Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்

 

 

 

அசோகனின் வைத்தியசாலை
- கருணாகரன்

நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்றமாதிரி, வேறுபட்ட கதைக்களத்தையும் நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கருவையும் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இன்னொரு நாவலாக “அசோகனின் வைத்தியசாலை“ இருக்கிறது.

வாழ்க்கை புதிய தளங்களில் அகலிக்கும்போதும் வேர்விடும்போதும் அதனுடைய வெளிப்பாடுகளும் வேறுபட்டு, புதிதாகவே அமையும். இதைச் சரியாக உணர்ந்துகொண்ட மனம் அதன் ருஸியையும் தாகத்தையும் நெருக்கடியையும் துக்கத்தையும் சொல்லத் துடிக்கும். வழமை சார்ந்தோ, மீறியோ புனைவுகளை உண்டாக்க விரும்புவதற்குப் பதிலாக தான் உணர்ந்து கொண்டிருக்கும் புதிதுகளை உவந்தளிக்கவே அது விரும்பும். தன்னுடைய அறிதல்களையும் உணர்தல்களையும் அனுபவச் சாரத்தையும் பகிர்வதில் ஆவலுறும். இப்படிச் செய்யும்போது ஒரு புதிய படைப்பு உருவாகிறது அல்லது நிகழ்கிறது. இது இயல்பாக உருவாகிற ஒரு மீறல். இந்த எண்ணமே இங்கே நடேசனிடமும் உள்ளது.

நடேசன் இந்த நாவலை தமிழ்ச்சூழலுக்கு தந்திருப்பதே தான் உணர்ந்த புதிதுகளைப் பிறருக்கும் பரிமாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையின் விளைவாகும். புதிய திணையில் பெறக்கூடிய ஒன்றை தன் வீடு கொண்டு சேர்க்கும் வேட்கை இது. இங்கே வீடென்பது, தமிழையும் தமிழ்ச் சமூகத்தையும் குறிக்கிறது. “திக்கெட்டும் செல்வீர், கலைச் செல்வங்கள் யாவும் கொண்டு வாரீர்“ என்று பாரதி சொன்னதை நிஜமாக்குவதென்பது இப்படித்தான் போலும். இதற்காக நடேசனைப் பாராட்ட வேணும்.

இன்று தமிழரின் வாழ்க்கை புதிய புலங்களில் – புதிய திணைகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அண்மைய நூறு ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் திணைபெயர்வுகளும் அதனடியாக ஏற்பட்ட அனுபவக் கொதிப்புகளும் அதிகம். அதற்கு முன்னர் அயற் சூழலுக்குள் மட்டும் மட்டுப்பட்டிருந்த தமிழர் வாழ்க்கை, இன்று பிற கண்டங்களை நோக்கிப் பெயர்ந்து வேர்விட்டுள்ளது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, மேற்குலகச் சமூகங்கள் பிற கண்டங்களில், பிற திணைகளில் வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டவையாக மாறிவிட்டன. அந்த அனுபவம் அவர்களை, அவர்களுடைய இயல்பினை, அவர்களுடைய கருத்துலகத்தை, அவர்களின் நிலைப்பாடுகளை, அவர்களுடைய மரபார்ந்த நடவடிக்கைகளை எல்லாம் மாற்றியமைத்தன. இதனால் அந்தச் சமூகங்கள் பன்மைத்துவத்திலும் சகிப்புணர்விலும் பரஸ்பர புரிந்துணர்விலும் ஜனநாயக அடிப்படைகளிலும் முன்னேறியுள்ளன. ஆதிக்க உணர்வு அவர்களிடத்தில் இன்னும் விலகாதிருந்தாலும் அதை அவர்கள் ஒரு விசக்காய்ச்சலைப் போல தீவிர நிலையில் பிரயோகிப்பதில்லை. பலவற்றுக்கும் இடமளிக்கும் மறுபார்வை, மாற்றபிப்பிராயம் போன்றவற்றுக்கு தாராளமாக வாய்ப்பளிக்கிறார்கள். இதன்மூலம் சமூக நெருக்கடிகளை முடிந்த அளவிற்குத் தணித்துக் கொள்கின்றனர். கூடவே மனிதர்களைப் பரஸ்பரம் மதிக்கின்ற நிலையிலும் வளர்ச்சியிலும் மேலோங்கியிருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு வெளிச் சூழல் மற்றும் வெளிப்பண்டாட்டு அனுபவம் அண்மித்தே கிடைத்துள்ளது. அப்படி அமைந்திருக்கும் அவுஸ்ரேலிய வாழ்க்கையிலிருந்தும் தன்னுடைய மிருக வைத்திய அனுபவத்திலிருந்தும் தன்னுடைய கால அரசியல் நிலைமைகளிலிருந்தும் அல்லது இவற்றை மையப்படுத்திய வகையிலிருந்தும் இந்த நாவலை எழுதியிருக்கிறார் நடேசன். வாழ்க்கைக்குப் புறம்பாக, வாழ்தலை விட்டு விலகியதாக எந்தப் பாத்திரத்தையும் நிகழ்ச்சிகளையும் நடேசன் இதில் உருவாக்கவில்லை. “ஒரு படைப்பை உண்மையானதோ அல்லது அது புனைவோ எனப் பார்க்காமல் புனைவில் யதார்த்தம் உள்ளதானால் அது நாவலாகும். அதிலும் கதையில் ( Realistic plot ) கதையின் நோக்கத்தில் (Realistic purpose) ஆன்மீக ரீதியில் (Moral realism) அல்லது (psychological realism) உளவியல் யதார்த்தம் இப்படி அமைந்தால் போதுமானது“ என்று நாவல் பற்றிய தன்னுடைய புரிதலை விளக்குகிறார் நடேசன்.

ஆகவே நடேசன் சொல்கிற மாதிரியும் அவர் எதிர்பார்க்கின்ற மாதிரியும் யதார்த்தத்தை மையப்படுத்தி, அதை ஆதாரமாக்கியே “அசோகனின் வைத்தியசாலை“ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் பெரும்பான்மையான தமிழர்களின் மனநிலையில் அதிர்வை ஏற்படுத்தக் கூடியது. தமிழ்த் தீவிர அரசியல் விரும்பிகளையும் சமதளத்துக்குக் கொண்டு வரக்கூடியது. என்னதான் யதார்த்தமாக, உண்மையாக இருந்தாலும் வழமைக்கு மாறான ஒன்று புதிதாக வரும்போது அல்லது அதை எதிர்கொள்ளும்பொழுது அதிர்வலைகள் ஏற்பட்டே தீரும். புதிதொன்றைப் பழகுவதிலும் ஏற்றுக்கொள்வதிலும் ஏற்படுகின்ற அதிர்வு அப்படித்தானிருக்கும். கேள்விகளையும் நம்பிக்கையீனங்களையும் தயக்கங்களையும் ஊடுருவியே தன்னை நிலைகொள்ள வைக்கவேண்டியது புதிதொன்றின் பொது விதி.

ஆகவே, பாரம்பரியங்களைச் சார்ந்தும் வழமைகளைச் சார்ந்தும் தங்களை உருவாக்கியிருப்போரின் சிந்தனை முறையிலும் நம்பிக்கையிலும் ஊடுருவி மின்சாரத்தைப் பாய்ச்சக்கூடிய ரசவாதத்தை நடேசன் தன்னுடைய ஏனைய எழுத்துகளில் பிரயோகப் படுத்துவதைப் போல இந்த நாவலிலும் பயன்படுத்தியிருக்கிறார். வெள்ளையர்கள் செல்வாக்குச் செலுத்துகின்ற அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ முற்படுகின்ற படித்த ஈழத்தமிழர் ஒருவரின் வாழ்க்கையும் நம்பிக்கைகளும் அனுபவங்களும் அபிப்பிராயங்களும் எப்படி அமைகின்றன என்பது நாவலின் ஒரு மையம். இன்னொரு மையம் வெள்ளையர்களின் வாழ்க்கையும் அவர்கள் எப்படி பொதுவெளியிலும் தனிவாழ்விலும் இயங்குகிறார்கள் என்பது. இன்னொரு மையம் இந்த இரண்டு தரப்புகளும் ஒன்றிணைந்து வாழ்கின்ற, இயங்குகின்ற முறைமை. இவை தமிழ் நாவலில் புதிது. அல்லது குறைவான அளவுக்கு கவனிக்கப்பட்ட ஒன்று.

புலம்பெயர் சூழலில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களுடைய உண்மை நிகழ்ச்சிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதோர் புனைவென நாவலை வாசகர் உணர வேணும் என்றே நடேசன் கருதியிருக்கிறார். அவருடைய நாவல் பற்றிய புரிதலும் நோக்கமும் இதுவாகவே உள்ளது. இதில் அவர் வெற்றியடைந்துமிருக்கிறார்.

புலம்பெயர் வாழ்வென்பது எளிதான ஒன்றல்ல. பழகிய ஒன்றுமல்ல. அது முற்றிலும் புதிய களத்தையும் யதார்த்ததையும் உடையது. புதிய திணையொன்றில் வேர் கொள்ள எத்தனிப்பது, எத்தனிக்க வேண்டியது. அத்தகைய எத்தனிப்புகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டே லட்சக்கணக்கான தமிழர்கள் இன்று பல கண்டங்களிலும் வாழ்கின்றனர். தாங்கள் வாழ்கின்ற களங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொள்கின்ற எத்தகைய உபாயங்களையும் முயற்சிகளையும் நம்பிக்கைகளையும் அவர்கள் பொது அடிப்படையாகக் கொள்வது குறைவு. எனவேதான் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகவும் விருப்பத்தையும் தெரிவையும் வேறொன்றாகவும் வைத்துள்ளனர். வாழ்க்கையை அவர்கள் நெகிழ்ச்சிகள் நிறைந்த வழிமுறையில் அமைத்திருக்கின்றனர். தங்களுடைய அரசியல் அபிலாஷையை மட்டும் நெகிழ்ச்சிக்கும் மாற்றத்துக்கும் மாறாக கடுமையான தீவிரத்தில் கொண்டிருக்கின்றனர். ஆனால், நடேசன் இதை மறுதலிக்கிறார். அவருக்கு வாழ்க்கை ஒரு கற்றுத் தரும் சிறந்த வழிகாட்டியாகத் தெரிகிறது. நடைமுறை வாழ்க்கையிலிருந்தும் தினசரி நிகழ்ச்சிகளின் எதிர்கொள்ளல்களிலிருந்தும் அனுபவங்களையும் அறிவையும் பெறுகிறார். எனவே தான் வாழ்கின்ற (புலம்பெயர்) சூழலின் அனுபவத்தையும் அறிதற் புலத்தையும் கொண்ட எழுத்தை அவர் அளிக்க முற்படுகிறார். அது புலம்பெயர் எழுத்தாளர் ஒருவரின் அவசியமான பணி எனக் கருதுகிறார். என்பதால் அதற்கேற்ப அந்த அனுபவத்தைக் கொண்ட எழுத்தும் புதிய கள வாழ்க்கையைப் போலப் புதுத் தொனியுடையதாகவே அமையும். அப்படியே அமைகிறது.

நடேசனின் இந்த நாவல் புலம்பெயர் வாழ்வின் அனுவங்களைத் தன்னியல்பிற் கொண்டுள்ள முற்றுமுழுதான எழுத்து என்பது வலியுறுத்திக் கொள்ள வேண்டியது. எனவேதான் “வேறுபட்ட கதைக்களத்தையும் நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் கொண்டு தமிழில் எழுதப்பட்ட இன்னொரு நாவல் இது“ வென தொடக்கத்தில் இந்த நாவலைப்பற்றிக் குறிப்பிட்டேன். தமிழ்ச் சூழல் இன்னும் அணுகத் தயங்குகின்ற, வெளிப்படுத்த விரும்பாத, மறைக்க முற்படுகிற, கூச்சமடைகின்ற அரசியல், பாலியல் விசயங்களையெல்லாம் நடேசன் மிக இயல்பாக போகிறபோக்கில் மிக இயல்பாக, யதார்த்தமாகச் சொல்லிவிடுவது கவனத்திற்குரியது. எல்லாச் சமூகங்களிலும் அரசியல் உண்டு. எந்தத் தரப்பிடமும் ஆதிக்க உணர்விருக்கும். அல்லது சந்தர்ப்பங்களின்போது தங்கள் நலனை முதன்மைப்படுத்திக் கொள்ளும் வேட்கை இருக்கும். மனிதர்களிடையே முரண்பாடுகளும் அவற்றை விளங்கிக் கொண்டு தீர்க்கும் தரப்புகளும் அவற்றைப் பெருப்பித்து பிரச்சினைகளை வளர்க்கும் தரப்பும் இருந்தே தீரும். உலகமும் மனிதர்களும் இத்தகைய கலவையின் விளைவு என்பதே இந்த நாவலில் வரும் பாத்திரங்களும் நாவலின் கதையும்.

இப்படி அமையும்போது நாவல் பல தளங்களில் விரிவைப் பெறுகிறது. ஒன்று புலம்பெயர் சூழலில் தமிழர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடி அல்லது வாழ்க்கை. மற்றது, பாலியல் ரீதியான உறவும் உணர்வும். இதில் முக்கியமாக இந்த நாவலில் வரும் இரண்டு பாத்திரங்களின் உறவு நிலை. ஒரு கராட்டிப் பயிற்றுனனுக்கும் அவனிடம் பயில வருகின்ற மிக இளவயதுடைய மாணவிக்கும் இடையில் ஏற்படுகிற உறவு, பின்னர் கணவன் மனைவி என்ற நிலையாகி, அங்கே குடும்ப வன்முறையும் மோதலும் சிதைவுமாக உள்ளநிலையாக மாறுகிறது. இங்கு நிகழும் குடும்ப வன்முறை அவளை எப்படி உருமாற்றுகிறது என்பது. அடுத்தது, வேலை செய்யும் இடத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை சில பாத்திரங்கள் அணுகும்போது அந்தப் பாத்திரங்களின் இன,மத, பால் ரீதியான ஆதிக்க உணர்வும் குழுவாதமும். இப்படிப் பல விசயங்களைத் தன்னுள்மையத்தில் வைத்து நாவல் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு படைப்பானது தன்னுடைய உள்ளடக்கங்களில் பல்வேறு வகையான அனுபவத் தொகுதிகளையும் உணர்வாழங்களையும் அறிதல்களையும் உணர்த்துதல்களையும் கொண்டிருக்கும். அது காணுகின்ற, காட்டுகின்ற தரிசனங்கள், அளிக்கின்ற வியப்புகள் படைப்பின் கற்பனைத் திறனை வாசக மனதிலும் செறிவாக்கும். படைப்பின் வெற்றியை – அதனுடைய மறதியின்மையை அளிக்கின்ற விசயங்கள் இவைதான். வாசக மனதில் செறிவடைந்த தரிசனங்கள் பின்னர் ஒருபோதும் அழிவதில்லை. பதிலாக அந்தத் தரிசனங்கள் மேலும் பல புதிய தரிசனங்களை மனதில் உருவாக்குகின்றன. தரிசனங்களைக் காணும் வழிகளையும் விழிகளையும் உருவாக்கியும் விடுகின்றன. இத்தகைய தரிசனங்களை அளித்த படைப்பு பிறகு, நிலைபேறாக அந்த மனதில் தங்கி விடுகிறது. அந்தப் படைப்பின் பாத்திரங்களும் அப்படி நிலைபேற்றைப் பெற்று விடுகின்றன. இங்கே வாசகமனம் தன்னுடைய ஆழ்நிலைகளில் கொள்ளக்கூடிய தரிசனங்களைச் சிறப்பாக உண்டாக்கியுள்ளார் நடேசன்.

“அசோகனின் வைத்தியசாலை“ அவுஸ்ரேலியாவில் ஒரு மிருக வைத்தியசாலைச் சூழலில் மையப்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டோம். இந்த மிருக வைத்தியசாலை நமது சூழலில் உள்ள மிருக வைத்திய நிலையங்களைப் போலச் சாதாரணமான ஒன்றல்ல. பல ஏற்பாடுகளையும் வசதிகளையும் கொண்டது. மனிதர்கள் சிகிச்சை பெறுவதற்கான வைத்தியசாலைகள் எப்படி அமைந்திருக்குமோ அதைப்போல, அதையும் விட இன்னும் வேறான – வித்தியாசங்களையுடைய – மேலதிக வசதிகளையும் ஏற்பாடுகளையும் உடையது. குறிப்பாக சிகிச்சை பெறும் விலங்குகளைப் பராமரிப்பதற்கான விடுதிகள், அதற்குரிய ஆட்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ நிபுணர்கள், நிர்வாக அமைப்பு, வைத்தியசாலையை இயக்கும் ஆலோசனைச் சபை போன்றவற்றைக் கொண்டது. மட்டுமல்ல மருத்துவர்களின் பணியும் மனிதர்களுக்கான மருத்துவச் சேவையைப் போன்றே படிமுறைப்படி நடக்கிறது. இத்தகையை மிருக வைத்தியசாலைகளின் முன்னோடியாக அசோகச் சக்கரவர்த்தியே இருந்ததாக வரலாற்றுச் சான்றுகளை முன்வைத்துக் கூறுகிறார் நடேசன்.

போர்த் தேவைகளுக்காக அன்று குதிரைகள், யானைகள் உள்ளிட்ட பல விலங்குகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. போரிலே அதிகளவில் காயமடையும் விலங்குகளை மீள் நிலைக்குக் கொண்டு வரவும் ஆயிரக்கணக்கில் நிற்கும் விலங்குகளுக்கு உண்டாகும் நோய்களைக் குணப்படுத்தி மீளப்பயன்படுத்தக் கூடியதாகவும் செய்ய வேண்டியிருந்ததால், அசோகன் மிருக வைத்தியசாலையின் தேவையை ஒரு அவசியமாக உணர்ந்திருக்கிறார். அதற்காக அவர் முதன்முதலில் மிருக வைத்தியசாலைகளை உருவாக்கி, வைத்தியம் செய்ய முயன்றிருக்கிறார். இந்த முன்னோட்டத்தை பின்னர் வெவ்வேறு சமூகங்கள் தங்களுடைய வெவ்வேறான தேவைகளுக்காகப் பயன்படுத்தி இப்பொழுது மிருக வைத்தியத்தை ஒரு துறையாகவே ஆக்கிவிட்டன.

இந்த (“அசோகனின்) மருத்துவமனை“ யில் சிகிச்சை பெறும் விலங்குகள் பெரும்பாலும் நாய்களும் புனைகளுமே. இவை வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள். இந்தப் பிராணிகளை வளர்க்கின்ற மனிதர்களும் ஒருவகையில் சிகிச்சைக்குரியவர்களாகவே உள்ளனர். பல பாத்திரங்கள் அவ்வாறான சிகிச்கைக்குரியவை என்பது அழுத்தமாகவே பதியப்படுகிறது. மட்டுமல்ல, இந்த நாவலை வாசிக்கின்றவர்களிடமும் ஒரு வகையான சிகிச்சையையும் நடேசன் மேற்கொள்கிறார் என்றே நினைக்கிறேன். முக்கியமாக ஈழத்தமிழ்ச் சமூகத்தினர் இன்று எதிர்கொண்டிருக்கின்ற மன நெருக்கடிகள் அரசியல் நெருக்கடி மற்றும் பண்பாட்டு நெருக்கடி சார்ந்தவை. இந்த நெருக்கடிகளை எப்படித் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதற்கு இந்த நாவலில் வருகின்ற பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் வழிகாட்டிகளாக உள்ளன. நாவலை வாசிக்கும்போது நமது நெருக்கடிகளும் அவற்றைத் தீர்ப்பதற்காக வழிமுறைகளும் உபாயங்களும் கிடைக்கின்றன. அப்படிப்பார்த்தால் இரு ஒரு மருத்துவ நாவலாகவும் என்பது என்னுடைய புரிதல்.

கெட்டிதட்டிப்போன வாழ்க்கை முறையிலிருந்து, புதிய வாழ்க்கைக்கும் புதிய சிந்தனைக்கும் நகரத் தயாராகுங்கள். நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான துணிச்சலும் மாற்றங்களுக்கான தயார்ப்படுத்தலும் நெகிழ்ச்சியிலிருந்தே ஏற்படவேண்டும் என்ற உளவியற் சிகிச்சையை, சிந்தனைச் சிகிச்சையை நடேசன் மேற்கொள்கிறார். குடும்ப வன்முறை என்பது ஒரு பெண்ணை எப்படியானவளாக மாற்றிக்கொள்ள வைக்கிறது என அவர் உணர வைப்பதன் மூலமாக குடும்பம் தொடர்பாகவும் பெண்கள் தொடர்பாகவும் சமூக நிலைப்பட்டு, உளவியல் நிலைப்பட்டுப் பேசுகிறார். பன்மைத்துவப் பண்பு இல்லையென்றால் இனிவரும் உலகில் வாழ்க்கை இல்லை என்பதை நாவலை வாசிக்கும்போது நாம் புரிந்து கொள்கிறோம்.

சிந்தனையாலும் முயற்சியினாலும் அறிவைப் பயன்படுத்தும் முறைமையினாலும் மாற்றங்கள் உருவாகின்றன. பிரச்சினைகள் எந்தச் சூழலிலும் எந்தக் களத்திலும் இருக்கும், ஏற்படும். இன முரணும் பகையும் ஒதுக்குதல்களும் எங்குமுள்ளன. காழ்ப்பு என்பது பல விதங்களில் பல இடங்களிலும் ஒரு அழிக்கவே முடியாத செடியாக பெருகிக் கொண்டிருக்கிறது. நெல்லிருப்பதைப் போல புல்லும் இருக்கவே செய்யும். புல்லைப் பற்றிச் சிந்திப்பதை விட நெல்லைப் பற்றிச் சிந்தியுங்கள். புல்லையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசியுங்கள். அதுதான் யதார்த்தம். அப்படித்தான் மனிதர்கள் யோசிக்க முடியும் என்று இந்த நாவலில் வருகின்ற பாத்திரங்கள் நமக்குச் சொல்கின்றன. ஆனால், இப்படி எந்தப் பாத்திரமும் நடிகர் விஜயகாந் பாணியில் நின்று வசனம் பேசி, வியாக்கியானங்களைச் செய்யவில்லை. அல்லது நடேசன் வாசகரை வழிமறித்து எந்த அறிவுரையையும் சொல்ல முற்படவில்லை.

ஒரு மகத்தான படைப்பின் பண்பிற்கமைய எல்லாவற்றையும் வாசகரிற் தரிசனப்படுத்திச் சுய சிந்தனைக்கும் தரிசனத்திற்கும் இடமளித்துச் செல்கிறது நாவல். எத்தகைய அரசியல் நிர்ப்பந்தத்தையும் நிபந்தனையையும் அளிக்கவில்லை அது. அதிகம் பிரசங்கிப்பதை விடவும் செயலால், வாழும் முறையால் உணர்த்துவது சிறப்பாகும் என்பது நடேசனின் நம்பிக்கை. நாம் நமது பிள்ளைகளுக்கு சொல்லி வழிகாட்டுவதை விட வாழ்ந்து வழிகாட்டுவது மேல் என்பதாக.

இந்த நாவலில் கிடைக்கின்ற அனுபவங்களின் சிறப்பு, மிருகங்களும் மனிதர்களும் இணைந்துள்ள புள்ளியே. மனிதரின் ஆதித்தொடர்பு விலங்குகளோடுதான் உள்ளது. விலங்குகளுக்கும் மனிதனுக்குமிடையிலான உறவென்பது நாகரீகத்துக்கு முற்பட்டது. காட்டு வாழ்க்கைக் காலத்திலிருந்து ஆரம்பமாகிய உறவு அது. எனினும் இன்றும் அது தொடருகிறது. மனிதர்கள் நகர்மயமாகி, அறிவு மயமாகி, விஞ்ஞானப் பொறிமுறைகளால் அவர்களுடைய வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருந்தாலும் மனிதருக்கும் விலங்குகளுக்குமிடையிலான பிணைப்பும் உறவும் நீங்கி விடவில்லை. இதை நாவல் மிக நுட்பமாகத் தெளிவுறுத்துகிறது. அசோகனின் வைத்தியசாலையில் உள்ள மனிதர்களையும் பிராணிகளையும் இந்தத் தரப்புகளுக்கிடையில் நிகழ்கின்ற சம்பவங்களையும் அங்கே உருவாகின்ற பிரச்சினைகளையும் அவற்றின் மத்தியில் நிகழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையையும் அடிப்படையாக்கி இதைச் செய்துள்ளார் நடேசன். அவர் ஒரு மிருக வைத்தியராக இருப்பது இதைச் சிறப்பாகச் செய்வதற்கு அவருக்கு உதவியுள்ளது. தமிழர்கள் இதுவரையில் அறிந்திராத ஒரு களமும் வாழ்க்கையும் இதிலுண்டு. இந்தச் சிறப்புக்காகவே இந்த நாவல் வரவேற்பைப் பெறும்.

அடுத்தது நடேசன் கூறுகின்ற யதார்த்தமும் உண்மையும் தொடர்பானது. “அசோகனின் வைத்தியசாலை“ என்பது யதார்த்தமாக இயங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றும் ஒரு மையம். ஆனால், இந்தப் பெயரில் அங்கே வைத்தியசாலை இயங்குவதாகவும் அவர் காண்பிக்கவில்லை. அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளும் அங்குள்ள மனிதர்களும் அந்த வைத்தியசாலையின் அமைப்பும் உண்மையானவை. யதார்த்தமானவை என்றே எந்த மனமும் நம்பும். ஆனால் அத்தனையும் நடேசனின் புனைவு. மட்டுமல்ல நாவலில் வரும் பாத்திரங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளும் அவர்களிடையே உருவாகின்ற முரண்பாடுகளும் கூட யதார்த்தமானவையே. இதை உண்மை என எவரும் மறுக்க முடியாத அளவுக்கு அவை உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இந்த யதார்த்தத்திலிருந்தும் உண்மையிலிருந்தும் தன்னுடைய நாவலுக்கான வலிமையைப் பெறுகிறார் நடேசன். லட்சியவாதத்தை விட வாழ்க்கையின் அனுபவம் வலிமையானது, சிறப்பானது என்பது நடேசனின் நம்பிக்கை. இந்த நாவலின் அடிப்படை.

பொதுவாகத் தமிழில் பேணப்பட்டுவரும் தமிழ்ச் சமூகம் பற்றிய புனித அடையாளங்களையும் இயல்புகளையும் “அசோகனின் வைத்தியசாலை“ மறுக்கிறது. இதில் வருகின்ற தமிழ்ப் பாத்திரங்கள், தாங்கள் வாழ்கின்ற காலத்தின், சூழலின், நிலைமைகளின் தாற்பரியங்களை ஏற்றும் அனுசரித்தும், விலகியும் மறுதலித்தும் ஒத்தோடியும் வாழ்கின்றன. வாழ்க்கை என்பது எல்லாமும் இணைந்தது, எல்லாம் கலந்ததே. அதில் இனிப்பும் உண்டு. கசப்பும் உண்டு. உறைப்பும் புளிப்பும் உண்டு. எல்லாச் சுவையும் இல்லாத ஒரு வாழ்க்கை எங்குமில்லை. இதை ருஸிக்காத எந்தச் சமூகமும் இல்லை என்ற உண்மையை நடேசன் வலியுறுத்துகிறார். இதற்கு இந்த நாவலில் வரும் சுந்தரம்பிள்ளை என்ற பாத்திரம் நல்ல வகைமாதிரி. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் சமகால உண்மைப் பிரதிநிதியாக இயங்குகிறார் சுந்தரம்பிள்ளை. தன்னுடன் வேலை செய்கின்ற பிற இனத்தைச் சேர்ந்த சக மருத்துவப் பெண்ணுடன் சந்தர்ப்பவசமாகக் கொள்ளும் உறவு வரையில் சுந்தரம்பிள்ளை இயல்பாக உள்ளார். மட்டுமல்ல, சுந்தரம்பிள்ளை என்ற பாத்திரம் தான் வாழ்கின்ற அவுஸ்ரேலிய நிலப்பரப்பிலும் அங்குள்ள மேற்கு மயப்பட்ட சமூகத்திலும் பிற சமூகத்தவர்களை அதிகமாகக் கொண்ட தொழிலிடத்திலும் மையங்கொண்டு இயங்கும்போது கொள்ளவேண்டியிருக்கிற நெகழ்ச்சிகளும் கவனத்திற்குரியன.

சொந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத்திலுள்ள சகலருக்கும்தான் நெருக்கடிகளும் சவால்களும் சிதைவுகளும் உள்ளது. நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறொன்றாகவும் பல விசயங்கள் நிகழ்ந்து விடுகின்றன. வாழ்க்கையில் கற்பனைகளும் கனவுகளும் திட்டமிடல்களும் சறுக்கி விடுகின்றன. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் சிலவேளை சிலருக்குக் கிடைத்து விடுகிறது. தேவையற்ற முரண்களும் நியாயமற்ற சந்தேகங்களும் ஏற்றுக்கொள்ளவே முடியாத பாரபட்சங்களும் பிறப்பினடியாக மேற்கொள்ளப்படுகின்றன. இதையெல்லாம் சமன் செய்வதிலும் வெற்றி கொள்வதிலுமே வாழ்க்கை அமைகிறது. மனித ஆற்றல் வளம்பெறுகிறது.

இதை வாழ்க்கையின் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தீவிரமாக உணர்த்திச் செல்கிறது நாவல். நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களும் இத்தகைய அத்தனை வாழ்வனுபவங்களையும் உள்ளமைவாகக் கொண்டவையே.

எத்தகைய அரசியல் லட்சியத்தோடும் கலாச்சார அபிலாஷைகள், அடையாளங்களோடும் யாரும் இருக்கலாம். அல்லது அப்படி வாழ முற்படலாம். ஆனால், அவர்கள் தாங்கள் வாழ்க்கின்ற சூழலில் அவற்றை எந்த அளவுக்குக் கடைப்பிடிக்க முடிகிறது? அவர்களுடைய சூழல் எந்த அளவில் அதற்கு இடமளிக்கிறது? என்ற கேள்விகள் முக்கியமானவை.

“அசோகனின் வைத்தியசாலை“ யில் வரும் சுந்தரம்பிள்ளை யதார்த்தமானவர். தமிழ்க் கதாநாயகப் புனிதப் பிம்பத்தின் நிழல் படாத – ஒளி பட்டுத் தெறிக்காத சாதாரணமான பாத்திரம். ஒளிவட்டங்கள் சூட்டப்படாத மனித இயக்கம். மனித இயல்பும், வாழ்க்கையின் சவால்களும் கலக்கின்ற போது விளைகின்ற வாழ்க்கையோடு இணைந்த பாத்திரம். ஒரு புனைவின் சிறப்பு இங்கேதான் மதிப்பைப் பெறுகிறது. யதார்த்தமான ஒன்றே உண்மைக்கு நெருக்கமான சிறந்த வடிவமாகும். சுந்தரம்பிள்ளை புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற பின், அங்கே தொழில் தேடுவது, வீடுபார்ப்பது, குடும்பத்தோடு புலம்பெயர் சூழலில் வாழ்வது, பிற சமூகத்தினரோடு இணைந்து வாழ்வது போன்றவை சராசரியான புலம்பெயர் ஈழத்தமிழர் ஒருவரின் அனுபவமும் யதார்த்தமும் உண்மையுமாகும். இத்தகைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் தமிழில் வந்தது குறைவு. புலம் பெயர் அறிவு என்பதும் இலக்கியம் என்பதும் இதையே கோரி நிற்கின்றன. திசைகளெட்டுக்கும் புதிய திணைகளுக்குச் சென்றவர்கள் என்ன தரப்போகிறார்கள், எப்படித் தரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இதையே கோருகின்றது.

நடேசனின் இரண்டு நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஒன்று “வண்ணாத்திகுளம்“. மற்றது “உனையே மயல்கொண்டு“. இதில் “வண்ணாத்திகுளம்“ ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நடேசன் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக புளொக்கிலும் பத்திரிகைகளிலும் எழுதிவருகிறார். அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை மையப்படுத்தி எழுதுவதே நடேசனின் முதன்மையான அக்கறை. ஆனால், அவர் இலக்கியத்திலும் தீவிர ஈடுபாடுள்ளவர். என்பதால்தான் அவர் ஏற்கனவே இரண்டு நாவல்களையும் தன்னுடைய தொழில்சார் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட “வாழும் சுவடுகள்“ என்ற இரண்டு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

மனிதர்களின் வாழ்க்கைக்கூடாகவும் அவர்களுடைய அனுபவங்களுக்கூடாகவும் இலக்கியத்தை அணுகுவதே நடேசனின் வழிமுறை.

இறுதியாகச் சாராம்சப்படுத்தினால், நடேசனின் இந்த நாவல் அவர் எழுதிய நாவல்களில் முக்கியமான ஒன்று என்பதை இதை வாசிக்கும்போது உணர்ந்து கொள்ள முடியும். இது புலம்பெயர் தமிழர்களுடைய வாழ்வின் மெய்யான பல விசயங்களைச் சொல்கிறது. ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துணர்த்துகிறது. உண்மையும் யதார்த்தமும் எப்படியானது? அது எத்தகைய விருப்பங்களுக்கும் அப்பாலானது என்பதை நடேசன் இந்த நாவலில் உருவாக்கியுள்ள பாத்திரங்களின் வழியாகவும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இந்த நாவல் புனைவா அல்லது உண்மைகளின் பதிவா என்று நம்மைத் தடுமாற வைக்கிறது. இது தடுமாறிக்கொண்டிருக்கும் தாழ்நிலைச் சமூகமொன்றினை உய்வித்து, உயர்த்துவதற்கான நல்லதோர் படைப்பு.

00

http://puthu.thinnai.com/?cat=5

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தமிழன் தன்னுடைய அடையாளத்தை இழந்து சுழியன்களாக வாழவேண்டும்.....ஆனால் எழுத்தாளர் நோயல் சிறிலங்கா தேசியத்தை வளர்க்க பாடுபடுவார்.... மெல்பனில் தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை நிகழ்வு எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு. குடியேற்றநாடாக விளங்குவதனால் பலதேச பல்லின மக்களும் இங்கு வாழ்கின்றனர். அண்மையில் மெல்பனில் கிரகிபேர்ண் என்னுமிடத்தில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில், இங்கு நீண்டகாலமாக வாழும் இலங்கைத்தமிழர்கள் இருவருடைய தாய்மொழி இலக்கியப்படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இந்த நூலகம் அமைந்துள்ள பிரதேசத்திலும் அதற்கு அண்மித்த நகரங்களிலும் சுமார் 120 மொழி பேசுகின்றவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அதிசயம். ஆனால் அதுதான் உண்மை. கிரகிபேர்ன் நகரத்தில் இலங்கைச்சிங்கள சமூகத்தினர் செறிந்துவாழ்கின்றனர். அதனால் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களுக்கு இங்கு பரவலான அறிமுகம் கிட்டியது மிகவும் பொருத்தமானதுதான். இந்த நகரம் ஹியூம் மாநகரசபைக்குள் வருகிறது. இந்த மாநகர சபையின் அங்கத்தவராக தெரிவாகியிருப்பவர் சந்திரா பமுனுசிங்க என்ற சிங்கள அன்பர். அவர் இனநல்லிணக்கத்தை மதிப்பவர். அத்துடன் சமூக ஒன்று கூடல்களின் ஊடாக புரிந்துணர்வை சமூகங்களுக்கிடையில் தொடர்ச்சியாகப்பேணுவதற்காக உழைத்துவருபவர். அவரது முன்முயற்சியினால் நடந்த இந்த தமிழ் - சிங்கள – ஆங்கில பரிவர்த்தனை இலக்கிய நிகழ்ச்சியில் ஹியூம் மாநகர மேயர், கவுன்ஸிலர் ஜீயோஃப் போர்டர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியதுடன் குறிப்பிட்ட நூல்களையும் பெற்றுக்கொண்டு வெளியிட்டுவைத்தார். வெளியிடப்பட்ட நூல்கள்: நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு சமணலவௌ. உனையே மயல்கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு டுழளவ in லழர. முருகபூபதியின் தமிழ்ச்சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு மதகசெவனெலி. கவுன்ஸிலர் சந்திரா பமுனுசிங்க தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் எஸ். பி. எஸ். சிங்கள ஒலிபரப்பு மெல்பன் ஊடகவியலாளர் திரு. விஜய கருணாசேன வரவேற்புரை நிகழ்த்தினார். மேயர் தமது உரையில், “ மக்கள் நூலகங்களை முடிந்தவரையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். முதல் தடவையாக இந்த நூலகத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது ஏனைய மாநகரசபைகளுக்கும் முன்மாதிரியாகத்திகழும். மொழிபெயர்ப்புகள் இனங்களை தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவும். இன்று இங்கு வாழும் இரண்டு இலங்கைத்தமிழர்களான நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோருடைய நூல்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அறிமுகமாகின்றன. ஏனைய மாநகர நூலகங்களிலும் இதுபோன்ற இன நல்லிணக்கத்தை உருவாக்கும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும். இந்தப்பிரதேசத்தில் இலங்கை மக்களான தமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கி இனத்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து நான் கவனம் செலுத்துவேன். அவர்களுக்கென சமூக மண்டபம் ஒன்று தேவைப்படுவதை உணருகின்றேன். இதுபோன்ற சந்திப்புகள் எதிர்காலத்திலும் தொடரவேண்டும்.” என்று தெரிவித்தார்.

இந்தப்பிரதேசத்தில் இலங்கை மக்களான தமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கி இனத்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து நான் கவனம் செலுத்துவேன். அவர்களுக்கென சமூக மண்டபம் ஒன்று தேவைப்படுவதை உணருகின்றேன்
நன்றிகள் டமிழ்முரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.