Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள் – மு. பாலமுருகன்
 
இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் அறிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப் படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மழையின் வருகையைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும், விலங்கினங்களின் தன்மைகள் பற்றியும், அணுக்கள் பற்றியும் தம்முடைய படைப்புகளில் பழந்தமிழர் வெளியிட்டுள்ளனர். கடல் நீரானது ஆவியாகி மேலெழுந்து பின் குளிர்ந்த காற்றால் மீண்டும் மழையாக வருகின்றது. இதனைக் கதைவடிவில் முல்லைப் பாட்டில் சொல்லியுள்ளனர். திருமால் வாமன வடிவம் எடுத்து உலகளந்தது போன்ற கரிய மேகம் கடல் நீரை முகந்து கொண்டு மேலெழுந்து மழை பெய்கிறது. இதனை,

”நனந்தலை உலகம் வளை நேமியொடு

நீர் செல நிமிர்ந்த மால் போல”

என்று முல்லைப்பாட்டில் நப்பூதனார் அவர்கள் மழை தோன்றுவதற்கான அறிவியற் காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள இலண்டன் மாநகரில் 1925 ஆம் ஆண்டு இந்திய அலுவலகக் கட்டடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு.ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்கள் தாவரங்களுக்கும் உயிருண்டு என நிரூபித்தார். இவர் தாவரப் பேரறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தாவரத்திற்கும் உயிர் உண்டு என்பதோடு மட்டுமல்லாது அவையும் தம் உடன் பிறந்தவையாகக் கருதி தமிழ் மக்கள் வாழ்ந்தமையை நற்றிணைப் பாடல் தெளிவுபடுத்துகிறது. தன் காதலன் அருகில் வந்து பேசுவதற்கு நாணி விலகிச் செல்கிறாள் தலைவி. காதலனுக்கு ஏதும் புரியாது காரணத்தைக் கேட்கிறான். தன் தமக்கை உடன் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். சுற்றிப் பார்த்த தலைவனுக்கு அங்கு யாரும் காணாது கண்டு வியக்கிறான். தலைவியே காரணத்தைச் சொல்லுகிறாள். தன் அன்னை சிறுவயதில் புன்னை விதையை விதைத்ததாகவும் அதனைத் தமக்கையாகக் கொள்ளவும் என்று கூறியதைச் சுட்டிக்காட்டி அருகிருக்கும் புன்னை மரத்தைக் காட்டினாள். இதனை,

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

என்று நற்றிணையில் பாடப்பட்டுள்ளது. இந்த உலகம் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய ஒரு பகுதியே என்பர். பல காலமாய்ச் சுழன்று கொண்டிருக்கிறது. வெப்பம் ஆறிய மேற்பரப்பின் மீதே மக்கள் வாழ்கின்றனர். பூமியின் மையப்பகுதியின் வெப்பம் ஆறாமல் இன்னும் இருக்கின்றது என்பர். இந்தப் பூமி தீ, காற்று, மண், நீர், வான் ஆகியவற்றால் ஆனதே ஆகும். இதன் தன்மை பட்டினப் பாலையிலும் சொல்லப்பட்டுள்ளது. மனித உயிர்களும் பிற உயிர்களும் வாழ்வதற்கு முதல் ஆதாரமாக விளங்குவது நீராகும். நீர் இல்லையெனில் வாழ்வது சாத்தியமாகாது. 70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் 46 கிலோ கிராம் நீர் இருக்க வேண்டும் என்பர். நீர் அத்தகைய இன்றியமையாதது ஆகும். ஆகவே,

”நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுகு

எனும் குறட்பா அறிவியற் கருத்தோடு கலந்து வருகிறது. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியில் விண்ணில் பறக்கும் மயிற்பொறி ஒன்றைச் சச்சந்தன் வடிவமைத்தான். அதனை இயக்கும் முறையைத் தன் மனைவி விசையைக்கு கற்றுத் தருகிறான். இம்மயிற் பொறியில் தப்பித்துச் செல்லும் விசையைக்கு இயக்கத் தெரியாததால் மயானத்தில் இக்கருவி இறங்கி விடுகிறது. இராம காதையில் இடம்பெறும் புஷ்பக விமானம் விரைவாகவும், அதிக நபர்களைச் சுமந்தும் நீண்ட தூரம் செல்லும் தன்மை உடையதாகும். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான ஆகாய விமானம் போன்று இலக்கியத்திலும் சுட்டப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூற்றாண்டை ஆளும் சக்தி மிகுந்த ஆற்றல் பிரிவாக அணுவியல் திகழ்கிறது. அறிவியல் கண்டுபிடிக்கும் முன்பும் பின்பும் தமிழ் இலக்கியத்தில் அணுவைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டி குறுகத் தறித்த குறள் என்பது ஒளவை வாக்கு.

1803-ஆம் ஆண்டுதான் ஜான் டால்டன் என்பவர் அணுக்கொள்கையை வெளியிட்டார். தாம்சன், அர்னால்டு, ரூதர் போர்டு, ஜேம்ஸ் சாட்விக் என்பவர்கள் அணுவின் மையத்தில் உள்ள நியூக்ளியஸைச் சுற்றி எதிர் மின்துகள்கள் சூழல்கின்றன என கண்டறிந்தார். அணுவைப்பற்றி பல இலக்கியங்களில் பாடப்பெற்றுள்ளன.

சாணிலும் உளன் ஓர் தண்மை

அணுவினைச் சதகூறு இட்ட

கோணிலும் உளன் – கம்பன்

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம்

அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்

அண்டங்களுள்ளும் புறம் புங்கரியாயினானும்

அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர் அறிந்த நல்லோர் – பரஞ்சோதி

இடையின்றி அணுக்கள் எல்லாம் சுழலும் என

இயல் நூலார் இசைத்தல் கேட்டோம் – பாரதி

இவ்வாறு அணுவின் தன்மைகளை அன்னைத் தமிழ் குறிப்பிட்டுள்ளது. பாரத தேசம் எனும் பாடலில் பாரதியின் பொறியியல் அறிவு புலனாகிறது. சிங்களத் தீவிற்குப்பாலம் அமைத்தல், வங்கத்தில் வரும் நீர்ப்பெருக்கை மைய நாடுகளுக்கு பயன்படும் வகையில் நதிநீர் இணைப்பை பற்றிப் பேசினான். 1974-76ல் மைய அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த கே.என்.இராவ் கங்கை காவிரி திட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணுவின் அளவைச் சொல்லாத காலத்தின் போது தமிழன் நீட்டல் அளவை வாய்ப்பாடு சொல்லி வைத்துள்ளான்.

8 அணு – 1 தேர்த்துகள் 12 பெருவிரல் – 1 சாண்

8 தேர்த்துகள் – 1 பஞ்சிழை 2 சாண் – 1 முழம்

8 பஞ்சிழை – 1 மயிர் 4 முழம் – 1 கோல்

8 மயிர் – 1 கடுகு 500 கோல் – 1 கூப்பிடு

8 கடுகு – 1 நுண்மணல் 4 கூப்பிடு – 1 காதம்

8 நுண்மணல் – 1 நெல்

8 நெல் 1 பெருவிரல் கம்பன் காட்டும் எண்ணளவை இன்றைய கணிதவியலறிஞர்கள் இதனை அளவிட்டுரைக்க முடியாது என்கின்றனர். தமிழ் மொழி எண்களையும் வடமொழி எண்களையும் பிங்கலந்தை எனும் நிகண்டு நூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி

கோடி எண் மடங்கு கொண்டது சங்கம்

சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம்

விந்தம் எண் மடங்கு கொண்டது குமுதம்

குமுதம் எண் மடங்கு கொண்டது பதுமம்

பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு

நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம்

சமுத்திரம் எண் மடங்கு கொண்டது வெள்ளம்.

அறிவியலின் தாக்கம் தொடர்ந்து வரும் இலக்கிய பரிணாமத்தினூடே கலந்து வந்தன. புதினம், சிறுகதை, புதுக்கவிதை ஆகியவற்றிலும் இடம் பெற்றன. ஆங்கில அறிவும் அறிவியல் சிந்தனையும் கொண்ட படைப்பிலக்கிய வாதிகள் தம் படைப்புகளில் அறிவியற் சிந்தனைகளைக் கொண்டு வருகின்றனர். சுஜாதா, மாலன், சுப்ரபாலன், ஸ்ரீதர், சிவசங்கர் ஆகியோரும் சிறுவர் அறிவியல் இலக்கியத்தில் கல்கி, கோபாலகிருஷ்ணன், ரேவதி, மலையமான், ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்களாவர். புதுக்கவிதையில் அறிவியலின் அகல நீளங்களைக் கவிஞர்கள் அலசிப் பார்த்திருக்கின்றனர். கவிஞர் சேஷாலம் தம்முடைய கவிதையில் கணித அளவு கோலைப் பயன்படுத்தி

நீங்கள் அங்குலம்

நான் சென்டி மீட்டர்

சாதியிலும் அந்தஸ்திலும் – என்று பாடுகின்றார்.

பூமிக்கு வெளியே நிற்க இடம் தந்தால் இந்த உலகை நெம்பிக் காட்டுவேன் என்று கூறிய ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை நினைவுபடுத்தும் வண்ணம்

இந்த

பூமி உருண்டையை

புரட்டி விடக்கூடிய

நெம்புகோல் கவிதையை

உங்களில்

யார் போடப் போகிறீர்கள்

என்று கண்­ர்ப் பூக்களில் மு.மேத்தா. கேட்கிறார். காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று எதிர்க்கும் எனும் தத்துவத்தை எஸ். சிவராஜ் தம்முடைய கவிதையில்

நாம் ஒத்தவர்கள்தானே

பின்பு ஏன்

விலகுகின்றாய்

விலகி ஓடுகின்றாய்

ஓ…… ஒத்த துருவங்கள்

விலக்கிக்கொள்ளும் அல்லவா? – என்று குறிப்பிடுகின்றார்.

புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், பிறவியல் கூறப்பட்டு எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்று மாணிக்கவாசகப் பெருந்தகை கூறியது டார்வின் பரிணாமக் கோட்பாட்டின் கூறே ஆகும்.

அமிபா செல்லிலிருந்து

குரங்காய்

பரிணாமம் எய்தி

என்று மனித அவதாரம்

எடுத்ததாய்

அப்ரூவர் ஆன

டார்வின் சாட்சியம்

எனும் சாகுல் அமீது என்பவரின் கவி வரிகள் பரிணாமக் கோட்பாட்டைப் பேசுகிறது. விலங்கிலிருந்து மனித நிலை எய்தியவன் மீண்டும் விலங்காய் மாறி அழியும் நிலையை வைரமுத்து சிகரங்களை நோக்கி எனும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். மஞ்சள் மழைச் சூத்திரம் என்கிற உயிர்க்கொல்லி நுண்ணுயிரிகளின் மூலம் உலகை அழிக்கத் துடிக்கும் விஞ்ஞானி இறுதியில் அழிந்து போவதைக் காட்டியுள்ளார். இக்கால கட்டத்தில் சோதனைக் குழாயின் மூலம் பிள்ளைப்பேறு பெறுகின்றனர். அத்தன்மையுடைய குழந்தைகள் அன்னையின் கருவறை மணத்தைப் பெற்று உறங்க விழைவதை

அவளின் கருவறை மணத்தை

அள்ளி அள்ளி என்

வீடெங்கும் தெளித்து

சுருண்டு படுத்துத் தூங்கிப் போகவேண்டும்

என்று தன்னுடைய கருவறை வாசனையில் கனிமொழி கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். அன்னையின் அன்பைப் பெற இயலாமல் யாவரும் சோதனைக் குழந்தையாகவே வளர்ந்து விடுவோமோ என ஆதங்கப்படுவதை,

மானுடம் இயந்திரத் தயாரிப்பில்

உயிர்க்கருக்கள் அச்சாய்ப் போகுமா – எனும் வரிகள் காட்டுகின்றன.

புதுக்கவிதையில் சிறு சிறு அங்கமாக இருந்த அறிவியல் தண்­ர் தேசத்தில் வாமனன் போன்று விஸ்வரூபம் எடுத்துவிட்டது. கடலைப் பற்றியும், அதை மையமாக வைத்தும் உரைநடைப் படைப்புகள் ஆங்கிலத்தில் பல இருக்கின்றன. ஆனால் அழகு தமிழில் வைரமுத்து அவர்களே அறிவியல் படையலைத் தமிழன்னைக்கு முதலில் பரிமாறுகிறான். காதலின் அளவைச் சொல்லுமிடத்து நீரினும் ஆரளவின்றே என்று குறுந்தொகை குறிப்பிட்டதோடு நின்றுவிட்டது. கவிஞரோ கடலின் ஆழத்தை அளக்க ஆரம்பித்துவிட்டார். நான்கு மீனவர்களோடு ஒரு காதலன் காதலி கடலுக்குச் செல்கின்றனர். கடலின் உண்மைகளைக் கலைநயமுடன் வெளிப்படுத்துகின்றான் காதலன். கடலைப்பற்றி எழும் காதலி ரோஜாவின் சந்தேகங்களைப் போக்கும் விதமாய் அறிவியற் கருத்துக்களை அடுக்குகின்றான்.

வாழும் உயிர்களை வடிவமைத்தது தண்­ர்

70 சதவீதம் தண்­ர் யானை

65 சதவீதம் தண்­ர் மனிதன்

என் அமுதமே! உன் உடம்பில்

ஓடுவது 7.2லிட்டர் உப்புத்தண்­ர் -

எனும் வரிகள் நீரின் அளவைச் சொல்லுகின்றன. கடலின் ஆழத்தை நாம் அறியும் வண்ணம் உயரத்தில் காட்டுமிடத்து

கடல் நீர் இடம் மாறி நிலப்பரப்பில் நின்றால்

எல்லா இடங்களிலும் மூன்று கிலோமீட்டர்

உயரம் தண்­ர் நிற்கும் – என்று குறிப்பிடுகிறார்.

இது போன்ற எண்ணற்ற அறிவியற் செய்திகள் இடம்பெறச் செய்துள்ளார். இக்காலம் அறிவியல் எனும் பாற்கடலை அப்படியே அள்ளிக் குடித்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழ் இலக்கியம், இவ்வளர்ச்சி மேலும் வளரும். வளர வேண்டும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.