Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வசந்தம்! இன்னமும் விடியாத தமிழர் கிராமங்கள்

Featured Replies

அடர்ந்து வளர்ந்திருக்கும் வனாந்தரத்திற்கும், வனாந்தரத்திற்கு நடுவே மழை வெள்ளத்தால் நிரம்பிக்கிடக்கும் ஒரு ஒடுங்கிய மண்சாலைக்கும் பின்னால் நாகரீக வேடுவர்களாய் மாற்றப் பட்டிருக்கும் மக்களின் கதை அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வடக்கின் வசந்தம் வீசாமல், அபிவிருத்தியினால் அலங்கரிக்கப்படாமல் அலங்கோலப்பட்டிருக்கும் ஒரு கிராமம் புதிய குடியிருப்பு என்ற மிகப் பின்தங்கிய கிராமம்.

 

kilinochchi-people-2013.jpg



kilinochchi people 2013கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னர் தோன்றிய, இன்றுவரை அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல கிராமங்களில் இதுவும் ஒன்று. மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் நிலமற்ற மக்களை கொண்டு 2011ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த புதிய குடியிருப்பு கிராமத்தில் இன்று 60ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

 

 

அண்மையில் இந்தக் கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டோம். கிளிநொச்சி நகரத்திலிருந்து அக்கராயன் நோக்கிச் செல்லும் வழியில் யூனியன்குளம் என்ற சிறிய கிராமத்திற்குப் பின்னாலுள்ள வனாந்தரத்திற்குள் இந்த புதிய குடியிருப்பு அமைந்திருக்கின்றது. செல்லும் வழி முழுவதும் வீதி வெள்ளத்தால் நிரப்பப்பட்டிருக்கின்றது. இரண்டு பக்கங்களிலும் அச்சுறுத்தும் பற்றைக் காடுகள் வளர்ந்திருக்கின்றன.


சற்றுத் தூரத்திற்கு மனிதர்களின் நடமாட்டத்தையே காணமுடியவில்லை. ஆனாலும் தொடர்ந்தும் பயணித்தோம். காட்டிற்கு நடுவில் ஆங்காங்கே குடிசைகள் கண்ணில் தெரிகின்றன. அப்போது மாலை 4 மணியாகியிருந்தது. மக்களுடைய முகங்களில் சந்தோசத்தின் சஞ்சரிப்பைக் கூட காணமுடியவில்லை. யாரோ வருகிறார்கள் என்பதை மட்டும் கிராமமே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

 

நாங்கள் எங்கள் பயணத்தை நிறுத்தியபோது தாமாகவே மக்கள் எங்களோடு இனம்புரியாத எதிர்பார்ப்போடு பேச தலைப்படுகின்றார்கள். நாங்கள் எங்களை யாரென அடையாளப்படுத்திக் கொண்டதன் பின்னர் எங்களுடைய வீட்டை பாருங்கள், எங்களுடைய பிரச்சினைகளை கேளுங்கள் என தொடர்ச்சியாக மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே பிரச்சினைகள் அதிகம் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம்கிடையாது. அந்தக் கிராமத்திற்குள் நுழையும் எவருக்கும் அந்த உண்மை தானாகப் புரியும். நாங்கள் கடந்து வந்த வீதியில் இரண்டு இடத்தில் பாலங்கள் இடிந்து வீழ்ந்து வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கின்றது. வீதியில் பேருந்துகளையே காணவில்லை.

அந்த கிராமத்திற்கு நெருக்கமாக வயல்வெளிகளும், காடுகளும் மட்டுமே எமக்குத் தெரிந்தது.


இந்த விடயங்களோடு மக்களோடு பேசினோம். அவர்கள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கனதியானவையாகவும், அந்த வார்த்தைகளுக்குப் பின்னாலுள்ள வலிகளை அடையாளப்படுத்துபவையாகவும் இருந்தன. கிராமத்திலுள்ள சின்னம்மா என்ற வயதான தாயருவர் எம்மோடு பேசுகையில், நாங்கள் குடியேற்றப்பட்டு 2 வருடங்களாயிற்று. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கால் ஏக்கர் நிலம் என்று சொல்லியே எங்களை குடியேற்றினாங்கள். ஆனால் சொன்னவங்கள் எங்கள கொண்டு வந்து விட்டதுக்குப் பிறகு இண்டை வரைக்கும் ஊர்ப்பக்கம் வரயில்லை.

 

ஆஸ்பத்திரிக்கு போறத்துக்குப் பத்துக் கட்டை நடந்து போறம், பிள்ளையள் நடந்து கோணாவில் பள்ளிக்கூடத்துக்குப் போகுதுகள். இங்க ஒருத்தருக்கும் சரியான தொழில் இல்ல. அப்பப்ப கூலி வேலைக்குப் போற வருமானத்தில குடித்தனம் நடக்குது. ஒரு வீட்டுத்திட்டம் தரயில்ல. 2 வருசத்துக்கு முதல் தந்த தகரத்தோட இருக்கிறம். ஒரு நாள் மழை பெஞ்சால் காட்டு நிலம் வீடெல்லாம் தண்ணி ஊறுது. ஒவ்வொரு நாளும் நரக வாழ்க்கை வாழுறம் பாருங்கோ என கண்ணீரோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.


குடியேற்றம் செய்யப்படும்போது கால் ஏக்கர் நிலம் வழங்கப்படும் என கூறப்பட்டே மக்கள் குடியேற்றப்பட்டனர். ஆனால் இன்று வரைக்கும் எந்த அதிகாரியும் இந்தக் கிராமத்திற்குச் சென்று அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளந்து அவற்றுக்கான ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அரை நிரந்த வீட்டினுள் தொடர்ந்தும்

வாழமுடியாது என மக்கள் கேட்கும்போது இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் உங்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் மக்களுக்குக் கூறியிருக்கின்றனர். ஆனால் நிரந்தரக் காணியில்லாம வீட்டுத்திட்டம் எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்து மக்களுக்குத் தெரியாது.

 

ஆனாலும் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் தமக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும், தங்களுடைய பெயர் விபரங்கள் பெறப்பட்டிருக்கின்றன என்றும் மக்கள் ஆறுதல் பட்டுக்கொள்ளும் போது மனிதாபிமானமுள்ள எவருக்கும் உள்ளம் ஒரு தரம் கலங்காமலிராது. இதேபோல் அக்கராயன் வைத்தியசாலைக்கு 10 கட்டைக்கும் மேல் நடந்து செல்லவேண்டும் என மக்கள் கூறுகின்றனர். அதற்கான வீதி 30 வருடங்களுக்கும் மேலாக புனரமைக்கப்படாத நிலையில் ஆங்காங்கே குழிகளும், அவற்றில் வெள்ள நீரும், உடைந்து சிதறிக்கிடக்கும் பாலங்களுமாக பார்க்கும் போதே வேதனையினை வர வழைக்கின்றன. அதுபோக கிராமத்திற்கு வாரத்தில் ஒருமுறையாவது நடமாடும் சேவை, வைத்திய பரிசோதனை கூட கடந்த 2 வருடங்களில் செய்யப்படவில்லை.


இரவில் சிறுவர்களுக்கு, அல்லது வயதானவர்களுக்கு காட்டு விச ஜந்து ஒன்று தீண்டி விட்டால் அவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்குள் எல்லாம் முடிந்து விடும் என்ற வேதனை கலந்த சலிப்பினையே மக்களிடம் பார்க்க முடிகின்றது. மக்களோடு பேசிக் கொண்டே ஒவ்வொரு வீடுகளையும் இணைக்கும் படி அமைந்திருக்கும் ஒற்றையடி பாதை வழியாக நடந்து அவர்களுடைய குடிசைகளுக்குள் நுழைந்து பார்த்தோம்.

 

மிகச்சிறிய கூடாரத்திற்குள் படுக்கையறை, சமையலறை என அனைத்துமே அடங்கியிருக்கின்றது. அதற்குள் பெரும்பாலான வீடுகளிற்குள் வயல் நிலம்போல் தண்ணீர் ஊறி சகதியாக மாறியிருக்கின்றது. அதற்குள்ளேதான் சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவருமே நடமாடவேண்டும், படிக்கவேண்டும், சமைக்கவேண்டும், படுத்துறங்கவேண்டும். எப்படிச் சாத்தியம் என்ற கேள்வியை நாம் கேட்டபோது எல்லாம் எங்கள் தலையெழுத்து என மக்கள் சாதாரணமாக கூறிக்கொண்டு கடந்து செல்கின்றார்கள்.


அந்தளவிற்கு வேதனைகளின், இயலாமைகளின் வீடுகள்கள் அவர்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றது. கிராமத்தில் 97 வீதமான வீடுகளில் மலசல கூடம் கிடையாது. பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என அனைவருமே சுற்றியுள்ள காட்டையே நம்பியிருக்கின்றனர். சுத்தமான குடிநீர் கிடையாது. இவை அனைத்திற்கும் மேல் 90 வீதமான மக்கள் கூலி வேலையினையே நம்பியிருக்கின்றனர்.

 

பெண்கள் வீடுகளைச் சுற்றி சிறிய மரக்கறிப் பயிர்களை வளர்த்திருக்கின்றனர். ஆனாபோதும் வருமானம் ஈட்டும் ஒன்றாக அவையில்லை. கூலி வேலையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கிடைக்காத நிலையில் பெரும்பாலான குடும்பங்கள் நிவாரணங்களும் இல்லாமல் வறுமையோடு போராடிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக கணவனையிழந்த மற்றும் வீட்டில் உழைக்கக் கூடிய பிள்ளைகள் இல்லாத குடும்பங்கள் அதிகம்பாதிக்கப்பட்டிருக்கின்றன.


அந்தக் கிராமத்திற்குள் நின்று மக்கள் எங்களுக்கு கூறிய அத்தனை பிரச்சினைகளுக்கும் பின்னால் அதிகாரிகளினதும், அரசியல்வாதிகளினதும் அலட்சியப் போக்கு நிறைந்திருப்பதை எங்களால் பார்க்க முடிந்திருக்கின்றது. அடிப்படை வசதிகள் இல்லை, வாழ்வாதாரத்திற்கும் ஒன்றும் இல்லையென்றாகின்றபோது இந்த மக்களுடைய நிலையென்ன, இந்த மக்களுடைய மீட்பர்கள் யார் என்ற கிடைக்காத பல கேள்விகளுடன் அஸ்த்தமனப் பொழுதில் அந்தக்கிராமத்தை விட்டு வெளியேறினோம். மீண்டும் வெள்ளம் நிறைந்த மண் ஒடுங்கிய மண்சாலை வழியே திரும்பிக் கொண்டிருந்தோம்.

 

 

மாலை ஆறு மணிக்கே வானம் இருள் சூழ்ந்து விட்டது. எதிரே நிற்பவரைக் கூட அடையாளம் தெரியாத அந்த இருளில் வனாந்தரத்திற்கு நடுவில் அந்த மக்களுடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என்ன ஏக்கமே இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. நகரங்களை ஊடறுத்து காப்பற் வீதிகளும், அதில் ஓட விலையுயர்ந்த கார்களும், கண்ணாடி கட்டடங்களும் வந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டதாக பொருள் கொள்ள முடியுமா? எங்கள் பகுதிக்கு இன்னமும் காப்பற் வரவில்லை என்று அங்கலாய்ப்பவர்களும், மின்வெட்டுக்கு பதறியடிப்போரும், அறிவார்களா? கிறவல் வீதிகளையும், மின் விளக்குகளையும் கூட காணாத எத்தனையோ கிராமங்கள் எங்கள் மண்ணில் இருக்கின்றது என்பதை.


அங்கெல்லாம் மிருகங்கள் அல்ல மனிதர்கள் எங்கள் சொந்தங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை. புதிய குடியிருப்பு ஒரு வனாந்தரத்தின் முகப்பிலுள்ள கிராமம் மட்டுமல்ல பல போலி முகங்களின் முகத்திரை கிழிக்கும் ஆயுதமும் கூட. இது வெறுமனே புதிய குடியிருப்பின் கதை மட்டுமல்ல, இந்த நிலையில் இன்றும் இருந்து கொண்டிருக்கும் பல கிராமங்களின் கதையும் இதுதான்.

 

 

நன்றி : ஈழமுரசு


தாயகத்தில் இருந்து இளங்கீரன்.

 

http://www.eelamview.com/2013/01/19/kilinochchi-people-2013/

  • தொடங்கியவர்

"யாழ்.வலிகாமம் வடக்கு இடம்பெயர் மக்களின் 23 வருடமாக தொடரும் அவல வாழ்வு"
===========================================================================================

 

 

யாழ்.வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் நிலச்சொந்தக்காரர்கள் முகாமை அங்கிருந்து அகற்றுமாறு தீவிரமான அழுத்தங்களை கொடுப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தாம் சொந்த இடங்களுக்கும் செல்லமுடியாமல், முகாம்களை விட்டும் வெளியேற முடியாமல் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.


இந்நிலைமைகள் தொடர்பாக பல தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

 

397622_324416057662313_1902675537_n.jpg

வலி வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம்களிற்கு நேற்று விஐயம் மேற்கொண்ட வலிவடக்குப் பிரதேச சபையின் தவிசாளர். சோ.சுகிர்தன் மக்களது நிலைமைகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார்.


இதன்போதே தமது நிலைமைகள் தொடர்பாக மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்து கடந்த 23 வருடமாக முகாம்களிலும் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.


45 கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் முகாம்களில் அடிப்படை வசதிகள் உட்பட எதுவித வசதிகளுமற்ற நிலையில் பெரும் அவல நிலையில் வாழ்ந்து வந்தனர்.

 

இந்நிலைமைகள் தொடர்பாக பல தரப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்த நிலையில் இவர்களில் 26 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் படிப்படியாக மீளக்குடியமர்த்தப்பட்டனர்.


மேலும் அனைத்து மக்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நடுப்பகுதியின் பின்னர் வலி. வடக்கில் மீள்குடியேற்றம் எதுவும் இடம்பெறவில்லை.

 

இந்நிலையில் இங்கு தற்போது 24 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த 24 கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த 27000 ஆயிரம் மக்கள் இதுவரையில் மீளக்குடியமர்வதற்கு பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.


ஆயினும் மீள்குடியமர்வுக்கு இதுவரையில் அனுமதிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் முகாம்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் முகாம்களின் காணி உரிமையாளர்கள் தற்போது தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர்.

 

இதனால் தாம் அடுத்தகட்டமாக என்ன செய்வதென்றும் தமது நிலைமைகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவதில்லை என்றும் கவலையுடன் தெரிவித்த மக்கள் தம்மை தமது சொந்த இடங்களி-ல் மீள்குடியமர்த்துவதற்கு அனைத்துத் தரப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

இதன் பின்னர் சுகிர்தன் கருத்து வெளியிடுகையில்…

 

வலி. வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்கள் ஆகிவிட்டன.ஆனாலும் தற்போதும் இவர்களது நிலங்கள் விடுவிக்கப்படாமல் இரானுவத்தின் உயர்பாதுகாபக்பு வலயமாக உள்ளது.


இதனால் கடந்த 23 வருடகாலமாக இந்த மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். 45 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட இப்பகுதியில் இவர்களில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர்.

 

இந்நிலையில் இவர்கள் தற்போதுள்ள முகாம் காணிகளினது உரிமையாளர்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.


இதனால் இந்த மக்கள் பெரும் நிர்க்கதி நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் இது தொடர்பில் இயன்ற நடவடிக்கையை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.