி எச்சில் ஆக்கியபின் அதைச் சிராய்ப்புக்காயத்துக்கு ஒட்டிக் கொண்டே,


"வாட் இஸ் யுவர் நேம்"


"பிரபாகர் சேர்"


எனக்கும் அவரின் பெயரைக் கேட்க ஆசை,பயம் தெளிந்துவிட்டது.


"வட் இஸ் யுவர் நேம் சேர்"


"சரவணன்"

யாவும் உண்மையே

 

http://www.madathuvaasal.com/2012/01/blog-post_24.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.