Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படியளக்கும் இந்தியா! -யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படியளக்கும் இந்தியா! -யதீந்திரா

 

 

1
சமீபத்தில் எனது புலம்பெயர் நண்பர் ஒருவர், நீண்ட நாட்களுக்கு பின்னர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிருந்தார். நீண்ட காலத்திற்கு பின்னர், அவரது மின்னஞ்சலை கண்டபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. நண்பர், நல்ல தகவல்கள் ஏதேனும் அனுப்பிருப்பாரோ! – ஆவலுடன் மின்னஞ்சலை திறந்த எனக்கோ, ஏமாற்றமே எஞ்சியது. தமிழ் அரசியல் ஆய்வுச் சூழலுக்கு நன்கு பரிட்சமான அந்த நனண்பர் ஒரு காலத்தில், உம்மையும் நிலாந்தனையும்தான் எனக்கு அதிகம் பிடிக்கும் என்றுரைத்தவர். உங்களிடம் ஒரு தனித்துவமான எழுத்துண்டு என்றவர். ஆனால் நான் விடுதலைப்புலிகளை விமர்சித்ததைத் தொடர்ந்து என்னுடனான உரையாடலை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டார். அந்த மின்னஞ்சல் – அவர் இப்போதும் முன்னரைப் போன்றே கறுப்பு-வெள்ளை கருத்துலத்துக்குள் சிக்குண்டிருக்கிறார் என்பதையே காட்டியது. சம்பந்தரின் சமீபத்தைய பாராளுமன்ற உரை குறித்து, எள்ளல் பாணியில் சில வரிகளை அவர் எனக்கு அனுப்பியிருந்தார். நானொரு ரி.என்.ஏ ஆதரவாளன் என்னும் மனப்பதிவிலிருந்தே, அவர் தன் வரிகளை அடுக்கியிருந்தார். ஆனால் நான் எவரதும் ஆதரவாளனல்ல என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு வருடங்களாக நான் எழுதியவற்றை ஒருவர் ஆழ்ந்து நோக்கினால், நான் ஏழைத் தமிழ் மக்களின் நலனைத் தவிர வேறு எவற்றைம் ஆதரிக்கவில்லை என்பது வெளிச்சமாகும். நானும் பதிலுக்கு, சிறிது எள்ளலுடன் சில வரிகளை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதற்கு அந்த நண்பர் அனுப்பியிருந்த பதில் மிகவும் சுவரஷ்யமாக இருந்தது.

 

‘உமக்கு படியளப்பவர்கள் யாரென்று எனக்குத் தெரியும். உம்மட இந்திய கூட்டாளிகள்தான் எங்கட மக்களை அழித்தவர்கள். இதில் உமக்கும் பங்குண்டு. எனக்கு புத்திமதி சொல்ல உமக்குத் தகுதியில்லை. இருந்து பாரும்’
இருந்து எதைப் பார்ப்பதென்று எனக்கு விளங்கவில்லையாயினும், எனது இந்திய கூட்டாளிகள் – பொய் சொல்லக் கூடாது, உச்சரிக்கும்போதே ஒரு போதை கிடைக்கத்தான் செய்கிறது ஆனால் இதுவரை அப்படியான கூட்டாளிகள் எவருமே கிடைக்கவில்லையே என்பதுதான், எனது கவலையென்பதை யாரறிவார். என்னைப் பற்றி இப்படியொரு பார்வை சிலர் மத்தியில் இருப்பதை நான் அறிவேன். இதற்கு முன்னரும் கூட, ஒரு புலம்பெயர் நண்பர் இப்படியொரு அவதானத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். 20 வருடங்களுக்கு பின்னர் தனது சொந்த மண்ணில் காலடி வைக்கும் வாய்ப்பை பெற்றிருந்த அவர், பல நண்பர்களை சந்தித்தது போன்று என்னையும் சந்தித்திருந்தார். இ-மெயில், பேஸ்புக் போன்றவற்றின் ஊடாக மட்டுமே எங்களை அறிந்திருந்த நாங்கள், அப்போதுதான் நேரில் சந்திக்கின்றோம். எனது நிலைப்பாட்டை அந்த நண்பர் நன்கு அறிவார் ஏனெனில் நான் முன்னரே அவருக்கு தெளிவாக கூறியிருக்கிறேன் – புலம்பெயர் சூழலில் இருந்து எங்கள் மீது முன்வைக்கப்படும் எந்தவொரு விமர்சனங்களையும் நான் கருத்தில் எடுப்பதில்லையென்று. பேச்சுவாக்கில் நான் கேட்டேன் – என்னுடைய எழுத்துக்களை அங்கு எவ்வாறு பார்க்கிறார்கள்? அவரது பதிலும் கூட மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது – முன்னைநாள் புலி ஆதரவாளரான நீங்கள், இப்போது இந்தியாவால் வாங்கப்பட்ட ஒருவர். இதுதான் உங்களைப் பற்றி இருக்கும் அவதானம். அப்போது ஒரு மெல்லிய புன்முறுவல் மட்டுமே எனது பதிலாக இருந்தது.

 

எனது எழுத்துக்களை அடியொற்றியே இவ்வாறான அரைவேக்காட்டு அபிப்பிராயங்கள் உருக் கொண்டன. இனியொரு இணையத்தில் நான் எழுதிய ‘இந்தியா பற்றிய நமது உரைகல் என்ன’ மற்றும் காலச்சுவட்டில் எழுதிய ‘இந்தியா புலிகளை அழித்ததா’ ஆகிய இரண்டு கட்டுரைகளே இவ்வகையானதொரு அபிப்பிராயம் உருக்கொள்ளக் காரணமாகியது.

 

2
சாதாரணமாக நான் யோசித்துப் பார்க்கிறேன் – ‘இந்தியா’ இப்படியொரு சொல் எப்போது எனக்கு பரிட்சயமாகியது. இந்தியா பற்றி அப்போது எனக்குத் தெரிந்தவை வெகு சிலவே! தமிழ் நாட்டு படங்கள், இந்திய இராணுவத்தின் சீக்கியத் தலைப்பாகை, குறுக்காஸ், ஆட்டாமா, செம்மறியாடு. இவைகள்தான் அந்த வெகு சில. நான் சிறுவனாக இருந்த காலத்தில், இந்தியா என்பது இப்படித்தான் எனது மனதில் பதிவாகியிருந்தது. இப்போதும் இந்திய இராணுவம் என்றவுடன், ஆட்டாமாவை முகர்ந்த அனுபவம்தான் என் நினைவுப்பரப்பில் எட்டிப்பார்க்கிறது. ஆனால் காலம் பல சாதாரண மனிதர்களையெல்லாம் அரசியலின் பக்கமாக இழுத்துப் போட்டது போன்று, என்னையும் இழுத்துவிட்டது. கிராமத்தில் சுட்டுவில்லுடன் கொட்டைப்பாக்கு குருவி தேடியலைந்த நாட்கள் போய், நானும் மாக்சியம் தேசியமென்றெல்லாம் இசங்கள் பேசும் நாட்கள் வந்தது. அந்த இளம்பராய அரசியல் வானில் எனக்குத் தெரிந்த ஒரே நட்சத்திரம் பிரபாகரன் மட்டுமே. ஏலவே சில நட்சத்திரங்கள் ஜொலித்ததாக அறிந்த போதும், அவைகளெல்லாம் கறைபடிந்தவை என்னும் மனப்பதிவே என்னை வழிநடத்தியது.

 

தெரிவுகளற்ற சூழலில், இருக்கும் ஒன்றை தெரிவாக்கிக் கொள்ளுவதே அரசியல் என்றானது. பிரபாகரனின் சாகசங்களில் நான் மயங்கிக்கிடந்த காலமொன்று இருந்தது உண்மையே- அதனை ஒப்புக் கொள்வதில் என்னிடம் தயக்கங்கள் இல்லை. அது ஒரு அறியாப்பருவ அனுபவம்.தெரிவு என்பது ஒரு மனித இயல்பாகும். அந்த தெரிவுக்குரிய சுதந்திரம் மறுக்கப்படும் போது, இருக்கும் ஒன்றையே மனிதன் தெரிவாக்கிக்கொள்ள நேர்கிறது. ஸ்டாலினிலிருந்து பிடல்காஸ்ரோ வரை இதுதான் நிலைமை. தெரிவுகளை மறுத்து தங்களை தெரிவாககாட்டிக் கொண்ட அரசியலின் சொந்தக்காரர்கள் அவர்கள். மனிதன் இயல்பிலேயே தெரிவு மனோபாவம் உள்ளவன். தெரிவிற்கான சுதந்திரம் மறுக்கப்படும் சூழலில், ஒருவரது தெரிவு என்பது விருப்பம் சார்ந்தல்லாமல் தேவை சார்ந்ததாக அமைகிறது. சில வேளைகளில் அது தேவையென்பதையும் தாண்டி, புறச் சூழல் நிர்பந்தத்தின் விளைவாகிவிடுகிறது. விடுதலைப்புலிகள் மீதான எனது முன்னைய ஆதரவு என்பதும் அத்தகையதொன்றுதான். ஆனால் 2009இல் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான முடிவு, அதுவரையான எனது பார்வைகளை மறுபார்வைக்கு உட்படுத்த வேண்டிய கடப்பாட்டை வலியுறுத்தியது. அதுவரையான எனது ஆய்வுகள் மீது ஒரு மறுஆய்வு தேவைப்பட்டது. ஏனெனில் விடுதலைப்புலிகள் மீதான ஆதரவுநிலையென்பது சூழலுடனான உடன்பாடேயன்றி, விடுதலைப்புலிகளுடனான உடன்பாடல்ல.

 

2009இல் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட முடிவென்பது, அவர்களது முடிவாக மட்டுமே இருந்திருப்பின், நான் எனது பேனாவுக்கு ஓய்வு கொடுத்திருப்பேன். எங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டுவிட்டு, ஏதோ வாழ்ந்துவிட்டுப் போவோமேயென்று ஓதுங்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை, ஏனெனில் விடுதலைப்புலிகளின் முடிவு என்பது வெறுமனே விடுதலைப்புலிகளின் முடிவாக மட்டுமல்லாது, தமிழ் மக்களின் ஒரு குறிப்பிட்டபகுதியினர் இருள் வெளியொன்றுக்குள் தள்ளப்படுவதற்கும் காரணமாகியிருக்கிறது. அந்த மக்களின் இருள்வாழ்வுக்கான முழுப் பொறுப்பும் மூன்றுதசாப்தகால அரசியலை குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்த பிரபாகரனையே சாரும். இது உண்மை. ஆனால் இது மட்டும்தான் உண்மையா? அவ்வாறாயின், பிரபாகரனின் அரசியல் பாதையை ஆதரித்துநின்ற நூற்றுக் கணக்கான புத்திஜீவிகள், கருத்தியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் இடம் என்ன? அவர்களுக்கு இன்றைய நிலையில் எந்த பொறுப்பும் இல்லையா? இந்த கேள்விகள்தான் கடந்த காலத்தை காய்த்தல் உவத்தலின்றி பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்தை எனக்குள் பாய்ச்சியது. விடுதலைப்புலிகள் இவ்வாறானதொரு அவமானகரமான முடிவை தேடிக் கொள்வதற்கான வித்து எப்போது இடப்பட்டது? இதற்கான விடையை தேடும் பயணத்தில்தான், தூரத்தே இந்தியா என்னும் பகாசுர கருங்கற்பாறை தென்பட்டது. விடயங்களை ஆழ்ந்து ஊடுருவிச் சென்றபோது ஒரு விடயம் வெள்ளிடைமலையானது – அதாவது, விடுதலைப்புலிகளின் முள்ளிவாய்க்கால் முடிவுக்கான வித்து, 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் இடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு நடந்ததெல்லாம், தமிழ் மக்களின் வீழ்ச்சிக்கான, புலிகளின் வளர்ச்சிதான். இந்த விடயங்களை நான் பகிரங்கமாக குறிப்பிட்டதால், எனது பெயர் இந்தியாவின் கையாள்.

 

3
இந்தியாவை திட்டித் தீர்ப்பதில் சுகம் காணும் ஒரு பிரிவினர், இப்போதும் நம் சூழலில் இருக்கவே செய்கின்றனர். இந்த இடத்தில் ஒரு ஆபிரிக்க பழமொழியே நினைவுக்கு வருகிறது- ‘வானத்தை நோக்கி எச்சில் துப்பினாலும் அது முகத்தின் மீதுதான் விழும்’. இந்தியாவை திட்டித் தீர்ப்பதால், இன்பம் காணும் நிலையும் இத்தகைய ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் இந்தியாவை குற்றஞ்சாட்டும் ஒரு பண்பு, சில அரசியல் நோக்கர்கள் என்போரிடம் உண்டு. இதனை எனது சமீபகால எழுத்துக்களில் நான் வன்மையாக எதிர்த்து வந்திருக்கிறேன். அதற்கான தர்க்கங்களை நான் அடுக்கிச் சென்றதை எதிர்கொள்ள முடியாமையின் வெளிப்பாடே, என்னை இந்தியாவுடன் தொடர்புபடுத்தி விமர்சிக்கும் கையறுநிலை வாதங்களின் வெளிவருகையாகும். சில வேளை இந்திய உளவுத்துறையில் உள்ள ஓருவர் என்குறித்த இவ்வகை அபிப்பிராயங்களை கேட்க நேர்ந்தால் சிரிக்கக் கூடும். கூடவே இவ்வாறானவர்களின் அறிவை எண்ணி வியக்கவும் கூடும். ஏனெனில் நான் அவர்களுக்கு ஒரு விடயமே அல்ல.


தமிழ் ஊடகச் சூழலில் இந்திய ஆதரவு நிலைப்பாடொன்றை நான் முன்னிறுத்தி வருவதை சிலரால் சகிக்க முடியவில்லை. தொடர்ந்தும் பிரபாகரனிசத்தின் நிழலில் அமர்ந்து சிந்திக்கப் பழகியிருக்கும் சிலரால், யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறது. ஏனெனில் பிரபாகரனிசத்தில், யதார்த்த வாதத்திற்கு இடமேயில்லை. சகிப்புணர்வுக்கும் பிரபாகரனிசத்திற்கும் எட்டாப் பொருத்தம். பிரபாகரனிசத்தை தூக்கி நிறுத்த முயலும் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாமல், இந்திய எதிர்ப்பு வாதத்தை உயர்த்திப் பிடிக்கவே செய்வர். உண்மையில் இது அவர்களுடைய பிரச்சனையில்லை, மாறாக பிரபாகரனிசத்தின் பிரச்சனையாகும். ஏனெனில் பிரபாகரனிசம் என்பதே இந்தியாவிற்கு எதிரான ஒன்றுதான். பிரபாகரனிசத்தின் எழுச்சி என்பதே, இந்திய எதிர்ப்பை மையப்படுத்திய ஒன்றுதான். 1991ஆம் ஆண்டிற்கு பின்னரான பிரபாகரனின் வளர்ச்சியென்பதே, இந்தியாவின் பிராந்திய அதிகாரத்திற்கு எதிரான ஒரு அரசுசாரா (ழேn ளுவயவந)  சவாலாகும். இந்த விடயத்தை விளங்கிக் கொண்டால் மட்டுமே இந்தியாவும், பிரபாகரன் மையவாத தமிழர் அரசியலும் எந்தக் காலத்திலும் ஒரு புள்ளியில் சந்திக்க முடியாது என்பதை, ஒருவரால் விளங்கிக் கொள்ள முடியும். அமெரிக்காவிற்கு பின்லேடன் எப்படியோ, அப்படித்தான் இந்தியாவிற்கு பிரபாகரன். ஆனால் அமெரிக்கா பின்லேடணை அணுகியது போன்று, இந்தியா பிரபாகரனை அணுகியிருக்கவில்லை. ஒரு வகையில் இந்தியா பிரபாகரன் விடயத்தில், பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறதென்றே சொல்வேன். பாகிஸ்தானுக்கு தெரியாமல், பாக்கிஸ்தானின் ஆள்புல எல்லைக்குள் ஊடுருவி பின்லேடனை அழித்தது போன்று, இந்திய உளவுத் துறையாலும் பிரபாகரனை அழித்திருக்க முடியும். ஆனால், இந்தியா அவ்வாறு செய்ய முற்படவில்லை. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே, அவ்வாறு இந்தியா நடந்து கொண்டிருக்க வேண்டும். இவைகள் பற்றியெல்லாம் பேசுவதற்கு எங்கள் மத்தியில் ஆட்களில்லை. எனவே பேசா விடயங்களை நான் பேச முற்பட்டேன். விடுதலைப்புலிகளின் அழிவுக்கு பின்னர் நிலைமைகளை துல்லியமாக ஆய்வுக்குட்படுத்திய போதே, இத்தகையதொரு முடிவுக்கு நான் வர நேர்ந்தது.


இந்தியாவின் இடத்தை நான் தவறாக புரிந்த காலமொன்றும் இருந்தது உண்மையே! அந்த நாட்களில், நானும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறேன். பிரபாகரனிசத்தின் நிழலில் நான் ஒதுங்கிக்கிடந்த காலமது. ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறி வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்த அன்றைய நாட்களில், உலகத்தை ஊடுருவிப் புரிந்து கொள்வதற்கு, தமிழ் மொழி மட்டுமே என் கையில் இருந்தது. இந்தக் காலத்தில் எனக்கு அறிமுகமாகிய சில அறிவாளிளும், இந்திய எதிர்ப்பு சுலோகங்களையே என் முன் தூக்கிப் போட்டனர். இந்தியா என்பது தேசங்களின் சிறைக்கூடு, அது சிதறிப் போகும் காலமும் வரும், இந்திய எதிர்ப்பு நிலையை பேணிக்கொள்வதே, தமிழர் தேசத்திற்கு நல்லது – இறுதியில் அவர்களது வர்ணணைகளால் மனசு வசியப்பட்டது. பின்னர் அவர்களுடன் சேர்ந்து, நானும் இவற்றை உச்சரிக்கப் பழகிக் கொண்டேன். இந்திய எதிர்ப்பை முன்னிறுத்துவதில் ஒரு புளகாங்கிதம் கூட ஏற்பட்டது. இதுவும் ஒரு அறியாப்பருவ அனுபவம்தான். பிரபாகரனின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட அன்ரன் பாலசிங்கம் தனது ‘விடுதலை’ நூலில் குறிப்பிட்டிருப்பதை உச்சரிப்பதில் அன்றைய நாட்களில் இறுமாப்புமிருந்தது. இந்த நூல் திருகோணமலையில் வெளியிடப்பட்ட போது, நிகழ்வில் பேசியவர்களின் நானும் ஒருவன். இன்று தமிழ் மக்களின் தலைவராக கருதப்படுகின்ற இரா.சம்பந்தனும் அன்று மேடையில் இருந்தவர்களில் ஒருவர். பாலசிங்கம் பதிவுசெய்திருந்த ஒரு விடயத்தை நான் சிலாகித்து உச்சரித்தேன். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடான மாகாணசபையை எதிர்த்து நின்ற, பிரபாகரனின் துணிவை பாலசிங்கம் சிலாகித்திருந்தார் – ஓப்பந்தத்தை மறுத்து, ஆயுத ஒப்படைப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்த பிரபாகரனிடம், அப்போது இந்தியத் தூதுவராக இருந்த டிக்சிட் இவ்வாறு கூறியதாக பாலா பதிவு செய்திருக்கின்றார். டிக்சிட் அவ்வாறு கூறினாரா இல்லையா என்பதை என்னால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

 

‘தனது சுங்கானை பிரபாகரனிடம் காண்பித்து, இதனை நான் பற்றவைத்து புகைத்து முடிக்கும் நேரத்திற்குள் இந்திய இராணுவம் உங்களது போராளிகள் அனைவரையும் துவம்சம் செய்துவிடும், என்று கூறி ஏளனமாக எக்காளமாகச் சிரித்தார். எங்கள் எல்லோரது முகங்களும் கோபத்தினால் சிவந்தது. மிகவும் சிரமப்பட்டு ஆத்திரத்தை அடக்கிய பிரபாகரன், “உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று உறுதிபடக் கூறினார். டிக்சிட்டுக்கு கோபத்தால் உதடுகள் நடுங்கின. மிஸ்டர் பிரபாகரன், நீங்கள் இந்திய அரசாங்கத்தை இத்துடன் நான்கு தடவைகள் ஏமாற்றிவிட்டீர்கள்” என்றார். “அப்படியானால், நான்கு தடவைகள் எமது மக்களை இந்திய அரசிடமிருந்து காப்பாற்றியிருக்கிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்றார் பிரபாகரன் – அன்று இதனை வாசிக்கும் போது பூரிப்பு ஏற்பட்டது உண்மை. அதுவும் அதிகம் படித்தவரான பாலசிங்கமே சொல்லும் போது கேட்கவா வேண்டும். ஆனால் 2009இற்கு பின்னர் நிலைமைகளை நிதானமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்ள முற்பட்டபோதுதான் தெரிந்தது பிரபாகரனின் அன்றைய இந்திய எதிர்ப்பு இறுதியில் தமிழ் மக்களை எங்குகொண்டு சேர்த்திருக்கறதென்று.

 

4
இன்று மட்டுமல்ல, என்றுமே இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா ஒன்றுதான் தீர்க்கமான சக்தி. ஆனால் 87இல் இருந்த புறச் சூழல் இன்றில்லை. இந்தியா வலிந்து உதவ வந்தபோது, தமிழர்கள் வேண்டாம் போ என்றார்கள். இப்போது மீண்டும் வா என்கிறபோது, வரக் கூடிய சூழ்நிலையில் இந்தியா இல்லை. அன்று இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டதில் பிரபாகரன் மட்டுமல்ல குற்றவாளி. படித்தவர்களென்று தங்களை கருதிக்கொண்ட, தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் குற்றவாளிகள்தான். ஒரு முறை, முன்னாள் வடகிழக்கு மகாணசபையின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார் – ‘அன்று நாங்கள் அமிர்தலிங்கத்திடம் சென்று அண்ணன் நீங்கள் மாகாணசபையை எடுங்கள், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்று வேண்டினோம். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை’ எவரும் முன்வராத சூழலில்தான், நாங்கள் போட்டியிட நேர்ந்தது. உண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று மகாணசபையை பொறுப்பேற்றிருந்தால், நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கும். இன்று அது தவறு என்பதை சம்பந்தன் ஏற்றுக் கொள்கின்றார். அன்று அமிர்தலிங்கம் மாகாணசபை தேர்தலில், போட்டியிடாமைக்கு கொள்கையல்ல காரணம். உயிரச்சம்தான் காரணம். ஆனாலும் அவரால் புலிகளிடமிருந்து தப்ப முடிந்ததா?


முன்னர் கடைப்பிடித்த ஒரு விடயம் தவறென்று கருதினால், அதனைத் திருத்திக் கொள்ள முற்படுவது தவறல்ல. இந்த அடிப்படையில்தான் எனது இந்தியா தொடர்பான பார்வையும், மாற நேர்ந்தது. ஏனெனில் எனது பார்வை தவறானது. இது ஆச்சரியமான விடயமுமல்ல. தேடல், அறிவு, புதிய சூழல்நிலை நம்முன்னிறுத்தும் யதார்த்தம் இவைகளுக்கேற்ப, நமது அரசியல் முடிவுகளும் மாறவே செய்யும். அது மாறவும் வேண்டும். ஏனெனில் அரசியல் நிலைப்பாடென்பது மத அடிப்படைவாதம் போன்றதல்ல, மாற்றமற்று தொடர்வதற்கு. இன்று முப்பது வருடங்களை யுத்தத்தில் கழித்துவிட்டு, போகும் திசையறியாது தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிற சூழலிலும் கூட, சற்று நிமிர்ந்து பார்க்கும் போது மீண்டும் அந்த பகாசுர கருங்கற்பாறைதானே தெரிகிறது. ஏனெனில் இந்தியா என்பது இலங்கையை பொறுத்தவரையில், தவிர்க்க முடியாதவொரு புவிசார் நிர்பந்தம். உலகில் எவர் இலங்கை பற்றி பேசினாலும், அவர்களது பார்வைகள் அனைத்தும் இறுதியில் இந்தியா, என்னும் அந்த தெற்காசியப் பெரும்பாறையில் பட்டே தெறிக்கும்.

 

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய சிந்தனையாளரான சாத்தர் தனது முதலாவது நாவலான குமட்டலை  (Nausea)26 வருடங்களுக்கு பின்னர் விமர்சித்த போது சொன்னவற்றையே, நானும் உச்சரித்துக் கொள்கின்றேன் – . உலகம் பற்றிய அன்றைய பார்வையில் எனக்கு தெளிவு இருக்கவில்லை, இன்று மெய்யுலகின் உண்மைநிலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்தியா பற்றிய அன்றைய பார்வையில் என்னிடம் தெளிவு இருந்திருக்கவில்லை ஆனால் இன்று உண்மைநிலையை உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்தியா பற்றி மட்டுமல்ல, சர்வதேச உறவுகளின் ஏற்ற இறக்கங்களின் சூட்சுமங்களையும் இப்போது நன்றாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

 

http://eathuvarai.net/?p=2796

ஆய்வாளர் இந்தியாவின் இலங்கை சார்பான அணுகுமுறைகள் சரியானவை என வாதாடுகின்றார். இந்தியா தவறுகளை விட்டாலும் அது அதன் நலங்களை உடனடியாக பாதிக்காது. ஆனால் ஒரு நீண்டகால அடிப்படையில், ஐம்பது வருடங்கள், அதன் கொள்கை தவறானதாக பார்க்கப்படலாம்.
 
தமிழர் தரப்பு அன்று இந்தியாவின் இராணுவ வரை எதிர்த்தன. ஆனால் இன்று இந்தியாவை கேட்டாலும் இந்திய படைகள் வர முடியாத நிலை என்கிறார். ஆம், காரணம் சிங்கள ஆக்கிரமிப்பு படைபலம்.

சிங்கள இல்லை இந்திய படைகளை பெரும்பாலான தமிழர்கள் ஆக்கிரமிப்பு படைகளாகவே பார்க்கின்றார்கள் என்ற வெளிப்படை உண்மையை ஆய்வாளர் புரிந்ததாக தெரியவில்லை.

யத்தீந்திரா நாணல் மாதிரி, 2009க்கு முன்புக்கு ஒரு தர்க்கமும் அத்ன் பின்னர் இன்னொன்றும் வைக்கிறார். நாணல் தன்னைத்தான் எப்போதும் காப்பற்றிகொள்கிறது. ஆனால் இந்த புல்லின் மீது ஒரு சிறு குருவி கூட கூடுகட்டி வாழ்ந்து வந்தது இல்லை. தமிழருக்கு ஒரு குடிலுக்கு போராடியவர் பிரபாகரன். தலைவர் தனக்கு 2009 வரையும் வெற்றி தேடித்தந்த கொள்கைகளை தொடந்தும் பின் பற்றினார். மேலும் அண்மையில் கொழும்பில் சம்பந்தர் கொடுத்த பேட்டியில் "நாம் இந்தியாவை தொடர்ந்து பின்பற்ற முடியாது" என்ற பொருளில்தான் பேசியிருக்கிறார்.

 

வழமையான வசதி ஆய்வாளர்கள் போலவே இவரும் 30 வருட தமிழர் போராட்டத்தை பற்றித்தான் கதைக்கிறார். 65 வருடகாலத்தில் சிங்கள அரசு சிங்கள பகுதிகளில் செய்த அட்டூளியங்களை கூட மறக்கிறார். 65 வருடகாலமாக தடம் புரண்டிருக்கும்சிங்கள அரசு,  பிரபாகரன், அல்லது அமிர்தலிங்கம்  மாகணசபையை ஏற்றிருந்தால் இன்று  ஜனநாயக அரசாக வந்திருக்கும் என்ற பொருளைத்தான் தான் இவரின் வாதத்திலிருந்து எடுக்க வேண்டும். 

 

அதிகாரமில்லாத மாகாண சபையை தன்னும் அரசு ஏற்கவில்லை. கூட்டமைப்பும் ஏற்கவில்ல. இன்று இந்தியா கூட ஏற்கவில்லை. இதை பிரபாகரன் முற்கூட்டி அனுமானித்ததை, போரில் கிடைத்த தோல்வியை வைத்து இழக்காரமாக பேசுகிறார்.

 

போரில் தோற்றது ஒன்று. அதிகாரமில்லாத மாகாண சபையை நிராகரித்தது இன்னொன்று. 2/3 பெரும்பான்மையை வேண்டிய போதெல்லாம் பெற்றுக்கொள்ளும் சிங்கள SLFP, UNP யிடம் மாகாண சபை என்பது செல்லாத கதை. பிரபாகரன் அரசியலில் இல்லாத இன்று கூட அந்த உடன்படிக்கையை செய்த இந்தியாவால் அதை முன்னெடுக்க முடியவில்லை. கிருஸ்ணா 2012 சனவரியில் 13 + பற்றி கொடுத்த வாக்குறுதியை தன்னும் இந்தியாவுக்கு நிறைவேற்ற முடியவில்லை. அதன் பின்னர் இந்தியாவே இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் வாக்களித்துவிட்டது.  

 

இந்தியாவின் இன்றைய இலங்கை அரசு சம்பந்தாமான நிலையை இந்தியா போர்க்காலத்தில் எடுக்க வில்லை. அதை யத்தீந்திரா மறந்து போகிறார். மேலும் பிரபாகரன் இந்த்தியாவின் ஒசமாபின் லேடன் என்று வருணிக்கும் இவர் குழப்பத்தால், பிரபாகரன் மாகாண சபையை ஏற்றிருந்தால் இந்தியா அவரை முதல் அமைச்சராக்கி, ஒசமாபின் லேடனுக்கும் அமெரிக்கா நோபல் பரிசு பரிந்த்துரைத்திருக்கும் என்கிறார்,

 

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடு இலங்கைக்கு பக்கத்தில் இருப்பதின் புவிசார் அரசியலை விளங்கிக்கொள்வது ஒன்று. இன்றைய காங்கிரசின் ஊழலை விளங்கிகொள்வது இன்னொன்று.  மேலும் இலங்கை தனது ஊழலை வைத்துக்கொண்டு, தொடர்ந்து மன்மோகன் சிங்கை காலடியில் போட்டு மிதித்து பல படியேறப்போகுது என்று அரசியல் எதிர்வு கூறுவதில் பலன் இல்லை. ஒரு இந்திரா காந்தி பிறந்தால் இலங்கை தரை மட்டம் ஆகாது என்று அடித்துவைத்து கூறமுடியாது. நிச்சயமாக படைஎடுத்து சீனாவை பிடிங்கித்தான் எடுத்திருப்பா. சுஸ்மா,மோடி வந்தாலே இலங்கை சோனியாவின் சீலைக்குள் மறைவது நின்றுதான் போகும்.

 

 மேற்கு நாடுகளிடமிருந்து இலனகையை காப்பாறும் பலம் இந்தியாவுக்கு அல்ல சீனாவுக்கு தன்னும் இருப்பதாக எதிர்வு கூறுவது அபத்தம். இன்று ரஸ்சியாவுக்கு பக்கத்தில் இருக்கும் லத்திவியா, எத்தோனியா, ஜோர்ஜியா, போலனந்து, கங்கேரி எல்லாமுமே தமது தனிக் கொளகையை பின் பற்றுகின்றன. ஆனல் ஸ்ரனின், குருசோவ், பிரஸ்னோவ், சேனன்ங்கோ இருந்த போது இவர்கள் ரஸ்சியாவின் அடிமைகள். சோவியத்தின் தனிப்பட்ட தலைவர்களை ஆணடாண்டுகளாக மேற்கு நாடுகள ஒதுக்கி சோவியத் யூனியனை விழுத்தி இன்று இப்படியாய் போகச்  செய்திருக்கின்றன. வலுவிழந்த ரஸ்சியா தனது முதல் தர எதிரியான சீனாவுடன் கூட்டு வைக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளபட்டிருக்கிறது. (ரஸ்சியாவுக்கு நல்ல காலம் இருந்தால் சீனா இலங்கையின் மூக்குக்குள் விரலைவிட்டு ஆட்டுவது போல ஆட்டாமல் விடும்)  சோவியத்தை உடைத்தது மாதிரி இந்தியாவை உடைத்து தமிழ் ஈழத்தை ஜனநாயக நாடாக மாற்ற வேண்டுமாயின் மேற்கு நாடுகளுக்கு அது வாயில் வைத்த கேக்கை உண்பது போன்றதாகும்.

 

இலங்கைக்கு மேற்கில் இருந்த நற்பெயரை கட்டியெழுப்பியிருந்தவர்கள், வெள்ளையரும் தமிழரும். இன்று உலகின் எந்த மூலையிலும் இலங்கைக்கு அந்த நற் பெயர் இல்லை. பொழுது இருளத்தொடங்க, இருந்த எண்ணையை உற்றி இலங்கை அரசு சொக்கபானை கொழுத்திவிளையாடிவிட்டது.  இனி வரும் இரவு முழுவதும் இலங்கை வட கொரியா, ஈரான் மாதிரி இருட்டுக்குள் இருக்க வேண்டி வரலாம். மகிந்தாவை வரவேற்றதால் இதை  பிரபாகரன் தெளிவாக தீர்க்க தரிசனம் பண்ணியிருந்தார்.

 

ஆனால் பணத்தையும், பெண்களையும் கொடுத்து மேற்குநாடுகளில் அரசியல் செல்வாக்கை லொபி கம்பனிகள் மூலம் வாங்கும் கலையில் புலிகள் முன்னேறியிருக்கவில்லை. இதனால் உண்மையை கதிர்காமர் இலகுவில் மூடி மறைத்துவிட்டார். இதிலும் சமாதனம் என்ற பேரில் துரோகத்தை பாவித்து புலிகளை வென்ற கதிர்காமர் தமிழருக்கு கொண்டுவந்த அழிவை தலைவர் பிரபாகரன் கொண்டுவரவில்லை. ஆனால் போரில் தோற்ற தலைவர் தனது முடிவை தான் எடுத்துக்கொண்டார். சமாதனம் பேசி துரோகம் செய்த கதிகாமர் தனது முடிவுக்கு கூட மகிந்தவிடம் பிச்சை கேட்டுத்தான் அதை வாங்கி முடித்தார். தனது மெய்பாதுகாப்பு நீக்கப்பட்ட போது பேப்பர் பேப்பராக அழுதுதான் பார்த்தார்.

Edited by மல்லையூரான்

யதீந்திரா அவர்களின் தனி மடலை யாரவது தெரிந்திருந்தால் இந்த கேள்வியை வைத்து அடுத்து கட்டுரையை முன்வைக்க வேண்டுகின்றேன்:

  1. விடுதலைப்புலிகளை அழிக்க உதவியதன் மூலம் இந்தியா சாதித்தது என்ன?
  2. கடந்த ஐ.நா. மனித உரிமை தொடரில் ஏன் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது?
  3. இலங்கை மீதாக சீனாவா இல்லை இந்தியாவா இன்று செல்வாக்கு கொண்டுள்ளது?

'இலங்கையில் உள்ள அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்டு தமிழர் தாயகப்பகுதியில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை சர்வதேசம் உருவாக்கி இலங்கைக்கு எதிரான சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117081

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.