Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றங்களுக்கான புதிய சான்றுகள் - சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குற்றங்களுக்கான புதிய சான்றுகள் - சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்குமா?

[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 08:47 GMT ] [ நித்தியபாரதி ]

 

சிறிலங்காப் படைகளின் கண்மூடித்தனமான தாக்குதலில் தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டமை, மற்றும் ஏனைய திட்டமிட்ட படுகொலைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கப் போதியதாக இல்லையா. இந்நிலையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான புதிய சான்றுகளைக் கொண்டாவது சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்குமா?

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல் தொடர்பான புதிய சான்றுகளை 'தி இந்து' நாளிதழ்' வெளியிட்டுள்ளது. இதில் தொடராக மூன்று ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது ஒளிப்படத்தில், சிறுவன் ஒருவன் பதுங்குகுழி ஒன்றிலுள்ள வாங்கில் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. இரண்டாவது ஒளிப்படத்தில் அதே சிறுவன் பதுங்குகுழியில் இருந்தவாறு நொறுக்குத்தீனி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மூன்றாவது ஒளிப்படத்தில் அந்தச் சிறுவன் மார்பில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களுடன் நிலத்தில் இறந்து கிடப்பதைக் காணலாம்.

ஒளிப்படங்களில் காணப்படும் இந்தச் சிறுவனை நாம் ஏற்கனவே முன்னைய ஒளிப்படங்களில் பார்த்துள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 12 வயதான இளைய மகன் பாலச்சந்திரன் பிரபாகரனே இந்தச் சிறுவனாவான். சிறிலங்கா இராணுவத்தினர் 12 வயதேயான இந்தச் சிறுவனைப் படுகொலை செய்துள்ளனர் என்பதை இந்த ஒளிப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த ஒளிப்படங்களில் மூன்றாவது காணப்படும் ஒளிப்படத்தை ஒரு ஆண்டின் முன்னர் நாம் பார்த்துள்ளோம். அதாவது மார்பில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களுடன் நிலத்தில் இறந்து கிடக்கும் இந்தச் சிறுவனின் ஒளிப்படம் முன்னர் வெளியிடப்பட்டது. பிரித்தானியாவின் சனல் 04 ஊடகத்தால் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான இரண்டாவது காணொலியில் இந்தச் சிறுவன் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் பதிவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இச்சிறுவன் தொடர்பான புதிய ஒளிப்படங்கள், இச்சிறுவனின் படுகொலை தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"இப்புதிய ஒளிப்படங்கள் மனங்களை உறையவைக்கின்றன. இந்தச் சிறுவன் சிறிலங்கா இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, பதுங்குகுழி ஒன்றில் இராணுவ வீரன் ஒருவனால் காவல் காக்கப்படுவதையும் ஒளிப்படங்கள் தெளிவாகக் காண்பிக்கின்றன. இதன் பின்னர் ஆகக்குறைந்தது இரண்டு மணித்தியாலங்களில் இந்தச் சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான்" என சனல் 04 தொலைக்காட்சியால் வெளியிடப்படும் காணொலியின் இயக்குனர் கலும் மக்றே தெரிவித்துள்ளார்.

மெய்க்காப்பாளர்களுடன் இருந்த பாலச்சந்திரன் என்கின்ற 12 வயதான இந்தச் சிறுவன் இராணுவத்தில் சரணடைந்ததாகவும், பிரபாகரன் தொடர்பான தகவல்களைத் தருமாறு சிறிலங்கா இராணுவத்தினர் இவர்களைத் துன்புறுத்திய பின்னர் இவர்கள் சுடப்பட்டதாகவும் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரால் வாக்குமூலம் வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டில் சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட காணொலியில் குறிப்பிடப்பட்டது. இது தொடர்பான ஆவணச் சான்றுகள் மற்றும் தடயவியல் வல்லுனர்களின் உதவியுடன் சனல் 04 தொலைக்காட்சி சேவை தற்போது இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான புதிய ஆவணமானது சனல் 04 தொலைக்காட்சி சேவையால் அடுத்த மாதம் ஜெனீவாவில் வெளியிடப்படவுள்ள 'போர் தவிர்ப்பு வலயம்: சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற மூன்றாவது காணொலியில் பதிவாக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இரண்டாவது தீர்மானம் முன்வைக்கப்படவுள்ள நிலையில் இக்காணொலி திரையிடப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிராக கடந்த ஆண்டில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அனைத்துலக சமூகத்தால் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானத்தின் போது இந்தியாவின் நிச்சியமில்லாத பங்கு தொடர்பாக மக்றே குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவால் தலைமை தாங்கப்பட்டு 23 நாடுகளால் ஆதரவளிக்கப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது சிறிலங்கா தன்மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்பளிப்பதுடன் இதயசுத்தியுடன் மீளிணக்கப்பாட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

கடந்த ஆண்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நாகரிகமான நாடுகள் ஏற்றுக் கொண்டு வாக்களித்த போதிலும், இந்தியா இறுதி நேரம் வரை இது தொடர்பான தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவில்லை. அத்துடன் இத்தீர்மானத்தில் சொல்லாடல்களில் குறைப்புச் செய்யப்பட வேண்டும் எனவும் இந்தியா கோரியிருந்தது.

தற்போது சிறிலங்கா இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளியிடப்படும் புதிய சான்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியா சிறிலங்கா விடயத்தில் உறுதியான நிலைப்பாடொன்றை எட்டவேண்டும் என மக்றே வலியுறுத்துகிறார்.

"தற்போது வெளியிடப்படவுள்ள காணொலியில் காண்பிக்கப்படும் புதிய சான்றானது இந்திய அரசாங்கம், பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதற்கான அழுத்தத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, சிறிலங்காவில் இடம்பெறும் மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கான வினைத்திறனுள்ள திட்டம் ஒன்றை வரைவதற்கான அழுத்தத்தையும் இப்புதிய சான்று வழங்கும்" என மக்றே குறிப்பிட்டுள்ளார்.

"இந்தச் சிறுவனை இரக்கமற்ற முறையில் படுகொலை செய்த அந்த இராணுவத்தினனின் மனோநிலை எவ்வாறிருக்கும் என்பதை கற்பனை செய்வது கடினமானதாகும். இந்தச் சம்பவம் சிறிலங்கா இராணுவம் தொடர்பாக மிகத் தீவிர சந்தேகத்தை எழுப்புகிறது. மாதங்கள் கடக்கின்ற போது திட்டமிட்டு படுகொலைகளைப் புரிந்ததற்கான சாட்சியங்கள் மேலும் அதிகரிக்கின்றன. இதனால் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த புலிகளின் பெண் போராளிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் மனதை சில்லிட வைக்கின்றன" என மக்றே குறிப்பிடுகிறார்.

"பாலச்சந்திரன் என்கின்ற 12 வயதான சிறுவன் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் இந்தச் சிறுவன் கிட்டிய தூரத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை தடயவியல் வல்லுனர் ஒருவரால் உண்மையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது கண்கள் கட்டப்படாத நிலையில் தனது மெய்ப்பாதுகாவலர்கள் தன் கண்முண்ணே சுடப்பட்டு கொல்லப்பட்டதை இந்தச் சிறுவன் பார்த்திருக்க முடியும். அத்துடன் இந்தச் சிறுவன் தொடர்பான ஒளிப்படங்கள் தொடராகக் காணப்படுவதையும் தடயவியல் வல்லுனர்கள் உண்மையென உறுதிப்படுத்தியுள்ளனர்" என மக்றே மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் பாலியல் வன்புணர்வுகள் படுகொலைகள் போன்றவற்றை உறுதிப்படுத்தி சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் காணொலிகள் எல்லோரையும் அதிர்ச்சியில் உறையவைத்தன. யுத்தத்தின் போது 40,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

கொழும்பில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரியான கோர்டன் வெய்ஸ் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இவரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் சனல் 04 தொலைக்காட்சி சேவையின் காணொலிகள் என்பன கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு உதவின.

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்கா அரசாங்கம் தனக்கெதிராக கடந்த ஆண்டில் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு செயற்படாததால் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள 22வது மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மிகக் குறைந்த பரிந்துரைகளையே சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் தனது நாட்டில் கருத்துச் சுதந்திரம், பொதுச் சுதந்திரம் போன்றவற்றில் அரசாங்கம் தலையீடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த வரிசையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சட்ட ரீதியாக கேள்வி கேட்ட நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதேபோன்று சிறிலங்காவில் அரசாங்கத்தை விமர்சித்து கருத்து வெளியிடும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் போன்றோர் தொடர்ந்தும் சித்திரவதைகளுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

சிறிலங்காவின் வடக்கில் அந்நாட்டு அரசாங்கம் இராணுவ ஆட்சியை நடாத்துவதாகவும், வடக்கில் வாழும் மக்கள் போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்ததாகவும் கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை குற்றம் சுமத்தியிருந்தார்.

சிறிலங்காவின் யுத்தம் இடம்பெற்ற வன்னிப்பகுதியில், போரில் உயிர் நீத்த 20,000 வரையான தமிழ்ப் புலிகளின் புதைகுழிகளை சிறிலங்கா இராணுவம் அழித்து அதற்குப் பதிலாக புதிய அருங்காட்சியகங்களையும், சிறிலங்கா இராணுவ வீரர்கள் தொடர்பான போர் நினைவகங்களையும் அமைத்துள்ளது.

இவ்வாறான யுத்த வெற்றியைக் காண்பிக்கும் நினைவிடங்களும், போர்ச் சின்னங்களும் உள்நாட்டில் வாழும் மக்களின் ஆழமான உணர்வுகளைப் பாதித்து மேலும் பிரிவினையைத் தூண்டும் என நவி பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார். வன்னிப் பகுதியில் இராணுவ சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், இந்த இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களின் உறவுகளைப் பாதிப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

"இவ்வாறான பிரச்சினைகள் வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகக் குறுகிய காலத்தில் சிறிலங்காவில் அரசியல் அடக்குமுறை ஏற்படுவதுடன் இது நீண்ட காலத்தில் மேலும் அதிக விளைவை ஏற்படுத்தும். இதனால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கான கெட்டவாய்ப்பாகவும் இது அமையும்" என மக்றே இந்தியாவை எச்சரித்துள்ளார்.

மனித உரிமைகளை மதித்து தமிழ் நாட்டில் வாழும் தனது சொந்த மக்களின் கோரிக்கைகளை இந்தியா நிறைவேற்றாவிட்டால், இந்தியா தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

மூலோபாய ரீதியாக நோக்கில், பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு அவற்றில் அதிகம் தங்கியுள்ள, தனது அயல்நாடான சிறிலங்காவில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்பட்டு சர்வதிகாரம் நிலவுவதை இந்தியா அனுமதித்தால் அது இந்தியாவுக்கு நிச்சயம் ஆபத்தை உண்டுபண்ணும்.

செய்திக்கட்டுரையின் வழிமூலம் : Firstpost by G Pramod Kumar

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130221107823

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய திருடன் சின்னத்திருடனைத் தண்டிப்பானா? பொறுத்திருந்து பார்க்கலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கடந்த காலங்களை வைத்துப்பார்க்கும் போது சிறிலங்காவை எப்படியாவது காப்பாற்றும்.இல்லாவிடில் நளுவலை கடைப்பிடிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.