Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்பவேயா?: அ.முத்துலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு அப்ப சின்ன வயது. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான். அந்த நாட்களில் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்பதில் அவனுடைய உறுதி தெரியும். வெளியே விளையாடப்போனால் இருட்டிய பின்னர்தான் வீடு திரும்புவான். நான் சொல்வேன் ’இன்று முழுக்க விளையாடியது போதும். இனி படிக்கலாம்.’ ’இப்பவேயா?’ என்பான். ‘இல்லை அடுத்த கிறிஸ்மஸ் வரும்போது’ என்பேன் நான். இந்த சம்பாசணை நடக்கும்போது இரவு எட்டு மணியாகியிருக்கும்.

கனடாவில் என் பக்கத்து வீட்டுக்காரர் என்னுடன் பேசுவது தொலைபேசியில்தான். நான் ஒரு காலத்தில் வேலை செய்த பாகிஸ்தானின் அதே கிராமத்தில்தான் அவர் பிறந்திருந்தார். ஆகவே அவர் மொழியிலே வணக்கம் சொல்வார். நானும் சொல்வேன். அத்துடன் என்னுடைய மொழி அறிவு முடிந்துவிடும். அவருடைய தொலைபேசி அழைப்பு மணி அதிகாலையில் வெளிநாட்டு டெலிபோன் அடிப்பதுபோல அவசரமாக அடிக்கும். நானும் அவசரமாக எடுப்பேன். நலம் விசாரித்துவிட்டு ஓர் உதவி என்றார். சொல்லுங்கள் என்றேன். எங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் குடும்ப ஒன்றுகூடல் நடக்கிறது. உங்கள் வீட்டு கார் பாதையில் எங்கள் காரை நிறுத்த அனுமதிவேண்டும் என்றார். அதற்கென்ன, சரி என்றேன்.
சற்று நேரம் கழித்து நான் வெளியே புறப்பட ஆயத்தமானபோது காராஜில் இருந்த என் காரை வெளியே எடுக்க முடியவில்லை. கிரேக்க எழுத்து ‘பை’ போல இரண்டு காரை பக்கத்து பக்கத்திலும் ஒரு காரை மேலே குறுக்காவும் நிறுத்தி என் கார் பாதையை முற்றிலும் நிரப்பிவிட்டார். என்னுடைய காரை நான் எப்படி வெளியே எடுப்பேன் என்று ஒருவர்கூட யோசித்ததாகத் தெரியவில்லை. விருந்தாளி ஒருவர் காரை குறுக்காக நிறுத்தியதும் அல்லாமல் சாவியை எடுத்துக்கொண்டு இன்னொருவருடன் வெளியே போய்விட்டார். நான் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவசரமாக வெளியே போகவேண்டும் என்று சொன்னபோது அவர் ‘இப்பவேயா?’ என்றார்.

அமெரிக்காவில் ஒரு பில்லியனர் இருந்தார். கோடி கோடியாகச் சம்பாதித்த தொழிலதிபர். இளம் தொழில் நிபுணர்கள் பலர் அவருடைய கடைக்கண் பார்வைக்காக ஏங்கி காத்திருப்பார்கள். ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த கோடீஸ்வரர் முதல்தரமான உணவகம் ஒன்றிற்கு சென்று உணவருந்துவார். அவருடன் வேறு தொழிலதிபர் ஒருவரோ இருவரோ இருப்பார்கள். மதிய விருந்து முடிந்து அவர்கள் உணவகத்தை விட்டு வெளியேறும்போது பில்லியனர் முகத்தில் சிறு புன்னகை அரும்பியிருக்கும். முக்கியமான ஓர் ஒப்பந்தம் அவர்களுக்குள் முடிவாகியிருக்கும்.

மிக நேர்த்தியாக அலுவலக உடையணிந்த ஓர் இளைஞன் புதன்கிழமை தோறும் மதிய நேரத்தில் உணவக வாசலில் காத்திருப்பான். அவனுக்கு வயது 30 இருக்கும். புத்திக்கூர்மையான கண்கள். சும்மா இருக்கும்போதே புன்னகை செய்வதுபோன்ற முகம். பில்லியனர் உணவகத்துக்குள் நுழையும்போது இளைஞன் அவருக்கு வணக்கம் சொல்வான். அவர் உணவருந்திவிட்டு திரும்பும்போதும் இளைஞன் அதே இடத்தில் நிற்பான். மறுபடியும் வணக்கம் சொல்வான்; அவரும் சொல்வார். இது பல மாதங்களாகத் தொடர்ந்தது.

ஒருநாள் பொறுக்கமுடியாமல் பில்லியனர் கேட்டார், ‘உனக்கு என்ன வேண்டும்?’ இளைஞன் சொன்னான். ‘ஐயா ஓர் உதவி. மிகச் சின்னதுதான். இந்த நாட்டிலே உங்களைத் தெரியாதவர் ஒருவர் இருக்கமுடியாது. நீங்கள் பிரபலமானவர். அடுத்த புதன்கிழமை இதே உணவகத்தில் ஏழாவது மேசையில் நான் தொழிலதிபர் ஒருவருடன் அமர்ந்து உணவருந்துவேன். அந்த தொழிலதிபர் என்னுடன் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார். பல மாதங்களாக ஒப்பந்தத்தில் கையொப்பம் வைக்காமல் இழுத்தடிக்கிறார். நீங்கள் செய்யவேண்டியது ஒரு சின்னக் காரியம்தான். என்னுடைய மேசையை கடந்து போகும்போது சற்று நின்று என்பக்கம் திரும்பி பார்த்து தலையை மேலும் கீழுமாக அசைக்கவேண்டும். அவ்வளவுதான்’ என்றான். பில்லியனர் தன் ஆரம்பகால வாழ்க்கையை யோசித்துப் பார்த்தார். எத்தனையோ இன்னல்களைக் கடந்துதான் இன்றைக்கு இந்த பெரிய நிலையை அடைந்திருக்கிறார். அவர் இளைஞனுடைய முகத்தை உன்னிப்பாகப் பார்த்தார்.
’நீ என்னை உபயோகிக்கப் பார்க்கிறாய்’ என்றார்.

’ஓரளவுக்கு உண்மைதான், ஐயா.’
‘அவரை ஏமாற்ற நினைக்கிறாய்’ என்றார்.
‘அப்படியும் வைக்கலாம், ஐயா.’
‘உடைந்த முட்டையில்தான் ஈ உட்காரும்.’
‘மிகவும் சரி, ஐயா’ என்றான் இளைஞன்.

பில்லியனர் ஒன்றுமே பேசவில்லை. அவருடைய நீண்ட மேலங்கி குளிர்காற்றில் இருபக்கமும் அசைய காரை நோக்கி நடக்கத் தொடங்கினார். வெள்ளைத் தொப்பி அணிந்த கார்ச்சாரதி கதவை திறந்து பிடித்துக் கொண்டிருந்தான். இளைஞன் நம்பிக்கை இழக்காமல் ‘ஏழாம் நம்பர் மேசை’ என்று பின்னால் கத்தினான்.
அடுத்த புதன்கிழமை இளைஞன் ஏழாம் நம்பர் மேசையில் அமர்ந்து ஓரு தொழிலதிபருடன் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் மேசை மேல் இரண்டு நீண்ட காம்பு வைன் குவளைகளில் பொன்வண்ண திரவம் நிரம்பியிருந்தது. கண் மடல்களில் மஞ்சள் பூச்சு பூசிய பரிசாரகி அவர்கள் முன் இரண்டு அகலமான பிளேட்டுகளை கொண்டுவந்து வைத்தாள். துடையுடன் கால் ஒட்டிய கோழியின் பெரிய உடல் பகுதி பிளேட்டை நிறைத்துக் கிடந்தது. கத்தியை எடுத்து வெட்டுவதா அல்லது கொஞ்சம் தாமதிப்பதா என யோசித்தான் இளைஞன். அவன் மனம் முழுக்க வேறு எங்கோ இருந்தது. பில்லியனர் வருவதாகச் சொல்லியிருந்தார், ஆனால் வரவில்லை. மனம் பதைபதைத்தது. ஒருவேளை மறந்துவிட்டிருப்பாரோ? அவர் வரவில்லை என்றால் அவன் எதிர்காலம் முடிந்தது. அவனுடைய மாத வருமானத்தில் சரி அரைவாசி உணவகத்துக்கு அன்று அவன் கொடுக்கவேண்டி இருக்கும். இப்படியெல்லாம் மனம் அவஸ்தைப்பட்டாலும் அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அந்த நேரம் பார்த்து பில்லியனர் டக் டக்கென நடந்து வந்தார். இவனுடைய நெஞ்சு அவர் நடந்து வந்த சத்தத்திலும் பார்க்க உரக்க அடிக்க ஆரம்பித்தது.

பில்லியனர் யோசித்தார். இளைஞன் தலையை மட்டும் அசைக்கச் சொல்லியிருந்தான். ஒரு படி மேலேபோய் அவனுக்கு உதவி செய்தால் என்ன? இளைஞனின் மேசையை அணுகியதும் பில்லியனர் சற்று நின்று ‘ஆ, நண்பரே! நலமா? அடுத்த புதன்கிழமை நாங்கள் ஒன்றாக மதிய உணவு அருந்துவோம். என்ன சொல்கிறீர்கள்?’ கோழிக்காலை வெட்ட ஆரம்பித்த இளைஞன் அதை நிறுத்திவிட்டு தலையை நிமிர்த்தினான். அழைப்பில்லாமல் ஞாயிறு மதியம் வீட்டுக்கு தூசி உறிஞ்சி விற்க வந்த விற்பனையாளரைப் பார்ப்பதுபோல அவரைப் பார்த்தான். ‘இப்பவேயா? சொல்லமுடியாது. என்னுடைய காரியதரிசியை தொடர்புகொண்டு தேதி கேட்டுப் பாருங்கள்.’ எங்கேயோ ஓடிவிடும் என்பதுபோல மறுபடியும் கோழிக்காலை விட்ட இடத்திலிருந்து வேகமாக வெட்டத் தொடங்கினான். பில்லியனர் திகைத்து அசையாமல் நின்று பின் தயங்கியபடி நகர்ந்தார். இளைஞனின் ஒப்பந்தம் அன்றே கையொப்பமானது. பில்லியனருடைய கோபம் வழிந்து ஓடி முடிய இரண்டு நாள் பிடித்தது.


உதவி செய்யும்போதுகூட எத்தனை எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது.

 

அ.முத்துலிங்கம்

 

http://www.amuttu.net/

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.