Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் – ராகவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் – ராகவன்

 

அனைவருக்கும் வணக்கம். இரண்டு டீ வீ அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்து கருணாகரனின் கவிதை தொகுப்பு பற்றி பேசுமாறு பௌசர் கேட்டிருக்கிறார். அறிவிப்பாளர்களின் பேச்சுவன்மை எனக்கு இல்லை. எனினும் நான் முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

நடந்துமுடிந்த கோரமான யுத்தத்தின் அனுபவத்தை, அதன் துயரத்தை ஒரு பயணியாக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவராகவும் அம்மக்களுக்குள்ளேயே நின்று, பாதிக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களின் ஆத்திரம் அவமானம் ஆதங்கம் அனைத்தையும் கவிதையாக வடித்திருக்கிறார் கருணாகரன். இது வெறும் சோகம் ததும்பிய தோல்வியின் வரலாறல்ல. இருள்சூழ்ந்த அந்தகாரத்தில் ஒரு சிறிய மின்மினிப்பூச்சியின் வழித்துணைகூட இன்றி யுத்த பேரிகைகளின் கூக்குரலுக்குள் நசுக்கப்பட்ட மக்களின் வரலாறு. தோல்வியை ஏற்றுக்கொள்ளும் துணிவற்ற தலைமை, தலைமையை காக்க மக்களையும் போராளிகளையும் காவுகொடுத்த கதையை சொல்லும் கவிதை. அனைத்து நம்பிக்கைகளும் இழந்து போய் வாழ்வை தொலைத்து நின்ற பெரும் சனக்கூட்டத்திடம் உரிமை பற்றியும் நம்பிக்கை பற்றியும் வீரம் பற்றியும் பேசுபவரை காறி உமிழ்கிறார் கருணாகரன்.

யதார்த்தத்திலிருந்து நிகழ்வுகளை அனுபவித்து எழுதுபவனுக்கும் வெளியேயிருந்து பார்ப்பவனுக்குமிடையேயான இடைவெளி நிரப்பபடமுடியாது என்பதற்கு கருணாகரனின் கவிதைகள் சாட்சி. ஐ.நா அறிக்கைகள் தொடக்கம் நாடுகடந்த தமிழீழ பிரகடனங்கள் வரைக்கும் எமது மக்களை முன்னிறுத்தி, புள்ளி விவரங்கள் ஆவண திரட்டல்கள் பிணங்களின் தொகையின் எண்ணிக்கையில் பிரச்சாரங்கள் என்ற அடிப்படையில் தொகுப்புகளாக்கப்படுகின்றன. இந்த அச்சு பிரதிகளும் தொலைக்காட்சிகளும் பிரச்சாரங்களும் பிணங்களை காட்டி பரிதாபம் தேடுவதை அடிப்படையாக கொண்டுள்ளன. கருணாகரன் அதிலிருந்து அடிப்படையில் வேறுபடுகிறார். அவற்றை சந்தேகிக்கிறார். அவலம் அவ நம்பிக்கை அவரது கவிதையின் ஊற்றாயிருப்பினும் அதன் உள்ளே அதிகாரங்களுக்கெதிரான ஆத்திரம் கனல் விடுகிறது.

 

kk.png

 


இந்த கவிதை தொகுப்புக்கு நிலாந்தன் மிக நேர்த்தியான ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். ஆனாலும் கருணாகரன் முழு உண்மையையும் தனது கவிதையில் கொண்டுவரவில்லை என்றும் போர் அரங்கை பற்றிய முழுமையான குறுக்கு வெட்டு முகத்தை தரவில்லை என்றும் கூறுகிறார். இது உண்மையை விழுங்கும் பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்கிறார். ஆயுதமும் ஆட்பலமும் போதாத விடுதலை புலிகளின் மேல், சர்வதேச பிராந்திய வியூகம் அமைக்கப்பட்டு அவர்கள் மக்களுடன் சிக்கு பட்டு மரணித்த பக்கத்தை கருணாகரன் பார்க்கவில்லை என்கிறார். இதில் எனக்கு உடன்பாடில்லை. சர்வதேச பிராந்திய வியூகம் பற்றிய எவ்வித தெளிவும் தயார்படுத்தலும் இன்றி வெறும் வீராப்பும் வெறியும் கொண்டு மக்களை பலிகொடுத்ததற்கு புலிகளின் தலைமையே முக்கிய பாத்திரதாரிகள்.

பின் வாங்குதல் என்ற கட்டுரையில் நான் இவ்வாறு கூறியிருந்தேன். “ஆயுதங்கள் வெறும் இரும்புக் கருவிகள்.ஆயுதங்களைக் கை விடுவது வேறு. ஆயுதப் போராட்டத்தை கை விடுவது வேறு. ஆயுதங்களைத் தாங்கியது மக்களைப் பாதுகாக்க.அந்த மக்களையே ஆயுதமாக்கி தம்மையும் தமது ஆயுதங்களையும் பாதுகாக்க முனைந்தனர் புலிகள். இறுதியில் புலிகளின் மக்களை அந்நியப்படுத்திய சாகச அரசியல் ஒட்டு மொத்த அழிவுக்கு இட்டுச் சென்று தமிழ் மக்களிடம் இருந்த எதிர்ப்பு அரசியல் பரப்பையும் அழித்தொழித்து ஒரு அரசியல் சூனியப் பரப்பைத் தந்து விட்டுப் போயிருக்கிறது. “

அது போக உண்மை பொய் என்ற இரு கோடுகளுக்குள் இருந்து பார்த்தால் இது பிரச்சனையே. கருணாகரன் உண்மை பொய் என்ற அளவுகோலை பாவிக்கவில்லை என்றே எனக்குப்படுகிறது. ஒரு கொடுமையான நிகழ்வின் தாக்கம் மட்டுமல்ல, விடுதலை போராட்டத்தில் விமர்சனங்களுடன் கூடிய ஒரு அற்ப நம்பிக்கை இருந்த காலம் போய், மக்களை விழுங்கும் பூதமாக விடுதலை சென்ற பாதையில் அனைத்து நம்பிக்கைகள், வாழ்வு பற்றிய கனவுகள் தவிடுபொடியான நிலையில் பிறந்ததே இந்த கவிதைகள்.

இந்த கவிதைகளில் மேலோங்கி இருப்பது நம்பிக்கையீனத்தின் உச்சமே. உயிர் மீது உத்தரவாதமில்லாத சூழலில் பிணங்களுக்கும் மலத்துக்கும் மத்தியில் வாழும் மக்களிடம் நம்பிக்கை பற்றி பேசுவது அபத்தம். மலவாடையை பிணவாடை மீற பிண வாடையை மல வாடை மீற மனிதர்கள் வாழ்ந்த அவலத்தை கவிதை சொல்கிறது.

நம்பிக்கை மனிதனுக்கு அவசியம். ஆனால் நம்பிக்கை சூழல் சார்ந்தது. ஒவ்வொரு நிமிடமும் உயிர்கள் விழுந்து பலியாக, கண்முன்னே சிறுவர் வயோதிபர் இளைஞர் கொல்லப்பட, யாரில் எதில் நம்பிக்கை வைப்பது?

ஜெயபாலன் இதே வன்னிப்பரப்பின் கோடை வெயில் காலப்பொழுதை பற்றி 68 இல் எழுதிய அழகான கவிதையில் நம்பிக்கை துளிர்விடுகிறது. அக்கவிதை வரிகள் சொல்கின்றன:

“துணைபிரிந்த குயிலொன்றின் சோகம் போல
மெல்ல கசிகிறது ஆற்று வெள்ளம்.
காற்றாடும் நாணலிடை மூச்சு திணறி
முக்குளிக்கும் விரால் மீன்கள்.

ஒரு கோடை காலத்து மாலை பொழுது அது.
என்னருகே ஆலம் பழக்கோதும்
அய்ந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்க காண்கின்றேன்.
என்றாலும் எங்கோ வெகுதொலைவில்
இனிய குரலெடுத்து மாரி தனை பாடுகிறான்
வன்னி சிறானொருவன்.”


இங்கு மாரி வரும் என்ற நம்பிக்கை வாழ்வின் நம்பிக்கை. இங்கு சாவு சூழும் நிலை கிடையாது.

இதே வன்னி, யுத்தத்தால் பற்றி எரிந்த காலங்களில் வாழ்ந்த கருணாகரன் நம்பிக்கை பற்றி இவ்வாறு பார்க்கிறார். இங்கு சாவு நிச்சயமான நிலை. சனங்களிடம் வந்தது என்ற கவிதையில்

அன்றிரவு குருதியொழுகிய பகலும் வந்தது
உடைந்து நொருங்கிய இரவும் வந்தது…. “

புதைகுழிகளும் மக்களும் ஏன் வலிமை ஒடுங்கிய தோள்களுடன் தோழர்கள் தளபதிகளும் ஒன்றாக சாவை எதிர்கொள்ளும் நேரம்…”

அக்கணத்தில் தான்

‘நெருப்பு துண்டாக கனன்று கொண்டிருந்த இதயத்தில்

ஒரு விதை முளைக்கு மென்று நினைத்தது வீண்’ என்கிறார்.



ஒயாக்கடல்… உறங்கா நிலம்… தீராக் கனவு…. கவிதையில் “பாலன் பிறப்பை அறிவிக்கும் தூரத்து மணியொலி பட்டுத் தெறிக்கிறது

இருளுறைந்த சிலுவைகளில்….. “ என்கிறார்.

இங்கு பாலன் பிறப்பார் என்ற நம்பிக்கை கவிஞருக்கு அறவே இல்லை.

அடிவாரத்திலிருந்து மீண்டும் என்ற கவிதையில்

“நான் இங்கிருக்கிறேன் ..
இந்த வயற்கரையில்
தனித்துத் துயரங்களால் சூழப்பட்டு
போர் வெறியால் பலியாடப்பட்டு“
…………………………………………….
…………………………………………..
“ஒரு பாடலும் இங்கில்லை
ஈரமில்லா நிலத்தில் பாடல் வற்றி
குரலும் அடங்கி போகும்
விதியுண்டென்று யார் எழுதினார்.”

எல்லாம் புதராக்கப்பட்ட நிலத்தில் சிறகுதிர்ந்த ஒற்றைப் பறவை வாய்க்காலில் நீரலைகளை தேடுகிறது. இது அனைத்தும் இழந்த ஒரு கையறு நிலையின் வெளிப்பாடு. பறக்க முடியாத தனித்த பறவையிடம் என்ன நம்பிக்கையை நாம் எதிர்பாக்க முடியும். இறுதியில் அடிவாரத்தில் இருந்து தொடங்க காத்திருக்கிறது மலை ஏற்றம் என்கிறார். இது நம்பிக்கை அறவே அற்று போன நிலையில் திரும்ப ஒரு மலை ஏற்றத்தினை பார்க்க முடியா மன நிலை அல்லது சிறு நம்பிக்கை.

0000000000

இலங்கை தமிழ் கவிதை பரப்பில் எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த கவிதைகள் பெரும்பாலும் தமிழர் உரிமை போராட்டம் பற்றிய நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டன. பின்னர் எண்பதுகளின் இறுதிகளில் தமிழ் அமைப்புகளின் அராஜகம், மக்களை பிரிந்த தன்மை பற்றிய கேள்வியாக சிவரமணி, செல்வி, இளவாலை விஜயேந்திரன், சேரன், சிவசேகரம் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். தோழரே துப்பாக்கியை தூக்கும் என்ற இளவாலை விஜயேந்திரன் கவிதை, சிவரமணியின் குழந்தைகள் வளர்ந்தவராயினர் கவிதை போன்றவை போராட்டத்தின் அவலட்சணமான மறுபக்கத்தை படம் பிடித்தன.. சிவரமணியின் கவிதை வரிகளில்:

“அதன்பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக் கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்வி கேட்காதிருக்கவும்
கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது
மௌனமாகியிருக்கவும்,
மந்தைகள்போல எல்லாவற்றையும்
பழகிக்கொண்டனர்.

தும்பியின் இறக்கைகயைப் பிய்த்து எறிவதும்
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.
யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்” ஆயினர்“

மௌனமாக இருக்க பழக்கப்பட்டு ‘அனைத்தையும் இழ- விடுதலைக்காக’ என்ற உச்சாடனத்துடன் கூடிய இந்த விபரீத விளையாட்டு இறுதியில் முள்ளியாய்க்காலில் முடிந்ததை கருணாகரன் நீயே வைத்திரு அவற்றையெல்லாம் என்ற கவிதையில் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார். (பக்-30) நம்பிக்கை அஞ்சாமை பொறுமை துறத்தல் என்ற உச்சாடனங்கள் வாழ்வின் எல்லைக்கு வந்தவனுக்கு அர்த்தமற்றவை. இந்த பலிபீடத்திலிருந்து தப்புதலை தவிர்ந்த வேறெது நம்பிக்கையும் இல்லை.

அறிவுரை, கட்டளை, அழைப்பு, எச்சரிக்கை அனைத்தும் – எங்கிருந்து வருகின்றன யாருக்காக வருகின்றன எதற்காக வருகின்றன என்றெல்லாம் தெரிந்த போதும் எல்லாவற்றுடன் எல்லாமுமாகவே இருந்தேன். இவற்றையெல்லாம் வைத்துகொண்டு என்னை மெல்ல விட்டு விடுங்கள் நத்தையாகவோ எறும்பாகவோ செல்ல அதற்கும் அனுமதியில்லை என்கிறார் கருணா.

வீரம் பற்றிய பசப்புரைகள், உணர்ச்சி பிரவாகங்கள் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் காட்சிப்பொருள், மனித நேயமற்ற வீரம், எதிர்காலம் பற்றிய ஒரு சொல்லை ஏற்கமுடியாத வீரத்தின் முன் நான் எறிவேன் நாயின் மலத்தை இந்த வரலாற்றின் விதி முன்னே என்ற கவிதையில் கருணாகரனின் ஆத்திரம் துலங்குகிறது.

எவ்வித பொறுப்புமில்லாமல் தானும் குடும்பமும் தப்பித்துகொண்டு வீர்க்கவிதையை எழுதும் காசி ஆனந்தன் ‘குழந்தை பிஞ்சு துடித்தால் என்ன அது பிணமாய் விழுந்தால் என்ன தமிழீழ தாகம் தணியாது’ என்று ‘எது நடந்தால் என்ன’ என்ற அசிங்கக் கவிதையில் எவ்வித மனித உணர்வுமின்றி கூறும் மோசமான மனநிலை இன்றும் பல போலி தேசபக்தர்களின் கனவாக இருக்கிறது.

இவர்களுக்கு கருணாகரனின் பதில்;

“போர் விரும்பிகள்
குதிரைகளையும் ஆயுதங்களையும்
போர்வீரர்களையுமே
தங்கள் கனவில் நிரப்பிகொண்டிருக்கிறார்கள்….. “
——————-
——————
“வீரம் விளைந்ததாக நம்பப்படும் நிலத்தில்
நீங்கள் விலக்க முடியாத முகங்களில்
அழுகுரல்கள் விளைகின்றன“ (பக்-40)

இந்த போலி தேசபக்தர்களை நோக்கி கருணாகரன் கேட்கிறார்.

“பழிகளை சேர்த்தவர்களின் காலம்
பழிக்கப்பட்ட பின்னும்
உள்ளே அழுகிய மரத்தில்
ஆடுகின்றன கூடுகள் என்கிறார் சிலர்
தொலைவில்

இனியொரு புயலை தாங்கும் வலிமையை தா
என்று எந்த தேவதையை யார் யாசிப்பது?

இன்னும் மீதமிருக்கிறதா என்ன
பச்சை உடலின் மீது
இரத்தத் தினவோடு வாளைப் பாய்ச்சும் பேராசை?

ஆயின் வந்தருள்க
காயங்களுடன் படுத்திருக்கும் வரலாற்றை துயிலெளுப்பி
வழிநடத்த.”

தூரத்திலிருந்து போர்முழக்கம் இடுபவர்களை வந்து வழி நடத்துமாறு கேட்பது ஏளனம் கலந்த ஆத்திரம்.

யுத்தம் முடிந்த பின் சமாதானம் ஜனநாயகம் வந்துவிட்டதென நினைக்கும் சிலருக்கு கருணாகரன் சொல்வது.

இந்த யுத்தம் முடிந்த பின்னும், துப்பாக்கிகளின் நிழல்கள் துரத்துகின்றன என்கிறார் எதுவரை என்ற கவிதையில்..

“போடா நாயே

வாழ்வெமக்கு அபாயங்களின் மீதான வெடிகுண்டென்று எழுதப்பட்டது மீண்டும்“

எதிரிகளிடம் கையளிக்கபடும் எல்லா மக்களுக்கும் இப்படித்தான் பரிசுகளின் வெகுமதி காலம் தோறும் பரிகாசத்திற்கும் இரக்கத்துக்குமிடையில் உருவாக்க பட்டு கைதிக்கும் அகதிக்குமிடையிலான முகத்தில் சூடப்படுகிறது”.

பல்லாயிரக்கணக்கான மக்களை காவு கொண்ட இந்த யுத்தம் தப்பி பிழைத்தவர்களை இன்னும் துரத்திக்கொண்டே இருக்கிறது.. இதுவே யதார்த்தம்.


இறுதியாக வரலாற்றிலிருந்து பாடம் கற்க மறுத்த புலிகளை பார்த்து விளிக்கிறார்.

“வளராத மரம்” காய்த்ததுமில்லைப்
பூத்ததுமில்லைப்,
காற்று வீசி அது அலைந்ததுமில்லை – என்றும்
யாருக்குமது நிழல் தந்ததும் இல்லை ஒரு
குருவிக்கு கூட அது இடமளித்ததில்லை என்றவர்
பெருமைக்கது பூச்சாடியில் நிற்கலாம்,”

இது விடுதலை புலிகளின் வரவை எதிர்பார்க்கும் கனவுகளை முற்றாக கலைக்கிறது.

மொத்தத்தில் கருணாகரனின் கவிதைகளில் நிலாந்தன் சொல்வது போல் நம்பிக்கையின் சிதைவும் விசுவாசத்தின் முறிவும் கவிதைகளை பளிச்சிட வைக்கின்றன. நான்காம் ஈழ போரின் செமிக்க கடினமான உண்மைகள் நிராகரிக்கப்படாத இலக்கிய ஆவணங்களாக போற்றப்படும்.

எனக்கொரு கேள்வி- வரலாற்றிலிருந்து யாரும் பாடம் கற்றிருக்கிறார்களா?

000000

லண்டனில் நடந்த நூல் அறிமுக நிகழ்வில் ஆற்றப்பட்ட உரை

http://eathuvarai.net/?p=3459

  • கருத்துக்கள உறவுகள்
கருணாகரரின்ட வீட்டில புகுந்து புலிகள் பலவந்தமாக அவருடைய மகனை பிடித்துப் போகும் வரை அவரும் யுத்தத்திற்கு ஆதரவாய்த் தான் இருந்தார்.
 
தனக்குத்,தனக்கு என்டால் சுளகு படக்கு,படக்கு என்னுமாம் ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.