Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

 
பரலி சு. நெல்லையப்பர் எழுதிய 

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

தோற்றம்

திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி யயன்று திருஞான சம்பந்தர் முற்காலத்தில் போற்றிப் புகழ்ந்த திருநெல்வேலி நாட்டைப் பிற்காலத்தில் உலகத்தார் போற்றுமாறு செய்த பல பெரியோர்களில் காலஞ்சென்ற திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் ஒருவர். திருநெல்வேலி நாட்டிற்கு மட்டுமின்றித் தென்னாடு முழுமைக்குமே பெரியோர்களில் சிதம்பரம் பிள்ளை தலைசிறந்தவர்.

திருநெல்வேலி ஜில்லாவில், அக்காலத்தில் கும்பினி சர்க்காரை எதிர்த்துக் கலகம் செய்து பேர்பேற்ற கட்டபொம்மு நாயகன் அரசாண்ட பாஞ்சாலங் குறிச்சியைத் தனக்கு அருகே கொண்ட ஒட்டப்பிடாரம் என்ற சிற்றூரில் , சைவ வேளாளர் குலத்தில் , ஆங்கீரச ஆண்டு, ஆவணி மாதம், 22 - ந் தேதி வியாழக்கிழமையன்று அஸ்த நட்சத்திரத்தில் (கி.பி.1872, செப்டம்பர் மாதம் 5-ந் தேதி) சிதம்பரனார் பிறந்தார். அவர் தந்தையார் வ.உலகநாத பிள்ளை, எட்டையபுரம் ஸமஸ்தான வக்கீலாக விளங்கினார். முதலில், தான் பிறந்த ஊரிலும், பின்னர் தான் பேரும் புகழும் பெறுவதற்கு உரியதாகத் திகழ்ந்த தூத்துக்குடியிலும், அதற்குப் பின்னர் திருநெல்வேலியிலும் சிதம்பரனார் கல்வி கற்றார். இறுதியில் திரிசிரபுரத்தில் வக்கீல் உத்தியோகத்திற்குரிய கல்வியைக் கற்றார். அக்காலத்தில் ஆங்கிலத்தில் மெட்ரிக்குலே­ன் என்று வழங்கிய வகுப்பு வரை பயின்று அதில் தேர்ச்சிப் பெற்றார். 1895 ம் ஆண்டு, அவர் வக்கீல் பரீட்சையில் தேறினார். இளமையில் நம் சிதம்பரம் பெற்றோருக்கு அடங்காத முரட்டுப் பிள்ளையாகவே விளங்கினார். 

இளமையிலேயே பொதுநல ஊக்கத்துடன் விளங்கிய சிதம்பரனார், தம் தந்தையார் மேற்கொண்டிருந்த வக்கீல் உத்யோகத்தையே தாமும் நாடினார். வக்கீல் தொழிலில் பிள்ளையார் பொருள் வருவாய் ஒன்றை மட்டும் கருதாமல், உண்மையில் நியாயவாதியாகவே விளங்கினார். ஏழை மக்கள் வழக்கில் அவர் இலவசமாகவே வேலை செய்வார். அவர் வக்கீலாயிருந்த பொழுது, பொது ஜனங்களைப் பல வழிகளில் வருத்திக் கொண்டிருந்த போக்கிரிகளும் , போலீஸ் உத்யோகஸ்தரும், மற்ற உத்யோகஸ்தரும் தண்டனை பெறுமாறும், உத்யோகம் இழக்குமாறும் செய்திருக்கிறார். பிள்ளை வக்கீலாயிருந்த பொழுது, தண்டத் துறையில் (கிரிமினல்) திறமைசாலியயன்று பேர் பெற்றதுடன், நல்ல வருவாயும் பெற்று வந்தார். அதனால் அவர் தமிழ்ப் புலவர்களையும் ஏழை மக்களையும் பெரிதும் ஆதரித்து வந்தார். அவரிடம் ஆதரவு பெற்ற புலவர்கள் பலர், அவருக்குப் பாமாலை சூட்டி வாழ்த்தியிருக்கிறார்கள்.

 
பெரியாருக்கு வ.உ.சிதம்பரனார் எழுதிய கடிதம்

Photo+3.jpgPhoto+4.jpg

தமிழாராய்ச்சி

பிள்ளையார் வக்கீலாயிருந்த பொழுதே சைவ சமய ஆராய்ச்சியில் ஈடுபட்டதுடன், தமிழாராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். தமிழில் அவர் பெரிதும் விரும்பிக் கற்றுப் போற்றிய நூல், தெய்வத் தமிழ்மறையயன்று வையம் போற்றும் திருக்குறள் ஆகும். சுவாமி வள்ளிநாயகம் என்ற பெரியாருடன் சேர்ந்து ‘விவேகபாநு’ என்ற வேதாந்த மாதப் பத்திரிக்கையைப் பிள்ளையார் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் நடத்தினார். ‘விவேகபாநு’ பின்னர் மதுரையிலும், தென் ஆப்பிரிக்கா டர்பன் நகரிலும் சில ஆண்டுகள் நடந்து வந்து, பின்னர் மறைந்து விட்டது.

சுதேசி

வடக்கே, வங்காளத்தில் வங்காளப் பிரிவினையை ஒட்டி அந்நாளில் தோன்றிய சுதேசி இயக்கம் பிள்ளையார் உள்ளத்தைக் கவர்ந்தது. இராமகிருஷ்ண பரமஹம்ஸர் திருக்கூட்டத்தைச் சேர்ந்த அபேதானந்தர், இராமகிருஷ்ணாந்தர் போன்ற பெரியோர் பழக்கம், பிள்ளை உள்ளத்தில் இருந்த சுதேசி ஊக்கத்தை வளர்த்து விட்டது. அதன் பயனாகப் பிள்ளையார் தூத்துக்குடியில் தருமசங்கம் என்ற நெசவுச் சாலையையும் சுதேசிப் பண்ட சாலை ஒன்றையும் நிறுவினார். காங்கிரஸ் இயக்கத்திலும் ஊக்கம் கொண்டு உழைக்கத் தொடங்கினார். சொற்பொழிவு வாயிலாகச் சுதேசிப் பிரச்சாரமும் செய்தார். தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் கூடிப்பேசும் முறையைப் பிரபலப் படுத்தியவர் பிள்ளையே ஆவார். பிள்ளை திறமையான பேச்சாளரானமையால், அவர் பேச்சுக்கு நாட்டு மக்களிடம் நல்ல செல்வாக்கு ஏற்பட்டது.

நம் தேசத் தலைவர்களில் திலகர் பெருமானிடம் பிள்ளைக்கு தெய்வ பக்தி ஏற்பட்டிருந்தது. 1907 -ம் ஆண்டு சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாசபைக்கு, ஸ்ரீமான் பிள்ளை இப்பொழுது புதுவையில் ஸ்ரீ அரவிந்தாசிரம வாசியாயிருக்கும் பெரியாரான சென்னை வக்கீல் எஸ்.துரைசாமி ஐயர், காஞ்சி வரதாச்சாரியார் , கவி சுப்பிரமணிய பாரதியார், வி.சர்க்கரைச் செட்டியார் முதலிய பல நண்பர்களுடன் சென்றார். அங்கே நடந்த ஒரு சமரச ஏற்பாட்டில், தென்னாட்டு மதவாதிகள் கூட்டத்தின் தனிப் பிரதிநிதியாக, காலஞ்சென்ற சென்னைச் செல்வர் வி. கிருஷ்ண சுவாமி ஐயரையும் அமிதவாதிகள் என்ற தீவிர தேச பக்தர் திருக்கூட்டத்தின் பிரதிநிதியாக நமது சிதம்பரனாரையும் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அவருக்கு அந்நாளில் ஏற்பட்டிருந்த பெருமதிப்பை சொல்ல வேண்டுமா?

சுதேசிக் கப்பல் கம்பெனி

தூத்துக்குடி, தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ஒரு துறைமுகப்பட்டினம். தென்னாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்லும் பிரயாணிகளும், சரக்குகளும் அக்காலத்தில் தூத்துக்குடி வழியாகவே கப்பல் ஏறிச்செல்ல வேண்டும். எனவே, அது பெரிய வியாபார ஸ்தலமாக விளங்கியது. தென்னாட்டுச் சரக்குகளைக் கொழும்புக்கு ஏற்றுமதி செய்து அனுப்பும் வியாபாரிகள் அங்கே மிகுதி. ஆனால் ஆங்கில கப்பல் கம்பெனியார் தூத்துக்குடிச் சுதேசி வியாபாரிகளை மதியாமல் தாங்கள் இட்டதே சட்டம் என்று காரியம் நடத்தி வந்தார்கள். சுதேசி வியாபாரிகள் பிள்ளையாரிடம் முறையிட்டார்கள். விதேசிக் கப்பல் கம்பெனி முதலாளிகளின் அநியாயங்களையும், சுதேசி வியாபாரிகளின் குறைகளையும் கண்ட பிள்ளை, தூத்துக்குடி சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத்தொடங்குவதென்று முடிவு செய்தார். தென்னாட்டு வியாபாரிகள், செல்வந்தர்கள், தேச பக்கதர்களின் ஆதரவு பெற்றுப் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கி விட்டார். பங்கு ஒன்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பத்து இலட்ச ரூபாய் மூலதனத்துடன் சுதேசிக் கப்பல் கம்பெனி 1905 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி கம்பெனி பதிவு செய்யப்பட்டது.

முற்காலத்தில் கப்பலோட்டிக் கடாரத்தை வென்ற தமிழ்நாட்டில், ரோமாபுரிக்கு முத்தும் பவளமும் மிளகும் அனுப்பிய தமிழ்நாட்டில், சாவகத்திலும் காம்போஜத்திலும் சைவமும் வைணவமும் தமிழும் கமழுமாறு செய்த தமிழ்நாட்டில் பிற்காலத்தில் முதல் முதல் கப்பலோட்டிய பெருமை சிதம்பரனாரைச் சேர்ந்தது. பெருஞ்செல்வராயின்றிச் சிறிய வக்கீலாயிருந்த பிள்ளை, அக்காலத்தில் கப்பல் கம்பெனி ஒன்றை நிறுவிய செயல் செயற்கரும் செயலென்றே சொல்ல வேண்டும். காலஞ்சென்ற பாலவநத்தம் ஜமீன்தாரும் மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான உயர்திருவாளர் பாண்டித்துரைத் தேவரும் தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் பெருஞ்செல்வராக விளங்கும் கோபாலசாமி நாயுடு குடும்பத்தாரும் தூத்துக்குடியில் பெருஞ்செல்வராக விளங்கும் சிவ குடும்பத்தாரும் வேறு சில செல்வர்களும் கப்பல் கம்பெனி ஏற்படுத்துவதில் பிள்ளைக்குப் பேராதரவு புரிந்தவர்கள். வந்தே மாதர முழக்கமும், சுதேசி இயக்கமும் உச்ச நிலையில் இருந்த அக்காலத்தில் , தென்னாட்டு மக்கள் மட்டுமின்றி , பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் , அலை கடலுக்கப்பால் தொலை நாடுகளில் வாழும் இந்திய மக்களும் தேசபக்தி உணர்ச்சி மிகுந்தவர்களாய், சுதேசிக் கப்பல் கம்பெனியில் பங்கெடுத்துக் கொண்டு, அதற்குப் பேராதரவு புரிந்தார்கள். சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் பல தாய்மார்கள் கூடச் சிதம்பரனார் மீது தெய்வ பக்தி கொண்டவர்களாய், தங்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்திருந்த பொருள்களைச் சுதேசிக் கப்பலுக்கென்று உதவினார்கள்.

போட்டி

சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று தோன்றிய வி­யம் , அதுவரை தனியரசு செலுத்தி வந்த விதேசிக் கப்பல் கம்பெனியாருக்கும் அவர்களை ஆதரித்து வந்த அதிகாரிகளுக்கும் பொறாமையும் கோபத்தையும் விளைவித்தது. எனவே குழந்தை பருவத்தில் இருந்த சுதேசிக் கப்பல் கம்பெனியை கொல்லுவதற்கு அவர்கள் வழி தேடினார்கள். விதேசிக் கம்பெனியார் ஜனங்களுக்கும் சரக்குகளுக்கும் ஏற்பட்டிருந்த கப்பல் கட்டணங்களைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கினார்கள். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் ஐந்து ரூபாயாக ஏற்பட்டிருந்த (மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள்) கட்டணம், முக்கால் ரூபாய் வரை இறங்கியதென்றால் போட்டியின் கடுமையைச் சொல்ல வேண்டுமா? நூற்றுக்கணக்கான கப்பல்களுடன், பல துறைமுகங்களில் பல ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாகக் கொள்ளை இலாபம் திரட்டி வந்த விதேசிக் கப்பல் கம்பெனியார் இலவசமாகக் கூட ஆட்களை ஏற்றிச் செல்லலாம். ஆனால் இரண்டே கப்பல்களுடன் , குழந்தைப் பருவத்தில் இருந்த சுதேசிக் கம்பெனிக்கு இந்தப் போட்டி மிகவும் கொடுமையாக இருந்தது. ஆயினும், சுதேசிக் கம்பெனி தைரியமாக வேலை செய்து வந்தது. இந்த நிலையில் கப்பல் கம்பெனிக்கு உயிராக விளங்கிய பிள்ளையை எவ்வாறாயினும் அடக்கிவிட வேண்டுமென்று எதிர்க்கட்சியாரும், அவர்களுக்கு ஆதரவாயிருந்த அதிகாரிகளும் முயன்றார்கள். அவருக்கு நயமாகவும் பயமாகவும் யோசனை கூறினார்கள்.

அந்நாளில் பிள்ளை பிறரது நய வார்த்தைகளுக்கு இணங்கியிருந்தாரானால், அவர் மிகப் பெரிய செல்வராயிருத்தல் கூடும். அவருக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட வறுமை ஏற்பட்டிராது. ஆனால் பிள்ளை உறுதியுடன் நின்றார்.

தொழிலாளர் கிளர்ச்சி

தூத்துக்குடியில், கோரல் மில்ஸ் என்ற ஹார்வி கம்பெனியாரின் பருத்தி ஆலையில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் வேற்றுமை ஏற்பட்டது. அதன் பயனாகத் தென்னாட்டிலே முதல் முதலாகத் தூத்துக்குடியில் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அதில் பிள்ளை தலையிட்டுச் சமரசம் செய்ய முயன்றார். வேலையிழந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் ஆதரிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு ஏற்பட்டது. செல்வர்களிடமும் ஏனைய பொது ஜனங்களிடமும் பொருள் சேர்த்து அவர்களுக்கு ஆதரவு புரிந்தார்.

சுதேசிக் கிளர்ச்சியின் உச்ச நிலை

அந்நாளில் தூத்துக்குடியில் சுதேசி உணர்ச்சி உச்ச நிலையில் இருந்தது. சுதேசி இயக்கத்திற்கு விரோதமாக இருந்த மனிதர்களைப் பொது ஜனங்கள் பகிஷ்காரம் செய்ய முற்பட்டார்கள். தூத்துக்குடியில் வக்கீலாயிருந்த பிராமண நண்பர் ஒருவருக்கு மருத்துவ சகோதரன் ஒருவன் ­வரம் செய்து கொண்டிருந்த பொழுது, ஐயங்கார் சிதம்பரனாரின் சுதேசி ஊக்கத்தைப் பெரிதும் இகழ்ந்து பேசினார். ­வரம் செய்து கொண்டிருந்த மருத்துவ சகோதரன் உடனே கத்தியை மடக்கிப் பெட்டியில் வைத்துவிட்டு ஐயங்காரை அரைகுறை ­வரத்தில் விட்டுவிட்டுப் போய் விட்டான். ஐயங்கார் சுவாமிகள் அன்று இரவே போலீஸ் காவலுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று, மறுநாள் காலையில் தமது திருப்பதி ­வரக் கோலத்தை நீக்க வேண்டியதாயிற்று. வங்காளத்து நவமணிகளில் ஒருவரான காலஞ்சென்ற அஸ்வினி குமார தத்தரின் தலைமையில் பாரிசால் நகரம் சுதேசி ஊக்கத்தில் வங்காளத்திலேயே சிறந்து விளங்கியது. (சுதேசி ஊக்க மிகுதியால் பாரிசாலில் பரதேசித் துணி கிடைப்பது அரிதாய் விட்டது. அக்காலத்தில் பாரிசாலில் இருந்த ஜில்லா கலெக்டருக்கு ஒரு கெஜம் மல் வேண்டியத Vயிருந்தது. அஸ்வினி குமார தத்தர் உத்தரவு கொடுத்த பின்னரே கலெக்டருக்கு ஒரு கஜம் பரதேசி மல் துணி கிடைத்ததாம்). சிதம்பரம் பிள்ளை தலைமையில் சிறந்து விளங்கிய தூத்துக்குடியைத் தென்னாட்டு பாரிசால் என்று தேச மக்கள் போற்றினார்கள்.

அடக்குமுறை

சிதம்பரம் பிள்ளையை எவ்வாறாயினும் அடக்கிவிட வேண்டுமென்று காலம் பார்த்திருந்த அக்கால அதிகாரிகள், அவரது பேச்சுகளால் தூத்துக்குடியில் குழப்பம் விளையுமென்று கூறி அவர் மீதும் அவரது நண்பர்களாகிய சுப்ரமணியம் சிவா, பத்மநாப ஐயங்கார் மீதும் திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் முன் ஜாமீன் வழக்குத் தொடர்ந்தார்கள். அச் சமயத்தில் சென்னையில் இந்தியா ப் பத்திரிக்கையை நடத்தி வந்த ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் வந்தார்.

சிதம்பரனார் வழக்கு திருநெல்வேலி ஜில்லாவில் மட்டுமல்ல, தென்னாட்டில் மட்டுமல்ல, காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை தேசமெங்குமே பெரியதோர் விழிப்பை உண்டுபண்ணியது. இந்த வழக்கு விசாரணைக்கென்றே தனி நீதிபதியாக ஏற்பட்ட பின்னே துரை (னிr. பு.ய். Pஷ்ஐஜுeதீ ), பிள்ளைக்கு இரு குற்றங்களுக்காக இரு முறை ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனையும், சிவாவுக்குப் பத்து வரு­ம் தீவாந்திர தண்டனையும் (1908 ஆம் ஆண்டு சூலை மாதம்) விதித்தார். இந்த வழக்கு சுமார் நான்கு மாதம் நடந்தது. இதில் ஸ்ரீமான் சுப்ரமணிய சிவனார் கொடுத்த வாக்குமூலம் நமது தேசத்தின் விடுதலைச் சரித்திரத்தில் இடம் பெறுதற்குரியது. இந்தக் கொடிய தண்டனையால் நாடு முழுமையும் கலங்கியது. இந்தத் தண்டனை, அக்காலத்தில் லண்டனில் இந்தியா மந்திரியாக விளங்கிய ஜான்மார்லியைக் கூட கலக்கியதாம். சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டைத் தீவாந்தர தண்டனை விதித்த ஜில்லா நீதிபதி பின்னே துரை, அடுத்தப்படியாக (சென்னை ஐகோர்ட்) உயர்தர மன்ற நீதிபதியாக உயர்ந்து , சில காலம் பதவியில் இருந்தார். ஆனால், சில காலத்திற்குள் அவர் தமது பெரிய பதவியையும் , ஐ.ஸி.எஸ் உத்தியோகத்தையும் அறவே விட்டுவிட்டுத் தாய் நாடு செல்ல நேர்ந்தது. அதற்குக் காரணம், சிதம்பரம் பிள்ளை வி­யத்தில் பின்னே துரை மேற்கொண்ட கொடிய நீதி முறையைப் பற்றி இந்தியா மந்திரி கொண்ட வெறுப்பேயயன்று ஆங்கில அரசாங்கத்தின் மூலஸ்தான விவகாரங்களை அறிந்தவர்கள் அந்த நாளில் சொல்லிக் கொண்டார்கள்.

பின்னே துரையின் அநியாயத் தீர்ப்பை மாற்றுமாறு ஐக்கோர்ட்டிற்கு அப்பீல் செய்யப்பட்டது. பிள்ளையவர்கள் வழக்குச் செலவுக்காகப் பொருளுதவி நாடி அவரது மனைவியார் செய்த விண்ணப்பத்திற்கு இணங்கி தேசத்தார் பேராதரவு புரிந்தனர். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களேயன்றி, இலங்கை, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் குடியேறி வாழும் தமிழர்களும், பாரத தேசத்தில் வாழும் மக்களேயன்றி , பூலோகத்தின் பல பகுதிகளிலும் வாழும் இந்திய மக்களும் ஆதரவு புரிந்தார்கள். 

சிறைவாசம்

சிதம்பரம் பிள்ளைக்கு ஏற்பட்ட ஆயுள் பரியந்தம் தீவாந்தர தண்டனையை ஆறு ஆண்டுச் சிறைவாசமாக ஐக்கோர்ட்டார் குறைத்துள்ளார்கள். நன்னடத்தைக் கழிவு , அரசாங்க வஜா முதலியன கழித்துப் பிள்ளை சுமார் நாலரை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார். முதலில் கோயம்புத்தூர்ச் சிறையிலும், பின்னர் மலையாளத்தில் உள்ள கண்ணனூர்ச் சிறையிலும் பிள்ளை தமது வாசத்தைக் கழித்தார். 

கோவைச் சிறையில் அரசியற் கைதியாக இருந்து மாடு போலச் செக்கிழுக்கும் பெருமை முதல் முதலாகச் சிதம்பரம் பிள்ளையவர்களுக்கே கிடைத்தது. பின்னர், சுமார் பதினாறு ஆண்டுகள் கழித்து அதே சிறைக் கோட்டத்தில் அந்தப் பெருமையை அடைந்தவர் சேலம் செல்வரான ஸ்ரீமான் எம்.ஜி. வாதேவய்யா ஆவார். கல்வியறிஞரும் தேச பக்தருமான திருவாளர் பிள்ளைக்குச் செக்கிழுக்கும் வேலையைக் கொடுத்த செய்தியைஅறிந்த தேச பக்தர்கள் கொதிப்படைந்தார்கள். பிள்ளையார் மீது ஆதியில் அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தது பற்றிக் கொதிப்படைந்த திருநெல்வேலி மக்கள் கலகம் விளைவித்தது போலவே, கோயம்புத்தூர்ச் சிறையில் அதிகாரிகள் பிள்ளையையும் மற்றவர்களையும் கொடுமையாக நடத்தியது பற்றிக் கொதிப்படைந்த கைதிகள் கலகம் விளைவித்தார்கள். இந்தக் கலகத்தை யயாட்டி ஏற்பட்ட வழக்கில் , திருவாளர் பிள்ளை சிறைக்கோலத்துடன் சென்று கோவை ஜில்லா நீதி ஸ்தலத்தில் கொடுத்த சாட்சியம் குறிப்பிடத் தகுந்தது.

திருவாளர் பிள்ளை சிறைவாசம் செய்ய நேர்ந்த காரணத்தால் தென்னாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்த கைதிகளுக்கெல்லாம் நல்ல காலம் பிறந்தது. சிறைக் கைதிகளுக்கு வேலை கொடுக்கும் முறையிலும் உணவு கொடுக்கும் முறையிலும் சீர்திருத்தம் ஏற்படுமாறு காலஞ்சென்ற சென்னைச் சட்டசபை அங்கத்தினர் குத்தி கேசவப் பிள்ளை சட்டசபை வாயிலாகப் பெரிதும் போராடினார். காட்டிலாக ஊழல்களையும் சிறைச் சாலை ஊழல்களையும் ஒழிப்பதிலேயே அவர் நாளெல்லாம் உழைத்து வந்தார். அந்தக் காரணத்தால் , கேசவப் பிள்ளை ஒன்று காட்டில் இருப்பார் அல்லது சிறையில் இருப்பார் என்று நண்பர்களும் அதிகாரிகளும் விகடமாகக் கூறுவது உண்டு.

தமிழ்த் தொண்டு

தேசத் தொண்டு காரணமாகச் சிறைக் கோட்டம் புகுந்த சிதம்பரம் பிள்ளை, சிறைக்கோட்டத்தில் ஓய்ந்த நேரங்களில் தாம் இளமை முதலே ஆர்வம் கொண்டிருந்த தமிழ்த்தொண்டில் சித்தம் செலுத்தி வந்தார். ஆங்கில நாட்டு ஞானியான ஜேம்ஸ் ஆலன் என்பார் இயற்றிய சில அரிய நூல்களை ‘மனம் போல வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற பெயர்களுடன் மொழி பெயர்த்தார். வேறு சில தமிழ் நூல்களையும் இயற்றினார். இவற்றுள், ‘மனம் போல வாழ்வு’ பிள்ளையவர்கள் சிறையில் இருந்த பொழுதே, இந்தப் புஸ்தகத்தின் காகிதம், அச்சு, மை, கட்டடம் அனைத்தும் சுதேசியம் என்ற குறிப்புடன் வெளியாயிற்று. மற்ற நூல்களைப் பிள்ளையவர்கள் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் வெளியிட்டார். பொது மறையான திருக்குறளை நன்றாக ஆராய்ச்சி செய்வதற்குரிய தருணம் அவருக்குச் சிறைக் கோட்டத்தில் கிடைத்தது.

திருக்குறள் மீது சிதம்பரனாருக்கிருந்த ஆர்வம் சொல்லும் தரத்தன்று. ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளையும் பாயிரத்தோடு படியாத ஆண் மகனோ பெண் மகனோ தமிழ்நாட்டில் இருத்தல் ஆகாதென்றும் , தமிழ் வேதமான திருக்குறளைப்படியாத தமிழ் மக்கள் தமிழ் மக்கள் ஆகார் என்றும் பிள்ளையவர்கள் அழுத்தமாகக் கூறுவது வழக்கம்.

விடுதலை

சுமார் நாலரை ஆண்டுகள் சிறைக் கோட்டத்தில் இருந்த பிள்ளை 1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விடுதலையடைந்தார். விடுதலை அடைந்தவுடன் பிள்ளை, குடும்பத்துடன் நேரே சென்னைக்கு வந்தார். சென்னை நகரத்திற்கு நடுநாயகமாக விளங்கும் சிந்தாத்திரி பேட்டையில் அருணாசல நாயகன் வீதியில் சுமார் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். பின்னர் சில காலம் திருமயிலையிலும், பிரம்பூரிலும் வாழ்ந்திருந்தார். பிள்ளை விடுதலை அடைந்து வந்த பொழுது, சென்னையிலுள்ள தலைவர்களில் பலரும் அவரைத் தீண்டாதாராகவே கருதினார்கள். திலகர் பெருமான் தமது சுயராஜ்ய நிதியிலிருந்து மாதந்தோறும் அனுப்பி வந்த ஐம்பது ரூபாயே அவருக்கு பெரிய ஆதரவா யிருந்தது. பிரம்பூரில் இருந்த பொழுது பிள்ளை தமது குடும்பத்தை நடத்தும் பொருட்டு அரிசி வியாபாரமும், நெய் வியாபாரமும் கூடச் செய்து பார்த்தார். சில காலம் தமிழ்ப் பத்திரிகைளில் ஆசிரியராகவும் இருந்தார்.

பிள்ளை சென்னையில் வாழ்ந்து வந்த பொழுது பலருக்குத் தமிழ்க் கல்வி பயிற்று வித்தார். பிள்ளையாரிடம் திருக்குறள் பயின்றவர்களில், இப்பொழுது சிதம்பரம் நந்தனார் மடத்துத் தலைவராக விளங்கும் சகஜானந்த சுவாமி யாரையும், லோகோபகாரி பத்திராசிரியராயிருந்த பரலி சு. நெல்லையப் பரையும் குறிப்பிடலாம். பிள்ளை சென்னையை அடுத்த பிரம்பூரில் இருந்த பொழுது, அங்கு வாழ்ந்து வந்த பெருந் தமிழறிஞரான திருமணம் செல்வகேசவராய முதலியாருடன் தமிழாராய்ச்சி செய்து வந்தார். திருக்குறள் மணக்குடவர் உரையை வெளியிட்டதுடன், திருக்குறளுக்குத் தாமே புதிய உரை ஒன்றையும் இயற்றி வெளியிட்டார். பழந்தமிழ் இலக்கியமான தொல்காப்பியப் பொருள் அதிகாரத்திற்கு, உரையாசிரியர் இளம்பூரணர் எழுதிய கிடைத்தற்கரிய உரையையும் பிள்ளை பிற்காலத்தில் வெளியிட்டார். ‘இன்னிலை’ என்ற பழந்தமிழ் நூலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். சுதேசிக் கிளர்ச்சி தூத்துக்குடியில் மும்முரமாயிருந்த பொழுது பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளையைப் பத்திராசிரியராகக் கொண்டு, ‘சுயராஜ்யம்’ என்ற பத்திரிகையைத் தொடங்க விரும்பி, அதற்குரிய முன்னேற்பாடுகளெல்லாம் செய்தார். முதல் இதழில் வெளியிடுவதற்காக எழுதிய உணர்ச்சிமிக்க தலையங்கக் கட்டுரை இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஆனால் பத்திரிகை தொடங்குவதற்கு முன்பே அவர் மீது வழக்குத் தொடங்கிவிட்டதால் பத்திரிகை நின்றுவிட்டது. பிள்ளை சிறை சென்று மீண்ட பின், இந்தியாவின் நியாயம் உலகத்தாருக்கெல்லாம் விளங்குமாறு உலகத்திலுள்ள நாற்பது முக்கிய பாஷைகளில் பத்திரிகை வெளியிட வேண்டுமென்று கருதினார். இக் கருத்து அக்கால நிலையில் முடியாமற் போயினும் அவரது பெரு நோக்கம் கருதற்பாலது.

பிள்ளை சிறையிலிருந்து வெளிவந்த பொழுது அரசியல் உலகம் அமைதியற்றிருந்தது. அப்பொழுது திலகர் சுயராஜ்ய சங்கம் தோன்றியது. அதில் பிள்ளை சேர்ந்து உழைத்தார். சென்னையில் தொழிலாளர் இயக்கத்திலும் சேர்ந்து வேலை செய்தார். சென்னையில் தொழிலாளர் மிகுதியாக வாழும் பெரம்பூர்ப் பட்டாளத்தில் சிதம்பரம் பிள்ளை (அவன்யூ) சாலை ஒன்றும், விளையாட்டு மைதானம் ஒன்றும் ஏற்பட்டிருப்பதே அதற்குச் சான்று. சில காலம் கோயம்புத்தூர்த் தொழிலாளர் சங்கத்திலும் அவர் வேலை செய்தார்.

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பிள்ளைக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஆயினும் அந்த இயக்கத்திற்கு மாறாக அவர் எதுவும் செய்யவில்லை. அவர் தமக்கு சரியயன்று தோன்றிய வழிகளில் தேசத் தொண்டு செய்து வந்தார்.

மீண்டும் வக்கீல் 

வக்கீல் தொழிலில் விருப்பமற்றவரும், ‘வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்’ என்று பாடியவருமான சிதம்பரம் பிள்ளை , தமது குடும்ப நிலை காரணமாக அதிகாரிகள் அனுமதி பெற்று 1922 ஆம் ஆண்டு மீண்டும் வக்கீல் ஆனார். தூத்துக்குடியிலும் பின்னர் கோவிற்பட்டியிலும் , கடைசியாக மீண்டும் தூத்துக்குடியிலும் சுமார் பத்தாண்டுகள் வரை அவர் வக்கீல் தொழில் புரிந்தார். பிள்ளை கோவிற்பட்டியில் இருந்த பொழுது, இராஐதுவே­க் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஸ்ரீமான்களான எம்.எஸ். சுப்ரமணிய ஐயர், என். சோமயாஜூலு முதலிய இளந்தேசபக்தர்களுக்கு உண்டி, உடை அளித்து ஆதரித்ததுடன் , அவர்களுக்காக நீதிஸ்தலத்தில் வலிய தோன்றி வாதித்த செய்தியை தமிழ்நாட்டார் மறந்திருக்க மாட்டார்கள். பிள்ளை தூத்துக்குடியில் வக்கீலாயிருந்த பொழுது, ஊக்கமும் உழைப்பும் உருவெடுத்தது போல விளங்கிய அவருடைய மூத்த மகன் உலகநாதன் தனது இருபதாவதாண்டில் காலஞ்சென்றான். அதனால் அவர் குடும்பத்திற்குத் தீராத துயரமும் நஷ்டமும் விளைந்தன.

இறுதி

பிள்ளை சிறந்த உடற்கட்டுடையவராயினும், ஐந்தாண்டு அநியாயச் சிறைவாசம் அவர் உடல்நலத்தைப் பெரிதும் கெடுத்து விட்டது. சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின்னர், வருவாயின்றி வறுமையில் வருந்த நேர்ந்தது. 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி பிள்ளையின் அறுபதாண்டு நிறைவு விழா நடந்தது. அதனையயாட்டி, அவரிடம் தேச மக்களுக்குள்ள நன்றி யறிதலுக்கு அறிகுறியாக அவருக்கு ஒரு பணப்பை அளிக்க வேண்டுமென்று டாக்டர் வரதராஜூலு நாயுடு முதலிய நண்பர்கள் முயன்றார்கள். அந்த நிதிக்குப் பல நண்பர்கள் மனமுவந்து பொருளுதவி புரிந்தார்களாயினும், அதற்குப் போதிய அளவு பொருள் சேரவில்லை. பிள்ளையின் தேசத் தொண்டைத் தற்காலத் தமிழ் மக்கள் மறந்து விட்டமையே அதற்குக் காரணம். பெரியோர்கள் இந்த உலகத்தில் இருக்கும் பொழுது அவர்களை ஏறிட்டுப் பாராமல் , அவர்கள் இறந்த பின்னர் அவர்களைப் பற்றி வியந்தோதித் திருவிழாக் கொண்டாடும் வழக்கம் தற்காலத் தமிழ்நாட்டில் மிகுதியாயிருக்கிறது. எனவே, தேசத்திற்காகப் பலவித அரிய தியாகங்கள் செய்த சிதம்பரம் பிள்ளையும், கவி சுப்பிரமணிய பாரதியாரும் பிறகும் அவர்கள் வாழ்நாளில் வருந்த நேர்ந்தமை வியப்பாகா. முதுமையும் நோயும் வறுமையும் வருத்த, பிள்ளை தாது ஆண்டு கார்த்திகை மாதம் நாலாம் தேதி (18.11.1936 ) புதன்கிழமையன்று வறுமையும் சிறுமையுமற்ற பெரிய உலகம் புகுந்தார். பிள்ளையார் இவ்வுலக வாழ்வு நீத்தபொழுது அவருக்கு வயது அறுபத்தைந்தே.

குணநலம்

சிதம்பரம் பிள்ளை தேசபக்தியில் சிறந்தவர். தியாக புத்தியில் உயர்ந்தவர். பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், அஸ்வினி குமார தத்தர் முதலிய உத்தம தேச பக்தர்கள் திருக்கூட்டத்தில் அவர் சேர்தற்கு உரியவர். அவர் தமிழ் அன்பர். தமிழ் அறிஞர். பெருங் கவிஞரல்லாராயினும், அவர் தமிழ்க்கவி. தமிழ் வளர்ப்பதை அவர் தமது வாழ்நாளில் பெருங்கடமையாகக் கொண்டிருந்தார். சைவத்தில் உறுதியான பற்றுக் கொண்டிருந்தார். சைவ சமயமும் சைவ உணவியக்கமும் வையத்திற்கு உய்வளிக்கத் தகுந்தன என்பது பிள்ளையின் கருத்து. ஆயினும் அவர் ஜாதி , சமய வேற்றுமையற்ற சமரசவாதி. அவர் அன்பிலும் ஜீவகாருண்யத்திலும் சிறந்து விளங்கினார். விருந்தோம்பல் என்ற சிறந்த குணம் அவரிடம் சிறந்து விளங்கியது. ஆதியில் வக்கீல் தொழில் செய்து வருவாய் மிகுந்து விளங்கிய காலத்திலும் பிற்காலத்தில் அவர் சிறையிலிருந்து வந்த பின்னர் வருவாய் குறைந்திருந்த காலத்திலும் பிள்ளை வீடு ‘சத்திரமா’கவே விளங்கியது. மேன்மக்களிடம் சிறந்து விளங்க வேண்டிய உயர் குணங்கள் பல அவரிடம் சிறந்து விளங்கின. பேரன்பும், பேரூக்கமும், பேருழைப்பும், பெருந்தியாகமும் கொண்ட பெருந்தமிழராகப் பிள்ளையார் விளங்கினார். பெருந்தமிழர் திருக்கூட்டத்தில் அவர் ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கினார்.

நன்றியறிதல் என்ற சிறந்த குணம் பிள்ளையாரிடம் சிறந்து விளங்கியது. ஆதியில் சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கும் முயற்சியில் தம்முடன் உடனின்று உழைத்த தூத்துக்குடி வியாபாரிகளான காலஞ்சென்ற சித. ஆறுமுகம் பிள்ளையவர்கள் பெயரை அவர் தம் இரண்டாவது புதல்வருக்கு இட்டார். பிள்ளையார் சிறைக்கோட்டத்தில் இருந்த பொழுதும், விடுதலை அடைந்த பின்னரும் , அவருக்குப் பொருளுதவி புரிந்து வந்த தென் ஆப்பிரிக்கச் செல்வரான தில்லையாடி வேதியப்பிள்ளையயன்ற நண்பரின் பெயரைத் தம் இரண்டாவது புதல்விக்கு இட்டார். (வேதவல்லி யயன்ற இப்புதல்வியும் அதன் தமக்கையான ஞானாம்பாளும் மண வாழ்க்கையில் வாழ்ந்திருந்து சில நன்மக்களைப் பெற்றுச் சில ஆண்டுகளுக்கு முன் இளவயதில் காலஞ்சென்றனர்.)

பிள்ளையவர்கள் கோவைச் சிறைக் கோட்டத்தில் இருந்த பொழுது, அவருக்கு அரும்பெருந்துணைவராக அமர்ந்த கோவைப் பெரியாரான திருவாளர் சி.கே. சுப்ரமணிய முதலியார் பெயரைத் தம் மூன்றாம் புதல்வருக்கு இட்டார். வக்கீலாயிருந்த பிள்ளையவர்கள் சிறைக் கோட்டம் சென்று வெளிவந்த பின், அரசியல் குற்றம் செய்தவர்களுக்கு வக்கீல் உத்யோகம் கிடைப்பது அரிதாயிருந்தது. பிள்ளையவர்கள் விரும்பிய காலத்து அவருக்குத் திரும்பவும் வக்கீல் உத்யோகம் கிடைக்குமாறு செய்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வாலிஸ் துரையின் நினைவைப் போற்றுமாறு தமது கடைசிப் புதல்வருக்கு வாலீசுரன் என்று பெயரிட்டார். பிள்ளை பெற்றுப் பெயரிடுதல் என்பதைத் தமிழ் நாட்டார் பெரு நன்றிக்கு அறிகுறியாகக் கூறுவர். பிள்ளையார் அக்கூற்றை மெய்ப்படுத்தினார்.

நாட்டு மக்கள் நன்றி

சுதேசியயன்றும், சுயராஜ்யம் என்றும் சொல்லவும் மக்கள் அஞ்சியிருந்த தென்னாட்டில் , வந்தே மாதர முழக்கமும் செய்து சுயராஜ்ய உணர்ச்சியை எழுப்பிய பெருந்தலைவரான பிள்ளையவர்கள் வி­யத்தில் தமிழ்மக்கள் போதிய அளவு நன்றி காட்டவில்லையயன்பது உண்மையே. பிள்ளையவர்களின் பெருந்தொண்டை அறிந்த முதியவர்கள் அதனை மறந்து விட்டார்கள். இளைஞர்கள் அதனை அறிய மாட்டார்கள். ஆயினும் பிள்ளையவர்களைத் தமிழ் நாட்டார் முற்றிலும் மறந்து விடவில்லை. சென்னையில் பிள்ளையார் தொழிலாளர் நலத்திற்காக உழைத்ததை நினைவூட்டும் பொருட்டுப் பெரம்பூர்ப் பட்டாளத்தில் சிதம்பரம் பிள்ளை சாலையும், விளையாட்டு நிலையமும் ஏற்பட்டிருப்பதை முன்னரே கூறியிருக்கிறோம். சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியாரும் சில ஆண்டுகளுக்கு முன் பிள்ளையவர்கள் முக உருவச் சிலை ஒன்றை நிறுவித் தாங்களும் அவரை மறந்து விட வில்லை யயன்பதைக் காட்டிக் கொண்டார்கள். வேலூர் நகர சபையார் தங்கள் சபை மண்டபத்திற்குச் சிதம்பரம் பிள்ளை மண்டபம் என்று பெயரிட்டுச் சிறந்த முறையில் தங்கள் நன்றியை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேறு பல இடங்களிலும் சிதம்பரனார் பெயரால் சங்கங்களும் வாசக சாலைகளும் புத்தக சாலைகளும் ஏற்பட்டி ருக்கின்றன.

ஆனால், பெரியோர்களுக்கு நன்றி காட்டுவதென்பது ஞாபகச் சின்னங்களில் அடங்கியிருக்க வில்லை. அப்பெரியோர்களின் அரிய நோக்கங்களை அறிந்து, அவற்றில் ஊக்கம் கொண்டு உழைத்து, அவற்றை நிறைவேற்ற முயல்வதே அவர்களுக்கு உண்மையான முறையில் நன்றி காட்டுவதாகும். வீரத் தமிழராகவும், விடுதலை வீரராகவும் விளங்கிய சிதம்பரம் பிள்ளையின் நினைவைப் போற்ற விரும்பும் தமிழ் மக்கள் தேசம் பல துறைகளிலும் விடுதலை பெறுதற்குரிய நெறியில் உழைக்க வேண்டும் . தமிழ்நாடும் தமிழ்மொழியும் தமிழ் நாகரிகமும் புத்துயிரும் புதுவாழ்வும் பெறுமாறு மனமொழி மெய்களால் தொண்டு புரிதல் வேண்டும். அதற்குரிய அறிவும் திறமையும் பூமிதேவியின் தலைப் பிள்ளையான தமிழ்ப்பிள்ளையிடம் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்பது தமிழ்ச்சிதம்பரம் பிள்ளையின் தளராத நம்பிக்கையாயிருந்தது, அவரது நம்பிக்கையை நாம் உண்மையாக்க முயல்வோமாக.

வந்தே மாதரம்!

நல்லாண்மை யயன்பது ஒருவற்குத்தான் பிறந்து

இல்லாண்மையாக்கிக் கொளல்.

சிதம்பரம் பிள்ளை திருநாமம் வாழ்க!

(வ.உ.சி கோவை கொடுஞ்சிறையில் வாடிய போது அவர்களுக்கு தொண்டு புரிந்தவர் பரலி சு. நெல்லையப்பர். பாரதியார் உயிர் நீத்த வேளையில் அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் பரலி சு. நெல்லையப்பரும் ஒருவர். தேசபக்தன் இதழில் ஆசிரியராக இருந்தவர். லோகோபகாரி என்ற இதழை நடத்தியவர். அவர் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம் தான் இது).

 

http://www.vocarappal.blogspot.in/

சிவாஜி இவர் பாத்திரத்தில் நடித்ததும் இவரைப்பற்றி பலர் அறிய உதவியது

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நுணாவிலான்!

 

இவரைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கின்றேன்!

 

ஆனால், உங்கள் பதிவின் மூலம், இன்றுதான் வாசித்து அறிந்துகொள்ள முடிந்தது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.