Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களின் பேரெழுச்சி: முன்னும் பின்னும் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் பேரெழுச்சி: முன்னும் பின்னும் - யமுனா ராஜேந்திரன்

அமெரிக்கத் தீர்மானத்தை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? புகலிடத்தமிழர்கள் மேற்குநாடுகளில் வாழ்கிற அவர்தம் இயல்பினால் மேற்கத்திய அமெரிக்க அரசுகளின் வழியிலான அழுத்த அரசியலைத் தான் அவர்கள் மேற்கொள்ள முடியும். அமெரிக்காவின் மேற்கின் எந்தவிதமான முன்னெடுப்புகள் ஆனாலும் அதனை நிராகரிக்கிற நிலைமையில் புகலிட அரசியல் என்பது இல்லை. இந்தத் தீர்மானங்கள் குறித்த தமது தயக்கங்களுடன் அவர்கள் இத்தீர்மானங்களை வரவேற்கவே செய்வர். அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது.

 

 இந்தத் தீர்மானம் குறித்து எதிர்வு கூறி இதனால் பயனேதும் இல்லை என நிராகரித்திருக்கிறார் ஈழத்தின் உள்ளிருந்து செயல்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர் ஜெனிவாவுக்கும் சென்றிருந்தார். தென்னாப்பிரிக்கா அல்லது பிறிதொரு நாடு மத்தியஸ்தம் வகித்து பேச்சுவார்த்தை நடந்தால் அதனை அமெரிக்கா ஆதரிக்கும் என ரோபரட் பிளேக் சொன்னதை வரவேற்றுப் பேசியிருக்கிறார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இவை அனைத்துக்கும் மேலாக ஐ.நா தீர்மானத்தை எதிர்த்து இலங்கை ராணுவம் முன்னெடுக்கும் ராஜபக்சேவுக்கு ஆதரவான தமிழர் ஊர்வலத்திற்கு ஆள்திரட்டும் வேலையை அபிவிருத்தி அரசியல் பேசும் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா போன்றவர்கள் இந்த அணியின் தலைவர்கள்.

 

இன்னொரு போக்கு இருக்கிறது. இலங்கை அரசு, மனித உரிமை மீறல், யாழ் மாணவர் போராட்டம், படையினர் குவிப்பு என சமகால நெருக்கடிகள் எதுவும் குறித்தும் பேசமாட்டார்கள், அரசியல் தீர்வு என்ன என்பது குறித்தும் பேசமாட்டார்கள், நடந்து முடிந்த போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் நடத்தைகள் குறித்து சதா எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் இவர்கள். விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணை, வடகிழக்கு அரசியல் குறித்த கசந்த ஒரு சித்திரம் என இதுவே இவர்களது எழுத்துப்பாணி. எந்தவிதமான குறைந்தபட்ச எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கூட மேற்கொள்ள முடியாத நிலையிலுள்ளமைக்குக் காரணமான ராணுவ ஆட்சி, கேளிக்கைகளில் ஒரு தலைமுறையை ஆழ்த்திக் கொண்டிருக்கும் அபிவிருத்தி அரசியல்வாதிகள் பற்றி மறந்தும் இவர்கள் விமர்சனம் வைக்கமாட்டார்கள்.

 

முற்றிலும் கைவிடப்பட்ட அரசியல் எதிர்காலம் கொண்டதாகவே வடகிழக்கு நிலைமை இருக்கிறது, அதிலிருந்து மீட்சி தேடியே, ஒரு அரசியல் அசைவை எதிர்பார்த்து எதிரும் புதிருமான அரசியல் கொண்டவர்கள் அனைவரும் ஜெனீவாவில் குவிந்தார்கள்.

 

****

 

தமிழகத்தில் ஜெனீவா தீர்மானம் மற்றும் அமெரிக்கா தொடர்பான பன்முகப் பார்வை கொண்ட அரசியலொன்று உருவாகியிருக்கிறது. மாணவர்களின் போராட்டம் அறவழியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கும் அரசியல் கொண்ட மாவோயிஸ்ட்டுகள் ஒரு பகுதியினரும், தமிழர் அல்லாத இனத்தவர் அனைவரின் மீதும் துவேஷம் பரப்பும் தமிழ்தேசியர் ஒரு பகுதியினரும் இந்தப் போராட்டத்தை வன்முறைப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் உதிரியான சில சம்பவங்களும் நடைபெற்றன. புத்தபிக்குகள் தாக்கப்பட்டதும், இந்திய ராணுவக் கட்டிடம் ஒன்றின் முன்பான கிளர்ச்சியும் அத்தகைய தன்மைகள் கொண்டன. இத்தகைய சக்திகளின் நடவடிக்கைகள் போராட்டத்தின் எதிர்கால திசைவழியை நிச்சயமாகவே திசைதிருப்பிவிடும் தன்மை படைத்தது.

 

மாவேயிஸ்ட்டுகளைப் பொறுத்து ஐரோப்பிய அமெரிக்க நடவடிக்கைகளின்பால் மாணவர்களுக்கு இருக்கும் அதிருப்தியை அவர்களது செவ்வியல் ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் சட்டகத்துக்குப் பாவிக்க நினைக்கிறார்கள். அமெரிக்க எதிர்ப்பின் குவிமையமாக இதனை ஆக்கக் கருதுகிறார்கள். இன்றைய நிலையில் சர்வதேசிய அரசியல் பொறிமுறையில் ஈழத்தமிழர் உரிமைகள் தொடர்பாக எவருடனேனும் உரையாட முடியும், எவருக்கேனும் அழுத்தம் தரமுடியும், அதற்குக் குறைந்தபட்சம் எவரேனும் செவிமடுப்பார்கள் எனில் அந்த அரசியல் சக்திகளாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும், இந்தியாவும்தான் இருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தாம் வாழும் வடகிழக்கில் முற்றிலும் ஓரநிலையில் உள்ள ஒரு சூழலில், ஈழத்தமிழர்தம் போராட்டக் கோரிக்கைகளை முன்வைத்து வெகுமக்கள் திரள் அரசியலை நடத்தக்கூடிய சூழல் என்பது இன்று மேற்கிலும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும்தான் இருக்கிறது.

 

இந்தக் குறிப்பிடத்தக்க நாடுகள் தத்தமது அரசியல் நலன்களுக்காகவே இலங்கையில் தலையிட நினைக்கிறது என்று கொண்டாலும், இன்றைய உரையாடல் அல்லது அரசியல் செயல்பாடு என்பது இவர்களோடு ஊடாடியே நடைபெற வேண்டும். இவர்களது நலன்களும் இலங்கையின் நலன்களும்தான் இன்று முரண்பட்டிருக்கிறது என்பதும் பிரத்தியட்சமாக இருக்கிறது. இதுவன்றி ரஸ்யா, சீனா போன்ற முன்னாள் சோசலிச நாடுகளையோ அல்லது இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசம் பேசும் நாடுகளையோ ஈழத்தமிழர் பொருட்படுத்தவும் முடியாது. அவர்களுக்கு ஈழத்தமிழர்களிடத்து குறைந்தபட்ச அக்கறையும் இல்லை. இதுவன்றி ராணுவ ஆட்சிகளையும் எதேச்சாதிகாரிகளையும் மன்னர்களையும் அரசுத் தலைவர்களாகக் கொண்டிருக்கிற மூன்றாமுலக நாடுகள் எவையும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக வரப்போவதும் இல்லை.

 

இனப்போராட்டத்தை ஒரு வரலாற்று நிலை என ஏற்றுக்கொள்கிற கோட்பாட்டு ஒப்புதல் இந்திய மாவோயிஸ்ட்டுகளிடமும் மார்க்சிஸ்ட்டுகளிடமும் மட்டுமல்ல, உலக மார்க்சியர்கள் பெரும்பாலமானவர்களிடமும் இல்லை. மனித உரிமை அரசியலைப் புரிந்து கொள்வது, அதை ஒப்பிச் செயல்படுவது என்பது மார்க்சியர்களுக்கு எப்போதுமே இடியப்பச் சிக்கல். மனித உரிமை ஏகாதிபத்திய ஆதிக்கச் சதி என்பார்கள். மேற்கும் அமெரிக்காவும் போர்க்குற்றவாளி என்பார்கள். அவர்களுக்கு அது பற்றிப் பேசத் தகுதி இல்லை என்பார்கள். இலங்கையைப் பொறுத்து இது ஒரு திரிசங்கு நிலை. இலங்கை அரசு இனக்கொலை செய்கிறது. ஏகாதிபத்தியங்களையும் காலனியாதிக்க நாடுகளையும் எதிர்த்து நிற்கிறது. முன்னாள் இன்னாள் சோசலிச நாடுகளோடு நிற்கிறது. தமிழர்களுக்கு உரிமைகளைத் தரமறுக்கிறது. இலங்கை மார்க்சிஸ்ட்டுகள் அனைவரும் மகிந்த பக்கம் நிற்கிறார்கள். மார்க்சிஸ்ட்டுகளும் மாவோயிஸ்ட்டுகளும் என்னதான் செய்வது? பகுப்பாய்வுகளை எழுதிக் குவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். புரட்சிகர சர்வதேசியம் என்பது நடைமுறையில் வழக்கொழிந்துவிட்டது எனும் உண்மையை ஒப்ப முடியாமல், தமது செவ்வியல் ஏகாதிபத்திய விமர்சன வகையில் எந்த முடிவும் எடுக்க முடியாமல், தமிழ் தேசியர்களைக் காய்கிறார்கள். கடைசியில் அமெரிக்காவை எதிர்த்தால் ஈழத்தமிழருக்கு விடிவு வரும் என்கிறார்கள்.

 

எப்படி? எந்த வழிமுறையில்? என்ன நிறுவன அமைப்பு? என்ன போராட்ட வடிவம்? எவர் நேசசக்தி என்பதற்கெல்லாம் இவர்களிடம் பதில் இல்லை. இந்நிலைமையில் ஐரோப்பிய அமெரிக்க இந்திய அரசுகளை நோக்கிய அழுத்த அரசியலை ஒரு அரசியல் தந்திரோபாயமாகக் கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது நடைறையில் இவர்களை எங்கு கொண்டு சேர்க்கும்? திருணமூல், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் போன்ற மகிந்த ஆதரவு இந்தியப் பெருந்தேசியவாதிகளுடன்தான் இவர்களைக் கொண்டு நிறுத்தும்.

 

****

 

மாணவர்களின் பேரெழுச்சி என்பது இரண்டுவிதமான உத்வேகத்தை ஈழத்தமிழர்களிடமும், ஈழத்தமிழர் விடுதலையை விரும்பும் உலகெங்கும் உள்ள தமிழர்களிடமும் தோற்றுவித்திருக்கிறது. வடகிழக்கில் மையம்கொண்டு நடைபெற வேண்டிய ஈழத்தமிழர் அரசியல் என்பது படை குவிப்பு, அனைத்துக் கிளர்ச்சி வடிவங்களும் ஒடுக்கப்படுதல், இலங்கை அரசின் முழுமையான அரசியல் நிராகரணம் போன்றவற்றினால் உறைநிலையை அடைந்திருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளின் கடந்த கால துரோகங்களாலும், தேர்தல் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்பட்ட தமிழ்தேசிய அரசியலாலும் ஈழத் தமிழருக்கு ஆதரவான தமிழக அரசியலும் உறைநிலையை அடைந்திருந்தது. மாணவர்களின் பேரெழுச்சி இந்த அரசியல் உறைநிலையை உடைத்தெறிந்திருக்கிறது. மாணவர்களது கோரிக்கைகள் திட்டவட்டமாக இருக்கிறது. இவை இரண்டும் மிகப்பெரும் பாய்ச்சல்கள்.

 

மாணவர்களது போராட்ட வடிவம் அரபுப் புரட்சியினால் புடம்போடப்பட்ட, வால்ஸ்ட்ரீட்டில் பரவிய, கூடங்குளத்தில் ஆதர்ஷமாகி நிலைத்த அறவழிப் போராட்டமாக இருக்கிறது. மாணவர்களது போராட்டம் என்பது இயல்பில் வெகுமக்களின் உளவியலில் எழுந்த மாற்றத்தின் விளைவுதான். தமிழக வெகுமக்களின் உளவியலில் இந்த மாற்றத்தை உருவாக்கியது ஒரு சின்னஞ்சிறு சிறுவனின் மேல்சட்டையற்ற கள்ளம் கபடமற்ற துறுதுறு பிம்பம். அது பிரபாகரனின் புதல்வன் - 12 வயது மகன் பாலச்சந்திரனின் பிம்பம். உடலெங்கும் தீப்பிழம்புடன் அம்மணமாக ஓடிவரும் வியட்நாமிய மைலாய்க் குழந்தையின் பிம்பம் உலகில் அமெரிக்க எதிர்ப்புணர்வைத் தூண்டியது போல, உலகமெங்கும் வாழும் தமிழ் வெகுமக்களிடம் மகிந்த ராஜபக்சேவின் கொடுங்கோன்மை அரசின் மீது தீராத வெறுப்புணர்வைக் கொண்டு வந்தது குண்டுகள் துளைத்த பாலச்சந்திரனின் உடலின் பிம்பம்.

 

 

மாணவர்களது பேரெழுச்சி, வெகுமக்களின் உளவியலில் நடந்த இந்த மாற்றத்தினோடு பிம்பங்களின் ஆற்றல் குறித்தும் கமல்ஹாசன் மிக இயல்பாக வெளிப்படுத்தினார்:

 

இலங்கையில் நடந்தது பற்றியும், பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகைப்படத்தையும் பார்த்துவிட்டு எவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்கலாம். அதற்கு தமிழனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அது யாராக இருந்தாலும் பங்கெடுத்து கொள்வார்கள்... .... இங்கே தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான நிகழ்வு என்னவென்றால் மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள், போலீஸ் விரட்டியது, ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.... .... இது அவர்களுடைய போராட்டம். அவர்களுடைய குரலில் அதை பேசுவதுதான் எங்களுக்கு பெருமை. என் மகன் பேசுகிறான். என் தம்பி பேசுகிறான், எனக்காக. நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும். அதனால் அவனை மிரட்டக்கூடாது. அவன்கிட்ட கேட்டுக்கணும். அறப்போராட்டத்தில் ஈடுபடும் வரையில் அவனை தடுக்க யாருக்கும் அருகதை இல்லை. வன்முறையில் ஏற்பட்டால் அதை தடுக்க வேண்டும் என்பது சட்டப்பிரச்சினை. அறப்போராட்டத்தில் இருப்பவனை மிரட்டுவதோ அல்லது அதட்டுவதோ கூடாது. அந்தப் பிள்ளை தந்தைக்கு உபதேசம் செய்யும் பிள்ளை. அவனை விட்டுவிடவேண்டும். இந்த போராட்டத்தில் முன் நின்று போராட வேண்டியவர்கள் மாணவர்கள். நாங்கள் பின்வரிசையில்தான் நிற்கவேண்டும். அழகான நல்ல குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பேசட்டும் அவர்கள். இந்த மொழிதான் நல்ல மொழி.

 

****

 

அரசியல் உறைநிலையில் இருந்த பல தருணங்களில் மாணவர்களின் பிரவேசத்தின் மூலம் உலக வரலாற்றில் அவர்கள் மிகப்பெரும் அதிர்வுகளை உருவாக்கி இருக்கிறார்கள். மாணவர்கள் மீது விதிக்கப்படும் பாரபட்சமான கட்டணங்களுக்கும், வர்க்கரீதியான ஒதுக்குதலுக்கும் எதிராக எழுந்த 1968 மாணவர் எழுச்சி, தொழிலாளர் மாணவர் ஒற்றுமை எழுச்சியாகப் பரிமாணம் பெற்று, கூலி உயர்வு, கல்வி அமைப்புச் சீர்திருத்தம், அரசியல் மாற்றம், பெண்விடுதலைக் கோரிக்கைகளை அது முன்வைத்தது. வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக உலகெங்கிலும் தலைமை தாங்கிப் போராட்டங்களை நடத்தியவர்கள் மாணவர்கள்தான்.

 

 

மாணவர்களிடம் மிகப்பெரும் ஆற்றல்களைக் கண்டவர்களாக ழான் பவுல் சார்த்தர், ஹெர்பர்ட் மாக்கியூஸ், மாவோ போன்ற மேதைகள் இருந்திருக்கிறார்கள். ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஊற்றாக யாழ்.பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன. தமிழக மாணவர்களின் பேரெழுச்சி நம் காலத்தின் மிக்பெரும் மானுடப் பேரவலத்திற்கு எதிரான, படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரம் ஈழமக்களுக்கான நீதி வேண்டிய போராட்டம். அவர்களுக்கு முன்பாக 1968 மாணவர் போராட்ட அனுபவங்கள், இந்தி எதிர்ப்புப் போராட்ட அனுபவங்கள், அரபுப் புரட்சி அனுபவங்கள் இருக்கிறது. தெளிவான அரசியல் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். கட்டுக்கோப்பான அறமுறையிலான போராட்ட வடிவத்தை அவர்கள் தேர்ந்து கொண்டிருக்கிறரார்கள். இவர்களிடமிருந்து கடப்பாடும் ஓர்மையும் கொண்ட ஒரு தலைமை தோன்றும். ஈழத்தமிழர் விடுலைப்பாதையில் தமிழக மாணவர்களின் இப்பேரெழுச்சி சந்கேதமில்லாமல் வைகறையின் இடிமுழக்கம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=c0bd777b-9d88-494e-b422-759eccf94d74

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.