Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ விடுதலைப் போராட்டத்தை உலகம் அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டது

Featured Replies

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை, சேலம், மதுரையில் நடத்திய ஈழத் தமிழர்கள் பாதுகாப்பு மாநாடுகளில் தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தோழர் தியாகு பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரைகளிலிருந்து.

இப்போது ஈழத்திலே நடக்கும் பேச்சு வார்த்தைக்கான சூழலை உருவாக்கியதே விடுதலைப்புலிகள் தான்.

நாங்கள் அமைதிக்காக நிற்கிறோம். நாங்கள் போர் வெறியர்கள் அல்ல. நாங்கள் ஆயுதங்களை காதலிக்கிறவர்கள் அல்ல என்று இந்த உலகத்திற்கு மெய்ப்பிக்கிற விதத்திலே அவர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். பேசுகிறாயா பேசத் தயார். அந்த பேச்சு வார்த்தையிலே நீ என்ன தீர்வைச் சொல்லப் போகிறாய் சொல் என்றார்கள். கடந்த காலத்திலே தந்தை செல்வா சிங்கள ஆட்சிகளோடு பேசினார். கடந்த காலத்திலே தமிழர் அய்க்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் பேசினார்கள். அந்த பேச்சுகளுக்கும் பிரபாகரன் அறிவித்த பேச்சுகளுக்கும் ஒரு பெரும் வேறுபாடு இருக்கிறது. தந்தை செல்வா அவர்களுக்கும் பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்களுக்கும் அரசியல் வலிமையும் அறவழி வலிமையும் இருந்தது.

அவர்களிடம் ஆயுத வலிமையும், படை வலிமையும் இல்லை. ஆனால் தம்பி பிரபாகரன் தன் தேசத்திற்கென்று ஒரு படையும் வைத்துக் கொண்டு இராணுவ வலிமையோடு கரங்களில் உறுதியான ஆயுதத்தோடு பேச்சு வார்த்தைக்குப் போனார். பாலஸ்தீனப் பிரச்சினைக்காக ஓஸ்லோவிலே பேச்சு வார்த்தை நடந்தது. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் பேசுவதற்குப் போனார். இப்போது விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு ஜெனிவாவிலே பேச்சு நடத்துகிறது. இதுகூட இராஜேபக்சேவிற்கு வெற்றி தான் என்று ‘இந்து’ ஏடு எழுதி தன்னுடைய அரிப்பை தீர்த்துக் கொள்கிறது. என்ன சொன்னார் ராஜபக்சே? ஆசிய நாட்டுக்குள்ளேதான் பேசுவோம் என்றார். இப்போது நடக்கும் பேச்சுவார்த்தை அய்ரோப்பிய நாடுகளால் கவனிக்கப்படுகிறது. உலகம் கவனிக்கிற பிரச்சனையாக இருக்கிறது.

ஜப்பானிலிருந்து போகிறார் தூதுவர்; கொழும்புவிலிருந்து கிளி நொச்சிக்கு போகிறார். கிளி நொச்சிக்குப் போய் அங்கே அரசுக்குரிய மரியாதையோடு பிரபாகரனை சந்தித்துப் பேசுகிறார். இதெல்லாம் அவர்களுக்கு வருத்தம், சங்கடம். ஓசுலோவிலேயிருந்து நார்வே தூதர் எரிசோல்கைம் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் தாண்டி வருகிறார். கிளி நொச்சியிலே இருக்கிற தலைவரைப் போய் பார்ப்பதற்காக! கிளிநொச்சியிலே ஒரு செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. உலகத்து பத்திரிகை யாளர்கள் எல்லாம் வருகிறார்கள். உள்ளூர் பத்திரிகையாளர்களையே சந்திப்பதற்கு துணிச்சல் இல்லாத தலைவனும், தலைவியும் இங்கே வயிறு எரிகிறார்கள்.

அய்யோ பிரபாகரனுக்கு இவ்வளவு கூட்டமா என்று! அப்படி ஒரு செல்வாக்கோடு பெருமித நிலை யிலே இருந்து கொண்டு பிரபாகரன் பேசினார். அதே போல்தான் ஜெனிவாவிலும் இப்போது பேச்சு வார்த்தை நடக்கிறது. எந்த இடம்? சுவிட்சர் லாந்தினுடைய தலைநகரம். சுவிட்சர்லாந்தினுடைய தேசியக் கொடி என்ன தெரியுமா? செஞ்சிலுவை சங்கத்தினுடையது.

உலகத்தில் அமைதிக்கு மறு பெயரான அரசு ஒன்று உண்டு என்றால் அது சுவிட்சர்லாந்து தான். முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் நடந்தன. அய்ரோப்பிய வல்லரசுகள் இரு குழுக்களாக பிரிந்து மோதின. இந்த இரண்டு போரிலும் ஈடுபடாத ஒரே அய்ரோப்பிய நாடு சுவிட்சர்லாந்து. இங்கே இந்தியைத் திணிக்கிற போது நாம் சொல்லுகிறோம். தமிழையும் ஆட்சி மொழியாக்கு என்கிறோம். ஒரே நாட்டில் எத்தனை மொழிகளை ஆட்சி மொழிகளாக்க முடியும் என்று கேட்கிறார்கள். நாம் சொல்லுகிறோம் - சுவிட்சர்லாந்தைப் பார். அந்த நாட் டிலே மூன்று மொழி பேசுகிறார்கள்.

மூன்று மொழிகளையும் ஆட்சி மொழிகளாக வைத்திருக்கிறார்கள். அதனால் மூன்று இனங்கள் சேர்ந்து வாழ் கின்றன. இலங்கையிலே, ஒரு காலத்தில் கொல்வின் டிசில்வா சொன்னார். இரண்டு மொழிகளையும் அங்கீகரிக்கிறேன் என்று இரண்டு மொழிகளையும் அங்கீகரித்து சமத்து வம் கொடுத்தார்.

அப்போது தான் இரண்டு மொழிகள் ஒரு நாடு என்ற நிலை வரும். இல்லை, இல்லை சிங்களம் மட்டும் தான் ஆட்சி மொழி என்றால், ஒரு மொழி இரண்டு நாடுகள் என்று பிரிந்து போகும் என்று அவரே சொன்னார்.

அய்க்கிய நாடுகளுடைய தலைமையகத்தை நியுயார்க்கிலே அமைத்தார்கள். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அமெரிக்க வல்லரசுக்கு இருந்த வலிமையை கருதி அங்கே உருவாக்கினார்கள். ஆனால், அய்.நா.வின் இரண்டாவது தலைமையகத்தை அய்ரோப்பாவிலே உருவாக்க வேண்டும் என்று கருத்து வந்தபோது ஜெனிவாவிலே தான் உருவாக்கினார்கள். பாலஸ்தீன விடுதலை அமைப்பினுடைய தலைவர் யாசர் அராபத் பாலஸ்தீன தேசிய விடுதலை அமைப்பினுடைய தலைவராக இருக்கிற போது தான் கோருகிற தாயகத்தினுடைய ஒரு சதுர அங்குல நிலத்தைக்கூட தன் கையிலே வைத்திருக்காத போது உலகம், அந்த அமைப்பை அங்கீகரித்தது.

அவரை ஓர் அரசு தலைவராகக் கொண்டாடியது. அவரை அய்க்கிய நாடுகள் அவைக்கே அழைத்தார்கள். வாருங்கள் அராபத் இங்கே வந்து பொதுச் சபையிலே உரையாற்றுங்கள் என்று கேட்டார்கள். அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை. என்ன செய்தார்கள் தெரியுமா? நியுயார்க்கில் அய்.நா. கட்டிடம் இருக்கும் அந்த வளாகம் ஒரு தனி நாட்டுக்குரிய அதிகாரம் கொண்டது. ஆனால், அந்த கட்டிடத்திற்குள் நுழைய வேண்டும் என்றால், அமெரிக்க இறையாண்மைக்குட்பட்ட நியூயார்க் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

எனவே, அமெரிக்கா யாசர் அராபத் திற்கு விசா கொடுக்க மறுத்தது. அமெரிக்கா அவரை அய்.நா.விலே பேச விடக் கூடாது என்பதற்காக, “சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?” அய்.நா.அராபத்துக்காக நியூயார்க்கை விட்டு ஜெனிவாவுக்கு வந்தது. ஜெனிவா வில் அய்.நா.வின் பொதுப் பேரவை கூடியது. யாசர் அராபத் அங்கே வந்து முழங்கினார். ஜெனிவாவிலே நின்று பேசினார். இராணுவ சீருடையிலே வந்தார். அவர் எப்போதும் இடுப்புக் கச்சையிலே ஒருகைத் துப்பாக்கியை வைத்திருப்பார்.

அவர் சொன்னார்: நான் இந்த உலகப் பேரவையின் முன் நிற்கிறேன். ஒரு கையிலே அமைதியை குறிக்கிற ஆலிவ் இலைகளோடு வந்திருக்கிறேன். இன்னொரு கையிலே போருக்குரிய துப்பாக்கியோடு வந்திருக்கிறேன்; எது வேண்டும்? இஸ்ரேலே சொல்! துப்பாக்கியா? ஆலிவ் இலையா? அமைதி வேண்டும் என்றால் அமைதி; போர் வேண்டும் என்றால் போர் என்று அவர் முழங்கினார். அந்த ஜெனிவாவிலே தான் இப்போது புலிகள் பேசுகிறார்கள். இது என்ன தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையா, எங்கே வேண்டும் என்றாலும் உட்கார்ந்து பேசு வதற்கு? ஒரு தேசத்துக்கும், இன்னொரு தேசத்துக்குமான உரையாடல்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது தெரியுமா? ஜெனிவா! விடுதலைப் புலிகள் சிங்கள அரசு பிரதிநிதிகளோடு பேசுகிறார்கள். உலகம் ஒத்துக் கொண்டிருக்கிற நார்வே அரசுனுடைய அனுசரணையோடு பேசுகிறார்கள் என்றால், இந்த உலகம் தமிழீழப் புலிகளை அவர்களுடைய போராட்டத்தை அங்கீகரிக்கிறது என்று பொருள். இங்கிருக்கிற ஒன்றையணா, மூன்றையணாக்கள் அங்கீகரிக்காவிட்டால் நமக்குக் கவலையில்லை. (கைதட்டல்) உலகம் அங்கீகரிக்கிறது. நீ அங்கீகரிக்காவிட்டால் எங்களுக்கு என்ன கவலை? விடுதலைப் புலி களுடைய அரசியல் ஆலோசகர், முதுபெரும் அரசியல் அறிஞர், வரலாற்று அறிஞர், தத்துவ அறிஞர் பாலசிங்கம் நலிந்த உடல்நிலையோடு அந்தக் குழுவிற்கு தலைமை ஏற்றுச் செல்கிறார்.

இந்த தமிழ்நாட்டில், அவருக்கு மருத்துவமனையிலே சிகிச்சை அளித்தால்கூட இங்கே நில அதிர்ச்சி வந்துவிடும் என்றார்கள். விட மாட்டோம் என்கிறார்கள். அந்த பால சிங்கம் தான் ஜெனிவாவில் புலி களின் குழுவுக்குத் தலைவர். புலிகளின் அரசியல் பிரிவு தலைவரும், நாள் தோறும் உலக பத்திரிகையாளர்களை கிளிநொச்சியில் சந்தித்துக் கொண்டிருக்கிறவருமான சுப. தமிழ்ச் செல்வன் ஜெனிவா போகிறார். ஈழத்திலே புலிகளின் காவல்துறை படையின் தலைவராக இருக்கும் நடேசன் பேச்சு வார்தைக்கு ஜெனிவாவுக்குப் போனார். நடேசன் வருகிறார் என்றவுடன் சிங்கள அரசு என்ன செய்தது தெரியுமா?

அவர்கள் போலீஸ் படை தளபதியை அனுப்புவதால் நாமும் போலீஸ் படை தளபதியை அனுப்புவோம் என்றார். புலிகளுக்கு கிடைக்கிற மரியாதை நமக்கு கொஞ்சம் கிடைக்கட்டுமே என்று ராஜபக்சே துடிக்கிறார். பேச்சு வார்த்தை நடத்துவதற்கே சிங்கள தீவிரவாத கட்சிகள் தடையாக உள்ளன. ராஜபக்சேயுடன் கூட்டணி வைத்த கட்சிகள் அவை. ‘ஆகா பேச்சா என்ன சொல்லி நாங்கள் ஆதரவு அளித்தோம். எப்படி நீங்கள் வாக்கு கேட்க வந்தீர்கள்?’ என்று கொதித்தார்கள். வாக்கு கேட்க வந்தவர்களை வாக்கு கேட்டு முடிந்த பிறகு யாராவது நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்களா? ராஜபக்சேவுக்கும் அது நினைவில்லை. ஆனால், சிங்கள தீவிரவாதிகள் நினைவு படுத்தினார்கள்.

நினைவு படுத்தியதற்கு பிறகு ராஜபக்சே சொன்னார், “நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். இந்த உலகம் பேசச் சொல்கிறது. நார்வே தூதர் வந்து விட்டார். ஜெனிவாவிலே பேசுவதற்கு பிரபாகரனும் ஒப்புக் கொண்டு விட்டார். எனவே பேசித்தான் ஆக வேண்டும், எதையாவது பேசுவோம்” என்றார். அதாவது பேச்சு வார்த்தைக்காகவே பேசுவது. அதில் ஒரு போதும் எந்த புரட்சியாளனுக்கும் இணக்கம் இருக்காது. அண்மையில் “தீக்கதிர்” ஏட்டில் ஈழத் தமிழின சிக்கல் குறித்து ஒரு கட்டுரை வந்து இருக்கிறது. அந்த கட்டுரையிலே வரலாற்றைத் தொகுப்பாக எழுதி விட்டு, கடைசியில் தமிழினச் சிக்கலுக்கு என்ன தீர்வு தெரியுமா? அமைதி வழியில் சமாதான தீர்வு வேண்டும் என்று விரும்புகிறோம் என்று முடித்திருந்தார்கள். இந்த “தீபாவளி” போனசிலேயே உங்களாலே சமாதான தீர்வு ஏற்படுத்த முடியவில்லை.

ஒரு இனத்தின் தேச விடுதலையில் சமாதான தீர்வு அமைதி வழியில் எப்படி நடக்கும்? (கைதட்டல்)

ஜெனிவா பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன?

இலங்கையில் ஏற்பட்ட ஆழிப் பேரலை துயரத்தில் 75 சதவீத துயரம் தமிழர்களைச் சார்ந்தது. அன்றைக்குக் கூட “இந்து”வின் கவனம் எதிலே இருந்தது தெரியுமா? “இந்து” கட்டம் கட்டி செய்தி போட்டது. ஆழிப் பேரலை செய்திகள் ஒரு பக்கம். கட்டம் கட்டிப் போட்ட செய்தி என்ன தெரியுமா? ‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?’ என்று செய்தி போட்டது! இதோ இந்த பிரபாகரனை இந்திய படையினர் வெல்ல முடியவில்லை. சிங்கள படையினால் வெல்ல முடியவில்லை. சிங்கள சூழ்ச்சி, பார்ப்பன சூழ்ச்சி, அமெரிக்க சூழ்ச்சி எதற்கும் இவனை ஒன்றும் செய்ய முடியவில்லை? ஆழிப் பேரலை விபத்திலாவது செத்துப் போக மாட்டானா என்ற ஆசையை “இந்து” ஆதங்கத்தோடு எழுதியது.

பிரபாகரன் சொன்னார் பன்னாட்டு உதவி அமைப்புகள் போடுகிற நிபந்தனைகளில் ஏற்க முடியாதவை எல்லாம் இருக்கின்றன. இருந்தாலும் இப்போது அதைப்பற்றி கவலை இல்லை. உடனடியாக எம் மக்களுக்கு உதவி கிடைக்க வேண்டும். எனவே பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் சுனாமி கட்டமைப்பை உருவாக்குவோம் என்றார். பல காலம் இழுத்தடித்து கட்டமைப்பை உருவாக்கினார்கள். கடைசியில் அந்த கட்டமைப்பை எதிர்த்து சிங்களர்கள் நீதி மன்றத்திற்குப் போய் அதை செயல்பட விடாமல் செய்தார்கள். இந்த நிலையில்தான் ஜெனிவா பேச்சு நடந்திருக்கிறது.

பேச்சு வார்த்தையில் இலங்கை குழுவினருக்கு தலைவர் யார் தெரியுமா? ஒரு பெரிய வழக்கறிஞர் பேச்சு வார்த்தையிலே போய் உட்கார்ந்த உடனே பாலசிங்கம் கேட்கிறார். யாரப்பா இவர்? முன் வரிசையிலே உட்கார்ந்து இருக்கிறார்? கடற்படை தளபதியோ பின்னாலே அமர்ந்திருக்கிறார். அந்தக் குழுவுக்குள்ளேயே போட்டி! யார் முன்னால் உட்காருவது என்று. சரி இருக்கட்டும் இவர் முன்னாலே உட்கார்ந்து இருக்கிறார். இவர் யார் என்று கேட்டால், சட்ட அறிஞர் என்கிறார்கள். அவர் தனது சட்ட அறிவை எப்படி பயன்படுத்தினார் தெரியுமா? நான்கு ஆண்டுகளாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிற போர் நிறுத்தத்தை, இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது என்று எழுதியவர் தான், பேசியவர் தான் இந்த சட்ட அறிஞர்.

அவர் எழுந்து பேச ஆரம்பித்த உடனே என்ன சொன்னார் தெரியுமா? உங்கள் மீது வழக்குகள் இருக்கிறது. யார் மீது? புலிகள் மீது. என்ன வழக்கு? யாழ்ப் பாண துரையப்பாவை நீங்கள் கொலை செய்து விட்டீர்கள் என்றார். உடனே பாலசிங்கம் சொன்னார், “அய்யா ஒன்றை தெரிந்துக் கொள்ளுங்கள். நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அந்த புத்தகத்திலேயே துரையப்பாவை நாங்கள் தான் கொன்றோம் என்று எழுதியிருக்கிறேன். ஒரு துரையப்பாவை அல்ல

உங்கள் ஆட்கள் 40 ஆயிரம் பேர் உயிரை நாங்கள் எடுத்திருக்கிறோம். அதுவல்ல இன்று பிரச்சினை. போர் நிறுத்தம் பற்றி பேசு என்று பாலசிங்கம் சொன்னார். அங்கே ஒரு அம்மையார் முஸ்லீம்களுடைய பிரதிநிதியாக இலங்கை அரசு குழுவிலே போனார். முஸ்லீம்களும் தமிழர்கள் தான். இலங்கையில் மூன்று இனங்கள் இருக்கிறது என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிங்கள அரசு அரங்கேற்றி வருகிறது. சிங்களர், தமிழர், முஸ்லீம் என்று பிரிக்கிறார்கள். அஸ்ரத் என்ற அந்த அம்மையார் எழுந்து சொல்லுகிறார் குழந்தைகளை எல்லாம் புலிகள் படைகளில் சேர்த்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். உடனே தமிழ்ச் செல்வன் சொன்னார், குழந்தைகள் கூட படையினில் சேர வேண்டிய சூழ்நிலைகளை யார் ஏற்படுத்தியது எண்ணிப்பார்?” என்று கேட்டார்.

விஜயரத்னே என்ற பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இருந்தார். அந்த பாதுகாப்பு அமைச்சர் சொன்னார், ‘புலிகள் சிறுவர்கள். இந்த சிறுவர்கள் சிங்களப் படைகளை பார்த்ததும் சிறுநீர் கழித்து விடுவார்கள்’ என்று சொன்னார். அதற்குப் புலிப் படையிலே இருந்து ஒரு சிறுவன் பதில் சொன்னான். ‘ஆமாம், நான் சிறுவன் தான், ஆனால் என் தாயை நேசிப்பதற்கு எவரும் எனக்கு சொல்லித்தரத் தேவையில்லை. நான் சிறுவனாக இருப்பதே போதும்’ என்று அவன் பதில் சொன்னான்.

பாலஸ்தீன போராட்டத்தில் இஸ்ரேலுடைய டாங்கிகள், பீரங்கிகளை எதிர்த்து, மேற்கு கரையிலும் காசா பகுதியிலும் கல்லெடுத்து அடித்த பாலஸ்தீன சிறுவர்களை தெரியுமா உங்களுக்கு? உலகத்தில் நடந்த முதல் பாட்டாளி வர்க்க புரட்சி 1870 பாரீஸ் கம்யூன் புரட்சி அதுபற்றி லெனின் எழுதுகிறார்.

“இந்த பாரீங் கம்யூன் புரட்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது அவர்கள் வீட்டு பெண்களும், குழந்தைகளும் தெருவுக்கு வந்து இராணுவத் தோடு போரிட்டார்கள்” என்று பெருமையோடு எழுதுகிறார். ஈழத்தில் நடப்பது தேசிய விடுதலை போராட்டம். தேர்தலில் ஓட்டு போடுவது அல்ல, வயது பார்ப்பதற்கு! இது விரல் மேல் ‘மை’ குத்திக் கொள்கிற போராட்டம் அல்ல; நெற்றியிலே ரத்தத் திலகமிடும் போராட்டம் என்பது நினைவிருக் கட்டும். (கைதட்டல்)

பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே ஜெனிவாவில் புலிகள் முன் வைத்த முக்கிய கோரிக்கை. இதனுடைய பொருள் என்ன? மற்ற ஆயுத குழுக்களின் ஆயுதங்களை களைய வேண்டும். கருணா என்ற துரோகியை பாதுகாத்து கையிலே ஆயுதம் கொடுத்து போராளிகள் மீது பொதுமக்கள் மீது அமைதியை நேசிக்கிற அரசியல்வாதிகள் மீது, வன்முறையை ஏவிக் கொண்டிருக்கிற கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும், என்று புலிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இலங்கைக் குழு சொன்னது - நாம் சண்டை நிறுத்த ஒப்பந்தம் என்று போட வேண்டாம். சண்டை நிறுத்தம் என்று போட்டால் போதும் என்றார்கள். நார்வே தூதர் எரிக்சோல்ஹைம் சொன்னார், ‘அப்படிப் போடுவதை விட பேசாமல் சண்டை என்றே போட்டு விடலாம்’ என்று சொன்னார். அதன் பிறகுதான் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று எழுதியே இரு தரப்பும் கையெழுத்துப் போட்டனர்; சிங்கள பேச்சு வார்த்தைக் குழுவின் திட்டங்கள் இதன் மூலம் தோல்வி அடைந்தன.

பேச்சு வார்த்தை முடிந்ததற்குப் பிறகு சுவிட்சர்லாந்தில் ஒரு மிகப் பெரிய தமிழர் கூட்டத்திலே புலிகள் அரசியல் பிரிவைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் பேசினார். தலைப்பு என்ன தெரியுமா? விடுதலையின் வாசலில்! ஆம்; தமிழ் ஈழம் வாசலில் நின்று கொண்டிருக்கிறது. அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தமிழ்ச் செல்வன் மிகத் தெளிவாக சொன்னார். வாசலில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே விரைவில் விடுதலைப் போரில் நாங்கள் நுழையப் போகிறோம். அதற்கு நீங்கள் அணியமாகுங்கள் என்றார்.

புலிகள் மீதான தடை; பயமுறுத்துகிற பயங்கரவாதச் சட்டம்; பொய் வழக்குகள்; எதனாலும் ஈழ விடுதலை மலர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அமெரிக்க தூதரின் மிரட்டலின் விளைவாக தமிழகம் எழுச்சி பெற்றிருக்கிறது. தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு துணை நிற்கிற அந்த உணர்வோடு நம்முடைய தமிழ் மக்களுக்கென்று உலக அரங்கிலே முதற்கொடி பறப்பதற்கு வழி வகுக்கிற அந்த ஊக்கத்தோடு நம்முடைய முயற்சியை தொடருவோம்.

- இவ்வாறு தியாகு தனது உரையில் குறிப்பிட்டார்.

தகவலுக்கு நன்றி தம்பியுடையான்............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலிற்கு நன்றி தம்பியுடையான்.

அய்யோ பிரபாகரனுக்கு இவ்வளவு கூட்டமா என்று! அப்படி ஒரு செல்வாக்கோடு பெருமித நிலை யிலே இருந்து கொண்டு பிரபாகரன் பேசினார். அதே போல்தான் ஜெனிவாவிலும் இப்போது பேச்சு வார்த்தை நடக்கிறது. எந்த இடம்? சுவிட்சர் லாந்தினுடைய தலைநகரம். சுவிட்சர்லாந்தினுடைய தேசியக் கொடி என்ன தெரியுமா? செஞ்சிலுவை சங்கத்தினுடையது.

சுவிற்சலாந்தின் தலைநகரம் பேர்ண். (Berne)

சுவிஸின் கொடி செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியல்ல.

Swiss flag

swiss_flag_reduced.jpg

Red cross flag

flag.jpg

http://www.informatics.org/redcross/history.html

இணைப்புக்கு நன்றி தம்பியுடையான்.

சுவிற்சலாந்தின் தலைநகரம் பேர்ண். (Berne)

சுவிஸின் கொடி செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியல்ல.

Swiss flag

swiss_flag_reduced.jpg

Red cross flag

flag.jpg

http://www.informatics.org/redcross/history.html

அட கலரை மாத்திவிட்டாச் சரியே :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினை அடையாளப்படுத்தும் மேலும் இரண்டு குறியீடுகள் கீழுள்ள இணைப்பில்

http://en.wikipedia.org/wiki/International...escent_Movement

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.