Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கானா...தெலுங்கானா...! வரும்...ஆனா வராது ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானா...தெலுங்கானா...! வரும்...ஆனா வராது ?

 

வரும் சனவரி '28க்குள் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா மற்றும் ஆந்திரா என பிரிவினை பற்றிய முறையான அறிவிப்பை, மத்தியிலுள்ள காங்கிரசு கட்சி வெளியிடப்போகிறதென பல்வேறு ஊடகங்கள் எதிர்வு கூறும் நிலையில், தெலுங்கானா பற்றி வரலாற்றை அறியும்பொருட்டு, இணையத்தில் தமிழில் தேடினேன்.

 

கிட்டியதை யாழுக்காக பகிர்கிறேன்.

குறிப்பு:  'பொட்டி ஸ்றீராமுலு' என்பவரின் தலைமையில் நடந்த ஆந்திரர்களின் அடங்காத கிளர்ச்சியின் விளைவாகவே அப்போதிருந்த ஒன்றுபட்ட சென்னை மாகாணம் (ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளடக்கிய பகுதிகள்) பிரிந்து மொழிவாரியாக மாநிலங்கள் பிளக்கப்பட்ட பின், தமிழர்கள் பல பகுதிகளை அண்டை மாநிலத்தவர்களிடம் இழந்தார்கள். (ஆந்திராவிற்கு - திருப்பதி, கர்நாடகாவிற்கு கோலார், கேரளத்திற்கு இடுக்கி போன்ற மாவட்டங்கள்)..

 

அதனால் படும் துன்பங்கள் இன்றுவரை தமிழ் நாட்டிற்கு தொடர்கின்றன.

 

-ராஜவன்னியன்.

 

 

ஆந்திரா - தெலுங்கானா, வரலாற்றுத் தொடர்புகள்-1

('உன்னதம்' இதழிலிருந்து)

 

ஆந்திரப் பிரதேசம் உருவாகக் காரணமாக இருந்த ஆந்திர மாநிலம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 'தெலுங்கானா' பிரதேசத்தின் இணைப்பை குறித்த வரலாற்றுத் தொடர்புகளை இந்தக்கட்டுரை விவரிக்கிறது. அன்று நிகழ்ந்த நிகழ்வுகள், இன்றைய சூழலுக்கும் பொருந்தக் கூடியவை. பழைய வரலாற்றிலிருந்து பாடம்கற்று இன்றைய நிகழ்வுகளை தடுத்திருக்க முடியும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இக்கட்டுரையானது, 1969 - 70 முதல் இன்று வரையிலான தெலுங்கானா எழுச்சியின் சோகம் தோய்ந்த வரலாற்றை கணக்கில் எடுக்கவில்லை. காரணம், அது பொதுவெளியிலும் மக்கள் நினைவிலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

1.மொழி சார்ந்த நாடு

மொழி அடிப்படையிலான இந்திய மாநிலங்களின் மறுசீரமைப்பு வரலாற்றை சற்றே பின்னோக்கி பார்க்கலாம். 1920 டிசம்பரில் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில், அக்கட்சியானது தனது அமைப்பை புதுப்பித்ததுடன் மொழிவாரியான கமிட்டிகளையும் உருவாக்கியது.

1920 ஆகஸ்டுக்கு முன்பே, ஆந்திர மாகாணத்தின் வரைவுத்திட்டத்துக்கு மதராஸ் மாகாண சட்டப் பேரவை ஒப்புதல் அளித்திருந்தது. 1927ம் ஆண்டு மார்ச் 14 அன்று மறுசீரமைக்கப்பட்ட அரசியல் அமைப்பின்படி, மதராஸ் மாகாண சட்டப் பேரவை, 40 ஆதரவு வாக்குகளுடன் (32 எதிர்வாக்குகளோடு) தனித்த ஆந்திர மாகாணத்துக்கு தீர்மானம் நிறைவேற்றி, வைஸ்ராய்க்கு அனுப்பியது. வைஸ்ராயும் இந்த விவகாரத்தை லண்டனிலிருந்த இந்திய செயலரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். ஆனால், பலன் ஒன்றுமில்லை. காரணம், தனித்த ஆந்திரத்தால் தங்களின் பிழைப்பு பாதிக்கும் என்று ஆந்திரபிரதேசத்தை உள்ளடக்கிய அரசாங்கத்தையும் இதர பணியிடங்களையும் தங்கள் வசம் வைத்திருந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் கருதி எதிர்ப்பு தெரிவித்ததுதான். அனைத்துக்கும் மேலாக, 1932 - 33 நிதியாண்டில் மட்டும், 12 தெலுங்கு மாவட்டங்கள் கூட்டாக, ரூ 133 லட்சம் ரூபாய் செலவினத்துக்குப் பிறகும் வருடாந்திர உபரி வருமானத்தை ஈட்டியிருந்தன. இதுவே, பட்டாபி சீதாராமைய்யாவை 'தமிழ் அழைச்சர்கள், நமக்கு தனி மாகாண தகுதி வழங்குவதற்கு முன்பாக ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் வழங்கி விடுவார்கள்' என்று ஆரூடம் சொல்ல வைத்தது.

காங்கிரஸ் தனது 1945 - 46 தேர்தல் அறிக்கையில், 'நம் தேசத்தின் அனைத்துப் பகுதி மக்களும், நிலப்பரப்புகளும் சுதந்திரமடைந்து தங்கள் வாழ்விலும், கலாச்சாரத்திலும் வளர்ச்சியடைவதற்காக காங்கிரஸ் கட்சி பரந்த அளவில் முன்னின்று போராடி வருகிறது. இந்த காரணத்திற்காகவாவது முடிந்தவரையில் மொழி மற்றும் கலாச்சார அடிப்படையில் நிலப்பரப்புகள் உருவாக்கப்பட வேண்டும்' என்று கூறியிருந்தது.

இப்பிரச்சினைகளை குறித்து ஆழ்ந்து ஆராயவும் - முக்கியமாக ஆந்திர, கேரள, கர்நாடக மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை கட்டமைக்கவும் - மொழி அடிப்படையிலான மாகாண செயற்குழுவை (டார் குழு) 1948 டிசம்பரில் இந்திய அரசாங்கம் அமைத்தது. ஆனால், இந்த செயற்குழு 'இந்திய தேசத்துக்கு பெரிய ஆர்வமில்லாத ஒன்றாக இது இருக்கிறது. எனவே இதை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது' என்று புது மாநிலங்களின் உருவாக்கத்துக்கு மாறாக முடிவு செய்தது. ஆந்திராவைப் பொறுத்தவரை அனைத்து ராயலசீமா மாவட்டங்களும் வருவாய் பற்றாக்குறையை சந்தித்து வருகையில், கடற்கரையோர மாவட்டங்களோ உபரி வருமான மிகுதியை கொண்டிருந்தன. எனவே ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் ஒரே சீரான நிலையை காண முடியாதிருந்தது. இது பல விவாதங்களை கிளப்பியது.

1949ம் ஆண்டு ஆந்திராவில் நெருக்கடி முற்றியதும், ஆந்திர மாகாணத்தை நடைமுறையில் கொண்டு வர தலைமை முடிவு செய்தது. காரணம் அப்போது தமிழர்கள், ஆந்திர மக்கள் மற்றும் இதர மக்கள் தொடர்பான உரிமைகள் உறுதிபடுத்தப்பட்டிருந்தன. ஆனால், மெட்ராஸ் நகரம் மற்றும் ராயலசீமா தொடர்பான விவகாரங்கள் ஒத்திவைக்கப்பட்டன. 1949 பிப்ரவரியில், பம்பாய் நகரத்தை தன்னகத்தே கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தை உருவாக்க பரிந்துரைத்து ஒரு தீர்மானத்தை பம்பாய் சட்டமன்ற தொகுதி நிறைவேற்றியது. இப்படி ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா கோரிக்கைகளை எதிர்கொண்டபின்னர், சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமைய்யாவோடு தன்னையும் இணைத்து ஒரு கமிட்டியை நேரு உருவாக்கினார். பிரச்சினைகளை கண்டறிவதும் அவற்றை 10 ஆண்டுகள் தள்ளிப்போடுவதுமே இந்த கமிட்டியின் நோக்கம். இது சரிவர நடக்காததால், 1949 நவம்பரில், மதராஸ் நகரத்தை தவிர்த்த ஆந்திர மாநிலத்தை உருவாக்கும்படி அரசாங்கத்தை காங்கிரஸ் செயற்குழு கேட்டுக்கொண்டது. ஆனால், தனி மாநிலத்துக்காக மதராஸை விட்டுக்கொடுக்க ஆந்திர மக்கள் தயாராக இல்லாததால், இத்தீர்மானம் நடைமுறைக்கு வர தாமதமானது.

1952 இல் வெளியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மொழிவாரியான மாநிலங்கள் அமைவதற்கான அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. 'இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில், மொழி அடிப்படையிலான மறு பங்கீட்டுக்கு தேவை இருந்துக்கொண்டே இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பே மொழி அடிப்படையிலான மாநிலங்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த கேள்விக்கான விடை சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பத்தில்தான் முழுமையாக அடங்கியிருக்கிறது. மொழிரீதியான காரணங்கள், கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் பொருளாதார அடிப்படையிலான ஆட்சிமுறை மற்றும் வருவாய்துறை சார்ந்த காரணிகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சம்பந்தபட்ட மக்களை கருத்தில் கொண்டாலும், சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புக்குழுவினரின் நியமனம் உட்பட தவிர்க்க முடியாத நடவடிக்கைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்'.

'மக்களின் விருப்பம் சார்ந்து' என குறிப்பாக சுட்டியதால், '95 சதவீதத்திலிருந்து 97 சதவீதம் வரையிலான ஆந்திர மக்கள் இதை அங்கீகரித்தால் தானும் ஏற்பதாக' பிரதமர் சொன்னார்.

1949க்கு முன்பிருந்தே ஆந்திர மாநிலத்தை தலைமை ஏற்றிருந்த நிலையில், 1952 டிசம்பர் 2 அன்று, முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'தனி ஆந்திர மாநிலத்தை உறுதிப்படுத்துவது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் பிற மொழிவாரி மாகாணங்களின் தேவைகளுக்கான கேள்விகள் எழுப்ப வழி வகுக்கும். எனவே அவற்றை இப்போதே கருத்தில் கொள்ள வேண்டும். சூழ்நிலைகள் நம்மை நெருக்கும் வரை காத்திருப்பது விவேகமாக இருக்காது' என்று நேரு குறிப்பிட்டார்.

அதே ஆண்டு டிசம்பர் 16 அன்று - அதாவது ஆந்திரா உருவாக்கத்தை அறிவிப்பதற்கு மூன்று நாட்கள் முன்பாக - ஆந்திர மக்களைக் குறித்து சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜிக்கு கடிதம் ஒன்றை நேரு எழுதினார். அதில், '(ஆந்திராவானது) பல துறைகளிலும் பின் தங்கிய மாநிலமாகவும் பொருளாதார ரீதியில் முன்னேற பெருமுயற்சி செய்ய வேண்டியதாகவும் இருக்கும். இதற்காக அவர்கள் மத்திய அரசிடமிருந்து பெருமளவு உதவியை எதிர்பார்க்க முடியாது. எப்படியாயினும் அது அவர்கள் முன்னுள்ள பிரச்சினை. அவர்களுக்கு தனி மாநிலம் தேவையாக இருந்தால், நாம் வரையறுத்திருக்கும் சட்டதிட்டங்களுக்குட்பட்டே (மெட்ராஸ் நகரத்தை தவிர்த்து) ஏற்க வேண்டும்'.

1953, ஜனவரி 18 அன்று ஆந்திர மாநில உருவாக்கத்துக்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை உறுதிபடுத்தும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்ததோடு, மொழிவாரி மாகாணங்களுக்கு ஆதரவான தனது கொள்கையையும் காங்கிரஸ் உறுதிப்படுத்தியது.

'நம்மைப் பொறுத்தவரை, ஆந்திர மாநிலம் உறுதியாக நிலைபெற்ற பின்னரே, அம்மாநிலத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராய ஆட்சித்திறம் கொண்ட குழுவை நியமிக்க முடியுமென்று தெளிவாக வரையறுத்திருக்கிறோம். தனித்த ஒன்றாக அப்படியே விட்டுவிட நாம் நினைக்கவில்லை. ஏனெனில், இதில் பல மாநிலங்கள் தொடர்புடையதாக இருப்பதால் அப்படி கருதவும் முடியாது. மொழியும் கலாச்சாரமும் இன்றியமையாதவையாக இருந்தாலும், முற்றிலும் மொழி சார்ந்த தளமாக மட்டுமே கருதி நாம் திட்டமிடவில்லை... ஹைதராபாத் மாநிலத்தை தனியாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கண்டால் ஆச்சர்யமாக இருக்கிறது. இச்செயல்களை நாம் அனுமதித்தோம் என்றால், இப்படி சொல்ல வருத்தமாக இருக்கிறது, நம் தேசத்தில் சர்வ நாசங்கள் விளைவதற்கான பின்விளைவுகள் உண்டாகக் கூடும்' என்று 1953 ஜூலை 2 அன்று முதலமைச்சர்களிடம் நேரு சொன்னார்.

ஆந்திரப்பிரதேசத்திலிருந்து ஹைதராபாத் மாநிலத்தை (தெலுங்கானா) பிரிக்கும் விவகாரத்தை 'ஹைதராபாத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும், தென்னிந்தியாவின் முழு கட்டமைப்புக்கு பாதகம் விளைவிக்கக்கூடியதாகவும்' நேரு கருதினார். 'பெருமுயற்சிக்குப்பின் ஹைதராபாத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமுறை நிர்வாகத்துக்கு சிதைவை கொண்டு வரும் எந்த செயலும் விவேகமானதல்ல' என்றும் குறிப்பிட்டார். ஹைதராபாத்தை பிரிக்கும் விவகாரத்தில், 'இது முற்றிலும் விரும்பத்தகாத, துரதிஷ்டம் கொண்ட, கேடுவிளைவிக்கக் கூடியதாக இருக்குமென்று எண்ணுகிறேன்' என்று முடிவாக கூறினார். 1952, அக்டோபர் 2 இல், ஹைதராபாத்தை பிரிப்பது குறித்த சிபிஐ-யின் நிலைப்பாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, 'ஹைதராபாத் பிரிவுக்காக மொழிவாரியான கூக்குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. என்னைப் பொருத்தவரை, இதற்கு எதிராக இருக்கிறேன். ஒருவேளை இது அங்கீகரிக்கப்பட்டால், ஹைதராப்பாத்தின் முன்னேற்றம் பல வருடங்களுக்கு தடைபடும் என்று உறிதியாக சொல்ல முடியும். மேலும் இது பலதரப்பட்ட சிக்கல்ளை உருவாக்குவதுடன் தென்னிந்தியாவின் அமைதியும் நிலைகுலையும். இதனால் நிலமை சீராகும் வரை நமது அனைத்து ஐந்தாண்டு திட்டங்களும் கிடப்பில் போட வேண்டி வரும்' என்று முதலமைச்சர்களிடம் நேரு கூறினார்.

1952, ஜூலை 7 இல் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும்போதும், 'என்னை பொருத்தவரை உத்திரபிரதேசத்தை நான்காக பிரிக்கும் திட்டம் ஏதுமிருந்தால், அது எனக்கு ஏற்புடையதுதான். ஆனால், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த எனது சகாக்கள் இந்த ஆலோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்பார்களா என்பது சந்தேகமே. இதற்கு முரணாக கூடுதல் நிலப்பகுதியை வேறு எந்த மாகாணத்திலிருந்தாவது கிடைக்குமா என்றுதான் பார்ப்பார்கள்' என்றார் நேரு.

எதிர்ப்பின்றி ஆந்திராவை விட்டுக்கொடுக்க ஆயத்தமாக இருந்த (நேருவும், சர்தார் வல்லபாய் படடேலும் உள்ளடங்கிய) தலைமையானது, தெற்கு வங்காளத்தில் கூர்க்கா மாகாணத்துக்கான கோரிக்கையை 'போலிதோற்றமும், தவறாக உள்வாங்கப்பட்டதும், தேசத்தின் நலனுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதுமானது' என்று கூறி ஏற்க மறுத்துவிட்டது.

அம்பேத்கருக்குள் பலவகையான எண்ணங்கள் இருந்தன. இருந்தாலும், மொழிவாரி மாநிலங்களைப் பொறுத்த வரை அவரது நிலைப்பாடு, முந்திய நிலைப்பாட்டிலேயே இருந்தது. 'மக்களாட்சியை சுலபமாக்கவும், இன மற்றும் கலாச்சார அழுத்தங்களை களையவுமே மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்கிறோம். மொழிவாரி மாநிலங்களை அமைப்பதன் மூலமாக இந்தியா சரியான பாதையிலேயே செல்கிறது. இதுவே எல்லா நாடுகளும் பின்பற்றும் பாதை. ஏற்கெனவே மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மற்ற மாநிலங்களும் தொடக்கம் முதல் இந்தப் பாதையிலேயே நடைபோடுகிறது. இந்தியச் சூழ்நிலையில் இலக்கை அடைய தலைகீழாகவே இயங்கவேண்டியுள்ளது. ஆனால், பயணிக்க உத்தேசித்த பாதையானது உன்னிப்பாகச் சோதித்தறிந்த பாதை. மற்ற மாநிலங்களாலும் பின் தொடரப்படும் பாதை'

எனினும், தேச ஒற்றுமைக்கும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும் எதிரான சவால்களும் இதில் இருப்பதாக அவர் அஞ்சினார். 'ஒருங்கிணைந்த இந்தியா என்பது இந்திய ஐக்கியத்திலிருந்து வெகுவாக தள்ளி இருக்கிறது. வடக்கையும், சிறுசிறு மாநிலங்களாக பிரித்த தெற்கையும் ஒன்றாக்குவது மூலமாக இதை அடைய முடியாது' என்பதே அவரது எண்ணங்களை ஆக்ரமித்திருந்தது. மொழி ஆதிக்க வெறி குறித்தும் அவர் கவலைப்பட்டார். இது குறித்த வலுவான உள்ளுணர்வு அவருக்குள் இருந்தது.

2.நேருவின் மனோபாவம் :

1949 இல் ஆந்திர மாநில உருவாக்கத்துக்கான ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாகக் கூறியதிலிருந்து, 1953 இல் ஆந்திர மாநிலம் உருவாகும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் முடிந்தவரை இதனை கற்சுவரிட்டு தடுக்கவே நேரு முயன்றார். மிக அரிதாகவே இதற்கு செயல்வடிவம் கொடுக்க முன்வந்தார். தவிர்க்க இயலாமல் ஆந்திரமாநிலம் உருவான பிறகும், ஹைதராபாத்தை தனியே பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே ஆர்வம் காட்டினார். மாநில மறுசீரமைப்பு குழுவையும் இதன் காரணமாகவே ஏற்படுத்தினார். இதற்கு இரண்டு ஆண்டுக் காலம் பிடித்தது. ஆனால், நிலமை அமைதி பெறுவதற்கு பதிலாக கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது. மாநில மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை வெளிவருவதற்கு இரு மாதங்களுக்கு முன்பாக, அதாவது 1955 ஆகஸ்ட் 2ல், முதலமைச்சர்களுக்கு நேரு கடிதமெழுதினார். அந்தக் கடிதம், பொதுவாக, அக்குழுவின் பரிந்துரைகளை எதிர்நோக்குவதாயும், நிலமையை சமநோக்கு அடையச் செய்வது குறித்தான முன்னறிவிப்பாகவும் இருந்தது.

'எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய தீர்வுகளோ பரிந்துரைகளோ இப்பிரச்சினைக்கு ஏற்படப்போவதில்லை. நமது விருப்பு வெறுப்புகளை களைந்துவிட்டு மாநில மறுசீரமைப்பு குழுவின் ஏகோபித்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதையே சிறந்த அணுகுமுறையாக கருதுகிறேன். மாநில மறுசீரமைப்புக் குழுவின் ஒருசில பரிந்துரைகள் நமக்கு விவேகமற்றதாகத் தெரியலாம். என்றாலும் துரதிஷ்டவசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் வேறு செயல்களை செய்வதைவிட இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வது மேலானது. குழுவின் முதன்மையான பரிந்துரைகளை, தேவைப்பட்டால் சிறு மாற்றங்களோடு ஏற்றுக்கொண்டு, இந்த சர்ச்சைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதே சிறந்த நடவடிக்கையாக எனக்குத் தோன்றுகிறது'.

1955ம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ஹைதராபாத் - தெலுங்கானா பற்றி அவர் பாராளுமன்றத்தில் 'ஹைதராபாத் தனித்து ஆளப்படுவதை எதிர்த்து நான் உரையாற்றியதை இங்கு குழுமியிருக்கும் மரியாதைக்குரிய அங்கத்தினர்கள் சிலர் நினைவு கொண்டிருக்கலாம். அது எனது கண்ணோட்டம். இப்போதும் ஹைதராபாத் தனித்து பிரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஆனால், சூழ்நிலைகளின் தாக்கம் வேறாக இருக்கிறது. அவைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஹைதராபாத் மக்களையோ அல்லது பிறரையோ எனது சிந்தனையோட்டத்துக்கு உடன்படும்படி வலியுறுத்தமுடியாது. ஹைதராபாத் தனித்து பிரிக்கப்பட வேண்டும் என்ற அவர்களது முடிவை ஏற்றுக்கொள்கிறேன். குழுவின் பரிந்துரைப்படி, ஹைதராபாத் பிரிந்து போகுமாயின், தெலுங்கானா பிரதேசம் ஐந்து ஆண்டுகளுக்கு தனியாக நிலைத்திருக்க வேண்டும். அதன்பின்னர், ஆந்திராவின் பிறபகுதிகளோடு ஒன்றிணைக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும். இதை பற்றி குறிப்பிடத்தகுந்த ஆட்சேபணை எதுவும் இல்லையென்றாலும், தர்க்கரீதியாக பார்த்தால், இந்த விவகாரம் திரும்பவும் சர்ச்சையிலேயே இருக்கவிடுவது விவேகமற்றதாக தெரிகிறது. இப்போதே இதைக்குறித்து சிந்தித்து செயல்படுவோம்' என்று பேசினார்.

1956 ஜனவரி 16 இல், முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களின் மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருப்பதாக நேரு குறிப்பிட்டார். பம்பாய் நகரம் இனி மத்திய அரசால் நிர்வகிக்கப்படுமென்றும், மகாராஷ்டிராவோடு விதர்பா இணைக்கப்படுமென்றும், சௌராஷ்டிராவும் கட்ச் பகுதியும் குஜராத் மாநிலத்தோடு இணைக்கப்படுமென்றும், ஹைதாராபாத் பிரிக்கப்படுமென்றும் அறிவித்தார். பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து பிற்காலத்தில் தீர்மானிக்கப்படுமென்று அந்த அறிக்கையில் கூடுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. 1956 மார்ச் 14 அன்று அவர், 'கடினமானதும் நுட்பமானதுமான பஞ்சாபைக் குறித்த கேள்விகள், ஏறத்தாழ சமநிலைப்பெற்றுவிட்டது மகிழ்ச்சிக்குரிய சகுனமாக அமைந்ததாக' தெரிவித்திருந்தார்.

ஆனால், அவர் தவறுதலாக புரிந்துக் கொள்ளப்பட்டார். தனிமாநில கோரிக்கையுடன் அகாலிகள் உடனடியாக கிளர்ச்சிகளை ஆரம்பித்தார்கள். பாட்டியாலாவின் மாநில மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி, மகா பஞ்சாப் சமிதியானது - கிழக்கு பஞ்சாப் மாநிலங்கள் (PஏPஸூ), பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசங்களின் இணைப்பை கோரியிருந்தன. இமாச்சல பிரதேசத்துடன் இணைந்த மாநிலமாகவும், பஞ்சாபி பேசும் மாநிலமாகவும் என இந்தி பேசும் அரியானாவை இரு மாநிலங்களாக்க கம்யூனிஸ்ட்கள் கோரிக்கை வைத்தார்கள். அதேபோல் கிழக்கு பஞ்சாப் யூனியன் பிரதேசத்தை பஞ்சாப்புடன் இணைக்கவும், தில்லியுடன் அல்லது மாற்றாக வேறு மாகாணத்துடன் அரியானாவை உருவாக்கவும் பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி கோரியது.

இதனால் நேரு உடைந்துபோனார். 1956, ஜுன் 15 இல், முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதும்போது பஞ்சாப் கிளர்ச்சியைக் குறித்து குறிப்பிட்டார். 'தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட, தவறாக வழிநடத்தப்பட்ட கிளர்ச்சியை இதுவரை பார்த்த நினைவில்லை. என்னுடனோ அல்லது அரசாங்கத்துடனோ உடன்பட வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், சிறிதளவாவது புரிந்துக்கொண்டு மதிப்பிடும் திறனை எதிர்பார்க்கிறேன். வட்டார கொள்கைக்காக உணர்ச்சிவசப்பட்ட மக்களிடம் இது எதுவுமே இல்லாத நிலையை காண்கிறேன்' என்றவர், 'மகா பஞ்சாப்பை இமாச்சல பிரதேசத்துடன் இணைக்க பலத்த தேவை இருக்கிறது. ஆனால், இமாச்சல பிரதேச மக்கள் பஞ்சாப்புடன் இணைய மறுக்கின்றனர். சொல்லப்போனால், இதனைகுறித்து மிகுந்த மனக் கசப்படைந்திருக்கிறார்கள். எனவே மகா பஞ்சாப் குழுவினரின் ஆர்வத்தை மட்டுமே கணக்கில் எடுத்து நாம் அவர்களை வற்புறுத்த முடியுமா? பஞ்சாப்புக்கு பரிந்துரைத்த வட்டார கொள்கையானது, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரிந்துரைத்த கொள்கைதான்' என்று எழுதினார்.

பம்பாய் நகரம் மற்றும் அதன் சுதந்திர நிலை குறித்த 220 பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுநிலை அறிக்கையை 1956 ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதி, அரசாங்கம் ஒப்பிட்டு நோக்கியது. சௌராஷ்டிரா, கட்ச், மற்றும் விதர்பாவை உள்ளடக்கிய பெரிய அளவிலான இருமொழி மாநிலங்களாக பம்பாய் மாநிலத்தை உருவாக்க - பம்பாய் நகரம் குறித்த தீர்வாக - மக்களவையில் சொல்வதற்கு அந்த அறிக்கை தயாரானது. ஆகஸ்ட் 6 அன்று அரசாங்கத்தாலும், ஆகஸ்ட் 9 அன்று மக்களவையாலும் அந்த அறிக்கை நிறைவேற்றப்பட்டது. பிளவுகளை சமன்படுத்த அந்த மசோதாவின் அடிப்படைக்கூறில் மாற்றம் செய்யப்பட்டது. கூடுதலாக சேர்க்கப்பட்ட பகுதிகளுடன் பம்பாய் ஒரே மாகாணமாக நிலைபெறும்படி பார்த்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஆக்ஸ்ட் 8 அன்று அகமதாபாத்தில் வன்முறையும் அரங்கேற ஆரம்பித்தது.

 

ஆந்திரா - தெலுங்கானா, வரலாற்றுத் தொடர்புகள்-2

 

3.மாநில மறுசீரமைப்புக் குழுவும், தெலுங்கானாவும்

ஒரே மொழியை பேசக்கூடிய பல மாநிலங்கள் அமையலாம் என்ற கருத்துக்கு இந்திமொழி பேசக்கூடிய மாநிலங்களே பொருந்தி வந்தன. கிழக்கிலிருந்து மேற்காக ராஜஸ்தானிலிருந்து பீகார் வரையும், வடக்கிலிருந்து தெற்காக இமாச்சல பிரதேசத்திலிருந்து மத்திய பிரதேசம் வரையும் வட இந்தியா முழுவதையும் சூழ்ந்தபடி கிட்டதட்ட ஐந்து மாநிலங்கள் இருந்தன. மாநில மறுசீரமைப்பு குழு தெளிவாகவும் சமநோக்குடனும் அமைந்திருந்தது. விஷாலாந்திரா (ஒருங்கிணைந்தஆந்திரா) மற்றும் தெலுங்கானா தரப்புகளை கவனித்தும், நேரு பெரும்பாலான நேரங்களில் குறிப்பிட்ட 'மற்ற காரணிக'ளையும் அக்குழு கவனத்தில் கொண்டது.

அந்தவகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இணைப்புக்கான விவாதத்தை மறுசீரமைப்புக் குழு பின்வருமாறு கூறுகிறது. 'கிட்டத்தட்ட 320 லட்சங்கள் அளவிலான கடற்கரை பரப்பும், மிகப்பெரிய நீர்வளமும், மின் ஆற்றல் உற்பத்திக்கான மூலாதாரங்களும், போதுமான அளவு கனிம வளங்களும், அரிய முக்கிய அடிப்படை பொருட்களும் இதனால் தெலுங்கானாவை இணைத்து உருவாக்கப்பட்ட ஆந்திரமாநிலத்துக்கு கிடைக்கும். மேலும், (தெலுங்கானா உள்ளடக்கிய) ஆந்திராவின் நிரந்தரமான தலைநகருக்கான சவால் நிறைந்த தேடுதலும் முடிவுக்கு வரும். இரட்டை நகரங்களான ஹைதராபாத்தும் செகந்திராபாத்தும் விஷாலாந்திராவுக்கான தலைநகரமாக இருப்பதும் சாலப் பொருத்தம்'.

நதிநீர் பிரச்சினையைக் குறித்தும் அது குறிப்பிடுகிறது. 'கிருஷ்ணா அல்லது கோதாவரி பள்ளத்தாக்கை முழுவதுமாக ஒன்றிணைப்பது சாத்தியமற்றது. தெலுங்கானாவின் அதிகார எல்லையை தவிர்த்துவிட்டு பார்த்தால், கிழக்குப் பகுதியின் இருபடுகைகளை இணைப்பதற்கான திட்டங்களை முறைப்படுத்துவதையும், செயல்படுத்துவதையும் விரைவாக்கலாம். விஷாலாந்திராவின் பகுதியாக தெலுங்கானா இருப்பதால், இத்திட்டத்தின் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடையும்'. இப்படியாக தெலுங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்பட்டிருப்பதால் பெருமளவு பலன்கள் இருப்பதாகச் குறிப்பிடுகிறது. இப்படி வலுவான விவாதங்களை முன்வைத்த அதேநேரம், தனி தெலுங்கானாவுக்கு ஆதரவான பரிசீலனைகள் புறக்கணிக்கப்படலாம் எனவும் வாதிட்டது.

ஆந்திர நிதி நிலையின் பரிதாப நிலையே முதன்மையான விஷயம் என்கிறது இக்குழு. 'இப்போதிருக்கும் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து நிதிப்பிரச்சினைகளை முதன்மையாக சந்தித்து வந்துள்ளது. தெலுங்கானாவுடன் ஒப்பிடும்போது ஆந்திராவின் பிற பகுதிகளில் தனி நபர் வருமானம் குறைவு. அதனால், நிதிப்பற்றாக்குறையை தெலுங்கானா பகுதி சந்திக்கூடிய வாய்ப்புகள் குறைவு. தெலுங்கானாவின் நிலவரி வருவாயும், அதிகப்படியாக வருடந்தோறும் ஈட்டப்படும் 5 கோடி ரூபாய்வருவாயுமே வித்தியாசத்தை உணர்த்திவிடுகிறது. விளக்கங்கள் எதுவாக இருப்பினும், தெலுங்கானா தலைவர்கள் இணைப்பைக் குறித்து அச்சங்கொள்கிறார்கள். இப்போது ஆந்திரா எதிர்நோக்குகிற நிதிப் பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தெலுங்கானாவின் மூலவளங்கள் பயன்படுத்தப்படலாம் என்று பயப்படுகின்றனர். தெலுங்கானா வளர்ச்சியடைந்திருப்பதாக சொல்லும் அவர்கள், ஒன்றிணைக்கப்பட்ட நிர்வாக மாற்றத்தினால் எந்த அனுகூலமும் தங்களுக்குகிடைக்காது என்கின்றனர்'.

தனிநபர் அரசாங்க வருமானம் ஆந்திராவில் ரூ 11 ஆக இருக்க, தெலுங்கானாவில் அது ரூ 14 ஆக உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளில் என்னவிதமான பாரபட்சங்கள் இருந்தாலும், தெலுங்கானாவின் மாநில வருவாய் மேலானதாகவே இருந்தது. 1954 - 55 இல், ஆந்திராவின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.18 கோடி ரூபாயாக இருந்தபோது, தெலுங்கானா உபரியாக 0.51 கோடியை ஈட்டியது. மேலும் ஆந்திராவின் கையிருப்பு ரூ 2.67 கோடி ரூபாயாக இருந்தபோது தெலுங்கானாவுக்கு ரூ 11 கோடி கருவூலத்தில் இருந்தது.

'இதனால் தெலுங்கானா உருவாகி நிலைப்பெற்றதும் வளம்பெறக் கூடிய பகுதியாகவே இருக்க்கும் என்று கருதுகிறார்கள்.நடப்புக்கணக்கீட்டில் இப்பகுதியின் வருவாய் ரூ 17 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. தவிர கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிநீர் திட்டத்தில் முதலீடு செய்வது வட்டிச் செலவுகள், பற்றாக்குறைகள் மற்றும் இன்ன பிற செலவுகள் ஆகியவை புது மாநிலத்தின் மேல் திரும்பத் திரும்ப சுமையை ஏற்றுவது போலாகும். சாதகமான சூழ்நிலைகளில், நிதிநிலை சமன்படுத்தப்படலாம் அல்லது விளிம்புநிலை வருமானங்கள் ஈட்டப்படலாம்'.

'விஷாலாந்திராவில், எதிர்கால நலத்திட்டங்கள் வகுக்கப்படும்போது போதிய அளவிலான கவனிப்பு தெலுங்கானாவுக்கு கிடைக்கப்பெறாமல் போகலாமென்று நினைக்கிறார்கள். நந்தொகொண்டா (நாகர்ஜூன சாகர்), கஷ்டப்புரம் (போசம்பாத்) போன்ற திட்டங்களெல்லாம் தெலுங்கானா பகுதி மட்டுமல்ல, தேசமே மேற்கொண்டுள்ள முக்கியமான திட்டங்கள். கடற்கரைப்பகுதிகளில் நீர்பாசனமும் இப்பெரிய நதிகளைக் கொண்டு திட்டமிடப்படுகிறது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிநீர் பங்கீட்டின் மூலம் அதன் இப்போதைய சுதந்திர உரிமைகள் பாதிக்கப்படுவதை தெலுங்கானா, விரும்பவில்லை' என நதிநீர்பற்றிய எண்ணங்களை மாநில மறுசீரமைப்புக் குழு பதிவு செய்திருக்கிறது.

'கல்வியில் பிந்தங்கியிருக்கும் தாங்கள், முன்னேறிய கடற்கரைப்பகுதி மக்களால் சுரண்டப்படலாம் என்று தெலுங்கானா மக்கள்நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் விஷாலாந்திராவை எதிர்க்கிறார்கள். ஆந்திராவோடு இணைக்கப்பட்டால் ஏற்றத்தாழ்வுடன் வாழ நேரிடலாம் என்றும், பெரும்பான்மையினரான ஆந்திர மக்கள் தங்கள் சௌகரியங்களை பறித்துக்கொண்டு மறுகாலனியாக்கம் செய்யதுவிடுவார்கள் என்பதுமே தெலுங்கானா மக்களின் மெய்யான அச்சம்' எனவேலைவாய்ப்பு குறித்து இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதியாக, மாநில மறுசீரமைப்பு குழுவின் கூற்றை இப்படி சொல்லலாம். 'ஒன்றிணைந்த பெரிய அளவிலான மாநில உருவாக்கத்தைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. இந்த லட்சியத்தை நனவாக்க தடையாக இருக்கும் எந்த முட்டுக்கட்டையையும் தகர்க்க வேண்டும். அதே நேரம், ஒரு முக்கியான உண்மையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ஆந்திராவில், ஒன்றிணைந்த மாநிலத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் அதேநேரம், தெலுங்கானா மக்களின் கருத்துக்களை தெளிவாக கவனத்தில் கொள்ளவேண்டும். பொதுநலம் விரும்பும் மாநிலத் தலைவர்கள், ஆந்திராவோடு தெலுங்கானாவை இணைப்பதற்கே விரும்பினாலும், தங்களது எதிர்காலத்தை குறித்த தெலுங்கானா மக்களின் கருத்தே முக்கியத்துவம் வாய்ந்ததென்றும் கருதுகிறார்கள்.

எனவே இந்த அனைத்து விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, ஆந்திரா - தெலுங்கானா ஆகிய இரண்டு தரப்பு மக்களின்நலனையும் கருத்தில் கொண்டு, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். இப்போதைய நிலவரப்படி, தெலுங்கானா பகுதி'ஹைதராபாத் மாநிலம்' என்ற தனி மாநிலமாக அழைக்கப்படலாம். 1961ல் நடைபெறும் பொதுத் தேர்தலில், 'ஹைதராபாத்மாநிலத்திலிருந்து' தேர்ந்தெடுக்கப்படும் மூன்றில் இரு பகுதி உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த மாநிலமாக இருக்கவிரும்பினால், அதன் பிறகு இணைப்பு குறித்து ஆலோசிக்கலாம்' என மாநில மறுசீரமைப்பு குழு பொழிப்புரையாககுறிப்பிட்டிருக்கிறது.

4.இரு மாநிலங்களிலும் இருந்த தேர்தல் சூழ்நிலை

4.1.ஆந்திரா

1953, அக்டோபர் 1 அன்று ஆந்திர மாநிலம், நடைமுறைக்கு வந்தது. அப்போது மெட்ராஸ் சட்டமன்றத்துக்கு 1952 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆந்திரப் பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், புதுத்தேர்தல் இல்லாமலேயே ஆந்திராவின் புதிய சட்டமன்ற தொகுதிக்கு பணிமாறுதல் அளிக்கப்பட்டார்கள். இந்த ஆந்திர சட்டமன்றத் தொகுதி 140 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. காங்கிரஸ் 38 சட்ட மன்ற உறுப்பினர்களையும், (28% மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது) சிபிஐ 41 சட்டமன்ற உறுப்பினர்களையும் (17% மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது) பெற்றிருந்தது. எஞ்சியிருந்த 61 சட்டமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைகள் மற்றும் சிறுகட்சிகளைச் சேர்ந்தவர்கள். பிஎஸ்பி-யிலிருந்து விலகி, பிரஜா கட்சியை டி.பிரகாசம் (முன்னாள் காங்கிரசு உறுப்பினர் மற்றும் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர்) நிறுவினார். காங்கிரஸ் - கிரிஷ்கர் லோக் - பிரஜா கட்சிகளின் கூட்டணி, ஆட்சியில் அமர்ந்தது. முதலமைச்சராக பிரகாசமும், சஞ்சீவ ரெட்டி துணை முதலமைச்சராகவும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணி ஆட்சியில் வழக்கமாக ஏற்படும் நெருக்கடியை ஆரம்பத்திலிருந்தே பிரகாசம் தலைமையிலான அமைச்சரவை சந்தித்து வந்தது. முதல் நெருக்கடி தலைநகரை தீர்மானிப்பதில் ஆரம்பித்தது. கடலோர ஆந்திர பிரதேச மற்றும் ராயல சீமா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து சிலரது விலகல்களையும் சந்திக்க நேரிட்டது. கௌது லச்சண்ணாவின் விலகலைத் தொடர்ந்து கேஎல்பி-யை தலைமையேற்று நடத்தி வந்த என்.ஜி.ரங்காவும் (முன்னாள் சிபிஐ ஆதரவாளர்) கூட்டணியை விட்டு வெளியேறி எதிரணியில் அமர்ந்தார். இந்த நெருக்கடிகளை சமாளித்து முடித்ததும், ராயலசீமாவில் புது பல்கலைக்கழகம் நிறுவவதற்கான மசோதாவை பற்றிய சர்ச்சையும் அதைத் தொடர்ந்து அமளியும் உருவானது. ஆனால், அரசை ஆட்டுவித்த முக்கியமான பிரச்சினைகளாக நிலச் சீர்திருத்தமும் எல்லைக் கட்டுப்பாடுகளுமே இருந்தன.

நிலச் சீர்திருத்த சட்டம் நிலுவையில் இருந்தது. மெட்ராஸ் எஸ்டேட் ஒழிப்பு சட்டம் மூலம் பெரிய தோட்டங்கள் மட்டும் ஒழிக்கப்பட்டன. மத - சமய தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 'இனாம்தாரி' முறையை ஒழிப்பதே நோக்கமாக இருந்தது. பிராமணர்களே இந்நிலங்களுக்கு உரிமை கொண்டாடினர். கம்மா, கப்பு மற்றும் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தபெரும்பாலானவர்கள் குடியானவர்களாக இருந்து விவசாய நிலங்களை பராமரித்து வந்தனர். நில சீர்சிருத்தத் தீர்மானத்தை ஒட்டி 1950ஆம் ஆண்டில் 'ஹைதராபாத் மாநிலத்தில்' (தெலுங்கானா பகுதியில்) ஏற்பட்ட 'கடும் அச்சுறுத்தலை' கருத்தில்கொண்டு குடியானவர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். அரசியல் கட்சிகள் மற்றும் குடியானவர்களின் கிளர்ச்சியைக் கண்ட அரசாங்கம், 1954 ஆம் ஆண்டு ஆந்திர குடியானவர்கள் பாதுகாவல் உரிமையை ஏற்படுத்தி குறிப்பிட்ட குடியானவ சமூகத்துக்குமட்டும் தற்காலிக பாதுகாவலை தந்தது. பிஎஸ்பி கட்சிக்கு இது ஏற்புடையதாக இல்லாததால் சத்தியாகிரக முறையில் கிளர்ச்சி நடந்தது.

நிலமற்ற தொழிலாளர்களுக்கும், வசதியற்ற வறியவர்களுக்கும் ரூ 13.5 கோடி பெறுமானமுள்ள, அரசாங்கத்துக்குச் சொந்தமான, வீண்நிலங்களும், மழைநீர் தேங்கிய வெள்ளக்காடுகளும் வழங்கப்பட்டன. ஆனால், இது அரசு ஆதரவு பெற்றஒருசிலருக்கே கிடைத்ததால், 1954 ஆம் ஆண்டு சிபிஐ மற்றொரு கிளர்ச்சியைத் தொடங்கியது. ஜுன் மாதத்தில், அரசாங்கம் தனது கொள்கையை அறிவித்தது. அக்கொள்கையும் அரசியல் ரீதியாக தொடர்புடையவர்களுக்கு மட்டும் பலனளிப்பதைக்கண்டு, கிளர்ச்சி மேலும் வலுத்தது. இரு மாநிலங்களிலும் தொடர்ந்து நடந்த சத்தியாகிரக ஆர்பாட்டத்தின் காரணமாக ஆந்திராவின் சிறைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. 2000க்கும் மேற்பட்ட மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 'ஆந்திர மாநிலம் முழுவதுமாக சத்தியாகிரக போராட்டத்தினால் நிரம்பியுள்ளது' என துணை முதல்வரான சஞ்சீவ ரெட்டி குறிப்பிட்டார்.

மதுவிலக்கே இந்த கூட்டணி அரசை கவிழ்த்ததில் முக்கிய இடம் பிடித்தது. மாநிலத்தின் வருவாயை பெருக்க மதுக்கடைகளைதிறக்க வேண்டுமென்று கணிசமான அளவுக்கு நிர்பந்தங்கள் எழுந்தன. மதுவிலக்கை அமல்படுத்தினால் ஆந்திர மாநிலம் திவாலாகி விடலாம் என்று புதிய ஆந்திர மாநில உருவாக்கத்தின்போது கே டபிள்யூ வான்ச்சுவின் அறிக்கை எச்சரித்திருந்தது. எஸ்.வி.ராமமூர்த்தியின் சிறப்புக் குழு, மதுவிலக்கை ஆராய்ந்து 160 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதில் விதிமுறைக்கு மாறான பயன்பாடு, எங்கும் பரவியிருக்கும் ஊழல் மற்றும் பொதுநல பாதிப்புகள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பரிந்துரைகளை அரசாங்கம் செயல்படுத்த மறுத்துவிட்டது. மதுவிலக்கை அமல்படுத்த சாதகமாக மக்களவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், அரசாங்கம் அசைந்துக் கொடுக்கவில்லை.

இந்நிலையில், 1954 ஆம் ஆண்டு மக்களவை கூட்டத்தின்போது சிபிஐயும், கேஎல்பியும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டுவந்தன. இதனையடுத்து நடந்த ஓட்டெடுப்பில், நான்கு அமைச்சர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அரசு கவிழ்ந்தது. பிஎஸ்பியின் ஆதரவுடன் அரசமைக்க சிபிஐ முன்வந்தது. ஆனால், ஆளுநரின் நிர்பந்தம் காரணமாக பிறகு பிஎஸ்பி தன்ஆதரவை விலக்கிக் கொண்டது. எனவே புதிதாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

1955 இல் நடைபெற்ற இடைத்தேர்தல் ஆந்திராவில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் சரிவையே சந்தித்தது. 1952ஆம் ஆண்டு அபரிமிதமாக வெற்றியடைந்திருந்த சிபிஐ, இத்தேர்தலிலும் வெற்றிபெற்று ஆந்திர மாநிலத்தை ஆளும் நம்பிக்கை கொண்டிருந்தது. எனவே நில உச்சவரம்பாக 20 ஏக்கர் நீர்பாசன நிலமும், 30 லிருந்து 60 ஏக்கர் வரையிலான நிலமும்இருக்கும். மேலதிக நிலத்தை நிலமற்றோருக்கும், வறிய விவசாயிகளுக்கும் பிரித்துக் கொடுப்போம். நஷ்ட ஈடு இல்லாமல் இனாம்தாரி முறையை ஒழிப்போம். மதுவிலக்கை நீக்கி, மூன்றாண்டுக் கால தவணை முறை கடன் திட்டத்தை ஏழை விவசாயிகளுக்கும், நிலமற்ற தொழிலாளர்களுக்கும் வழங்குவோம். விவசாயிகளுக்கு நீண்ட கால வட்டியில்லாக் கடனை வழங்குவோம்... என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்ததுடன், ஹைதராபத்தை (தெலுங்கானா) ஆந்திரத்துடன் இணைக்கும் திட்டமான விஷாலாந்திராவுக்கு பிஎஸ்பியுடன் இணைந்து ஆதரவும் அளித்தது.

இதற்கு எதிராகவும், புதிய தேர்தல் தொகுதியை திருப்திபடுத்தும் விதமாகவும், மதுவிலக்கை தொடர்வதாக (மதுவிலக்கே முன்பு அதன் அரசாங்க கவிழக் காரணம்!) காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இனாம்தாரர்களை ஒழித்து அதன் உரிமைகளை திரும்பப் பெறுதல், நில உச்ச வரம்பை நடைமுறைப்படுத்துதல் (வரம்பு குறிப்பிடப்படவில்லை) முதலிய வாக்குறுதிகளையும்அளித்தது. சிபிஐயின் 'டோடி'க்கு மாற்றாக 'நீரா'வை புகழ் பெறச் செய்தது. மேலும், ரூ 10 க்கும் குறைவாக நிலவரியைசெலுத்துபவர்களுக்கு வரிவிலக்கு தருவதாக சொல்லி, விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலியை அறிவித்தது.ஆனால், விஷாலாந்திராவை குறித்த எந்த அறிவிப்பும் திட்ட அறிவிப்பில் இல்லை.

ஜனநாயகத்துக்கும், கம்யூனிசத்துக்குமான நடைமுறை அரசியலே முதன்மையான விஷயம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கைஅறிவித்தது. தனது மேலதிகாரம், தேர்தல் தந்திரம் மற்றும் செயலாக்கங்களுக்கு எஸ்.கே.பாட்டீலை காங்கிரஸ் நம்பியது.பாட்டீல், பம்பாய் வர்த்தக சங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர். அவர் தீவிரமான பிரச்சாரத்தை நடத்தினார். கம்யூனிஸ்ட்டுகள் அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து, ஐக்கிய காங்கிரஸ் முன்னணியை உருவாக்கினார். கூட்டணியினருக்கு 49 இடங்களை ஒதுக்கினார். இது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கம்மா சமூகத்தின் செல்வாக்கு பெற்ற கட்சிகளை திரட்டி வாக்குகளை பிரிக்க உதவியது.

கிருஷ்ணா(26%), குண்டூர்(36%), நெல்லூர்(13%), கோதாவரி(7%), சித்தூர்(11%) என முக்கியமான மாவட்டங்களின் மொத்த மக்கள்தொகையில் கம்மா சமூகத்தினரின் மக்கள் தொகை மதிக்கத்தக்க அளவு இருந்தது (அடைப்புக் குறிக்குள் சதவீதத்தைபார்க்கவும்). இச்சமூகத்தினர் முன்பு சிபிஐயின் கம்மா சமூகத் தலைமையை ஆதரித்து வந்தனர். அதேபோல் பிராமண வாக்குகளும் கிருஷ்ணா (20%), குண்டூர் (19%), கோதாவரி(13%), விசாகப்பட்டினம்(12%) என கணிசமான அளவை கொண்டிருந்தது. காங்கிரஸ் அல்லது பிரகாசத்துக்கு செல்லக் கூடிய வாக்குகள் இவை. இந்நிலையில் சிபிஐயின் கடுமையான நில சீர்திருத்த திட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு வரலாம் என்று அஞ்சிய பணம்படைத்த கம்மா சமூகத்தினரும், பிற நிலவுரிமையாளர்களும் காங்கிரசு முன்னணியை ஆதரிக்க முன்வந்தன.

'ஹைதராபாத் மாநில'த்துக்கு பலநூறு கட்சித் தொண்டர்களை காங்கிரஸ் அனுப்பியது. பணத்தையும், வாகனங்ளையும்,ஒலிபெருக்கிகளையும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு வந்து கொட்டியது. இந்தியாவின் எல்லா மூலைகளிலிருந்தும் தங்குதடையின்றி பணமும், தொண்டர்களும் வருவதற்கான பொறுப்பு பாட்டீலிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் காங்கிரஸ் கட்சியின் அமைப்பை புதுப்பித்தார். விஷாலாந்திராவை ஆதரிப்பதால் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் மாநிலத்தின் பொருளாதாரம் சீர்கெடும். வறுமை தாண்டவமாடும். இப்பகுதியிலுள்ள வளங்கள், ஆந்திராவின் பிற பகுதிகளுக்கு செல்லும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்தினார்.

நோய்வாய்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ஹைதராபாத் முதலமைச்சர் பி.ராமகிருஷ்ணா ராவ், வேண்டுகோள் விடுத்தார். 'கம்யூனிஸ்ட்டுகளின் அட்டூழியங்களால் மிக கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கும் தெலுங்கானா மக்களுக்கு, ஒரு வேளை காங்கிரசல்லாத அரசு அமைந்தால் விஷாலாந்திராவை விருப்பமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியநிலை ஏற்படலாம். விஷாலாந்திராவை எந்த முறையில் அடையப்போகிறோமென்பது காங்கிரசின் ஆலோசனைகளுக்கு ஏற்றவிதமான அரசு ஆந்திராவில் அமைந்தால் மட்டுமே தெளிவாக இருக்கும். காங்கிரசல்லாத அரசு அமைந்தால் ஹைதராபாத் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நன்மை பயக்கும் நந்திகொண்ட(நாகார்ஜுனசாகர்) திட்டம் உடனடியாக அமுலுக்கு வராது'.

ஆந்திர தேர்தலுக்கு மூன்று வாரங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழு ஆவடியில் கூடியது. அப்போதுகம்யூனிஸ்ட்டுகளுக்கு மாற்றாக சோஷலிசத்தை முன்வைத்தனர். இது கனரக தொழிற்சாலையை வலியுறுத்தும் ஸ்டாலினிசமாதிரியை முன்மாதிரியாகக் கொண்டது. கூட்டுறவையும் கைத்தறி நெசவையும் முன்மொழிந்த காந்திக்கு எதிரானது. இதன்மூலம், பொருளாதார விவாதத்தை கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து காங்கிரஸ் எடுத்துக்கொண்டது.

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முரண்பட்டு வெளியேறியவர்களில் ஒருவரான சி.வி.கே.ராவ், கம்யூனிஸ்ட் கட்சியை ஃபாசிஸ்ட்கள், சந்தர்ப்பவாதிகள் மற்றும் குழப்பவாதிகள் என்று அழைத்தார். கம்மா சமூக தலைமையின் ஆதிக்கம் சிபிஐயில்இருப்பதாக குற்றம்சாட்டினார்.

தேர்தலுக்கு ஒன்று அல்லது இரு மாதங்கள் இருந்தநிலையில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலத்த அடி விழுந்தது. சோவியத் யூனியனின் தலைவர்களான குருசேவ்வும் பல்கேனும் இந்திய மாநிலங்களை பார்வையிட வந்தனர். நேருவுக்கும் புதியசோஷலிச இந்தியாவுக்கும் நற்சான்றிதழ் வழங்கி 1955 ஆம் ஆண்டு ஜனவ்ரி 26 தேதியிட்ட 'ப்ரவ்தா' இதழ், ஒரு கட்டுரையை வெளியிட்டது. இக் கட்டிரையை ஆயிரக்கணக்கில் பிரதிகள் எடுத்தும், மொழிபெயர்த்தும் தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ்பயன்படுத்திக் கொண்டது. இந்தவகையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாஸ்கோ மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில் ஏராளமான வாக்காளர்கள் (64%) வாக்களித்திருந்தனர். மொத்தமுள்ள 194 இடங்களில் காங்கிரஸ் 119 இடங்களை வென்றது. ஆனால், சிபிஐக்கு கிடைத்தது வெறும் 15 இடங்கள் மட்டுமே! கேஎல்பி மற்றும் பிஎஸ்பி கட்சிகளுக்குமுறையே 22 மற்றும் 13 இடங்கள் கிடைத்தன. பேஜ்வாடா கோபால் ரெட்டியை முதல்வராகக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியமைத்தது.

எனினும், வாக்குகளின் சதவீத அடிப்படையில், காங்கிரசுக்கு 37%, கேஎல்பிக்கு 9% , பிஎஸ்பிக்கு 5% வாக்குகளும் கிடைத்தநிலையில், சிபிஐ 31% வாக்குகளை பெற்றிருந்த்து. இது 1952 ஆம் ஆண்டு அக்கட்சி பெற்றதைவிட இருமடங்கு அதிகம். இதுஇன்னமும் இப்பகுதியில் உணர்ச்சிப்பூர்வமான நிலையே பரவலாக இருக்கிறது என்பதை உணர்த்தியது. தேர்தலில் தோல்வியுற்ற சிபிஐ உறுப்பினர்களுள் கொள்கைபிடிப்புள்ள எதிரணித்தலைவரான டி.நாகி ரெட்டி (காங்கிரசு தலைவர் சஞ்சீவ ரெட்டியின் மருமகன்), பசவ பொன்னையா, சி.ராஜேஸ்வர் ராவ் ஆகியோர் முக்கியமானவர்கள். இதில், அதிகபட்சமாக 821 வாக்குகள் பெற்றவர் பச்சாலபள்ளி சுந்தரய்யாமட்டுமே.

சாதி அடிப்படையிலான விகிதங்கள் தலைகீழாக மாறியிருந்தன. கம்மா சமூகத்தினரின் ஆதிக்கத்திலிருந்த என்.ஜி.ரங்காராவின் கேஎல்பி கட்சியுடனான கூட்டணி, நிலச்சீர்த்திருத்த நடவடிக்கைகளால் தங்கள் ஆதிக்கம் குறையுமோ எனதிகிலடைந்திருந்த கம்மா - ரெட்டி சமூக நிலக்கிழார்கள் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திரண்டனர். இதுதவிர, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக அதே சமூகத்தினரை வேட்பாளராக நிறுத்திய காங்கிரசின் உத்தி, நெருக்கடியான பகுதிகளில் இருந்த சாதி விகிதாசாரத்தை முறைப்படுத்தின. இதனால், கம்மா - ரெட்டி சமூகத்தினரிடையேயான பகையானது சிபிஐ - காங்கிரஸ் என்ற கட்சி அளவிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலாக மாறியது.

4.2 ஹைதராபாத்

நிஜாம் அரசை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஹைதராபாத்தை 1948ல் ஆக்ரமித்த இந்திய ராணுவத்தினர், 1948௫0 காலப்பகுதியில் எழுந்த கம்யூனிஸ்ட் கருத்துக்களின் அலையை நசுக்கினர். ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் ஆயுதந்தாங்கியபோராட்டத்துக்கு அளித்து வந்த ஆதரவை மாஸ்கோ விலக்கிக் கொண்டது. இதனாலும் தெலுங்கானா பகுதியில் எழுந்த கிளர்ச்சிதளர்ச்சியடைந்தது. இந்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரசுக்கு, ராணுவம் மற்றும் பொதுத்துறை நிர்வாகத்தின் உதவியுடன் 1950களில் ஆரம்பிக்கப்பட்ட நில சீரமைப்புத் திட்டமும் உதவியது.

சிபிஐ கூட்டணியில் இருந்த முன்னணி கட்சிகள், 1952 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது ஹைதராபாத் தொகுதியில் 26% வாக்குகளை பெற்றிருந்தது. சோஷலிச கட்சிக்கு 12% கிடைத்தன. தெலுங்கானாவில், சிபிஐ முன்னணி கட்சிகள் (மக்கள் குடியரசுக் கட்சி மற்றும் விவசாயிகள் தொழிலாளர் கட்சி) மட்டும் 37% இடங்களைப் பெற்றன. இது மொத்த வாக்கு வங்கியில் 31% ஆகும். 39% வாக்குகள் பெற்று காங்கிரசு தெலுங்கானாவில் 44 இடங்களை பிடித்தது. ஆக, 93 இடங்களில் காங்கிரசு வெற்றி பெற்றிருந்ததால் ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றது.

தத்தம் பகுதியை முறையே பம்பாயோடும் மைசூரோடும் இணைக்கக்கோரி ஹைதராபாத்தைச் சேர்ந்த மராத்தியர்களும்கன்னடர்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டதை அடுத்து, ஹைதராபாத்தை பிரிக்க நேரிட்டால் தெலுங்கானாவில் தனது அரசியல் சூழல் மற்றும் சாதி ஆதிக்கத்தை குறித்து மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதை காங்கிரஸ் உணர்ந்துக் கொண்டது.

 

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரா - தெலுங்கானா, வரலாற்றுத் தொடர்புகள்-3

 

5.சாதியும் கூட்டணியும்

1947ல் ஏற்பட்ட பிரிவினைக்கு பிறகு, மொழிவாரி பிரச்னைகள் முன்னிலைக்கு வந்தன. பன்மொழிபேசும் பிரிட்டிஷ் மாகாணங்களின் ஆட்சிக்கு மாற்றாக இந்த விஷயத்தை காங்கிரஸ் முதன்மைப்படுத்தியது. ஆனால், நியாயமான தீர்வு கிடைக்காத மதரீதியான குழப்பங்களைப் போலவே இப்பிரச்சினையும் வளர்ந்து வந்தது. ஆந்திர பிரதேசத்தைப் போல மொழிரீதியாக அமையப்பெற்ற மாநிலங்கள் அதற்குப்பின், மொழி அடையாளம் குறித்து சிந்திப்பதற்கு பதில், சாதி அடையாளங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தன. இதன் மூலமாக கட்சியையும், தொகுதி அரசியல்களையும் கட்டுக்குள் கொண்டு வர முயன்றன.

5.1.ஆந்திரா

சாதிகளின் ஆதிக்கம், 1955 ஆம் ஆண்டு தேர்தலில் தெளிவாக காலூன்றின. ஐக்கிய முன்னணியை காங்கிரஸ் கட்சி கட்டியதில் சாதி மதிப்பீடுகளே பெரும்பங்கு வகித்தன. என்றாலும் கம்யூனிஸ்ட்டுகள் தளர்ந்துவிடவில்லை. மொத்தமுள்ள 170 இடங்களில் அவர்கள் 169 இடங்களில் போட்டியிட்டு, 15 இடங்களில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றிருந்தபோதிலும், மக்கள் மத்தியில் 31% வாக்குகளை பெற்று தங்கள் வாக்கு வங்கியை இரு மடங்காக உயர்த்திக் கொண்டனர். காங்கிரஸ் ஐக்கிய முன்னணி, 50% வாக்குகளைப் பெற்று 146 இடங்களைப் பெற்றது. 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குவங்கியை விட, இம்முறை காங்கிரஸ் இருமடங்கு அதிகமாக பெற்றது. ரெட்டிகள் சார்பாக 45, கம்மா சார்பாக 24 மற்றும் தெலுங்கர் சார்பாக 15 என்று ஐக்கிய காங்கிரஸ் முன்னணியினர் 146 இடங்களில் வெற்றிப் பெற்றனர்.

ரெட்டி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டிருந்தது. 1953 ஆம் ஆண்டு அம்பேத்கர் இதனைப் பற்றி எச்சரித்தார். 'ஆந்திராவை எடுத்துக்கொண்டால் அங்கு இரு பெரும் சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் ஒன்று ரெட்டிகளாக இருக்கிறார்கள் அல்லது கம்மாளர்களாக இருக்கிறார்கள். நிலங்கள், அரசு அலுவலகங்கள், சகலவித வர்த்தகங்கள் என்று எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள். இவர்களை அண்டியே தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் நிலை உள்ளது. மொழிவாரி மாநிலங்களில் சிறுபான்மையினர் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?'

மாநிலத்தின் தலைநகரத்துக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில், ரெட்டி - கம்மா சமூகங்களுக்கு இடையே சண்டையே நடைபெற்றது. நில வருவாயைக் கணக்கில் கொண்டும், விஜயவாடாவிலுள்ள நில உடைமைகளின் காரணமாகவும் கம்மா சாதியினர் (கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் கேஎல்பியின் ஆதரவு பெற்றவர்கள்) பெரும் போராட்டம் நடத்தினர். இது காங்கிரஸின் சாதி முரண்பாட்டைக் காட்டியது. இரு பிரிவினரின் கோஷ்டி பூசலை தடுக்க நேரு எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை. 1951 ஆம் ஆண்டு, கம்மா சாதியை சேர்ந்த காங்கிரசு தலைவர் என்.ஜி.ரங்கா, காங்கிரசைவிட்டு வெளியேறி கேஎல்பி கட்சியை உருவாக்கினார். வெற்றி பெற்ற தமிழ் சட்ட மன்ற உறுப்பினர்கள் ராயலசீமா பகுதிக்கு ஆதரவளித்தனர். முடிவில், கர்னூலுக்கு ஆதரவாக மெட்ராஸ் சட்டமன்ற தொகுதி முடிவு செய்தது.

இது குறித்து செய்தி வெளியிட்ட 'டைம்ஸ் ஆஃப் இந்தியா', 'ராயலசீமா பகுதியைச் சேர்ந்த ரெட்டிகளுக்கும் டெல்டா பகுதியைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க கம்மாளர்களுக்குமிடயே சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் பகைமையானது அச்சம் தருகிற நிலையை எட்டியுள்ளது. காங்கிரசுக்காரர்கள் வகுப்பு வாரியாக குழுமத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக, சஞ்சீவ் ரெட்டி - ரங்காவின் தலைமைப் பதவிக்கான சச்சரவில் ரங்கா காங்கிரஸை விட்டு வெளியேறியதைக் கூறலாம். சரியோ தவறோ, கர்னூலை ரெட்டிகளின் வெற்றியாகவே கம்மாளர் நோக்குகிறார்கள்' என்று குறிப்பிட்டது.

இந்தப்பகையும், முரண்பாடுகளும் புது ஆந்திர மாநிலத்துக்கு ஊருவிளைவிப்பதாக இருந்ததுடன் அரசியல் கட்சிகளைப் பாதிப்பதாகவும் இருந்தது. இதற்கு கம்யூனிஸ்ட்டுகளும் விதிவிலக்கல்ல. ரெட்டி சமூகத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட்டான பச்சாலப்பள்ளி சுந்தரய்யா, 'வட்டாரவெறியையும், சாதி வெறியையும் தூண்டி, கர்னூலை தலைநகராக தேர்தெடுத்துள்ளது. கம்மாளர்களுக்கும் ரெட்டிகளுக்குமான பிரச்னையை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. ரெட்டிகளின் செல்வாக்கு மறைந்து, கம்மாளர்களின் செல்வாக்கு வந்தால்தான் கர்னூல் முக்கியமான பிரதேசமாக மாறும். ஆந்திராவைப் பற்றி தெரியாதவர்கள் எவராலும் மறுக்கமுடியாத உண்மை இது' என்று காங்கிரசை குற்றம் சாட்டுகிறார்,

பெரும்பான்மையான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் விஷாலாந்திராவுக்கு ஆதரவாக இருந்தபோதிலும், என்.ஜி.ரங்கா மற்றும் அவரது குழுவினருக்கு, 'தெலுங்கானாவை கையகப்படுத்துதல் பலத்தை தருமா அல்லது பலவீனத்தை தருமா என்பது உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. மேலும், திடீரென்று கம்யூனிஸ்ட் மாநிலமாக மாற இது தளம் அமைக்குமா என்பதையும் கவனிக்க வேண்டும்' என சந்தேகம் எழுப்பியது.

எப்படி இருந்தபோதிலும் கடலோர ஆந்திர மாவட்டங்களும் அதன் கம்மா சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்த ஆந்திராவில், (தெலுங்கானாவின் மக்கள்தொகை கடலோர பகுதிகளைவிட அதிகம்) இப்படியாக தாங்கள் ஓரங்கட்டப்படுவோம் என உள்ளூர அஞ்சினாலும், 1955ஆம் ஆண்டு நவம்பர் பிற்பகுதியில் ஆந்திர சட்டசபை தனித்தெலுங்கானா மாநிலத்தை ஒருமனதாக ஆதரித்து தீர்மானத்தை நிறைவேற்றியது.

5.2 ஹைதராபாத்

1952 ஆம் ஆண்டின் வாக்களிக்கும் முறையே (காங்கிரஸ் 44 இடங்களோடும், சிபிஐ முன்னணி 37 இடங்களோடும்), ஒருவேளை 1957 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் எதிரொலித்திருந்தால் 97 உறுப்பினர்களுடன் தெலுங்கானா சட்டசபையை காங்கிரஸ் அமைத்திருக்க முடியும். 1952 ஆம் ஆண்டு சோஷலிசவாதிகள் 11 இடங்களில் போட்டியிட்டு 14% வாக்குகளை பிரித்ததோடு, சுயேச்சைகள் மூலம் 17% அதிகமான வாக்குகளை பெற்று ஐந்து இடங்களை கைப்பற்றின. தனித்தெலுங்கானா அமைந்தால் அது கம்யூனிஸ்ட்டுகளின் அரண் போன்றே இருக்கும். தேர்தலுக்குப் முன்னும் பின்னும் சோஷலிசவாதிகள் நடந்துக் கொள்வதை பொறுத்தும் இது அமையலாம். பிராமணர்கள் மற்றும் ரெட்டிகளின் ஆதிக்கம் தெலுங்கானா பகுதி காங்கிரசில் அதிகம் இருப்பதால், ஆந்திர மாநிலத்துடன் இணைப்பு என்பது இரண்டு பக்கங்களிலும் இருக்கும் ரெட்டி சமூகத்தினரை சமாளிக்க காங்கிரசுக்கு உதவும்.

ஹைதராபாத்தை பிரிப்பது என்று முடிவு செய்தபின், தனித்தெலுங்கானாவை சொந்தம் கொண்டாடுவது பிராமணர் மற்றும் ரெட்டி சமூகத்தினரின் கோஷ்டிப்பூசல் மிகுந்த காங்கிரசுக்கு கடினமாக இருக்கும். ஆனால், ஒருங்கிணைந்த மாகாணமாக இருந்தபோது பிற மாநில அரசு அதிகாரிகளாலும் மற்றவர்களாலும் தங்கள் பகுதியில் வேலையில்லா திண்டாட்டமும், வியாபாரத்தில் தேக்கநிலையும் எந்தளவுக்கு இருந்தன என்பது அவர்களுக்கு அனுபவப்பூர்வமாக தெரியும். இதன் காரணமாகவே 1948௫2 யில் முல்கி கிளர்ச்சி வெடித்தது. மண்ணின் மைந்தர்கள் அல்லது 14 வருடங்களாக அப்பகுதியில் வசிப்பவர்கள் என்ற தகுதியின் அடிப்படையில் வேலைக்கு உத்திரவாதம் கொடுத்த பின்பே இக்கிளர்ச்சி அடங்கியது.

தனி தெலுங்கானா கோரிக்கைக்கு ஹைதராபாத் மாநில காங்கிரசு கட்சி, ஆதரவளித்தது. 1955 ஆம் ஆண்டு நவம்பர் 10 நாளிதழ்களின் செய்திப்படி, 'தெலுங்கானா பகுதியை சேர்ந்த 10 காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களில் 7 பேரும், 105 காங்கிரஸ் பிரதிநிதிகளில் 73 பேரும், அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் மாநில பிரதிநிதியும், தெலுங்கானா பகுதியை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தனித் தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக' செய்தி வெளியிட்டது. இப்பிரச்சினைக் குறித்து ஆந்திர தலைவருடன் கலந்தாலோசிக்க நவம்பர் மாதம் கர்னூல் செல்வதாக திட்டமிட்ட கே.வி.ரங்கா ரெட்டி, எம்.சென்னா ரெட்டி, மற்றும் ஜே.வி.நரசிங் ராவ் ஆகியோர் அடங்கிய குழு, பிறகு அப்பயணத்தை ரத்து செய்தது.

1955ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஹைதராபாத் சட்டசபையில் எட்டு நாட்கள் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறாவிட்டாலும், அதிகாரபூர்வ அறிக்கைக் குறித்து நடந்த அந்த விவாதம் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. முதல்வர் பி.ராமகிருஷ்ண ராவ், கே.வி.ரங்கா ரெட்டி, எம்.சென்னா ரெட்டி ஆகிய முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டார்கள். தெலுங்கானா காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு குரல் கொடுக்கும், 'கோல்கொண்டா பத்ரிகா' 1954ல் விஷாலாந்திராவை ஆதரித்த நிலைமாறி, 1955ல் தனித்தெலுங்கானாவை ஆதரிக்க ஆரம்பித்தது.

1955 ஆம் ஆண்டு ஆந்திராவில் இடைத்தேர்தல் நடந்தபோது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை இணைப்பதாக எடுக்கப்பட்ட முடிவு நடைமுறைக்கு வரவே இல்லை. எதிர்பார்த்ததற்கு நேர்மாறாகவே அனைத்தும் நடந்தன. ஏன்?

மாநில மறுசீரமைப்பு குழுவினரால் குறிப்பிட்டிருந்ததைப் போல மொழிரீதியான ஒற்றுமைகள் தவிர பொருளாதார, கலாச்சார, மரபு ரீதியான விவாதங்களும் இணைப்புக்கு எதிராக இருந்தன. சமீபகால வரலாறு முழுவதுமே தெலுங்கு மக்கள் பிரிந்தே காணப்படுகின்றனர். கிட்டதட்ட 400 ஆண்டுகளாக, தெலுங்கானா பகுதியில் வாழும் தெலுங்கு மக்கள் இஸ்லாமியரின் ஆட்சிக்குக்கீழ் வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆனால், ஆந்திராவில் வாழும் தெலுங்கு மக்களோ 150 ஆண்டுகளாக ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். வட்டார வருமான வகைகளில் நிலையற்ற தன்மை, வாய்ப்புகளை இழந்துவிடுவோ என்ற தெலுங்கானா பகுதி படித்த வகுப்பினரின் அச்சம், 1948௫2 வரையிலான நான்கு ஆண்டுகளில் ராணுவத்தின் பிடியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையற்ற நிலை முதலியன இச்சிக்கலுக்கு காரணங்களாக அமைந்தன. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆந்திர குடியாட்சி பங்கேற்பும் மாவட்ட பொதுமன்றமும் ஒருசிலரை மட்டுமே உயர்த்தியிருந்தது. நிஜாம் பகுதியில் சட்டசபை பிரதிநிதிகள் இருந்தாலும் மக்களாட்சி அனுபவம் என்பது ஒருசில ஆண்டுகள்தான். இதுதவிர, இருபகுதி மக்களின் மொழியிலும் காணப்படும் வட்டார வித்தியாசங்களும் அவர்களை இரு வேறு மக்களாகவே அடையாளம் காட்டின. அன்றாட வாழ்க்கை முறையிலும் கூட வித்தியாசங்கள் காணப்பட்டன. இப்பிரச்சினைகளை அமைதியாக தீர்க்க மதிநுட்பம் வாயந்த தலைவர்கள் தேவைப்பட்டனர்.

எல்லாம் சரி, அரசியல் விவாதங்கள் சமநிலையை கொண்டு வந்ததா? 1955ல் கம்யூனிஸ்ட்டுகள் ஆந்திராவில் 30% வாக்குகளையும், 1952ல் தெலுங்கானாவில் 31% வாக்குகளையும் பெற்றிருந்தனர். 1957 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலில் இந்த வாக்குவங்கி எதிரொலிக்கக் கூடும் என்று காங்கிரசு நினைத்ததா? ஆவடி செயற்குழு கூட்டத்துக்கு பிறகும், மாஸ்கோவுடனான நெருக்கத்துக்கு பிறகும், 1955 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டுகளை தோல்வியுறச் செய்த அனுபவத்திலும், ஒருங்கிணைந்த ஆந்திரா மூலம் இரு பகுதிகளிலும் இருந்த கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கை முழுவதுமாக நீக்கி விடலாம் என்று காங்கிரஸ் எண்ணியதா?

1956 ஆம் ஆண்டு மார்ச் 5இல் நிஜாமாபாத் பொதுக்கூட்டதில் நேருவிடமிருந்து வந்த ஒருங்கிணைப்பு குறித்த அறிவிப்பு எதிர்பாராதது. அனைத்து கட்சிகளின் ஒப்புதலோடுதான் இந்த முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டவர், எந்த பாகுபாடுமில்லாமல் பார்த்துக்கொள்வதற்காக இரு மாநிலங்களை (ஆந்திரா, தெலுங்கானா) சேர்ந்த ஆட்சி மன்றங்கள் அமைக்கப்படுமென்று உறுதி கூறினார்.

காங்கிரஸ் உயர்மட்டக் குழுவானது, பம்பாயும், பஞ்சாப்பும் இருமொழி மாநிலங்களாக அமைய ஒப்புதல் அளித்தது. ஆனால், மத்திய பாரத்தானது, மத்திய மாகாணத்துடன் இணைந்து மத்திய பிரதேசமாக மாறியபோதும், உத்திரபிரதேசத்தை சீரமைத்து ஐக்கிய மாகாணம் உருவாக்குவது குறித்தோ, பீகார் குறித்தோ எதுவும் சொல்லவில்லை. அவற்றை தொடக்கூட இல்லை. வங்காளத்திலோ கூர்க்காக்களுக்கு தனி மாநிலத்தை மறுத்தது.

உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காமல், பகுத்தறிவுக்கு பொருத்தமான காரணங்கள் இல்லாமல், மாநில மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைகள் இல்லாமல், நேருவின் தலையீடு இல்லாமல் ஆந்திரா ஒருங்கிணைக்கப்பட்டது எப்படி? இக்கேள்விக்கான விடையாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் நிலவி வந்த வரலாற்று மற்றும் அரசியல் சூழலே காரணம் என்று சொல்லலாம்.

1. பொதுத்துறை முதலீடுகளுக்கும் அரசாங்கத்தை நடத்துவதற்கும் முதலீடுகள் தேவைப்பட்டன. ஆனால், முன்பே குறிப்பிட்டபடி (தெலுங்கானா தவிர்த்த) ஆந்திர மாநிலம் செயலளவில் கடனாளியாக இருந்தது.

2. தெலுங்கானா வறிய பிரதேசமாக இருந்தாலும் அரசாங்க வருமானம் உபரியாக இருந்தது. நிஜாம் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முதலீடுகளும், பணமாக மாற்றத்தக்க சொத்துகளும் அங்கு திரண்டிருந்தன. நிச்சயமற்ற காலநிலைகளால் விவசாயத்தில் பின் தங்கி இருந்தாலும், ஆந்திராவை விட தெலுங்கானா பகுதியில் மாநிலங்களுக்குச் சொந்தமான அல்லது மாநிலங்களால் கட்டுபடுத்தப்பட்ட 26 கனரக தொழிற்சாலைகள் இருந்தன.

3. கடலோர பகுதிகள் விவசாயத்தில் முன்னேறியிருந்தாலும், பேப்பர் மில், ஆந்திரா ஸுகர், மற்றும் ஒரு சில சாக்கு தொழில் மில்களையும் சேர்த்து தொழிற்மயமாக்கலில் பின் தங்கியே இருந்தன. கடலோர பகுதிகள் இப்படியென்றால், ராயலசீமாவில் குறைந்த அளவிலான பொருளாதார அடித்தளமே இருந்தது. அதன் எல்லா மாவட்டங்களிலுமே வருவாய் பற்றாக்குறை காணப்பட்டது. அதனால், கடலோரப் பகுதிகளின் உபரி வருமானத்தை ராயலசீமா எதிர்நோக்கியிருந்தது.

4. ஏற்கெனவே மாபெரும் நகரமாக உருவாகியிருந்த ஹைதராபாத் மாநகரத்தை, மூன்றாவது நடுநிலை தேர்வாக தேர்ந்தெடுப்பதன் மூலம் கர்னூல் மற்றும் குண்டூர்/விஜயவாடாவுக்கு இடையிலான தலைநகர் பிரச்னையை - பகைமையை - களையலாம். ஒருங்கிணைந்தபின், ராயலசீமாவிலிருந்தும் கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்தும் எளிதில் தலைநகரை (ஹைதராபாத்) அடையலாம்.

5. ஒருங்கிணைப்பின் மூலமாக இருபகுதி காங்கிரஸ் கட்சியையும் இணைக்கலாம். அதன் மூலம் (இரு பகுதி சிபிஐயும் ஒன்றிணைந்தாலும்) சிபிஐக்கு எதிரான சக்தியாக வலுவாக காலூன்றலாம். 1955ல் கிடைத்த வெற்றியைப் போலவே தெலுங்கானாவில் 1957 பொதுத்தேர்தலிலும் வெற்றி பெறலாம் என காங்கிரஸ் எண்ணியது.

அதுபோலவே ஒருங்கிணைப்புக்கு பிறகு காங்கிரஸ் வலுவான கட்சியாக மாறியது. ஆனால், 1955ல் தேர்தல் நடைபெற்றதால், 1957ல் ஆந்திர சட்டசபைக்கான பொதுத்தேர்தல் வேண்டாம் என்று காங்கிரஸ் தந்திரமாக முடிவு எடுத்து, தெலுங்கானா பகுதியில் முழு கவனம் செலுத்துமாறு கட்சியினரை வலியுறுத்தியது. சிறு கட்சிகளுடனும் சாதி சங்கங்களுடனும் கூட்டணி அமைத்து 107 இடங்களில், 68ல் நின்று 47% வெகுமக்கள் ஆதரவை பெற்றது. ஆனால், 26% வாக்குகளுடன், 23 இடங்களை மட்டுமே கம்யூனிஸ்ட்டுகள் பெற்றனர்.

இரு காங்கிரஸ் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டதாலும், தெலுங்கானா பகுதியிலிருந்து வருவாயும், தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களும் ஆந்திரா முழுக்க பரவியதாலும், ஏற்கனவே வளர்ச்சி அடைந்திருந்த ஹைதராபாத் தலைநகரானதாலும், கடலோர பகுதியிலிருந்து கிடைத்த உபரி உணவினாலும் ஒருங்கிணைந்த ஆந்திரம் வளர்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்தது.

முன்பே ராயலசீமாவிலும் தெலுங்கானாவிலும் இருந்த அடித்தளம் காரணமாக ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியானது ரெட்டி சமூகத்தின் செல்வாக்கு பெற்ற கட்சியாக மாறியதுடன், தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக செல்வாக்குப் பெற்ற பிற சமூகத்தினருடனும் கூட்டணி வைத்துக்கொண்டு தாழ்த்தப்பட்டவர்களை ஆதிக்கம் செலுத்ததொடங்கியது. 1956 முதல் 1980 வரை 11 அமைச்சரவைகள் அமைக்கப்பட்டன. இதற்கு சராசரியாக ரெட்டிகள் 26%, பிராமணர்கள் 7%, கம்மா 8%, கப்பு மற்றும் பிற பிற்படுத்தபட்ட சாதியினர் 28% என பங்களிப்பு இருக்கிறது. ரெட்டிகளின் இந்த அமைச்சரவை பங்களிப்பு 1957 முதல் 1985 வரையிலான ஏழு சட்டசபைகளிலும் எதிரொலித்த ரெட்டிகளின் செல்வாக்குக்கு இணையானதே. சராசரியாக, ரெட்டிகளுக்கு 25% இடங்களும், பிராமணர்களுக்கு 9%, கம்மா 14%, பிற்படுத்தப்படுத்தப்பட்ட சாதியினருக்கு 17% இடங்களும் கிடைத்தன. இந்த காலகட்டதில்தான், ஏழு சட்டசபையிலும், பிராமணர்களின் எண்ணிக்கை 23லிருந்து 11 ஆக குறைந்து முற்றிலுமாக வீழ்ச்சியடைந்தது. அதே போல 11 அமைச்சரவையிலும் 23%லிருந்து 6% ஆக குறைந்தது.

 

ஆந்திரா - தெலுங்கானா, வரலாற்றுத் தொடர்புகள்- 4

6. முடிவுரை

காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்தாலும், வட்டாரத் தளங்களில், குறிப்பாக கடலோர மாவட்டங்களிலுள்ள ஆற்றலும், செல்வாக்கும் மிகுந்த கம்மா சமூகத்தினரின் வளர்ச்சியிலும், தெலுங்கானா பகுதியின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்ததவறியது. இதன் பலனாக 'தெலுங்கு சுய மரியாதை' என்ற கோஷத்துடன் களமிறங்கிய கம்மா சமூகத்தின் ஆதரவு பெற்றதெலுங்கு தேசம் கட்சியிடம் 1983ல் ஆட்சியை பறிகொடுக்க நேர்ந்தது.

எனினும், 1969 ஆம் ஆண்டிலும் இப்போதும், தெலுங்கானா இளைஞர்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் போராடுகிறார்கள். புறக்கணிக்கப்படும்போதும், வாக்குறுதிகளும் உத்தரவாதங்களும் காற்றில் பறக்கவிடும் போதும் தங்கள்உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் மட்டுமல்ல இவற்றிலுள்ள தெலுங்கானா பகுதிதலைமையும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரதேசங்களை சமநிலைப்படுத்த கடும்தேவை இருக்கிறது. இரண்டு பகுதிகளுமே மொழியைத் தவிர (இதிலும் உச்சரிப்பில் மாறுபாடு உண்டு) மற்ற அனைத்திலும்வேறுபட்டு இருக்கிறது. இவையெல்லாவற்றையும் விட, ராயலசீமா மற்றும் கடலோர மாவட்டங்களில் இருக்கும்சமச்சீரின்மையை சரி செய்ய வேண்டும். இந்தக் குறிக்கோளை நிறைவேற்ற அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தவறியதுடன்1969௭1 காலத்தில் நிகழ்ந்த எழுச்சியில், 1956 நிலைப்பாட்டுக்கு மாறாக நடந்துக் கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ரெட்டிகளின் செல்வாக்குள்ள காங்கிரசும், கம்மா செல்வாக்குள்ள தெலுங்குதேச கட்சியும், சட்டசபையிலும் அமைச்சரவையிலும் சாதி அடிப்படையிலான விகிதாசாரத்தை திறமையாகவே சமாளித்தன. ரெட்டி சமூகத்தை சேர்ந்த 9 சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தது தவிர, 1982 - 85 சட்டசபையில் சாதிகளின் விகிதாசாரத்தில் எந்தமாற்றமும் ஏற்படவில்லை. இந்தக் காலப்பகுதியில் அமைக்கப்பட்ட நான்கு அமைச்சரவையில், பிராமண சமூகத்தின்பிரதிநிதித்துவம் 2%மும், ரெட்டி சமூகத்தின் பிரதிநிதித்துவம் 6%மும் குறைந்தன. ஆனால், இந்த வீழ்ச்சி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அதிகமாக இருந்தது. கப்பு சமூகத்தினர் 58%லிருந்து 30% ஆக குறைந்தனர். அமைச்சரவையில் கம்மாசமூகத்தினரின் பிரதிநிதித்துவம் 1983ல் இருமடங்காக, அதாவது 6% ஆக, உயர்ந்தது. ஆனால், 1985ல் 4% ஆக இந்த விகிதம் குறைந்தது.

1999 ஆம் ஆண்டளவில், சாதி சார்ந்து வாக்களிப்பது என்பது நடைமுறையாக மாறியிருந்தது. புள்ளிவிவரங்களின்படி, தெலுங்கு தேசக் கட்சிக்கு கம்மாக்களிலிருந்து 87%மும், விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் 62%மும்வாக்களித்திருந்தனர். ரெட்டிகளில் 77%மும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து 64%மும், இஸ்லாமியர்களில் 60%மும்காங்கிரசுக்கு வாக்களித்திருந்தனர். இதிலிருந்து ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளும் கப்புகள், இதர பிற்படுத்தப்பட்ட சமுகத்தினர், இரு பெரும் கட்சிகளையும் சம அளவில் ஆதரித்த பழங்குடி மக்கள் ஆகியோரின் கைகளிலேயே இருப்பதை உணரலாம். பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் கட்சியை தீர்மானிக்க பெரிதும் உதவுவது இவர்களின் வாக்களிப்புதான்.

1956 மற்றும் 1983ல் நிலைபெற்ற சாதிகளின் சமநிலையை, கப்பு சமூகத்தினரின் செல்வாக்குமிக்க 'ப்ரஜா ராஜ்ய கட்சி'யின் தோற்றமும், தனித்தெலுங்கானா கோரிக்கைகளும் நிலைகுலைய வைத்திருக்கின்றன. துல்லியமாக தெரியாததால் 2009ல் எந்தசாதி சமநிலை பெற்றது என்பதை இப்போது சொல்ல முடியவில்லை. தெளிவாக ஆராய வேண்டி இருக்கிறது. ஆனால்ஒருவிஷயம், கடலோர ஆந்திர பிரதேசம், ராயலசீமா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் நிலவி வரும் சாதிக் கணக்கீடுகளை மாற்ற தனித் தெலுங்கானாவே தீர்வாக(?) இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

 

நன்றி: http://sandanamullai.blogspot.com/2010/04/1949-56_19.html

 

 

 

'தெலுங்கானா' எல்லைகள்.

 

map-telangana-copy.jpg

 

 

 

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tamil_News_large_632805.jpg

 

 

'தெலுங்கானா' விவகாரத்தில் ஏமாற்று வேலை: மத்திய அரசு மீது சந்திரசேகரராவ் பாய்ச்சல்!

 

ஐத'ராபாத்: தெலுங்கானா விவகாரத்தில் ஏமாற்று ‌வேலை செய்கிறது மத்திய அரசு. தெலுங்கானா கோரிக்கை வலியுறுத்தி, ‌தெலுங்கானா பகுதி காங். அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சந்திரசேகரராவ் கூறினார்.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக மத்தியஉள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்ட‌ே கடந்த ஆண்டு டிசம்பரில் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒரு மாதத்திற்குள் தெலுங்கான பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தார்.இந்தசூழ்நிலையில் ஆந்திர காங்.. மேலிட பொறுப்பாளர் குலாம்நபிஆசாத், தெலுங்கானா விவகாரத்தில்அவசரம் காட்டமாட்டோம். மேலும் தாமதமாகும் என்றார்.இதற்கு தெலுங்கானா பகுதி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஏமாற்று ‌வேலை: சந்திரசேகரராவ்

இது குறித்து , தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சித்தலைவர் சந்திரசேகரராவ் கூறியதாவது:

 

"தெலுங்கான விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது. இம்மாநில காங்.பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் , எங்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் கருத்து கூறியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம ‌தேதி டில்லியில் நடந்த அனைத்துக்கட்சிக்கூட்டம் வீணான ஒன்று. ‌ஏமாற்று வேலை. தெலுங்கான தனி மாநிலம் உருவாக இப்பகுதி காங். அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு கோரிக்கைக்காக தொடர்ந்து எங்களுடன் இணைந்து போராட முன் வர வேண்டும்" என்றார்.

 

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிகட்சி பொலிட்பீரே உறுப்பினர் சர்வான் கூறுகையில், "மத்திய உள்துறைஅமைச்சர் இம்மாதம் 28-ம் தேதி வரை கெடுவிதித்துள்ளார். அதுவரை காத்திருப்போம்" என்றார்.

 

இதற்கிடையே காங். தலைவர் சோனியாவை தெலுங்கானா பகுதி எம்.பி.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தனி மாநிலம் ஒன்று தான் தீர்வு என்பதுஅவர்களின் எண்ண ஓட்டமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியாவும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

2014-ம் ஆண்டு பார்லிமென்ட்‌ லோக்சபா தேர்தலுடன், ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவிருப்பதால்,தெலுங்கானா விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

மத்திய அரசின் முடிவினை பொறுத்தே இந்த விவகாரம் மேலும் விசுவரூபம் எடுக்குமா? அல்லது முடிவுக்கு வருமா? என்பது தெரியவரும்.

 

 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=632805

 

 

 

டிஸ்கி: "இந்தியச் செய்திகளை அதிகம் யாழில் இணையுங்கள்" என்ற வேண்டுகோளுக்கிணங்க இதை பதிகிறேன். :rolleyes:

blank.gif
  • கருத்துக்கள உறவுகள்

பேசமா பிரிச்சு கொடுத்திட்டா என்ன ? ஆந்திர இருப்பது மாதிரி இருந்தா ராவ் முதல்வராவே ஆக முடியாது அது தான் பிரிக்க சொல்லி அடம் பிடிக்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருபகுதி தெலுங்கர்களும் மொழி,மதம்,கலாச்சாரம் ரீதியாக ஒன்றாக இருந்தும் இவரகள் பிரிந்து போக அடம் பிடிப்பது ஏனென புரியவில்லை. சில நூறாண்டுகள் வேற்று மதத்தாரின் ஆளுகையில் இருந்ததால் எற்பட்ட பொருளாதாரச் சரிவிலிருந்து மீளவும், பிரிந்து சென்றால் கிட்டும் ஒரு சில நன்மைகளுக்காகவும் இருக்கலாம்.

 

 

statues-tankbund630.jpg

 

 

சமீபத்தில் ஐதராபாத் சென்றபொழுது, மிகப் பிரபலமான 'ஹுசேன் சாகர்' ஏரியின் கரையோர சாலையில்(Tank Bund Road) ஏறத்தாழ 12 சிலைகள் - இவை அனைத்தும் ஆந்திர கடலோரப்பகுதி தலைவர்களாம், இவைகள் அனைத்தும் கடந்த வருட தெலுங்கானா போராட்டத்தில் சிதைக்கப்பட்டது. தற்பொழுது அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் திறக்க நாள் காத்து தவமிருக்கிறது.

ஒரே மொழிபேசும் மக்கள் எப்படி அடித்துக்கொள்(ல்)கிறார்கள்?

 


முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், ஒருசமயம் புதுச்சேரியை தமிழகத்துடன் மீண்டும் இணைக்கப் போகிறேன் என சும்மா ஊதிவிட்டார். அவ்வளவுதான், நம் புதுவை மக்கள் கொதிதெழுந்தார்கள், கடையடைப்பு, கலவரம், கல்லெறி...!

 

பிறகென்ன முடிவில் பின்வாங்கல் தான்.

Edited by ராஜவன்னியன்

இந்தியா உடையும் ஆனால் உடையாது.

 

 

மிகப்பலமான சோவியத் யூனியன் உடைந்தது. அதன் காரணமாக அமெரிக்காவும் பல்லின கலாச்சார மாநிலங்களை கொண்டதாக நாடும் இருந்ததே.


இந்தியாவிற்கோ உள்ளுக்குள்ளும் வெளியாலும் எதிரிகள் பலர். எனவே

 

இந்தியா உடையும் ஆனால் உடையாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.