Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் - பௌத்த அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்

- பௌத்த அச்சம்

 

 

எம். ரிஷான் ஷெரீப்

 

 

இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்கிவைக்கவும் பல்வேறு விதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலங்காலமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த போதிலும், அண்மையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கு எதிராக நிகழ்ந்த சில வன்முறைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தன. பங்களாதேஷ் வன் முறைகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் ‘பொது பல சேனா இயக்கம்’ எனும் பௌத்த அடிப் படைவாத அமைப்பால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் அதிகளவில் பௌத்த பிக்குகளே உள்ளனர்.

ஒவ்வொரு மாதத்தினதும் பௌர்ணமி தினமானது, போயா எனப்படும் பௌத்தர்களின் புனித தினமாகும். இத்தினத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆண்களும் பெண்களுமாகப் பௌத்த விகாரைகளில் நடைபெறும் மதப் போதனை நிகழ்வுகளில் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்வர். பௌத்த பிக்குகளால் நிகழ்த்தப்படும் போதனைகளுக்குள் முஸ்லிம் இன வெறுப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிறிது சிறிதாக ஊட்டப்படுகின்றன. இவ்வாறு விதைக்கப்படும் நச்சு விதைகள் எதிர்காலத்தில் பெருவிருட்சங்களாக மாறி வெகுவிரைவில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக் கலவரங்கள் ஏற்படக் காரணமாக அமையும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இலங்கைக் குடிசன மதிப்பீட்டுப் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் ‘கொழும்பு நகரத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் அதிகளவானோர் சிங்களவர்கள் என்ற போதிலும் அந்த எண்ணிக்கை 24 சதவீதமாகக் குறைந்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 11.12.2012ஆம் திகதி வெளியான திவயின என்னும் சிங்கள நாளிதழில் ‘2012இன் குடிசன மதிப்பீட்டு அறிக்கைக்கு இணங்கக் கொழும்புநகர மக்கள் தொகையில் 24 விழுக்காடு சிங்களவர்களாகவும் 33 விழுக்காடு தமிழர்களாகவும் 40 விழுக்காடு முஸ்லிம்களாகவும் உள்ளனர்’ எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

 

இவ்வாறாக இலங்கையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது, பௌத்த அடிப்படைவாத அமைப்பைப் பின்பற்றுவோருக்குப் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்து இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக ஆகிவிடுவார்களோ என்ற எண்ணம் அவர்களைத் தடுமாற்றமடையச் செய்துள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது முஸ்லிம்களின் குடும்பங்களைப் பொறுத்தவரையில், அவர்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடும்பப் பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு சிங்கள மக்கள் ஒரு தம்பதியினருக்கு ஓரிரு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ள, இஸ்லாமியர் மாத்திரம் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றித் தமது இன விகிதாசாரத்தைக் கூட்டிச்செல்வது, அந்த அமைப்பைப் பின்பற்றுவோரைப் பாரிய அளவில் சிந்திக்கச் செய்துள்ளது. இந்நிலைமையைப் பிரதிபலிக்கும் விதமாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவும் ‘கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினராகி முஸ்லிம், தமிழ்ச் சமூகங்கள் பெரும் பான்மையாகியுள்ளதை நான் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது’ எனத் தனது அமைச்சுக் காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின்போது தெரிவித்தமை இதைத் தெளிவுபடுத்துகிறது.

‘பாதுகாப்பைப் பற்றி முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக அகற்றுவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிகளையோ ஊர்வலங்களையோ தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயல்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிம்களாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன்வைப்பதுபோல் “பொது பல சேனா” எனும் அமைப்பும் “வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்குப் பர்தா அணிந்து முகத்தை மூடிச் செல்வதற்கு அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள். முன்பு பல்கலைக்கழகங்களில் முகம் திறந்து பர்தா அணியாமல் வந்தவர்கள் இப்போது அவ்வாறு வருகின்றார்கள். ஆகவே அதைத் தடுங்கள்” என்பது போன்ற பல விடயங்களைச் சுட்டிக்காட்டி எமக்குப் பல அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள்’ என்னும் பாதுகாப்புச் செயலாளரது தொடர்ச்சியான கருத்து, சில எதிர்கூறல்களை முன்வைப்பதாக அமைகிறது.

இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்புச் சக்திகள், பர்தா விவகாரத்தைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளப்பிவிட்டிருக்கும் இன்னும் இரண்டு பிரதான விடயங்கள் முஸ்லிம்களது கல்வியும் வர்த்தகரீதியாக அவர்கள் மேற்கொள்ளும் ஹலால் நடைமுறைகளும் ஆகும். கல்வி நடவடிக்கைகளில் மிகவும் முன்னிலையில் முஸ்லிம்கள் இருப்பது இத்தீய சக்திகளை உசுப்பிவிட்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் நடைபெற்ற சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சையில் முஸ்லிம் மாணவர்கள் அதிகூடிய அளவில் சித்தி பெற்றிருப்பது பல ஆர்ப்பாட்டங்களைக் கிளப்பிவிடப் போதுமானதாக அமைந்திருக்கிறது. அவ்வாறே இலங்கை முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வது சிங்களவர்களது வர்த்தகத்தைப் பாதிக்கிறது என்னும் கருத்தை இந்த அமைப்புப் பரப்பி வருகிறது. இதனால் எவ்வளவுதான் அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும்கூட முஸ்லிம்களால் நடத்தப்படும் எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் எந்தப் பொருளையும் கொள்வனவு செய்ய வேண்டாமெனச் சிங்களர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஜனவரிமாதம் முதல் திகதியன்று இலங்கையிலிருந்து வெளிவரும் திவயின நாளிதழின் முன்பக்கச் செய்தியானது இந்நடை முறையின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கிறது. ‘வர்த்தகப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன’ என டிசம்பர் 31ஆம் திகதி நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது ‘பொது பல சேனா’ இயக்கம் தெரிவித்துள்ள கருத்தை அந்நாளிதழ் தனது பிரதானச் செய்திகளிலொன்றாகத் தந்திருந்தது. ‘அல்கைதா’, ‘ஹமாஸ்’ போன்ற இஸ்லாமிய இயக்கங்களை நடத்திச் செல்வதற்கே இந்தக் கட்டணங்கள் செல்வதாகவும் இதை ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் உடனடியாகக் கவனத்தில் கொண்டு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடை முறையைத் தடுக்க வேண்டுமெனவும் அந்த இயக்கம் தெரிவித்த கருத்தின் மூலமாக வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு நடைபெறச் சாத்தியமா, சர்வதேச இயக்கங்களான அவை இலங்கையிலிருந்து அனுப்பப்படும் மிகவும் சொற்பமான பணத் தொகையிலா இயங்கும் என்பன போன்ற எந்தச் சிந்தனையுமில்லாது அந்த அமைப்பு கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் சிங்கள மக்கள் பெருகிவருகிறார்கள்.

2013ஆம் ஆண்டுக்காக இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் காலண்டர்கூட இந்த அமைப்பை மேலும் உசுப்பிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அரசால் வழங்கப்படும் காலண்டரில் மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் வரும் பௌத்தர்களுக்குப் புனிதமான போயா தினத்தை அரச, வங்கி, வர்த்தக விடுமுறைத் தினமாக அரசு அறிவித்திருக்கும். ஆனால் இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள காலண்டரில் மாதந்தோறும் வரும் பௌர்ணமி போயா தினங்கள் அரசு, வங்கி விடுமுறைத் தினங்களாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கொந்தளிப்புற்ற ‘பொது பல சேனா’ அமைப்பு ‘முஸ்லிம்களது பெருநாட்களை அரச, வங்கி, வர்த்தக விடுமுறைத் தினங்களாக அறிவிக்க முடியுமானால், ஏன் பௌத்தர்களின் புனித தினங்களை அவ்வாறு அறிவிக்க முடியாது?’ என இதிலும் இஸ்லாமியர்களை வம்புக்கிழுத்திருப்பதைக் காண முடிகிறது.

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களும் முஸ்லிம்களைப் போலவே விலைவாசி, வரிக்கட்டணங்களின் அதிகரிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம் மக்களைவிடவும் சிங்கள மக்களிடம் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. காரணம் அவர்கள் சார்ந்திருக்கும் பல்வேறு விதமான கடன் சுமைகளாகும். கல்வி, வீடு, திருமணம், வாகனம், மருத்துவம் என அனைத்துப் பிரதான அம்சங்களுக்கும் வங்கிகளையும் கடன் கொடுக்கும் நிறுவனங்களையும் அணுகிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள் தவணை முறையில் வட்டியுடன் அவற்றைச் செலுத்திச் செலுத்தியே சோர்ந்துபோகிறார்கள். கடன்களுக்கான வட்டிகளில் தங்கியிராத இஸ்லாமியரின் வாழ்க்கை நெறிமுறை சிங்கள இனத்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பொறாமையையும் இஸ்லாமியரின் வர்த்தக முறைமையில் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ள ‘பொது பல சேனா அமைப்பு’ பல்வேறு விதமான விஷமப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

 

muslims_sri-lanka.jpg

கடந்த சில மாதங்களாக இலங்கையின் பிரதான நகரங்கள் பலவற்றில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியால் பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான சுவ ரொட்டிகள் நகரெங்கிலும் ஒட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறான கூட்டங்களில் ஒன்றாகக் கடந்த நவம்பர் முப்பதாம் திகதி மஹரகம நகரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்காகப் பகிரப்பட்ட சுவரொட்டியில் இடம்பெற்றிருந்த கருத்துகள் விஷமத்தனமானவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை சிங்கள மொழியில் கீழ்வருமாறு அமைந்திருந்தன.

‘எனது தாய்நாடு! இன்று எனக்குரியது, நாளை உங்களுக்குரியது. சிங்களவர்களே! சிங்களச் சமூகத்தின் அழிவு காலம் தொடங்கிவிட்டது. ஏனென்றால், சிங்களச் சமூகத்திற்கும் பௌத்த மதத்திற்கும் பல சவால்கள் இருக்கும்போது சிங்களப் பௌத்தர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் புராதனச் சின்னங்களையும் பாரம்பரியங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செயல்கள் எந்தவித முடிவும் இல்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் அதே நிலைமையில் நாட்டின் மற்ற பாகங்களுக்கும் இவை பரவிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கயவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் பொருளாதாரத்தையும் வேலை வாய்ப்புகளையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சவால்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. கிறிஸ்தவர்கள் தங்கள் பிரச்சார வேலைகளையும் ஆரம்பித்துள்ளார்கள். இந்தக் கயவர்களின் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகளை 30 நவம்பர் அன்று உங்களுக்குத் தெளிவுபடுத்த முடியும் என நாம் நம்புகின்றோம். உங்கள் நாட்டையும் இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க விரைந்து வாருங்கள்!’

இந்தக் கூட்டத்தில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியினால் நிகழ்த்தப்பட்ட உரையும் இஸ்லாமியர்மீதான அவர்களது கோபத்தையும் இவ்வாறு சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. உதாரணத்துக்கு அவரது உரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருவ தன் மூலம் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளின் தீவிரத்தை உணரலாம்.

‘சிங்களச் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பள்ளி வாசலுக்குக் கல் எறிவதால் எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு முஸ்லிமை வீதியில் அடிப்பதன் மூலம் எதையும் நாம் அடைந்துவிட முடியாது. நாங்கள் மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டு, அவர்களின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முயல வேண்டும். இன்று இலங்கையில் ஆயுதம் தாங்கிய நான்கு குழுக்களைச் சேர்ந்த 12,000 ஜிஹாதிகள் உள்ளனர். அவர்கள் மிக விரைவில் இலங்கைத் தீவை அதிகாரத்தின் மூலம் கைப்பற்றிவிடுவார்கள். இந்த அச்சுறுத்தலை எதிர் நோக்குவதற்கு இங்கு உள்ள அனைவரும் 24,000 சிங்கள வாலிபர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை உருவாக்க வெளிக் கிளம்ப வேண்டும். நாம் அவர்களின் வழியில் சென்றுதான் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். ஆசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைவர்களின் மாநாடொன்று அண்மையில் மாலத்தீவில் நடைபெற்றது. இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் இதில் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் இலங்கை 2050ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக இருக்குமென்று வாக்குறுதியளித்தனர். தம்பியாக்கள் எங்களுக்கெதிராகத் திட்டமிட்ட முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக வேண்டும்’ என அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்துகளும் சிங்களவர்கள், இஸ்லாமியர்களைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்லான ‘தம்பியா’ எனும் சொல்லைப் பகிரங்கமாகக் கூறிச் சாடியிருப்பதும் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் இனக் கலவரங்களுக்கான எதிர்வு கூறல்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறான விஷமப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிங்கள இனத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதைப் போலவே இம்மோசமான கருத்துகளை ஆதரிக்கும் பௌத்தர்களது இணையத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் தம் பக்கம் மக்களைச் சேர்த்துக்கொண்டே வருகின்றன.

இலங்கையின் முதலாவது சிங்கள - முஸ்லிம் இனக் கலவரம் 1915ஆம் ஆண்டில் கம்பளை நகரில் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ளது. அதன் பிறகு நாடெங்கிலும் இவ்வாறான பல அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளபோதிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2001ஆம் ஆண்டு மாவனல்லை நகரில் இஸ்லாமியர்களின் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இனக் கலவரம் பிரதானமானது. அவ்வாறான ஒரு கலவரத்தை இலங்கையின் முதல் இனக் கலவரத்தின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 2015ஆம் ஆண்டும் ஏற்படுத்திக் கலவரத்தின்போது முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு அமைப்புகளின் நோக்கமாக உள்ளது என்பது சிங்களச் சமூக நல ஆய்வாளர்களது கருத்து. பரவலான முறையில் நடைபெறப்போகும் இக்கலவரங்களுக்காகச் சிங்கள இனவாத அமைப்புகளுக்கு ஆள் திரட்டும் நடவடிக்கைகளே கிராமங்கள், நகரங்கள், இணையதளங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.

பௌத்தமதப் போதனைகளோடு இவ்வாறு பரப்பப்படும் தீய கருத்துகள் முஸ்லிம் சமுதாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதை இஸ்லாமியர்கள் அனைவரும் உணர வேண்டும். மறைந்திருப்பவை விஷப்பற்கள் அகற்றப்பட்ட பாம்புகள் அல்ல. எந்நேரத்திலும் வெடித்து, தீயாய்ப் பரவி, எரித்துவிடக்கூடிய எரிமலைகள். எப்போதும் அவை வெடிக்கலாம். இலங்கையின் சிங்கள இனவாதிகள் சிலரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரங்கள், இன்னுமொரு சிறுபான்மை இனமான தமிழின மக்களுடனான யுத்தத்துக்கு எவ்வாறு வழிகோலியது என்பதைக் கடந்த காலங்களில் மிகவும் அதிகமாகக் காண முடிந்தது. அவ்வாறான நிலைமை முஸ்லிம் மக்களுக்கும் வரக்கூடும். முஸ்லிம்கள் எப்போதும் அந்நிய மதத்தவரோடு ஒற்றுமையோடு இருந்து, சிறு சிறு கலவரங்களின்போது விட்டுக்கொடுத்து, பொறுமையுடன் நடந்துகொள்வதன் மூலமுமே இவ்வாறான பெரிய கலவரங்களை ஆரம்பத்திலேயே அடக்க முடியும். எனவே இஸ்லாமியர்கள் எல்லோரும் கூர்மையான அவதானத்துடனும் சமூக நல்லுறவுடனும் ஒற்றுமையுடனும் இறை நம்பிக்கையுடனும் இருப்பதன் மூலம் மட்டுமே இவ்வாறான சக்திகளைத் தோற்கடிக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

http://www.kalachuvadu.com/issue-159/page26.asp

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மட்டுமல்ல,  உலகத்திலேயே... முஸ்லீம்கள் தான் அடுத்த நூற்றாண்டில் பெரும் பான்மையினராக இருப்பார்கள்.
காரணம் பலதார திருமணம், குடும்பத்தில் பல பிள்ளைகள், குடும்பக் கட்டுப்பாடு செய்ய அவர்களது மதத்திலுள்ள தடை போன்றவை, அவர்களின் இனப் பெருக்கத்தை பல்கிப் பெருகச்செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.