Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருங்கைமரப் புனைவுகள்

Featured Replies

ஜெனிவாத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. திருவிழாவின் பிரதான உபயகாரர் தன்னுடைய திக்குப் பாலகர்களை இலங்கைக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார்.

 

ஏற்கனவே சொன்னபடி திருவிழாவுக்கு ஏற்ற ஆயத்தங்களை இலங்கை செய்து முடித்திருக்கிறதா அல்லது முருங்கை மரத்திலிருந்து இன்னமும் இறங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பதை அறியவேண்டியது உபயகாரரின் கடமை. இல்லாவிட்டால் திருவிழா நடத்தியும் பயனில்லை.


ஒருவேளை இன்னமும் முருங்கை மரமே தஞ்சமென்று இலங்கை வேதாளக் குணங்களோடு இருந்தால், திருவிழா மங்கலகரமாக இருக்காது. மாறாக பேயோட்டும் சடங்காக மாறிவிடும்.

 

திக்குப் பாலகர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, தாம் குடிகொண்டிருக்கும் முருங்கை மரம் பற்றிய கணிப்புகளைக் கலைக்க இலங்கையில் மணிமுடிவாசிகள் புனைவுகளை எங்கும் பரவவிடத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுபோன்ற நிறைய வேதாளங்களைக் கண்டவர்கள் உபயகாரர்கள். வேடிக்கை என்னவென்றால் உபயகாரர்கள்தான் வேதாளங்களின் தலைவர்களும்கூட.


அவர்களால் ஒரு சாதாரண வேதாளம் என்ன செய்யுமென்பதையும், எந்த முருங்கை மரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதையும் ஒரு நொடியிலேயே கண்டுபிடிக்க முடியும். அமெரிக்க திரிசூலக்குழு வந்து போய்விட்டது. இந்தக் குழு வருவதற்கு முன்னர் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் ஒரு கூற்றை வெளியிட்டிருந்தார்.

 

அண்மைய வெற்றிகரமான புளுகுகளில் ஒன்றுதான் "இறுதிப்போரில் படையினரிடம் சரணடைந்த எவரும் காணமால் போகவில்லை. போர் நடந்த பகுதியில் இந்திய வைத்தியசாலைகள், செஞ்சிலுவைக்குழு என்பவற்றின் மூலம் கையேற்கப்பட்டவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள். எனவே, இதற்குரிய முழுப்பொறுப்பும் அவர்களுக்கே." என்று மிகச் சாதாரணமாக இந்தியா மீதும் செஞ்சிலுவைக் குழு மீதும் பூசிவிட்டு தன்பாட்டுக்கு "சோலியைப்' பார்க்க போய்விட்டார் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய.


ஆனால் அவருடைய புனைவை மிதித்துக்கொண்டு வந்திறங்கியது திரிசூலக்குழு. வந்தவர்கள் எல்லா இடங்களிலும் தமது கழுகுப் பார்வையைப் பதித்தனர். அவர்களிடம் உண்மையின் குரலாக காணாமற்போனோர் விடயமே தமிழர்களிடத்தே இப்போதுள்ள முதன்மையான பிரச்சினை என்பதை முன்வைத்தார் யாழ். ஆயர்.

 

அவர் வாய் மூடும் முன்னரே "பாதுகாப்புச் செயலர் சொன்னது உண்மையல்ல என்பதை நேரில் கண்டு உணர்ந்தோம். காணாமற்போனோரின் உறவுகள் இன்னமும் கண்ணீரோடு அவர்களை மீட்டுத் தரும்படி எம்மிடம் கெஞ்சினார்கள்." என்று திரிசூலக்குழு கூறியது.


ஓர் அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

 

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான்.


அந்த ஏழை சொன்னான், "அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்." அரசனுக்கு கோபம் வந்துவிட்டது. "நீ பொய் சொல்கிறாய். நானாவது  உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?' என்று கத்தினான்! உடனே ஏழை சொன்னான்,

 

"அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதி யின்படி எனக்கு ஆயிரம் பொற் காசுகள் கொடுங்கள்." அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந் தான். உடனே சொன்னான்,

 

"இல்லை, இல்லை, நீ பொய் சொல்லவில்லை." என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்," நல்லது அரசே, நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்," அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

 

நல்ல வேளையாக இப்போது இது போன்ற புளுகுப் போட்டிகள் நடப்பதில்லை. நடந்தால் இலங்கையில் ஏட்டிக்குப் போட்டியாக புனைவுகளை நினைத்தபாட்டுக்கு அவிழ்த்து விட்டுப் பின்னர் சில கணங்களிலேயே தங்களது பொய்கள் நிர்வாணமாகிவிட, அவமானப்பட்டு, அதிகாரச் சாட்டையை ஏந்தியிருப்பவர்கள் தோற்றுப் போகவேண்டியிருக்கும்.

தங்களது புனைவுகளின் சாயம் மறுநொடியே கரைந்து ஒழுகிப்போனாலும், அதைப்பற்றி கிஞ்சித்தும் இவர்களுக்குக் கவலையில்லை. தொடர்ந்தும் ஒருவரையொருவர் மிஞ்சிக்கொண்டு தினமும் தம்சார்பான பொய்களை எந்தவித கூச்சமுமின்றி கூவிக்கூவி காற்றில் மிதக்கவிடுகிறார்கள் இவர்கள்.

 

பாதுகாப்புச் செயலர் காணாமற்போனோர் பற்றி தான் "கண்டுபிடித்த' விளக்கத்தில் "இறுதிப் போரின் போது எங்கு ஓடுவது என்று திசைதெரியாமல் தவித்த மக்கள்  செஞ்சிலுவைக் குழு ஊடாகவும், இந்திய வைத்திய சிகிச்சை நிலையம் ஊடாகவும் மாத்திரமே படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்தனர்." என்று சொல்லி கண்ணீரில் தவிக்கும் மக்களை வெறுப்பேற்றியுள்ளார்.


அவரது கூற்று படையினரால் பிடிக்கப்பட்டு, காணாமற்போனோர் பற்றிய இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பாதுகாப்புச் செயலர் கூட தான் சொன்னதைத் தானே நம்பியிருக்கமாட்டார். அந்தளவுக்கு கலப்படமற்ற தூய பொய் அதுவென்று அவருக்கு மட்டுமன்றி அகில உலகத்துக்குமே தெரிந்த ஒன்று.

 

போரின் தணல்கள் உயிர் தின்னும் பேராசையுடன் குறு நிலப்பரப்பில் குருதியாற்றை ஓடவிட்ட தருணத்தில் செந்நிறமான சிலுவையை தாங்கிய கொடிகளோ அல்லது அசோகச் சக்கரத்தோடு அசைந்தாடும் மூவர்ணக் கொடிகளோ மக்களை வரவேற்கவில்லை.


ஏனெனில் போரின் வெம்மை இந்தக் கொடிகளையெல்லாம் தூர ஓடவைத்திருந்தது.  போர் நடைபெறும் இடத்திலிருந்து எட்டவாகவே இவற்றின் அமைவிடங்கள் இருந்தன. எந்தவழியால் தப்பிப்பது என்பது தெரியாமல் கொதிக்கும் போர் என்ற எண்ணெய்ச் சட்டிக்குள் தவித்த மக்கள் படைக் கட்டுப்பாட்டுப் பிரதேச "அடுப்புக்குள்' வந்து விழுந்தனர்.

 

இந்த அடுப்பு எரிந்து கொண்டிருந்த பகுதிகளில் மக்களை வாள் ஏந்திய சிங்கங்களைக் கொண்டிருந்த கொடிகளே வர வேற்ற துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது. போரின் மரபார்ந்த நெறிமுறைகளையெல்லாம் மிதித்துவிட்டு வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு நகர்ந்தன.


அரச பாதுகாப்புப்  படைகள் ஏந்தி நின்ற கொடிகளில் பொறிக்கப்பட்டிருந்த சிங்கத்தின் வாளில் 24 மணி நேரமும் குருதி எந்தவித உறைதலுமின்றி வழிந்தோடிக்கொண்டேயிருந்தது. எங்கும் கூக்குரல்கள்.

 

காயங்களோடு மீட்பர்களுக்காகக் காத்திருந்து, காத்திருந்து உயிரற்றுப்போன உடலங்கள். மனித உடல்களைத் தின்று கொழுத்துப்போன காகங்கள். இந்த எல்லையில் வாள் ஏந்திய சிங்கக்கொடிகளுக்கு, தூரத்தே தெரியும் வெள்ளைக்கொடிகள் கூட புலிக்கொடிகளாகவே உருமாறின.


மஞ்சள் காமாலை பிடித்தவனுக்கு காணுகின்ற எல்லாக் காட்சியும் மஞ்சளாகவே தெரியும். கந்தகப் புகையும், வெற்றி மமதையும் படைகளின் கண்களை மறைத்திருந்தன. குருடாகிப் போன கண்களுக்கு புலிக்கொடிக்கும் வெள்ளைக் கொடிக்குமான பேதம் எப்படித்தெரியும்? சாட்சிக்கு யாரும் இல்லை. வேலியும் ஓணானும் மட்டுமே எஞ்சியிருந்தன.

 

என்னதான் கண்முன்னே வேலி ஆயிரம் பேரை கழுத்தறுத்துக் கொன்றிருந்தாலும்,  "நான் நிரபராதிதானே?" என்று வேலி கேட்டால், "ஓம்" என்று தலையாட்டுவதுதானே ஓணானின் குணம். ஓணான்கள் இங்கே காட்டிக்கொடுக்கும் சாட்சிகளாயின.


அவையும் பேதம் பாராமல் தலையாட்டிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு தலையாட்டுதலுக்கும் ஒவ்வொருவர் அதிகாரத்தின் குகைக்குள் தள்ளப் பட்டுக்கொண்டிருந்தனர்.

 

ஏதும் செய்யமுடியாமல் ஊமைச்சாட்சியாய் விரிந்துகிடந்த வானம், கண்ணீர்த் துளிகளை மழைவழியே சிந்துவதைவிட வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓணானும் வேலியும் ஒன்றுகூடிச் செய்த வேள்வியில் கருகிப்போன உயிர்கள் பற்றிய கடைசிச் செய்தி புகைப்படங்களாகவும், காணொலிகளாகவும் வந்தவண்ணமேயுள்ளன.


ஆனாலும் கூட சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக தன் மீதான பழியை இந்தியா மீதும் செஞ்சிலுவைக்குழு மீதும் "அலாக்காகத்" தூக்கிப் போட்டிருக்கிறார் கோத்தா. கலப்படமற்ற பொய் என்பது அவருக்கு மிக நன்றாகவே தெரியும்.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? எப்போதுமே தன்னுடைய புளுகுக்கலையை உலகுக்கு காட்ட அவர் இப்படித்தான் ஏதாவது நம்பமுடியாத விடயங்களை சொல்லிக்கொண்டேயிருப்பார்.


உலகும் மக்களும் பொய் என்று தெரிந்தும் நம்புவது போல் நடித்து, திரிசூலக்குழுவைப்போல கேட்டுச் சிரித்துவிட்டுப் போகவேண்டியதுதான். என்னதான் புனைவுகளின் மீது படுத்துறங்கினாலும் ஜெனிவாத் திருவிழாவில் பேயோட்டம் ஒன்று நடக்கப்போவது மட்டும் மிகத் துலக்கமாகத் தெரிகிறது...!

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=6195345804289527

  • தொடங்கியவர்

ஜெனீவா போயோட்டம் எமது மக்களுக்கான கதவுகளை திறந்து விடட்டும் !

 

150636_330338003732634_405371878_n.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.