Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா?

Featured Replies

ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா?

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்றமுடியுமா?காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப் படவேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் பாராளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதை விட சிறந்த மாற்றாக எதையும்  பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடதுசாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலில் இதர கட்சிகளில் எது பரவாயில்லை என்று பார்க்கும் சூழலே இருக்கிறது.


எண்பதுகளிலிருந்து வலிமை பெறத் தொடங்கிய பாரதிய ஜனதா கட்சி அடிப்படையிலேயே ஆபத்தான கட்சி என்பது என் தீர்மானமான கருத்து. அதுவும் அதை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் பல்வேறு அவதாரங்களும் எவ்வளவு சாமர்த்தியமாக தங்கள் அசல் முகத்தை மறைக்க விதவிதமான முகமூடிகளை பயன்படுத்தினாலும், என் போன்றோருக்கு அதன் அசல் முகம் நன்றாகவே தெரியும்.

 

பாரதீய ஜனதா கட்சி அரசியலில் நிலை பெறுவதற்கு முன்னால் நம் சமூகத்தில் அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் இதர வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக சொல்லபடும் ஹிந்து மதத்தினருக்கும் இடையே கடும் உரசல்கள் இருக்கவில்லை. குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய இணக்கமே எல்லா மதத்தினரிடையிலும் இருந்து வந்தது. பாரதிய ஜனதாவின் வருகைக்குப் பின், அதன் தீவிர ஆயுதங்களான இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரீஷத் போன்றவை தீவிரமாக இங்கே இயங்கத்தொடங்கியபின்னர்தான், முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புகளும் உருவாகத் தொடங்கின. அன்றாட வாழ்க்கையிலேயே குறிப்பிட்ட மதத்தினரை சில பகுதிகளிலேயே குறுக்கி வாழ வைக்கும் கெட்டொவைசேஷன் என்ப்படும் சேரிப்படுத்தலும், முத்திரை குத்தலும் பலமாகி வருகிறது.


எனவே காங்கிரசுக்கு மாற்றாக பாரதிய ஜனதா வளர்வதை விரும்பவே மாட்டேன். சில வருடங்கள் முன்பு வி.பி.சிங் சொன்னதைப் போல டெல்லி அரசியலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மத சார்பற்ற அணிகளாக இருப்பது அவசியம்.

 

இன்றைய நிலையில் காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகள், ஊழல்கள், ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து எடுக்கும் தவறான நிலைகள் எதுவும் எனக்கு உடன்பாடானவையல்லதான்.


ஆனால் பாரதீய ஜனதா இதில் காங்கிரசிலிருந்து வேறுபட்டதே அல்ல. ஆட்சிக்கு வந்தால் அதன் அமைச்சர்களும் பெரும் ஊழல் செய்பவர்கள், சுரங்கத் தொழிலதிபர்களின் தயவில் கட்சி நடக்கும் என்பதெல்லாம் அம்பலமாகிவிட்டது. மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்தால் அதன் வெளியுறவுக் கொள்கையும் ராஜபக்‌ஷேவை எதற்கும் நிர்ப்பந்தப்படுத்தாத ஒன்றாகத்தான் இருக்கும். தொண்ணூறுகளிலிருந்து தொடர்ந்து செயல்படுத்தப்படும் பொருளாதார தாராளமயக் கொள்கை மோடியின் குஜராத் உட்பட பிஜேபி ஆட்சிகளில் எங்கேயும்  மாற்றியமைக்கப்படவில்லை. அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறது.

 

 

காங்கிரசுக்கு மாற்றாக பிஜேபிக்கு பதில் உண்மையில் உருவாகவேண்டிய மூன்றாவது அணி என்பது பல்வேறு மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பான ஓர் அணிதான். (காங்கிரசும் பிஜேபியும் கூட கள செல்வாக்கைப் பொறுத்தமட்டில் வட்டாரக் கட்சிகள் போலத்தான் இருக்கின்றன. அனைத்திந்தியாவிலும் தெரியப்படுத்தப்பட்ட பிம்பம் உள்ள தலைவர்கள் இவற்றில் இருப்பதால் அவை பெரிய கட்சிகள் போல தோற்றமளிக்கின்றன.)

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மொழி வாரி தேசிய இனத்தின் பிரதிநிதியான மாநிலக் கட்சிகளின் கூட்டணிதான் இந்தியாவை நிஜமான கூட்டாட்சி முறையை நோக்கியோ அமெரிக்க பாணி பெடரலிசம் நோக்கியோ அழைத்துச் செல்லவும் முடியும்.

 

ஆனால் இன்று இருக்கும் முக்கியமான மாநிலக் கட்சிகள் எதுவும் அதற்கான தகுதியுடன் இல்லை. தி.,மு.க, அ.இ.அ.தி.மு.க, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் எல்லாமே ஊழல், அராஜக சரித்திரம் உடைய கட்சிகளாகவே இருக்கின்றன. மம்தாவின் திரிணமூல் இன்னும் ஊழல் கட்சியாக அறியப்படவில்லை என்றாலும் அதன் தலைவரின் சர்வாதிகார மனப்பான்மை சரியான திசையில் செல்ல உகந்ததே அல்ல.


ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போது இருக்கும் மோசமான மாநிலக் கட்சிக்கு மாற்றாக இன்னொரு சரியான மாநிலக் கட்சி உருவாகவேண்டியிருக்கிறது. அப்படி உருவானால்தான் இந்திய அரசியல் சரியான கூட்டாட்சியை நோக்கி செல்வதில் அர்த்தம் இருக்க முடியும்.

 

 

இப்படிப்பட்ட அரசியல் சூழலில் பிஜேபி போன்ற மதவாத சக்திகளைத் தடுக்க காங்கிரஸ் தேவைப்படுகிறது. ஆனல அது பலவீனமாக இருக்கிறது. அதை வலுப்படுத்த கட்சியின் பொறுப்பேற்கவரும் ராகுல் காந்தி என்ன செய்ய முடியும்? என்ன செய்யக் கூடும் ?


ராகுலைப் பற்றிய முக்கியமான விமர்சனம் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலின் இன்னொரு பிரதிநிதி அவர் என்பதாகும். இங்கே நாம் ஜவஹர்லால் நேரு, கருணாநிதியைப் போல வாரிசு அரசியலை ஊக்குவித்தவர் அல்ல என்பதை கவனித்தாகவேண்டும். அவருக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரிதான் பிரதமரானார். இந்திராவை நேரு கொண்டு வரவில்லை. இந்திரா காலத்தில் நெருக்கடி நிலையின்போது அவரால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட சஞ்சய் காந்தி இந்திரா, நேருவின் மதச் சார்பற்ற அரசியல் மனநிலையில் வந்தவர் அல்ல. அவருக்கு நெருக்கடி நிலையின்போது முஸ்லிம்களுக்கு எதிரான  அராஜகங்களைச் செய்ய உதவியாக இருந்தவர் ஜக்மோகன். பின்னாளில் பிஜேபியின் கண்மணிகளில் ஒருவரானார். சஞ்சயின் குடும்பமே மேனகா, வருண் இருவரும் – இன்று பிஜேபியில்தான் இருக்கிறது. திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் இந்திராவின் குடும்பத்தில் ஊடுருவினார்கள் என்றே சந்தேகிக்கலாம்.

 

ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் நுழைந்தவர்தான். அவர் கொல்லப்பட்ட பிறகு, சோனியாவும் உடனடியாக தீவிர அரசியலுக்கு வரவில்லை. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் காங்கிரசுக்குப் பெரும் களங்கம் கற்பிக்கக்கூடிய இரு பெரும் நிகழ்வுகள் நடந்தன. ஆர்.எஸ்.எஸ்சும் பிஜேபியும் நடத்திய பாபர் மசூதி இடிப்பு நரசிம்மராவின் ஒத்துழைப்பால் தான் சாத்தியமாயிற்று. ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக சிபு சோரன் உள்ளிட்ட சில எம்.பிகளுக்கு நரசிம்மராவ் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டது நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு, சிபு சோரன் தண்டனையையும்  அனுபவித்தார்.


நேரு, இந்திரா, ராஜீவ் காலங்களில் ஒருபோதும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்ததில்லை. ராகுல் காந்தியும் அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் அம்மாவுக்கு உதவுவதற்காக வந்தவர்தான். சோனியாவும் ராகுலும் அரசுப் பதவிகளில் அமர்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருந்தபோதும் இதுவரை அவற்றை தவிர்த்தே வந்திருக்கிறார்கள். எனவே வாரிசு அரசியல் குற்றச்சாட்டு முற்றிலுமாகப் பொருந்தாது.

 

இரண்டாவதாக ராகுல் மீது சொல்லப்படும் விமர்சனம் இதுவரை அவர் காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்து பெரும் பலத்தை எங்கேயும் ஏற்படுத்த முடியவில்லை என்பதாகும். இது முற்றிலும் சரியல்ல. உத்தரப் பிரதேசத்தில் 2009 எம்.பி.தேர்தலின் போது 21 எம்பி இடங்களைப் பெற அவர் பிரசாரம் உதவியது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் உதவவில்லை. சட்டமன்ற தேர்தல்களைப் பொறுத்த மட்டில் மக்கள் ஆதரவைப் பெற கட்சிகளுக்கு உள்ளூரில் ஒரு செல்வாக்கான கவர்ச்சியான தலைவரும் தேவை. காங்கிரசுக்கு அது உபியிலும் இல்லை. குஜராத்திலும் இல்லை. உ.பியில் ராகுல்தான் முதல்வர் பதவிக்கான வேட்பாளர் என்று கூறப்பட்டிருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

இப்போது ராகுல் செய்யவேண்டியது என்ன?

 

மன்மோகன் சிங்கின் அமெரிக்க சார்புப் பொருளாதாரக் கொள்கைகள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. காங்கிரஸ் இந்தக் கொள்கைகளில் சிவற்றையேனும் கைவிட்டு, மீண்டும் தன் சோஷலிசக் கொள்கைகள் சிலவற்றை மீட்டெடுத்துக் கொண்டு வந்தாலொழிய சாதாரண மக்களின் ஆதரவு பெருகும் வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான கட்சிக் கிளையை உருவாக்க ஏற்ற மாநிலத் தலைவர்கள் இல்லை. சிலரையேனும் பழைய காமராஜ் திட்டம் போல டெல்லி பதவிகளிலிருந்து அனுப்பிவைத்தாக வேண்டும். வலுவான மாநிலத் தலைமைகளை இந்திரா ஒழித்தார். அதுதான் இன்று வரை காங்கிரசின் மிகப் பெரிய பல்வீனமாக இருக்கிறது. இதை ராகுல் திருத்த வேண்டும்.


படித்த நகர்ப் புற இளைஞர்களின் எண்ணிக்கையும் படிப்பும் வேலையுமில்லாத கிராமப்புற இளைஞர்களின் எண்ணிக்கையும் இன்று மிகப் பெரியது. இவர்களுக்கான சமூக, அரசியல் திட்டம் எதுவும் எந்தப் பெரிய கட்சியிடமும் இல்லை. ஆனால் ராகுல் போன்ற இளம் அரசியல்வாதிகள் இதைத்தான் கவனிக்க வேண்டும்.

ராகுலால் இதையெல்லாம் செய்யமுடியுமா?

 

இதுவரை அவர் செய்து வந்திருப்பதில் எனக்கு முக்கியமாகப் படுவது ஓரிரு அம்சங்கள்தான். என் குடும்பப் பின்னணியால் நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்படி பின்னணி ஏதும் இல்லதவர்கள் வருவதற்கு ஒரு சிஸ்டம் வேண்டும், அதை உருவாக்க விரும்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் ராகுல். அதன்படி இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களை சேர்த்து முறையான வெளிப்படையான உட்கட்சித் தேர்தல் நடத்தி வருவது நல்ல அம்சம். இது வேறு எந்தக் கட்சியிலும் நடைமுறையில் இல்லை. இதை தாய்க் கட்சிக்கும் ராகுல் விரிவுபடுத்த வேண்டும்.

 

இளைஞர் காங்கிரசுக்கென்று, அரசியலில் இல்லாத படித்த இளைஞர்களின் திங்க் டேங்க் ஒன்றை ராகுல் வைத்திருக்கிறார்.இவர்களின் கள ஆய்வுகளின் உதவியில்தான் விவசாய விளை நிலங்களை வாங்குவது பற்றிய சட்ட வரைவை ராகுலால் தயாரிக்க முடிந்தது. இது இன்னொரு முக்கிய அணுகுமுறை.


தங்கள் கருத்துக்கும் கொள்கைக்கும் முற்றிலும் எதிரானவர்களுடன் உரையாடல் நடத்த முன்வருவது இன்றைய முக்கியமான அரசியல் தேவையாகும்.இதை மூத்த அரசியல்வாதிகளிட்ம எதிர்பார்க்கமுடியாது. ஆனால் இளைஞர்கள் பொதுவாக திறந்த மனதுடன் பிரச்சினைகளை அணுகுகிறார்கள். அவர்கள் அரசியலில் நுழையும்போது இது சாத்தியப்படும். அவர்களிலும் கூட உணர்ச்சிவசப்பட்டு உணர்ச்சியை தூண்டி அரசியல் நடத்துவோருக்கு இது சாத்தியமில்லை. ராகுல் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகத் தெரியவில்லை என்பது நல்ல அம்சம்.

 

எனினும் துணைத் தலைவர் பதவி ஏற்புரையின் போது இந்திராவின் காவலர்களுடன் தனக்கு இருந்த உறவை அவர் சொன்னது நெகிழ்ச்சியானது. தனக்கு பாட் மிண்ட்டன் சொல்லிக் கொடுத்து தன்னுடன் விளையாடி வந்தவர்கள் இந்திராவைக் கொலை செய்தது தன்னை மிக கடுமையாக பாதித்தது என்றார் ராகுல். பேரனுடம் அன்பாக விளையாடியவர்களைப் பாட்டியைக் கொல்பவர்களாக ஆக்கிய அரசியல் என்ன, அந்த அரசியலில் யார் யார் என்னென தப்பு செய்தார்கள் என்றெல்லாம் அடுத்து ராகுல் யோசிக்க முடியுமானால், அவரால் இந்திய அரசியலை ஒரேயடியாக மாற்ற முடியாவிட்டாலும் கொஞ்சம் ஆரோக்கியமான சலனங்களையாவது ஏற்படுத்த முடியும்.

“அதிகாரம் என்பது விஷம்.” என்று அவருக்கு அம்மா சோனியா சொன்னதாகச் சொல்லும் ராகுலுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், அந்த விஷத்துக்கான முறிவு அன்புதான். நம் அரசியலில் அன்புக்கு இடமில்லாமல் இருப்பதால்தான் அதிகாரம் என்பது விஷமாக இருக்கிறது. மக்கள் மீது அன்பு இல்லாத அரசியல் மக்களுக்கே விஷம்தான்.

 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூக்கு மேடையை எதிர்நோக்கியிருக்கும் மூவரின் தண்டனையைக் குறைக்கும்படி ராகுலால் சொல்ல முடிந்தால், அது அன்பு சார்ந்த ஆரோக்கியமான அரசியலுக்கான ஒரு முதல்படியாக இருக்கும்.

 

 

கல்கி 26.1.2013

 

http://www.gnani.net/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.