Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரவேண்டாம், வாருங்கள் - செல்வரட்னம் சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரவேண்டாம், வாருங்கள் - செல்வரட்னம் சிறிதரன்:-

03 நவம்பர் 2013

'பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆள்பவன்தான இறைவன்' என்றொரு சினிமா பாடல் வரியொன்று உள்ளது. பூஜ்ஜியம் என்பது ஒன்றுமில்லை, வெறுமை என்பதுதான் கருத்து. ஒரு வெறுமைக்குள்ளே ஓர் அரசை ஆள்வதென்பது முடியாத காரியம். இந்த முடியாத காரியத்தை அல்லது, இல்லாத ஒன்றைச் செய்வதென்பது, மிகமிக கெட்டித்தனமான செயலாகும். இந்தச் செயலைத்தான், இந்த இராஜதந்திரத்தைத்தான் இறைவன் செய்கின்றான் என்பதையே அந்தப் பாடல் வரி எடுத்துக் கூறுகின்றது.

இந்த பூஜ்ஜியத்துக்குள் இராஜ்ஜியத்தை ஆள்கின்ற மாயவித்தையைத்தான், மந்திர விளையாட்டைத்தான், இராஜதந்திரத்தையே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, வடமாகாண சபையின் ஊடாகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இராஜ்ஜியத்தை ஆள்வதென்பது சாதாரண காரியமல்ல. அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் தனிமனித முடிவுகள் முக்கியமாக இருந்தபோதிலும், அமைச்சர்களும், ஆஸ்தான ஆலோசகர்களும், மதகுருமார்களும் அரசனுக்கு மந்திராலோசனைகள் வழங்கி இராஜதந்திரங்களைச் சொல்லிக்கொடுத்து, அரசாட்சியில் அரசனுக்கு உதவுவது வழக்கம். அதுவே, அரச காலத்து நடைமுறையாக இருந்து வந்துள்ளது.

அரசர் ஆட்சிமுறை மறைந்து, ஜனநாயக ஆட்சி முறை வந்த பின்னர், தனி மனித முடிவுகள் அருகி, ஆலோசகர்களின் இராஜதந்திர வழிகாட்டல்கள், ஆட்சி முறையில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இது அரசாங்கத் தரப்பினரின் நிலைப்பாடு. எதிரணியில் இருப்பவர்களைப் பொறுத்த மட்டில் தனிமனித முடிவுகள் என்பதைப் பற்றி நினைத்துப் பார்.க்கவே முடியாது. கூட்டு முடிவுகளின்படி, உருவாகின்ற இராஜதந்திர வழிமுறைகளின் மூலந்தான், அரசதரப்பு காரியங்களைச் சரியாக இனங்காணவும், அதற்கேற்ற வகையில் சரியான முறையில் செயற்படவும் முடியும். அதைத்தான் ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் என்கிறார்கள்.  

இலங்கையில் பேரினவாத ஆட்சியதிகாரத்திற்குள் சிக்கி, பல்வேறு அடக்குமுறைகளுக்கும், திட்டமிட்ட அரசியல் தந்திரங்களுடனான நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுத்துள்ள சிறுபான்மையின மக்களாகிய தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளில் தனிமனித தீர்மானங்கள், இராஜதந்திர முடிவுகளை மேற்கொள்வதுபற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆயினும், அத்தகைய கடினமான நிலையில்தான் கூட்டமைப்பு இப்போது செயற்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளில் முக்கியமான முடிவுகளை அதன் தலைவராக இருக்கின்ற சம்பந்தனே மேற்கொள்கின்றார். அந்த முடிவுகளை அவர் எப்படி மேற்கொள்கின்றார், எத்தகைய இராஜந்திரத்தைப் பயன்படுத்துகின்றார் என்பது கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சித் தலைவர்கள் எவருக்கும் தெரியாது. இதுதான், யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.

முக்கியமான சந்தர்ப்பங்களில் என்ன செய்வதென்பதுபற்றி கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்கள் கூடிப் பேசுவார்கள். அடிக்கடி கலந்துரையாடுவதாகக் கூறுவார்கள்.

இத்தகைய கூட்டங்கள் சந்திப்புக்களில் கட்சித் தலைவர்கள் சொல்வதை சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜாவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கேட்டுக்கொள்வார்கள். ஆனால், முடிவுகள் கட்சித்தலைவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவானதாக இருக்க மாட்டாது. சம்பந்தனின் முடிவுக்கு அமைவாக, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு அமைவானதாகவே இருக்கும். ஆயினும், இறுதியில் கூட்டமைப்பின் ஏகமனதான தீர்மானம் என்று கூட்டமைப்பில் இருந்து அறிக்கைகள் வரும். இப்படித்தான், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

தலைமைக்குத் தயாராகியிருக்கவில்லை

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்ததன் பின்னர், விடுதலைப்புலிகளின் பொறுப்பில் இருந்த, தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை, ஏற்று நடத்த வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டிருந்தது.

வலிமையான ஓர் ஆயுத பலத்தோடு, அரசாங்கத்துடன், அரசியலில் சமபலத்தைப் பேணி வந்த விடுதலைப்புலிகள் முற்றாகச் செயலிழந்தபோது, தமிழ் அரசியலில் பெரியதொரு வெற்றிடம் உருவாகியது. அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் தோள்களில் இறங்கியது. இத்தகையதோர் அரசியல் நிலைமைக்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தயார் நிலையில் இருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் திடீர் மறைவுடன் கூடிய ஒரு திடீர் திருப்பத்தைக் கூட்டமைப்பு எதிர் நோக்கி, இருந்திருக்கவுமில்லை.

கடந்த 2009 ஆம் ஆண்டு, மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான இலங்கையின் இராணுவ மயம் சார்ந்த அரசியல் சூழலில், விடுதலைப்புலிகளின் அரசியல் நிழலிலேயே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியலில் ஈடுபட்டிருந்தது. எனினும், யுத்தம் மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து இராஜதந்திர ரீதியிலான சிந்தனையை, எதிரபார்ப்புக்களை, அது  கொண்டிருக்கவில்லை.

வன்னியில் கடுமையான யுத்த மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், உணர்வு ரீதியான அரசியல் சுழலில் சிக்கியிருந்தார்களே தவிர, இராஜதந்திர ரீதியிலான அரசியலைப் பற்றி சிந்தித்திருந்ததாகத் தெரியவில்லை. தீவிரமான சண்டைகளின்போது, கிளிநொச்சி நகரம் அரச படைகளிடம் வீழ்ச்சியடைந்தபோதே, விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கான அறிகுறி ஆரம்பமாகியிருந்தது. இருந்தும், புலம்பெயர் அரசியல் சக்திகளும்சரி, கூட்டமைப்பும்சரி, விடுதலைப்புலிகள் இல்லாத ஓர் அரசியல் நிலைமை குறித்து,  கனவிலும்கூட எண்ணியிருக்கவில்லை. அரச படைகளையே ஆட்டிப்படைக்கும் அளவுக்குப் பலம் பொருந்தியவர்களாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகளின் மறைவு குறித்து அப்போது சிந்திப்பதற்கான சந்தர்ப்பமும், சூழலும் இல்லாமலிருந்தமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அத்துடன் பலமுள்ள விடுதலைப்புலிகள் வீழ்ச்சியடைவார்கள் என்ற எண்ணமே, அன்றைய சூழ்நிலையில், தமிழ்த்தேசியத்துக்குத் துரோகமானதாகக் கருதப்பட்டிருக்கும் என்பதும் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.

அத்தகைய சிந்தனை அவர்களிடம் இருந்திருக்குமேயானால், விடுதலைப்புலிகளின் திடீர் மறைவுடன் கூடிய அரசியல் சூழலுக்கு அவர்கள் தயாராகியிருந்திருப்பார்கள். விடுதலைப்புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டபோது, சாதாரண மக்களைப் போலவே, கூட்டமைப்பினரும் அதிர்ச்சியில் உறைந்து போனாhர்கள்.

அடுத்த கட்ட அரசியலுக்கும், தமிழ் அரசியலின் தலைமைப் பொறுப்புக்கும் அவர்கள் தயார் நிலையில் இருக்கவில்லை. எனவே, எதிர்பாராத ஓர் அரசியல் தலைமைப் பொறுப்பை முழுமையாக ஏற்று, யுத்த வெற்றிச் செருக்கில் அடாவடி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுப்பதில் அரசியல் ரீதியாகப் பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். குறிப்பாக அரசாங்கத்தின் கெடுபிடிகள் காரணமாக மக்களை அணுகுவதற்குக் கூட முடியாமல், அவர்களிடமிருந்து அவர்கள் தொலைவில் விலகியிருக்க நேரிட்டிருந்தது. விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள் என்றுகூடச் சொல்லலாம்.

ஆயினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புதான் தமது அடுத்த தலைமை என்பதில் வடக்குகிழக்கு மக்கள் உறுதியாக இருந்தார்கள். யுத்தத்திற்குப் பின்னர் நிலவிய  இறுக்கமான அரசியல் சூழலில், தமிழ் மக்கள் கொண்டிருந்த இந்த அரசியல் உறுதிதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, தலைமை நிலையில் தக்க வைத்திருந்தது. இந்தத் தலைமையைப் பெற்றமைக்கும், அதனைத் தக்கவைத்து, இப்போதைய வலுவான அரசியல் தலைமைத்துவத்துக்கு வழி சமைத்திருப்பதுவும், தமிழ் மக்களின் அரசியல் உறுதியேயல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரமல்ல.

இராஜதந்திரப் போர்

இறுதி யுத்தத்தோடு, போர்ச் சூழல் மறைந்ததையடுத்து, இராணுவமயமான அரசியலை நடத்தி வருகின்ற அரசாங்கத்தின் இராஜதந்திரத்திற்கு இணையாக அரசியலில் ஈடு கொடுப்பதற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தடுமாற நேர்ந்திருந்தது.

தமிழ் மக்களின் வலுவான அதிகாரமுள்ள அரசியல் பலம் கூட்டமைப்புக்கு இல்லாதிருந்தமையும் இதற்கு ஒரு காரணமெனலாம். இத்தகைய அரசியல் பலம் கூட்டமைப்புக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகமிகக் கவனமாகக் காய் நகர்த்தி வந்தது. வடமாகாண சபைக்கான தேர்தலைக் கூடுமானவரையில் தள்ளிப்போட்டு, அறவே இல்லாமல் செய்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வந்ததுகூட, இந்த காய் நகர்த்தலின் ஓர் அம்சம் என்றே கூற வேண்டும்.

வடமாகாண சபைத் தேர்தலிலும், மக்கள் கொண்டிருந்த அரசியல் ரீதியான முனைப்பே, கூட்டமைப்பை அமோகமாக வெற்றியடையச் செய்திருந்தது. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாக தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏறக்குறைய முழுமையாகப் பொறுபேற்று நடத்தி வந்தபோதிலும், இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளுக்காக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், அரசாங்கம் மாற்று கருத்துக்களைக் கொண்டிருந்த (அரசுக்கு ஆதரவாகச் செயற்படுபவர்கள் கூறுவதுபோல, எதிர்ப்பு அரசியலை நடத்தி வந்ததாகக் கூறலாம்) தமிழ் அரசியல் தலைவர்களைப் புறந்தள்ளி, ஒதுக்கி வைத்துச் செயற்படுகின்ற அரசியல் போக்கை மேற்கொண்டிருந்ததனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களுடன் நெருக்கமான முறையி;ல் அரசியல் நடத்த முடியாமலிருந்தது.

நாடாளுமன்றப் பிரதிநிதிகள் என்ற ரீதியில்கூட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்கு கொள்ள முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அவர்களை அரசாங்கம் ஒதுக்கி வைத்திருந்தது. இன்னும்கூட அப்படித்தான் ஒதுக்கி வைத்திருக்கின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இருந்தார்களே தவிர, மக்களுக்கு நேரடியாக அந்தப் பொறுப்புக்குரிய வரையறைகளையும், அதிகாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி சேவையாற்றவோ, அரசியல் நடத்தவோ முடியாமலிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தமது பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்ட வேலைத்திட்டங்களிலும், அவர்கள் பங்களிப்புச் செய்யவோ, சரியான ஆலோசனைசளை வழங்கவோ, திட்டங்களை வகுத்துச்செயற்படவோ அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாடாவிய ரீதியிலும், சர்வதேச மட்டத்திலும், சர்வதேச அரங்குகளிலும் கொண்டு சென்ற போதிலும், உள்ளுரில் பிரதேச நிலைமைகளைப் பொறுத்தளவில் காட்சியறைப் பொம்மைகளைப் போலவே, அவர்கள் இருக்க நேர்ந்திருந்தது. ஆகவேதான் தமிழ் மக்களின் அரசியல் முனைப்பு காரணமாகவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தல் அமோக வெற்றியீட்டியது. இந்த வகையில் வெற்றி பெறுவோம் என்று தாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும் கருத்து வெளியிட்டிருந்ததும், இங்கு கவனிக்கத்தக்கது.

அதுமட்டுமல்ல, மாகாண சபையில் வெற்றி பெற்றதன் பின்னர், இராஜதந்திரப் போர் இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகின்றது என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் குரலாகக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எத்தகைய இராஜதந்திரம்?

இல்லாத ஒன்றுக்குள் இருந்து, இழந்துபோன உரிமைகளைப் பெறுவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முனைப்பு காட்டியிருப்பதையே, கூட்டமைப்பின் மாகாண சபை மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இராஜதந்திரப் போர் காட்டுகின்றது. மாகாண சபை முறைமை வந்தபோது, தமிழ் மக்கள் கோருபவை எதுவும் அதில் இல்லையென்று கூறி, தமிழ்த் தலைவர்களினால், அது ஒதுக்கப்பட்டிருந்தது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒதுக்கித் தள்ளப்பட்ட மாகாண சபையின் ஊடாக இப்போது, அர்த்தமுள்ள அதிகாரப் பரவாலக்கலை அடைய முடியும் என்பதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரம்.

ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு, அரசியல் மிதி கல்லாகக் கொண்டு சட்டம் தெரிந்த முன்னாள் நீதியரசர் ஒருவரின் தலைமையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற, அணுகுமுறை எத்தகைய இராஜதந்திரத்தில் இருந்து உருவாகியது என்பதற்கு விளக்கமில்லை. ஆனால், அறிஞர் என்றும் பெரியவர் என்றும், தமிழ் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர்; ஒருவரை, தமிழ் அரசியல் முகவரியில் இணைப்பதன் ஊடாக, சர்வதேச அரசியல் ஆதரவைச் சம்பாதித்துத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது சம்பந்தனின் கூற்று.

ஆயுதந்தரித்து, வன்முறை அரசியலில் கடும்போக்கு கொண்ட தலைவனாக – தமிழ் மக்களின் அரசியல் தலைவனாக பிரபாகரனைக் கண்ட சர்வதேசம்,  மென்போக்குடைய முன்னாள் நீதியரசரை, அதே மக்களின் அரசியல் தலைவனாகக் காணும்போது, அரசியல் ரீதியான ஆதரவும், அரவணைப்பும் அதிகமாகும் என்பது சம்பந்தனின் கணக்கு.

நான் செய்வதே சரி, நான் சொல்வதையே கேட்க வேண்டும். அதனையே செய்ய வேண்டும் என்ற பிடிவாதமுடைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஏதேச்சதிகார அரசியல் போக்கை, நீதித்துறை அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட அரசியல் தலைமையின் கீழ், மென்போக்கு அரசியல் செயற்பாட்டில் எவ்வாறு வளைத்து மடக்க முடியும் என்பது புரியவில்லை. இந்த இராஜதந்திரம் எத்தகையது, எங்கிருந்து பெறப்பட்டது என்பதும் தெரியவில்லை. இது சம்பந்தனின் இராஜதந்திரம் என்பது மட்டுமே பளிச்சென தெரிகின்றது.

சர்வதேச செயற்பாடுகளில் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த அரசியல் விவகாரம், கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிலும் செல்வாக்கு செலுத்த முனைவதைக் காண முடிகின்றது. இறுதி யுத்தத்தின்போது அப்பட்டமாக மனித உரிமைகளையும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளையும் மீறிய அரசாங்கத்தைக் கொண்டுள்ள இலங்கையில் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்ற குரல் நீண்ட காலமாகவே ஒலித்து வருகின்றது.

மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகள், ஜனநாயக விழுமியங்கள் போன்றவற்றை அடிநாதமாகக் கொண்டுள்ள பொதுநலவாயம் தனது மாநாட்டை, தனது கொள்கைகள், கோட்பாடுகளைத் துச்சமென மதித்துச் செயற்படுகின்ற ஒரு நாட்டில் நடத்தலாமா, சுழற்சி முறையிலான அதன் தலைமையை அந்த நாட்டிற்கு வழங்கலாமா என்ற கேள்விகள் சர்வதேச அளவில் இன்று விசுவரூபமெடுத்திருக்கின்றன.   

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றி;ல் சர்வதேச ரீதியில் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தணிப்பதற்குப் பொதுநலவாய மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் துடியாய் துடிக்கின்றது. இந்த மாநாட்டில் பிராந்திய ரீதியில் பலமுள்ள தனது அயலவனும் நண்பனுமாகிய இந்தியாவை எப்படியும் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காகப் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கின்றது.

சம்பந்தனின் இராஜதந்திரம்?

இத்தகைய சர்வதேச பொதுநலவாய மாநாட்டு அரசியல் நிலைமைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரத்தை சம்பந்தன் புகுத்தி விளையாட முயற்சித்திருப்பதையும் காண முடிகின்றது. வடமாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழகத்திற்குச் சென்றிருந்த சம்பந்தன், அங்கு பிஜேபி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்தியா பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரியிருந்தார்.

ஆனால். இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதனால், போரினாலும், மனித உரிமை மீறல்கள் ஜனநாயக நடைமுறை மீறல்கள் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பந்தனின் வலது கரமாக விளங்கும் வடமாகாண முதலமைச்சர், யாழ்ப்பாணத்திற்கு இந்தியப் பிரதமர் விஜயம் செய்ய வேண்டும் என்று கடிதம் மூலமாக அழைப்பு விடுத்திருக்கின்றார். அந்த அழைப்பை மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். வடமாகாண முதல்வரின் இந்த அழைப்பானது, வடபகுதியில் உள்ள தமிழ் மக்கள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாகவே கருதப்படுகின்றது. ஏனென்றால், கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கான தீரமானத்தை மேற்கொள்வதற்கு, இந்த அழைப்பை இந்தியப் பிரதமர் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.  

பொதுநலவாய மாநாட்டிற்கு வரவேண்டாம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வலது கரம் சொல்கின்றது, அதேநேரம் அதன் இடது கை இந்தியாலை வா வந்து கலந்து கொள் அப்போதுதான் யாழ்ப்பாணத்;திற்கும் விஜயம் செய்யலாம் என்று பரிவோடு அழைக்கின்றது. பொதுநலவாய மாநாட்டிற்கும், இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதற்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. இது வேறு. அது வேறு. இரண்டையும் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவது போன்று இணைத்து விஷமத்தனம் செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் வி;க்னேஸ்வரன் அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வடமாகாண சபை முளைத்து இன்னும் முளைவிடவில்லை. குழப்பகரமான ஒரு சூழலில் பதவிப்பிரமாணம் செய்து, முதலாவது அமர்வை நடத்தி, அந்தச் சூடு இன்னும் ஆறவில்லை. அதற்கிடையில் பழம்பெரும் நாடாகிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே, வாருங்கள். எங்களுடைய பிரதேசத்தை வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுப்பதற்கான அவசரத் தேவை என்ன என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றதே........

வடமாகாண முதலமைச்சர் நல்லெண்ண சமிக்ஞைகளைக் காட்டி, பங்குபற்றல் அரசியல் போக்கில் அரசாங்கத்துடன், இணைந்து செல்ல வேண்டும். அதேநேரம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன், எதிர்ப்பரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற இரட்டைப் போக்கின் மற்றுமொரு பரிமாணம் தோன்றியிருப்பதையே இப்போது காண முடிகின்றது. ஒன்றுக்கொன்று முரண்பட்ட இந்த இராஜதந்திரத்திற்குப் பெயர்தான் சம்பந்தனின் இராஜதந்திரமோ.....? இதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபையில் அமோக வெற்றியைத் தொடர்ந்து வருகின்ற இராஜதந்திரப் போரின் ஆரம்பமோ................?

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98450/language/ta-IN/article.aspx

வடமாகாண முதலமைச்சர் நல்லெண்ண சமிக்ஞைகளைக் காட்டி, பங்குபற்றல் அரசியல் போக்கில் அரசாங்கத்துடன், இணைந்து செல்ல வேண்டும். அதேநேரம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன், எதிர்ப்பரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற இரட்டைப் போக்கின் மற்றுமொரு பரிமாணம் தோன்றியிருப்பதையே இப்போது காண முடிகின்றது. ஒன்றுக்கொன்று முரண்பட்ட இந்த இராஜதந்திரத்திற்குப் பெயர்தான் சம்பந்தனின் இராஜதந்திரமோ.....? இதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபையில் அமோக வெற்றியைத் தொடர்ந்து வருகின்ற இராஜதந்திரப் போரின் ஆரம்பமோ...............?.

 

 

அதையும் இதையும் சேர்த்து முடிச்சு போட்டு கதை புனைந்து அதை ஆராய்ச்சி என்று புளுடா செய்ய வெளிக்கிடால் இப்படி கனக்க கேளிவிக்குறியோடு தான் உங்கதை ஊடக ஆற்றல் வந்து முடியும்

 

அதோடு உங்களுக்கு தானே பல "நெருங்கிய வட்டாரங்களை" அலறல் மாளிகையில் இருந்து தமிழரசுக்கட்சி மற்றும் இந்திய வரை தெரியுமே?. அப்ப ஏன் இவள்ளவு கேள்விக்குறி?

Edited by puthalvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.