Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீந்திக்கடந்த நெருப்பாறு அங்கம் - 06 தொடக்கம் 32

Featured Replies

  • தொடங்கியவர்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 23

 

 

சிவம் மரத்தின் மீது தொலைநோக்கியுடன் விட்டிருந்த போராளி விரல்களை விரித்து ஆறு எனச் சைகை செய்தான். பாதையின் இரு புறங்களிலும் மறைவாகப் படுத்திருந்த போராளிகள் படையினரின் வரவை மிகவும் அவதானமாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.சிறு சத்தங்களிலிருந்து அவர்கள் நெருங்கி விட்டதைச் சிவம் புரிந்து கொண்டான். அவனின் விரல்கள் விசையை அழுத்தத் தயாராகியிருந்தன.
 
வந்த படையினரில் ஒருவன் ஏதோ ஒரு அசைவைக் கவனித்துவிட்டிருக்கவேண்டும். ஏதோ சிங்களத்தில் கத்தியவாறு சிவத்துக்கு எதிராகப் பாதையின் மறுபக்கத்தில் இருந்த பற்றையை நோக்கிச் சுட்டவாறு நிலத்தில் படுக்கமுயன்றான். ஆனால் நிலத்தில் விழுந்து படுப்பதற்கு முன்பே சிவத்தின் துப்பாக்கிக் குண்டு அவனின் பிடரியைத் துளைக்கவே அவன் அப்படியே சரிந்துவிட்டான். ஏனையவர்களில் இருவருக்கு மற்றப் போராளிகளின் குண்டுகள் பட்டாலும் எல்லோரும் நிலத்தில் நிலையெடுத்து திருப்பிச் சுட ஆரம்பித்துவிட்டனர்.
 
சண்டை எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்பாகவே தொடங்கி விட்டதால் அவர்களின் தாக்குதலும் பலமாக இருந்தது. போராளிகளின் குண்டுகள் அவர்களின் தலைக்கவசங்களில் பட்டுத்தெறித்தன.
 
படையினர் சுட்டவாறே பற்றைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். சற்றுத் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த ஒருவன் எழுந்து ஆற்றை நோக்கி ஓட ஆரம்பித்தான். மரத்திலிருந்த போராளி அவனை நோக்கிச் சுட்ட போதும் அது படவில்லை. அவன் ஓடிப்போய் ஆற்றில் குதித்துவிட்டான். அவனுக்குப் பின்னால் ஓட முயன்ற இருவரைப் போராளிகள் சுட்டு விழுத்திவிட்டனர். கடைசியாக வந்த இருவரும் சண்டை தொடங்கும்போதே பின்வாங்கிக் காட்டுக்குள் ஓடிவிட்டனர். மரத்திலிருந்த போராளி அவர்கள் காட்டுக்குள் வெகுதூரம் ஓடி தொங்கு பாலத்தடிக்குப் போய்விட்டதாகக் கூறினான்.
 
அவர்கள் முள்ளிக்குளம் முகாமுக்குப் போனால் படையினர் காட்டுக்குள் தங்களைத் தேடி இறங்கக் கூடும் எனச் சிவம் கருதினான். எனவே போராளிகள் தங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து விழுந்துகிடந்த படையினர் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டனர்.
 
சிவம் ஆற்றைப் பார்த்தபோது அதன் மறுகரையில் நீர் சிவப்பதைக் கண்டு கொண்டான். அந்த இடம் மிகவும் ஆழமான பகுதியாக இருக்கவேண்டும் எனவும் இவன் குதித்து நீந்தியபோது முதலை பிடித்திருக்கவேண்டும் எனவும் அவன் கருதினான்.
 
போராளி ஒருவனுக்கு தோளில் காயம்பட்டுவிட்டது. அதற்கு கட்டுப்போட்டு விட்டு தங்கள் இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர் போராளிகள். எந்நேரமும் ‘அம்புஸ்சில்’ அகப்படக்கூடும் என்பதால் மிகவும் அவதானமாகப் பாதைகளுக்குக்குச் சமாந்தரமாகப் பற்றைகளுக்கால் நடந்தனர்.
 
அவர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்று சிறிது நேரத்திலேயே உலங்குவானூர்தி வந்துவிட்டது. அது சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி சரமாரியாக வேட்டுக்களைத் தீர்க்க ஆரம்பித்தது. பின்பு உலங்குவானூர்தி கீழே இறங்குவது மரங்களின் மேலால் தெரிந்தது.
 
இறந்த படையினரின் சடலங்களைக் கொண்டு செல்லவே ஹெலி இறங்குகிறது எனச் சிவம் ஊகித்துக் கொண்டான்.
 
எனினும் தாங்கள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து அதிக தூரம் வந்துவிட்ட போதிலும் அவர்கள் தங்கள் நகர்வை மிகவும் அவதானமாகவே மேற்கொண்டனர்.
 
அவர்கள் எதிர்பார்த்தது போன்ற எந்தச் சிக்கலும் நடக்கவில்லை. அவர்கள் இரவு ஏழு மணியளவில் தங்கள் முகாமைச் சென்றடைந்தனர்.
 
உடனடியாகவே நடந்த சம்பவங்கள் பற்றி அறிக்கை எழுதித் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டு, தொலைத்தொடர்பு அறைக்குப் போனான்.
 
மருத்துவப் பிரிவு முகாமுடன் தொடர்பை ஏற்படுத்தி கணேசின் நிலைமை பற்றி விசாரித்தான். கணேசின் உடல் நலம் சற்றுத் தேறி வருவதாகவும் அடிக்கடி சண்டை நிலவரங்களை விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இராணுவம் தம்பனையில் பின்தள்ளப்பட்ட பின் கணேஸ் வெகு உற்சாகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
 
சிவம் ஒருவித திருப்தியுடன் தனது இடத்துக்குத் திரும்பினான்.
 
முத்தம்மாவின் தமையன் வீரய்யனின் மகளும் அந்தக் கிளைமோர் தாக்குதலில் பலியாகியிருந்தாள். வீரய்யன் சின்னபண்டிவிரிச்சானைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அவர்கள் இடம்பெயர்ந்து மடுவில் தங்கியிருந்தனர். வீரய்யனின் மகள் பேச்சுப் போட்டியில் பங்கு கொண்டு முதல் பரிசு பெற்றிருந்தாள். அவள் பரிசைக் கொண்டு சென்று தன் தாயிடம் காட்டும் ஆவலுடன் வந்து கொண்டிருந்த போது அவளின் உயிர் கொடூரமாகப் பறிக்கப்பட்டுவிட்டது.
 
முத்தமாளின் குடும்பமும் சுந்தரசிவம் உட்பட பரமசிவத்தின் குடும்பமும் அன்றே வீரய்யன் வீட்டுக்கு வந்துவிட்டனர்.    வீரய்யனின் மனைவி இரவு முழுவதும் கதறுவதும் பின் சற்று ஓய்வதும் பின் எழுந்து கதறுவதுமாகத் துடித்துக் கொண்டிருந்தாள். முத்தம்மாவும் அவளுடன் சேர்ந்து கத்திக் கொண்டிருந்தாள். வீரய்யன் இடிந்து போய் ஒரு மரத்தில் சாய்ந்தவாறு அமர்ந்துவிட்டான்.
 
பெருமாளுக்கு அதிர்ச்சியில் மீண்டும் முட்டு இழுக்கத் தொடங்கிவிட்டது. அவர் பம்மை இழுத்துவிட்டு ஒரு மரத்தின் கீழ் போய் படுத்துவிட்டார். முத்தம்மாவின் தாய் மருமகளை மடியில் கிடத்தி தலையை வருடி ஆறுதல் படுத்திக் கொண்டிருதாள்.
 
பரமசிவமும் சுந்தரசிவமும் ஓடியாடி வெளிவேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
உயிரிழந்த பிள்ளைகளில் பதினொரு பேர் கிறிஸ்தவப் பிள்ளைகள் அவர்களின் திருப்பலி ஒப்புக் கொடுப்பு காலை பத்துமணிக்கு மடுத் தேவாலயத்தில் ஏற்பாடாகியிருந்தது.
 
திருப்பலி ஆராதனையின் பின் அருட்தந்தை ஆற்றிய உரையில் கூடியிருந்த அனைவருமே கண்ணீர் விட்டனர். இடையிடையே விம்மல் ஒலிகளும் எழுந்தன.
 
வெண்ணிற ஆடையில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பதினொரு பிஞ்சுகளின் ஆன்ம இறைப்பாறலுக்காக அனைவரும் மனமுருகி வேண்டிக்கொண்டனர்.
 
வீரய்யனின் மகளின் மரணச் சடங்குகள் முடித்துக் கொண்டு திரும்பப் பிற்பகல் மூன்று மணியாகிவிட்டது. அதற்குள் பார்வதி பாலம்பிட்டிக்குப் போய் உணவு தயார் செய்து சுந்தரத்தின் மூலம் அனுப்பிவிட்டாள்.
 
வீரய்யனின் மனைவியும் முத்தம்மாவும் சாப்பிட மறுத்துவிட்டனர். பரமசிவம் ஆறுதல் கூறி அவர்களைச் சிறிதளவு சாப்பிட வைத்தார்.
 
சுந்தரம் முத்தம்மாவிடம் சென்று, “நான் போட்டுவரட்டே?”, எனக் கேட்டான்.
 
அவள் அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமலே, “இப்பிடியே இவங்கள் எங்கடை சனத்தை நெடுகவும் கொண்டு போட்டுக்கொண்டிருந்தால் என்ன கணக்கு?”, எனக் கேட்டாள். அவளின் முகத்தில் சோகத்தை மீறிய ஒரு கோவம் பரவியிருப்பதை அவன் அவதானித்தான்.
 
அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
 
அவன் மெல்ல, “ம்.. இயக்கம் தான் என்ன செய்யிறது?, அங்காலை முன்னேறுற இராணுவத்தை மறிச்சு அடிபட வேணும். இஞ்சாலை கிளைமோர் வைக்கிறங்களைக் கவனிக்கவேணும்”, என்றான்.
 
“அப்பிடி ஆக்கள் காணாதெண்டால் நான், நீங்கள் எங்களப் போல இளசுகள் எல்லாரும் களத்தில இறங்க வேண்டியது தானே?”
 
அவளின் வார்த்தைகள் அவனைத் திகைக்க வைத்துவிட்டன. அப்படி அவளுள் ஒரு ஆவேசம் எழும் என அவன் எதிர்பார்க்கவேயில்லை.
 
அவன், “அப்பிடியான நிலைமை கிட்டடியிலை வரும் போலை தான் கிடக்குது?” என்றான் ஒரு பெருமூச்சுடன்.
 
“இல்லை.. அப்பிடி நிலைமை வந்திட்டுது..” என்றாள் உறுதியாக.
 
“சரி. யோசிப்பம், நான் நேற்றுக்காலைமை போனதுக்கு தோட்டப்பக்கம் போகேல்லை. ஒருக்கால் போட்டுவாறன்.”, என்றுவிட்டுப் புறப்பட்டான் சுந்தரம்.
 
அன்று மிளகாய்ப் பழம் பிடுங்க வேண்டிய நாள். எப்படியும் எட்டுச் செலவு முடியுமட்டும் முத்தம்மாவும் தாயும் வரப்போவதில்லை எனவே மறுநாளாவது பழம் பிடுங்க வேறு ஆட்களை ஒழுங்கு பண்ணவேண்டியிருந்தது. ஆனால் அப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுமே சொந்தம், நட்பு, அயல் போன்ற உறவுகளால் மரண வீடுகளுடன் சம்பந்தப்பட்டவையாகவேயிருந்தன.
 
எனினும் எப்பிடியாவது ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்தவனாக வேகமாகச் சைக்கிளை மித்தித்தான்.
 
முதன் நாள் ஆழ ஊடுருவும் படையணியினர் இருவர் காட்டுக்குள் கொல்லப்பட்ட செய்தி அன்று காலையிலேயே ஊரெங்கும் பரவிவிட்டது. சிறுவர் சிறுமியரின் இழப்பில் இடிந்து போயிருந்த மக்களுக்கு அந்தச் செய்தி சற்று நம்பிக்கையைக் கொடுத்தது.
 
எல்லா மரணச் சடங்குகளுக்கும் சென்றுவிட்டு வந்து மதியத்தின் பின்பே முத்தையா கடையைத் திறந்தார். ஒரு பழைய குடைச் சேலையை எடுத்தக் கிழித்து ஒரு கறுத்தக் கொடி செய்து கடை வாசலில் கட்டிவிட்டார். அந்த ஊர்களில் அவருக்கென உறவுக்காரர் எவருமே இல்லாத போதும் அந்தச் சின்னஞ் சிறிசுகளின் இழப்புக்கள் அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
 
சிறிது நேரத்தில் முருகரப்புவும் முருகேசரும் கடைக்குவந்துவிட்டனர்.
முருகேசர், “உந்தப் பெரிய காட்டுக்கை எங்கடை பொடியள் குண்டு வைச்சவங்களைத் தேடிப்பிடிச்சுச் சுட்டுப்போட்டாங்கள்”, எனப் பெருமைப்பட்டுக் கொண்டார்.
 
முருகரப்பு, மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டார். அது எப்பிடி நடந்திருக்குமெனவும், அதை யார் செய்திருப்பார்கள் என்பதையும் அவர் சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடனேயே ஊகித்துவிட்டார். ஆனால் அது பற்றி அவர் வெளியே எதுவும் பேசவில்லை. ஆனால் சிவத்தைப் போல மக்களையும் மண்ணையும் நேசிக்கும் ஒரு பிள்ளையைப் பெற்றமைக்காக பரமசிவத்தை மனதுக்குள் போற்றிக் கொண்டார்.
 
அவர்கள் இப்பிடிக் கதைத்துக் கொண்டிருந்த போது பெரியமடு நோக்கிய பாதையில் போராளிகளின் சில வாகனங்கள் மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்தன. முன்னால் ஒரு ‘பிக்கப்’ வாகனமும் நடுவில் ஒரு ‘அம்புலன்ஸ்’ வாகனமும் பின்னால் ஒரு ‘பஜிரோ’வும் வேகமாக அவர்களைக் கடந்து சென்றன.
 
அவற்றை வியப்புடன் அவதானித்த முருகரப்பு, ”முன்னாலை போற ‘பிக்அப்பிலை’ நிக்கிற பொடியள் சிறப்புத்தளபதியின்ரை ‘பொடிகாட்’ மாரெல்லே?” என்றார்.
 
“அதுக்கை அவரைக் காணேல்லை”, என்றார் முருகேசர்.
 
முத்தையா சற்று அச்சமடைந்த குரலில், “அம்புலன்சும் போகுது இப்பிடி வேகமாய் ஒரு நாளும் போறேல்லை”, என்றார்.
 
எதற்குமே அசைந்து கொடுக்காத முருகப்பர் மனதில் கூட ஒரு மெல்லிய பதட்டம் பரவியது.
 
“எதோ பெரிய பிரச்சினை போலை கிடக்குது. எதுக்கும் நான் ஒருக்கால் தட்சிணாமருதமடுப் பக்கம் போட்டுவாறன்”, என்றவாறு எழுந்து புறப்பட்டார் முருகப்பர்.
 
(தொடரும்) 
 
தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்
 
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கலையழகன் கதை போட மறந்திட்டீங்களோ ?

 

 

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 24

 

சிறப்புத்தளபதி திடீரென மயங்கி விழுந்துவிட்டாரெனவும், பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியும் நினைவு திரும்பவில்லையெனவும், அவரை அவசரமாக அம்புலன்சில் கிளிநொச்சியில் இயங்கும் பிரதான மருத்துவப் பிரிவு முகாமிற்குக் கொண்டு சென்றுவிட்டனர் எனவும் சிவம் அறிந்த போது அதிர்ந்தே போய்விட்டான். அவன் அப்படியான ஒரு நிலைமை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.அவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்திய போதும் அவர் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர் நித்திரை கொள்வதை அவன் என்றுமே கண்டதில்லை. நோய்த் தாக்கம் அதிகமாகும் போது கூட அதைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிக் கொண்டேயிருப்பார்.

சாப்பிடும் போது கூட வரைபடத்தை வைத்து ஏதாவது அடையாளமிட்டவாறோ அல்லது வோக்கியில் ஏதாவது தொடர்பு எடுத்துக் கொண்டோ தான் உணவு உட்கொள்வார். ஒவ்வொரு காவலரணிலும் எந்த எந்தப் போராளிகள் நிற்கின்றனர் என்பதும் எது எதிரியின் நகர்வுக்கு சாதகமான இடம் என்பன போன்ற விடயங்களும் அவர் கண் முன் படமாக விரிந்திருக்கும்.

வேட்டுச் சத்தங்களையும் குண்டோசைகளையும் வைத்துக் கொண்டு நிலைமைகளைக் கணக்கிட்டு அணிகளுக்கு கட்டளை வழங்கும் அவரின் ஆற்றலைக் கண்டு சிவம் பலமுறை ஆச்சரியப்பட்டதுண்டு.

குடாரப்பு மாபெரும் தரையிறக்கத்தை அடுத்து இராணுவக் காவல் வரிசையை உடைத்து நாற்புறமும் இராணுவம் சூழ்ந்திருக்க முப்பது நாட்கள் நடுவில் நின்று களத்தை வழிநடத்திய வீரமும் அர்ப்பணிப்பும் நிறைந்த போராட்டத்தின் போது அவன் அவரின் அருகில் நின்றே களமாடியிருக்கிறான். அவர் போராளிகளுடன் தானும் ஒரு போராளியாக களத்தில் இறங்கிவிடுவார். களத்தில் பின்னடைவு ஏற்படும் போது மின்னல் வேகத்தில் திட்டங்களை மாற்றி வெற்றியை நோக்கி நகர்த்தத் தொடங்கி அச் சந்தர்ப்பத்தில் பல சண்டைகள் கைகலப்பு எனச் சொல்லுமளவுக்கு மிகவும் நெருக்கமாகவே நடந்தன.

அவற்றை உடைத்து எதிரியைத் திணறடிப்பதில் அவரின் கட்டளைகள் மந்திரசக்தி கொண்டவை போன்றே விளங்கும். ஒரு சமயம் அவரை இன்னும் பத்து நிமிடங்களில் பிடித்துவிடுவோம் அல்லது கொன்றுவிடுவோம் எனப் படையினர் தங்கள் தலைமையகத்துக்கு செய்தி அனுப்புமளவுக்கு இவரை நெருங்கிவிட்டனர். ஆனால் பத்து நிமிடங்களில் தங்களில் பலரைப் பலி கொடுத்துவிட்டு பின்வாங்கி ஓடியதுதான் அவர்களின் சாதனையாக முடிந்தது. ஆனையிறவைக் கைப்பற்றுவதில் பிரதான பங்கை வகித்தது அந்தத் தரையிறக்கமும் அந்த முப்பது நாள் மரணப் பொறிக்குள் நின்று நடத்திய சண்டையும் தான் என்பதைச் சிவம் ஒரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டான்.

அவன் அவரின் மேல் எல்லையற்ற அன்பும் மரியாதையும் வைத்திருந்த போதிலும் அவர் தனது உடல் நிலை தொடர்பாக அக்கறைப்படாமை அவனுக்குள் கோபத்தை ஏற்படுத்தியது.

அவன் ஏதோ ஒரு இனம்புரியாத சோர்வுடன் தளபதியின் இடத்திற்குப் போனான்.

ஏதோ எழுதிக் கொண்டிருந்த அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“வாங்கோ! சிவம்” என்றார்.

“சிறப்புத் தளபதிக்கு…” என ஆரம்பித்துவிட்டு அவன் இடைநிறுத்தினான்.

“பிரச்சினையில்லை.. மயக்கம் தெளிஞ்சிட்டுதாம்.. எண்டாலும் அவசர சிகிச்சைப் பிரிவிலை தான் வைச்சிருக்கினமாம்”

சிவம் ஒரு நிம்மதிப் பெருமூச்சைவிட்டான்.

“ஏதோ.. அவர் கெதியாய் வந்திட்டால் நல்லது!” என்றான் சிவம்.

அதைக் கேட்டதும் அவரின் முகம் சற்று மாறியது. பின்பு அவர், “அது சரிவராது போலை கிடக்குது”, என்றார்.

சிவம் திடுக்குற்றவனாக, “ஏனன்ணை?,” எனக் கேட்டான்.

“நாளைக்கு வேறை ஒரு சிறப்புத்தளபதி பொறுப்பேற்க வாறார்!”

“அது பிரச்சினையில்லை.. அவருக்கு சுகம் வந்தால் சரி”

“அதைப் பற்றி நாங்கள் யோசிக்கவேண்டியதில்லை, அவரின்ரை தன்னம்பிக்கையே அவர சுகப்படுத்திவிடும்”, என்றார் தளபதி உறுதியான வார்த்தைகளில்.

அன்றிரவு வவுனியாவிலிருந்து பெருந்தொகையான படையினர் இரணை இலுப்பையை நோக்கி கொண்டுவந்து குவிக்கப்படுவதாகவும் அவர்கள் ஒரு நகர்வு முயற்சியை மேற்கொள்ளக் கூடும் எனவும் இராணுவம் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து ‘வேவு’ தகவல் கிடைத்தது.

சிறப்புத் தளபதி இல்லாத நிலையில் பகுதித் தளபதியே பொறுப்பேற்று சண்டையை நடத்தவேண்டியிருந்தது. தகவல் கிடைத்ததுமே ஒரு போராளியை அனுப்பி சிவத்தை அழைப்பித்தார் அவர்.

இருவரும் அது பற்றி ஆலோசனை நடத்தினர்.

படையினர் முன்னேறக் கூடிய இருபாதைகள் இருந்தன.

ஒன்று சின்னத்தம்பனை ஊடாக பெரிய தம்பனை நோக்கி நகர்வது. மற்றையது வலையன்கட்டு ஊடாக முள்ளிக்குளம் நோக்கிவருவது. எப்படி வருவார்கள் என்பதைப்பற்றி ‘வேவு’ தகவல் பெறமுடியாமலிருந்தது. எனவே இரு பகுதிகளையும் கண்காணிப்பது என முடிவு செய்தனர். இரு முனைகளிலும் சண்டையை மேற்கொள்ள ஆளணி போதாத நிலையிலும் வேறு வழியின்றி போரை எதிர்கொள்ள முடிவு செய்தனர்.

மலையவனின் தலைமையில் ஒரு அணியை எப்பக்கமும் நகரும் நிலையில் தயார்ப்படுத்தி வைத்திருந்தனர்.

அதிகாலை நான்கு மணியளவில் எறிகணை வீச்சு ஆரம்பமாகியது.

படையினர் தம்பனைப் பக்கமாக ஒரு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போன்று சண்டை உக்கிரமாக இருக்கவில்லை.

எட்டு மணிவரையும் கடுமையான சண்டை இடம்பெற்ற போதிலும் அதன் பின் சண்டையின் வேகம் தணிய ஆரம்பித்துவிட்டது. பதினொரு மணியளவில் படையினர் முற்றாகவே பின்வாங்கிவிட்டனர். ஆனால் மாலைவரை எறிகணை வீச்சு தொடர்ந்து இடம்பெற்றது.

பண்டிவிரிச்சான் மக்கள் முழுமையாகவே இடம்பெயர்ந்து மடுவை வந்து சேர்ந்தனர்.

அடுத்த நாள் புதிய சிறப்புத் தளபதி வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

அன்று மாலையே எல்லா அணிகளின் தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி களநிலைமைகளை முழுமையாகக் கேட்டறிந்தார்.

வரை படத்தை வைத்துக் கொண்டு எதிரி முன்னேறக்கூடிய பாதைகள், இதுவரை முன்னேறிய பாதைகள் என்பவற்றைப் பற்றி விபரம் கேட்டு அறிந்து கொண்டார்.

அடுத்த நாள் பெண்கள் படையணி வரவழைக்கப்பட்டது. ஒன்றுவிட்டு ஒரு காவலரண்களில் பெண் போராளிகள் நிறுத்தப்பட்டனர். சிவத்தின் அணியினரும் தம்பனை முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டனர். சிவம் எப்போதுமே முள்ளிக்குளம் போன்ற காட்டுப் பிரதேசங்களில் போரிடுவதையே விரும்பினான். எனினும் சிறப்புத் தளபதியின் கட்டளைக்கமைய தன் அணியை தம்பனை முன்னரங்கிற்கு நகர்த்தினான்.

அடுத்த இரண்டு மாதங்களாக குறிப்பிடும்படியான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அதிகாலையில் சில சமயங்களில் செல் வீச்சு இடம்பெறுவதும் படையினர் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்வதும், எதிர்த்தாக்குதல் தொடுக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் பின்வாங்குவதுமாக நாட்கள் கழிந்தன.

ஆனால் பண்டிவிரிச்சானில் மக்கள் வெளியேறிவிட்ட நிலையில் விமானக் குண்டு வீச்சுக்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன.

சிவத்தைப் பொறுத்த வரையில் ஏதோ ஒரு பெரும் நடவடிக்கைக்கு இராணுவம் தம்மைத் தயார்ப்படுத்துவதாகவே தோன்றியது.

 

பரமசிவத்தின் மிளகாய்த் தோட்டம் அந்த முறை எதிர்பார்த்ததுக்கு மேலாகவே காய்த்துக் கொண்டிருந்தது. அப்படியான விளைச்சலை அவர்கள் சா விளைச்சல் என்று கூறுவதுண்டு.

முத்தம்மா, முத்தம்மாவின் தாய், பார்வதி, வேறு இரு பெண்கள் என எல்லோரும் பழம் ஆய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

வேலாயியும் பார்வதியும் கதைத்துக் கொண்ட வார்த்தைகள் முத்தம்மாவின் காதிலும் விழுந்தது.

பார்வதி, “வேலம்மா.. இவன் மூத்தவனுக்கு ஒரு காலியாணத்தை முடிப்பமெண்டால் அவன் இயக்கம், போராட்டமெண்டு போனவன் வீடு வாசலுக்குக் கூட வாறேல்லை. என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.. இவன் இளையவனுக்கும் இருபத்தெட்டு வயதாய்ப் போய்ச்சுது”, என்றாள் ஒரு பெரு மூச்சுடன்.

“மூத்தவரைப் பாத்து சரிவராதுங்கம்மா.. சின்னவரை எங்கயாச்சும் பாத்து முடிச்சுவிட வேண்டியது தான்”, என்றாள் வேலாயி.

முத்தம்மா காதைக் கூர்மையாக்கிக் கொண்டாள்.

“ஓ.. நானும் அப்பிடித்தான் யோசிக்கிறன்”, என்றாள் பார்வதி. ஏனோ முத்தம்மாவின் முகம் அவளையறியாமலே வாடியது. நெஞ்சில் ஏதோ ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.

சுந்தரசிவத்துக்கு பேசும் பெண் நிச்சயமாய் தானாய் இருக்காது என அவள் நம்பினாள். ஆனால் சுந்தரத்தை மறந்துவாழ வேண்டிவரும் என நினைத்த போது, “ஓ”, வெனக் கத்தி அழவேண்டும் போலிருந்தது. அப்படியொரு நிலைமைய ஏற்பட்டால் மிளகாய் கன்றுக்கு அடிக்கும் கிருமி நாசினியைக் குடித்துவிட்டு செத்துப் போகவேண்டியது தான் என முடிவெடுத்தாள். எனவே சுந்தரம் மருந்துப் போத்தலைப் புதைத்து வைக்கும் இடத்தைப் பார்த்து வைக்கவேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

எல்லோரும் ஆய்ந்த பழங்களையும் வாங்கி ஒரு கடகத்தில் கொட்டிக் கொண்டு அவள் கொட்டிலை நோக்கிப் போனாள். அங்கு சுந்தரம் பழங்களிலிருந்து செங்காய்களைப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தான்.

முத்தம்மா தான் கொண்டுவந்த பழங்களை குவியலில் கொட்டிவிட்டு புறப்படத் திரும்பினாள்.

ஒவ்வொரு முறையும் பழங்களைக் கொண்டுவரும் போது ஏதாவது கேலியாகக் கதைத்துவிட்டுப் போகும் அவள் எதுவுமே பேசாமல் முகத்தை ‘உம்’, என வைத்திருந்தது அவனுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

“ஏய்.. ஏன் ஒண்டும் பேசாமல் போறாய்…?”

அவன் ஒரு முறை அவள் முகத்தை உற்றுப்பார்த்த போது அவளின் கண்கள் கலங்கிவிட்டன. அவள் மெல்ல, “ஒண்டுமில்லை” என்றாள்.

அவன் சற்று அழுத்தமாகவே கேட்டான்.

“உனக்கும் எனக்குமிடையிலை ஒண்டுமில்லையே?”

அவள் ஒருவித தயக்கத்துடன், “கெதியிலை அப்பிடித்தான் வரும் போலை”, என்றாள்.

“நீ என்ன சொல்லுறாய்?”, அவனின் வார்த்தைகள் திகைப்புடன் வெளிவந்தன.

“உங்களைக் கலியாணம் கட்டி வைக்கப் போகினமாம்!”

“நல்லது தானே…?”

“உங்களுக்கு நல்லது.. எனக்கு?”, என்றுவிட்டு விம்மத் தொடங்கினாள் முத்தம்மா.

“ஏன் உனக்கு என்னைக் கட்ட விருப்பமில்லையே?”

அவள் பெரு விரலால் நிலத்தைக் கீறியவாறு, “உங்களுக்கு என்னையே கட்டித்தரப் போகினம்”, என்றாள் தளதளத்த குரலில்.

அவன் உறுதியாகச் சொன்னான், “கட்டித்தர வைப்பன்”

“சத்தியம் பண்ணுங்கோ!”

“சத்தியம்”, என்றுவிட்டு அவன் சத்தியம் செய்யும் சாட்டில் அவளின் கையைப் பிடித்தான்.

அவள் நாணத்துடன், “கையை விடுங்கோ”, என்றாள்.

அவன் மெல்லிய சிரிப்புடன், “அப்ப உன்னக் கைவிடச் சொல்லுறியே?” எனக் கேட்டான்.

“ஐயோ.. இப்ப கையை மட்டும் விடுங்கோ..” என்றுவிட்டு கையை இழுத்துக் கொண்டு வெளியே போனாள். மனம் எல்லையற்ற இன்பத்தில் துள்ளியது.

ஆனால் சில நாட்களில் அவர்களின் கனவில் இடி விழும் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 25

தொடர்ச்சியாக ஏறக்குறைய மூன்று வாரங்கள் எவ்வித மோதல்களுமின்றியே கழிந்தன. அது புயலுக்கு முன்பு கடலில் ஏற்படும் மரண அமைதி போன்று ஒரு பயங்கரத் தோற்றம் என்பதை எவருமே உணர்ந்து கொள்ளவில்லை. தம்பனை முன்னரங்கக் காவலரண்கள் சிவத்தின் பொறுப்பிலேயே இருந்தன. சிவம் மிகவும் விழிப்புடனேயே நிலைமைகளை அவதானித்து வந்தான். ஒன்றுவிட்ட ஒரு காவலரணில் மகளிர் படையணிப் போராளிகளே அமர்த்தப்பட்டிருந்தனர்.வதனி நடுச்சாம வேளைகளில் தேனீர் தயாரித்து அருகிலுள்ள காவலரண்களுக்கும் கொடுப்பாள். அவள் ஒரு நல்ல சண்டைக்காரியாக இருந்த போதும் சிறுபிள்ளை போன்று எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவாள். அவள் எல்லோரையும், “டேய் அண்ணை”, என்றே அழைப்பாள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயரும் வைத்து விடுவாள்.  மலைவனை அவள், “டேய் மலையாண்டியண்ணை”, என்று தான் கூப்பிடுவாள். அவனும் சிரித்துக் கொண்டே, “போடி கீச்சிட்டான் குருவி”, எனக் கேலி செய்வதுண்டு.

இரவு இரண்டு மணியளவில் எறிகணைகள் சீற ஆரம்பித்தன. அத்தனையும் முன்னரங்குகளைத் தாண்டி ஊர்மனைகளுக்குள் சென்று வீழ்ந்து கொண்டிருந்தன.

வழமையாக இராணுவத்தின் முன்னேற்ற முயற்சிகளின் போது எறிகணைகள் முன்னரங்கப் பகுதிகளிலேயே விழுந்து வெடிப்பதுண்டு. இப்போது எல்லாமே முன்னரங்குகளைத் தாண்டிப் போய் விழுவது சிவத்துக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

எனினும் முன்னரங்கில் உயர் விழிப்பு நிலையைப் பேணும் வகையில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தான்.

மடுக்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களிலெல்லாம் சரமாரியாக எறிகணைகள் விழுந்து வெடிக்க ஆரம்பித்தன. தட்சிணாமருதமடு பாலம்பிட்டி ஆகிய கிராமங்களையும் எறிகணைகள் விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து எரிபந்தங்களாக விழுந்து வெடித்தன. மக்கள் இரவு முழுவதையும் பதுங்குகுழிகளிலேயே கழிக்கவேண்டியிருந்தது.

காடுகளுக்கு மேலால் பராவெளிச்சம் அடிக்கடி ஏவப்பட்டது. எனவே காடுகளுக்கால் இராணுவம் முன்னேறக் கூடும் எனக் கருதியதால் அப்பக்கத்தை அவன் பலப்படுத்தினான். சிறப்புத் தளபதியிடமிருந்து ஏதாவது கட்டகளைகள் கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

தொடர்ந்து படையினர் பக்கமிருந்தும் போராளிகள் தரப்பிலிருந்தும் எறிகணைகள் பாய்ந்து கொண்டிருந்தன.

அதிகாலை ஐந்து மணியளவில் கட்டளைப் பீடத்திலிருந்து அவசர அழைப்பு வந்தது. படையினர் இடதுபுறமாக பண்டிவிரிச்சான் குளத்தின் அலைகரைக்குள் இறக்கிவிட்டதாகவும் வலது புறமாக மாதா சந்தியில் காட்டுக்குள் நகர்வதாகவும், முன்னரங்கப் போராளிகள் சுற்றி வளைக்கப்படும் அபாயம் இருப்பதால் உடனடியாகப் பின்வாங்கும் படி கட்டளை வந்தது.

சிவத்தால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. எனினும் கட்டளைக்குக் கீழ்ப்படிவது கட்டாயமாதலால் போராளிகளையும் பின் நகருமாறு உத்தரவிட்டான். ஒரு தோட்டா கூடச் சுடாமல் பின்வாங்குவது அவனுக்குப் பெரும் அவமானமாக இருந்தது. அவர்கள் பின்வாங்கிய போது பெரியபண்டிவிரிச்சானுக்கும் மடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் பேராளிகளும் ஆதரவாளர்களும் வேகமாகக் காவல் நிலைகளை அமைத்துக் கொண்டிருந்தனர்.

காலை ஏழு மணியளவில் எறிகணை வீச்சு நின்றுவிட்டது. ஆனால் படையினர் தம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான் எனப் பெரும் பகுதியைக் கைப்பற்றிவிட்டனர். கட்டை அடம்பனிலிருந்து காட்டுக்குள்ளால் ஊடுருவிய ஒரு இராணுவ அணியை பரப்புக்கடந்தான் கல்குவாரிப் பகுதியில் போராளிகள் மறித்து சண்டை செய்வதாகவும் செய்தி வந்தது.

மூன்றுவார அமைதிக்குள் எவ்வளவு பெரிய ஆபத்து காத்துக் கிடந்தது என்பதை இப்போது அவன் புரிந்து கொண்டான். ஆனால் தங்கள் பக்கம் ஏன் இப்பிடி பலவீனமடைந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் பண்டிவிரிச்சான் குளத்தடிக்கு எப்படிப் படையினர் முன்னேறியிருப்பர் என்பதை அவனை ஊகிக்க முடிந்தது. அதற்குக் கூட தங்கள் பக்கத்தில் எங்கோ பிழை நடந்து விட்டதாகவே அவன் திட்டவட்டமாகக் கருதினான்.

பெரியவலையன் கட்டில் இருந்தோ அல்லது இரணைஇலுப்பையிருந்தா அல்லது இரு முகாம்களிலுமிருந்தோ தான் இராணுவம் புறப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் காவலரண்களில் உள்ள போராளிகள் கண்களில் படாதவகையில் காவரண் வரிசைக்குச் சமாந்தரமாக நகர்ந்திருக்க வேண்டும். பின்பு தம்பனைக்கும் முள்ளிக்குளத்துக்கும் இடையில் உள்ள முள்ளுக்காட்டுப் பகுதியால் பாதை ஏற்படுத்தி பண்டிவிரிச்சான் குளத்தடிக்கு வந்திருக்கவேண்டும். தம்பனையால் முன்னேற்ற முயற்றிகளை மேற்கொள்ளப் போவதாகப் போக்குக் காட்டும் வகையில் எறிகணை வீச்சை மேற்கொண்டவாறு காட்டுக்குள்ளால் இரகசிய நகர்வை மேற்கொண்டுள்ளனர்.

அதை விட வேறு எவ்வகையிலும் இராணுவம் முன்னேறியிருக்க வழியேயில்லையென சிவம் திட்டவட்டமாக நம்பினான். அப்படியானால் இவ்வளவும் இடம்பெற்ற போது தங்கள் “வேவு” அணியால் ஏன் அறிய முடியவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

இப்போ முள்ளிக்குளம், கீரிசுட்டான் பகுதியிலிருந்தும் பின்வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது. போரின் முன்னரங்கு பண்டிவிரிச்சானுக்கும் மடுவுக்குமிடையேயுள்ள பகுதி, தட்சிணாமருதமடு, பாலம்பிட்டி எனப் பின்னகர்த்தப்பட்டுவிட்டது.

போரின் நிலை இப்படித் திசைமாறிவிட மக்களின் நிலையோ பெரும் இக்கட்டுக்குள்ளாகிவிட்டது. போராளிகளின் காவல்நிலைகள் ஊர் எல்லைக்கு நகர்ந்துவிட்டதால் அவர்களுக்கு பெரிய மடுவை நோக்கி இடம்பெயர்வதை விட வேறு வழி தெரியவில்லை.

தம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் குடியிருந்த மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்து மடுக்கோவிலில் தஞ்சமடைந்திருந்தனர். அவர்கள் இராணுவம் பண்டிவிரிச்சானில் இறங்கிவிட்டதை அறிந்ததுமே பெரியமடுவை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துவிட்டனர்.

1999ல் ரணகோஷ நடவடிக்கையின் போது அவர்கள் அனுபவித்த கொடூரத்தை எப்படி மறக்க முடியும்.

ரணகோஷ நடவடிக்கையின் போது போராளிகள் படையினரை பெரிய பண்டிவிரிச்சானில் தடுத்து நிறுத்திப் போரிட்டுக் கொண்டிரு்ந்தனர். படையினரின் எறிகணைகளிலிருந்து உயிர்ப் பாதுகாப்புக் கருதி அன்று பகலே மடுவைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் மடுக்கோவிலில் தஞ்சமடைந்தனர். அங்கு குவிந்து விட்ட பல ஆயிரம் மக்களைச் சமாளிக்க முடியாமல் மடுவளாகம் திண்டாடியது. குருவானவர் மக்களை கோவிலுக்குள் படுக்கவும் அனுமதித்திருந்தார்.

எறிகணை வீச்சு இரவும் சரமாரியாகத் தொடர்ந்த போதிலும் அவைகள் கோவில் வளாகத்துக்கு வெளியேயே விழுந்து கொண்டிருந்தன. மக்கள் பதட்டத்துடன் கண்விழித்துக் கொண்டு குந்திருந்தனர். ஒருவர் கையில் ஒரு வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு இயக்க அதில் பி.பி.பி செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பலர் அதைச் சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

செய்தி முடிந்து சில நிமிடங்களில் பறந்துவந்த எறிகணை ஒன்று சின்னக் கோவிலின் அருகில் நின்ற பாலை மரத்தில் பட்டு வெடித்துச் சிதறியது.

எங்கும் மரண ஓலம்.

அந்தக் கணத்திலேயே 42 உயிர்கள் பறிக்கப்பட கோவில் கட்டிடம் குருதிமயமாகியது. இன்னும் ஏராளமானோர் படுகாயமடைந்து துடிதுடித்தனர்.

இரவு நேரம், எதுவுமே செய்ய முடியாத நிலை.

காயமடையாத சிலர் தங்கள் உடைகளைக் கிழித்து காயங்களுக்குக் கட்டுப்போட்டனர்.

உயிர் தஞ்சம் கோரி மாதா கோவிலில் அடைக்கலம் கோரிய மக்களின் மீதே எறிகணை வீசி படையினர் தங்கள் கொலைவெறியை நிலைநாட்டினர்.

தட்சிணா மருதமடு, பாலம்பிட்டி ஆகிய கிராமங்களின் மக்களும் பெரிய மடு நோக்கி நடந்தும் சைக்கிள்களிலும் உழவுஇயந்திரங்களிலும் போக ஆரம்பித்தனர்.

பாலம்பிட்டியை விட்டு வெளியேறியே ஆக வேண்டும் என்ற நிலை எழுந்த போது எதற்கும் கலங்காத பரமசிவம் ஆடியே போய்விட்டார்.

மிளகாய்த் தோட்டம் காய்த்துக்கொண்டிருந்தது. வீட்டிற்குள்ளும் நாலு மூடைகளில் செத்தல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. முற்றத்திலும் நிறைய மிளகாய் காய்ந்து கொண்டிருந்தது. மரவெள்ளியும் இன்னும் ஒரு மாதத்தில் பிடுங்கவேண்டிய பருவம் வந்துவிடும். எல்லாவற்றையும் விட்டுப்போவதென்றால் அவருக்கு உயிர் போவது போன்ற உணர்வே ஏற்பட்டது.

எனினும் சில நாட்களில் திரும்பிவிடலாம் என்ற ஒரு நம்பிக்கை தோன்றி சிறிது தென்பைக் கொடுத்தது.

ஒரு பெரு மூச்சுடன், “இந்த மிளகாயை அள்ளி வீட்டுக்கை குவி”, என்றார் அவர். பார்வதியின் முகமும் இருண்டு போய்க்கிடந்தது. அவள் எதுவுமே பேசாமல் மிளகாயைக் கடகத்தில் அள்ளி வீட்டுக்குள் கொண்டு சென்று கொட்ட ஆரம்பித்தாள்.

சுந்தரம் மாட்டுக் கொட்டிலுக்குப் போட்டிருந்த தகரங்களையும் தடிகளையும் கழற்றிக் கொண்டிருந்தான்.

பரமசிவம் இரண்டு மூடை நெல்லையும், ஒரு மூடை மிளகாயையும் ஏனைய அவசியமான பொருட்களையும் வண்டிலில் ஏற்றினான். பசுமாட்டையும் கன்றையும் அவிழ்த்துவிட்டார். பின்பு பரமசிவம் அதைத் தடவியவாறு, “எடியே.. நாங்கள் கெதியாய் வந்திடுவம்.. அதுவரையும் கவனமாய் நிண்டு கொள்”, என்ற போது அவரின் கண்கள் கலங்கிவிட்டன.

பார்வதி வண்டிலில் ஏறி அமர, பரமசிவம் மாடுகளை, “நட.. நட” எனத் தட்டி விட்டுப் புறப்படலானார்.

சுந்தரசிவம் சைக்கிளில் சில பொருட்களைக் கட்டிக்கொண்டு புறப்படத்தயாரானான். எனினும் ஒரு முறை தோட்டத்தைப் பார்த்துவிட்டுப் போக வேண்டும் போல் தோன்றவே சைக்கிளை அந்தத் திசையை நோக்கிச் செலுத்தினான்.

எங்கும் பசுமை படர்ந்து பழமும் பிஞ்சுமாய்க் கிடந்த அந்தத் தோட்டத்தைப் பார்த்தபோது அவனால் கவலையைத் தாங்க முடியவில்லை.

மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை, சில மாதங்களில் முத்தம்மாவைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவு எல்லாமே நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவனுள் எழுந்தது.

“இல்லை.. இல்லை.. எப்பிடியும் கெதியாய் திரும்பி வருவம்” எனத் தனக்குள் சொல்லியவாறே சைக்கிளை எடுத்தான்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 26

பரமசிவம்பிள்ளையின் குடும்பத்தினர் பெரியமடுவுக்கு வந்து சேர நேரம் காலை பதினொரு மணியைத் தாண்டிவிட்டது. பெரியமடுக்குளத்துக்கு அண்மையில் நின்ற ஒரு கிளைவிட்டுப் படர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினார் பரமசிவம். மாடுகளை அவிழ்த்து குளத்தில் தண்ணீர் காட்டிவிட்டு புற்கள் நிறைந்த இடத்தில் மேயக் கொண்டு போய்விட்டார்.

நான்கைந்து ஊர்களின் மக்களை அந்த சிறிய கிராமத்தில் அடக்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. எனினும் அந்த ஊர் மக்கள் தங்கள் காணிகளில் எல்லோருக்கும் இடம் கொடுத்தனர். ஒவ்வொரு காணிகளிலும் பதினைந்து இருபது குடும்பங்கள் தங்க வேண்டியிருந்தது.

பரமசிவத்துக்குத் தெரிந்தவர்கள் பலர் அந்த ஊரில் இருந்த போதிலும் அவர் எங்குமே போகவிரும்பவில்லை. அந்த ஆலமரமே போதும் என அவருக்குப்பட்டது.

பார்வதி சில பொருட்களை மட்டும் இறக்கி சமையல் வேலையை ஆரம்பித்தாள். அவள் சட்டிபானையைக் கொண்டு போய்க் குளத்தில் கழுவி விட்டுத் திரும்பிய போது பெருமாள் குடும்பமும் அங்கு வந்துவிட்டனர். பெருமாள் நடந்த களைப்பில் ஒரு ஓரமாய்ப் படுத்துவிட்டார். வேலாயியும் முத்தம்மாவும் சமையலுக்கு உதவி செய்யத் தொடங்கினர். சுந்தரம் விறகு தேடிக் கொண்டுவந்து போட்டான்.

சற்று நேரத்தில் முருகேசர், கதிரேசு, கடைக்கார முத்தையா, முருகரப்பு, சோமர் எனப் பலரும் வந்து சேர்ந்துவிட்டனர். பார்வதி அவர்களைக் கண்டதுமு எல்லோருக்கும் சேர்த்து அரசி போட்டாள். வேலாயி மரக்கறிகளை எடுத்து வெட்டி ஒரு சாம்பார் செய்யும் வகையில் தயார்ப்படுத்தினாள்.

முருகேசர் கூட்டத்தினர் ஆலமர நிழலில் ஒரு ஓரமாகப் போய் இருந்து கொண்டனர். எல்லோருமே வெகு விரைவில் பாலம்பிட்டிக்குத் திரும்பிவிட முடியும் என நம்பினர். ஆனால் அது எப்போ என்பதை ஊகிக்க முடியாமல் அவர்கள் தடுமாறினர்.

முருகேசர் ஒரு பெருமூச்சுடன் சொன்னார், “இரண்டு பிள்ளையள் வெளிநாட்டிலை உழைச்சுமென்ன கடைசியாய் ஆலமர நிழல் தான் கிடைச்சுது!”, என்றார்.

முருகர் ஒரு கேலிச்சிரிப்புடன், “ஒரு பொடியனையெண்டாலும் போராட விட்டிருந்தியெண்டால் சில வேளை ஊரை விட்டு ஓடி வேண்டி வந்திராது”, எனச் சொன்னார்.

முருகேசர் பாய்ந்தார், “இப்ப என்ரை ஒரு பொடியன் இல்லாதது தான் பெரிய குறை?”

“உன்ரை ஒரு பொடியன் மாதிரி கன ஒரு பொடியள் சேர்ந்தால் ஒரு படையல்லே?”

முருகேசர் எதுவுமே பேசவில்லை. முருகரப்புவை ஒரு முறை முறைத்துப் பார்த்தார்.

அந்த நேரத்தில் பரமசிவம், “அதை விடு முருகரப்பு, எப்ப வீட்டுக்கு திரும்புவம் எண்டு நீ நினைக்கிறாய்?” எனக் கேட்டார்.

“நீ இருந்து பார் ஒரு கிழமையிலை எங்கடை பொடியள் விளாசித் தள்ளி விடுவங்கள். பிறகு நாங்கள் ஊரிலை போய் நிம்மதியாய் இருக்கலாம்”.

“ஒரு கிழமையிலை முழு மிளகாய்க் கொப்புகளையும் குரங்குகள் முறிச்சுப் போடும். பழங்களக் கிளியள் விடாது”, என்றார் பரமசிவம் ஏக்கத்துடன்.

இப்படியாக ஒவ்வொருவரும் தமது சோகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு மணியளவில் சமையலும் முடியும் நிலையை நெருங்கிவிட்டது.

அதைக் கவனித்து விட்ட சுந்தரம், “முத்தம்மா.. மேசைக் கத்தியை எடுத்து வா.. சாப்பிட, குளத்திலை போய் சாப்பிடத் தாமரை இலை வெட்டி வருவம்”, என்றான்.

அவளும் கத்தியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

சுந்தரம் நீருக்குள் இறங்க அவளும் பின்னால் போனாள்.

“பாவாடை நனையப் போகுது. மடிச்சுக் கட்டிப்போட்டு இறங்கு”, என்றான் சுந்தரம்.

அவள் கேலியாக முகத்தைச் சுளிச்சுவிட்டு, “என்ரை பாவாடையிலை அவ்வளவு அக்கறையே.. அது நனையட்டும்”, என்றாள்.

“அது பாவமில்லை. நீ பாவம் ஈரத்தோட திரிவாய் எண்டதுக்குச் சொன்னன்”

“நான் ஈரப்பாவாடையோட நிண்டால் எனக்கு தடிமன் வராது”

“அப்பிடியே.. தடிமன் வந்தால் நல்லது தானே!’

“நான் தடிமனிலை அவதிப்பட்டால் உங்களுக்கு நல்லதே?”, அவள் பொய்க் கோபத்துடன் கேட்டாள்.

“பின்னை.. நான் தொண்டையிலையும் நெத்தியிலையும் சித்தாலேப போட்டு விடலாமெல்ல?”

“தொட விட மாட்டன். இப்ப இலையை வெட்டுங்கோ”

“தடிமன் வரட்டும். தொடுறனோ இல்லையோ பார்”, எனச் சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டு அவன் இலைகளை வெட்ட ஆரம்பித்தான். அவள் வாங்கி தன் கைகளில் அடுக்கிக் கொண்டாள்.

இருவரும் திரும்பி வந்த போது பார்வதி சோற்றை ஒரு பெரிய சட்டியில் போட்டு சாம்பாரை ஊற்றி நன்றாகப் பிசைந்து கொண்டிருந்தாள்.

சுந்தரம் இலைகளைக் கொண்டு போய் ஒவ்வொருவரிடமும் கொடுக்க அவர்கள் அவற்றை வாங்கிக் கொண்டு பார்வதியைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். அவள் உருண்டைகளாகத் திரட்டி ஒவ்வொரு இலையிலும் வைத்தாள்.

முருகர், “இரவைக்கும் அன்னதாம் இருக்குமோ?”, எனக் கேட்டார்.

“அரிசி முடியுமட்டும் இருக்கும்.. அதுக்குப் பிறகு வேறை வழி பாப்பம்” என்றார் பரமசிவம்.

“அரிசி முடிய முந்தி ஊருக்குப் போடுவம்”, என்றார் முருகேசர் மிகுந்த நம்பிக்கையுடன்.

அவர்கள் எவருமே காலையில் எதுவுமே சாப்பிடவில்லை. பார்வதியின் சோற்றுக் குழையலை உண்டு முடித்ததும் அவர்களையறியாமலே உடலை ஒருவித சோர்வு பற்றிக் கொண்டது. பரமசிவம் தான் கொண்டுவந்த பாய்களை எடுத்து தன் நண்பர்களிடம் கொடுத்தார்.

எல்லோருமே ஆலமரச் சருகுகளைத் தடிகளால் தட்டி ஒதுக்கிவிட்டு பாய்களை விரித்துப் படுத்துக் கொண்டனர். ஆலமர நிழலும், குளத்து நீரை வருடி வீசிய மெல்லிய குளிர்மையான காற்றும் அந்த இடம்பெயர்ந்த அவலத்திற்குள்ளும் ஒரு சுகத்தைக் கொடுத்தன. சிறிது நேரத்தில் அனைவரும் கண்ணயர்ந்து விட்டனர்.

சாப்பிட்டு முடிந்த சுந்தரம் தாயிடம், “அம்மா.. றேடியோவை விட்டிட்டு வந்திட்டன். போய் எடுத்து வரட்டே?”, எனக் கேட்டான்.

“அம்மா.. நான் கவனமாய்ப் பாத்துப் போவன்.. றேடியோ இல்லாட்டில் இருண்டது விடிஞ்சது தெரியாது”, என்றான் சுந்தரம்.

பார்வதி சற்றும் கூட மனமின்றியே அவனுக்கு அவனின் பிடிவாதம் காரணமாக விடை கொடுத்தாள். முத்தம்மாவும் கூட அவன் போவதை விரும்பவில்லை. ஆனால் அவள் தடுக்க முயன்றாள் மற்றவர்கள் தங்கள் காதலைக் கண்டுபிடித்துவிடக் கூடும் என்ற அச்சத்தில் அவள் எதுவுமே பேசவில்லை.

சுந்தரம் சென்று ஒரு அரை மணி நேரத்திற்குள்ளாகவே பாலம்பிட்டிப் பக்கமிருந்து பெரும் வெடியோசை எழுந்தது. அந்தப் பெரிய ஆலமரத்தையே அந்த ஒலி அதிர வைத்தது போல் தோன்றியது.

கிபிர் விமானம் ஒன்று காட்டு மரங்களுக்கு மேலால் சீறிக்கொண்டு பேரிரைச்சலுடன் வானை நோக்கி மேலெழுந்தது. மறுபுறத்திலிருந்து வந்த இன்னொரு விமானமும் குண்டுகளைத் தள்ளியது. மேலெழுந்த விமானங்கள் மீண்டும் ஒரு சுற்று வந்து குண்டகளைத் தள்ளிவிட்டு வானில் மறைந்தன.

நல்ல தூக்கத்திலிருந்த பரமசிவமும் நண்பர்களும் முதல் குண்டோசையிலேயே திடுக்குற்று விழித்துவிட்டனர். அவர்கள் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு நிற்கும் போதே விமானங்கள் தங்கள் வெறியாட்டத்தை நடத்தி முடித்துவிட்டு போய்விட்டன.

காட்டுமரங்களுக்கு மேலால் கரும்புகை மண்டலங்கள் எழுந்து வானில் பரவின.

முருகரப்பு அவற்றைப் பார்த்துவிட்டுச் சொன்னார், “பாலம்பிட்டிப் பக்கம் தான் அடிச்சிருக்கிறாங்கள்”

பார்வதி பதைபதைப்புடன் ஓடி வந்தாள்.

“ஐயோ.. தம்பியல்லே.. றேடியோவ எடுத்துவரவெண்டு அங்கை போட்டான்”

அவள் அதைச் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே பாலம்பிட்டிப் பக்கம் தொடர் எறிகணைகளின் அதிர்வுகள் கேட்க ஆரம்பித்தன.

பார்வதி நடுங்க ஆரம்பித்தாள்.

பரமசிவமும் நண்பர்களும் குளக்கட்டில் ஏறி நின்று பாலம்பிட்டிப் பக்கம் பாய்ந்தனர். எறிகணை அதிர்வுகளை விட வேறு எதையுமே விளங்கிக் கொள்ள முடியவில்லை.

முருகரப்பு நன்றாகக் காதைக் கொடுத்துக் கேட்டுவிட்டு, “ரண்டு பக்கமிருந்தும் செல் போகுது.. ஆமி முன்னேறப் பாக்கிறான் போல கிடக்குது”, என்றார்.

முருகேசர் பதட்டத்துடன், “இஞ்சையிருந்தும் இடம்பெயர வேண்டி வருமோ?”, எனக்கேட்டார்.

“பாப்பம்.. எப்பிடியெண்டாலும் எங்கடை பெடியள் விடாங்கள்”, என்றார் முத்தையா.

பரமசிவத்தால் அவர்களின் உரையாடலில் கவனம் செலுத்த முடியவில்லை. அவரின் மனதில் சுந்தரம் பற்றிய பயமே மேலோங்கியிருந்தது.

பரமசிவம் முருகரிடம், “அப்பு.. நாங்கள் இரண்டு பேரும் போய் இவன் சுந்தரத்தைப் பாத்து வருவமே?”, எனக் கேட்டார்.

“விசர் கதை கதைக்கிறாய்.. செல் மழை போலை பொழியுது.. உதுக்கை போனால் மேனைக் காணமாட்டாய். யமனிட்ட தான் போவாய்”

“மனம் கேக்குதில்லையப்பு”

“அவன் எங்கையெண்டாலும் பங்கருக்கை இருந்திட்டு வருவன். நீ பதறாதை!”, என ஆறுதல் சொன்னார் முருகப்பர்.

எறிகணை வீச்சு ஐந்து மணியளவில் ஓய்வுக்கு வந்தது.

பரமசிவமும் முருகரும் சுந்தரத்தைத் தேடிப் புறப்பட பாலம்பிட்டிப் பாதையில் இறங்கிய போது தூரத்தில் சுந்தரம் வேகமாகச் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவனின் மேற்சட்டை சாரமெல்லாம் இரத்தமயமாகியிருந்தது.

முருகர் கேட்டார், “என்னடா தம்பி காயமே?”

களைப்பு அவனை எதுவுமே பேசவிடவில்லை. பரிதாபமாக அவன் முருகரின் முகத்தைப் பார்த்தான்.

“சரி.. சரி.. வா.. கொம்மாவடிக்குப் போவம்”, எனச் சொல்லியவாறே பரமசிவம் முன்னால் நடந்தார்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

 
‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ – அங்கம் – 27

வானொலிப் பெட்டியை எடுத்துவருவதற்காகச் சுந்தரம் பாலம்பிட்டிக்குப் போய்ச் சேர்ந்த போது ஊர் வெறிச்சோடிப் போய்க்கிடந்தது. எந்த ஒரு போராளியையோ, படையினரையோ கூடக் காணக்கிடைக்கவில்லை. அங்கு நிலவிய மயான அமைதி அவனை அச்சமடைய வைத்தது. போர் இடம்பெற்று முடிந்த இரத்தம் இன்னும் காய்ந்து விடாத எத்தனையோ களங்களுக்கு எத்தனையோ தடவைகள் போராளிகளுக்கு உதவியாகப் போய் வந்திருக்கிறான்.அப்போதெல்லாம் பயம் அவனை நெருங்கியது கிடையாது. ஆனால் தான் பிறந்து வளர்ந்த வீடு, ஊர் என்பனவே அவனை மனித ஜீவன்கள் காணப்படாத வெறுமையால் மிரட்டிக் கொண்டிருந்தன. முற்றத்துப் பாலையில் எந்தநேரமும் கலகலத்துக் கொண்டிருக்கும் குருவிகளைக்கூடக் காணக்கிடைக்கவில்லை.

வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே போய் வானொலிப் பெட்டியைத் தேடி எடுத்து தோளில் கொழுவிக் கொண்டான். வெளியே, ‘ம்மா’, என்ற குரல் கேட்டு ஓடிந்தான். அது அவர்களின் செங்காரிப் பசுவின் குரல் தான். அந்த அழைப்புக் கூட பலவீனமாகக் கேட்பதாகவே அவனுக்குத் தோன்றியது.

அவனைக் கண்டதும் அது மெல்ல அசைந்துவந்து அவனின் கையை நக்கியது. அதன் பார்வை, “என்னைவிட்டிட்டு போக உங்களுக்கு என்னண்டு மனம் வந்தது?’, எனக் கேட்பது போலிருந்தது. அவன் மெல்ல அதன் தலையை வருடிக்கொடுத்தான்.

திடீரென சற்றுத் தொலைவில் கேட்ட அதிரவைக்கும் வெடியோசையும் அதையடுத்துக் கேட்ட கிபிர் விமானத்தின் பேரோசையும் அவனைத் திகைக்க வைத்துவிட்டன. ஏற்கனவே அவர்கள் தயார்ப்படுத்தி வைத்திருந்த பதுங்குகுழிக்குள் ஓடிப்போய் படுத்துக்கொண்டான்.

இரு விமானங்களும் எட்டுக் குண்டுகளைப் போட்டுவிட்டு வானில் மறைந்த பின்பு அவன் பங்கரை விட்டு வெளியே வந்து பார்த்தான். செங்காரிப் பசுவின் பால்குடிக் கன்று வேலிக்கரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தது. செங்காரி கத்திக் கொண்டு அதனைச் சுற்றிச் சுற்றிவந்தது.

அருகே சென்று பார்த்தான். கன்று இன்னமும் சாகவில்லை. அதை என்ன செய்வது என அவனால் தீர்மானிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் மீண்டும் எறிகணை வீச்சு தொடங்கிவிட்டது. அவனுக்கு சிந்திக்க நேரமிருக்கவில்லை. அப்படியே கன்றை கட்டிப்பிடித்து தூக்கியவாறு பதுங்குகுழியில் இறக்கிவிட்டான்.

எறிகணைத் தாக்குதல் ஓய ஏறக்குறைய மூன்று மணித்தியாலங்கள் கடந்துவிட்டன. அது வரை தனது உயிர் பற்றிய அச்சத்தில் தவித்த அவன் எறிகணை வீச்சு முற்றாக நின்றவிட்டதென்பதை உறுதி செய்த பின் கன்றை புரட்டிப்பார்த்தான். அது இறந்துவிட்டிருந்தது. அதைத் தூக்கி வெளியே போட்டுவிட்டு அவன் தானும் மேலேறி வந்தான். எப்படியாவது மாட்டையாவது கொண்டு செல்லும் எண்ணத்துடன் அதன் கழுத்துக் கயிற்றைப் பிடித்து இழுத்தான். அது கன்றை விட்டு வர மறுத்து முரண்டுபிடித்தது.

வேறு வழியின்றி சைக்கிளை எடுத்துக் கொண்டு பெரியமடு நோக்கி வேகமாக மிதிக்க ஆரம்பித்தான்.

பரமசிவத்துக்கும் முருகரப்புவுக்கும் பின்னால் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்த சுந்தரத்தைக் கண்டதும் பார்வதி ‘ஓ’ வென அலறிவிட்டாள்.

“எங்கை மோனை காயம்?”, எனக் கேட்டு அவனின் மேனியெங்கும் தடவ ஆரம்பித்தாள். முத்தம்மா அழுகையை அடக்க முடியாமலும் அவனருகில் போய் விசாரிக்கவும் முடியாமலும் தவித்தாள். இப்போ சுந்தரத்தின் களைப்பு ஓரளவுக்கு குறைந்துவிட்டது. அவன், “எனக்கு காயமில்லையம்மமா.. எங்கடை கண்டுக்குட்டி செத்துப் போச்சுது.. இது அதின்ரை இரத்தம்”, என்றான்.

அவன் நடந்தவற்றை நாலுவரியில் சொல்லிமுடித்தான்.

“மிச்சத்த பிறகு கதைப்பம்.. நீ போய் முதல் குளிச்சிட்டு வா”, என்றவாறே பார்வதி வேறு ஒரு சாரத்தை எடுத்து நீட்டினாள். அவன் அதை வாங்கிக் கொண்டு குளத்தை நோக்கி நடந்தான்.

அவனுக்குப் பின்னால் போய் அவனுடன் கதைக்க வேண்டும் போன்ற ஒரு தவிப்பு முத்தம்மாவுக்கு ஏற்பட்ட போதும் அதை அவள் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

ஆனால் அவன் சவர்க்காரம் கொண்டுபோகவில்லை என்பது நினைவுக்கு வரவே அவள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்தாள்.

“அம்மா.. அவர் சவர்க்காரத்தைக் கொண்டு போகேல்ல. உடுப்பெல்லாம் இரத்தமெல்லே?”, எனக் கேட்டாள் அவள்.

“கொண்டு போகேல்லயே… பிள்ளை நல்லாய் பதகளிச்சுப் போனான்.. அதைக் கொண்டு போய்க் குடுத்திட்டு ஓடி வா”, என்றாள் பார்வதி.

தன் எண்ணம் சுலபமாக நிறைவேறிய மகிழ்ச்சியுடன் அவள் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு குளத்தை நோக்கிப் போனாள்.

குளக்கரைக்கு அவள் வந்த போது அவன் தண்ணீருக்குள் இறங்கிவிட்டான்.

“அம்மா.. சவர்க்காரம் தந்துவிட்டவா”, என எட்டி அவனிடம் நீட்டினாள் அவள்.

“கொண்டா..”, என அவன் கையை நீட்டிய போது எட்டாமல் இருக்கவே, இறங்கித் தாவன்”, என்றான்.

அவன் சவர்க்காரத்தை வாங்கி உடலில் தேய்த்தவாறே கேட்டான். இண்டைக்கு பசுக்கண்டுக்கு பட்ட குண்டுத் துண்டு எனக்குப் பட்டு நான் செத்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய்?”

“என்ன அழுவிக்கிறதில உங்களுக்கு பெரிய சந்தோஷமே?” அவளின் குரல் தளதளத்தது.

“அப்பிடியில்லை.. ஒரு கதைக்கு கேட்டன்”

அவள் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.. “ம். கழட்டிப்போட என்னட்ட தாலி கிடக்கே.. பொட்டை அழிக்கக் குங்குமமே வைச்சிருக்கிறன்”

அவனால் எதுவும் பேச முடியவில்லை. சில வினாடிகளின் பின்பு, பாலம்பிட்டி போனவுடன் முதல் வேலை உனக்குத் தாலி கட்டுறது தான்”, என்றான்.

“போவமே?”, அவள் ஏக்கத்துடன் கேட்டாள்.

“ஓம். போவம்!”, அவன் குரல் உறுதியால் கனத்தது.

முருகேசர் கொண்டுவந்த கௌபி தான் எல்லோருக்கும் அன்றைய இரவு உணவாகியது. கௌபியை அவித்து அதற்குள் வெங்காயம், செத்தல் மிளகாய் என்பவற்றைத் தாளித்து பார்வதி நல்ல சுவையான உணவாக்கியிருந்தாள். நடுவில் விறகைத் தீ மூட்டிவிட்டு அனைவரும் சுற்றியிருந்து சாப்பிட்டனர்.

முருகருக்கு தங்கு வேட்டைக்குப் போகும் நாட்களில் காட்டில் இரவு உணவு சாப்பிடும் நினைவு வந்தது. போகப் போகக் காட்டுக்கும், கிராமத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமோ என்ற எண்ணமும் அவருக்கு எழுந்தது. ஆனால் அவர் காட்டு மிருகங்களுக்குப் பயப்பிட்டதில்லை. ஆனால் கந்தகக் குண்டுகளுக்கு எப்பிடிப் பயப்படாமல் இருக்க முடியும்? சாப்பிட்ட பின்பு எல்லோரும் புதினம் கேட்பதற்காகச் சுந்தரத்தைச் சுற்றிக் கூடிவிட்டனர். அவனும் சலிப்பில்லாமல் தான் அங்கு போய்ச் சேர்ந்தது முதல் திரும்பி வரும்வரை நடந்தவற்றை ஒன்றும்விடாமல் சொல்லி முடித்தான்.

கதிரேசர் ஆவலுடன், “தம்பி, ஆமி.. எங்கையாம் நிக்கிறாங்கள்?, எனக் கேட்டார்.

“அதைப் பற்றி எனக் கொண்டும் தெரியாது.. ஆனால் எங்கடை ஆக்களின்ர செல்லுகள் தட்சிணாமருதமடுவிலையிருந்து தான் வெளிக்கிட்டு பண்டிவிரிச்சான் பக்கமும் முள்ளிக்குளம் பக்கமும் போகுது. ஆனபடியாலை ஆமி அதுக்க தான் நிக்கவேணும்”

“எங்கடை பொடியளும் நல்லாய் செல்லடிக்கிறாங்களே?” போராளிகள் நிறைய செல்லடித்தால் இராணுவம் அச்சத்தில் திரும்பிப் போய்விடும் என்பது கதிரேசரின் நம்பிக்கை.

“ஓ.. வெளுத்து வாங்கிறாங்கள்”, என்றான் சுந்தரம்.

ஆனால் அவர்கள் நினைப்பது போன்று இலகுவான காரியமாக இருப்பதில்லை. ஒரு சிறு தாமதம் கூடப் பல போராளிகளின் உயிர்களைப் பறிப்பதுடன் ஆட்டிலறிகளையும் சிதறடித்துவிடும்.

ஒரு இடத்திலிருந்து ஆட்லறி ஏவப்பட்டால் ஒரு சிறிது நேரத்தில் அதே மையத்தில் எதிரியின் எறிகணை வந்துவிழும். அவ்வளவு தொழில் நுட்ப வசதிகள் எதிரிகளிடம் உள்ளன. எனவே ஆட்டிலறியை ஏவியதும் உடனடியாகவே அதைக் கழற்றி இடமாற்றம் செய்யவேண்டும். அதைத் தூக்கிக் கொண்டு ஓட போராளிகள் இருவர் தேவை. அதன் அடித் தட்டைத் தூக்கிக் கொண்டு ஓட நான்கு பேர் வேண்டும். சற்றுப் பிந்தினால் கூட போராளிகளும் இல்லை. ஆட்டியும் இல்லை!

ஐந்து இஞ்சிப் பீரங்கி என்றாலும் கூட இரண்டு சில்லு வண்டியில் வைத்து உருட்டி உருட்டி இடம்மாற்றி தாக்குதல் நடத்தவேண்டும்.

அவற்றைக் கூட கண்மூடித்தனமாக அடித்துவிட முடியாது.

ஏற்கனவே, “வேவு” அணி போராளிகள் எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இரகசியமாக உட்புகுந்து ‘பிக்ஸ்’ அடிப்பார்கள். அப்பணியிலும் போராளிகள் உயிரிழப்பதற்கான அபாயங்கள் உள்ளன. அந்த இலக்கை வைத்து போராளிகளின் எறிகணைகள் துல்லியமாக தாக்குதல் நடத்தும்.

குறைந்த வசதிகளுடன் எல்லா வசதிகளும் கொண்ட எதிரிகளுடன் மோத எவ்வளவு உழைப்பும் தியாக உணர்வும் தேவை என்பதை கதிரேசு, முருகேசர் போன்றோர் அறிந்திருப்பதில்லை.

முருகர் ஓரளவுக்குப் போராளிகளின் சிரமங்களை அறிந்திருந்தார். அதனால் தானோ என்னவோ போராளிகளை யாரும் குறை சொன்னாலோ அல்லது எல்லாம் வல்ல மந்திரவாதிகள் போல் கதைத்தாலோ அவருக்குக் கோபம் வந்துவிடும்.

“கதிரேசு.. பொடியள் எங்களைக் காப்பாத்த உயிரைப் பணயம் வைச்சு சண்டை பிடிக்கிறாங்கள். நீ சும்மா இதிலை இருந்து பல்லி சொல்லாத” என்றார் முருகர்.

கதிரேசு தலையை சொறிந்தவாறே”, ஏன் இப்ப கோவிக்கிறாய்? எங்கடை பொடியள் வெல்ல வேணுமெண்டு ஆசைப்பட்டால் பிழையே?”, என்றார்.

“நல்லாய் ஆசைப்படு” என்றுவிட்டு எழுந்தார் முருகர்.

ஒரு வாரகாலமாக களநிலைமை வெகு இறுக்கமாகவே இருந்தது. பண்டிவிரிச்சான் பக்கமாகவோ, முள்ளிக்குளம் பக்கமாகவோ, பரப்புக்கடந்தான் பக்கமாகவோ ஏதோ ஒரு முனையை உடைத்து முன்னேறப் படையினர் முயன்று கொண்டிருந்தனர். போராளிகளின் கடும் எதிர்புக் காரணமாக படையினரால் ஒரு அடி கூட முன் நகர முடியவில்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று போராளிகள் வீரச்சாவடைந்து கொண்டிருந்தனர்.

பண்டிவிரிச்சான் முன்னரங்கம் சிவத்தின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது. பெண்கள் அணியின் ஒரு பகுதியினரும் சிவத்தின் பொறுப்பிலேயே களத்தில் நின்றனர்.

இராணுவம் எந்த ஒரு முனையை உடைக்க விட்டாலும் போராளிகள் சுற்றி வளைக்கப்படும் அபாயம் ஏற்படும் என்பதை சிவம் நன்குணர்ந்திருந்தான்.

எனவே காவல் நிலைகளை அதி உயர் விழிப்பு நிலையில் வைத்திருந்தான். எனினும் இந் நிலையைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாதாகையால் அவன் ஒரு, ஊடுருவல் தாக்குதலுக்கோ அல்லது ஒரு அதிரடி நடவடிக்கைக்கோ கட்டளைக்காகக் காத்திருந்தான்.

அந்த நிலையில் தான் சிறப்புத் தளபதியிடமிருந்து சிவத்துக்கு அவசர அழைப்பு வந்தது.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

 
‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ – அங்கம் – 28

சிவம் காவல் நிலைகளை கண்காணிக்க அன்றிரவு சென்ற போதுதான் ரூபாவைச் சந்தித்தான். “எப்பிடி ரூபா நிலைமையள் இருக்குது?”, எனக் கேட்டான்.

“கொஞ்சம் இறுக்கம் தான்… இருபத்தி நாலு மணி நேர விழிப்பு நிலையிலை இருக்கவேண்டியிருக்குது”, என்றாள் ரூபா.

“எந்த ஒரு பக்கத்தாலையும் உடைக்க விட்டிடக் கூடாது. விட்டமெண்டால் லேசிலை திருப்பிப் பிடிக்கேலாது”

“ஓமோம்.. விளங்குது.. இந்த இடத்தின்ரை அமைவு அப்பிடி.. நாங்கள் எத்தினை பேர் வீரச்சாவடைஞ்சாலும் ஒரு அங்குலம் கூட அவனை முன்னேற விடுறதில்லை”

சிவம் ஒரு பெருமூச்சுடன் சொன்னான், “ம்.. இப்ப அதுதான் பெரிய பிரச்சினை”

“என்னது?”

“ஒரு கிழமைக்குள்ள இருபத்தொரு போராளிகள் வீரச்சாவடைஞ்சிட்டினம்.. முந்தநாள் சிறப்புத் தளபதி கூப்பிட்டு மேலிடத்திலையிருந்து கேள்வி மேல கேள்வியாய் வந்து கொண்டிருக்குது, எண்டும் எங்கடை கவனக்குறைவு தான் காரணம் எண்டும் ஏசிப்போட்டார்”

ரூபாவும் அதை ஏற்றுக் கொண்டாள்.

“ஓம் சிவம்.. ஒவ்வொரு போராளி வீரச்சாவடையிற போதும் அண்ணைக்கு இதயத்தால இரத்தம் வடியும்”

“எங்களாலையும் அதை உணர முடியுது. ஆனால் மோதல்கள் வரேக்கை இழப்புக்களைத் தவிர்கக் முடியேல்லை.. இப்பவெல்லாம் அவங்கள் முந்தி மாதிரி இல்லை. ஒருதன் விழ மற்றவன் எண்டு முன்னுக்கு வாறாங்கள்”

“வரட்டும், வரட்டும். எங்கட துவக்குகளுக்குத் தீனி குடுப்பம்”, என்றாள் ரூபா மிகவும் உறுதியுடன்.

சிவம் விடைபெற்றுக் கொண்டு அடுத்த காவலரண்களைக் கண்காணிக்கப் புறப்பட்டான்.

அவன் தளபதியைச் சந்திக்கப் போனபோது பெரும் எதிர்பார்புடனேயே போயிருந்தான். ஏதோ ஒரு அதிரடி நடவடிக்கை தொடர்பாகவோ ஊடுருவல் தாக்குதல் தொடர்பாகக் கலந்துரையாடவே தாங்கள் அழைக்கப்பட்டதாக எண்ணியிருந்தான். ஆனால் அவர் அவை பற்றி எதுவுமே பேசவில்லை. மாறாக பாதுகாப்பைப் பலப்படுத்துவது தொடர்பாகவும் போராளிகளின் இழப்புக்களைத் தவிர்ப்பது பற்றியுமே கதைத்தார். சிவம் ஏமாற்றத்துடனும் கண்டனம் வேண்டிய கவலையுடனுமே திரும்பியிருந்தான்.

அவன் அவ்விடத்திலிருந்து அகன்ற சில நிமிடங்களிலேயே ரூபாவின் வோக்கி இயங்க ஆரம்பித்தது.

“ரூபா.. ரூபா.. கணேஸ்.. ரூபா… ரூபா.. கணேஸ்.”

“கணேஸ்.. கணேஸ்.. ரூபா”

“ரூபா.. எப்பிடி இருக்குது நிலைமையள்?”

“ஒவ்வொரு நாளும் மோதல் தான்.. ஒரு அங்குலம் கூட முன்னேற விடுறதில்லை எண்ட முடிவோடை போராடுறம்”

கணேசிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிவந்தது. வோக்கியில் கேட்பது அவன், “உங்கை சண்டை நடக்க இஞ்சை நான் கட்டிலிலை படுத்திருக்க நித்திரை வருகுதில்லை. என்ன செய்யிறது இடுப்புக்கு கீழ இயங்காது எண்டிட்டினம்”

நோயுற்று இயலாத நிலையிலும் அவனுள் கொழுந்துவிட்டெரிந்த அவனின் நினைவுகள் அவளை மெய் சிலிர்க்க வைத்தன. ஆனால் தன்னைப்பற்றி அன்புடன் விசாரிக்கமாட்டானா என்ற ஏக்கமும் அவளுள் எழாமல் இல்லை. எனினும் அவள், “நீங்கள் கவலைப்படாதேங்கோ.. உங்களுக்காகவும சேர்த்து நான் சண்டைபிடிக்கிறன்”, என்றாள்.

“நல்லது, நல்லது.. அப்பிடித்தான் இருக்கவேணும்!”, என்றுவிட்டு வோக்கி உரையாடலை முடிவுக்கு கொண்டுவந்தான் கணேஸ்.

அன்பான நாலு வார்த்தைகளுக்காக ஏங்கிய அவளின் மனம் ஏமாற்றமடைந்த போதிலும், அவனது குரலை பல நாட்களின் பின்பு கேட்டது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஒரு உயர்ந்த இலட்சத்தியதுக்கான பயணத்தின் போது தோன்றிய காதல்கூட அந்த இலட்சியங்களுக்குச் சேவை செய்யும் ஒரு ஆயுதமாக மிளிர்வதை உணர்ந்த போது ஏதோ ஒரு விதமான பெருமை அவளின் நெஞ்சை நிறைத்தது.

இரவுக் காட்டிச் சாதனத்தின் ஊடாக காவல் நிலையின் முன்பகுதியை நோக்கிக் கொண்டிருந்த மலையவன், “டேய்.. மலையாண்டியண்ணை!”, என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். வதனி தேனீர் கேத்தலுடன் நின்று கொண்டிருந்தாள்.

அவள் தான் கொண்டு வந்த குவளைகளில் தேனீரை ஊற்றி மலையவனிடமும் மற்ற இரு போராளிகளிடமும் கொடுத்துவிட்டு,

“தேத்தண்ணியைக் குடிச்சிட்டு வாய் பாத்துக் கொண்டிராமல் வடிவாய் சென்றி பாருங்கோ” என்றாள்.

“என்னண்டு உன்ரை வாயைப் பாக்கிறது.. நீ போகேக்க கொண்டு போடுவியே”, என்றான் மலையவன் சிரித்தவாறே.

அவள் வெற்றுக் குவளைகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டாள்.

போராளிகள் மூவரும் அவளுக்கு புன்னகையுடன் விடைகொடுத்தனர்.

அவள் சென்று சில நிமிடங்களில்.. “ஐயோ.. அண்ணா.. என்னை ஆமி பிடிச்சிட்டான்… காப்பாத்துங்கோ..”, என்ற வதனியின் அவலக்குரல் ஒலித்தது. மலையவன் படபடப்புடன் இரவுக் காட்டி சாதனத்தை எடுத்து முன் பகுதியை நோக்கினான். வதனி நிலத்தில் விழுந்து காலை உதறிப் போராட அவளின் இரு கரங்களையும் பிடித்து இழுத்துக் கொண்டு இராணுவத்தினர் இருவர் ஓடிக்கொண்டிருந்தனர். சாக்கு மறைப்புக்குக் கீழால் இரகசியமாகப் புகுந்த இராணுவ ‘றெக்கிகள்’, வதனியை மடக்கி மறைப்புக்கு வெளியே கொண்டு சென்றுவிட்டனர் என்பதை அவன் உடனடியாகவே புரிந்து கொண்டான். ஒரு கணம் கூட தாமதியாது அவன் தனது துப்பாக்கியை இயக்கினான். படையினர் இருவரும் அந்த இடத்திலேயே விழுந்துவிட்டனர். ஆனால் மறுமுனையிலிருந்து ஓடிவந்த படையினரில் ஒருவன் வதனியைக் கட்டிப்பிடித்து தனக்கு மறைப்பாக்கிக் கொண்டு பின் நகர்ந்தான்.

வதனி, கத்தினாள், “அண்ணா.. என்னைச் சுடுடா.. என்னைச் சுடு”, ஒரு சிறு இடைவெளியே இருந்தது. பற்றை மறைவிற்குள் அவளைக் கொண்டு போய்விட்டால் எதுவுமே செய்யமுடியாது. வதனியைத் தமது காம வக்கிரங்களுக்குப் பலியாக்கிவிட்டு கொன்றுவிடுவார்கள்.

வதனியைக் கட்டிப்பிடித்திருப்பவனைச் சுட்டால் வதனிக்கும் பட்டுவிடும்.

வதனி மீண்டும் கத்தினாள், “என்னைச் சுடு.. சுடு.. சுடடா”, மலையவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. அவன் துப்பாக்கியை இயக்கினான். வதனியும் படையினர் நால்வரும் சுருண்டு விழுந்தனர். மிகுதியானோர் காயங்களுடன் ஓடிவிட்டனர்.

மோதல் தொடங்கிவிட்டதெனக் கருதிய சிவம் எல்லா நிலைகளுக்கும் தயார் நிலை அறிவித்துவிட்டு, ஒரு குழுவுடன் அங்கு வந்தான். அவன் வந்த போது எல்லாமே அமைதியாகவிட்டன.

மலையவன் சிவத்திடம் விடயத்தை சொன்னான். சிவம் இரவுக் காட்டி சாதனத்தை வாங்கிப் பார்த்த போது முன்னால் இரு படையினரின் சடலங்களும் சற்றுத்தள்ளி நான்கு படையினரின் உடலங்களும் கிடந்தன. நடுவில் வதனியின் வித்துடல் கிடந்தது.

சிவம் சிறிது நேரம் அமைதியாக யோசித்துவிட்டு, “மலையவன், வதனியின்ரை வித்துடலை அவங்கள் எடுக்க விடக்கூடாது. நீங்கள் எடுக்கவும் முயற்சிக்க வேண்டாம். நாளைக்கு இரவு பாப்பம்..” என்றான்.

“சரியண்ணை..”, என்றான் மலையவன். சற்று முன்பு சிரித்துப் பேசிக் கலகலத்து, எல்லாருக்கும் தேனீர் கொடுத்த அந்தச் சின்னப் பறவையைத் தானே சுடவேண்டி நிலைமை ஏற்பட்டுவிட்டதை எண்ணிய போது அவனால் வேதனையைத் தாங்க முடியவில்லை. அவளின் உடலை மடியில் கிடத்தி, “தங்கச்சி, தங்கச்சி”, எனக் கதறி அழவேண்டும் போலிருந்தது. மற்ற இருவரையும் அவதானமாக கண்காணிக்கும்படி கூறிவிட்டு மலையவன் கண்களை மூடியவாறு காவலரண் சுவரில் சாய்ந்து கொண்டான்.

சிவம் சாக்குத் தட்டிக்குக் கீழால் அவர்கள் புகுந்த இடத்தை நன்றாக பரிசீலனை செய்தான். இருவருக்குக் கூடுதலானவர்கள் வந்திருக்கக் கூடிய தடயங்கள் தென்பட்டன. எனவே இன்னும் உட் பகுதியில் இருவர் அல்லது மூவர் மாட்டுப்பட்டிருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டான். சாக்குத் தட்டிக் கரையை நோக்கி மறைவிடங்களில் சில போராளிகளைப் படுக்கவைத்து விட்டு வேறு சில போராளிகளுடன் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினான்.

சற்று உட்பக்கமாகத் தேடிய போது செல் விழுந்து இடிந்து போயிருந்த ஒரு வீட்டிற்குள் மெல்லிய சரசரப்புக் கேட்டது. அவன் அதை அவதானிக்காதது போல் கடந்து சென்றுவிட்டு சற்றுத் தொலைவில் முன் பகுதியை கண்காணிக்கும் வகையில் ஒரு போராளியை நிறுத்தினான். பின்பு காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு பதுங்கியவாறு வீட்டின் உட் பகுதியை நோட்டம்விட்ட போது சுவரின் மறைவில் இருவர் குந்திக்கொண்டிருப்பது தெரிந்தது. உடனடியாகவே சிவம் ஒரு சுவரை மறைப்பெடுத்துக் கொண்டு ஒரு கையை மட்டும் நீட்டி டோச் வெளிச்சத்தை அவர்கள் மேல் பாய்ச்சினான். திடீரென வெளிச்சம் அவர்கள் மீது பாயவே அவர்கள் சுவரேறிக் குதித்து முன் பக்கமாக ஓடினர்.

வெளிச்சத்தில் அவர்கள் உருவங்கள் நன்றாகத் தெரியவே முன்புறமாக நின்ற போராளி இருவரையும் சுட்டு விழுத்தினான்.

வெகு அவதானமாக துப்பாக்கியை நீட்டியவாறு சிவமும் மற்றப் போராளிகளும் அவர்களை நெருங்கினர். அவர்கள் படுகாயமடைந்திருந்த போதிலும் இன்னும் இறந்துவிடவில்லை.

அவர்களின் ஆயுதங்களைக் களைந்துவிட்டு அவர்களின் கைகளைப் போராளிகள் கட்டினர். சிவம் உடனடியாகவே வாகனம் ஒன்றை வரவழைத்து அவர்களை மருத்துவப் பிரிவு முகாமிற்கு அனுப்பிவைத்தான். அவர்களை இறக்கவிடாமல் காப்பாற்றினால் அவர்களிடம் பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனச் சிவம் நம்பினான்.

மனக்குழப்பத்துடன் கண்களை மூடியவாறு சாய்ந்திருந்த மலையவனை மற்றப் போராளிகள் தட்டியெழுப்பி இரவுக்காட்டி சாதனத்தைக் கொடுத்து முன்பக்கமாகப் பார்க்கும்படி சுட்டிக்காட்டினர். அங்கு கிடந்த உடலங்களை நோக்கி ஒரு சிறு பற்றை மிக மெதுவாக நின்று நின்று அசைந்து வருவது தெரிந்தது. அது உருமறைப்புச் செய்த படையினன் என்பதை மலையவன் புரிந்து கொண்டான். இப்படியான நேரங்களில் தனி ஒருவன் வரமாட்டான் என்பதால் மலையவன் உடனடியாகத் துப்பாக்கியை இயக்கவில்லை.

அடுத்து வேறு இரு பற்றைகளும் அசைந்தன. போராளிகள் சுடத் தொடங்கினர்.

எதிர்ப்பக்கத்திலிருந்து எவ்வித பதில் சூடுகளும் வரவில்லை. ஆனால் பற்றைகளின் அசைவு நின்றுவிட்டது.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 29

அன்று இரவு இறந்த படையினரை மீட்கவும், வதனியின் உடலைக் கொண்டுபோகவும் இராணுவத்தினர் மூன்று முறை முயற்சிகளை மேற்கொண்டும் அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இம் மீட்பு முயற்சியில் படையினர் எவரும் இறந்ததாக தெரியவில்லை.அவர்கள் படுத்திருந்தவாறே நகர்வுகளை மேற்கொள்வதும், போராளிகள் சுட ஆரம்பித்ததும் இறந்தது போல பாசாங்கு செய்துவிட்டு பின்பு தாக்குதல் ஓய்ந்ததும் பின் நகர்வதும் என முயற்சிகளை மேற்கொண்டனர். வதனியின் வித்துடலை அவர்கள் கையில் போய்விடாமற் பார்ப்பதில் மலையவன் மிகவும் விழிப்புடனிருந்தான்.

இரு பகுதியினரின் காவலரண்களும் ஒன்றையொன்று பார்க்க முடியாதபடியே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சடலங்கள் கிடந்த இடமோ இரு பகுதியினராலும் பார்க்கக் கூடிய இடத்திலேயே அமைந்திருந்தது. அதனால் எந்த ஒரு தரப்பினராலும் சடலங்களை நெருங்க முடியவில்லை. அன்று இரவு எப்படியாவது வதனியின் வித்துடலை எடுப்பது என முடிவு செய்து மலையவன் சிவத்தின் அனுமதியைப் பெற்றுவிட்டான். அன்று பகல் மதிய வெயிலில் வதனியின் உடல் கிடந்து வதங்குவதைப் பார்க்க மலையவனால் மனவேதனையைத் தாங்க முடியவில்லை. தங்களுக்குத் தேனீர் தரும் கரங்களும், “டேய் அண்ணா”, என எந்த நேரமும் சட சடக்கும் வாயும் வெயிலில் வாடுவதை எப்படி அவர்களால் தாங்க முடியும்?

சிறப்புத்தளபதி தன்னை அழைப்பார் எனவும் வதனியின் சாவுக்காகத் தனக்குத் தண்டனை வழங்குவார் எனவும் மலையவன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அதை அவன் மனதார ஏற்கவும் தயாராயிருந்தான். ஆனால் அப்படி எதுவும் நடக்காதது அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

அன்று பகல் மிகவும் மெதுவாக நகர்ந்தது. அவனால் சாப்பிடக் கூட முடியவில்லை. இனி மேல் தான் தேனீர் அருந்துவதேயில்லை என தனக்குள் முடிவு செய்து கொண்டான்.

இரவு 12 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் எவரும் கண்ணயர்வில் தடுமாறும் நேரமாதலால் வதனியின் உடலை மீட்க அந்த நேரத்தையே தெரிவு செய்தான்.

தலைக் கவசத்தையும் அணிந்து கொண்டு நன்றாகவே உருமறைப்புச் செய்தவனாக அசைவதும் அசைவற்றதும் வித்தியாசம் தெரியாத வகையில் நெஞ்சினால் ஊர்ந்தவாறு நகர்ந்தான். இப்போது அவன் வதனியின் உடல் கைக்கெட்டும் தூரத்திற்கு வந்துவிட்டான்.

அருகில் செல்லாது தான் கொண்டு சென்ற கயிற்றை அவளின் காலில் சுருக்கிட்டுக் கொழுவினான். பின்பு அதை இழுத்து இறுக்கிக் கொண்டான்.

அதன் பின்பு சென்றது போலவே மெல்ல மெல்ல ஊர்ந்து காவலரண் வந்து சேர்ந்தான். பல முறை முயற்சி செய்யவேண்டிவரும் என அவன் கருதியிருந்த போதிலும் ஒரே தடவையில் விஷயம் முடிந்துவிட்டது அவனுக்கு மன நிறைவைத் தந்தது.

அவன் கயிற்றை இழுக்க ஆரம்பிக்கவே சடலம் மெல்ல அசைய ஆரம்பித்தது. இராணுவத்தினரின் காவலரணில் ஏதோ சிங்களத்தில் கத்திக் கேட்டது. மலையவன் சடலத்தை வேகமாக இழுக்க ஆரம்பித்தான். படையினர் சரமாரியாகச் சுட ஆரம்பித்தனர். இரண்டு மூன்று சூடுகள் அவள் உடலிலும் பட்டன. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. வேகமாக அவரக்ள் பார்வையில் படாத பகுதிக்கு இழுத்துக்கொண்டுவந்துவிட்டான். இராணுவத்தின் கிரனைட் லோஞ்சரிலிருந்து வந்து விழுந்த கைக்குண்டு ஒன்று வதனியின் அருகில் விழுந்து வெடித்தது.

சற்று நேரத்தில் துப்பாக்கிச் சூடு ஓயவே வதனியின் சடலத்தைக் காவலரணின் பின் பக்கமாகக் கொண்டு வந்தார்கள். மலையவன் வதனியின் தலையை தனது மடியில் கிடத்தி, “என்ரை தங்கச்சி”, என்றுவிட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டான். பின்பு தனது கையில் வெட்டி இரத்தத்தை எடுத்து அவள் நெற்றியில் பொட்டுவைத்துவிட்டு,

“வீரத்திலகம்”, என்றான்.

“சிவமண்ணைக்கு அறிவிச்சு தங்கச்சியின்ரை வித்துடலைக் கொண்டு போகச் சொல்லுங்கோ! என்றுவிட்டு எழுந்து சென்று காவலரணில் இறங்கினான் மலையவன்.

பெரியமடு, சன்னார், ஆண்டாங்குளம் ஆகிய பகுதிகளில் பலமான காவலரண்கள் அமைக்கும் வேலைகள் வேகமாக இடம்பெற்றன. அரசியல் துறைப் போராளிகள் தலைமையில் பொதுமக்களே பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர். மக்களும் மிகவும் உற்சாகமான வகையில் பங்கு கொண்டனர்.

மண் அரண்கள் நீண்ட வரிசைக்கு அமைக்கப்பட்டன. காவலரண்கள் பலமான தேக்கங்குற்றிகள் அடுக்கப்பட்டு, அவற்றின் மீது மண்மூடைகள் வைக்கப்பட்டு மிகவும் பலமான முறையில் உருவாக்கப்பட்டன.

கிபிர் தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடிப்பதற்காகவே அவ்வளவு பலமான காவலரண்கள் அமைக்கப்படுவதாக பரமசிவம் கருதினார். ஓரளவுக்கு அதில் உண்மையும் இருந்தது.

பெரிய பண்டிவிரிச்சான் தட்சிணாமருதமடு, மடுப் பகுதிகளில் உள்ள பின்னரங்கப் பகுதிகளில் பெருமளவு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. பல இடங்களிலும் பீரங்கித் தாக்குதல்களுக்கான “பிக்ஸ்” அடிக்கப்பட்டது.

இச் சம்பவங்கள் சிவத்துக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தன. கடந்த ஒரு மாதகாலமாக இராணுவத்தின் முன்னேற்ற முயற்சிகளில் போராளிகளை இழந்து கொண்டிருந்த சிவத்துக்கு இப்படியான முன்னேற்பாடுகள் மகிழ்ச்சியையே கொடுத்தன. அதாவது பின்வாங்கி இராணுவத்தை உள்ளிழுத்து பேரழிவை ஏற்படுத்தி விரட்டியடிக்கும் நோக்குடனேயே தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக அவன் கருதினான்.

தனது அணியினருக்கும் பெண்கள் அணிக்கும் ஒரு பெரும் வெற்றி ஈட்டப்போவது பற்றிய நம்பிக்கைகளை வளர்த்தான். எல்லோரும் மிகவும் உற்சாகமாகவே இருந்தனர்.

வதனியின் இறப்பின் பின்பு மலைவனின் மனம் படையினருக்கு எதிராகப் பெரும் வெறிகொண்டிருந்தது. எதிர்வரப்போகும் சண்டையில் பெரும் சாதனைகள் ஈட்டவேண்டுமெனக் கனவு கண்டான். ஒட்டுமொத்தமாகவே போராளிகளிடம் ஒரு தனி உற்சாகம் பரவியிருந்தது. எதிர்வரும் சண்டையைப் பற்றி வெகு ஆவலுடன் பேசிக்கொண்டனர்.

அன்று இரவு முழுவதும் பதுங்குகுழிகள், மண் அரண்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவிட்டு சுந்தரம் காலையில் தான் பெரியமடு ஆலடிக்குத்திரும்பியிருந்தான். பரமசிவம் தான் கொண்டு வந்த தகரங்களையும் தடிகளையும் வைத்து ஒரு கொட்டில் அமைத்திருந்தார்.

குளத்தில் போய் குளித்துவிட்டு வந்த சுந்தரத்துக்கு பார்வதி தேனீர் கொண்டுவந்து கொடுத்தாள். பசுப்பால் தேனீரையே பருகிப்பழகிவிட்ட சுந்தரத்துக்கு வெறும் தேனீர் சுவைக்க மறுத்தது. எனினும் வேறு வழியில்லாத நிலையில் குடித்து முடித்தான் அவன்.

முத்தம்மா அப்போது தான் தூக்கம் கலைந்து வெளியே வந்தாள். சுந்தரத்தின் சிவந்த கண்களைப் பார்த்த போது அவளுக்கு கவலையாக இருந்தது.

அவள், “கடுமையான வேலை போலை..?” எனக் கேட்டாள்.

“ஓ.. எல்லாம் எங்கடை பாதுகாப்புக்குத்தானே!”, என்றான் அவன்.

முருகேசருக்கு இருவார கால அகதி வாழ்வே வெறுத்துவிட்டது. அவர் சலிப்பில் மிகவும் நொந்து போயிருந்தார். அவர் சுந்தரத்தைக் கண்டதும் அருகில் வந்து, “உங்கை போட்டுவாறாய்.. எப்பவாம் ஊர்ப்பக்கம் திரும்பிறது எண்டு ஏதேனும் கதைச்சவங்களே..”, எனக் கேட்டார்.

அருகில் வேப்பங்குச்சி ஒன்றினால் பல்லைத்தீட்டிக் கொண்டிருந்த முருகரப்பு, “என்ன முருகேசர்.. எப்ப ஊருக்கு போறது எண்டது திருக்கேதீஸ்வரம் தேருக்கு போற மாதிரி பஸ்சில போய் இறங்கிற சங்கதியே… எத்தினை உயிர்ப்பலி குடுக்க வேணும் தெரியுமே?”, எனக்கேட்டார்.

அத்துடன் எதுவும் பேசாமலே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

“முருகரப்பு, மனுஷன் உண்மையான கவலையோடை கேட்குது.. நீ ஏன் அவரை நாக்கு வளைக்கிறாய்?”, என்றார் பரமசிவம்.

“ஊருக்குப் போகவேணும் எண்ட அந்தரம் ஆருக்கு இல்லை.. அதுக்காகச் சும்மா தொண தொணக்கிறதே?’

பரமசிவம், “பாவம் அந்த மனுஷன்”, என்றார்.

முருகரும் முகம் கழுவ குளத்தை நோக்கி நடந்தார்.

அன்று பகல் பொழுது எவ்வித சலனமுமின்றியே போனது.

ஆனால் அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கே எறிகணை வீச்சு ஆரம்பித்துவிட்டது. வழமையிலும் பார்க்க அன்று எறிகணைகள் சில நிமிடங்கள் கூட இடைவெளியின்றி தொடர்ச்சியாக வீழ்ந்து கொண்டிருந்தன. சில எறிகணைகள் பெரியமடுவின் எல்லையிலும் விழ ஆரம்பித்தன. அவை வந்து விழும் விதம் ஏதோ எறிகணைகளால் வேலியமைப்பது போலவே தோன்றியது.

அந்த ஊரைச் சேர்ந்தவர்களும், இடம்பெயர்ந்து வந்தவர்களும் எறிகணை வீச்சு ஆரம்பமான கையுடனேயே விழித்தெழுந்து விட்டனர். அனைவரும் பயந்து விழிகளுடன் குந்திக்கொண்டிருந்தனர்.

முருகேசர் பதட்டத்துடன் ஓடிவந்தார், “பரமசிவம்.. இஞ்சையிருந்தும் வெளிக்கிடவேண்டிவரும் போல கிடக்குது”,

“ஓமண்ணை, எதுக்கும் விடியட்டும் நிலைமையைப் பார்த்துச் செய்வம்” என்றார் பரமசிவம். இன்னொரு இடம்பெயர்வு என நினைத்த போதே அவருக்கு மனம் கசந்தது. எனினும் என்ன நிலைமை ஏற்பட்டாலும் தாங்கள் தானே அனுபவிக்க வேண்டும் என நினைத்து அவர் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார். அதே நேரத்தில் இப்படியான அகோர எறிகணைகள் மத்தியிலும் களத்தில் நின்று போராடும் தன் மகன் சங்கரசிவத்தின் நினைவும் அவருக்கு வராமல் இல்லை. அவர் அதை இப்போது நினைவுபடுத்தி பார்வதியின் மனதைத் தவிக்கவைக்க விரும்பாதபடியால் அதைப்பற்றி அவர் எதுவுமே பேசவில்லை. ஆனால் பார்வதியின் நெஞ்சு முழுவதும் சிவம் பற்றிய எண்ணங்களே குமைந்து கொண்டிருந்தன. அவளும் அதை வெளியே சொல்லி பரமசிவத்துக்கு கவலையைக் கொடுக்க விரும்பவில்லை.

கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒரு பெரும் குண்டோசை பெரியமடுவையே அதிரவைத்தது. அடுத்து இன்னொரு குண்டும் இடைவெளி இன்றியே விழுந்தது. பேரிரைச்சலுடன் விமானமொன்று மேலெழ அடுத்த விமானம் வந்து இரு குண்டுகளைப் பொழிந்தது. முதல் விமானம் மேலெழுந்து வட்டமிட்டுவிட்டு மீண்டும் குண்டுகளைத் தள்ளியது. இரண்டாவதும் மீண்டும் அதே வேலையை செய்தது. காடுகளுக்கு மேலால் கரும்புகை மண்டலங்கள் எழுந்தன.

பெண்கள், “பிள்ளையாரே, பிள்ளையாரே!”, என அலறத் தொடங்கிவிட்டனர். முருகரும், பரமசிவமும் அவர்களுக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினர்.

அவலம் அத்துடன் நின்றுவிடவில்லை. கிபிர் விமானங்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து குண்டுகளை தள்ளிவிட்டன. எறிகணைகளும் தொடர்ந்து விழுந்துகொண்டேயிருந்தன.

குளத்தின் அலைகரையிலும் கட்டுப்பக்கங்களிலும் படுத்திருந்த மாடுகள் திசை தெரியாமல் பல பக்கங்களிலும் சிதறி ஓட ஆரம்பித்தன. பரமசிவத்தின் வண்டில் மாடுகள் கூட மிரண்டு கட்டையைச் சுற்றி வந்தன.

எவர் ஒரு கூட, என்ன செய்வது என முடிவெடுக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தனர். சண்டை எங்கு நடக்கிறது என்பதையும் இராணுவத்தினர் எங்கு நகர்வை மேற்கொள்கின்றனர் என்பதையும் எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

 
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 30

போராளிகளைப் பொறுத்தவரையில் களநிலை முன்னெப்பொழுதையும் விட மிகவும் நெருக்கடி மிக்கதாகவே அமைந்திருந்தன. முள்ளிக்குளம், பெரியபண்டிவிரிச்சான், பரப்புக்கடந்தான், அடம்பன் என நாலுபக்கங்களிலும் பெரும் இராணுவப் படையணிகள் இறக்கிவிடப்பட்டிருந்தன. எறிகணைகள் மழை போல் பொழிந்து கொண்டிருந்தன. குறிப்பாக எறிகணைகள் போராளிகளின் விநியோகப் பாதைகளில் தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருந்தன. கிபிர் விமானங்களும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளின் தாக்குதல்கள் மத்தியிலும் அடிக்கடி வந்து குண்டுகளைத் தள்ளிக் கொண்டிருந்தன.

எங்கும் பெரும் கரும்புகை மண்டலங்கள் எழுந்து கொண்டிருந்தன.

சிவம் படையினரை ஒரு அங்குலம் கூட முன்னேற விடுவதில்லை என்ற உறுதியுடன் தனது அணியை வழிநடத்திக்கொண்டிருந்தான். பெண்கள் அணியினரும் சிவத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப மூர்க்கமாகப் போராடிக்கொண்டிருந்தனர்.

கட்டளை பீடத்திலிருந்து கட்டகளைகளும் தகவல்களும் வந்து கொண்டிருந்தன. காலை பத்து மணிவரை நிலைமை போராளிகள் பக்கம் சாதகமாகவே இருந்தது.

வீரச்சாவடைவோர், காயமடைவோரின் எண்ணிக்கை ஒன்று இரண்டிலிருந்து பத்து பதினைந்து என அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. சிவம் இயன்றவரை பாதுகாப்பாகப் போரிடும் படி போராளிகளுக்குக் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தான்.

முன்பெல்லாம் படையினர் பத்து பதினைந்து பேர் மரணமடைந்துவிட்டாலோ காயப்பட்டுவிட்டாலோ பின்வாங்கி விடுவதுண்டு. அன்று இறந்தவர்களின் உடலைக் குறுக்கே போட்டு அதன் பின்னால் படுத்துக்கொண்டு சுட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தலையை இலக்குவைத்துப் பாயும் போராளிகளின் ரவைகள் அவர்களின் தலைக் கவசங்களில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. எனினும் போராளிகளின் சூடுகள் அவர்களின் இறப்பையும் அதிகரிக்கத்தான் செய்தன.

காலை பதினொரு மணியளவில் படையினரின் தாக்குதல் எதிர்பாராத விதமாகத் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. எதிர்த்திசையில் ஒரு படையினனைக் கூடக் காண முடியவில்லை. எறிகணை வீச்சுக்களும் விமானத் தாக்குதல்களும் கூட நிறுத்தப்பட்டுவிட்டன.

எனினும் சிவம் தனது அணியினரை மிகவும் விழிப்புடனிருக்கும்படி கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான்.

முள்ளிக்குளத்தில் பெரும் படையணி குவிக்கப்படுவதாகவும் அந்தப் பக்கம் பிரதான களமாக மாறலாம் எனவும் பெரிய பண்டிவிரிச்சானிலும் பரப்புக்கடந்தானிலும் படையினர் திசை திருப்பும் சண்டைகளில் ஈடுபடலாம் எனவும் கட்டளை பீடத்திலிருந்து அறிவித்தல் வந்தது.

சிவம் தனது அணியில் ஒரு பகுதியை முள்ளிக்குளம் களமுனைக்கு அனுப்புவதற்கு அனுமதி கேட்ட போது அது மறுக்கப்பட்டுவிட்டது. மாறாக பெண்கள் பிரிவில் கீதாவின் அணியை அனுப்பும்படி கட்டளை வந்தது.

கீதாவும் ஆனையிறவுச் சமரின் போது கட்டத்தீவுப் பக்கத்தால் உள்ளிறங்கிய அணியை வழிநடத்திய அனுபவம் பெற்றிருந்தவள்.

பல சண்டைகளில் சாதனை ஈடுட்டி தலைவரின் விருதையும் பெற்றவள்.

ஆனால் காடுகளும் முட்புதர்களும் நிறைந்த முள்ளிக்குளம், கீரிசுட்டான் களமுனைக்கு அவள் பொருத்தமானவளா என்பது சிவத்திடம் கேள்வியாகவே எழுந்து நின்றது. எனினும் தலைமையின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதால் அவளின் அணியை உடனடியாகவே அனுப்பிவைத்தான்.

அதேவேளையில் எல்லாக் களமுனைகளிலும் தான் நிற்க வேண்டும் என்ற தனது பேராசையும் நியாயமற்றது என்பதைப் புரிந்து கொண்டான். கட்டளை பீடத்தின் வியுகங்கள் எப்போதும் நன்கு திட்டமிட்ட வகையிலேயே அமைந்திருக்கும் என்பதில் அவனுக்கு எப்போதுமே நம்பிக்கையுண்டு.

சண்டை ஓய்ந்திருந்த வேளையில் மலையவன் சிவத்திடம் வந்தான். அவனின் தோளில் ஒரு சிறுகாயம் பட்டிருந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் அதற்கு மருந்திட்டு கட்டுப் போட்டு விட்டுத் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டான்.

அன்று அவன் பல படையினரைக் கொன்று குவித்த மகிழ்ச்சி அவனின் முகத்தில் தெரிந்தது.

“என்ன.. மலையவன்.. இண்டைக்கு விளாசி எறிஞ்சிருக்கிறியள் போல..” எனக் கேட்டான் சிவம்.

“பின்னை.. என்ரை தங்கச்சியை என்னைக் கொண்டே சுட வைச்சவங்களை..”, என்றுவிட்டு வசனத்தை முடிக்காமலேயே பல்லை நெருமினான் மலையவன்.

“உன்ரை கோபம் நியாயமானது.. ஆனால் நாங்கள் போராளிகள். நாங்கள் தனிப்பட்ட கோபங்களுக்காகப் பழிவாங்கிறதில்லை. வதனிக்கு நடந்தது எங்கடை இனத்துக்கு நடத்தப்படுற கொடுமையின்ரை ஒரு பகுதி தான். ஒட்டு மொத்தக் கொடுமைகளையும் இல்லாமல் செய்யத் தான் எங்கட போராட்டம்”

“ஓமண்ணை.. அது சரிதான்..”, என மலையவனும் ஆமோதித்தான். அவனும் ஏற்கனவே அதை உணர்ந்திருந்தான். ஆனால் வதனியின் வீரச்சாவை எண்ணும் போது அவனால் கொதிப்படையாமல் இருக்க முடியவில்லை. “டேய்.. மலையாண்டியண்ணா”, என்ற  அவளின் அழைப்பு அடிக்கடி அவனின் காதில் கேட்டுக்கொண்டேயிருந்தது.

“சரி.. சாப்பிட்டீங்களே?”, எனக் கேட்டான் சிவம்.

“ஓமண்ணை.. இப்பதான்.. அவிச்ச கடலை கொண்டு வந்தாங்கள். ஒரு மாதிரிச் சாப்பிட்டம்”, என்றான் மலையவன் சிரித்தவாறே.

“அவங்களும் என்ன தான் செய்றது.. வாற வழியெல்லாம் ஒரே செல்லடி”, என்றான் சிவம். அப்போதுதான் தான் சாப்பிடவில்லை என்ற ஞாபகம் சிவத்துக்கு வந்தது. சாப்பாடு வைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியை நோக்கிப் போனான் அவன்.

செல்லடியும் கிபிரடியும் முடிந்து சிறிது நேரத்திலேயே பெரிய மடுவில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் அவ்விடத்தை விட்டுப் புறப்பட ஆரம்பித்துவிட்டனர். அந்த அகலம் குறைந்த சிறு வீதி மக்களால் நிறைந்துவிட்டது.

எங்கு போகிறோம் என்ற முடிவு நகர்ந்து கொண்டிருந்த எந்த ஒரு மக்களிடமும் இருக்கவில்லை. அவர்கள் நினைவில் நின்றதெல்லாம் குள்ததின் அலைகரையில் விழு்நத விமானக் குண்டும் உடல் சிதறிச் செத்துப் போயிருந்த மாடுகளும் தான்.

அவர்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்த போது பாதுகாப்பான பதுங்குகுழிகளை அமைத்திருந்தனர். ஒரு சில நாட்களில் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிவிட முடியும் என்ற நம்பிக்கையில் எவரும் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

கிபிர் விமானம் குண்டுகளைத் தள்ளிய போதெல்லாம் பிள்ளையாரையும் மடுமாதாவையும் அலறி அழைத்தவாறே நிலத்தில் விழுந்து படுப்பதைவிட வேறு வழியிருக்கவில்லை. ஊருக்குள் குண்டு எதுவும் விழாத போதிலும் கூட அவர்களால் அச்சமடையாமல் இருக்க முடியவில்லை.

சோர்ந்து போன மனதுடனும், தளர்வடைந்த உடலுடனும் முருகேசர் பரமசிவத்திடம் வந்தார்.

“பரமசிவம் சனமெல்லாம் வெளிக்கிடுது.. நாங்கள் என்ன செய்யிறது?”

“எல்லாச் சனமும் வெளிக்கிட நாங்கள் மட்டும் இஞ்சையிருந்து என்ன செய்யிறது.. போக வேண்டியது தான்”, என்றார் பரமசிவம் ஒரு நீண்ட பெருமூச்சுடன்.

“எங்கை போறது?”, எனக் கேட்டார் முருகேசர்.

“எங்கை போறது.. உப்பிடியே பள்ளமடு, இலுப்பைக்கடவை, பாலியாறு எண்டு போவம்.. ஒரு வசதியான இடம் பாத்து கொட்டில் போடுவம்”

உண்மையிலேயே எங்கு போவது என்பது தொடர்பாக பரமசிவத்துக்கும் குழப்பமாகவே இருந்தது. வீட்டில் விட்டு வந்த நெல்லுமூடை, மிளகாய் மூடை பற்றி நினைப்பதையே அவர் விட்டுவிட்டார். ஆனால் வண்டிலில் இருக்கும் நெல்லு மூடை எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் என்ற கேள்வி எழுந்து அவரை குழப்பத் தவறவில்லை.

நேரடியாகவே பாலியாற்றங்கரைக்குப் போய் அங்கு ஒரு கொட்டிலைப் போடுவதாக முடிவு செய்தார். பாலம்பிட்டிக்குத் திரும்பும்வரை ஏதாவது பயிர்வகைகளைச் செய்து காலம் தள்ளிவிட முடியும் என அவர் நம்பினார்.

பரமசிவம், முருகர், சுந்தரம் ஆகியோர் கொட்டில்களைக் கழற்றி வண்டிலில் ஏற்றினர். அவர்கள் ஏனைய பொருட்களையும் எடுத்துப் பசளைப் பைகளில் கட்டிக்கொண்டிருக்கும் போதே பார்வதியும் வேலாயியும் நெல்லை குற்றி உலையில் போட்டுக் கஞ்சிகாய்ச்சி விட்டனர்.

எல்லாப் பொருட்களையும் ஏற்றி முடித்த பின்பு, பார்வதி தேங்காய் துருவிய சிரட்டைகளில் கஞ்சியை விட்டு எல்லோருக்கும் கொடுத்தாள். பரமசிவம் இரவு எஞ்சியிருந்த சிறிதளவு சோற்றைக் கரைத்து ஒரு வாடிப்போன பிஞ்சு மிளகாயைக் கடித்துக் கொண்டு குடித்தார். பெருமாளுக்கு மெல்லிய இழுப்பு ஆரம்பித்துவிட்டதால் அவரால் கஞ்சியைக் குடிக்க முடியவில்லை. பார்வதி வலியுறுத்தி அவரை குடிக்க வைத்துவிட்டாள்.

பெருமாளையும் முருகேசரையும் பொருட்களுடன் வண்டிலில் ஏற்றிவிட்டு பரமசிவம் ஏறி சாரதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். ஏனையோர் நடையில் பின் தொடர வண்டி புறப்பட்டது. அவர்கள் தங்களின் அந்த இரண்டாவது இடப்பெயர்வை ஆரம்பித்த போது கிட்டத்தட்ட பெரியமடு என்ற அந்த ஊரே காலியாகவிட்டிருந்தது. மாட்டுப்பட்டிகள் கூட வெறிச்சோடிப் போயிருந்தன. பெரியமடுவிலிருந்து பள்ளமடுவரை சனக்கூட்டத்தால் வீதி நிரம்பிவழிந்தது. பல ஊர்களைச் சேர்ந்த பல ஆயிரம் குடும்பங்கள்  அந்தச் சிறிய மண் வீதி வழியாக மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தன. உழவுயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்கள் என மண்ணெய்யில் ஓடும் வாகனங்கள் கூட மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தன. எனினும் சைக்கிள்களில் பெரும் மூட்டைகளைக் கட்டியவாறும் கால் நடையில் தலைச்சுமைகளுடனுமே பெரும்பாலானோர் பயணித்துக்கொண்டிருந்தனர். எல்லோருமே தங்கள் தோள்களில் ஒரு பெரும் தோல்வியைச் சுமந்து செல்வதாகவே கருதி வேதனைப் பட்டுக் கொண்டு நடந்தனர்.

ஆனாலும் வெகுவிரைவில் தாங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் அவர்கள் எள்ளளவு கூட இழந்துவிடவில்லை.

கொளுத்தும் வெயிலும் காலுக்குக் கீழ் தகிக்கும் மண்ணும் தாங்க முடியாத தண்ணீர் தாகமும் வாட்டியெடுக்க அவர்கள் நடந்துகொண்டிருந்தனர்.

அந்த சனத்திரளின் மத்தியில் வண்டியைச் செலுத்துவது பரமசிவத்துக்கு ஒரு இலகுவான காரியமாகப்படவில்லை. ஒரு நிழலில் ஓரமாக வண்டியை நிறுத்தினார்.

பரமசிவம் முருகரிடம், “கொஞ்சம் சனம் குறையட்டும்.. பிறகு வெளிக்கிடுவம்”, என்றுவிட்டு வண்டியை முன் தாங்கியில் நிறுத்திவிட்டு மாட்டை அவிழ்த்து ஒரு ஓரமாகக் கட்டினார்.

அனைவரும் போய் ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டனர். பெருமாள் அப்படியே வெறும் நிலத்தில் படுத்துவிட்டதை அவதானித்த வேலாயி ஒரு பழைய சாரத்தைக் கொண்டு போய் விரித்துவிட்டாள்.

திடீரென வானத்தில் தோன்றிய கிபிர் வேகமாகத் தாழ்வாக வர ஆரம்பித்தது. அதன் பேரிரைச்சலில் காட்டு மரங்கள் கூட அதிர்ந்தன. மக்கள், “மாதாவே.. மடுமாதாவே”, எனக் கதற ஆரம்பித்தனர்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

 

 

http://tamilleader.com/?cat=141

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 31

காடுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்ற பாதையில் நீண்ட வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த மக்கள்திரளை நோக்கி தாழ்ந்து பதிந்த விமானம் குண்டுகள் எதையும் தள்ளாமலேயே பேரிரைச்சலுடன் மீண்டும் மேலெழுந்தது. வானத்தை நோக்கி மேலெழும்பிய அது மீண்டும் சற்று உயரத்தில் போய் ஒரு முறை அந்த இடத்தை வட்டமிட்டது.

“பிள்ளையாரே காப்பாத்து”, “மடுமாதாவே நீ தான் துணை”, என்றும் மக்கள் எழுப்பிய அவல ஒலி இன்னும் ஓயவில்லை.

விமானம் மேற்குப் புறமாகப் போய் வானில் மறைந்தது.

முருகேசர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் எதுவுமே பேசவில்லை. விழிகள் பயத்துடன் விமானம் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தன.

“முருகேசர்! நிலைமையைப் பாத்தால் பயத்திலையே செத்துப் போவியள் போலை கிடக்குது. உலகத்திலை சாவுக்கு மிஞ்சி ஒண்டுமில்லை. எண்டைக்கோ ஒரு நாள் சாகப்போற நாங்கள் இண்டைக்கு செத்தாலென்ன.. நாளைக்குச் செத்தாலென்ன.. சாவு வாறநேரம் வரட்டும். பயத்திலை ஒவ்வொரு நிமிஷமும் சாகாமல் தைரியமாய் இரு”, என முருகரப்பு முருகேசருக்கு ஆறுதல் சொன்னார்.

முருகர் சொல்வது அவருக்கு நியாயமாகவே பட்டது. ஆனாலும் அவரால் பயத்தில் இருந்து விடுபடமுடியவில்லை.

பரமசிவத்துக்கு சிவம் உட்பட அவனுடன் நின்று களமாடும் போராளிகள் நினைவுக்கு வந்தனர்.

“எத்தினை இளம் பொடியளும் பெட்டையளும் சந்தோசமாய் விளையாடித் திரியிற காலத்திலை வெய்யிலையும் பனியிலையும் மழையிலையும் கஷ்டப்பட்டு சரியான சாப்பாடுமில்லாமல் நிண்டு சண்டை பிடிக்குதுகள். எத்தினை பேர் செத்துக் கொண்டிருக்குதுகள். முதல் அதுகளைப் பற்றி யோசி முருகேசு”, என்றார் பரமசிவம்.

தூரத்தில் விழும் குண்டுகளைக் கண்டே தாங்கள் இப்படி நடுங்கும் போது, அந்தப் பயங்கரத்துக்குள்ளேயே நின்று போரிடும் போராளிகளை நினைத்த போது முருகேசர் தன்னையறியாமலே, “அதுகள் தெய்வங்கள்!”, என வாய்விட்டுச் சொன்னார். “இந்தாருங்கோ.. கொஞ்சம் தண்ணி குடியுங்கோ”, எனக் கூறியவாறு பிளாஸ்ரிக் கேனில் கொண்டு வந்த நீரை ஒரு குவளையில் ஊற்றி அவரிடம் நீட்டினாள் பார்வதி.

அவர் ஆவலுடன் வாங்கி ‘மட மட’வெனக் குடித்தார். அந்த வெயில் நேரத்தில் அவருக்கு அது கூட அமிர்தமாயிருந்தது. சுருண்டு படுத்துவிட்ட பெருமாளுக்கு முத்தம்மா, ‘அஸ்தலீன்’ குளிசையைப் பம்பில் போட்டு உள்ளிளுக்கக் கொடுத்தாள்.

சில நிமிடுங்களிலேயே இழுப்பு சற்று குறைவடையத் தொடங்க அவர் எழுந்து அமர்ந்து கொண்டார்.

பரமசிவம் முருகரிடம், “அப்பு.. இந்த வெயிலுக்கு மாடுகளும் பாவம். ஆறிப்போட்டு  மதியம் திரும்ப வெளிக்கிடுவம்! இரவு பள்ளமடுவிலை றோட்டுக் கரையிலை ஒரு இடம் பாத்து தங்கிப் போட்டு விடியப்புறமாய் பாலியாத்துப் பக்கம் வெளிக்கிடுவம்”, என்றார்.

முருகரும், “ஓமோம்.. பெருமாளையும் முருகேசரையும் கொண்டு இப்ப போகேலாது.. ஆறிப் போட்டு போவம்”, என்றார்.

காலையில் காய்ச்சிய கஞ்சியின் மிகுதியை பார்வதி அவதானமாகப் பானையில் வி்ட்டு தாமரை இலையால் மூடிக்கட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவள் இருந்த கிண்ணங்களிலும் குவளைகளிலும் ஊற்றி எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாள்.

“உது தான் மத்தியானச் சாப்பாடு.. சமாளியுங்கோ.. இனிப் பள்ளமடு போய்ச் சமைச்சுத் தான் அடுத்த சாப்பாடு”, எனக் கூறியபடியே பார்வதி முருகரிடம் கஞ்சியை நீட்டினாள்.

“அது பரவாயில்லை.. நீ உனக்கும் வேலாயியுக்கும் வைச்சுக் கொண்டு எங்களுக்கு ஊத்து”, என்றார் முருகர்.

கஞ்சியைக் குடித்து முடித்ததும் சுந்தரம் பரமசிவத்திடம் வந்து, “ஐயா.. நான் முன்னுக்குப் போய் ஒரு நல்ல இடமாய்ப் பாத்து புல்லைச் செதுக்கி ஆயத்தப்படுத்தட்டே?”, எனக் கேட்டான்.

“ஓ.. அதுவும் நல்லது தான்.. பள்ளமடுப் பக்கத்து புல்லு முள்ளு மாதிரி மேலிலை குத்தும்.. படுக்க ஏலாது”, என்றார்.

சுந்தரம் ஒரு மண்வெட்டியை எடுத்துத் தோளில் வைத்தவாறே,

“முத்தம்மா.. நீயும் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டுவாவன், போவம்” என அவளை அழைத்தான்.

அவள் தாயிடம், “அம்மா.. போகட்டே?, எனக் கேடடாள்.

“போ.. கவனம், சனத்துக்கை தம்பியைத் தவற விட்டிடாதை”, எனச் சொல்லி விடைகொடுத்தாள்.

தன் வாழ்க்கையிலேயே அவனைத் தவற விடுவதில்லை என முடிவு செய்திருந்த போது, சனத் திரளில் மட்டும் அவனைத் தவற விட முடியுமா? என நினைத்த போது மெல்ல அவள் முகத்தில் ஒரு புன்னகை பரவியது.

இருவரும் மக்களோடு மக்களாக நடக்கத் தொடங்கினர்.

மக்கள் வெள்ளம் மெல்ல, மெல்ல அசைந்து கொண்டிருந்த போதும்கூட அந்த வீதி திருக்கேதீஸ்வரம், தீர்த்தக் கரையை போல சன நெரிசரில் திணறிக்கொண்டிருந்தது. அதிலும் உழவு இயந்திரங்களும் மோட்டார் சைக்கிள்களும் கடக்கும்போது விலகி வழிவிடுகையில் ஒருவருடன் ஒருவர் இடிபட்டு நெரிபட வேண்டியேற்பட்டது.

எங்கே அவளைத் தவறவிட வேண்டி வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் அவளின் கையை சுந்தரம் இறுகப் பற்றிக் கொண்டான். அவள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அந்த அசாதாரண சூழ் நிலையிலும் கூட அவனின் கைப்பிடியில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் பாட்டா (செருப்பு) அணிந்திருந்த போதிலும் கூட மணல் நிறைந்த அறுத்தோடிகளைக் கடக்கும் போது, கால்கள் புதைந்து வெம்மை தகித்தன. மழை காலங்களில் உழவுயந்திரங்கள் புதைந்த தடங்கள் கால்களில் மோதி தடுக்கி விழுத்தப்பார்த்தன. அப்படி ஒரு இடத்தில் முத்தம்மா தவறாக காலை வைத்து விழவிருந்த போது சுந்தரம் அணைத்து இழுத்து எடுத்து காப்பாற்றிவிட்டான். நிலத்தில் விழுந்தால் பின்னால் வருபவர்கள் ஏறி மிதித்துவிடும் நிலை தான் அங்கு நிலவியது.

முத்தம்மாவுக்கு அவன் அணைத்த போது கூச்சத்தில் உடல் ஒருமுறை சில்லிட்ட போதும் அவள் ஒருவாறு சமாளித்தபடி,

“தடக்குப்பட்டுப் போனன்”, என்றாள்.

“பரவாயில்லை, பிடிச்சிட்டன் தானே, கவனமாய் காலை வை”, என்றுவிட்டு சுந்தரம் அவளின் கையை இறகப் பற்றியவாறே நடந்தான். அவள் தடக்குப்பட்டபோது அவளின், ‘பாட்டா’ தவறிவிட்டதை அவள் அவனிடம் சொல்லவில்லை. அப்படி சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. நகர்ந்து கொண்டிருக்கும் சன சமுத்திரத்தில் அதை எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.

சிறிது தூரம் எதுவுமே பேசாது நடந்த சுந்தரம், “பாலம்பிட்டியிலையிருந்து பெரியமடு, இப்ப பெரியமடுவிலையிருந்து பள்ளமடு, பிறகு பள்ளமடுவிலையிருந்து பாலியாறு இப்பிடியே அடுத்தடுத்து இடம்பெயர்ந்ததால் இது எங்கை போய் முடியும்?”, என அவளிடம் கேட்டான்.

அவள் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள், “எங்களுக்கு இடப்பெயர்வு எண்டாலே மரத்துப் போச்சு”

“என்ன மரத்துப்போச்சோ?”

“ஓ.. ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி மூண்டிலை எங்கடை குடும்பம் மலையகத்திலையிருந்து இடம்பெயர்ந்தது. அப்ப சிங்களக் காடையர் சித்தப்பாவை வெட்டிக்கொண்டுபோட்டாங்கள். பிறகு வவுனியாவில இருக்கேக்க நான் பிறந்தன். அங்கையிருந்து பிறகு இடம்பெயர்ந்து புவரசங்குளம் வந்தம். அடுத்த இடப்பெயர்விலை மடு வந்தம். மடுவிலை அண்ணாவைப் பறிகுடுத்தம். பிறகு தட்சினாமடு. அங்கை கிளைமோரிலை அண்ணான்ரை பிள்ளை செத்தது. இப்ப இது.. இப்பிடியே எங்கடை வாழ்க்கை சாவும் இடப்பெயர்வுமாய் போச்சுது”

சுந்தரம் திரும்பி அவளின் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் லேசாய் கலங்கியிருந்தன.

சுந்தரம் தன் கைப் பிடியை இறுக்கியவாறே, “இனி நெடுக இடம்பெயர முடியாது”,

“அப்ப…?”

“இடம் பெயராமல் இருக்க வழி தேட வேணும்”,

சுந்தரத்தின் குரலில் ஒரு உறுதி தொனித்தது. அவன் வார்த்தைகள் அவன் போராளியாக இணைவதற்கான ஒரு முன்னறிவித்தல் போலவே அவளுக்குத் தோன்றியது. அப்படி ஒரு நிலைமை வருமானால் அவனைத் தடுத்துவிட்டுத் தானே போகவேண்டும் என அவள் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.

எனினும் இருவரும் எதுவுமே பேசாமல் நடந்தனர். அவர்களின் கைகள் மட்டும் இறுகப் பிணைந்திருந்தன.

சிறு குழந்தைகள், முதியவர்கள் கூட ஒரு மாபெரும் அவலத்தின் சாட்சியங்களாக தள்ளாடி நடந்து கொண்டிருந்தனர். வெய்யில் தாங்க முடியாமல் ஒரு மூதாட்டி மயங்கிவிழுந்துவிட்டார். அவரைத் தூக்கிக் கொண்டுபோய் ஒரு நிழலில் படுத்தினர். யாரோ ஒருவர் கொண்டு வந்த நீரை அவரின் முகத்தில் தெளிக்க மெல்ல அவர் கண்விழித்தார். அவரால் பேச முடியவில்லை. அவர் குடிக்க நீர் தரும்படி சைகையால் கேட்டார். கிழவி நீரை வாங்கிக் குடித்துவிட்டு அப்படியே அந்த இடத்திலேயே படுத்துவிட்டது.

அந்தக் காட்சி முத்தம்மாவுக்கு தந்தை பெருமாளை நினைவுக்குக் கொண்டுவந்தது.பரமசிவத்தின் வண்டில் மட்டும் இல்லாவிடின் தன் தந்தையின் நிலையும் அப்படித்தான் இருந்திருக்கும் என அவள் எண்ணிக்கொண்டாள்.

ஒரு தாய் இடுப்பில் ஒரு குழந்தையுடன் நடக்க இன்னொரு பிள்ளை அவள் சேலையைப் பிடித்தவாறு நடந்து வந்தது. அந்தப் பிள்ளை வெய்யில் சூடு தாங்காமல் கதறி அழுதது.

“சனியன், கத்தாமல் வா”, என்றவாறே தாய் அதன் முதுகில் ஒரு அறை வைத்தாள். குழந்தை வெம்பியவாறே நடந்தது. அவளின் நெற்றியில் பொட்டோ கழுத்தில் மஞ்சள் கயிறோ இல்லாத நிலையில் அவள் கணவனை இழந்தவளாக இருக்கவேண்டுமென சுந்தரம் ஊகித்துக் கொண்டான்.

அவர்கள் இருவரும் பள்ளமடு வந்து சேர நேரம் பிற்பகல் மூன்று மணியைத் தாண்டிவிட்டது. களைப்பாற ஒரு மர நிழல் தேடிய போது அது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டனர். வீதிக் கரையில் வரண்டுபோய் நின்ற புவரச மரங்களின் கீழ் மக்கள் குவிந்துபோயிருந்தனர். பலர் அப்படி இடம் கிடைக்காத நிலையில் வெட்ட வெளியிலேயே குந்திவிட்டனர்.

சுந்தரம் நீண்ட தூரத்திற்குப் பார்வையை ஓட விட்ட போது எங்கும் மனிதத் தலைகளே தெரிந்தன. இரவு தங்குவதற்கு வெட்ட வெளியில் கூட ஒரு இடத்தை ஏற்பாடு செய்துவிட முடியாது போலவே அவனுக்குப்பட்டது.

ஏற்கனவே பள்ளமடுவில் பரப்புக்கடந்தான், ஆண்டாங்குளம், கறுக்காதீவு, அடம்பன் ஆகிய மக்களும் வந்து குவிந்துவிட்டனர். தள்ளாடி இராணுவம் அடம்பன் பகுதியால் முன்னேறுமானால் முழுப் போராளி அணிகளுமே சுற்றிவளைக்கப்படும் அபாயம் உண்டு. எனவே அடம்பன் மிக வலிமையாகவே பலப்படுத்தப்பட்டிருந்தது.

அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆலங்குளம் பள்ளமடு வீதியாலேயே இடம்பெயர்ந்தனர்.

அடம்பன் கள்ளியடி வீதியின் பாதுகாப்பு பல விதங்களிலும் பலப்படுத்தப்பட்டிருந்ததால் அவ் வீதியால் மக்கள் இடம்பெயர அனுமதிக்கப்படவில்லை.

எனவே வெட்ட வெளிகளெல்லாம் பள்ளமடுவில் மக்கள் குவிந்து போயிருந்தனர். அந் நிலையில் சுந்தரமும் முத்தம்மாவும் ஒரு இடம் தேடியலைந்து சோர்ந்தேவிட்டனர்.

பிரதான வீதியில் இடம் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிந்த நிலையில் விடத்தல் தீவு போகும் பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.

 

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

http://tamilleader.com/?p=14160

 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 32

 

மதிய வேளை ஓய்ந்திருந்த சண்டை பிற்பகல் நான்கு மணியளவில் மீண்டும் ஆரம்பமாகி விட்டது. அகோர எறிகணை வீச்சுடன் இராணுவத்தினர் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.

சிவத்தின் அணியினர் மிகவும் கடுமையாகவே போராட வேண்டியிருந்தது. போராளிகளின் மோட்டார் தாக்குதல் எதிரிகளைத் துல்லியமாக வேட்டையாடிய போதும் ஒருவர் விழ மற்றவர் என்ற வகையில் அவர்கள் முன்னேற்ற முயற்சிகளில் இறங்கியிருந்தனர்.

ரூபாவின் தலைமையிலான பெண்கள் அணியும் கடுமையான எதிர்ச் சமரை நடத்திக்கொண்டிருந்தது. அவள் தனித்துவமான ஆற்றலுடன் போராளிகளை வழிநடத்திக்கொண்டிருந்தாள்.

படையினரின் பெரும் எண்ணிக்கையே அவர்களுக்கு கள நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டிருப்பதை சிவம் நன்றாகவே புரிந்து கொண்டான். அந் நிலையில் பின்வாங்கி எதிரியை உள்ளிழுத்து ‘பொக்ஸ்’ அடிப்பது தங்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும் எனக்கருதினான். அது பற்றி கட்டளை பீடத்திடம் தொடர்பு கொண்ட போது ‘ஆட்டி’ தாக்குதல் அதிகரிக்கப்படும் என்றே பதில் வந்தது. சில சமயங்களில் ‘பொக்ஸ்’ அடிக்கப் போராளிகள் எண்ணிக்கை போதாமலிருக்கும் என்றும் எண்ணிக்கொண்டான்.

போராளிகளின் ஆட்டிலறி தாக்குதல்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவை எதிரியின் முன்னரங்கில் விழாமல் பின் பகுதியில் விழுந்தன. முன் வரிசையில் நின்று போரிட்ட படையினர் பின் அணியிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதையும் சிவம் புரிந்து கொண்டான்.

இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்த முடிவு செய்த சிவம் தனது அணியினரை மூர்க்கத்தனமாகத் தாக்கும்படி கட்டளையிட்டான். அதே அறிவித்தலை ரூபாவுக்கும் கொடுத்தான்.

களமுனை புதிய உத்வேகம் பெற்றது.

பின்புறமாக எறிகணை வீச்சு, முன்புறமாக அகோரத் தாக்குதல் எனப் படையினர் தடுமாற வைக்கப்பட்டனர். அவர்களை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்த எறிகணை வேலி அவர்களை முன்னோக்கித் தள்ளியது. போராளிகளோ வெகு நிதானமாக ஒவ்வொருவராய் சுட்டு விழுத்திக் கொண்டிருந்தனர்.

தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதைப் புரிந்து கொண்ட படையினர் பலர் எறிகணைகளையும் பொருட்படுத்தாமல் பின் நோக்கி ஓடினர். அதிலும் ஏராளமானோர் செத்தும் காயமுற்றும் விழுந்தனர்.

சிவத்தின் அணியினரையும் ரூபாவின் அணியையும் எறிகணை வேலிவரை மட்டுமே முன்னேறி சமர்க்களத்தை அந்த இடத்துக்கு நகர்த்தும்படி கட்டளை வந்தது.

முன் அணியினர் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டிருக்க பின்னால் மிக வேகமாகக் கண்ணிவெடிப் பிரிவினர் பொறிவெடிகளையும் வாகனக் கண்ணிவெடிகளையும் புதைக்க ஆரம்பித்தனர்.

நன்றாக இருட்டிய நிலையில் சண்டை ஓய்ந்தது.

இரு அணியினரையும் முன் நின்ற இடத்துக்கு பின் கொண்டுவரும்படி சிவத்துக்கு கட்டளைப் பீடத்திலிருந்து ஆணை வந்தது. இரு அணியினரும் எவ்வித அறிகுறியும் வெளியே தெரியாதவாறு பின்வாங்கினர்.

படையினர் தொடர்ந்து பரா வெளிச்சத்தை அடித்துக் கொண்டிருந்தனர்.

பரமசிவத்தின் வண்டில் பள்ளமடுவை அடைந்த போது கதிரவன் மறைந்து இருள் பரவ ஆரம்பித்துவிட்டது. சுந்தரமும் முத்தம்மாவும் வீதியில் வந்து அவர்களின் வரகாகவுக்காக காத்து நின்றனர். வண்டிலைச் சுந்தரம் தூரத்தில் வரும் போதே கண்டுவிட்டதால் கையை உயரத்தூக்கி சைகை காட்டினான். பரமசிவம் அந்த மைம்மல் பொழுதிலும் அடையாளம் கண்டு அவனை நோக்கி மாடுகளைத் தட்டிவிட்டார்.

சுந்தரமும் முத்தம்மாவும் நீண்ட தூரம் நடந்து தேடியும் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் விடத்தல்தீவு போகும் வீதியில் சற்றுப் பள்ளமான ஒரு இடத்தைத் தெரிவு செய்தனர். அந்த இடத்தில் பரவிக் கிடந்த விடத்தல் முட்களை அகற்றுவது பெரும் சிரமமாக இருந்தது. அருகில் முட்களை நீட்டியவாறு ஒரு நாகதாளிப்பற்றையும் காட்சி கொடுத்தது. சுந்தரமும் முத்தம்மாவும் அந்த இடத்தை வெட்டியும் செதுக்கியும் சுத்தப்படுத்தினர். முத்தம்மா ஒரு காவோலையை எடுத்து அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கினாள்.

பரமசிவம் வண்டியை சந்தியால் திருப்பி சுந்தரம் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குவிட்டார். வண்டில் நின்றதும் பெருமாளும் முருகேசரும் மெல்ல இறங்கினர். அவர்கள் ஒரு ஓரமாய் போய் அமர்ந்து கொண்டனர்.

பரமசிவம் வண்டிலை முன் தாங்கியில் நிறுத்திவிட்டு மாடுகளை தண்ணீர் காட்ட குளப்பக்கமாய் கொண்டு சென்றார். பார்வதியும் வேலாயியும் நடந்து வந்த களையையும் பொருட்படுத்தாமல் சமையல் பொருட்களை இறக்கித் தங்கள் வேலையை ஆரம்பித்தனர்.

தண்ணீர் எடுப்பதற்காக சுந்தரம் நல்ல தண்ணீர் கிணற்றினைத் தேடிச் சென்றபோது அங்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். ஒரு கேன் நீரெடுக்கவே நீண்டநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.

ஒருவாறு கஸ்ரப்பட்டு அரை மணி நேரத்தில் நீரை எடுத்துக்கொண்டு திரும்பினான். அவன் வரும் போதே ஏற்கனவே கொண்டுவந்த நீரில் பார்வதி சமையலை ஆரம்பித்துவிட்டாள்.

சோற்றுக்கு அரிசியை உலையில் போட்டு விட்டு எஞ்சிக்கிடந்த வாடிப்போன கத்தரிக்காயையும் பருப்பையும் பூசணியில் ஒரு துண்டையும் போட்டு சாம்பார் தயார் செய்தாள்.

ஆண்கள் எல்லோரும் ஒரு பக்கமாக இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். எல்லோர் பேச்சிலும் எப்போ சொந்த இடத்துக்குத் திரும்புவது என்ற கேள்வியே பொதிந்து கிடந்தது. பலர் விரைவாகவே திரும்பிவிடலாம் எனக் கருதினர்.

அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து விடத்தல் தீவு ஆலயத்தின் பங்குத்தந்தை இறங்கினார். பின்னர் 3 உழவுயந்திரங்களும் வந்து நின்றன. அவற்றில் தேயிலைப் பெட்டிகளில் உணவுப் பார்சல்கள் நிறைக்கப்பட்டிருந்தன. அருட்தந்தை ஒரு உழவுயந்திரத்தை அவ்விடத்தில் நிறுத்தி மக்களுக்கு விநியோகம் செய்யும்படி கூறிவிட்டு மற்ற வாகனங்களை அழைத்துக் கொண்டு பிரதான வீதிப்பக்கமாக போனார்.

உழவுயந்திரத்தில் வந்த இளைஞர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாகப் போய்விட்டது. மக்கள் இடிபட்டுப் பாயத் தொடங்கிவிட்டனர். இளைஞர்கள் கொடுத்த பார்சல்களை ஒரே நேர்த்தில் பலர் பறிக்க முயன்றதால் பல பிரிந்து கொட்டியும் போயின.

அதைப் பார்த்துக் கொண்டு நின்ற சுந்தரத்துக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது. மக்கள் பசியில் துடிக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அதற்காக இடிபட்டு நெரிபட்டு அவற்றை நிலத்தில் கொட்டி வீணாக்கக் கூடாதல்லவா?

சனத்தை இடித்துப் பிரித்துக் கொண்டு உழவுயந்திரத்தின் அருகில் வந்த அவன் உரத்த குரலில், “தம்பியவை, குடுக்கிறதை நிப்பாட்டுங்கோ..!”, என்றான்.

அவர்கள் திகைத்துப் போய் விநியோகத்தை நிறுத்தினர். அவர்கள் சுந்தரத்தை ஒரு போராளி என எண்ணியிருக்கவேண்டும்.

“எல்லாரும் ஒருதருக்குப் பின்னாலை ஒருதராய்  வரிசையில நில்லுங்கோ”, என்றுவிட்டு கூட்டத்தில் நின்ற இரு இளைஞர்களை அழைத்து வரிசையை ஒழுங்குபடுத்துமாறு கூறினான்.

வரிசை அவர்கள் நின்ற இடத்திலிருந்து விடத்தல் தீவுக் கிராமம் ஆரம்பம் வரை நீண்டிருந்தது. இளைஞர்கள் சிரமமின்றி உணவுப்பொதிகளை விநியோகிக்க ஆரம்பித்தனர்.

சில குடும்பங்கள் சமைத்த போதும் வரிசையில் வந்து நின்று உணவை வாங்கிக் கொண்டன. தாங்கள் சமைத்ததை வைத்து அடுத்தநாள் காலை சாப்பிடலாம் என்பது அவர்கள் எண்ணம்.

பரமசிவம் குடும்பமோ அவர்களுடன் வந்தவர்களோ எவரும்  வரிசைக்கு வரவில்லை.

விநியோகம் முடிவடைந்த பின்பும் ஒரு தேயிலைப் பெட்டியில் சில பார்சல்கள் எஞ்சியிருந்தன. அவற்றையும் கொண்டு சென்று பிரதான வீதியில் விநியோகிக்கும்படி கூறிவிட்டு சுந்தரம் திரும்பவும் தங்கள் இருப்பிடம் நோக்கி நடந்தான்.

எனினும் வரும் போது ஒரு பார்சலைக் கையில் எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

அவன் வந்து கொண்டிருக்கும் போது, “தம்பி”, என்ற ஒரு நடுங்கும் குரல் கேட்டுத்திரும்பிப் பார்த்தான். தலை பஞ்சடைந்த ஒரு மூதாட்டி அங்கு குந்தியிருந்தாள்.

அவன் அருகே போய், “என்னணை?” எனக் கேட்டான்.

“தம்பி, உங்கை எங்கையோ, சாப்பாடு குடுக்கிறாங்களாம். எனக்கும் ஒரு சொட்டு வேண்டித் தருவியே?, நான் சனத்துக்கை இடிபட்டு வேண்டிக்கொள்ளமாட்டன் மோனை!”, என்றாள் அவள்.

“அவங்கள் குடுத்திட்டுப்  போட்டங்களணை.. இந்தா இதை சாப்பிடு”, என்றுவிட்டு சுந்தரம் தன் கையில் வைத்திருந்த பார்சலை அவளிடம் நீட்டினான்.

கிழவி நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு, “உனக்கு?” எனக் கேட்டாள். பின்பு அவள், “தம்பி, எனக்கு இரண்டு பிடி தந்திட்டு நீ கொண்டு போய் சாப்பிடு மோனை”, என்றாள்.

இயலாத நிலையில் கடும் பசியில் தவித்த போதும் மற்றவர்கள் பற்றி அவள் கொண்டிருந்த அக்கறை அவனை மனம் நெகிழ வைத்தது.

அவன், “எனக்கு அங்கை சமைபடுதணை, நீ இப்ப சாப்பிட்டிட்டு மிச்சத்தை காலமைக்கு வைச்சு சாப்பிடு”, என்றுவிட்டு அவன் தனது இடத்திற்குப் புறப்பட்டான்.

அனைவரும் பார்வதியின் குழையல் சோற்றைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டனர். பகல் முழுவதும் வெயிலில் கொழுத்திய தரையில் படுப்பது பெரும் சிரமமாகவிருந்தது. வெட்ட வெளியாதலால் காற்றும் கூட அவர்களுக்கு வேதனை கொடுத்துக்கொண்டிருந்தது.

பரமசிவம் வானத்தையே பார்த்தபடி படுத்திருந்தார். வானம் நட்சத்திரங்களால் நிறைந்திருந்தது. நிலவும் எதுவுமே நடக்காதது போல பொழிந்து கொண்டிருந்தது.

ஆனால் தள்ளாடி, பரப்புக்கடந்தான் பக்கமாக ‘பரா’ வெளிச்சங்கள் இடையிடையே எழும்பி இரவை பகலாக்கிக் கொண்ருந்தன.

அவர் சிவத்தை நினைத்துக்கொண்டார். அவன் எங்கோ ஒரு காவலரணிலோ, அல்லது முக்கிய இடத்திலோ தூக்கமின்றி துப்பாக்கி ஏந்தியவாறு எதிரியின் வரவை எதிர்பார்த்திருப்பான் என்றே அவர் நினைத்துக் கொண்டார்.

ஒரு பெரும் ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை மீட்க தம்மை அர்ப்பணித்த போராளிகளில் தன் மகனும் ஒருவன் என நினைத்த போது அவர் நெஞ்சு பெருமையில் நிறைந்தது. ஆனால் அவனின் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம் என்பதை நினைத்தபோது அவரால் கவலையடையாமல் இருக்கமுடியவில்லை.

நினைவுகளில் மிதந்தவாறே பரமசிவம் சற்று நேரத்தில் உறங்கிவிட்டார். அவரின் உடலும் மனமும் நன்றாகவே களைத்துவிட்டன. ஆனால் சுந்தரத்தால் தூங்க முடியவில்லை. விதவைத் தாயின் சேலையைப் பிடித்துக் கொண்டு அழுது தாயிடம் அடிவாங்கிய சிறுவன், வெயில் தாங்காமல் வீதியில் மயங்கிவிழுந்த கிழவி, சோறு கேட்டு கெஞ்சிய மூதாட்டி, நாளை என்ன நடக்கும் என்பது தெரியாமல் வீதியோரங்களில் குந்தியிருந்த மக்கள் என அவனின் நினைவுகள் சோகமும் கோபமும் நிறைந்த ஒரு குட்டையாகக் குழம்பிக் கொண்டிருந்தது.

அவனின் மிளகாய்த் தோட்டமும், சிவப்பும் பச்சையுமாய் காய்ந்தும் குலுங்கிய மிளகாய்களும் நினைவுக்கு வந்தன. இனி அவற்றால் பயனில்லை என்பது அவனுக்குத் தெரியும். அவையனைத்தும் வாடி வரண்டு போயிருக்கும்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை அவனிடமிருந்து முற்றாக ஓடியே போய்விட்டது. இப்போது முன்னேறி வரும் இராணுவத்தை எப்படி விரட்டுவது என்பதே அவன் மனமெங்கும் வியாபித்துக் கிடந்தது.

ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகப் புரண்டு மறுபக்கம் படுத்துக் கொண்டான்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Edited by கலையழகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.