Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தேர்தல் அரசியல் நாடகத்திலும் ஈழம்! – இரா.தமிழ்க்கனல்

Featured Replies

அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகள் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டுதான் தேர்தல் நடத்தவேண்டும் என்றாலும், முன்கூட்டியே இந்த ஆண்டுக்குள் தேர்தல் வரலாம் என காங்கிரசைத் தவிர்த்த மற்ற கட்சிகள் கூறத் தொடங்கியுள்ளன. இதை, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து, அதைத் தாங்கிப்பிடித்துவரும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதியும் சொல்வதுதான் முக்கியத்துவம் பெறுகிறது. 
 
மத்திய கூட்டணியில் இருந்து திமுக விலகிவிட்டதால், காங்கிரஸ் கட்சி வேறு ஒரு கூட்டாளியுடன் தனி அணிதான் அமைத்தாகவேண்டும் என்பது உறுதி. விஜயகாந்தின் தேமுதிக திமுக அணியிலா காங்கிரஸ் அணியிலா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதிமுக தலைமையில் தனி அணி என்பது  முடிவாகிவிட்டதாகவே  உள்தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் 39 புதுச்சேரியின் ஒரு தொகுதி என நாற்பது தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன்னர் கட்சியின் கூட்டத்தில் பேசியதும் அதையடுத்து அக்கட்சியினர் வருங்காலப் பிரதமரே என வர்ணிக்கத் தொடங்கியதும் மறக்கமுடியாததுதான். ஆனாலும், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டுவைத்தே வரும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும் என அரசியல் வட்டாரங்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. தொகுதிகளின் எண்ணிக்கை குறித்துகூட வாய்மொழியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகவும் தொடர்புடைய கட்சிகளின் தரப்பில் கூறப்படுகிறது.
 
இந்தியத் தேர்தல் அரசியல் நாடகத்தில், ஈழமும் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது என்பதுதான் பேசப்படவேண்டிய சேதி. அதேசமயம், ஈழத்தை முன்வைத்துதான் தேர்தல் முடிவு அமையும்  என மிகைக்கூற்றான கருத்துகளை முன்வைப்பது, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது எனச் சொன்னதுபோலத்தான். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல் பாஜக, காங்கிரஸ்வரை, ஈழத் தமிழருக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதான செயல்பாடுகளில் தீவிரம் காட்டுகின்றன.
 
இதில், ’தமிழ் ஈழ ஆதரவு ஆதரவு அணி’ என அதிமுக தலைமையில் வலுவான அணியை உருவாக்க தீவிர முயற்சிகள் நடக்கின்றன. கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று, சென்னை புறநகரில் மதுவிலக்குப் பிரச்சாரப் பயணத்தில் இருந்த வைகோவை, திடீரென சாலையில் ஜெயலலிதா சந்தித்தது, அதிமுக அணியில் மதிமுக இடம்பெறும் என்பதன் முன்னோட்டமாகத்தான் பரவலாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவை வைத்துக்கொண்டு, கடைசிநேரத்தில் மதிமுகவை நெருக்கடிக்கு உள்ளாக்கியதைப்போல, இந்த முறை நடப்பதற்கு வாய்ப்பு குறைவு. அப்போது, கடைசிநேரத் தாக்குதலால் சட்டப்பேரவைத் தேர்தலையே புறக்கணிக்கும் நிலைக்குப் போனதால், கட்சி தொண்டர்கள் துவண்டுபோய்விட்டனர். இதனால், இந்தத் தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் நாடாளுமன்றத்தில் மதிமுக அரசியல் செய்யவேண்டும் என்பது அக்கட்சியின் பெரும்பாலான தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை நிறைவுசெய்து, கட்சியின் அமைப்பு பலத்தைத் தக்கவைப்பது காலத்தின் கட்டாயம் என்பதை மதிமுக தலைமை நன்றாகவே உணர்ந்துள்ளது.
 
இதே சமயத்தில், இன்னொரு திரைமறைவுக் காரியமும் நடந்தேறிவருகிறது. மத்தியில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவர ஆதரவு தருவது இந்த அணியின் எதிர்கால நோக்கமாக இருக்கும் என்பதே அதன் சூக்குமம். இலங்கை இனப்படுகொலையில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்த்துவரும் வைகோவின் மதிமுகவுக்கு, பாஜகவுடன் கூட்டு சேர்வதில் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. கடந்த 1ம் தேதியன்று, துபாயில் இருந்து 19 ஈழத்தமிழர்களை நாடுகடத்தும் விவகாரம் தொடர்பாக, பாஜகவின் மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்ஹா, ஜஸ்வந்த்சிங் ஆகியோரை, வைகோ சந்தித்துப் பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக முன்னாள் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்ததாக, மதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தியில் சொல்லப்பட்டாலும், இதற்கு முன்பு மிக மோசமாக ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டபோதும் இப்படியான சந்திப்பு நடைபெற்றதாகக் கூறமுடியாது. மதிமுகவின் நாடாளுமன்ற மறுநுழைவு விருப்பம், எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இது ஓர் வெளிப்படையான எடுத்துக்காட்டு. ஆனால், அதிமுக அணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்துத்துவ மதவாத பாஜகவுடன் கூட்டணி சேரமுடியாது. எனவே, தேர்தல்வரை அதிமுகவுடன் கூட்டணி, வெற்றிபெற்றுவிட்டால் பிரிந்துகொள்வது என பரஸ்பர ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை, காங்கிரசும் பாஜகவும் தனிப் பெரும்பான்மை பெறமுடியாமல் மாநிலக் கட்சிகளின் பலம் ஓங்கிவிட்டால், மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் இவர்கள் அதைவிட நல்வாய்ப்பாகவே பார்க்கிறார்கள்.
 
பாஜகவுடன் சேர்ந்தாலும் அப்படிச் சேராமல் மூன்றாவது அணி அமைத்தாலும் ஈழத் தமிழர் ஆதரவு என்கிற புள்ளியில் இணைந்து செயல்படுவதுதான் உத்தேசமான இந்தக் கூட்டணியின் திட்டம். மூன்றாவது அணி அமைந்த பிறகுதான், அதன் தன்மையைப் பற்றி ஒரு கருத்துக்கு வரமுடியும். ஆனால், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஈழத் தமிழர் ஆதரவு கட்சிகள் சொல்லும் நம்பிக்கை வார்த்தைகள் நடைமுறைக்கு வருமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
 
அண்மைக்காலமாகவே, ஈழத் தமிழர்கள் மீது அதிக கரிசனம் காட்டுகிற பாஜக, தொடக்க காலத்தில் இதை முக்கிய பிரச்னையாகக் கருதியதில்லை என்பதே வரலாறு. இனி இதைப் புறந்தள்ளிவிட்டு அந்தக் கட்சியால் அரசியல் செய்யமுடியாது என்பது காலம் விதிக்கும் நிபந்தனை.  அடிப்படையில், இட ஒதுக்கீடு எனும் அரசியலுக்கு எதிரான பாஜக, பின்னர் இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்தால்தான், ஆட்சியில் அமரமுடியும் எனும் நிலை வந்தபோது, அதைச் செய்ய மறுக்கவில்லை. இப்போது, ஈழத் தமிழர் மற்றும் தமிழக மீனவர் பிரச்னைகள், அந்த இடத்தில் வந்துவிட்டன..
 
கடந்த மாதம் தமிழக பாஜக சார்பில், இலங்கைத் தமிழர் ஆதரவுப் பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. அதையடுத்து, வைகோ டெல்லியில் சென்று சந்தித்தாரே அந்த முன்னாள்  வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை அழைத்து சென்னையில் பாஜக கூட்டம் நடத்தியது. அதில் பேசிய சின்ஹா, விரைவில் தமிழீழம் மலரும் என்றெல்லாம் பேசினார். புதிதாக, அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனும் தமிழீழம் பற்றி பேசிவருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், 2011 ஜனவரியில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் கிராமத்தின் மீனவர் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, பாஜகவின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜே, புஷ்பவனம் கிராமத்துக்கு நேரில் சென்று, கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கினார். மீனவரின் மனைவியையும் குழந்தையையும் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். அந்தத் தேர்தலில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்னையும் ஈழத் தமிழர் பிரச்னையும் மற்ற கட்சிகளைப் போலவே பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சுஷ்மா தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி அவர் கலந்துகொள்ளவில்லை. மாநிலத் தலைவர்தான் தலைமைதாங்கினார்.
 
அதன் பிறகு, இப்போது மீண்டும் பாஜகவின் பிரச்சாரத்தில் தமிர்கள் மீதான கரிசனம் தெறிக்கிறது. தமிழீழம் பற்றி பேசுகிறார்கள். ஆனால், கடந்த பிப்ரவரி 27ம் தேதியன்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில், பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான விவாதம் வந்தபோது, பாஜகவின் வேறொரு முகம் வெளிப்பட்டது. ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டு அவையில் பேசிய பாஜக உறுப்பினரும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான வெங்கையநாயுடு, இலங்கை ஒரே நாடு; அதன் இறையாண்மையை மதிக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; அந்நாட்டைப் பிரிப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை என்று பேசியதை, யாரும் மறுத்துவிட முடியாது. இதே கருத்தை, 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெங்கையநாயுடு தமிழகத்தில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியிருக்க, யஷ்வந்த் சின்ஹா பேசியது முரண்பாடாக இருக்கிறதே எனக் கேள்வி எழாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!
 
கருணாநிதி அடிக்கடி சொல்வதுபோல, மதுரையில் டெசோ மாநாட்டில் பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாயி கலந்துகொண்டார் என்பது உண்மைதான். ஆனால், அந்த மாநாட்டில் ஈழம் என்பதை அவர்கள் ஆதரித்தார்களா என்பதை வரலாற்றின் பக்கங்களில் புரட்டிப்பார்த்தால் தெளிவாகத் தெரியும்.
 
சரி, இதையெல்லாம் தெரியாமலா, ஒரு முன்னாள் வெளியுறவு அமைச்சர் சென்னையில் வந்து பேசியிருப்பார்? ஒருவேளை தெரியாவிட்டாலும், இலங்கைக்கான இந்தியத் தூதராக இருக்கும் அவரது மருமகன் அசோக் கே. காந்தாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள
மாட்டாரா? அல்லது ஐநாவுக்கான இந்தியத் தூதரும் அண்மை ஐநா கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியாவின் பதிலை வரைவுசெய்த தன் சகோதரி மகன் திலிப் சின்ஹாவிடம் கேட்டுக்கொள்ள மாட்டாரா? இல்லை என்று சொன்னால், சின்னக் குழந்தைகூட அதை நம்பாது.
 
பாலச்சந்திரன் படம் போல, இன்னொரு படம் வெளியானால், இவர்கள் இன்னும் என்னென்னவோ சொல்லக்கூடும். எதையும் செய்யக்கூடிய நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை என்பதற்காக, எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் என்றால்...!  புலமும் ஈழமும் தாய்த்தமிழகமும் புரிந்துணர வேண்டிய நேரம் வந்துவிட்டது!
 
 
தமிழ்லீடருக்காக இரா.தமிழ்க்கனல்

 

 
 

Edited by கலையழகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.