Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு தேர்தலில் கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்பு - ஓர் இறுதி அவதானம் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு தேர்தலில் கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்பு - ஓர் இறுதி அவதானம் - யதீந்திரா

வடக்குத் தேர்தலில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு, பிரதான தமிழ் அரசியல் அமைப்பான, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே காணப்படுகிறது. அரசதரப்பு வேட்பாளர்களும் தங்களது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வேட்பாளரது வெற்றி என்பது, அவர் பெறும் விருப்பு வாக்குகளில் தங்கியிருப்பதால், கட்சி, கொள்கை என்பவற்றுக்கெல்லாம் அப்பால், ஒவ்வொரு வேட்பாளரும் தாங்களும் வெற்றியாளர்கள் வரிசையில் இடம்பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் இதற்கு எவ்வாறு விதிவிலக்காக இருக்க முடியும்.

கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியினது வேட்பாளர்களும் தங்களது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். போட்டியென்றால் முன்னுக்குப் போக வேண்டும் என்னும் அக்கறை இருப்பது இயல்பான ஒன்றே. அந்தவகையில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தங்களது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால் அவ்வாறான விருப்புவாக்குப் போட்டி, இறுதியில் கூட்டமைப்பிற்கான ஒட்டுமொத்த வாக்கு வங்கியை பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. இது குறித்து முன்னரும் இப்பத்தி எச்சரித்திருக்கின்றது.

அந்தவகையில் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியை எவ்வாறான காரணிகள் தீர்மானிக்கக் கூடுமென்று பார்ப்போம். ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியென்பது வெறுமனே அக்கட்சியின் கொள்கையில் அல்லது அக்கட்சிக்கு இருக்கும் நற்பெயர் என்பவற்றின் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக அக்கட்சி நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள், அவர்களது சமூகச் செல்வாக்கு ஆகியவற்றிலும் தங்கியிருக்கிறது. அந்த வகையில் வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றியில் எத்தகைய காரணிகள் செல்வாக்குச் செலுத்தக் கூடுமென்று பார்ப்போம். வடக்கு மாகாணசபை தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, வடக்கு மாகாணசபை ஒன்றுதான் இன்றைய சூழலில், தமிழ் மக்களின் சார்பில் அரசாங்கத்துடன் பேரம் பேசுவதற்கானதொரு தளமாக இருக்கிறது. ஜனநாயக அரசியலில் உரிமைகள் சார்ந்து அரசியலை கையாள வேண்டுமாயின் அதற்கு பேரம் பேசலுக்கான தளமொன்று அடிப்படையானதாகும்.

யுத்த காலத்தில் யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கக் கூடியவர்களே பேரம்பேசும் சக்திகளாகவும் இருப்பர். யுத்த வெற்றிதான் அங்கு பேரம் பேசுவதற்கான தளமாகவும் அமைந்திருக்கும். இந்தக் கணிப்பை நான்கு வருடங்களுக்கு முன்னரான நிலைமையோடு ஒப்பிட்டு நோக்கினால், தமிழ் மக்கள் சார்பில் பேரம் பேசும் சக்தியாக விடுதலைப்புலிகளே இருந்தனர். அன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்கிநின்று நோக்கும் ஓர் அமைப்பாகவே இருந்தது. விடுதலைப்புலிகளின் அழிவிற்கு பின்னர் அவ்வாறு ஒதுங்கிநின்று பார்த்துக் கொண்டிருந்த கூட்டமைப்பே, தமிழ் மக்கள் சார்பில் பேரம் பேசல் அரசியலை கையாள வேண்டிய ஒரேயொரு தலைமையாக வெளித்தெரிந்தது. ஆனால் எதனைக்கொண்டு பேரம்பேசுவது? வெறும் மக்களின் தேர்தல்கால ஆதரவு என்னும் ஒன்றை வைத்துக்கொண்டு பேரம் பேசலில் ஈடுபட முடியுமா? இங்கு பேரம் பேசல் என்பது, அரசாங்கத்துடனும், சர்வதேச சக்திகளுடன் பேரம் பேசுதல் என்னும் பொருள் கொண்டதாகும். விடுதலைப்புலிகளின் அழிவிற்கு பின்னர், தற்செயலாக தமிழர்களின் அரசியல் தலைமையாசனத்தில் அமர்ந்து கொண்ட கூட்டமைப்பிற்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் இருந்தன. ஒன்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்நிறுத்தி சாத்வீகப் போராட்டமொன்றை முன்னெடுப்பது. எனது நண்பர் ஒருவர் இதனை தடுப்புக் காவல் அரசியல் என்பார். இரண்டு, கைவிடப்பட்ட மாகாணசபை முறைமையை ஒரு தளமாகப் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்வது.

ஆனால், முதலாவது தெரிவு மிகவும் கடினமானது. அத்துடன் அது மிகவும் சவாலானதும் ஆகும். தடுப்புக்காவல் அரசியல் என்பது, காலவரையறையற்ற சாத்வீகப் போராட்டத்தை மேற்கொள்வதன் மூலம் சிறை செல்லுதல். அதற்காக இறந்து போகவும் தயாராக இருக்க வேண்டும். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், மீண்டும் போராட்டத்தை தொடர்வது, மீண்டும் சிறை செல்வது. இலக்கை எய்தும் வரை அந்த நிலைமையை தொடர்வது. ஆனால் இது எழுதுவது போன்று அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. ஆயுதத்துடன் இருப்பதற்கான துணிவைவிட, அதிகளவான துணிவு இதற்குத் தேவை. இது காந்திய வழிமுறை. ஆனால் இதற்கான தற்துணிவு கூட்டமைப்பிடம் இருந்திருக்கவில்லை. இன்றுமட்டுமல்ல, கடந்த அறுபது வருடங்களில் எந்தவொரு மிதவாத தலைவரிடமும் அப்படியொரு துணிச்சல் இருந்திருக்கவில்லை. அத்தகைய சாவதற்கான துணிச்சலுடன் மிதவாதிகள் சாத்வீகத்தை முன்னெடுத்திருந்தால், இன்று பலர் நம்மத்தியில் இருந்து கொண்டிருக்கமாட்டார்கள்.

எனவே இது தொடர்பில் கூட்டமைப்பினரை எவரும் கண்டிக்க முடியாது. ஏனெனில் கூட்டமைப்பில் உள்ள எவரும் அத்தகையதொரு அரசியலில் அனுபவம் உள்ளவர்கள் இல்லை. கூட்டமைப்பினர் மட்டுமல்ல, ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளில் உள்ளோர் எவருமே அத்தகையதொரு தியாக அரசியலுக்கு தயாராக இல்லை. இத்தகையதொரு பின்புலத்தில்தான் கூட்டமைப்பு 13வது திருத்தச் சட்டத்தை நோக்கி நகர்ந்தது. அதனை கையாளுவதன் மூலம், அரசுடன் பேரம் பேசுவதற்கான தளமொன்றை உருவாக்க முயன்று வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டே, இப்பத்தி மேற்படி தேர்தலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்று குறிப்பிடுகிறது. ஏனெனில் இதனைத் தவிர்த்தால் அரசியலை செய்வதற்கான வேறு வழி எதுவும் கூட்டமைப்பிடம் இல்லை. அரசியல் பேசுவது என்பதும், அரசியல் செய்வது என்பதும் முற்றிலும் வேறான ஒன்றாகும்.

இரண்டாவதாக, எவ்வாறானதொரு காரணி வடக்குத் தேர்தலில் செல்வாக்குச் செலுத்த முடியுமென்று பார்ப்போம். வடக்கு தேர்தல் களத்தில் சிரேஸ்ட தமிழ் தலைவர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர். இது மக்கள் மத்தியில் வடக்குத் தேர்தலின் கூடுதல் முக்கித்துவத்தை உணரச் செய்யலாம். கூட்டமைப்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு அடுத்த நிலையில் சிரேஸ்ட தலைவராக கணிக்கப்படும் தர்மலிங்கம் சித்தார்த்தன் இத் தேர்தலில் போட்டியிடுகின்றார். அத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி போட்டியிடுகின்றார். சித்தார்த்தன் திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட முக்கிய தலைவர்களில் ஒருவராவார். இது பலரும் அறியாத ஒன்று. 1985ஆம் ஆண்டு, இந்தியாவின் ஏற்பாட்டில் பூட்டான் தலைநகரான திம்புவில், யூலை மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்படி பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியில் திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட அனுபவத்துடன் இருவர் மட்டுமே தற்போது இருக்கின்றனர். ஒன்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றையவர் சித்தார்த்தன் ஆவர். சித்தார்த்தன் மேற்படி பேச்சுவார்த்தையின்போது குறிப்பிட்டிருந்த விடயமொன்று அப்போது முக்கியமாகப் பேசப்பட்டது. அதாவது, 'திம்பு பேச்சுவார்த்தை ஒன்றுதான் தமிழ் தலைமைத்துவம் ஒன்றுமையுடன் செயற்படுவதற்கான ஒரேயொரு இடமாக இருந்தது. ஏனெனில், நாங்கள் எங்களுக்குள் சண்டை பிடித்துக்கொண்டு, குழப்பும் நோக்கில் பேச வேண்டும் என்பதே அவர்களது (அரசாங்க தூதுக்குழுவினர்) எதிர்ப்பார்ப்பாகும், எனவே நாங்கள் ஒவ்வொரு நகர்வையும் கவனமாக திட்டமிட வேண்டும். (Thimpu talks were the only occasion the Tamil leadership acted in unison; they (Government Delegation expected us to quarrel among us and speak at cross purposes. We planned every move very carefully) மேற்படி திம்பு பேச்சுவார்த்தையின் விளைவாகவே தமிழர்கள் இலங்கையின் தனித்துவமானதொரு மக்கள் கூட்டமென்பது முதல் முதலாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் அத்தகைய தனித்துவமான இனமான தமிழ் மக்கள் இலங்கையில் சுயநிர்ணய உரிமையை கோருவதற்கான தகுதிநிலையை கொண்டிருக்கின்றனர் என்பதும் இதன்போதே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதுவரை இயக்கங்கள் மத்தியிலும், மிதவாத தலைவர்கள் மத்தியிலும் வெறும் உச்சரிப்புக்களாக இருந்த அனைத்து விடயங்களையும், ஓர் அரசியல் வடிவமாக வார்த்தெடுப்பதற்கான உலைக்களமாக மேற்படி திம்பு பேச்சுவார்த்தையே அமைந்திருந்தது. இன்று நாம் உச்சரிக்கும் தேசம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய அனைத்தையும் பிரசவித்தது இந்த திம்பு பேச்சுவார்த்தை என்னும் தாய்தான். அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனைப் பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட ஒருவர் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதானது, மாகாணசபை முறைமையை மேலும் பலப்படுத்திச் செல்வதற்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாகும். ஏனெனில் இந்தியாவையும் கொழும்பையும் சமநேரத்தில் கையாளக்கூடிய ஆற்றல் சித்தார்த்தன் போன்ற தலைவர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே வடக்கு மாகாணசபை தேர்தலில் இத்தகைய சிரேஸ்ட தலைவர்கள் நேரடியாக போட்டியிடுவதானது கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் முக்கிய செல்வாக்கைச் செலுத்தக் கூடும்.

மூன்றாவது, இத் தேர்தலானது யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில், தங்களது முதலமைச்சரை சுயாதீனமாக தெரிவு செய்வதற்கு கிடைத்திருக்கும் முதலாவது சந்தர்ப்பமாகும். எனவே இதனை அவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கடந்து சிந்திப்பதற்கான வாய்ப்பே அதிகமுண்டு. கூட்டமைப்பின் மீது விமர்சனங்கள் இருப்பினும் கூட, அவற்றை தவிர்த்து கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் உணர்வு மேலிட வாய்ப்புண்டு. இதற்கு காரணம், யுத்தம் நிறைவுற்று நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, யுத்த வெற்றிக்கு சொந்தமான அரசாங்கமானது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய முற்படவில்லை என்னும் கருத்தே யாழ் மக்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளவற்றைக் கூட இல்லாமலாக்கும் ஒரு முகத்தையே அரசாங்கம் காண்பித்து வருகிறது.

எனவே வடக்கு மக்களைப் பொறுத்தவரையில், இவ்வாறான அரச அத்துமீறல்களின் மீதான எதிர்ப்பை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் மேற்படி தேர்தலே காணப்படுகிறது. ஜனநாயக அரசியலில் சாதாரண மக்கள் தங்களது அதிருப்திகளையும், கோபங்களையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பானது தேர்தல்களின் போது மட்டுமே கிடைக்கிறது. அந்தவகையில், இந்த தேர்தலை யாழ்ப்பாணத்து மக்கள் தங்களது அதிருப்தியை அடையாளப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான சூழலே தென்படுகிறது. இந்த விடயமே, நடைபெறவிருக்கும் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குகளை தீர்மானிக்கப் போவதில் முக்கியமாக செல்வாக்குச் செலுத்தும். இம்முறை வழக்கத்திற்கு மாறாக, கொழும்பை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் யாழ்ப்பாணத்து தமிழ் மக்கள் கூட, வடக்குத் தேர்தலில் பிரத்தியேக அக்கறையை காண்பிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதற்கான ஓர் அடித்தளத்தையும் சித்தார்த்தனே ஆரம்பித்து வைத்திருக்கின்றார். சமீபத்தில் கொழும்பில் பல்வேறு தரப்பினர்கள் அடங்கிய மக்கள் குழு ஒன்றுடன் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த சித்தார்த்தன், கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன், வடக்கு தேர்தல் என்பது வடக்கிற்குரியது மட்டுமல்ல, எங்கெல்லாம் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் சிதறிக் கிடக்கின்றனரோ, அவர்கள் அனைவருக்குமுரிய தேர்தலாகும் என்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டிருக்கின்றார். சித்தார்த்தனின் இப்புதிய அணுகுமுறையானது கொழும்பு வாழ் யாழ்ப்பாணத்து மக்களை சிந்திக்கத் தூண்டியிருக்கலாம்.

பொதுவாக வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் தேர்தல்களின் போது, கொழும்புவாழ் வடக்கு மக்களின் கருத்துக்கள் பெரியளவில் பொருட்படுத்தப்படுவதில்லை. அந்த போக்கை தற்போது சித்தார்த்தன் மாற்றியமைத்திருக்கின்றார். சித்தார்த்தனின் மேற்படி முயற்சி, வடக்கு தேர்தலின் போது தாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்னும் எண்ணத்தை கொழும்புவாழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. கொழும்பை சேர்ந்த நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில் மேற்படி நகர்வு கூடுதல் முக்கியத்துவம் பெறலாம்.

ஒட்டுமொத்தமாக நோக்கினால், வடக்கு தேர்தலில் மக்கள் கூடுதல் ஆர்வம் காட்டுவதற்கு மேற்குறிப்பிட்டவாறான பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஏதுநிலை காணப்படுகிறது. இவ்வாறான காரணங்களே கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியையும் தீர்மானிக்கப் போகின்றது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=340d7f6e-0e7f-4823-96ab-92da9e9ee46d

எல்லோரும் விருப்பு வாக்கை அதிகரிப்பதற்காக பல வழிமுறை கையாள்வது பற்றி சொல்லி ஆரம்பிக்கின்ற கட்டுரை, கடைசியில் சித்தார்த்தனுக்கு விருப்பு வாக்கை அதிகரிப்பதற்கான பரப்புரையாக முடிகின்றது.

எல்லோரும் விருப்பு வாக்கை அதிகரிப்பதற்காக பல வழிமுறை கையாள்வது பற்றி சொல்லி ஆரம்பிக்கின்ற கட்டுரை, கடைசியில் சித்தார்த்தனுக்கு விருப்பு வாக்கை அதிகரிப்பதற்கான பரப்புரையாக முடிகின்றது.

 

உண்மை. இவரது கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பீர்களானால் இக்கட்டுரையாளர் யதீந்திரா ஒரு நடுநிலையாளர் போல் தோன்றினாலும் ஒரு உள் நோக்குடன் கட்டுரைகளை வரைவது தெரியும். புலம் பெயர் தமிழர்களின் செயற்பாடுகளை வெறுக்கும் இவர் இலங்கையில் சட்டத்திற்கு முரணாக மகிந்த அரசு செய்யும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வன்மையான கண்டனங்களை என்றுமே  பதிவு செய்ததில்லை. சாக்கு போக்காக சிறிய கண்டங்களை நோகாது பதிவு செய்வார். ஆனால் விடுதலைப்புலிகளின் மீது முழு குற்றத்தையும் சுமத்தி அவர்களை ஒரு தீண்ட தகாதவர்களாக ஆக்குவது என்ற தனக்கு இடப்பட்ட முக்கிய கட்டளையை திறம்பட முன்னெடுத்துவருகிறார். அந்த ரீதியில் ஒரு சிறந்த உழைப்பாளி. விடுதலைபுலிகளின் செயற்பாடுகளில் தவறுகள் பல இருக்கலாம். அவர்களின் அரசியல் செயற்பாடுகளில் குற்றம் கண்டுபிடிக்கலாம். அதில் தவறு இல்லை. அவர்கள் செய்த தவறுகள் திருத்தப்படவேண்டும் என்பதலி்ல் எமக்குள் கருத்துவேறுபாடுகள் இல்லை. ஆனால் விடுதலைப்புலிகள் விடுதலைகாக உண்மையுடன் போராடிய விடுதலை வீர்ர்கள் என்பதை கருத்து வேடுபாடுகளை களைந்து எல்லோரும் ஏற்று கொள்ள வேண்டிய உண்மை.

 

ஒரு நாட்டில் சமுதாய மாற்றத்திற்காகவோ விடுதலைக்காகவோ போராடி மடிந்த அல்லது அம்முயற்சியில் தோல்வியடைந்த நாயகர்களை குறிப்பிடும்போது குறிப்பிட்ட அவ்வியக்கத்தின் வீழ்ச்சி என்றே வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்வது உண்டு. ஏனென்றால் குறிப்பிட கொள்கைக்காக போராடி மடிந்தவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் கெளரவம் அதற்காக அவர்களின் எல்லாகொள்கைகளையும் வரலாற்று ஆசிரியர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதில்லை. கொள்கைக்காக உயிர் துறந்த போராளிகளுக்கு கொடுக்கும் கெளரவம் அது. யதீந்திராவின் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பீர்களானால் விடுதலைபபுலிகளின் அழிவு என்ற வார்த்தையை வலிந்து பல தடவை பாவித்திருப்பார். ஈழ வரலாற்றில் முக்கிய பாத்திரத்தை வகித்த விடுதலை புலிகளின் தவறுகளை விமர்சனக்கண்ணோடத்தில் பார்ப்பது என்பது வேறு. அவர்களின் போராட்ட வீழ்ச்சியை, அழிவு என்று கொச்சைபடுத்துவது வேறு என்பது எல்லாம் தெரிந்ததாக தன்னை காட்டிக்கொள்ளும் யதீந்திராவுக்கு தெரியாததல்ல. தெரிந்தே வேண்டுமென்றே இத்தவறை அவர் செய்வது அவரின் கட்டுரைகளை வாசிக்கும் போது புரியும்.

 

இவரது ஒரு கட்டுரையில்  டக்லஸின் ஒரு செயற்பாட்டை பாராட்ட  ஒரு பந்தியை ஒதுக்கியுள்ளார். இத்தனைக்கும் விடுதலைபுலிகள் இருந்த தபோது அவர்களை ஆதரித்து எழுதியவர் என்று அறிகிறேன். உணமை தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.