Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாணவர்கள் போராட்டத்தை முடக்கினால் புரட்சி வெடிக்கும்

Featured Replies

மாணவர்களின் போராட்டத்தை முடக்க முயற்சி செய்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

 

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும்- தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

 

இந்த நிலையில், அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்திருக்கிறது.


கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,‘‘இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்- இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இதே கோரிக்கையை வலியுறுத்திதான் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சரின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுவதற்காக, மாணவர்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்திருக்க வேண்டும். மாறாக கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்தால் சிறு வன்முறையோ அல்லது பதற்றமோ ஏற்படாத நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்க நினைப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் இலங்கைப் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் மீது வைத்திருந்த சிறிதளவு நம்பிக்கையைக் கூட ஈழத்தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும் இழந்துவிட்டனர்.

 

கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, தமிழகம் முழுவதும் மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், அனைத்து கல்லூரிகளையும் காலவரையரையின்றி மூடுவதாக 31.01.2009 அன்று அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. முந்தைய அரசு செய்த அதே தவறைத் தான் இப்போதைய அரசும் செய்திருக்கிறது. இதன்மூலம் ஈழத்தமிழரின் நலன்களை பாதுகாப்பதில் இரு திராவிடக்கட்சிகளுக்கும் அக்கறையில்லை என்பது தெளிவாகிவிட்டது.


இலங்கை பிரச்சினையில், இனப்படுகொலையாளர்களை தண்டிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, அவர்களின் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், கல்லூரிகளை மூடுவதன் மூலம் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது சீறிவரும் சுனாமியை செங்கற்களை காட்டி தடுக்க நினைப்பதற்கு சமமானதாகும். கல்லூரிகளை மூடுவதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தை முடக்க முடியாது; மாறாக இப்போராட்டம் மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

 

 

- என்று ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

http://dinamani.com/latest_news/article1503981.ece

  • தொடங்கியவர்

மாணவர் போராட்டத்துக்கு தோள் கொடுப்போம்: வைகோ

 

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக நல்ல தீர்வினை எதிர்நோக்கி மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தோள் கொடுப்போம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

 

வரலாறு சந்தித்த கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் ஒன்றாக ஈழத் தமிழர் இனப் படுகொலையை சிங்களப் பேரினவாத அரசு திட்டமிட்டு நடத்தியது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள், பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என யுத்தத்தில் ஆயுதம் ஏந்தாத பொதுமக்களையும், உலகம் தடை செய்த குண்டுகளையும் பயன்படுத்தி, சிங்களவனின் முப்படையும் இந்திய அரசு உள்ளிட்ட ஏழு அணு ஆயுத அரசுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களையும் கொண்டு, கொன்று குவித்தது. இரத்த வெள்ளத்தில் தமிழர்கள் மூழ்கடிக்கப்பட்டனர்.

 

சிங்கள அரசு செய்த இனக்கொலை யுத்தத்தை தனது முப்படைத் தளபதிகளையும் பயன்படுத்தி இயக்கியதும், போர் நிறுத்தம் ஏற்பட விடாமல் தடுத்து, தமிழ் மக்களைச் சாகடித்ததும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். இந்த இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளி காங்கிரÞ தலைமை தாங்கும் மத்திய அரசு ஆகும்.

 

இனப்படுகொலையின் உச்ச கட்டமாக, முள்ளிவாய்க்கால் தமிழர் அழிவு நடத்பப்பட்ட பின், 2009 மே மாதம் ஜெனீவாவில் ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், சிங்கள அரசை வெகுவாகப் பாராட்டி, மனிதகுலம் வெட்கித் தலைகுனியும்படியான, ஐ.நா. வின் வராற்றிலேயே அதுவரை இல்லாத ஒரு கேவலமான தீர்மானத்தை வரிந்துகட்டிக்கொண்டு இந்திய அரசு நிறைவேறச் செய்த துரோகத்தை ஒருபோதும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 

இனக்கொலைக்கு உடந்தையாக இருந்த குற்ற உணர்வால்தான், கடந்த ஆண்டும் கூட, ஐ.நா. மன்றத்தில் ஒரு நாட்டின் பிரச்சினைக்குள் தலையிட முடியாது என்று திமிரோடு கூறிய இந்திய அரசு, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக் கண்டனத்தால் சற்றுப் பதுங்கினாலும், அமெரிக்கா கொண்டுவந்த கவைக்கு உதவாத அந்தத் தீர்மானத்தையும்கூட சிங்கள அரசினுடைய அனுமதியோடும், ஒப்புதலோடும்தான் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீர்த்துப்போகச் செய்தது.

ஈழத் தமிழர்களைக் கொன்றால் நாதி கிடையாது, தாய்த் தமிழகத்திலும் கொந்தளிப்பும் நேராது என்று இந்திய அரசு தப்புக் கணக்குப் போட்டது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் சிந்திய இரத்தத் துளிகள், பலியிடப்பட்ட தமிழர் உயிர்கள் பிரளயத்தின் பேர் இரைச்சலாகக் கொந்தளித்ததின் அடையாளம்தான் தமிழ்நாட்டில் எரிமலையாய்ச் சீறி எழுந்து உள்ள மாணவர்கள் போராட்டம் ஆகும்.

 

இப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்றுதான் கடந்த நான்கு ஆண்டுகாலமாக ஏங்கிக் கொண்டு இருந்தோம். வீரத்தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட தியாக மாமணிகள் மரணத் தீயை அணைத்துக்கொண்டு ஆவியைத் தந்ததன் குறிக்கோளை நோக்கித் தமிழக மாணவர் உலகம் கொதித்து நின்று போராடுகிறது.


 

மீண்டும் திரும்புகிறது 65 மொழிப்புரட்சி.

இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் நாள், உன்னதமான திருப்பத்தைத் தமிழகத்தில் தந்த நாள். உலக மகளிர் தினமாகிய அந்நாளில், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் காலவரையரையற்ற உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கினர். கந்தகக் கிடங்கில் நெருப்புப் பொறி விழுவதுபோல், இலட்சக் கணக்கான மாணவர்களை அறவழி கிளர்ச்சிக் களத்தில் அப்போராட்டம் கொண்டுபோய் நிறுத்தியது. உயர்ந்த ஒரு இலட்சியத்துக்காக அரசியல் எல்லைகளுக்கு அப்பால், தமிழக மாணவர்கள் போர்க்கோலம் பூண்டு இருப்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிற வரலாற்றுத் திருப்பம் ஆகும்.


போராடும் மாணவர்கள் தங்கள் இலக்கைத் துல்லியமாக, தெளிவாக அறிவித்து விட்டார்கள். ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்று மட்டுமே தீர்வு ஆகும்.

 

சிங்கள இராணுவமும், போலிசும், சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்; வதை முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டு உள்ள விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும்; சுதந்திர ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பினை உலக நாடுகள், ஐ.நா.மன்றம் நடத்த வேண்டும்.


இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழித்த சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட்டு, கொலைபாதக இராஜபக்சே கூட்டம் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான தீர்மானம், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட வேண்டும்.

 

சிங்கள அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்தபோது, அதனை எதிர்த்து உலகின் கண்களில் மண்ணைத் தூவ சிங்கள இராஜபக்சேவை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்துவந்து வரவேற்பு கொடுத்த இந்திய அரசு, இனியும் ஈழத் தமிழர்களுக்குத் துரோகத்தை தொடர்ந்து செய்ய மாட்டோம் என்று தெரிவிக்க நினைத்தால், தமிழக சட்டமன்றம் கோரியவாறு இலங்கைக்குப் பொருளாதாரத் தடையைச் செயல்படுத்த வேண்டும். இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பொருளாதார வர்த்தக ஒப்பந்தங்கள், இருநாட்டுக் கடற்படை ஒப்பந்தம் அனைத்தையும் இரத்து செய்ய வேண்டும்.

குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள்தாம் சரித்திரத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றன. பிரித்தானிய வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்து கருப்பர் இன மக்கள் பெரிதும் வாழும் தென்னாப்பிரிக்கா விடுதலை பெற வீரமிக்க போராட்டத்தை நடத்தியபோது, நெல்சன் மண்டேலா ஆண்டுகணக்கில் ரோபென் தீவுச் சிறையில் இருந்தார். 1976 ஜூன் 16 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில், சொவேட்டோ என்ற புறநகர் பகுதியில், உயர்நிலைப் பள்ளி கருப்பு இன மாணவர்கள் சமஉரிமை கேட்டுப் போராட்டம் நடத்தியபோது, 13 வயது மாணவனான ஹெக்டர் பீட்டர்சன், பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். இரத்தம் தோய்ந்த அம்மாhணவன் உடலை, மாணவர்கள் ஏந்தியவாறு சாலையில் வந்தனர். கிளர்ச்சி எரிமலையாக வெடித்தது. தென்னாப்பிரிக்காவில், அதுவே பெரும் தொடர் புரட்சியாக நீடித்து, இலட்சியத்தையும் வென்றது.

 

அதுபோலவே, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் ஈடற்ற தலைவரும் தமிழ் அன்னையின் தவ மைந்தனுமான மேதகு பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வன், 12 வயது பாலகன் பாலச்சந்திரன் தனது வீர மார்பில், ஐந்து குண்டுகள் ஏந்தி கொட்டிய இரத்தத் துளிகள் கோடான கோடி தமிழர்கள் உள்ளத்தில் ஆவேச நெருப்பை மூட்டிவிட்டன. பாலச்சந்திரனின் ஒளி சிந்தும் இரண்டு கண்கள், மனிதகுலத்தை நோக்கி ஓராயிரம் கேள்விகளை எழுப்புகின்றன.


“உலகில் நீதி உண்டா? தமிழ்க் குலத்துக்கு நாதி உண்டா? என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் சிங்களவனால் கொல்லப்பட்டனரே, தாய்த் தமிழகத்துத் தொப்புள்கொடி உறவுகளே என்ன செய்யப் போகிறீர்கள்? இனியுமா கண்மூடித் தூக்கம்?” என்று அந்தக் கண்கள் கேட்டன.

 

காலக் கடைத் தீயெனத் தமிழக மாணவர்கள் களம் கண்டு உள்ளனர். தமிழ் ஈழ மக்களின் இரணமான மனங்களில் இப்போராட்டம் மூலிகை மருந்தாய் உள்ளது. இருள் விலகும்; தமிழ் ஈழம் விடியும்; சிந்திய இரத்தம் வீண் போகாது என்ற நம்பிக்கையை விதைத்து உள்ளது.


மாணவர்கள் போராட்டம் அமைதி அறவழியில் நடக்கிறது. துளியும் வன்முறை இல்லாமல் நடக்கிறது. தங்களை வருத்திக்கொண்டு பசியோடும், பட்டினியோடும் இலட்சியச் சுடர் ஏந்தி தமிழக மாணவர் படை போராடுகிறது. புரட்சி வடிவம் எடுக்கும் பெருவெள்ளத்தை கதவுகளைக் கொண்டு அடைத்துவிட முடியாது. சீறி எழும் மாணவர் போராட்டத்தை கல்லூரிகளை, விடுதிகளை அடைப்பதால் தடுத்துவிட முடியாது. மாணவர் போராட்டத்துக்குத் தமிழகத்தின் கோடான கோடி மக்களின் ஆதரவு தானாக ஏற்பட்டு உள்ளது. இதற்கு ஆதரவாக ஆங்காங்கு தமிழ் நாட்டின் பல்வேறு தரப்பினர் அமைக்கும் களங்களுக்கு ஈழத் தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தோள்கொடுத்துத் துணை நிற்போம்.

 

மார்ச் 17 ஆம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே தமிழ் ஈழ விடுதலையை முன் எடுக்க இனக்கொலைக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த, பொது வாக்கெடுப்பு நடைபெறச் செய்ய, தமிழ மாணவர்களின் கோரிக்கைக்கு உறுதுணையாய்க் குரல் எழுப்ப, மே-17 இயக்கம் ஒன்றாகக் கூடி முழங்கிட அழைப்பு விடுத்து உள்ளது. அதில் அனைவரும் பங்கு ஏற்போம்.


மார்ச்18 ஆம் தேதி, தமிழகம் எங்கும் வகுப்புகளை மாணவர்கள் புறக்கணிப்போம் என அறிவித்து உள்ளனர். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்களும் காலத்தின் தேவையான இந்த அறப்போரில் பங்கு ஏற்கும் போராட்டமாக அந்த நாள் அமையட்டும்.

 

மார்ச் 19 ஆம் தேதி, கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகளும் கடைகளை மூடி மாணவர் போராட்டத்துக்கு துணைநிற்போம் என அறிவித்து உள்ளனர்.


மார்ச் 20 ஆம் தேதி, தமிழகம் எங்கும் மாணவர்கள் தமிழ் ஈழ விடுதலைக்காக முன்னெடுக்கும் தொடர்முழக்கப் போராட்டம் வெற்றிகரமாக நடக்கட்டும்.

 

சரியான இலக்கைத் தீர்மானித்து முறையான போராட்டத்தைத் தாங்களாக வடிவமைத்து, வளரும் தலைமுறையான தமிழக மாணவர்கள் முன்னெடுத்து வரும் அறப்போருக்கு தோள்கொடுத்து துணை நிற்போம்!

 

http://dinamani.com/latest_news/article1503994.ece

  • தொடங்கியவர்

64185_10200817934714217_1637928244_n.jpg

வரவேற்கப்பட வேண்டிய பங்களிப்புகள்... நான் இதைப் பகிர்கிறேன். அனைவரும் களம் இறங்க வேண்டும்.. பகிருங்கள், பங்களியுங்கள்... கீழுள்ள கோரிக்கையுடன் மேலும் ஒரு கோரிக்கையாக

“ தமிழீழ வரலாற்றினையும், துரோகிகளின் வரலாற்றினையும், 2009இல் நடந்த அடக்குமுறைகளையும் மாணவர்களிடத்தில் தோழர்கள் சென்று பகிரவேண்டும்”... மிக முக்கியமாக , “ மாணவர்கள் தொடர்ந்து போராட வேண்டும் , தமிழர்களின் இதர பிரச்சனைகளையும் பற்றி விளக்குங்கள், கூடன்குளம், முல்லைப் பெரியார், மூவர் தூக்கு” ...

 

முகநூல் - திருமுருகன் காந்தி

  • கருத்துக்கள உறவுகள்

16-protest55-300.jpg

தமிழக அரசின் விடுமுறை அறிவிப்பையும் மீறி தீவிரமானது மாணவர் போராட்டம்!

 

சென்னை: தமிழகத்தில் மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டும் மாணவர்கள் போராட்டம் முழு வீச்சில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழக மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 7 பேர் உடல் நிலை கவலைக் கிடமானது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 மாணவர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் மேலும் 8 மாணவர்கள் இவர்களுடன் இணைந்திருக்கின்றனர்.

சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர். நந்தன் கல்லூரிதான் சென்னை மாணவர்களுக்கு இப்போது மைய போராட்ட களமாக மாறி வருகிறது. உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக பல கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு குவிந்துள்ளனர்.

திருச்சியிலும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூரில் பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களும் ஈழத் தமிழருக்காக போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதேபோல் கோவையில் மாநகராட்சி பள்ளிக் கூட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகியிருக்கின்றனர். கோவை ஒண்டிப்புதூரில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம் நடத்தியதற்காக 38 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மதிமுக அலுவலகத்தில் 6-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக சட்ட மாணவிகள் போராட்டத்தை நடத்தினர். ராஜபக்சே உருவபொம்மையை விளக்கு மாறால் அடித்தும் செருப்பால் அடித்தும் தீயிட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

திருநெல்வேலியில் சித்த மருத்து மாணவ, மாணவியர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கடலூர், விருத்தாசலம் மாணவர்களும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.