Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் உரிமைகளைப் பொறுத்த அளவில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: முதல்வர்

Featured Replies

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காவேரி பாசன விவசாயிகள் சார்பில் 9.3.2013 இன்று தஞ்சாவூரில் நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஆற்றிய உரை:

 

 

காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியதற்காக எனக்கு நன்றி தெரிவிக்கும் விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்; இதை தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே; தமிழக விவசாயிகளுக்கு, குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன். இதில் எனக்கிருக்கும் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவும்; உங்களையெல்லாம் நேரில் சந்திப்பதற்காகவும் தான், இந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ள நான் சம்மதம் தெரிவித்தேன்.


தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைப் பிரச்சனையாக விளங்கி வரும் பல்வேறு நதிநீர் பிரச்சனைகளில் காவேரி நதிநீர்ப் பிரச்சனை மிக முக்கியமானதாகும். சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், காவேரியில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

 

 

காவேரியில் நமக்குள்ள உரிமையை நிலை நாட்டுவதற்காக அமைக்கப்பட்ட காவேரி நடுவர் மன்றம், தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று வழங்கியது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மு. கருணாநிதி. மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தான். ஆனால், இந்த இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட எவ்வித நடவடிக்கையையும் அந்நாள் முதலமைச்சர் கருணாநிதி எடுக்கவில்லை.

ஆனால், இந்த இறுதி ஆணை வழங்கப்பட்டது முதல் இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும்; தமிழகத்திற்கு பாதகமாக உள்ள ஒரு சில அம்சங்களை உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

 

மூன்றாவது முறையாக 2011-ல் நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் எனது உத்தரவின் பேரில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக எனது தலைமையில் பல ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து, பல முறை வழக்கறிஞர்களுடன் நான் விவாதித்தேன். தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தங்கள் பணியை திறம்பட செய்தனர். இவற்றின் விளைவாக, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையினை 20.2.2013-க்குள் மத்திய அரசிதழில் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 19.2.2013 தேதியிட்ட மத்திய அரசிதழில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது. இது மட்டுமல்லாமல், தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகம் வழங்காத சூழ்நிலையில், தொடர்ந்து உச்ச நீதிமன்றம், காவேரி நதிநீர் ஆணையம் மற்றும் காவேரி கண்காணிப்புக் குழு ஆகியவற்றை வலியுறுத்தியதன் பேரில் சுமார் 68 டி.எம்.சி. அடி நீரை கர்நாடக அரசை கட்டாயப்படுத்தி நாம் பெற முடிந்தது.


காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட உடன் 20.2.2013 அன்று நான் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தேன். இது நமக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றேன். தமிழகத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை, எதிர்க்கட்சி நண்பர்கள், நடுநிலையாளர்கள், விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் மனமுவந்து பாராட்டினர்.

 

 

ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியோ, “வென்றவர் சொல்வதெல்லாம் வேதம் ஆகுமா?” என்ற தலைப்பிலே ஓர் அறிக்கையை விடுத்தார். அந்த அறிக்கையிலே பல உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லியிருந்தாலும்; இந்தப் பிரச்சனையில் நான் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை அவர் தன்னையும் அறியாமல் “தலைப்பின்” மூலம் ஒப்புக் கொண்டிருக்கிறார். “வென்றவர்” என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார் அல்லவா? அதற்கு என் நன்றியினை நான் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


அந்த அறிக்கையிலே, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு பாதகமானது என்று கூறி நான் அறிக்கை வெளியிட்டதாகவும்; அந்த பாதகமான தீர்ப்பு தற்போது மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தான் மகத்தான வெற்றி என்று நான் கூறுவதாகவும் தெரிவித்து இது இரட்டை நிலை இல்லையா? என்றும் வினவி இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில், ஒரு சில பாதகமான அம்சங்கள் உள்ளன என நான் கூறியது உண்மை தான். ஆனால் அதே சமயத்தில், இந்த இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும்; ஒரு சில பாதகமான அம்சங்களை உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றும், தெளிவாக பல அறிக்கைகளின் வாயிலாக, ஆரம்பம் முதலே, பல்வேறு தருணங்களில் நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அப்போது நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டு, தெளிவாக்கப்பட்டு இருக்கிறது. அப்போது நான் எதிர்க்கட்சியில் இருந்தாலும், இந்த நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று என்பதற்காக நான் உண்ணாநோன்பு இருந்தேன். எனவே இந்த விஷயத்தில் ஒரே நிலையைத் தான் நான் கடைபிடித்து வந்திருக்கிறேன் என்பதை, எல்லாவற்றிலும் “இரட்டை நிலை”யை கடைபிடிக்கும் கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

 

 

கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, “நடுவர் மன்றம் என்ற அமைப்பு உருவாவதற்கும்; அந்த அமைப்பு இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு என்றெல்லாம் அறிவித்ததற்கும், இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் உண்மையாக பாடுபட்டது யார் என்பதை பத்திரிகைகள் மறைத்தாலும், நடுநிலையாளர்கள் ஒரு சிலராவது எண்ணிப் பார்க்க மாட்டார்களா?” என்று புலம்பியிருக்கிறார். இது குறித்து எனது விளக்கத்தினை இங்கே அளிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.


காவேரி டெல்டா பகுதிகளில் இரண்டு போக சாகுபடி என்று இருந்த நிலைமை மாறி, ஒரு போக சாகுபடிக்கே அல்லல்படும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டது. இதனையடுத்து, மிகவும் காலதாமதமாக 4.8.1971-ல் அசல் தாவா எண். 1/1971 என்ற ஒரு வழக்கு தமிழக அரசால் இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் வற்புறுத்தலாலும்; அப்போது தமிழகத்தில் இருந்த அரசியல் சூழ்நிலைகளாலும்; அந்த வழக்கு 28.8.1972 அன்று தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. அன்று தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் யார்? சாட்சாத் கருணாநிதியே தான்! அன்றைய முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் தான் அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது. இதன் காரணமாக காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது.

 

 

என்னென்னவோ காரணங்கள் சொல்லி கர்நாடக அரசும், மத்திய அரசும் காவேரி நதிநீர்ப் பிரச்சினையில் எவ்வித முனைப்பையும் காட்டவில்லை.


எனவே, இறுதியாக 14 ஆண்டுகால காத்திருத்தலுக்குப் பின், நதிநீர் ஆணையம் தேவை, இது ஒன்றே வழி என்று, 6.7.1986-ல், 1956 ஆம் ஆண்டைய மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினை சட்டம், பிரிவு 3-ன் கீழ், ஒரு நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கடிதம் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் தலைமையிலான தமிழக அரசால் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்தின் மீது, பல ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் மத்திய அரசு இதனைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாடு காவேரி நீர்ப்பாசன விளை பொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கம் என்ற ஓர் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில், இந்திய அரசமைப்புச் சட்டம் 32-ன் கீழ் ரிட் மனு ஒன்றினை தாக்கல் செய்து அது நிலுவையில் இருந்தது. அதனை தாக்கல் செய்தவர்கள் பெரியவர் ரங்கநாதன் உட்பட மற்றவர்கள் இந்த மேடையிலேயே வீற்றிருக்கிறார்கள். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடனடியாக நடுவர் மன்றத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு 4.5.1990 அன்று உத்தரவிட்டது. இதன் பின்னர், 6.7.1986 அன்று புரட்சித் தலைவர் ஆழுசு தலைமையிலான தமிழக அரசால் நடுவர் மன்றம் உடனடியாக அமைத்தே தீர வேண்டும் என்ற கடிதத்திற்கு உயிர் ஊட்டப்பட்டு; 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம், பிரிவு 4-ன் கீழ் ஒரு நடுவர் மன்றத்தை உருவாக்கி, மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகம் 2.6.1990 அன்று உத்தரவு பிறப்பித்தது. இது தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதற்கான உண்மையான வரலாறு ஆகும். இதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்கு ஏதுமில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புரட்சித் தலைவர் ஆழுசு 1986-ல் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் தான் காவேரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்ட 1990 ஆம் ஆண்டில் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தாரே தவிர அவருக்கு அதில் எவ்வித பங்கும் இல்லை.

 

 

இதே போன்று, காவேரி நடுவர் மன்றம் 25.6.1991 அன்று இடைக்கால ஆணையை வழங்கிய போது, எனது ஆட்சிக் காலத்தில் நான் எடுத்த முயற்சிகளின் பயனாக அந்தத் தீர்ப்பு 10.12.1991 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.


இதனையடுத்து, காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு திட்டத்தினை வரையறுக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தி 14.5.1992 அன்று எனது தலைமையிலான தமிழக அரசின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக, 1993 ஆம் ஆண்டு நான் 4 நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டேன். இது மட்டுமல்லாமல் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்த கண்காணிப்புக் குழுவையும், நடைமுறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, 28.12.1995 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனது தலைமையிலான தமிழக அரசால், 1992 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் முன்பு 9.4.1997 அன்று விசாரணைக்கு வந்த போது, இடைக்கால தீர்ப்பினை நடைமுறைப்படுத்த ஒரு திட்டத்தினை வகுக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து, இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

 

தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய இந்தத் திட்டத்தினை வலுவிழக்கச் செய்து, பாரதப் பிரதமரை தலைவராகவும், காவேரி படுகை மாநில முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவேரி நதிநீர் ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்தியபோது அதனை ஏற்றுக் கொண்டவர் கருணாநிதி.


அப்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு, அதிமுக ஆதரவு அளித்து வந்தது. மத்திய அமைச்சரவையிலும் நாங்கள் அங்கம் வகித்தோம். பாரதப் பிரதமரை தலைவராகவும், சம்பந்தப்பட்ட காவேரிப் படுகை மாநில முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவேரி நதிநீர் ஆணையம் அமைப்பதற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எனது ஆதரவை கோரியது.

 

அப்போதைய பாரதப் பிரதமர் வாஜ்பாயும், இது குறித்து என்னிடம் விவாதித்தார். காவேரி நதிநீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைக்கும் நோக்கில், அப்போதைய மத்திய அரசின் செயல்பாடு இருந்ததால், இதனை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக நான் மறுத்தேன். காவேரி நடுவர் மன்ற தீர்ப்பினை செயல்படுத்தக் கூடிய அதிகாரம் மிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும்; கர்நாடகாவில் உள்ள அணைகளை இயக்கும் அதிகாரம் படைத்த அதிகாரிகளைக் கொண்ட ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன். அதில் உறுதியாக நின்றேன்.


தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் மத்திய அரசின் செயலுக்கு நான் செவி சாய்க்கவில்லை. அதே சமயத்தில், இந்த விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கூர்ந்து கவனித்து வந்தேன்.

 

மத்திய அரசோ, கருணாநிதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது கருணாநிதி தான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். அதன் விளைவு, செயலற்ற, வலுவற்ற, பயனற்ற காவேரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது.


இதனையடுத்து, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு அதிமுக அளித்து வந்த ஆதரவை நாங்கள் திரும்பப் பெற்றோம். மத்திய அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்தோம்.

 

தன் நலன், தன் குடும்ப நலன், தன் குடும்ப வியாபார நலன் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் செயல்பட்டு வந்த கருணாநிதி, கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்பட நினைத்த அப்போதைய மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டார். தன் உறவுகள் கொழிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசோடு உறவாடினார். அந்த உறவு இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது, மத்திய அரசு யாருடைய தலைமையில் அமைந்தாலும், அந்த மத்திய அரசுடன் எப்படியாவது கையை பிடித்து, காலைப் பிடித்தாவது கருணாநிதி உறவை ஏற்படுத்திக் கொள்வார். எந்தக் கொள்கையும் இல்லாமல் அதிகாரம் ஒன்றே குறிக்கோள் என்பதால் அவரால் அப்படி செயல்பட முடிகிறது.

 

என்னைப் பொறுத்த வரையில், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்பது தான், என்னுடைய குறிக்கோள். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஆட்சி அதிகாரம் முக்கியம். அதற்காகத்தான், இந்த முதலமைச்சர் பதவியை நான் வகித்துக் கொண்டிருக்கிறேன். தமிழர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசுடன் தொடர்ந்து நான் போராடிக் கொண்டிருக்கிறேன். தமிழர்களின் உரிமைகளைப் பொறுத்த வரையில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற உறுதியுடன் நான் செயல்பட்டு வருகிறேன்.

 

தமிழர்களின் உரிமைக்காக, மத்திய அரசிலிருந்து வெளியேறி மிகப் பெரிய தியாகம் செய்த இயக்கம் அதிமுக தான். இது போன்ற ஒரு தியாகத்தை கருணாநிதி செய்திருக்கிறாரா? செய்ய அவருக்கு மனம் தான் வருமா?


இப்படிப்பட்ட காவேரி நதிநீர் ஆணையத்தை 7.8.1998 அன்று ஏற்படுத்தியதற்காகத் தான் பத்திரிகைகள் தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார் கருணாநிதி. இந்த காவேரி நதிநீர் ஆணையத்தின் கூட்டம் தான், 2003 முதல் 2012 வரை 9 ஆண்டுகளாக நடைபெறவே இல்லை என்பதை கருணாநிதிக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 5.2.2007 அன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். இந்த இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? இல்லை! நிச்சயமாக இல்லை! மாறாக, இதை வெளியிடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருந்தார். முதலில் 90 நாட்கள் கழித்துத் தான் வெளியிட முடியும் என்று கூறினார். பின்னர், 1956 ஆம் ஆண்டைய மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டத்திற்கு 2002-ல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டுவிட்டால் தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், கர்நாடக அரசின் வழக்கறிஞர் போல கருணாநிதி செயல்பட்டார். தமிழகத்திற்கு சாதகமாக எந்த நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை என்பதை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


2009 ஆம் ஆண்டில் கர்நாடகம் உரிய தண்ணீரைத் திறந்து விடாமல் இருந்த போது, காவேரி நதிநீர் ஆணையக் கூட்டத்தை கூட்டுமாறு தமிழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ப்பட்டது. 2010 ஆம் ஆண்டிலும் காவேரியில் கர்நாடகம் உரிய தண்ணீரைத் திறந்து விடாத சூழ்நிலையில், அன்றைய முதலமைச்சர் என்ற முறையில் காவேரி நதிநீர் ஆணையத்தை கூட்டுமாறு பாரதப் பிரதமருக்கு, கருணாநிதி கடிதம் எழுதினார். இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், காவேரி நடுவர் மன்ற இடைக்கால ஆணை காலாவதியாகிவிட்டது என்றும்; இறுதி ஆணை இன்னமும் மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்து; எனவே சட்டப்படி கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர், தமிழக அரசிற்கு 15.10.2010 அன்று கடிதம் எழுதினார். இந்தத் தருணத்திலும், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் அன்றைய முதல்வர் கருணாநிதி வலியுறுத்தவில்லை.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை கர்நாடகத்திற்கு சாதகமாகவே நடந்து கொண்டிருக்கிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், தமிழக விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் கருணாநிதியிடம் இல்லை.

வாரி வழங்குவதிலே கர்ணனுக்கு நிகர் யாருமில்லை என்பார்கள். இதன் காரணமாக யாருக்கும் இல்லாத புகழ் கர்ணனுக்கு இருந்தது.


கர்ணனின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே சென்றது. ஒரு நாள் துரியோதனனின் அமைச்சர், துரியோதனனிடம், “கர்ணன் ஒரு சிறிய நாட்டைத்தான் ஆள்கிறார். அந்த நாட்டைக் கொடுத்ததும் நீங்கள் தான். ஆனால் கர்ணனின் புகழ் தான் ஓங்கி இருக்கிறது – இது சரி தானா?” என்று குதர்க்கமாக கேள்வி கேட்டார்.

 

துரியோதனனுக்கு, அமைச்சர் கூறுவது சரி என்று தோன்றியது. துரியோதனன் உடனே அமைச்சரைப் பார்த்து, “நானும் கர்ணன் மாதிரி புகழ் பெற ஏதாவது ஒரு யோசனையை சொல்” என்று கேட்டார்.


“மகா பிரபுவே தாங்களும் கர்ணனைப் போல் கொடை கொடுக்கத் துவங்கிவிடுங்கள். பின்னர் தங்களுக்கு ‘கொடை வள்ளல்’ என்ற பெயர் கிடைக்கும்”, என்றார் அமைச்சர்.

துரியோதனும் “சரி, அப்படியே செய்கிறேன்” என்றார்.


உடனே அமைச்சர், “அருமையான யோசனை சொன்ன எனக்கு ஏதாவது பரிசு தரக் கூடாதா?” என்று கேட்டார். அதற்கு துரியோதனன், “அதற்குத் தான் சம்பளம் தருகிறேனே” என்று கூறினார்.

 

மறு நாள், “துரியோதன மகாராசாவும் கொடை கொடுப்பார்”, என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டவுடன், பகவான் கிருஷ்ணர் தள்ளாத முதியவர் வேடத்தில், துரியோதனனிடம் வந்து, “அய்யா, எனக்கு ஒரு பொருள், தானமாக வேண்டும்”, என்று கேட்டார்.


உடனே துரியோதனன், “என்ன வேண்டும்? கேளுங்கள் தருகிறேன்” என்று கூறினார்.

அதற்கு அந்த முதியவர், “இன்னும் ஒரு மாதம் கழித்து இதே நாளில் வந்து நான் விரும்பும் பொருளைப் பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்.


பின்னர் பகவான் கிருஷ்ணர், வருண பகவானை அழைத்து, “இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து மழை பெய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து அடைமழை பெய்தது.

 

மீண்டும் கிருஷ்ணர், முதியவர் வேடத்தில் துரியோதனனைப் பார்த்து, “நான் உங்களை முன்பே சந்தித்து எனக்குக் கொடையாக ஒரு பொருளைத் தர வேண்டும் என்று கேட்டிருந்தேன். தாங்களும், தருவதாக சொன்னீர்கள். நினைவு இருக்கிறதா?” என்று கேட்டார்.

அதற்கு துரியோதனன், “நினைவு இருக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள்” என்று கேட்டார்.

 

கிருஷ்ணர், “கொடை வள்ளலே என் மகளின் திருமணத்திற்காக எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும்” என்று கேட்டார்.


இதற்கு துரியோதனன், “ஒரு மாதமாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. நாங்களே விறகு இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். விறகு மட்டும் கேட்காதீர். வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேளுங்கள்,” என்று சினத்துடன் கூறினார்.

 

இதற்கு பதிலளித்த கிருஷ்ணர், “தாங்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்னாவது?” என்று கேட்டார். அதற்கு துரியோதனன், “வாக்காவது, போக்காவது” என்று கூறினார்.

முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் அங்கிருந்து புறப்பட்டு கர்ண மகாராசாவின் அரண்மனைக்கு சென்றார்.

 

முதியவரைப் பார்த்த கர்ணன், முதியவருக்கு உடுத்திக் கொள்ள மாற்று உடையும்; துவட்டிக் கொள்ள துண்டும் அளிக்குமாறு உத்தரவிட்டார். முதியவரும் உலர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டார். அவருக்கு சூடான பாலும் கொடுக்கப்பட்டது.


சற்று இளைப்பாறிய முதியவர், “அய்யா, என் மகளின் திருமணத்தை முன்னிட்டு எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும். அதை கொடையாக கேட்கவே நான் இங்கு வந்துள்ளேன்.” என்றார்.

 

உடனே கர்ணன், “நம் நாட்டில் உள்ள பாழடைந்த அரண்மனையில் நிறைய தூண்களும் உத்திரங்களும் உள்ளன. அவை மழையில் நனையாமல் காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை வண்டியில் ஏற்றி, அவை நனையாமல் இருக்க, அவற்றின் மேல் ஓலைகளை கூரை போல் வேய்ந்து, முதியவரின் ஊருக்கு அனுப்பி வையுங்கள்” என்று அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கர்ண மகாராசாவின் உத்தரவுப்படி விறகினைப் பெற்றுக் கொண்ட முதியவர், துரியோதனன் மாளிகை வழியாக சென்றார்.

 

“பெரியவரே காய்ந்த விறகு கிடைத்து விட்டதா?” என்று வினவினார் அமைச்சர். அதற்கு, “கொடை வள்ளல் கர்ண மகாராசா தான் கொடுத்தார்” என்று கூறினார், அந்த முதியவர்.

கொடை கொடுக்க செல்வம் மட்டும் இருந்தால் போதாது. கொடை உள்ளமும், கூர்த்த அறிவும் வேண்டும் என்னும் உண்மை துரியோதனனுடைய அமைச்சருக்கு புரிந்தது.

 

கொடை கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பிறவிக் குணம் இல்லாமல் கொடை கொடுக்கிற மனம் தானாக வராது. அதே போல் தான், தமிழர்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்கும் மனம் வேண்டும். தன்னலத்தைப் கொண்டிருப்பவர்களுக்கு தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தரக் கூடிய மனம் தானாக வராது.

 

என்னைப் பொறுத்த வரையில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்; காவேரி நீரை தமிழக மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்ற மனம் என்னிடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய ரத்தத்தில் ஊறிய ஒன்று.


இதனால் தான், சுயநலமின்றி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நான் செயல்பட்டேன். அதில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

நாம் எவ்வளவு மன்றாடிக் கேட்டும், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட மத்திய அரசு முன்வரவில்லை. எனவே இதனை வெளியிட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்ய நான் உத்தரவிட்டேன். இவ்வாறு பல விஷயங்களில், கர்நாடகம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக வழக்குகள் தொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். நமது உரிமைகளை, நீதிமன்றங்கள் மூலம் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்த நிலைமை விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

 

மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட கருணாநிதி நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைக்கு காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கும். நமக்கு உரிய நீரை நாம் பெற்றிருக்க முடியும்.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெறும் நிலை இருந்த போது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதப் பிரதமரை இது குறித்து சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சொன்னார்களா? அல்லது வெளியிட வேண்டாம் என்று சொன்னார்களா? என்பது தெரியவில்லை. ஆனால், எழுத்துப் பூர்வமாக எதையும் அளிக்கவில்லை. இந்தச் சந்திப்பின் மர்மம் என்ன என்பதை

 

கருணாநிதி தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இவர்கள் சந்தித்ததாலோ என்னவோ, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர், மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் தான், மத்திய அரசு வேறு வழியில்லாமல் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டது. ஆனால், தி.மு.க. தலைவர்  கருணாநிதியோ, “உச்ச நீதிமன்றமே, தானே முன் வந்து பிறப்பித்த உத்தரவுக்காக ஜெயலலிதாவுக்கு பாராட்டு என்கிறார்கள்...”, என்று தனக்குள் இருக்கும் பொறாமை உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்ற விவரத்தை இந்தத் தருணத்தில் கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


காவேரியில் போதிய அளவு தண்ணீரை கர்நாடகம் திறந்து விடாததன் காரணமாகவும்; பருவமழை பொய்த்ததன் காரணமாகவும் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 15,000 ரூபாய் நிவாரணம் வழங்கி இருக்கிறோம். 50 விழுக்காட்டிற்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு, இந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. 3,06,794 விவசாயிகளுக்கு, 524 கோடியே 36 லட்சம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

 

50 விழுக்காட்டிற்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, 15,000 ரூபாய் இன்றைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்றால், இதில் தமிழக அரசு வழங்கியது எவ்வளவு? பேரிடர் நிவாரணத் தொகை எவ்வளவு? காப்பீட்டு நிறுவனம் வழங்கியது எவ்வளவு? என்றெல்லாம் கருணாநிதி வினா எழுப்பியுள்ளார். நிவாரண உதவிகளை நான் 8.2.2013 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த போதே, இது பற்றி தெளிவாகக் கூறியுள்ளேன். இருப்பினும், அதனை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


50 விழுக்காடு பயிர் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் 4,346 ரூபாய் மட்டுமே அளிக்கும். இந்தத் தொகையும் பயிர் அறுவடை சோதனைகள் முடிந்த பின்னரே கிடைக்கும். காப்பீட்டிற்கான முழுத் தொகையையும் விவசாயிகள் சார்பாக தமிழக அரசே செலுத்தியுள்ளது. அரசு காப்பீட்டுத் தொகையை செலுத்தியதால் தான், காப்பீட்டு நிறுவனங்கள் நிவாரணம் அளிக்க உள்ளன. மேலும், வழங்கப்பட வேண்டிய காப்பீட்டு நிவாரணம், வசூலிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைவிட கூடுதலாக வழங்க நேரிட்டால், காப்பீட்டு நிறுவனம், செலுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையில், நிர்வாக செலவு நீங்கலாக உள்ள வசூலிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை மட்டுமே இழப்பீடாக வழங்கும். மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையில், 50 விழுக்காட்டு தொகையினை மத்திய அரசும்; 50 விழுக்காட்டு தொகையினை மாநில அரசும் வழங்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரணத் தொகை, ஐந்து ஆண்டு திட்டக் காலத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள தொகைக்கு அதிகமான செலவினத்தை மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும். எனவே, 50 விழுக்காட்டிற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, வழங்கப்படும் முழு நிவாரணத் தொகையான 15,000 ரூபாயையும் மாநில அரசே தற்போது வழங்குகிறது. 51 விழுக்காடு இழப்பிற்கு, ஏக்கர் ஒன்றுக்கு, மத்திய அரசிடமிருந்தும், பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தும் பெறக்கூடிய தொகை 2,304 ரூபாய். இதிலிருந்து, மாநில அரசு செலுத்தியுள்ள காப்பீட்டுத் தொகையை கழித்துவிட்டால், அரசு பெறக்கூடிய தொகை 2,130 ரூபாய் தான். இந்தக் கணக்கின்படி பார்த்தால், 50 விழுக்காட்டிற்கு மேல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீட்டிற்கு தக்கவாறு ஏக்கருக்கு 11,000 ரூபாயிலிருந்து 13,000 ரூபாய் வரையிலான இழப்பீட்டை தமிழக அரசு வழங்குகிறது.

 

விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், ஏக்கருக்கு 15,000 ரூபாயினை விவசாயிகளுக்கு அளித்து இருக்கிறோம். பயிர்க் காப்பீட்டுத் தொகைக் கட்டணத்தையும் விவசாயிகள் சார்பில் எனது தலைமையிலான தமிழக அரசே செலுத்தி இருக்கிறது. நான் இந்த அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்த போது, இதனை எதிர்கட்சிகள், குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் மனதாரப் பாராட்டினர். வறட்சி காலங்களில் இது போன்ற நிவாரணம் கொடுப்பது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தனர். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, வெளியில் இருந்து கொண்டு பொறாமையால், அறியாமையால், குழப்பத்தால் ஏதேதோ கூறிக் கொண்டிருக்கிறார்.


நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதப் பிரதமரை நான் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பது மத்திய அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. எனவே, சட்டப்படி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

 

இல்லையெனில், உங்களின் ஆதரவுடன் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்வேன். காவேரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டி, தமிழகத்திற்குரிய பங்கினை பெற்றுத் தருவேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இந்த நன்றி தெரிவிக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த விவசாய சங்கங்கள் அனைத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நான் பொது வாழ்விற்கு வந்து 31 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 31 ஆண்டுகளில் உண்மையான மன நிறைவை அளிக்கும் விழா இன்று நடைபெற்ற கொண்டு இருக்கும் இந்த விழா என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த மேடையில் எனக்கு பாராட்டு தெரிவித்து என்னை வாழ்த்திப் பேசிய பெரியவர்கள் குறிப்பாக தா. பாண்டியன் பேசியதையும், பெரியவர் காவேரி சீ. ரெங்கநாதன் பேசியதையும், எம். ராஜேந்திரன், சத்யநாராயணன், பயரி கிருஷ்ணமணி, உழவர் பாண்டுரங்கன், ராஜாராம், திருவையாறு நவரோஜி சோழகர் ஆகியோர் பேசிய வார்த்தைகளையும் என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

 

எத்தனையோ பேர் பாராட்டு தெரிவிப்பார்கள். அவையெல்லாம் உதட்டளவிலான பாராட்டுக்கள். இன்று என்னை வாழ்த்தியவர்களின் வார்த்தைகள் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வந்தது என்பதை என்னால் உணர முடிந்தது என்பதை தெரிவித்துக் கொண்டு, தமிழக மக்கள், குறிப்பாக விவசாய பெருங்குடி மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் நடந்து கொள்வேன் என்ற உத்தரவாதத்தினை அளித்து அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

http://dinamani.com/latest_news/article1494947.ece

  • கருத்துக்கள உறவுகள்

......என்னைப் பொறுத்த வரையில், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்பது தான், என்னுடைய குறிக்கோள். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஆட்சி அதிகாரம் முக்கியம். அதற்காகத்தான், இந்த முதலமைச்சர் பதவியை நான் வகித்துக் கொண்டிருக்கிறேன். தமிழர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசுடன் தொடர்ந்து நான் போராடிக் கொண்டிருக்கிறேன். தமிழர்களின் உரிமைகளைப் பொறுத்த வரையில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற உறுதியுடன் நான் செயல்பட்டு வருகிறேன்.

 

அப்படியே மேற்குப் புறமாக இந்த சேட்டன்களையும் 'சுளுக்கு' எடுத்தால் நன்று. நெய்யாறு பாசன வாய்க்கால் பிரச்சனை, செங்கோட்டை பகுதியில் அணை பாசன பிரச்சனை, அமராவதி ஆற்று பிரச்சனை, பத்மநாதபுரம் அரண்மனை பிரச்சனை, இழந்த இடுக்கி மாவட்டப் பகுதிகளை தமிழர் நாட்டுடன் மீண்டும் இணைத்தல் போறவற்றிலும் கவனம் செலுத்தி மீட்கவேண்டும்.

கச்சத் தீவு?

 

மீட்டு, தமிழ் ஈழத்திற்கு சீதனமாகக் கொடுக்கலாம்! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.