Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தணிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரம்: கலையும் அரசியலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தணிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரம்: கலையும் அரசியலும்

யமுனா ராஜேந்திரன்
 

 

இன்றைய தகவல் தொழில்நுட்ப, இணைய, உலகவயமாதல் உலகில் ஒரு குறிப்பிட்ட கலைப்படைப்பிற்கு அல்லது திரைப்படத்திற்கு முற்றிலுமான தடை என்பது நடைமுறையில் சாத்தியம் என்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட நாடு தனது எல்லைக்குள் தடை செய்யலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள நாட்டின் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் அமைப்பு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடைசெய்யலாம். ஒரு படைப்பாளி தனது படைப்பை தானே முடக்கிக் கொள்வது அல்லது அழித்துவிடுவது அல்லாது இந்த உலகில் ஒரு கலைப்படைப்பை அல்லது திரைப்படத்தைத் தடைசெய்ய முடியாது. பிரதி செய்யும் மின்னணுத் தொழில்நுட்பமும் வலைப்பின்னலான இணையமும், நாடுகள்-பிரதேசங்களின் எல்லைகளைத் தாண்டி குறிப்பிட்ட படைப்பை பயணம் செய்ய வைக்கும். இதுவே நாம் வாழும் நிலை.

 

விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிநீக்கம் என்பது நடைறையில் என்ன பண்பைக் கொண்டிருக்கிறது? அமெரிக்காவிலும் மேற்குநாடுகளிலும் விஸ்பரூபம் படம் தமிழ்-தெலுங்கு-இந்தி என எல்லா மொழிகளிலும் அந்தந்த நாட்டுத் தணிக்கைச் சட்டங்களின்படி எந்தவித நீக்கமும் இல்லாமல் காண்பிக்கப்படுகிறது. டிவிடியாக வரும்போதும் எந்தவிதமான வெட்டுக்களும் இல்லாமல்தான் வெளியாகும். இதனது பிரதிகள் அமெரிக்காவிலிருந்தும் மேற்கு நாடுகளிலிருந்தும் தமிழகம் உட்பட உலகில் எங்கும் பரவுவதை எவராலும் தடுக்க முடியாது. நடைமுறையில் விஸ்வரூபம் படத்தின் முழுமையான வடிவத்தை எவரும் பார்க்க முடியும் என்பதுதான் நிலை. இலண்டன்-சங்கரன்கோவில்-யாழ்ப்பாணம் என மூன்று இடங்களில் திரையிடப்பட்ட விஸ்வரூபம் படப்பிரதிகளில் என்னதான் வித்தியாசம்? இலண்டனில் எந்த வெட்டும் இல்லை. சங்கரன் கோவிலிலும் யாழ்ப்பாணத்திலும் தலிபான்கள் அமெரிக்கர் ஒருவரின் கழுத்தை அறுக்கும் காட்சி இல்லை எனச் சொன்னார்கள்.

 

கமல்ஹாசனும் இஸ்லாமியக் கூட்டமைப்பினரும் ஒப்புக்கொண்டு படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் என்பவைகள் என்ன? ஒரு திரைப்படத்தில் காட்சி நீக்கம் என்பது இரு வகையில் அர்த்தப்படும். ஒன்று காட்சிவடிவ நீக்கம். பிறிதொன்று ஒலிவடிவ நீக்கம். இஸ்லாமியக் கூட்டமைப்பினர் 15 காட்சிகளை 'நீக்குமாறு' கேட்டதாகவும், கமல்ஹாசன் 7 காட்சிகளை மட்டுமே நீக்கியதாகவும் பதிவுகள் இருக்கின்றன. கமல்ஹாசன் எக்காரணம் கொண்டும் கிளைமேக்ஸ் காட்சியை நீக்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன. பெரும்பாலான பதிவுகள் நீக்கம் என்பதை ஒலிநீக்கம் என்பதாகவே முன்வைத்திருக்கின்றன. குறிப்பாக தலிபான்களின் வன்முறையைத் தொடர்ந்து அல்லது கொலைகளைத் தொடர்ந்து எழுப்பப்படும் அல்லோ ஹோ அக்பர் எனும் ஒலி அல்லது குரான் குறிப்பீடுகள், வழிபாடுகள் நீக்கப்பட ஒப்புக்கொண்டதாகவே தகவல்கள் இருக்கிறது. காட்சிரூப மொழியைக் கொண்ட திரைப்பட வடிவத்தில் இந்த ஒலிநீக்கம் என்பது படத்தின் கதை வடிவத்தையும் அதனது செய்தியையும் பெரிய அளவில் மாற்றிவிடமுடியாது.

 

விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள 7 காட்சிகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும் சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே கமலஹாசன் தனது லேப்டாப்பில் பதிவு செய்துள்ள அந்த காட்சிகளை போட்டுக் காட்டி விளக்கினார். அவைகளை வெட்டினால் கதையின் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும் என்றார். இதையடுத்து 7 காட்சிகளை நீக்கவும் மற்ற இடங்களில் வசனங்களை நீக்கவும் ஒப்புக் கொண்டார் (thatstamil.com)

 

1. படத்தின் தொடக்கத்தில் இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல. இது ஒரு கற்பனை கதை என டைட்டில் போடப்படும்.

 

2. படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குரான் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் ஓடும்.

 

3. திருக்குரான் வசனப் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும் வசனமும் நீக்கப்படும்.

 

4. அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுப்பதற்காக கமல்ஹாசன் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும் பின்னணியில் தெரியும் தொழுகை நடத்தும் காட்சிகளும் நீக்கப்படும்.

 

5. முல்லா ஒமர் கோவையிலும் மதுரையிலும் தலைமறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்படும்.
 
6. நடிகர் நாசர் ஒரு காட்சியில் முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை என்று வசனம் பேசுவார். அந்த காட்சிகள் நீக்கப்படும்.
 
7. ஆப்கன் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விளையாடுவது போல காட்டப்பட்டுள்ளதும் நீக்கப்படும்.
 
ஆட்சேபம் எழுப்பப்பட்ட காட்சிகள் எவை, நீக்கப்பட்ட காட்சிகள் எவை, ஒலிநீக்கம் செய்யப்பட்ட காட்சிகள் எவை என்பது தொடர்பாகவோ, கமல்ஹாசனும் இஸ்லாமியக் கூட்டமைப்பினரும் ஒப்புக்கொண்ட அறுதியான திரைப்பட வடிவம் என்ன என்பது தொடர்பாகவோ எந்த விதமான அதிகாரபூர்வமான பதிவுகளும் இருதரப்பிலிருந்தும் இல்லை. பொதுவாகத் தமிழ் ஊடகங்களின் மீது எனக்கு இருக்கும் சம்சயத்துடனேயே தட்ஸ்தமிழ் இணையத்தில் வந்திருக்கும் ஆதாரத்தை இங்கு முன்வைத்திருக்கிறேன். எந்தெந்த நாடுகளில்- ஊர்களில்- மொழிகளில் என்னென்ன நீக்கங்கள் நடந்திருக்கிறது என்பதனை இந்தப் பட்டியலை முன்வைத்து ஒருவர் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
 
***
 
தணிக்கை குழு குறித்த பிரச்சினைகள் என்பது இரு மட்டங்களில் பேசப்பட வேண்டியதொரு பிரச்சினை. முதலில் பல்லின, பல்மத, பல்சாதிய சமூகமான இந்தியாவில் தணிக்கைக் குழுவினுள் ஜனநாயகம் இருக்கிறதா எனும் பிரச்சினை பேசப்பட வேண்டும். இரண்டாவதாக ஒரு படைப்பை சிவில் சமூகத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு நிர்வாக அலகுக்கு அப்பால் உள்ள மத, இன, சாதிய, அரசியல் அமைப்புகளின் ஆளுகைக்குள் கீழ்மைப்படுத்துவதா என்பது குறித்துப் பேசப்பட வேண்டும்.
 
தணிக்கைக்குழு குறித்து அடிப்படையான விவாதக் கருத்துக்களை ஆளுர் ஷா நிவாஸ், மனுஷ்யபுத்திரன், தொல்.திருமாவளவன் போன்றவர்களும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புக்களும் பதிவு செய்திருக்கிறார்கள். மாநில அரசொன்று தணிக்கைக்குச் சென்று வந்த திரைப்படத்தைத் தடைசெய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. விஸ்வரூபம் பிரச்சினையின் பின் தணிக்கை அமைப்பை மறுசீரமைப்பதாக ஒரு ஆலோசனைக் குழுவை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
 
தணிக்கைக் குழுவில் உள்ளார்ந்து இருக்க வேண்டிய ஜனநாயகம் குறித்து மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சொல்கிறார்:
 
நம்முடைய தணிக்கைக்குழுவின் மோசமான செயல்பாடுகளே இது போன்ற சமூக மோதல்களை உருவாக்குகின்றன. அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கத்தினரும் நிறைந்த கூடாரமாக தணிக்கை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. புதிய சமூக- அரசியல் எதார்த்தங்களை அவை எந்தவிதத்திலும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. பல்வேறு சமூக பிரிவினரின் உணர்வுபூர்வமான பிரச்சினைகள் காலத்திற்குக் காலம் மாறிவருகின்றன. அந்தவகையில் தணிக்கை குழுவினர் நவீன சிந்தனையும் சமூக பார்வையும் கொண்டவர்களாக இருக்கவேண்டும். அத்தகைய சிந்தனை கொண்டவர்கள் தணிக்கைக் குழுக்களில் இடம்பெற வேண்டும்.
 
இதே விதமான ஒரு கருத்தையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவனும் குறிப்பிடுகிறார்:
 
ஒரு திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டால் அதனைத் தடுக்கக்கூடாது என நீதிமன்றங்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளன. திரைப்படத்தைப் பொறுத்தவரை தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களே நீதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். அவ்வாறிருக்கும்போது தணிக்கைக் குழு உறுப்பினர்களை நியமிப்பதில் அரசு கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீதிபதிகளை நியமிப்பதற்கு எத்தகைய கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அத்தகைய கவனம் தணிக்கைக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் காட்டப்பட வேண்டும். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தணிக்கைக் குழு உறுப்பினர்களாக நியமிப்பதை அரசு கைவிட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள்,  சிறுபான்மையின மக்கள், பெண்கள் உள்ளிட்ட, சமூகத்தில் நலிந்த பிரிவினரை திரைப்படங்களில் எதிராகச் சித்தரிப்பதால் சமூகத்தில் மிக மோசமான கருத்து பரவுகிறது. இருப்பதிலேயே மிக வலிமையான ஊடகமாக இருக்கும் திரைப்படம் குறித்து ஆட்சியாளர்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதையே விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சிக்கல் நமக்கு உணர்த்துகிறது.
 
தணிக்கைக் குழுவில் சிறுபான்மையினரின் பிரதிநித்துவம் குறித்த கேள்விதான் இந்த நெருக்கடிக்கான அடிப்படையாக இருக்கிறது என மனுஷ்யபுத்திரனும், தொல்.திருமாவளவனும் தெளிவாகச் சொல்கிறார்கள். படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் சுதந்திரம் குறித்துப் பேசப்படுவதற்கு முன்னால் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய அடிப்படை முரணாக இதுவே இருக்கிறது எனக் குறப்பிடுகிறார் விஸ்வரூபத்தை இஸ்லாமியர்கள் எதிர்ப்பதிலுள்ள நியாயத்தை முன்வைக்கும் ஆளுர் ஷ நவாஸ்.
 
சென்சார் போர்டு பற்றி இங்கே ஏராளமான குரல்கள் ஒலிக்கின்றன. சென்சார் செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட ஒரு படத்தை அநியாயமாக இந்த முஸ்லிம்கள் தடுத்து விட்டார்களே என்று பலரும் அங்கலாய்க்கின்றனர். அரசு, நீதிமன்றம், காவல்துறை, ராணுவம், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்களில் நடக்கும் திரைமறைவு அரசியலையும், அவற்றின் பின்னணியில் இருக்கும் சாதியவாத, மதவாத முகங்களையும் பற்றி அறிந்திருந்தால் இந்தக் கேள்விகள் எழ வாய்ப்பில்லை.
 
பாபர் மஸ்ஜித் இடிப்பையும், மும்பை கலவர பயங்கரங்களையும், குஜராத்தில் மோடி முன்னின்று நிகழ்த்திய இன அழிப்பையும், ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் நாடு முழுவதும் நடத்திய குண்டு வெடிப்புகளையும் அம்பலப்படுத்தி திரைப்படங்கள் எடுக்கப்பட்டால் அவற்றை இந்த சென்ஸார் போர்டு என்ன செய்யும் என்பதே நமது கேள்வி? இந்துத்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் நேரடியான காட்சியமைப்புகள் இல்லாமல், போகிற போக்கில் ஏதேனும் வசனமோ, பாடலோ இருந்தால்கூட சென்ஸார் போர்டு அதை அனுமதிக்காது என்பதே நிதர்சனமான உண்மை. சென்ஸார் போர்டு போன்ற உயரதிகாரத் தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தமக்கு எதிரான சித்தரிப்புகளை வேர் மட்டத்திலேயே தடுத்து விடுகின்றனர். அதே நேரம் முஸ்லிம்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எதிரான சித்திரங்களை தாராளமாக அனுமதிக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே துப்பாக்கிக்கும் விஸ்வரூபம் எனும் முஸ்லிம் விரோத பீரங்கிக்கும் நற்சான்றிதள் கிடைக்கிறது.
 
சென்ஸார் போர்டு உறுப்பினர்களாய் இருப்பவர்கள் சமூக ஆர்வலர்களாகவும் எளிய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் படைப்பாளிகளாகவும் அடக்குமுறைகளையும் அநீதிகளையும் கண்டு கொந்தளிக்கும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களாகவும் இருப்பார்களேயானால், அவர்களின் தணிக்கையையும் அவர்கள் அளிக்கும் சான்றிதளையும் ஏற்றுக்கொள்வதில் நமக்கு மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஆனால், கறைபடிந்த கரங்களுடையோரும் பாரபட்ச போக்குகளை கடைப்பிடிப்போரும், இந்துத்துவ சிந்தனையுடையோரும் நிறைந்திருக்கின்ற ஒரு அவையின் மதிப்பீடை எப்படி அப்படியே ஏற்றுக்கொள்வது? எனவே, சென்ஸார் போர்டை ஒரு அளவுகோலாகக் கொண்டு முஸ்லிம்களின் பிரச்சனைகளை அணுக முடியாது.
 
***
தணிக்கைக்குழுவுக்கு வெளியில் படைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய மத, இன, சாதிய, அரசியல் தலையீடுகள் குறித்த கேள்வியை குறிப்பான நிலைமையிலான குறிப்பான ஆய்வுசார்ந்த கேள்விகளாக அல்லாமல் பொத்தாம் பொதுவாக அணுகமுடியாது. சிறுபான்மையினர் பிரதிநித்துவம் தணிக்கை அமைப்புகளில் இல்லாமையும் சிறுபான்மையினர் தொடர்பான அணுகுமுறை ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் பாரபட்சமாகக் கெட்டிபட்டிருப்பதனாலும்தான் இப்பிரச்சினை தோன்றியிருக்கிறது. குறிப்பாக அரை நூற்றாண்டு இந்திய சினிமாவின் வில்லன்களாக இஸ்லாமியர்கள் ஆனது ஏன் எனும் கேள்விக்கு இங்கு விடை காணப்பட வேண்டும். விஸ்வரூபம் எழுப்பியிருக்கும் கேள்வியை விஸ்வரூபம் முன்வைத்திருக்கும் அரசியலின் அடிப்படையில்தான் எவரும் பேசத்துவங்க வேண்டும். ஹே ராம் முதல் விஸ்வரூபம் வரை தமிழ் திரைப்பட ரசிகனின் உளவியலுக்குள் கமல்ஹாசன் முன்வைத்து வரும் கருத்து தமிழக முஸ்லிம்களை இன்னும் இன்னும் ஓரநிலைக்குத் தள்ளுவதாகவே இருக்கிறது. கமல்ஹாசனின் படைப்புச் சுதந்திரம் பற்றிப் பேசும்போது இது குறித்த அவதானங்களும முன்வைக்கப்பட வேண்டும்.
 
கமல்ஹாசன் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணனின் அறிக்கை இது:
 
கமலஹாசன் கலைத்துறையிலும் தனிப்பட்ட முறையிலும் மதச்சார்பின்மை கொள்கையை உயர்த்திப் பிடித்து வருபவர். கடந்த காலத்தில் அவருடைய செயல்பாடுகளே இதற்கான சாட்சியாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் திரைப்பட தணிக்கைத் துறை ஒரு படத்தை தணிக்கை செய்து வெளியிட்ட பிறகு அதை தடை செய்வது சரியல்ல என்று உறுதிபட தெரிவித்திருக்கின்றது. இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்ட பூர்வமாகவும் தார்மீக ரீதியிலும் நியாயமானதல்ல.
 
ராமகிருஷ்ணனின் அறிக்கை கமல்ஹாசன் எனும் தனிநபரின் மீதான நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. பிரச்சினை அதுவல்ல, ஹே ராம் முதல் விஸ்வரூபம் வரையிலும் தமிழக இஸ்லாமியர்கள் தொடர்பாக அவர் உருவாக்கிவரும் திரைமனநிலை குறித்தது பிரச்சினை. பயங்கரவாதம்- இந்துத்துவம்- அமெரிக்கா முன்வைக்கும் பயங்கரவாத வேட்டை அரசியல் குறித்தது. தணிக்கைத்துறையினுள் நிலவும் ஜனநாயகமின்மை குறித்துப் பேசாமல் வெறுமனே படைப்புச் சுதந்திரமும் நல்லெண்ணமும் பேசுவது இடதுசாரி மரபு இல்லை.
 
ராமகிருஷ்ணனை அடியொற்றி இதே விதமான ஒரு நிலைபாட்டைத்தான் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் முன்வைக்கிறது. பின்ருவது முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அதிகாரபூர்வமான அறிக்கை:
 
'இந்தத் திரைப்படத்தை மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் முன்கூட்டியே பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவர்கள் படத்தில் தங்களது எதிர்ப்புக்குரிய காட்சிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது கமல்ஹாசன் படத்தில் சில காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டிருப்பதாக வந்துள்ள தகவல் வரவேற்கத்தக்கது. கமல்ஹாசன் இந்த முடிவுக்கு வந்திருப்பதை இஸ்லாமிய அமைப்புகள் பரிசீலிக்க வேண்டும். அரசும் தனது பிடிவாதமான உடும்புப்பிடி நிலையைக் கைவிட வேண்டும் என்றும் எமது சங்கம் கருதுகிறது. இத்தகைய போக்கு தொடர்வது எதிர்காலத்தில் அரசியல் - சமூக விமர்சனங்கள் உள்பட எப்படிப்பட்ட கருத்துகளையும் கலை ஆக்கங்களில் சொல்ல இயலாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் என்றும் சங்கம் அஞ்சுகிறது.'
 
பொதுவாகவே தமிழகத்தில் ஒரு பிரமை இருக்கிறது. நாத்திகமும் பகுத்தறிவும் பேசுபவர்கள் இயல்பாகவே முற்போக்கானவர்கள் எனும் கருத்துத்தான் அந்தப் பிரமை. இன்று சமூக மாற்றத்திற்கான போராட்டம் என்பது, அரசியல், பொருளியல், கலாச்சார தளத்தில் என மூன்று வெளிகளில் நடத்தப்பட வேண்டும். தி.க, தி.மு.க. போன்றவற்றுக்கு உலக அரசியல் பிரக்ஞை என்பது முற்றிலும் இல்லை. கமல்ஹாசனுக்கும் இஸ்லாமியக் கூட்டமைப்புக்கும் உள்ள பிரச்சினை என்பது வெறுமனே அபிப்பிராய வித்தியாசம் இல்லை. பயங்கரவாதம் மற்றும் அமெரிக்க வேட்டை, அது விதைக்கும் இஸ்லாமிய வெறுப்பு தொடர்பானது பிரச்சினை. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முன்வைக்கும் அறிக்கையில் இந்த அரசியல் குறித்த பிரக்ஞை என்பது முற்றிலும் இல்லை.
 
கலைஞர் கருணாநிதி சொல்கிறார்:
 
 
கலைஞானி தம்பி கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ரிபாயி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப் போல சூப்பர் ஸ்டார் நண்பர் ரஜினிகாந்த் அவர்களும், கலைஞானி தம்பி கமல்ஹாசன் அவர்களும், இஸ்லாமிய சமுதாயத்திடம் பாசமும் பற்றும் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகில் எந்தவொரு பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் விமர்சனங்களையோ கிளர்ச்சிகளையோ நானும் என் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் ஆதரித்தது இல்லை. அவற்றை எதிர்த்தே குரல் கொடுத்திருக்கிறோம். இஸ்லாமிய சமூகத்தினருக்கும் பிற சமூகத்தினருக்கும் இடையே நல்லுறவு என்றைக்கும் பட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் மிகுந்த அக்கறை உடையவன் என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் கலைஞானி கமல்ஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை மேலும் நீட்டிக்காமல், ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை கலந்தாலோசனை மூலமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
 
இது பகுத்தறிவாளர் கே.வீரமணியின் அறிக்கை:
 
இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி புரிந்து கொண்டு, நட்புறவும் பல்வேறு சமூகத்தவர்கள் கலைஞர்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படி செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். அடிப்படையில் நண்பர் கமலஹாசன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். யார் மீதும் வெறுப்பு கொள்பவர் அல்ல. எனவே அவரது திரைப்படத்தில் தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக் கூறப்படும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல அவர் ஈடுபட்டுள்ள கலைத்துறை திரையரங்க உரிமையாளர்கள் அனைவரது நல்லெண்ணத்தையும் பேராதரவினையும் பெறவேண்டியவர். இன்று அவர் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை பற்றியும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். பேசித் தீர்வு காணமுடியாத பிரச்சினையாக இது ஆகக் கூடாது. பல கோடி ரூபாய் முதலீடு என்பதைவிட முக்கியம் பல தரப்பு மக்களின் ஆதரவு என்ற முதலீடும் முக்கியம். ஏனவே, இஸ்லாமிய சகோதரர்கள் உடனே உணர்ச்சிவயப்பட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல் பிரச்சினையை ஒருவருக்கொருவர் பேசித் தீர்ப்பதோடு சமூகத்திலும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கு இடமின்றி நடந்து கொள்வதே அவசர அவசியம்.
 
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திராவிட மரபாளர்களான கலைஞர்.மு.கருணாநிதி, கே.வீரமணி போன்றவர்களின் பொத்தாம் பொதுவாகத் தணிக்கை குறித்த கருத்துகளுக்கும் கமல்ஹாசன் எனும் நல்லவர் குறித்த எண்ணங்களுக்கும் பதிலிறுப்பதுபோல பின்வருமாறு பேசுகிறார். ஆளுர் ஷா நவாஸ்:
 
 
மணிரத்னம் எடுத்த பம்பாய் படத்தை என்னிடம் போட்டுக் காட்டாமல் திரையிடக்கூடாது என்று பால்தாக்கரே கட்டளையிட்டபோதும், தெய்வத் திருமகன் என்ற பெயரை மாற்றியே ஆக வேண்டுமென அடம்பிடித்து விக்ரம் வீட்டை முக்குலத்தோர் அமைப்புகள் முற்றுகையிட்ட போதும், மாட்டுக்கறி சாப்பிடுகிறார் ஜெயலலிதா என எழுதியதற்காக நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் தாக்கியபோதும், கருத்துரிமைக் காவலர்களின் குரல்கள் ஏனோ ஒலிக்கவில்லை. பால் தாக்கரேவும் முக்குலத்தோரும் ஜெயலலிதாவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாகச் சித்தரிக்கப்படவில்லை. ஆனால், தலித்களும் முஸ்லிம்களும் தம்மைப் பற்றிய அவதூறுகளுக்கு எதிராகப் போராடினால் மட்டும் அதை எவராலும் சகிக்க முடியவில்லை.
 
கமல்ஹாசன் 'உன்னைப்போல் ஒருவன்' எடுத்தபோது அதை எந்த முஸ்லிமும் போராடித் தடுக்கவில்லை. படம் வந்தது. முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற கருத்தை விதைத்தது. குற்றச்செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு விசாரணைகள் அற்ற தண்டனைகள் வழங்க வேண்டும் என வாதிட்டது. என்கவுண்டரில் சுட்டுத்தள்ளி அதை செய்தும் காட்டியது. அப்படத்தின் வழியே முஸ்லிம்களுக்கு எதிராக கமல் செய்த கருத்துருவாக்கம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. 2009 இல் வெளியான அப்படம் அன்றோடு சென்றுவிடவில்லை. இன்றைக்கும் விடுமுறை நாட்களில் சிறப்புத் திரைப்படமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. கட்டற்ற அந்தக் கருத்துருவாக்கத்தை முஸ்லிம்களால் தடுக்கவும் முடியவில்லை; தகர்க்கவும் முடியவில்லை. உன்னைப்போல் ஒருவன் ஏற்படுத்திய சமூக விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? கமல் கல்லாக்கட்டியதோடு கடமை முடிந்தது என்று அடுத்தடுத்த படங்களை எடுக்கச் சென்றுவிட்டார்.
 
அவருக்காக குரலெழுப்பும் கலைத்துறையினரும் கருத்துரிமைக் காவலர்களும் அடுத்த வேலைக்குச் சென்றுவிட்டனர். ஆனால், முஸ்லிம்களால் மட்டுமே அடுத்த வேலையைப் பார்க்க முடியவில்லை. மாநகரங்களில் குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் திண்டாட வேண்டியதாயிற்று. தகுதி இருந்தும், திறமை இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் பெருநிறுவனங்களில் வேலை கிடைக்காமல் திணற வேண்டியதாயிற்று. ஒரு ரயில் பயணத்தைக் கூட நிம்மதியாக நிகழ்த்த முடியாமல் தவிக்க வேண்டியதாயிற்று. பாஸ்போர்ட் ஆபீஸ், போலீஸ் ஸ்டேசன், வில்லேஜ் ஆபீஸ் என எல்லா அரசு அலுவலகங்களிலும் சந்தேகப் பார்வைகளையும், சில பிரத்யேக கேள்விகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று.
 
***
 
விஸ்ரூபத்திற்கான எதிர்ப்பை வெளியிட்ட இஸ்லாமியக் கூட்டமைப்பில் இடம்பெற்ற அமைப்புகள் அனைத்தும் இஸ்லாம் குறித்த ஒரே எண்ணப்போக்கைக் கொண்டன இல்லை. இன்னும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு இந்தப் பிரச்சினையில் திட்டவட்டமாக அவமானகரமான கருத்துக்களையும் மொழிப் பிரயோகத்தினையும் பாவித்தது. அடிப்படைவாதிகளின் குரலாக அந்த அமைப்பின் கருத்துக்கள் ஒலித்தன. தலிபான்களை விடுதலைப் போராளிகளாகச் சித்தரித்த சவுதி அரேபிய வஹாபிய விளக்கங்களும் முன்வைக்கப்பட்டன. இது தமிழக இஸ்லாமியர்கள் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு அரசியல் போக்காகவே இருக்கிறது. இஸ்லாமிய சமூகம் தன்னை ஜனநாயகமயப்படுத்திக் கொள்வதில் எதிர்காலத்தில் இது பாரிய பிரச்சினையாக உருவாகிவரும் சாத்தியம் இருக்கிறது.
 
பெண்களின் பாலியல் தொடர்பான எந்த ஆண்மையச் சமூகத்தினதும் பதட்டங்களையே ஆப்கான் சமூகமும் பிரதிபலித்தது. நிலத்தின் மீதான ஆதிக்கத்திற்கான போர் நடத்தும் தேசியம், பெண் உடலின் மீதான ஆதிக்கத்தையும் தன்னிடம் சேர்த்துக்கொண்டது. அந்நியர்களால் விடுதலை பெற்ற பெண்ணின் உடல் அடிமைப்படுத்தப்படுதலே விடுதலை எனும் முடிவுக்கு முஜாகிதின்களும் தலிபான்களும் வந்தனர். பெண்களின் பாலியல் தொடர்பான வரலாற்றுரீதியான குரானது வியாக்யானங்களும் அப்போது புதிய வியாக்யானத்துக்கு உட்பட்டது. பெண்ணின் உடலைத் தமது கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலமே, தமது கலாச்சாரக் காவிகளான பெண்களை தமது ஆளுகைக்குள் கொண்டவருவதன் மூலமே, தாங்கள் சொர்க்கம் போவோம் எனும் நம்பிக்கையை வரித்துக் கொண்டார்கள் தலிபான்கள். பெண்கள் இப்போது சுயாதீனமான உயிரிகள் அல்ல. மாறாக தமது கலாச்சாரத்தினதும் இனத்தினதும் புனிதத்தைக் காக்கும் காவிகளே பெண்களின் உடல்கள். ஆகவே அதனை மூடிவைக்கவும், உடைக்கவும், எரிக்கவும், புசிக்கவுமாக தலிபான்கள் தலைப்பட்டார்கள். பெண்களின் மீதான மட்டுமீறிய சித்திரவதை நடவடிக்கைகள் இவ்வாறுதான் தலிபான்களால் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு பெண்களின் புனிதத்தைக் காக்கப் போராடிய தலிபான்களும் புனிதப்பட, பன்னிரெண்டு வயதுப் பெண் குழந்தைகள் கூட தலிபான்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பெண் உடம்பு வேட்கையைத் தூண்டுவது, மட்டற்ற வகையில் வேட்கை கொண்டது எனும் மதாதீத அடிப்படையில் பெண்களின் உடல் வல்லூறுகளின் நகங்களில் அகப்பட்டதாக தலிபான்களின் கையில் அகப்பட்டது.
 
வெகுமக்களுக்கு முன்பாக தூக்குத் தண்டனைகள் சதுக்கங்களில் நிறைவேற்றபட்டன. திருடியவருக்குக் கைவெட்டுதல், பாலியல்மீறல் புரிந்த பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லுதல் போன்றன அன்றாட நிகழ்வாகின. இசை நாடாக்கள் எரிக்கப்பட்டன. திரையரங்குகள் மூடப்பட்டன. கணவனோ சகோதரனோ உடன் வராமல் பெண்கள் வெளியில் வரக்கூடாது எனச் சட்டமிடப்பட்டது. பெண்களுக்கு பள்ளி கல்லூரிக் கல்வி மறுக்கப்பட்டது. கல்விக் கூடங்கள் மூடப்பட்டன. வெளியிலும் வீட்டிலும் பெண்கள் முக்காட்டுக்குள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பெண்களின் கால்கள் வெளியே தெரிந்தால் தண்டனை விதிக்கப்பட்டது. முகத்தை வெளியே காட்டும் பெண்கள் தண்டிக்கப்பட்டார்கள். அத்தகைய பெண்களின் கணவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். பைத்திய மனநிலை தந்த சந்தோஷத்தில், மதக்கருத்தியல் தரும் பித்துநிலையில் அவர்களுக்குத் தம் நடவடிக்கைகள் அனைத்தும் பரவசம் தருவதாகியது. கடவுளிடம் சென்று சேர்வதற்கான நிச்சயமான வழியாக அவர்களது நடவடிக்கைகள் கருதப்பட்டன.
 
தலிபான்கள் போரின் குழந்தைகள் எனக் குறிப்பிடுவார் ஆப்கான் புரட்சிகரப் பெண்கள் இயக்கத்தின் பிதாமகரான மினா. அவர்கள் உறவுகளை இழந்தவர்கள். பாகிஸ்தான் மதப் பள்ளியான மதரஸாக்களில் வளர்ந்தவர்கள். தாய் சகோதரி காதலியர் எனப் பெண்களை அவர்கள் அறியாதவர்கள். மூடுண்ட உலகத்தில் வளர்ந்த அவர்களுக்கு எந்த உலகப் பார்வையும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆப்கானின் கடந்தகால வரலாறு என்பதும் தெரியவில்லை. மத அடிப்படைவாதத்தினால் வழிநடத்தப்பட்ட அவர்கள் மாயையான மனப்பான்மை கொண்ட மனிதர்களாகவே ஆனார்கள். முஜாகிதின்களை பொறியியல் படித்த தொழில்நுட்ப கொமேனிகள் என்றார் பிரெட் ஹாலிடே. உலக வரலாற்றில் தலிபான்களின் பெண் வெறுப்பு, பெண் உடல் மீதான அவர்களது சித்திரவதை உணர்வு என்பது இணைகாணமுடியாத ஒன்றாகும். 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் மீறல் குற்றச்சாட்டுக்காக அவர்கள் ஒரு பெண்ணை காபூல் விளையாட்டு மைதானத்தில் அனைத்துப் பொதுமக்களையும் அழைத்துக் கல்லால் அடித்துக் கொன்றார்கள். இதனையும் இதைப் போன்றே கைகள் வெட்டுதல், தலை கொய்தல் போன்ற சம்பவங்களையும், புரட்சிகர ஆப்கான் பெண்கள் இயக்கம் மூடுதுணியில் ஒளித்துவைத்த காமெராவினால் எடுத்த ஒளிச்சுருள்களின் மூலம் உலகெங்கும் பரவச் செய்தார்கள்.
 
பன்னூறு ஆண்டுகள் பழமையான, மத்தியத்துவத்தை வெறுத்த, அதனது இனக்குழு மைய அதிகார அரசியல், கிராமிய சூழலில் நிலப்பிரபுத்துவத்திற்கும் மதவாதிகளுக்கும் இடையிலான உறவு, பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்க நிர்ப்பந்திக்குமாறான கருத்தியல் அடிப்படையை வழங்கிய இஸ்லாமிய மதநெறி, பெண் பாலியல்பை பாவமாகப் பார்த்த மரபு, அந்த மிகநீண்ட மரபைப் பேணிய ஆண் பெண் வாழ்வு போன்றவற்றைக் குறித்த ஆழ்ந்த விசாரணையின் மூலமே ஆப்கானிய சமூகத்தில் ஜனநாயகத்தைக் கட்டி எழுப்புதல் என்பது சாத்தியம். அது மட்டுமல்ல, மார்க்சியம் போன்ற விடுதலைக் கருத்தியல்கள் ஆயினும், இஸ்லாம் இந்துமதம் கிறித்தவம் யூதமதம் போன்ற மதத்தின் அடிப்படை கொண்டதாயினும், மீட்சிக்காகத் தோன்றிய அனைத்து இயக்கங்களும் கொண்டிருந்த நிறுவன முறைகளையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது.
 
இவ்வகையில் முஜாகிதின்களும் தலிபான்களும் மார்க்சியர்களை எதிர்த்து நடத்திய யுத்தம் என்பது ஆப்கானிஸ்தானை விடுவிப்பதற்கான போராட்டமாக இருக்கவில்லை. தமது பழைய மரபுகளையும் மதஅடிப்படைகளையும் தற்காத்துக்கொள்ள நடத்திய போரேயென்பது தெளிவாகும். ஆப்கானிய தேசியத்தில் வெற்றி பெற்ற கருத்தியலாக ஆனது மத அடிப்படைவாதமேயல்லாது தாராளவாதக் கருத்தியல் அல்ல. தேசியம் உள்ளீடற்றது என்றான் அல்ஜீரிய விடுதலைப் போராட்டக் கருத்தியலாளன் பிரான்ஸ் பெனான். உள்ளீடற்ற ஆப்கான் தேசியத்தை நிறைத்தது மத அடிப்படைவாதமும் பழமையும்தான். பதினைந்தாயிரம் அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக ஆப்கானில் இன்றும் இருக்கிறார்கள். தலிபான்களும் இன்னும் இருக்கிறார்கள். முல்லா ஒமர் இன்னும் ஆப்கானிலேயே இருக்கிறார். தலிபான்களை முதன் முதலாக அங்கீகரித்த பாகிஸ்தான் அரசு தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக தலிபான்களை வேட்டையாடி வருவதாகச்சொல்லி தினந்தோறும் ஆப்கானியர்களைக் கொலை செய்து வருகிறது. தலிபானிய சமூகத் திட்டம் என்பது பெண்வெறுப்புத் திட்டம். அது அழிவுகரமான பிற்போக்கான காட்டுமிராண்டித்தனமான ஒரு சமூகத்திட்டம்.
 
இச்சூழலில் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் போராட்ட முறை தொடர்பாக மனுஷ்யுபத்திரன் முன்வைக்கும் கருத்துக்கள் மிக முக்கியமானதாகும்:
 
இஸ்லாமிய அமைப்புகள் எந்த அளவு இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக போராடுகின்றனவோ அதே அளவுக்கு எந்த சகிப்புத் தன்மையும் அற்ற வகையில் மாற்றுக் கருத்துகளை கையாள்வதில் சில அமைப்புகள் நடந்துகொள்கின்றன. விஸ்வரூபம் பட விவகாரம் மட்டுமல்ல, வேறு பல விஷயங்களிலும் அவை மிக கடுமையான போக்குகளை கையாள்வதன் வழியாக ஜனநாயக சக்திகளின் ஆதரவை இழந்துவருகின்றன.... இஸ்லாத்தில் இருக்கும் ஜனநாயக சக்திகள் தங்கள் உரிமைக்காகவும் நியாயத்திற்காகவும் வலிமையுடன் போராடும் அதே சமயத்தில் தங்கள் அரசியல் நலன்களுக்காக இஸ்லாத்தை ஒரு வன்முறையின் கருவியாக மாற்ற முயலும் சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜனநாயகம் இன்றி சமாதனமும் இல்லை, உரிமைகளும் இல்லை.
 
***
 
விஸ்வரூபம் தொடர்பான பிரச்சினையை கமல்ஹாசன் எதிர்கொண்ட முறை சிக்கலான அரசியல் பரிமாணம் கொண்டது. ஆங்கில ஊடகங்களில் அவர் அடர்த்தியான அரசியல் சொற்களில் இப்பிரச்சினையைப் பேசினார். விஸ்வவரூபம் திரைப்படம் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது தொடர்பான அமெரிக்க தொலைக்காட்சி நேர்காணலில் அவர் விஸ்வரூபம் திரைப்படத்தை மிசிசிபி பார்னிங் மற்றும் காதரின் பிஜிலேவு உருவாக்கிய படங்களுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். தான் வலதுசாரி சார்போ இடதுசாரி சார்போ கொண்டவன் இல்லை என்பதனைத் தெளிவுபடுத்தும் அவர், மக்களுக்கான அறம் சார்ந்த கடப்பாடு தனக்கு உண்டு என்கிறார். மிசிசிபி பார்னிங் படம் குறித்துப் பேசும்போது அப்படம் ஆப்ரோ அமெரிக்கர்களின் சார்பையோ அல்லது வெள்ளை மேலாண்மைவாதிகளின் சார்பையோ எடுக்கவில்லை. அது நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு முன்வைக்கிறது என்கிறார்.
 
இது கமல்ஹாசனின் மிகத்தவறான வியாக்யானம் என என்னால் மிக நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆப்ரிக்க மக்களைக் கொல்லும் குலு கிலக்ஸ் கிலான் எனும் வெள்ளை நிறவெறி அமைப்பு குறித்த திரைப்படம் அது. திட்டவட்டமாக இப்படம் குலு கிலக்ஸ் கிலானுக்கு எதிரான பார்வை கொண்ட படம். அதனைச் சார்பு நிலையற்ற படம் எனச் சொல்ல முடியாது. காதரின் பிஜிலேவு ஈராக் போர் பற்றியும் பின் லாடன் கொலை பற்றியும் படமெடுத்தவர். தனது படம் இவர் படங்கள் போன்றது இல்லை என்கிறார் கமல்ஹாசன். விஸ்வரூபம் அமெரிக்கச் சார்புப்படம் என்பது மிகச் சாதாரணமான உண்மை. அவர் சார்பு நிலைகள் எடுப்பது இல்லை என்பது தவறான முன்வைப்பு.
 
இந்தியாவில் இன்று மிகப் பெரிய பிரச்சினைகளாக இருக்கிற குஜராத் படுகொலை, நக்ஸலைட் பிரச்சினை, தலித் பிரச்சினை தொடர்பாகச் சமகாலத்தில் அதியற்புதமான படங்களை நிஹ்லானி, நந்திதா தாஸ், ஜாபர் பட்டேல் போன்றவர்கள் எடுத்திருக்கிறார்கள். இப்பிரச்சினைகளில் அவர்களது சார்பு நிலைகள் தெளிவாக இருக்கின்றன. இப்பிரச்சினைகளில் இன்றைய நிலையில் இடது வலது சார்பு நிலையற்று நிகழ்வுகளை மட்டுமே முன்வைக்கிறேன் என ஒரு படைப்பாளி சொல்ல முடியாது.
 
தமிழகத்தில் விஸ்வரூபம் தொடர்பான பிரச்சினை வந்தபோது கமல்ஹாசன் தமிழகம் பயங்கரவாதத்தினால் பீடிக்கப்பட்டிருப்பதுபோல ஒரு சித்திரத்தை உருவாக்கினார். தான் தமிழகத்திலிருந்தே நீங்கிவிடுவதாகத் தெரிவித்தார். விஸ்வரூபம் திரைப்படம் வெளிவராது போனால் அல்லது தோற்றால் தனது திரைவாழ்வே அஸ்தமித்துப்போவதான ஒரு சித்திரத்தை அவர் வழங்கினார். அறுதியாக கடுமையான அரசியல் கொண்ட ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டார்:
 
விஸ்வரூபம் படத்துக்கும் எனக்கும் பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் திடீரென அந்தப் படம் என்னுடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானதாக உருவாக்கப்பட்டதாகக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இது எனக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்தப் படம் எந்த வகையில் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எனக்குத் தெரியவில்லை. ஒற்றுமைக்கான இந்தியா என்ற அமைப்பில் நான் உறுப்பினராக இருக்கிறேன். இந்த அமைப்பு இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டு வரும் அமைப்பாகும். என் படத்துக்கு எதிரான தடையை சட்டப்படி சந்திப்பேன். அதற்கான உரிமை எனக்கு உள்ளது. யதார்த்தத்தை நம்பியே நான் களத்தில் நிற்கப்போகிறேன். இது போன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 
விஸ்வரூபம் படத்திற்கான தமிழக இஸ்லாமிய மக்களின் ஆட்சேபனையை கலாச்சார தீவிரவாதம் எனக் குறிப்பிடுவது அவசரமான சொற்பிரயோகம் அல்ல. அதன்பின் கடுமையான அரசியல் இருக்கிறது. பிரிவினையின் போதான இந்து-முஸ்லிம் கொலைகள், இஸ்லாமிய தீவிரவாதம், பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தம் என்று தமிழக வாழ்வுக்கு அந்நியமான கதைக்கருவையெல்லாம் தேடித்தேடிப் படமெடுக்கிற கமல்ஹாசன் முன்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளரும் தாமரை கலை இலக்கிய இதழின் ஆசிரியருமான சி.மகேந்திரன் முன்வைக்கும் கேள்வி இது:
 
கமல் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பு இருந்த போதிலும் மனத்தின் அடி ஆழத்தில் ஒருவிதமான வேதனை தேங்கி நிற்கிறது. அதனை மனதில் போட்டு அழுத்தி வைக்காமல் வெளிப்படையாகவே வெளியிட விரும்புகிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலை இரண்டாம் உலகப்போருக்கு பின் நிகழ்ந்த மாபெரும் இன அழிப்பு. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் மக்கள் மீதான தாக்குதல் 2009 மே மாதம் 18 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழ் மக்களும் இன்னமும் விடுபடவில்லை. இரண்டாம் உலக போரின் மாபெரும் மனித அவலங்களிலிருந்து தோன்றியது தான் ஐரோப்பாவின் புகழ்மிகுந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும். தாலிபான் பிரச்சினை பாதித்த அளவிற்கு கமலுக்கு ஏன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை பாதிப்பைத் தரவில்லை என்பது மனதுக்குள் நீங்காத ஆதங்கமாகவே இருக்கிறது.
 
கமல்ஹாசனின் சார்பு நிலையை உரசிப் பார்த்துக்கொள்ள ஹே ராம் முதல் விஸ்வரூபம் வரையிலான அவரது கதைக் கருக்களே சான்றாக இருக்கின்றன.

 

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=3d65ec0f-15eb-41d4-afca-27ad2d9bfb29

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமல் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பு இருந்த போதிலும் மனத்தின் அடி ஆழத்தில் ஒருவிதமான வேதனை தேங்கி நிற்கிறது. அதனை மனதில் போட்டு அழுத்தி வைக்காமல் வெளிப்படையாகவே வெளியிட விரும்புகிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலை இரண்டாம் உலகப்போருக்கு பின் நிகழ்ந்த மாபெரும் இன அழிப்பு. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் மக்கள் மீதான தாக்குதல் 2009 மே மாதம் 18 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழ் மக்களும் இன்னமும் விடுபடவில்லை. இரண்டாம் உலக போரின் மாபெரும் மனித அவலங்களிலிருந்து தோன்றியது தான் ஐரோப்பாவின் புகழ்மிகுந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும். தாலிபான் பிரச்சினை பாதித்த அளவிற்கு கமலுக்கு ஏன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை பாதிப்பைத் தரவில்லை என்பது மனதுக்குள் நீங்காத ஆதங்கமாகவே இருக்கிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.