Jump to content

சர்வதேச சமூகத்தின் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படவேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை விவகாரத்தில் யதார்த்தபூர்வமான உண்மைகளை உணர்ந்து இந்திய அரசு புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்

-பழ. நெடுமாறன்-

* ஒப்புக்கொண்டவற்றை நிறைவேற்ற மறுக்கும் இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சர்வதேச நாடுகள் விடுதலை புலிகளை அவசர அவசரமாகத் தடை செய்கின்றன

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலைகள் சிங்கள இராணுவத்தினாலும் துரோகப் படைகளாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருகோணமலையிலிருந்து தமிழர்களை முழுமையாக விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன. இவற்றின் விளைவாக 5,000 இற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் உயிர்தப்பி ஓடிவந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து தப்பிவருவதற்கு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் சகோதரத் தமிழர்களுக்கு சிங்கள வெறியரால் இழைக்கப்படுகின்ற கொடுமைகளை எதிர்த்து தமிழகம் பொங்கி எழுந்தது. கடந்த ஜூன் 16 ஆம் திகதியன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் எங்கும் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உட்பட 80 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. இதைத் தொடர்ந்து தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிடும்படி இந்திய அரசுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.. முதலமைச்சரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இது குறித்துப் பேசினார். இதன் பின்னர் பிரதமரின் சார்பில் அவரது பிரதம ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழகம் வந்து முதலமைச்சரை வந்து சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் அவர் தமிழகம் வரவும் இல்லை. முதலமைச்சரைச் சந்திக்கவும் இல்லை.

அதற்குப் பதிலாக, ஜூலை 3 ஆம் திகதியன்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சியாம் சரண் கொழும்புக்குச் சென்று குடியரசுத் தலைவர் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இனப்பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது குறித்தும் இருவரும் பேசியதாக அறிவிக்கப்பட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினையைத் தமிழ் நாட்டு மக்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த பிரச்சினை என்பதை டில்லியில் இருப்பவர்கள் கொஞ்சமும் உணரவில்லை என்பதையும் அதை உணர்த்தவேண்டிய நிலையில் உள்ள தமிழக முதலமைச்சர், தனது கடமையில் முற்றிலும் தவறிவிட்டார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள கலைஞர் கருணாநிதி அவர்கள், டில்லி ஆளும் கூட்டணியில் முக்கியமான தலைவர்களில் ஒருவர். அது மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் வயதாலும் அனுபவத்தாலும் மிகவும் மூத்தவர். ஆனால், அதற்குரிய மரியாதையை டில்லி அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

பிரதமரோடு முதலமைச்சர் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து பேசிய பிறகு, அவரைச் சந்திப்பதற்கு டில்லியில் இருந்து மூத்த அமைச்சர் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு அதிகாரியை அனுப்புவதாக டில்லி கூறியது. அந்த அதிகாரியும் இதுவரை வரவில்லை. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சியாம் சரண் கொழும்புக்கு அனுப்பப்பட்டபோது அவர் சென்னைக்கு வந்து முதலமைச்சரைச் சந்தித்துப் பேசிவிட்டுப் பிறகு கொழும்பு சென்றிருக்க வேண்டும். அவரும் அதைச் செய்யவில்லை. அப்படியானால், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு டில்லி அளிக்கும் மரியாதை இதுதானா? ஈழப் பிரச்சினையை முக்கியமான பிரச்சினையாக டில்லி கருதவில்லை என்பதும் இதன்மூலம் தெரிகிறது. ஈழப் பிரச்சினையை டில்லி கையாளும் விதத்தில் உள்ள கோளாறு என்பது இப்போது திடீரென்று ஏற்பட்டது அல்ல. பிரதமராக ராஜீவ் காந்தி இருந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது.

இந்திராவின் அணுகுமுறை

பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, ஈழத் தமிழர் பிரச்சினையில் அவர் கையாண்ட விதம் முற்றிலும் வேறுவகையானது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மூண்டு, 3,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமையுமே கொதித்து எழுந்தது. அப்போது பிரதமர் இந்திரா உறுதியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுடன் அவர் பேசவில்லை. மாறாக, இந்தியாவின் அந்தஸ்தில் இருந்த வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ், மத்திய அமைச்சர் அந்தஸ்தில் இருந்த வெளியுறவுத்துறை ஆலோசனைக் குழுத் தலைவர் ஜி. பார்த்தசாரதி ஆகிய இருவரையும் கொழும்புக்கு அனுப்பி ஜெயவர்த்தனாவை எச்சரிக்கச் செய்தார்.

இலங்கை போன்ற சிறு நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் குறித்துப் பேசுவதற்காக தனது மூத்த சகாக்கள் இருவரை பிரதமர் இந்திரா அனுப்பியது ஏன்? ஈழத் தமிழர் பிரச்சினையை சிறுபிரச்சினையாக இந்தியா கருதவில்லை. அதை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இந்தியா கருதுகிறது என்பதை சிங்கள அரசுக்கும் உலக நாடுகளுக்கும் உணர்த்துவதற்காக தனது மூத்த சகாக்கள் இருவரை அவர் அனுப்பி வைத்தார். உடனடியாக கலவரங்களை நிறுத்தாவிடில், கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேருமென ஜெயவர்த்தனாவுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக கலவரம் உடனே நின்றது. அது மட்டுமல்ல, கலவரங்களினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக கொழும்பு நகரில் தவித்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பத்திரமாக யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு இந்திய அரசு இரண்டு கப்பல்களை அனுப்பி வைத்தது. அதன் மூலம் அவர்கள் பத்திரமாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டார்கள்.

பிரதமர் இந்திரா காலத்தில் இலங்கைப் பிரச்சினையில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை என்பது கீழ்க் கண்ட அம்சங்களை முக்கியமானதாகக் கொண்டிருந்தது.

1. இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட ஒருபகுதியே இலங்கை. 2. இந்த உண்மையை உணர்ந்து இப்பிரச்சினையில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசுகளும், பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா போன்ற இந்திய எதிரி நாடுகளும் தயங்கின. 3. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுகாண ஜெயவர்த்தனா முயலவேண்டுமே தவிர, இராணுவ தீர்வுகாண இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. 4. இலங்கைக்கு எந்த வெளிநாடாவது இராணுவ ரீதியான உதவி அளிக்க முன்வருமேயானால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அது கருதப்படும். 5. திருகோணமலை மாவட்டத்திலேயோ இலங்கையின் எந்தப் பகுதியிலோ அந்நிய இராணுவத்தளம் எதுவும் அமைவதை இந்தியா எதிர்க்கும். 6. கிழக்கு மாநிலத்தில் குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தின் நில அமைப்பிலோ மக்கள் விகிதாசாரத்திலோ எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. அதாவது, இப்பகுதியில் சிங்களவரைக் குடியேற்றி தமிழரை சிறுபான்மையினராக்கும் சிங்கள அரசின் முயற்சியை இந்தியா கடுமையாக எதிர்த்தது. 7. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுடன் சிங்கள அரசு நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடையுமானால் போராளிகளின் இயக்கங்களைப் பயன்படுத்தி இச்சிக்கலைத் தீர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டது.

பிரதமர் இந்திரா கடைப்பிடித்த இந்த அணுகுமுறையின் விளைவாக ஈழத் தமிழர் நலன்களுக்கும் இந்திய நலன்களுக்கும் பாதுகாப்பு ஏற்பட்டது.

பிரதமர் இந்திரா மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளை ஜெயவர்த்தனா விரும்பவில்லை. ஆனாலும், இந்தியாவுடன் மோதிக்கொள்ளும் துணிவு அவருக்கு ஏற்படவில்லை. எனவே, ஜி. பார்த்தசாரதி அவர்களின் முயற்சிகளின் பேரில் வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. தமிழர் பிரதிநிதிகளும் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் உட்கார்ந்து பேசினார்கள். ஓராண்டு காலத்திற்கு மேல் நடைபெற்ற இந்த மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்பட முடியவில்லை. இறுதியாக, இந்தியா உருவாக்கிய `அனெக்சர் சி' திட்டம் தமிழர் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதை ஏற்பதற்கு ஜெயவர்த்தனா தயக்கம் காட்டினார். ஆனால், பார்த்தசாரதி அவர்களின் நிர்ப்பந்தத்தின் பிறகு வேண்டா வெறுப்பாக ஜெயவர்த்தனா ஏற்றுக் கொண்டார்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படவேண்டும்

-பழ. நெடுமாறன்-

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் இந்திரா திடீரென படுகொலைச் செய்யப்பட்டாறுப்பேற்றபிறகு, ஜி. பார்த்தசாரதி முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டார். வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த ரொமேஷ் பண்டாரி ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகராக மாறினார். அவர் ஆலோசனையின்படியே ராஜீவ் காந்தி செயல்பட்டார். போதாக்குறைக்கு இலங்கையில் இருந்த இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் தவறான யோசனைகளை ராஜீவுக்குத் தெரிவித்தார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஏற்பட்ட குழப்பங்கள் அத்தனைக்கும் மேற்கண்ட இரு அதிகாரிகளே காரணமாக இருந்தனர்.

ராஜீவ் காந்தியின் காலத்தில் இந்தியாவின் இலங்கைக் கொள்கை என்பது உறுதியற்றதாகவும் முரண்பாடுகள் நிறைந்ததாகவும் முற்றிலும் பொருத்தம் இல்லாததாகவும் அமைந்தது.

ராஜீவ் கொள்கையின் விளைவாக கீழ்கண்ட நான்கு விளைவுகள் ஏற்பட்டன.

அ. ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் இந்திய அரசின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ஈழத் தமிழர் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் சிங்கள அரசின் கருத்து எதுவோ அதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

ஆ. சுயநிர்ணய உரிமை உள்ள தாயகம் பெறுவதற்காக ஈழத்தமிழர்கள் நடத்திய போராட்டம் அங்கீகாரமற்றதாகவும், அரசியல் சார்பற்றதாகவும் ஆக்கப்பட்டது. விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என சிங்கள அரசு வர்ணித்தபோது அதை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.

இ. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு செய்த முயற்சிகளை தடுக்க ராஜீவ் அரசினால் முடியவில்லை.

ஈ. இலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் இஸ்ரேலியச் செல்வாக்கு அதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை இடமளித்தது. மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக இலங்கையின் வெளிநாட்டு கொள்கை மாறும் அபாயகரமான நிலையைத் தடுத்து நிறுத்த முற்றிலுமாகத் தவறியது. திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையினருக்கு தேவையான எண்ணெய் கிட்டங்கிகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய இந்தியா அந்தப் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு தானும் போட்டியிட்டுத் தோற்றது என்பது வெட்கக்கேடானதாகும்.

இலங்கையில் இனப்பிரச்சினைப் பற்றிய இந்தியக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தென் ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கங்களுக்கு துணைபுரிந்தன. தென் ஆசியப் பகுதியில் இந்தியாவை பலவீனப்படுத்துவது என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும்.

ஏற்கனவே, பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக மாறியுள்ளது. இலங்கைக்கு இராணுவ பொருளாதார உதவிகளை வாரி வழங்கி அதையும் தனது கூட்டாளியாக மாற்றுவதற்கு அமெரிக்கா துணிந்ததற்கு ராஜீவ் காந்தியின் தவறான கொள்கையே காரணமாகும். ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு, மூன்று ஆண்டு காலத்தில் 20,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளானார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான தமிழர்களின் சொத்துகள் அழிக்கப்பட்டன.

பிரதமர் இந்திரா காலத்தில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் உருவாக்கப்பட்டு இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட `அனெக் சர்சி' திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மறுத்துவிட்ட நிலையில், அவரை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்வதற்குப் பதில் அவர் விதித்த நிபந்தனைகளை ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டது வரலாற்றில் பெரும் சோகம் ஆகும்.

இந்திய அரசின் பிரதிநிதியாக ஜி. பார்த்தசாரதி அனுப்பப்படுவாரானால் அவருடன் பேசமாட்டேன் என ஜெயவர்த்தனா விதித்த நிபந்தனையை ராஜீவ் காந்தி அப்படியே ஏற்றுக்கொண்டார். சின்னஞ்சிறிய நாடான இலங்கையுடன் பேசுவதற்கு வல்லரசான இந்தியா யாரை அனுப்ப வேண்டும் என்பதை் ஜெயவர்த்தனா முடிவு செய்த வெட்கக்கேடு ராஜீவ் காந்தி காலத்தில் நடந்தது.

1985 ஆம் ஆண்டு பூட்டான் தலைநகரான திம்புவில் இந்திய அரசின் முயற்சியின் பேரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. தமிழர் பிரதிநிதிகளும் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சகல போராளி இயக்கங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து கூட்டாக தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார்கள். சிங்கள அரசு இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

திம்பு மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே போர்நிறுத்தத்தை மீறி, தமிழர்களை இனப்படுகொலை செய்வதில் சிங்கள இராணுவம் ஈடுபட்டது. திம்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழர் பிரதிநிதிகள் இதைச் சுட்டிக்காட்டி பிரதமர் ராஜீவுக்குத் தந்தி அனுப்பினார்கள். ஆனால், குற்றவாளியான ஜெயவர்த்தனாவை கண்டிப்பதற்குப் பதில் குற்றஞ்சாட்டியவர்களை ராஜீவ் காந்தி தண்டித்தார். எவ்விதக் காரணமும் கூறாமல் தமிழர் பிரதிநிதிகளான பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியோரை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார். இதற்கு எதிராக தமிழகம் கொதித்தது. கிளர்ச்சிகள் வெடித்தன. இதன்விளைவாக வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இந்தியா வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

ஜெயவர்த்தனாவின் தம்பி ஹெக்டர் ஜெயவர்த்தனா டில்லி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய அரசின் அட்டானி ஜெனரலான பராசரனும் இலங்கை சட்ட நிபுணர்களும் கூடி விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்கி ராஜீவ் காந்தியின் சம்மதத்தையும் ஹெக்டர் ஜெயவர்த்தனாவின் சம்மதத்தையும் பெற்றனர். உண்மையில் இத்திட்டத்தின் படி தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்காது. ஆனால், இந்தத் திட்டத்தைக் கூட ஏற்பதற்கு ஜெயவர்த்தனா மறுத்துவிட்டார். ஆனாலும், அவரை எதுவும் செய்ய ராஜீவ் காந்தியினால் முடியவில்லை. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைப்பது குறித்து போராளி இயக்கங்களுடன் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பண்டாரி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது கொழும்புவில் ஜெயர்வர்த்தனா தன்னிச்சையாக கண்காணிப்புக் குழுவை அறிவித்துவிட்டார். இந்திய அரசை அவர் கொஞ்சமும் மதிக்கத் தயாரில்லை என்பதையே இது எடுத்துக்காட்டியது.

அதிகார மமதை

1985 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டுவர ஆர்ஜென்ரீனா தயாராக இருந்தது. இத்தீர்மானத்தை கூட்டாக கொண்டுவர இந்தியா மறுத்துவிட்டதினால் இத்தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.

ராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே நடந்துகொண்டார். 20.10.85 அன்று பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களான டாக்டர் கலாநிதி, என்.வி.என். சோமு ஆகியோர் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து பேசியபோது பிரதமர் ராஜீவ் காந்தி ஆத்திரத்துடன் இடைமறித்து `நீங்கள் ஈழத் தமிழர்கள் சார்பில் பேசுவதற்கா இங்கு வந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதுமட்டுமல்ல, பாராளுமன்ற மேலவையில் தி.மு.க. உறுப்பினராக அப்போதிருந்த வைகோ ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்பினார். ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அந்நிய விமானம் ஒன்று இலங்கை செல்லும் வழியில் பெற்றோல் பற்றாக்குறை காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கியபோது, சட்டப்படி அதை அதிகாரிகள் பிடித்து வைத்தார்கள். ஆனால், பிரதமர் ராஜீவ் காந்தி தலையிட்டு அந்த விமானங்களுக்குத் தேவையான பெற்றோல் போட்டு பத்திரமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டார். இதைச் சுட்டிக்காட்டிய வைகோ `இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிப்பதற்காகத்தான் இந்த ஆயுதங்கள் என்று தெரிந்தபிறகும் அவற்றை அங்கு அனுப்பலாமா என்று வேதனையோடு கேட்டார். அதற்குப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆணவமாக பதிலளித்தார். `அந்த ஆயுதங்களில் தமிழர்களைக் கொல்ல என்று எழுதப்படவில்லை.' ஆகவே, அனுப்பினோம் என்றார்.

1986 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த தெற்காசிய மாநாட்டில் ஜெயவர்த்தனவும் ராஜீவ் காந்தியும் சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே நடைபெற்றது குறித்து வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த ஏ.பி. வெங்கடேசுவரன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

`ஈழத்தில் தனியரசு உருவாகுமானால் அது தமிழ்நாட்டுடன் சேர்ந்து இந்தியாவுக்கும் ஆபத்தானது என்று ஜெயவர்த்தனா கூறினார். அதை ராஜீவ் காந்தி அப்படியே நம்பிவிட்டார். இருநாட்டுத் தலைவர்கள் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது என்பதால் ஜெயவர்த்தனா போனபின், இதுபற்றி ராஜீவிடம் பேசினேன். ஜெயவர்த்தனா கூறியதுபோல் ஒரு போதும் நடக்காது. அது வெறும் குப்பை `தமிழ்நாடு இந்தியாவை விட்டு ஒருபோதும் பிரிந்து செல்லாது. நான் ஒரு தமிழன் என்ற முறையில் இதை தெரிவிக்கிறேன் என்று சொன்னேன். நான் சொல்வதை விட அயல்நாட்டுத் தலைவர் சொல்வதை நம்பக்கூடியவராக அவர் இருந்தார். நான் பதவியை விட்டு விலகிய சில மாதங்களில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டது'. (நாளை தொடரும்)

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுமதி பெறாத உடன்பாடு

1987 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் ஒரு உடன்பாடு செய்துகொண்டனர். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக இந்த உடன்பாடு அமைந்தது. இந்த உடன்பாடு இந்திய அரசியல் சட்டத்தை மீறியதாகவும் மரபுகளை மீறியதாகவும் செய்யப்பட்ட உடன்பாடு ஆகும். இந்த உடன்பாடு குறித்து இந்திய அமைச்சரவையின் ஒப்புதலை பிரதமர் ராஜீவ் காந்தி பெறவில்லை. ஜூலை 29 ஆம் திகதியன்று கொழும்பு சென்று உடன்பாட்டில் கையெழுத்து இட்டுவிட்டு டில்லிக்குத் திரும்பியபிறகே அமைச்சரவையின் அரசியல் விவகாரக் குழுக்கூட்டத்தில் அதனுடைய ஒப்புதலை பெற்றார். அதைப்போலவே ஜெயவர்த்தனாவும் தன்னுடைய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை.

ஈழத் தமிழர்களின் சம்மதத்தையும் பிரதமர் ராஜீவ் பெறவில்லை. ஈழத் தமிழர்கள் சார்பில் உடன்பாட்டில் கையெழுத்திட இவருக்கு உரிமையோ தகுதியோ நிச்சயமாக இல்லை. இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு நடுவராக விளங்கி வந்த இந்தியா, தானே ஒரு சார்பாளராக மாறி உடன்பாட்டில் கையெழுத்திட்டது என்பது உலக வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒன்றாகும்.

இந்த உடன்பாட்டில் சொல்லப்பட்ட எதையும் ஜெயவர்த்தனா அமுல் நடத்தவில்லை. இதன் விளைவாக, விடுதலைபுலிகளுக்கும் இந்தியப் படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜெயவர்த்தனா எதை விரும்பினாரோ அது நடந்தது.

ராஜீவ் காந்தியின் முதிர்ச்சியற்ற அரசியலின் காரணமாக இந்தியாவின் மரியாதை மட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் உரிமைகளும் இந்த உடன்பாட்டின் மூலம் பறிக்கப்பட்டன.

1. முதன்முறையாக இந்திய இராணுவம் அந்நிய நாட்டு குடியரசுத் தலைவரின் கீழ் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மலையகத் தமிழர்களைத் திரும்ப ஏற்றுக்கொள்ள ராஜீவ் காந்தி ஒப்புக்கொண்டார்.

2. உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகள் மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய இராணுவத்தை அழைக்கும் உரிமை ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சங்களை நிறைவேற்ற மறுத்தபோது, அவர் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுப்பதற்கு இந்த உடன்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லை.

இந்திய மக்கள் மத்தியில் கீழ்கண்ட கேள்விகள் எழுந்தன.

அ. இலங்கையில் இந்திய இராணுவ வீரர்கள் யாருக்காக இரத்தம் சிந்தினார்கள்?

ஆ. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காகவா? அப்படியானால், இந்தியாவின் எல்லைகளுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து நேர்ந்ததா?

இ. இந்திய எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்து பரந்த இந்தியாவை உருவாக்குவதற்காகவா?

ஈ. இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்தியாவின் பகைவர்களா?

உ. அண்டை நாடு ஒன்றில் சரிந்து கொண்டிருக்கும், இனவெறி பாசிச ஆட்சியை முட்டுகொடுத்து நிறுத்துவதற்காகவா?

ராஜீவ் காந்தி - ரொமேஷ் பண்டாரி - ஜே.என். தீட்சித் ஆகியோர் வகுத்த இலங்கை இனப்பிரச்சினை பற்றிய கொள்கையின் மிக மோசமான விளைவுகளை உலகம் அறியும்.

ராஜீவுக்குப் பின்னால் பிரதமரான வி.பி. சிங் பதவியேற்றபோது இந்தக் கொள்கையைத் திருத்தி அமைக்க முயற்சி செய்தார். இந்திய அமைதிப்படையை உடனடியாகத் திரும்பப் பெற்றார்.

மேற்கொண்டும் அவர் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு முன்பாக அவரது அரசு கவிழ்க்கப்பட்டது. அவருக்குப் பின்னால் பதவியேற்ற தேவகவுடே, ஐ.கே. குஜ்ரால், பி.வி. நரசிம்மராவ் ஆகியோர் காலங்களில் ராஜீவின் தவறான கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.

பிரதமர் வாஜ்பாய் காலத்திலும் அதே கொள்கை தொடர்ந்தது. பிரதமர் மன்மோகன் சிங் காலத்திலும் அந்தக் கொள்கையிலிருந்து விலகிச் செல்லத் துணியவில்லை. இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த சந்திரிகா, ரணில், ராஜபக்ஷ ஆகியோர் சிங்களப் பேரினவாத கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். தமிழர்களுடன் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ள கொஞ்சமும் தயாராக இல்லை.

சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரிலும் நோர்வே நாட்டின் முயற்சியிலும் பேரிலும் போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தான போதிலும் அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. நோர்வே நாட்டின் முன்னிலையில் இருதரப்பு பிரதிநிதிகளும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகு, சிங்கள அரசு 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழு திட்டத்தை அறிவித்தது. இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு வரி அறவிடல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படாது, இந்த அதிகாரம் அனைத்தும் மத்திய அரசாங்கத்திடம் இருக்கும்.

புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம் தொடர்பான அதிகாரங்கள் மட்டும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படும். இவைதான் சிங்கள அரசு தர முன்வந்த அதிகாரங்களாகும்.

விடுதலைப்புலிகள் இதை ஏற்க மறுத்தபோது, மாற்றுத் திட்டம் அளிக்கும்படி சர்வதேச சமுதாயம் கூறியது. அதற்கிணங்க உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் பிற நாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்றும் பல்வேறு நாடுகளுக்கு நேரடியாகச் சென்றும் அந்நாட்டின் தலைவர்களுடன் பேசியும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார அவைத் திட்டம் என்ற பேரில் புலிகள் ஒரு திட்டத்தை உருவாக்கி அளித்தனர். ஆனால், அதன்மீது விவாதம் நடத்த சிங்கள அரசு முன்வரவில்லை.

மாறாக, மீண்டும் புதியத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு குழு அமைத்துள்ளது. இது காலம் கடத்தும் தந்திரமாகும். இதை சர்வதேச சமுதாயம் குறிப்பாக இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும். கடந்த 50 ஆண்டுகாலமாக திரும்பத் திரும்ப உடன்பாடுகள் ைகயெழுத்திடப்படுவதும் கிழித்தெறியப்படுவதும் புதியத் திட்டங்கள் உருவாக்கப்படுவதும் நடந்துகொண்டே இருக்கிறதே தவிர, அவற்றுக்குச் செயல்வடிவம் தர எந்தச் சிங்கள அரசும் முன்வரவில்லை. ஒப்புக்கொள்ளப்பட்டவற்றை நிறைவேற்ற மறுக்கும் சிங்கள அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சர்வதேச நாடுகள், விடுதலைபுலிகளை அவசர அவசரமாக தடைச் செய்கின்றன. குற்றவாளியைத் தண்டிப்பதற்குப் பதில் குற்றஞ் சாட்டியவரைத் தண்டிக்க முற்படுகின்றன. சர்வதேச சமுதாயத்தின் சிந்தனைப் போக்கில் மாற்றம் வரவேண்டும். அதைப் போல, இந்திய அரசும் கடந்த காலத் தவறான போக்கில் இருந்து விடுபட வேண்டும். ராஜீவ் காந்தியின் தவறான கொள்கையைப் பின்பற்றுவதை கைவிட்டு, யதார்த்தபூர்வமான உண்மைகளை உணர்ந்து அதற்கேற்ப ஈழத்தமிழர் பிரச்சினையில் புதிய அணுகுமுறையை இந்தியா கடைப்பிடிக்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்வது இந்தியாவுக்கும் நல்லது. ஈழத் தமிழருக்கும் நல்லது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.