Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சினிமா ரசிகனும், விமர்சனங்களும்.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா ரசிகனும், விமர்சனங்களும்.......

அ.ஜீவதர்ஷன்  
 

 

 

M.G.R_Fan_large.jpg

 

உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு கலை/தொழில் சினிமா!! சினிமாமீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சினிமா ஜதார்த்தத்தில் மக்களால் தவிர்க்கப்பட முடியாதது, இன்னும் சொல்லப்போனால் அழிவில்லாத அம்சமது. உலகம் முழுவதும் சினிமாவின் தாக்கம் வியாபித்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சினிமாவின் தாக்கம் சற்று அதிகமாகவே அன்றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. உடல்மொழி, வசனங்கள், உடை என சினிமாவின் தாக்கம் இங்கு அதிகம்; அரசியல்வரை இந்த தாக்கம் கெட்டியாகப் பீடித்துள்ளது!!!


பொழுதுபோக்கு சினிமா, கலைப் படைப்புக்கள், மாறுபட்ட சினிமா என சினிமாவை பிரித்துச் சொன்னாலும்; எல்லாமே வர்த்தகரீதியில் லாபத்தை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படுபவைதான்! மொத்தத்தில் எல்லாமே வணிக சினிமாக்கள்தான். சில இயக்குனர்களும், சில விமர்சகர்களும், சில ரசிகர்களும் சினிமாவை நல்ல சினிமா, மோசமான சினிமா என்று இரு தட்டில் வைத்து நோக்குகின்றார்கள். இது சரியான பார்வையா? நல்ல சினிமா எது? மோசமான சினிமா எது ? என்பது பற்றிய என் எண்ணங்கள்தான் இந்தப் பதிவு!!


ரசிகர்கள்.....

கதாநாயகர்களது திரைப்படங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை தமிழ் சினிமா ரசிகர்கள் மாற்றுச் சினிமாக்களுக்கு கொடுப்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டும் உண்டு! கதாநாயக ரசனை என்பது ஒவ்வொருவரதும் தனிப்பட்ட விருப்பு! இதில் தவறென்று உள்ளது? அடுத்தவர் விருப்பு வெறுப்பில் கருத்துச்சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை !! ஒரு திரையரங்கில் 300 ரூபாயை கொடுத்து எனக்கு பிடித்த சினிமாவைத்தான் நான் பார்க்க முடியும்; இதுதான் மிகப்பெரும்பாலான ரசிகர்களின் மனநிலை. இதைச் சொல்வதால் தமிழ் ரசிகர்கள் மாற்றுச் சினிமாவை ஏற்றுக்கொள்வதில்லை என்று அர்த்தமில்லை; தமிழ் ரசிகர்கள்தான் இதுவரை தமிழ் சினிமா கொடுத்த அத்தனை புதுமைகளையும் கொண்டாடியவர்கள்!

மிகப் பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனமாகவே எடுத்துக்கொள்ளப் படுகின்றது! அவர்களைப் பொறுத்தவரை கொடுத்த பணத்திற்கு நிறைவான போகுதுபோக்கு கிடைப்பதுதான் முதற்தேவை!! அதனால்தான் இங்கு பொழுதுபோக்குத் திரைப்படங்களும், கதாநாயகனை முன்னிறுத்தி எடுக்கப்படும் அக்க்ஷன் திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெறுகின்றது. மக்களின் இப்படியான போக்கால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படைப்புக்களை துணிந்து எடுக்க முடிவதில்லை, அப்படி எடுக்கும் திரைப்படங்களை மக்கள் வரவேற்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படத் தரப்புக்களிடமிருந்தும், சில விமர்சகர்களிடமிருந்தும், சில ரசிகர்களிடமிருந்தும் தொடர்ந்தும் வந்தவண்ணம் உள்ளது!! இவர்களது கூற்று எந்தளவுக்கு உண்மையானது என்பதை அறிய கடந்தகால தமிழ் சினிமா வரலாற்றை மீட்டுப்பார்ப்பது அவசியம்!

பராசக்தி -: பாடல்கள் மூலம் கதை சொல்லிக்கொண்டிருந்த சினிமாவை வசனங்களின்பால் ரசிகர்களை ஈர்த்த திரைப்படம்; தமிழ் சினிமாவின் முக்கிய படிக்கல். கலைஞர் கருணாநிதியின் தமிழுடன் சிம்மக்குரலோனின் கம்பீரமான உச்சரிப்பு இணைந்து தமிழ் சினிமாவுக்கு கொடுத்த முதல் மாற்றம் இந்த வசன நடை! இந்தத் திரைப்படத்தை மாபெரும் வரவேற்புக் கொடுத்து வரவேற்றவர்கள் இதே தமிழ் ரசிகர்கள்தான்!!

இயக்குனர் ஸ்ரீதர் :- காப்பியங்கள் புராணங்கள், இதிகாசங்கள், , திராவிடக் கொள்கைகள், நாடகங்கள், சுந்தந்திரப் போராட்டங்கள் என குறுகிய வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு; 1959 இல் வெளிவந்த ஸ்ரீதரின் முக்கோணக் காதல்கதையான 'காதல்ப்பரிசு' ஒரு மாறுபட்ட சினிமா. காதல்ப் பரிசை மாபெரும் வெற்றியாக்கிய தமிழ் ரசிகர்கள்; ஏழு நாட்களில் மருத்துவமனையில் நிகழ்வது போன்று ஸ்ரீதர் இயக்கிய 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தையும் வணிகரீதியில் வெற்றியாக்கினர்.

அடுத்து 1964 இல் எம்.ஜி.ஆர், சிவாஜி என்னும் இரு நட்சத்திரங்களின் உச்ச காலத்தில் ஜனரஞ்சக சினிமாவின் உச்சம் என சொல்லப்படும் 'காதலிக்க நேரமில்லை' வெளிவந்தது! புதுமுக நாயகனாக ரவிச்சந்திரன் அறிமுகமாகிய இந்தத் திரைப்படம் அன்றைய தேதியில் மக்களால் மிகப்பெரியளவு வரவேற்பு கொடுக்கப்பட்டு அனைத்து வசூல்களையும் முறியடித்து சாதனை செய்த திரைப்படம்!


பாலச்சந்தர் :- 1960 களில் அற்புதம் நிகழ்த்திய மற்றொரு இயக்குனர்! எம்.ஜி.ஆர், சிவாஜியின் நட்சத்திர ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலப்பகுதியில்; அவர்கள் திரைப்படங்களில் காமடியனாக நடித்துவந்த நாகேஷை கதாநாயகனாக்கி பாலச்சந்தர் செய்த காவியங்கள் 'சர்வர் சுந்தரம்', 'நீர்க்குமிழி', 'எதிர் நீச்சல்' போன்றன மக்களால் மிகப்பெரும் வரவேற்புக் கொடுக்கப்பட்ட திரைப்படங்கள்!!


இளையராஜா :- கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சினிமாவின் இசையில் மூழ்கியிருந்த ரசிகர்களை; தமிழ் மணம் கமழும் நாட்டுப்புற பாடல்கள் மூலமும், மேற்கத்தைய இசையை/ இசைக்கருவிகளை தமிழ் இசையுடன் இணைத்து ஏற்படுத்திய புரட்சிமூலமும் கட்டிப்போட்ட இளையராஜாவை அன்னக்கிளியிலேயே வரவேற்று கொண்டாடியவர்கள் இதே தமிழ் ரசிகர்கள்தான்!


ரஜினிகாந்த் :- வெண்ணிற மேனி, பென்சில் மீசை, அழகிய தலை முடி, கூரிய கண்கள், நீட்டிய வசனம், நாடக நடிப்பு என்றிருந்த கதாநாயக இலக்கணங்களை உடைத்து கரிய மேனி, மிடுக்கான மீசை, பரட்டைத் தலைமுடி, சிறிய கண்கள், விறுவிறு வசன உச்சரிப்பு, இயல்பான நடப்பு என அறிமுகமாகிய ரஜினிகாந்தை தமிழ் ரசிகர்கள்தான் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள், கொண்டாடுகின்றார்கள்.


பாரதிராஜா :- 1977 இல் '16 வயதினிலே' என்றொரு திரைப்படம்! ஸ்டூடியோவுக்குள் சுற்றிக்கொண்டிருந்த கேமராவை கிராமங்களின் பக்கம் திருப்பி திரையில் மண்வாசனை கமழும் வண்ணம் வெளிவந்த திரைப்டம். தமிழ் சினிமா கண்டிராத புது முயற்சி! அன்றைய தேதியில் மக்களால் மாபெரும் வரவேற்ப்பு கொடுக்கப்பட்டு 200 நாட்களை கடந்து ஓடிய மாபெரும் வெற்றிச் சித்திரமிது.

1985 இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மற்றுமொரு மாறுபட்ட படைப்பு 'முதல் மரியாதை' நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் முதுமைக் காதலை அத்தனை அழகாக சொல்லிவிட்டுச் சென்றது. இந்தத் திரைப்படமும் மக்களால் மிகப் பெரும் வரவேற்பு பெற்று வணிகரீதியில் மாபெரும் வெற்றி பெற்றது!!


மகேந்திரன் :- 'முள்ளும் மலரும்' - 1978 இல் மகேந்திரன் இயக்கிய திரைப்படம்! தமிழ் சினிமா அதுவரை கண்டிராத சினிமா அது! மிகவும் இயல்பாக வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டிய சினிமா, இன்றுவரை தமிழ் சினிமாவின் சிறப்பான சினிமாக்களில் உதாரணம் காட்டப்படும் சினிமா. அன்று தயாரிப்பாளரால் விளம்பரப்படுத்தப்படாமலேயே; மக்களின் வாய் வழியான பரப்புரையால் வெள்ளிவிழாக் கண்ட திரைப்படம்!!

தொடர்ந்து மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் மற்றுமொரு தமிழ் சினிமாவின் புதுமை! அதனைத் தொடர்ந்து ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே என மகேந்திரன் கொடுத்த மாறுபட்ட சினிமாக்கள் தமிழ் ரசிகர்களால் வெற்றியாக்கப்பட்டது!


கே.பாக்யராஜ் :- இந்திய சினிமாவின் ஒப்பற்ற திரைக்கதையாளர். இவரது சினிமாக்கள் ஒவ்வொன்றும் அன்றைய நிகழ்கால வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டவை. நகைச்சிவை கலந்த ஜனரன்சகமாக இவரது சினிமாக்களுக்கு தமிழ் ரசிகர்கள் காதலர்கள்!!


மணிரத்தினம் :- இன்றுவரை புது இயக்குனர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷன், பல தமிழ் சினிமா ரசிகர்களின் பிடித்தமான இயக்குனர். வசன உச்சரிப்பு, நடிகர்களின் உடல்மொழி, இசை, கேமரா, எடிட்டிங் என அத்தனையும் இவரது சினிமாவில் புதுமையாக காணப்பட்டது; அதுவரை தமிழ் சினிமா கண்டிராத சினிமா இவருடையது! மணிரத்தினம் இன்று சொதப்பலான திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும்; ரசிகர்கள் இன்னும் அவரை எதிர்பார்ப்பது 'நாயகன்', 'மௌனராகம்' போன்ற படங்களை மீண்டும் கொடுக்க மாட்டாரா என்கின்ற எதிர்பார்ப்பில்தான்!! அந்தளவிற்கு மக்கள் மணிரத்தினத்தின் நல்ல சினிமாக்களை கொண்டாடியிருந்தார்கள் !!


ஏ.ஆர்.ரஹ்மான் :- 1992 இல் ரோஜா திரைப்படத்தில் தமிழ் சினிமா கண்டிராத ஒலியுடன் புதிய இசையை அறிமுகப்படுத்திய இளைஞன். முதற் திரைப்படத்திலேயே மக்கள் ரஹ்மானிற்கு அமோக வரவேற்பை கொடுத்தார்கள்!! அவர் ஆஸ்கார்வரை வளர்ந்த பின்னரும் அவர் கொடுக்கும் நவீன இசையை வரவேற்பவர்களும் இதே மக்கள்தான்!


பாலா :- 1999 இல் வெளிவந்த தமிழ் சினிமாவின் மற்றுமொரு முக்கிய திரைப்படம்! வாங்கி வெளியிட ஆளில்லாமல் காத்துக்கிடந்த சேது திரைப்படத்தை, வெளியிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் பார்க்க வைத்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்தான்!


சேரனின் 'பாரதி கண்ணம்மா' & 'ஆட்டோகிராப்' திரைப்படங்களும், தங்கர்பச்சானின் 'சொல்ல மறந்த கதை' & 'அழகி' திரைப்படங்களும், செல்வராகவனின் 'காதல்கொண்டேன்', '7G ரெயின்போ காலனி', பாலாஜி சக்திவேலின் 'காதல்', 'வழக்கு எண் 18/9' திரைப்படங்களும், அமீரின் 'பருத்திவீரன்', சசிக்குமாரின் 'சுப்ரமணியபுரம்', பிரபுசாலமனின் 'மைனா' திரைப்படங்களும் புதிய முயற்சியாக வெளிவந்து தமிழ் ரசிகர்களால் வணிகரீதியில் வெற்றியாக்கப்பட்ட சில முக்கிய திரைப்படங்கள்!! இவர்கள்தவிர ஷங்கர், கவுதம் மேனன், சிம்பு தேவன், வெற்றிமாறன் என தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சிகளைக் கொடுத்தவர்களது தரமான படைப்புக்கள் மக்களால் வரவேற்ப்புக் கொடுக்கப்பட்டவைதான்! அண்மையில்கூட புது முயற்சிகளாக வெளிவந்த 'பீட்சா', 'நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம்', 'சூது கவ்வும்' திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களால் புறக்கணிக்கப் படபடவில்லை!!


1950 களின் ஆரம்பம் தொடக்கம், இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் புதிய முயற்சிகள், புதிய வடிவங்கள் போன்றவற்றை தொடர்ந்து வரவேற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்!! 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த சினிமாவை இன்றுவரை வளர்த்துவிட்டவர்கள் ரசிகர்கள்தான்!! சிவாஜிகணேஷனின் நடிப்பிற்கும், கமல்ஹாசனின் புதிய முயற்சிகளுக்கும் ஊக்கம் கொடுத்து வரவேற்றவர்கள் தமிழ் ரசிகர்கள்தான்!

கமல்ஹாசனின் 80% ஆன புதிய முயற்சிகளுக்கு வரவேற்பளித்த ரசிகர்கள் அவரது 20 % ஆன முயற்சிகளை வரவேற்கவில்லை என்றதும் ரசிகனின் ரசனையை குறைசொல்வது அற்பத்தனமான!!! இந்தத் தவறை கமல்ஹாசன் என்றும் செய்ததில்லை; சில அரைகுறைகளின் அறிவுஜீவித்தனமான கருத்துக்கள்தான் இவை. ஹேராம் திரைப்படத்தை பல தடவைகள் பார்த்தும் புரியாமல் இருக்கும் கமல் ரசிகர்கள் இருக்கின்றார்கள்!! கையை பிடித்துக் கூட்டிக்கொண்டுபோன கமல்; திடீரென உயரத்தில் சென்று எட்ட முடியாத பள்ளத்தில் இருக்கும் ரசிகனுக்கு மேலே வா என்று கையைக் கொடுத்தால், அது ரசிகனின் தவறல்ல!! அதுதான் ஹேராம்.

அன்பேசிவம் ஒரு அழகிய திரைப்படம்தான்; ஆனால் அதில்வரும் முதலாளித்துவ பிரதிநிதியான நாசரின் நெற்றியில் நீறும், அவர் வாயில் "தென்னாடுடைய சிவனே போற்றி"யும் வலிந்து திணிக்கப்பட்டிருந்தது!! 90 சதவீதம் பேரின் நம்பிக்கையை சிதைத்துவிட்டு எப்படி வெற்றியை எதிர்பார்க்க முடியும்?

அண்மையில் இயக்குனர் வசந்தபாலன் கூட அதிகளவில் மட்டமான நகைச்சுவை திரைப்படங்களே இப்போதேல்லாம் வெளிவருவதாக விசனம் தெரிவித்திருந்தார்! இந்த இடத்தில் ஒரு விடயத்தை நோக்கவேண்டும்; தமிழ் சினிமா ரசிகர்களில் 90 சதவிகிதம் மக்கள் பொழுதுபோக்கை விரும்பும் பார்வையாளர்கள்தான்!! அவர்களைப் பொறுத்தவரை கொடுக்கும் காசுக்கு ஏற்படும் மன நிறைவுதான் முதற்தேவை. அதைக் கொடுக்கும் திரைப்படங்களை அவர்கள் ரசிக்கின்றார்கள்; இதில் என்ன ரசனைக்குறைவு? உங்களுக்கு, ஏன் எனக்கும் கூட பிடிக்காத சில திரைப்படங்களை "செம படம்டா" என கொண்டாடும் பலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்! அது அவர்களது ரசனை, அவர்களுக்காக எடுக்கப்படும் சினிமாக்களாக அந்த திரைப்படங்கள் இருந்துவிட்டு போகட்டுமே!

வருடத்தில் 100 க்கு மேற்பட்ட சினிமாக்கள் எடுக்கப்படும்போது 90 சதவிகிதம் எதிர்பார்ப்புடைய வணிக சினிமாவுக்கு 90 திரைப்படங்கள் வெளியாகுவதில் என்ன தவறு இருக்கிறது? (இவை வர்த்தக நோக்கில் எடுக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் 9 திரைப்படங்கள் கூட வெற்றி பெறுவதில்லை) 100 திரைப்படங்களில் மிகுதி 10 திரைப்படங்களும் மாறுபட்ட சிந்தனையில் இயக்கப்பட்டிருப்பின் அதுவே நல்ல விடயம்தானே! இப்படியான புது முயற்சிகள் வருடாவருடம் அதிகரித்துக்கொண்டு வருவது கூட ஆரோக்கியமான வளர்ச்சிதானே! அதே நேரம் புதிய முயற்சிகளில் கூட ஜனரஞ்சகம் என்பதை தவிர்த்து முழுக்க முழுக்க இயக்குனர் தன் எண்ணங்களை மட்டும் திணித்துவிட்டு மக்களை வரவேற்கவில்லை என்று திட்டுவதும் ஏற்புடையதல்ல!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் திரைப்படங்களை வரவேற்ற மக்கள் நந்தலாலாவை வரவேற்கவில்லை என்றால் தவறு மக்களிடமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்! நந்தலாலா ஒரு டாக்குமென்டரி வகையான திரைப்படமாகவே இருந்தது, அதில் ஜனரஞ்சகம் இல்லாதவிடத்து இன்று அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை என்பதுதான் ஜதார்த்தம். நந்தலாலாவை ஏற்றுக்கொள்ள இன்னும் சில தசாப்தங்கள் எங்களுக்கு தேவை! ஜப்பான் திரைப்படம் ஜப்பானுக்கு சரி, அதை உருவி தமிழில் வெளியிட்டுவிட்டு மக்களை குறைசொல்வது அபத்தம்.

"ஈரான், தென்னமெரிக்க திரைப்படங்களை பாருங்கள், எத்தனை அழகாக இருக்கும்" - இது தமிழ் சினிமாவை வேற்றுமொழி சினிமாவோடு ஒப்பிட்டு மட்டம்தட்டும் வசனம். சினிமா என்பது மொழி, கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரம், மனநிலை, பொருளாதாரம் என பல விடயங்கள் சார்ந்தது! மேற்சொன்னவற்றில் தமிழ் நாட்டுடன் ஈரான், தென்னமெரிக்கா எப்படி ஒருங்கிசையாதோ; அதேபோல சினிமாவும் ஒருங்கிசையாது, ஒப்பிட்டுப் பேசுவது முட்டாள்தனம். ஸ்பானிஸ், பிரெஞ்சிலே நிர்வாணம் என்பது திரைப்படங்களில் சாதாரணம், அவற்றை இங்கே திணிக்க முடியுமா? அங்கு பீச்களில் அரை நிர்வாணம் சாதாரணம், இங்கு ஜோடியுடன் சுற்றினாலே பார்வைகள் வேறுவிதமாக இருக்கும்! அங்குள்ள வாழ்கை முறைக்கு. மனநிலைக்கு அவர்கள் சினிமா ஒத்துப்போகும், இங்கு அந்த சினிமா இன்றைய தேதியில் சாத்தியமில்லாத ஒன்று! (ஹன்சிகா எல்லாம்...... நல்லவேளை அது இதுவரை நடக்கல, இல்லையின்னா நம்ம பசங்க நிலைமை என்னவாகியிருக்கும் :p )

சேரனுக்கு 'ஆட்டோகிராப்', 'பாண்டவர் பூமி', 'பாரதி கண்ணம்மா', 'வெற்றிக்கொடிகட்டு' திரைப்படங்களை வரவேற்றபோது ரசனையாளர்களாக தெரிந்த மக்கள்; 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி' திரைப்படங்களை ஏற்கவில்லை என்றதும் என்றதும் கோபம்!!! தங்கர் பச்சானுக்கு 'அழகி'யையும், 'சொல்ல மறந்த கதை'யையும் ஏற்றுக்கொண்டபோது ரசனையாளர்களாக தெரிந்த மக்கள்; 'தென்றலையும்', '9 ரூபா நோட்டையும்' ஏற்கவில்லை என்றதும் அப்படி ஒரு கோபம்!! தவறை உங்கள் பக்கம் வைத்துக்கொண்டு மக்களை குறைசொல்லாதீர்கள்!

நல்ல சினிமா? எது நல்ல சினிமா? என்னை எடுத்துக்கொண்டாலே என் அப்பாவுக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை' நல்ல சினிமா, என் அம்மாவுக்கு 'படையப்பா' நல்ல சினிமா, மனைவிக்கு 'போக்கிரி' நல்ல சினிமா, தங்கச்சிக்கு 'கில்லி' நல்ல சினிமா, தம்பிக்கு 'சேது' நல்ல சினிமா, நண்பனுக்கு 'ஆட்டோகிராப்' நல்ல சினிமா. எனக்கு 5 வயதில் ரஜினிகாந்தின் 'மனிதன்' நல்ல சினிமா!, 10 வயதில் 'உழைப்பாளி' நல்ல சினிமா, 15 வயதில் 'பாட்ஷா' நல்ல சினிமா, 20 வயது வரும்போது 'நாயகன்', 'தளபதி' நல்ல சினிமா, 25 வயதில் 'பருத்திவீரன்', 'சுப்ரமணியபுரம்' நல்ல சினிமா, இப்போது "நல்ல சினிமா என்பதெல்லாம் ஒன்றும் இல்லை, மனதுக்கு பிடித்த சினிமாக்கள் எல்லாமே நல்ல சினிமாக்கள்தான்"!! நாளை இதுகூட மாறலாம்!ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையில் நல்ல சினிமா எனப்படுவது மாறிக்கொண்டே இருக்கும், இங்கு பொதுப்புத்தியில் நல்ல சினிமா என்பது எந்த வரையறைக்குள் உட்பட்டிருக்கும் என்று வரையறுக்க முடியாது! ரசனை என்பது திறந்த வெளி, அவரவர் அவரவர்க்கு விருப்பமானதை ரசிக்கின்றார், இதில் குறை சொல்லவும், ஏளனப்படுத்தவும், விமர்சிக்கவும், கருத்துச் சொல்லவும் ஒன்றுமில்லை!!

பேரரசு படங்களை வெற்றியாக்கிய எம் மக்கள்தான் இன்றுவரை புதுமையை கொண்டுவந்த அத்தனை பேரையும் கொண்டாடியவர்கள்! எத்தனை புதுமைகளை கொடுத்தாலும் ஜனரஞ்சகத்தோடு கொடுத்தால் எந்த சினிமாவையும் மக்கள் வரவேற்பார்கள்! வேற்று மொழி சினிமாக்களை பார்த்துவிட்டு, அவற்றை மனதில் வைத்து கதை பண்ணிவிட்டு, மக்களை குற்றம் சொல்வது ஏற்புடையதல்ல! எம் மக்கள் பொழுதுபோக்கு சினிமாக்குத்தான் முன்னிரிமை கொடுப்பார்கள், காரணம் அவர்களது தேவை அதுதான், ஆனால் நல்ல சினிமாக்களையும் அவர்கள் எப்போதும் வரவேற்பார்கள், இது நடந்துள்ளது, இப்போது அதிகமாக நடக்கின்றது, இனிமேல் இன்னமும் அதிகமாக நடக்கும். நல்ல சினிமா எதுவென்பதை நீங்களே தீர்மானித்தால் எப்படி? நீங்கள் சினிமாவை மக்களிடம் கொண்டு செல்லுங்கள், அது நல்லதா, இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள், மக்கள் தீர்ப்பு ஒருபோதும் தவறாக இருக்காது!!! இயக்குனர்களே; தரமான சினிமாவை ஜனரஞ்சகமாக கொடுத்துவிட்டு மக்கள் முன்னால் நில்லுங்கள், மக்கள் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்கள்!


http://eppoodi.blogspot.co.uk/2013/10/blog-post_24.html

நல்ல சினிமா? எது நல்ல சினிமா? என்னை எடுத்துக்கொண்டாலே என் அப்பாவுக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை' நல்ல சினிமா, என் அம்மாவுக்கு 'படையப்பா' நல்ல சினிமா, மனைவிக்கு 'போக்கிரி' நல்ல சினிமா, தங்கச்சிக்கு 'கில்லி' நல்ல சினிமா, தம்பிக்கு 'சேது' நல்ல சினிமா, நண்பனுக்கு 'ஆட்டோகிராப்' நல்ல சினிமா. எனக்கு 5 வயதில் ரஜினிகாந்தின் 'மனிதன்' நல்ல சினிமா!, 10 வயதில் 'உழைப்பாளி' நல்ல சினிமா, 15 வயதில் 'பாட்ஷா' நல்ல சினிமா, 20 வயது வரும்போது 'நாயகன்', 'தளபதி' நல்ல சினிமா, 25 வயதில் 'பருத்திவீரன்', 'சுப்ரமணியபுரம்' நல்ல சினிமா, இப்போது "நல்ல சினிமா என்பதெல்லாம் ஒன்றும் இல்லை, மனதுக்கு பிடித்த சினிமாக்கள் எல்லாமே நல்ல சினிமாக்கள்தான்"!! நாளை இதுகூட மாறலாம்!ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையில் நல்ல சினிமா எனப்படுவது மாறிக்கொண்டே இருக்கும், இங்கு பொதுப்புத்தியில் நல்ல சினிமா என்பது எந்த வரையறைக்குள் உட்பட்டிருக்கும் என்று வரையறுக்க முடியாது! ரசனை என்பது திறந்த வெளி, அவரவர் அவரவர்க்கு விருப்பமானதை ரசிக்கின்றார், இதில் குறை சொல்லவும், ஏளனப்படுத்தவும், விமர்சிக்கவும், கருத்துச் சொல்லவும் ஒன்றுமில்லை!!

 

 

ஆமென்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.