Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் போட்ட முதலீட்டை கூட்டமைப்பு அழிக்கின்றதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போட்ட முதலீட்டை கூட்டமைப்பு அழிக்கின்றதா?

முத்துக்குமார்

வட மாகாணசபை தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மேலான வெற்றியை கொடுத்துவிட்டன. அரசியல்வாதிகள் தமது கடமைகளில் சுத்துமாத்துக்களை செய்தாலும் மக்கள் தமது கடமைகளை நேர்மையாகவே வரலாற்றில் செய்திருக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மீள ஒருதடவை அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தோடு நாங்கள் உறுதியாக நிற்கின்றோம் என்பதை இதனைவிட வேறு வழிகளில் மக்களால் வெளிப்படுத்தியிருக்க முடியாது.

உலக வரைபடத்தில் இலங்கைத் தீவினை அடையாளங்காண்பதே மிகவும் கடினம். ஒரு சிறிய புள்ளிபோன்றே அது இருக்கும். அதிலும் வடமாகாணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. இன்று வடமாகாணம் ஐக்கியநாடுகள் சபையின் கதவுகளைக்கூட தட்டியிருக்கின்றது. தேர்தல் முடிவு பற்றி எழுதாத உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகைகள் இல்லை என்றே கூறலாம்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் 13வது திருத்தம், மாகாணசபைத் தேர்தல் என்பன தமிழ் மக்களுக்கு இரண்டாம் பட்சமே. தமிழ்த் தேசியவாதத்திற்கும் பேரினவாத ஆக்கிரமிப்பிற்கும் இடையிலான ஒரு போர் என்பதே மேல்நிலையில் இருந்தது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் கோபாவேசத்தை மக்கள் கொட்டித் தீர்த்திருக்கின்றனர்.

அபிவிருத்தியும் அடக்குமுறைகளும் மக்களின் வாயைப் பொத்த வைக்கும் என நம்பிய ஆட்சியாளர்களுக்கு இது பேரிடிதான். சீனச் சூத்திரம் அந்நாட்டிலேயே எடுபடாதபோது இங்கு பலனளிக்கும் என நம்பியது ஆட்சியாளர்களின் அறிவீனம். உய்பூர் முஸ்லிம் மக்களினதும் திபெத் மக்களினதும் தனித்துவமான தேசிய உணர்வை அடக்குவதற்கு சீன ஆட்சியாளர்கள் அபிவிருத்தியும் அடக்குமுறையும் என்ற சூத்திரத்தை கையாண்டனர். ஆனால் அந்த மக்கள் அதனை எல்லாம் தூக்கி எறிந்தனர். அங்கு கொட்டிய அபிவிருத்தி நிதிகளில் ஒரு துளிகூட வடமாகாணத்தில் கொட்டப்படவில்லை என்பது வேறு கதை. இங்கும் மக்கள் இவற்றை தூக்கி வீசினர்.

இப்போதுள்ள கேள்வி மக்கள் தங்கள் கடமைகளைச் செய்துவிட்டனர். கூட்டமைப்பினர் மக்கள் தந்த ஆணையை முன்னெடுப்பார்களா? கூட்டமைப்பினர் தமது ஆரம்பப் பிரச்சாரங்களை மாகாண சபை மூலம் தேனும் பாலும் கிடைக்குமென கூறியிருந்தாலும் பின்னர் அதனை கைவிட்டு தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்விற்காக இராஜதந்திரப் போரை நடாத்தப்போவதாகவே முழக்கமிட்டனர். மூன்றாம்கட்ட ஈழப்போர் எனவும் விக்னேஸ்வரன் கர்ச்சித்தார். ஆனால் அதனை அடைவதற்கான வரைபடப்பாதை பற்றி அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. வெறும் மொட்டையாக இராஜதந்திரப் போர் என்றே குறிப்பிட்டனர்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் ஒரு சாம்பாராக இருந்தது. ஒன்றிற்கொன்று முரண்படும் கருத்துக்களே அதிகமாக இருந்தன. ஒரு பக்கத்தில் தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற முழக்கங்கள் இருந்தன. மறுபக்கத்தில் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் வெறும் நிர்வாகப் பரவலாக்கலையே கொண்டிருந்த மாகாணசபைமுறை பற்றி பலத்த நம்பிக்கைகள் கொடுக்கப்பட்டன. இன்னோர் பக்கத்தில் சுயநிர்ணயமுடைய பகிர்வு இறைமை பற்றியும் கூறப்பட்டிருந்தது. பகிர்வு இறைமைக்குள் சுயநிர்ணயம் எப்படி இருக்க முடியும் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

பகிர்வு இறைமை என்பதன் அர்த்தமே இறைமை இன்னொருவரிடத்தில் உள்ளது. அதனை கேட்டு வாங்கி பங்கீடு செய்துகொள்வது என்பதுதான். இறைமை கேட்டுவாங்கிப் பெறுவதல்ல அது தமிழ் மக்களிடம் ஏற்கனவே உள்ளது. இங்கு கூட்டு இறைமை என்ற சொற்பதத்தையே பயன்படுத்தியிருத்தல் வேண்டும். அதாவது சுயநிர்ணய உரிமையின்படி தமிழ் மக்களது இறைமை தமிழ் மக்களிடம் உள்ளது. சிங்கள மக்களின் இறைமை சிங்கள மக்களிடம் உள்ளது. இரண்டு தரப்பும் தங்களது இறைமையைக் கூட்டி இலங்கை என்ற அரசினை உருவாக்குவோம் என்ற வகையிலேயே தமிழ் தரப்பினது கொள்கை நிலைப்பாடு அமைந்திருக்க வேண்டும்.

கூட்டமைப்பு என்னதான் தேசியம், சுயநிர்ணயம், இராஜதந்திரப் போர் என முழக்கமிட்டிருந்தாலும் கூட்டமைப்பு தலைமையிடமும் அவர்களுக்கு ஆணையிடும் இந்திய எஜமான்களிடமும் இருக்கும் இலக்கு 13வது திருத்தத்திற்குள் தமிழ் அரசியலை முடக்குவதுதான். ஆனால் அந்த இலக்கிற்கு தேர்தல் முடிவு வந்த ஒருசில தினங்களுக்குள்ளேயே சிறிலங்கா அரசு கொள்ளி வைத்துவிட்டது. கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கு கன்னத்தில் அறைந்தால் போல் பதிலடியாக காணி அதிகாரம் மத்திய அரசிற்கு உரியது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இந்தத் தீர்ப்புப் பற்றி இந்திய எஜமான், வட - கிழக்கு பிரிப்புப் போல இதுவரை வாயே திறக்கவில்லை.

எனது நண்பன் கூறினான், 'தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க தமிழ் அரசியல்வாதிகளை நம்பாவிட்டாலும் ஜனாதிபதியை நம்பலாம்'. அவனது கூற்று உண்மையாகி உள்ளது போலவே தெரிகின்றது. வருகின்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் சில ஆசனங்களையாவது கைப்பற்றுவதற்கு இந்திய காங்கிரஸ் கட்சி, வடமாகாண சபையையே நம்பியிருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது தமிழ் மக்களை விட தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியினர்தான் துள்ளிக் குதித்தனர். உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவர்களுடைய மகிழ்ச்சியிலெல்லாம் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது.

விக்னேஸ்வரன் தென்னிலங்கையை எவ்வளவுதான் தாஜாபண்ண முயற்சித்தாலும் மகிந்த அரசு அசைந்து கொடுக்கப்போவதில்லை. அவர் தென்னிலங்கைப் பத்திரிகைகளுக்கு அரசாங்கத்தின் முதலமைச்சர் போலவே பேட்டி கொடுக்கின்றார் என விமல் வீரவன்ச கிண்டலடிக்கும் அளவிற்கு அவரது தாஜாபண்ணல் அமைந்திருந்தது. இதன் உச்ச நிலையாக பெரும்பான்மை மாகாணசபை உறுப்பினர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தபோதிலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுப்பதற்கு கூட்டமைப்பின் தலைமை முடிவெடுத்திருக்கின்றது.

இணக்க அரசியல் என்பது சமபல நிலையில் இருதரப்பும் விட்டுக்கொடுத்து செயற்படுவதுதான். இங்கு அரசு எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை. கூட்டமைப்பினர் மட்டும் விட்டுக்கொடுக்க தயாராகி வருகின்றனர். இது ஒருவகையில் சரணாகதி அரசியலே. தமிழ்த் தரப்பிற்கு போரின் பின்னர் சம வலிமை இருக்கவில்லை. தற்போது மக்கள் தேர்தல் மூலம் அந்த வலிமையை கொடுத்திருக்கின்றனர். சர்வதேச ஆதரவும் அதற்கு மேலதிக வலிமையைக் கொடுத்திருக்கின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பு வலிமையான பேரம்பேசும் அரசியலை நடாத்த வேண்டுமே தவிர, சரணாகதி அரசியலை நடாத்த முற்படக்கூடாது. அரசு தேர்தல் முடிந்த சில தினங்களிலேயே காணி அதிகாரத்தைப் பறித்து இணக்க அரசியலுக்கு தயாரில்லை என்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இது தவிர தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தலில் ஆதரவாக நின்றவர்களை தேடித் தேடி தாக்கி வருகின்றது. இவை எல்லாம் இணக்க அரசியலுக்கு தயாரில்லை என்ற சைகைகளே.

மகிந்தர் அரசினைப் பொறுத்தவரை சட்டரீதியான உரிமைகள் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதை அறவே விரும்பவில்லை. தான் வழங்கும் பிச்சையை மட்டும் பெற்றுக்கொண்டு அடங்கிவிட வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றது. காணி அதிகாரப்பறிப்புக்குப் பின்னால் உள்ள அரசியல் இதுதான். நீங்கள் கேட்பதையெல்லாம் தர முடியாது. நாம் விரும்பியதை மட்டுமே தருவோம் என்பதுதான் அந்த அரசியல். இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு விக்கினேஸ்வரன் பிச்சைப் பாத்திரத்துடன் மகிந்தரின் கூடாரத்திற்கு முன்னால் காத்திருப்பதுதான் மிகப்பெரிய சோகம். அவர் தமிழ் மக்களை திருப்திப்படுத்துவதை விட தனது சிங்கள நண்பர்கள் முகங்கோணக்கூடாது என்பதில் தான் மிகவும் கவனமாக இருக்கின்றார். இதுதான் அவரது அணுகுமுறையென்றால் அடிமைகளாக இருப்பதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இருக்கப்போவதில்லை.

வட மாகாணசபை பெரிதாக சாதித்துவிடும் என்று நினைத்தால் அதைவிட பெரிய முட்டாள்தனம் எதுவுமிருக்க முடியாது. தற்போதைய நிலையில் மாகாணசபை இரண்டு விடயங்களுக்கு மட்டுமே உதவக்கூடியதாக இருக்கும். அதில் ஒன்று, சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதுவும் தரப்போவதில்லை என்பதை தோலுரித்துக் காட்டுவதாகும். இரண்டாவது, மாகாணசபையை ஓர் அரசியல் களமாகப் பயன்படுத்துவதாகும். விக்னேஸ்வரன் வழியில் அரசியலை நடாத்துவது எனத் தீர்மானித்தால் இரண்டு பணிகளையும் மேற்கொள்ள முடியாது.

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்தத் தீர்ப்பு முஸ்லிம் அரசியலையும் பலத்த நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரசிற்கு எதையாவது செய்யவேண்டும் என்ற நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இதன் விளைவுதான் கிழக்கு மாகாணசபையில் 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானம். இதுவரை காலமும் எதிர்க்கட்சித் தலைவர் என ஒருவர் இருக்கின்றார் எனத் தெரியாமல் இருந்த தண்டாயுதபாணியும் முஸ்லிம் காங்கிரசின் இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுத்திருக்கின்றார்.

13வது திருத்தம் தமிழ் முஸ்லிம்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் தீர்க்கப்போவதில்லை என்பது உண்மையாக இருந்தாலும், அரசுக்கெதிராக முஸ்லிம் காங்கிரஸ் போராட வெளிக்கிட்டமை சாதகமான அறிகுறியாகும். கிழக்கில் முஸ்லிம் காணிப் பறிப்புகளுக்கு எதிராகவும் குறிப்பாக புல்மோட்டை காணிப்பறிப்புக்கு எதிராகவும் போராடப் போவதாக முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்துள்ளது. இவையெல்லாம் நல்ல அறிகுறிகளே. இந்தத் தொடக்கம் எதிர்காலத்தில் தமிழ்-முஸ்லிம் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு தெளிவான பாதையைத் திறந்துவிடும்.

இதற்கு தமிழ்த் தரப்பிலிருந்து முஸ்லிம்கள் தொடர்பாக வலுவான கொள்கை நிலைப்பாடு தேவை. புளித்துப்போன தமிழ்பேசும் மக்கள் என்ற கொள்கை நிலைப்பாடு இதற்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. இந்த வகைப்பாட்டுக்குள் வருவதற்கு முஸ்லிம்கள் தயாராக இல்லை. அவர்கள் தங்களை தனியான இனமாகவே கருதி வருகின்றனர். இதற்கு மேல் தமிழ்-முஸ்லிம் விவகாரத்தை இரண்டு தேசிய இனங்களுக்கு இடையிலான விவகாரமாக கருத வேண்டுமே தவிர எமது கமண்டலத்திற்குள் அவர்களை அடக்க முற்படக்கூடாது.

மாகாணசபைகளுக்கு சுய நிதி வருவாய்க்கான பாதைகள் எதுவுமில்லை. எல்லாமே அடைக்கப்பட்டாயிற்று. மத்திய அரசின் ஒதுக்கீடுகளும் வெளிநாட்டு உதவிகளும் மட்டும்தான் வருவாய்களுக்கான வாய்ப்புக்கள். வெளிநாட்டு உதவிகள் கூட மத்திய அரசுக்கூடாக வரவேண்டுமே தவிர நேரடியாக வர முடியாது. புனர்நிர்மாணச் செயற்பாடுகளுக்குக்கூட மகிந்தரின் அருட்கடாட்சத்தை வேண்டி நிற்கவேண்டிய நிலை. இந்த தண்டச் சோறு நிலை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சுயாட்சியை ஒருபோதும் கொண்டுவந்து விடாது.

வட மாகாணசபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மூன்றாங்கட்ட ஈழப்போராக இராஜதந்திரப் போரை நடாத்தப்போவதாக முழக்கமிட்டனர். இராஜதந்திரப் போரின் உண்மையான அர்த்தம் புரிந்துதான் இவர்கள் முழக்கமிட்டார்களா என்பது சந்தேகம்.

இராஜதந்திரப் போர் என்பது சர்வதேச மட்டத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை கொண்டு சென்று ஏற்க வைப்பதாகும். தாயக மட்டத்தில் மட்டும் நடாத்தும் அரசியல் செயற்பாடுகள் மூலம் இதனை முன்னெடுக்க முடியாது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தாயகத்தின் நீட்சிகளையும் சேமிப்புச் சக்திகளையும் துணை சக்திகளையும் இந்த இலக்கிற்குப் பின்னால் அணிதிரட்டும்போதே இராஜதந்திரப்போர் சாத்தியமாக இருக்கும்.

தாயகத்தின் நீட்சிகளாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்களே. சேமிப்பு சக்திகளாக இருப்பவர்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழக வம்சாவழித் தமிழர்களாவர். துணைச் சக்திகளாக இருப்பவர்கள் உலகெங்கும் செயற்படும் முற்போக்கு ஜனநாயகச் சக்திகளாவர். உலக ரீதியாக செயற்படும் முற்போக்கு ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விடுதலை இயக்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள் போன்றன இவற்றுள் அடங்கும்.

எனினும் இச்சக்திகளில் தீர்கமான செயற்படக்கூடியவர்கள் தமிழக மக்களும் புலம்பெயர் மக்களுமேயாவர். இவ்விரண்டு சக்திகளினதும் அண்மைக்காலச் செயற்பாடுகளை மெச்சாமல் இருக்க முடியாது. இந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் எமது விவகாரத்தை பேசுபொருளாக்கியவர்கள் இச்சக்திகளே.

இதிலும் தமிழக சக்திகளின் செயற்பாடுகள் அளப்பரியது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையைப் பாதுகாக்க முனைந்தபோதெல்லாம் அதனை கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் தமிழக சக்திகளே. இவர்களின் தியாகம் நிறைந்த போராட்டங்கள் இல்லாவிட்டால், இந்தியா ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக நின்றிருக்காது.

ஆனால், இன்று விக்னேஸ்வரன் தமிழகம் தொடர்பாக கணவன் மனைவி உறவுக்குள் தலையிடக் கூடாது என்று கூறிய அபத்தமான கருத்துக்களினாலும் பொதுநலவாய மாநாடு தொடர்பாக கூறிய கருத்துக்களினாலும் தமிழக ஆதரவு சக்திகள் ஆடிப்போயுள்ளனர். இதன் அரசியல் பாதிப்புப் பற்றி இன்னோர் கட்டுரையில் விரிவாக எழுத இருக்கின்றேன். தமிழக சக்திகளின் செயற்பாடுகள் இந்திய மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடிகளையும் இராஜதந்திர நெருக்கடிகளையும் உருவாக்கியிருந்தன. அரசியல் ரீதியாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் நிலை உருவாகியது. இந்திய உபகண்டத்திலிருந்து தமிழ் நாடு தனிமைப்படும் நிலையும் தோற்றம்பெற்றது. இராஜதந்திர ரீதியாக இலங்கையைப் பாதுகாக்கும் செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியது.

இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபட வேண்டுமானால், இலங்கைத் தமிழர் விவகாரத்திலிருந்து தமிழ்நாட்டை அப்புறப்படுத்த வேண்டும். அதற்குக் கருவியாகவே விக்னேஸ்வரன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார். இது முழுக்க முழுக்க இந்திய உளவுப்பிரிவின் ஒரு வேலைத்திட்டம். அந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நபராக விக்னேஸ்வரன் மாறியிருக்கின்றார். சம்பந்தன், சுமந்திரனிடமும் இக்கருத்துக்கள் இருக்கின்றன தான். ஆனால், அவர்களுக்கு இதனை வெளிப்படுத்த துணிவில்லை. விக்னேஸ்வரன் துணிந்து முன்வந்திருக்கின்றார்.

விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கள் முழுக்க முழுக்க முக்கியமான அரசியல் விவகாரம். இது தொடர்பான கருத்துக்களை கட்சிக்குள்ளும் பொதுமக்கள் மத்தியிலும் ஆழமான விவாதங்களை நடாத்திய பின்பே வெளியிட்டிருக்க வேண்டும். தமிழக சக்திகளுடனும் ஆரோக்கியமான விவாதங்களை நடாத்தியிருக்க வேண்டும். இது விடயத்தில் முந்திரிக்கொட்டைபோல முந்திக்கொண்டு கருத்துக்களைச் சொல்வதற்கு விக்னேஸ்வரனுக்கு அதிகாரமளித்தது யார்? கூட்டமைப்புக்கென தலைவர் இருக்கின்றார், செயலாளர் இருக்கின்றார், பேச்சாளர் இருக்கின்றார், அவர்கள் இருக்கும்போது அரசியலுக்கு புதிதாக வந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளர் முந்திக்கொண்டு சர்ச்சை நிறைந்த கருத்துக்களை எவ்வாறு கூற முடியும். கட்சி அமைப்புப் பொறிமுறையின் இலட்சணம் இங்கு நன்கு தெரிகின்றது.

பொதுநலவாய அமைப்பு மாநாட்டுக்கு மன்மோகன்சிங் செல்லக்கூடாது என தமிழக அரசியல் சக்திகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்துகின்றனர். விக்னேஸ்வரன் மன்மோகன்சிங் மாநாட்டுக்கு வரவேண்டும் என கருத்துத் தெரிவிக்கின்றார். அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் அது கட்சியின் கருத்தல்ல தனது சொந்தக் கருத்து எனக் கூறுகின்றார். முக்கியமான அரசியல் விவகாரம் தொடர்பாக சொந்தக் கருத்தினை பகிரங்கமாகக் கூறலாம் என்றால் கட்சி ஏன், கட்சியின் கூட்டுப்பொறுப்பு எங்கே?

விக்னேஸ்வரன் தற்போது தனிநபர் அல்ல. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு முதலமைச்சர். அவர் விடுகின்ற தவறுகள் தமிழ் மக்களின் சுய மரியாதையைப் பாதிக்கும். ஒரு மக்கள் கூட்டத்தின் சுயமரியாதையைப் பாதிக்கச் செய்வதற்கு எந்த அரசியல்வாதிக்கும் உரிமை கிடையாது.

நாம் அரசியல் நடாத்துவது முன்னையவர்களின் முதலீட்டிலேயே. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் முதலீட்டிலேயே செல்வநாயகம் அரசியல் நடத்தினார். செல்வநாயகத்தின் முதலீட்டிலேயே பிரபாகரன் இயக்கம் நடாத்தினார். இன்று புலிகள் போட்ட முதலீட்டின் தளத்தில் நின்றுகொண்டுதான் கூட்டமைப்பினர் அரசியல் நடாத்துகின்றனர்.

பின்னையவர்களின் கடமை முன்னையவர்களின் முதலீட்டினை அழிப்பதல்ல. மாறாக மேலும் வளப்படுத்துவதே. அப்பன் சேர்த்த சொத்தை ஊதாரிப்பிள்ளை அழிப்பது போல கூட்டமைப்பும் அழிக்க முற்படுகின்றதா?

வரலாறு முன்னேதான் செல்லும் என நாம் நம்புவோமாக.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=c6d89f63-ebfe-4d03-9499-82591b2c5c43

  • கருத்துக்கள உறவுகள்
போர்குற்றவாளியாக மகிந்தவை நிறுத்தவே சம்பந்தர்  இராஜதந்திர ரீதியாக பின்வாங்கினார். ஒற்றுமை என்று சொல்லி பலரையும் சேர்ந்து வைத்திருக்கிறார்.இவர்கள் இப்போ பதவிக்கு அடிபடுவது போல இருக்கிறது. இதற்குள் மக்களுக்கு சேவை என்பது இரண்டாம் பட்சமாகவே உள்ளது.13 வது திருத்தத்தில் ஏதுமில்லாத போது அதற்காக மகிந்த அரசுடன் பேசோ பேசென்று பேசுவதாக மக்களை பேய்க்காட்டுவது மட்டுமில்லாமல் காலத்தையும் கடத்துவது ஏன்?
 
ஒற்றுமையான இலங்கைக்குள் தீர்வு என்று வெளிக்கிட்டவர் சம்பந்தர்.(பிரபாகரனை விமர்சித்தவரும் இவரே)அரசுடன் பேசி தான் தீர்வை பெறவேண்டும் என்பதும் நியாயமானது.ஆனால் எதனை பெறவேண்டும் என்று கூட்டமைப்பு மக்களுக்கு கூறி அதனை மகிந்தவுடன் பேசியதா? மூடிய சுவருக்குள் என்ன வருடக்கணக்காக பேசுகிறார்கள்? மக்களுக்கு பேசுவதை மறைப்பதன் (இரு பக்கமும்)  உள் நோக்கம் என்ன? ஒற்றுமையான இலங்கைக்குள் தீர்வு என கூறிக்கொண்டு மகிந்தவின் முன் சத்தியப்பிரமாணம் செய்யக்கூடாது என மாவை போன்றோர் குழம்பி  கட்சியை குழப்புவது ஏன்?
 
 
ஆனால், இன்று விக்னேஸ்வரன் தமிழகம் தொடர்பாக கணவன் மனைவி உறவுக்குள் தலையிடக் கூடாது என்று கூறிய அபத்தமான கருத்துக்களினாலும் பொதுநலவாய மாநாடு தொடர்பாக கூறிய கருத்துக்களினாலும் தமிழக ஆதரவு சக்திகள் ஆடிப்போயுள்ளனர். இதன் அரசியல் பாதிப்புப் பற்றி இன்னோர் கட்டுரையில் விரிவாக எழுத இருக்கின்றேன். தமிழக சக்திகளின் செயற்பாடுகள் இந்திய மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடிகளையும் இராஜதந்திர நெருக்கடிகளையும் உருவாக்கியிருந்தன. அரசியல் ரீதியாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் நிலை உருவாகியது. இந்திய உபகண்டத்திலிருந்து தமிழ் நாடு தனிமைப்படும் நிலையும் தோற்றம்பெற்றது. இராஜதந்திர ரீதியாக இலங்கையைப் பாதுகாக்கும் செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியது.

 

இவர் இன்னும் நித்திரையில் தான் உள்ளாரா?. ஹிந்து ராமின் குள்ள நரி விளையாட்டுக்களை அறியவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.