Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-1)

 
இந்த கடிதக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு மார்ச் 2001. தேசிய இனப் பிரச்சனை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மட்டுமல்ல அதைப் புரிந்துகொள்ள வேண்டியது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். அதனால் வாசிக்கின்ற நீங்கள் பயனுள்ள வகையில் பின்னூட்டமளித்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். 
A reply to an LTTE supporter
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில்
மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும்
By Peter Symonds

10 March 2001

பின்வருவது தமிழீழ விடுதலைப் புலி (LTTE) ஆதரவாளரான SKக்கு வழங்கியபதிலை பகுதிகளாக வெளியிடுகிறோம்தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு கடந்த 18ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒரு தனியான தமிழ்நாடு கோரிப் போராடி வருகின்றதுஷிரின் கடிதம் இலங்கையின் சோசலிசசமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயசுக்கும் ஷிஸிக்கும்இடையேயான முன்னைய கடிதப் போக்குவரத்தின் பேரில் கிடைத்ததோடு அவர்சோ..தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதனது அரசியல் முன்நோக்குக்கும்விமர்சனமற்ற ஆதரவு வழங்கத் தவறியமைக்காக சோ...வைக் கண்டனம்செய்திருந்தார்.
SK மின் அஞ்சலின் முழு விபரத்தை பின்வரும் இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்: SK யிடம் இருந்து வந்த கடிதம்
அன்பின் SK,
தங்களின் மின் அஞ்சலில் உள்ள பல விடயங்கள் விஜே டயசினால் ஏற்கனவே விரிவாகப் பதிலிறுக்கப்பட்ட உங்களின் சகா SR ஆல் குறிப்பிடப்பட்டவற்றை அப்படியே மீளக் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் நீங்கள் ஒன்றில் புறக்கணித்துவிட்ட அல்லது பாரதூரமாகக் கொள்ளத் தவறிவிட்டவற்றை சுற்றி வாதங்களை வளர்ப்பதில் எதுவித அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. உங்கள் இருவரில் எவரும் சரி 1998டிசம்பர் 1ம் திகதி பிரசுரிக்கப்பட்ட "சோசலிச சமத்துவக் கட்சியும் இலங்கை-ஈழம் சோசலிச ஐக்கிய அரசுகளுக்கான போராட்டமும்" என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையை வாசித்ததாக தெரியவில்லை. அது பொதுவில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் சிறப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமாகவும் அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிலைப்பாட்டை ஓரளவுக்கு விரிவாக விளக்குகின்றது.
ஆனால் நான் ஒரு அடிப்படையான விடயத்தை இங்கு திரும்பக் குறிப்பிடுகின்றேன்: மார்க்சிசம் தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்று நலன்களை அடிப்படையாக கொண்டு ஒரு சுயாதீனமான முன்நோக்கினை அபிவிருத்திசெய்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆதலால் எமது ஆய்வு அடிப்படையாகக் கொண்டுள்ளது வர்க்கத்தையே அல்லாமல் இனம்,தேசியம் அல்லது இனக்குழுவை அல்ல.
லெனினைத் தவறாக புரிந்து கொண்டதை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் மார்க்சிஸ்டுகளின் வேலை தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பிரிவினைவாதக் குழுக்களின் முகாம் சகாக்களாக மாறுவது அல்லது அவர்கள் காட்டிக் கொடுப்பதாக தோன்றுகையில் தேசிய இயக்கத்தின் தலைமையை கைப்பற்றுவது என நீங்கள் நம்பிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. ஆனால் மார்க்சிஸ்டுகளின் இலக்கு பெரிதும் வேறுபட்ட ஒன்று. தனியான தேசிய அரசுகளை ஸ்தாபிதம் செய்வது அல்லாது சமுதாயத்தை சோசலிச வழியில் மறுநிர்மாணம் செய்ய அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதாகும். அந்தப் பணியின் ஒரு பாகமாக நாம் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும்- தேசிய ஒடுக்குமுறையின் சகல வடிவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது உட்பட -ஜனநாயக உரிமைகளையும் காக்கப் போராடுகின்றோம். அதற்காக உறுதியோடு தொடர்ந்து போராடுவோர் நாம் மட்டுமே.
1998 நா.அ.அ.கு. (ICFI) அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது போல் தேசிய இனப் பிரச்சினைக்கும் சமூக பிரச்சினைக்கும் இடையேயான உறவு மார்க்சிச இயக்கத்தினுள் ஒரு நீண்ட வரலாறு படைத்த சிக்கலான ஒன்றாகும். அது விளக்கியுள்ளது போல் லெனினும் போல்ஷிவிக்குகளும் "சுயநிர்ணய உரிமை"க்கான சுலோகத்தை 20பதாம் நூற்றாண்டின் ஆரம்பகால நிலைமைகளுக்கு ஏற்ப வாதிட்டனர். காலனித்துவ அரைக்-காலனித்துவ ஆட்சி உட்பட்ட பூகோளத்தின் பல பாகங்களில் முதலாளித்துவ சொத்து உறவுகள் அப்போதுதான் தலையெடுத்து வந்தது. ரூஷ்யாவில் ஸார் ஆட்சியாளர்கள் பல்வேறு வகைப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மட்டங்களைக் கொண்ட எண்ணற்ற இனக்குழுக்களை ஆட்சி செய்து வந்தது. லெனினின் கொள்கை ஸார் அடக்குமுறையாளர்களால் உருவாக்கப்பட்ட வன்மங்களில் இருந்து தலையெடுப்பதையும் தேசிய சிறுபான்மையினர்களிடையே முதலாளி வர்க்கத் தலைவர்களின் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதையும் இலக்காகக் கொண்டிருந்தது.
லெனின் விளக்கியது போல் சுயநிர்ணய உரிமை ஒரு "எதிர்மறை" (Negative)கோரிக்கையாக விளங்கியது. இது போல்ஷிவிக்குகள் தனிநாட்டை உருவாக்க வக்காலத்து வாங்கினார்கள் என்பதை குறித்து நிற்கவில்லை. ஆனால் மாறாக அக்கட்சி தேசிய சிறுபான்மையினர் மீது ரஷ்யாவின் பிடியை வைத்துக் கொண்டிருக்க கையாளப்பட்ட காட்டுமிராண்டித்தனமானதும் அடக்குமுறைமிக்கதுமான நடவடிக்கைகளை எதிர்த்தது. லெனின் பல்வேறு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தலைவர்கள்- அவர்கள் ரூஷ்யர்களானாலும் சரி எஸ்டோனியர்களானாலும் சரி லத்வியன்களானாலும் சரி அல்லது எந்த வகையறாவைச் சேர்ந்தவர்களானாலும் சரி எங்குமே ஒருபோதும் விமர்சனமற்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை. உண்மையில் மென்ஷிவிக்குகளுக்கு எதிரான அவரது நீண்ட விவாதம் தேசிய முதலாளி வர்க்கம் ஸார் பிரபுத்துவத்துக்கு எதிராக ஒரு உறுதியான போராட்டத்தை நடாத்தவோ அல்லது தேசிய ஜனநாயகப் பணிகளை இட்டு நிரப்பவோ இலாயக்கற்றது என்பதை வலியுறுத்துவதை மையமாகக் கொண்டு இருந்தது.
லியொன் ட்ரொட்ஸ்கி இதைக் காட்டிலும் தூரப் பார்வை கொண்ட முடிவுகளுக்கு வந்தார். அவர் தமது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் தொழிலாளர் வர்க்கம் ஈடாட்டம் கண்டு போயுள்ள முதலாளி வர்க்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் ஒடுக்கப்படும் வெகுஜனங்களின் தலைமையை வெற்றிகாணாது ஆட்சிக்கு வரமுடியாதது மட்டுமன்றி,அங்ஙனம் ஆட்சிக்குவந்த பின்னர், வெறுமனே முதலாளித்துவ ஜனநாயக பணிகளை அமுல் செய்வதோடு நிறுத்திக் கொள்ளவும் முடியாது எனவும் விளக்கினார். அது அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு இணைந்த பாகமாக முதலாளித்துவப் சொத்து உறவுகளினுள் கட்டாயமாக ஆழமாக ஊடுருவிச் செல்லவும் தள்ளப்பட்டுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அறிக்கை விளக்கியது போல்: தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் அதன் மூலம் அதனது சிறப்பு முக்கியத்துவத்தையோ அல்லது அவசியத்தையோ இழந்து விடாது. ஆனால் தொழிலாளர் வர்க்கத் தலைமையின் கீழ் ஒடுக்கப்பட்டோரின் ஒரு புரட்சிகரக் கூட்டினை ஸ்தாபிதம் செய்வதுடன் ஏனைய சகல ஜனநாயகப் பணிகளைப் போன்று தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான ஒரு புதிய சமூக ஒழுங்கிற்கான போராட்டத்தினுள் இது கொணரப்படுகின்றது.
"மாறாக தேசிய விடுதலை சமூக விடுதலையில் இருந்து வேறுபடுத்தப்பட்டு இருக்கும் வரையும் அது ஒரு அரசியல் கற்பனையாகவே விளங்கும். இந்திய, சீன மற்றும் காலனித்துவ மக்களின் தேசிய சுதந்திரத்துக்கான போராட்டங்களை ஆதரிக்கும் அதே வேளையில் ட்ரொட்ஸ்கி 1940ல் நான்காம் அகிலத்தின் சார்பில் எழுதுகையில் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்: "காலவதியான தேசிய அரசுகள் சுதந்திரமான ஜனநாயக வளர்ச்சியை இனியும் எதிர்பார்க்க முடியாது. வீழ்ச்சி கண்டுவரும் முதலாளித்துவத்தினால் சூழப்பட்ட நிலையிலும் ஏகாதிபத்திய முரண்பாடுகளில் சிக்குண்டு போன நிலையிலும் ஒரு பின்தங்கிய அரசின் சுதந்திரம் தவிர்க்க முடியாத விதத்தில் ஒரு அரைக் கற்பனையானதாயும் உள்வாரி வர்க்க முரண்பாட்டு நிலைமைகளினுள் அதனது அரசியல் ஆட்சியும் வெளிவாரி நெருக்குவாரங்களும் தவிர்க்க முடியாத விதத்தில் தமது சொந்தமக்களுக்கு எதிரான சர்வாதிகாரத்தினுள்ளேயே செல்லும். துருக்கியின் 'மக்கள்' கட்சி, சீன குவாமின்டாங், இந்தியாவில் நாளைய காந்தி ஆட்சி இந்த வகையைச் சேர்ந்தவை."
"தமிழ் விடுதலைப் போராட்டத்துக்கு" நிபந்தனையற்ற ஆதரவு -உண்மையில் நீங்கள் விமர்சனமற்ற ஆதரவையே கருதுகின்றீர்கள்- வழங்கும்படி நீங்கள் விடுக்கும் அழைப்பு லெனின் அல்லது ட்ரொட்ஸ்கியுடன் இனங்காணக்கூடியது அல்ல. மார்க்சிசத்தை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்டு உண்மையில் அதன் அடிப்படைக் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்தவர்களுடனேயே இதை இனங்காண முடியும். பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளி வர்க்கத் தலைமைகளுக்கு அடிமைத்தனமாக இயைந்து போவதை நியாயப்படுத்தும் பொருட்டு பழைய மென்ஷிவிக் கோட்பாடுகளை புதுப்பித்து, லெனினின் "சுயநிர்ணய உரிமை" கோரிக்கையை சீரழித்த ஸ்ராலினிச அதிகாரத்துவமே இதைச் செய்தது. பல்வேறுபட்ட தீவிரவாதப் போக்குக்களிடையேயும் "சுயநிர்ணயம்" பல்வேறுபட்ட பிரிவினைவாத இயக்கங்களுக்கு விமர்சனமற்ற ஆதரவு வழங்குவதுடன் இனங்காணப்பட்டு வருகின்றது.
லெனினின் காலத்தில் இருந்து தேசிய இயக்கங்கள் மேலும் சீரழிந்து போயுள்ளன. விஜே டயஸ் தமது பதிலில் விளக்கியது போல் இந்த தேசிய விடுதலை இயக்கங்களின் அடிப்படைப் பண்பு உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தின் தாக்கத்தின் கீழ் ஆழமாக மாற்றம் கண்டு போயிற்று. அவை அனைத்தும்- தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட- தமது பல்வேறுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புகளையும் சோசலிச நடிப்புகளையும் அடியோடு கைவிட்டன. அத்தோடு தமது சொந்த குட்டியரசுகளை ஸ்தாபிதம் செய்வதற்கு ஏதோ ஒரு பெரும் வல்லரசினது ஆதரவை அப்பட்டமாக நாடுகின்றன. இதற்குக் கைம்மாறாக இவை ஒவ்வொன்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தமது "சொந்த" தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டலுக்கு வழங்குகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய சோ.ச.க.வின் முக்கிய விமர்சனம் அது "தேசிய விடுதலைப் போராட்டத்தை அரைவழியில் காட்டிக் கொடுக்கின்றது" என்பது அல்ல. ஆனால் அதற்கு மாறாக அது குறிப்பிடும் இலக்குகளை அடைவதில் பூரண வெற்றி காணினும் கூட தமிழரின் பரந்த பெரும்பான்மையினரின் தேவைகளை இட்டு நிரப்ப அது இலாயக்கற்றது என்பதேயாகும். தமிழீழ விடுதலை புலி தலைவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஏழைகளதும் வாழ்க்கைத் தரங்களை உயர்த்த என்ன செய்யப் போகிறார்கள்? நிறைவேற்றப்படாத தேசிய, ஜனநாயக பிரச்சினைகளுக்கு வழங்கும் தீர்வு என்ன? அவர்கள் எந்த விதத்தில் தென் ஆபிரிக்காவின் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் (ANC) அல்லது மத்திய கிழக்கின் பாலஸ்தீன விடுலை இயக்கத்தில் (PLO) இருந்து வேறுபடப் போகின்றார்கள்? தீவின் வடக்கு, கிழக்கில் தற்சமயம் வாழும் சிறுபான்மை குழுக்கள்- சிங்களவர், தமிழ் முஸ்லீம்கள்- சம்பந்தமான அவர்களின் அணுகுமுறை என்ன?
தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க இலாயக்கற்றதாகும். ஏனெனில் அவ்வாறு செய்வது "தமிழ் தேசியத்தின் அனைத்து வர்க்கங்களையும்" பிரதிநிதித்துவம் செய்வதற்கு மாறாக அவர்கள் ஒரு குறுகிய குட்டி முதலாளித்துவ தட்டினரில் சார்ந்து கொண்டுள்ளதை அது அம்பலப்படுத்திவிடும். பீ.எல்.ஓ.வையும் ஆபிரிக்க தேசிய காங்கிரசையும் (ANC) போல் விடுதலைப் புலிகள் முதலாளித்துவச் சுரண்டலை தொடரும் கொடுக்கல் வாங்கல்களை ஏகாதிபத்தியத்துடன் செய்து கொள்ள முயற்சிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் சர்வதேச நிதி மூலதனத்துக்கும், பெரும் வல்லரசுகளுக்கு அரசியல் ரீதியிலும் அடியோடு அடிபணிந்து போன ஒரு முதலாளித்துவ தமிழ் ஈழத்தில் "தேசிய சுதந்திரம்" உண்மையில் ஒரு அரசியல் கற்பனையாக விளங்கும் என்பதை வெகுவிரைவில் கசப்பான ஏமாற்றத்துடன் காண்பர்.
 
( தொடரும்...)
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-2)
 
 
வரலாற்று பிரச்சனைகள்

எவ்வாறெனினும் தங்களின் மின் அஞ்சலுக்கு பதிலளிக்கும் எனது நோக்கம்,உங்களின் கருத்துக்களுக்கு லெனினின் ஆக்கங்களிலோ அல்லது ஏனைய மார்க்சிஸ்டுகளின் படைப்புக்களிலோ ஆதரவைத் தேடிக் கொள்ள முடியாது என்பதை விளக்குவதோ அல்லது எங்களின் கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு உங்களைத் தூண்டுவதோ அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விமர்சனமற்ற ஆதரவை வழங்கும் பாதையில் செல்லாத சித்தாந்த பொதியாக நீங்கள் வெறுப்புடன் கணிக்கும் மார்க்சிசத்துக்கோ மார்க்சிஸ்டுகளுக்கோ அல்லது "வர்க்கப் போராட்ட வடிவங்களுக்கோ" உங்களுக்கு கால அவகாசம் கிடையாது என்பதை தெட்டத் தெளிவாக்கி விட்டீர்கள்.

ஆனால் SR போலல்லாது நீங்கள் வரலாற்றின் அரங்கில் துணிச்சலுடன் காலடி வைத்துள்ளீர்கள். அத்தோடு அங்ஙனம் செய்கையில் நீங்கள் அதை அறிந்தோ அல்லது அறியாமலோ மார்க்சிசத்தையும் வர்க்கரீதியான ஆய்வையும் நிராகரிப்பதனால் வரும் பிற்போக்கு தாக்கங்களை பெரிதும் பூரணமாக அம்பலப்படுத்த சமாளித்துக் கொண்டுள்ளீர்கள். இலங்கையின் வரலாற்றை "இனம்" "தேசியம்" என்ற அர்த்தத்தில் மறுவியாக்கியானம் செய்வதன் மூலம் நீங்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை ஒதுக்கிவிட அல்லது பொய்மைப் படுத்த தள்ளப்பட்டுள்ளதோடு மட்டுமன்றி பல்வேறு தமிழ், சிங்கள இனவாத, மத இயக்கங்கள் பொதுவில் கொண்டிராத ஒரு முற்போக்கு பண்பை அவற்றுக்கு வழங்கவும் நேரிட்டுள்ளது.
உங்களை வழிநாடாத்தும் அளவீடாக (criterion) "இனத்தை" பயன்படுத்துவதன் காரணமாக நீங்கள் சிங்கள சோவினிச சித்தாந்த வாதிகள் பயணம் செய்யும் அதே படகில் பயணம் செய்வதால் பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்துக்கு (Buddhist revivalist movement) புகழ்பாட நேரிட்டுள்ளது. பல இடங்களில் நீங்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கம் "சிங்கள பெளத்தர்களின் ஜனநாயக அபிலாசைகளின் சாராம்சத்தை ஈடுசெய்ய பரிதாபமான முறையில் தவறிவிட்டது" எனக் கூறும் அடிப்படை கருத்தை மீள முன்வைக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள்19ம் 20ம் நூற்றாண்டுகளின் பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்துடனும் "தமக்கேயுரிய பாணியில் பிரித்தானிய ஆட்சியை எதிர் கொண்ட" அனகாரிக தர்மபால போன்ற புள்ளிகளுடனும் இனங்காட்டிக் கொள்கின்றீர்கள்.
அத்தோடு நீங்கள் "என்னதான் தவிர்க்கமுடியாத வரையறைகளும் குறைபாடுகளும் இருந்த போதும் ஆறுமுகம் நாவலர் போன்ற தமிழ் தேசாபிமானிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிஜ தமிழ் காலனித்துவ எதிர்ப்பு இயக்கம்... பெரிதும் முற்போக்கானது" எனக் கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அதனது வடிவத்தினால் (அல்லது தோற்றத்தினால்) வெளித்தள்ளப்படினும் அது அவர்களின் "வர்க்கப் போராட்ட" வடிவத்தினுள் பெரிதும் ஒத்து இணங்கிப் போகாது விடினும் அவர்கள் ஒரு சாதகமான வழியில் அதனுடன் தொடர்புபடுத்த தவறியது ஏன் என்பதை விளக்கும்."
நீங்கள் அதைத் தொடர்ந்து -இன்றைய யுத்தத்துக்கு இட்டுச் சென்ற இன மோதுதல்- "வீழ்ச்சியடைந்த காலனித்துவத்துக்கு பிந்திய சதிகளின்''பின் ஏற்பட்டதற்கான காரணங்களை Ü). ஒரு இரண்டு தேசிய தீவில் ஒற்றையாட்சி அரசு தன்னிச்சையாக திணிக்கப்பட்டமை, ஆ). சோசலிஸ்டுகள் இந்த அநீதியான அரசியலமைப்பு தீர்வை சவால் செய்ய தவறியமை, இ). சோசலிஸ்டுகள் இரண்டு தேசிய மறுமலர்ச்சி இயக்கங்களையும் கணக்கெடுக்கத் தவறியமை" என்பனவே என ஊகிக்கச் செய்கின்றீர்கள்.
மறுவார்த்தையில் சொன்னால் சிங்கள தமிழ் மக்களிடையேயான இனவாத இயக்கங்களை சோசலிஸ்டுகள் விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டு ஒத்துப் போயிருக்க அல்லது இனவாத அடிப்படையில் குட்டி இலங்கைத் தீவை கூறுபோட பிரச்சாரம் செய்ய "தவறியமை" இன்றைய இரத்தம் தோய்ந்த யுத்தத்துக்கான காரணமாகக் கொள்ளப்படுகின்றது. உண்மையில் நீங்கள் காட்ட முயற்சிப்பது எல்லாம் உலகை இனவாத கண்ணாடிகளூடாக தரிசிக்க எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் யதார்த்தத்தை தவிர்க்க முடியாத விதத்தில் தலைகீழாக்குவதில் போய் முடியும் என்பதையேயாகும்.
காலனித்துவ எதிர்ப்பு குணாம்சங்களை கொண்டு இருந்ததாக நீங்கள் குறிப்பிடும் இயக்கங்கள், முக்கியமாக பிற்போக்கு பார்வையைக் கொண்டிருந்ததோடு பிரித்தானிய காலனித்துவத்தின் தாக்கங்களுக்கு எதிராக சுதேச ஆளும் பிரமுகர்களது அந்தஸ்தையும் அவர்களது கலாச்சார சீர்திருத்தங்களையும் தொடர்ந்து பராமரிப்பதையும் இலக்காகக் கொண்டிருந்தன என்பதை நாம் காட்டுவோம். இலங்கை முதலாளி வர்க்கம் சோசலிச இயக்கத்துக்கு எதிராக இந்த சித்தாந்த வேர்களை அணைத்துக் கொள்ள தள்ளப்பட்டது என்ற உண்மையானது எந்த விதமான முற்போக்கு போராட்டத்தையும் நடாத்த முற்றிலும் இலாயக்கற்ற அதன் தன்மையை அம்பலப்படுத்துகின்றது.
1940 பதுகளிலும் 1950பதுகளின் ஆரம்ப காலப்பகுதியிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் தன்பக்கம் கணிசமான அளவு சிங்கள, தமிழ் தொழிலாளர் தட்டினரை வெற்றி கொண்டது. இனவாதத்துக்கும் வகுப்புவாதத்துக்கும் எதிராக நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வர்க்க முன்நோக்குக்காக பிரச்சாரம் செய்வதன் மூலம் அது இதைச் சாதித்தது. அதனது நிஜமான தோல்வி, இப்போது நீங்கள் சோசலிச சமத்துவக் கட்சிக்கு பிரேரிக்கும் கொள்கைகளுக்கு இயைந்து போனதன் காரணமாக ஏற்பட்டது.1950பதுகளில் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) படிப்படியாக சிங்கள இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (SLFP) அடிபணிந்து போகச் செய்தது. இந்த அரசியல் நாற்றமெடுப்பு 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைந்து கொண்டதன் மூலம் உச்சக் கட்டத்தை அடைந்தது. இந்தக் காட்டிக் கொடுப்பு தொழிலாளர் வர்க்கத்துக்கு பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணியதோடு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) ஜே.வி.பி. (JVP) போன்ற இனரீதியான அமைப்புக்களின் தோற்றத்துக்கும் இட்டுச் சென்றது.
 
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-3)
 
 
மறுமலர்ச்சி இயக்கங்கள்
ஜனநாயக, முற்போக்கு பண்புகள் கொண்டதாக நீங்கள் வருணிக்கும் இலங்கையின் ஆரம்பகால இயக்கங்களின் தன்மை என்ன?
பெளத்த மறுமலர்ச்சி இயக்கம், 19ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் பிரித்தானியரது அரசியல், பொருளாதார வாழ்க்கையின் மேலாதிக்கத்துக்கும் அவர்கள் பயிரிட்டு இருந்த ஆங்கிலக் கல்வி கற்ற, கிறிஸ்தவ மத பிரமுகர்களுக்கு எதிராகவும் பிரித்தானிய காலனித்துவ இலங்கையில் தோன்றியது. இது தோமஸ் அமரசூரிய, சைமன் பெரேரா அபேவர்தன, டொன் டேவிட் ஹேவாவித்தாரண போன்ற செல்வந்த சிங்கள நிலச்சுவாந்தர்கள்,வர்த்தகர்களால் தலைமை தாங்கப்பட்டு, ஆதரவளிக்கப்பட்டது. இதன் முன்நோக்கு கடந்த காலத்துக்கு திரும்புவதாக விளங்கியது. இந்த மறுமலர்ச்சிவாதிகள் காலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிராக பயணம் செய்த போதும் அது பெளத்த உயர் பீடத்தினர், உயர்சாதி பிரபுக்கள், சிங்கள கல்விகற்ற புத்தி ஜீவிகள், தொழில் அதிபர்கள் ஆகியோரின் ஆசாபாசங்களையும், மனக்குறைகளையும் பிரதிபலித்தன. இவர்கள் பிரித்தானியரின் கீழ் தமது அந்தஸ்தையும் சலுகைகளையும் இழந்து போயிருந்தனர்.
ஹேவாவித்தாரண பிற்காலத்தில் அனகாரிக தர்மபால என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார். இவர் இந்த இயக்கத்தின் பிரதம சித்தாந்தவாதியாக விளங்கினார். இவர் சிங்கள புராணக் கதைகளில் இருந்தும் 6ம் நூற்றாண்டின் பெளத்த நூலான மகாவம்சத்திலிருந்தும் திரட்டிக் கொண்ட கட்டுக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு சித்தாந்தத்தை உருவாக்கினார். அது சிங்களவர்களை வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியரின் வம்சாவளிகளான ஒரு "அற்புதமான இனம்" எனப் பிரகடனம் செய்து கொண்டது. பெளத்தத்தின் பாதுகாவலர்கள் எனவும் இலங்கைத்தீவை ஒரு "காட்டுமிராண்டிகளின் நாசங்களால் பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர் சுவர்க்கம் ஆக்கியவர்கள்" எனவும் கூறியது.
அவர் பிரித்தானியருக்கு எதிராக ஒரு அறவழி புனித மதப் போருக்கு அழைப்பு விடுத்து எழுதுகையில் கூறியதாவது: புராதன மகத்தான சிங்களவர்களுக்கு இழிவான பழக்கவழக்கங்கள் இன்று ஐரோப்பிய சமூகவியலின் செல்வாக்கின் கீழ் சகித்துக் கொள்ளத் தக்கவையாகிவிட்டன: அபின், சாராயம், மதுபானம், கஞ்சாவும் ஏனைய நஞ்சுகளும் அவை மக்கள் மீது ஏற்படுத்தும் நாசகார விளைவுகளை பொருட்படுத்தாமல் கிராமங்களில் விநியோகிக்கப்படுகின்றன... ஒரு பழைய வரலாற்று இனத்தின் இனிய,மிருதுவான, மென்மையான ஆரிய குழந்தைகள் விஸ்கி குடிப்பதன் மூலமும் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமும் மத நம்பிக்கையற்ற வயிற்றுமாரி தெய்வங்ளுக்கு பலியிடப்பட்டு வருகின்றது. எவ்வளவு காலம் அந்தோ எவ்வளவு காலம் இந்தக் கொடுமை இலங்கையில் நின்று பிடிக்கும்?"
ஆரம்பத்தில இந்த மறுமலர்ச்சி இயக்கம் பிரித்தானியருக்கு எதிராக நெறிப்படுத்தப்பட்டதாக விளங்கியது. வெளிப்படையாக தமிழர் எதிர்ப்பானதாக இல்லாத போதிலும் இதனது இனவாத குணாம்சங்கள் தமிழ் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மூலம் ஏற்கனவே வெளிப்பாடாகி இருந்தது. 1915ல் சிங்கள செல்வந்தர்களால முஸ்லீம்களுக்கு எதிராக ஒழுங்கு செய்யப்பட்ட இனக் கலவரங்கள் இடம்பெற்ற சிறு காலத்துள் தர்மபால எழுதியதாவது: சிங்களவர்களுக்கு பெளத்தம் இல்லாவிடின் மரணம் விரும்பத் தக்கது. பிரித்தானிய அதிகாரிகள் சிங்களவர்களை சுடலாம், தூக்கிலிடலாம் அல்லது எதையும் செய்யலாம். ஆனால் முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே ஒரு கெட்ட இரத்தம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்."
1930பதுகளில் பெளத்த மறுமலர்ச்சியின் ஆதரவாளர்கள் நாஸி ஜேர்மனியையும் ஆரியன் மேலாதிக்கம் பற்றிய இனவாதக் கோட்பாடுகளையும் வெளிவெளியாக ஆதரித்தனர். இலங்கை தொழிற் கட்சியை ஸ்தாபிதம் செய்து, கொழும்பில் தொழிற்சங்கங்களை அமைத்த ஏ.ஈ.குணசிங்க சோசலிச லங்கா சமசமாஜக் கட்சியின் வளர்ச்சி கண்டு வந்த செல்வாக்கை எதிர்கொள்ளும் பொருட்டு தென்னிந்திய கேரளாவில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு எதிரான இனவாதத்தில் ஈடுபட்டார்.
1936ல் ஒரு எழுத்தாளர் குணசிங்கவின் பத்திரிகையான 'வீரயா'வில் (Hero)எழுதுகையில் சிங்கள இனம் "ஒரு நற்குணமும் உறுதியும் கொண்ட மக்கள் குழு- ஆரிய இனத்தை ஆழிவில் இருந்து காக்கும் கொள்கைகளை அமுல் செய்யும் ஹிட்லர் போன்ற ஒரு மாபெரும் நற்குணமும் உறுதியும் கொண்ட மற்றொரு மாவீரனை தலைவனாகக் கொண்டிருக்க வேண்டும்" என்றது. இதே இதழில் வெளியான மற்றொரு கட்டுரையில் ஒரு எழுத்தாளர் வெளிநாட்டவரை திருமணம் செய்வதை தடை செய்யும் நாஸி நடவடிக்கைக்கு இணக்கமாக எழுதி இருந்தார். "ஆரியர் பிள்ளைகளுக்கும் ஆரியர் அல்லாதார் பிள்ளைகளுக்கும் இடையிலான திருமணங்கள் எந்தவொரு கற்பும் அற்றதாக விளங்கும்" என்ற ஹிட்லரின் வெளிநாட்டார் மீதான வெறுப்பறிக்கையாக அது விளங்கியது.
சுருங்கச் சொன்னால் எழுச்சி கண்டு வந்த சோசலிச இயக்கம் முற்றிலும் இன, மத அடிப்படையில் சிங்களவர்களை ஐக்கியப்படுத்தும் பொருட்டு குணசிங்க அல்லது 1932ல் சிங்கள மகா சபாவை அமைத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்ற வலதுசாரி அசிங்கங்களை எப்படி "விபரித்திருக்கவேண்டும்''? சமசமாஜ கட்சி தலைவர்களின் பிற்கால அரசியல் நாற்றமெடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவே அவர்கள் சிங்கள பெளத்த சோவினிச சித்தாந்தங்களுக்கு எதிராக 1930பதுகளிலும்1940பதுகளிலும் கடைப்பிடித்த கொள்கைப்பிடிப்பான அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டனர்.
1939ல் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா ஆற்றிய ஒரு உரையில் பண்டாரநாயக்கவின் சிங்கள மகா சபை "ஒரு ஆபத்தான பிற்போக்கு அமைப்பு" என சரியான விதத்தில் எச்சரிக்கை செய்தார். "இதனது அழைப்பின் தன்மை அரசியல் ரீதியில் பின்தங்கிய கண்டி மாகாணத்திலும் கீழ்நாட்டின் ஜாதி நோக்குடைய பகுதிகளிலும் நல்ல செல்வாக்குப் பெற்றதில் இருந்து நன்கு தெளிவாகியது. வேறு சூழ்நிலைகளில் இது மண்ணிற பாசிசத்தின் (ஜேர்மன் பாசிசத்தின்) உள்ளூர் வகையறாக்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்திருக்கும். ஆனால் இருந்து கொண்ட நிலைமைகளின் படி இது தலைமை இல்லாததாலும் ஒரு குறுகிய சமூக அடிப்படை காரணமாகவும் வரலாற்று சக்திகளின் தன்மை காரணமாகவும் இது தோல்வியின் விதிக்கு உள்ளானது. எந்த விதத்திலும் இது முதலாளி வர்க்க எதிர்த்தாக்குதலின் மற்றொரு வடிவத்தை உள்ளடக்கிக் கொண்டு இருந்தது."
நீங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் அடிப்படை அரசியல் தகவமைவில் தெற்கில் இருந்து வந்த அதனது சிங்கள பெளத்த சகாவில் இருந்து வேறுபட்டது அல்ல. நீங்கள் ஒரு "தமிழ் தேசாபிமானி"யாகக் கொண்டாடும் ஆறுமுக நாவலர் தர்மபாலவைப் போல் பிரித்தானியரால் அவர்களது காலனித்துவ ஆட்சியை தாங்கிப் பிடிக்க விதைக்கப்பட்ட கிறீஸ்தவ தட்டினருக்கு எதிராக பாரம்பரிய தமிழ் மேல்தட்டினரின் நலன்களைக் கட்டிக் காக்க முயன்றார். கிறிஸ்தவ மிஷனரிகளின் (Missionaries) செல்வாக்கை எதிர்கொள்ளும் பொருட்டு அவர் கிறிஸ்தவத்துக்கு எதிராக வாதங்கள் நிறைந்த கட்டுரைகளை எழுதினார். சைவமதத்தின் மகத்துவத்தை காக்கும் நிலைப்பாட்டில் இருந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டதோடு தனது சொந்த சைவசமய பாடசாலைகளையும் ஸ்தாபிதம் செய்தார். அவரது நூல்களில் பலவும் இந்து சாதி முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின. இலங்கை வரலாற்றாசிரியர் ஒருவர் நாவலரைப் பற்றியும் "இந்து மறுமலர்ச்சி" பற்றியும் கருத்து தெரிவிக்கையில் "எவ்வாறெனினும் அவர் தலைமை தாங்கிய இயக்கம் (இந்து) வைதீகத்தை பலப்படுத்தியதோடு சாதி முறையின் அட்டூழியங்களை மேம்படுத்த எதுவும் செய்யவில்லை" என கவனமாக குறித்து வைத்துள்ளார்.
நாவலரின் சீடர்கள் சைவசமயத்தை பிரச்சாரம் செய்யும் பொருட்டு சைவ பரிபாலன சபையை வடக்கிலும் பின்னர் கொழும்பிலும் ஸ்தாபிதம் செய்தனர். அவரின் இரண்டு முக்கிய ஆதரவாளர்கள் -யாழ்ப்பாண செல்வந்த குடும்பச் சகோதரர்களான பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம்- தீவின் அரசியலில் பிரபல்யம் பெற்று விளங்கினர். நாவலரின் ஆதரவோடு இராமநாதன் காலனித்துவ சட்டசபை உறுப்பினரானதோடு சர்வஜன வாக்குரிமையை எதிர்ப்பதிலும், உயர் சாதி இந்துக்களின் சலுகைகளைக் காப்பதிலும் பிரித்தானிய ஆட்சிக்கு தமது விசுவாசத்தை காட்டிக் கொள்வதன் மூலமும் தம்மை பிரபல்யம் பெறச் செய்தார். காலனித்துவ நிர்வாகத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளின் பேரில் இராமநாதனுக்கும் அருணாசலத்துக்கும் பிரித்தானியர் சேர் (Sir) பட்டம் வழங்கி கெளரவித்தனர்.

நீங்கள் புகழ்ந்து பாராட்டும் அந்த "நிஜ தமிழர் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின்" வர்க்கத் தன்மை அத்தகையதாக விளங்கியது.
 
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-4)
 
 
சுதந்திரம்
பிரித்தானியருக்கும் உள்ளூர் - தமிழ், சிங்கள - ஆளும் பிரமுகர்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட சுதந்திர ஒப்பந்தத்தை எதிர்ப்பது சம்பந்தமாக ட்ரொட்ஸ்கிச இயக்கம் வகித்த நிலைப்பாட்டை நீங்கள் முற்றிலும் சம்பந்தமற்ற ஒன்று என தள்ளுபடி செய்கின்றீர்கள். உங்களின் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டின்படி கொள்கை பிடிப்பான அடிப்படை விவகாரம் "இரண்டு தேசியங்களின் தீவின் மீது ஒற்றையாட்சி தன்னிச்சையாக திணிக்கப்பட்டது" என்பதேயாகும். "அச்சமயத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளிடம் இருந்து ஈழம், ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச குடியரசுக்கான அழைப்பு வெளிப்படாதது விந்தையானது இல்லையா!" என நீங்கள் வியக்கின்றீர்கள்.
ஒரு ஈழம், ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச குடியரசுக்கான சுலோகத்தை எழுப்பும் பிரச்சினை அச்சமயத்தில் ஒரு தமிழீழம் தனி அரசுக்கான கணிசமான இயக்கம் தமிழர்களிடையே இல்லாததால் தோன்றவில்லை. உண்மையில் அன்றைய தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஒரு சுயாதீனமான தமிழ் அரசு பற்றிய பிரச்சினையில் மட்டுமன்றி அவர்களது சிங்கள சகாக்களைப் போல் மொத்தத்தில் சுதந்திரம் பற்றிய பிரச்சினையிலும் "ஈடாட்டம் கண்டு" போயிருந்தனர்.
காந்தியும் நேருவும் ஏனைய முதலாளித்துவ அரசியல்வாதிகளும் காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த இந்தியா போலல்லாது இலங்கையில் அவர்களது சகாக்கள் எவருமே குறிப்பிடத்தக்க எந்த ஒரு பாத்திரத்தையும் வகிக்கவில்லை. காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்துக்கு லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) தலைமை தாங்கியது. அதனது யுத்த எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக 1940ல் அது சட்ட விரோதமாக்கப்பட்டதோடு இரகசியமாகத் தொழிற்படவும் தள்ளப்பட்டது. 1942ல் சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்கு ஓட்டம் எடுத்ததன் பின்னர் லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்கள் கட்சியை ஒரு அகில இந்திய கட்சியாக- இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியாக (BLPI)- ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக- மாற்றியமைத்தனர்.
உங்களது வாதத்தின்படி நீங்கள் 1940பதுகளில் இலங்கை சோசலிஸ்டுகள் பிரித்தானிய இலங்கையில் இரண்டு தனியான தேசிய அரசுகளை சிருஷ்டிப்பதற்கான உறுதியான வக்கீல்களாக இருந்திருக்க வேண்டும் என்கின்றீர்கள். அக்காலத்தில் இந்தப் பிரச்சினையை எவரும் எழுப்பியிராத போதிலும் இதைச் செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள். இந்த விடயத்தை நாம் இந்தியாவுக்கு பிரயோகித்தால் உங்களின் நிலைப்பாட்டின்படி இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சித் தலைமை பிரித்தானிய இராஜதானியை பிற்பகுதியில் தேசிய சுதந்திர இயக்கங்கள் எனப்படுபவை தோன்றிய காஷ்மீர்,பஞ்சாப் மற்றும் பல வட கிழக்கு அரசுகள் கொண்ட தேசியங்களின் ஒட்டு வேலையை பிரிக்கும்படி பிரேரிப்பதில் முன்னணியில் நிற்கவேண்டி இருந்திருக்கும்.
நாம் இந்த விடயத்தை இன்னொரு படி முன்னெடுப்போம். ட்ரொட்ஸ்கிச இயக்கம் இலங்கையில் பெளத்த, இந்து மறுமலர்ச்சி இயக்கங்களை "விவரிக்க படுமோசமாக தவறியிருப்பின்" அது பாகிஸ்தானில் முஸ்லீம் லீக் போன்ற வகுப்புவாத இயக்கங்களின் "ஜனநாயக பண்பையும்" அதனது பாகிஸ்தான் தனிநாட்டு கோரிக்கையையும் அங்கீகரிக்கத் தவறியமைக்காகவும் கூட அது கண்டனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆதலால் மார்க்சிஸ்டுகள் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியத் துணைக்கண்டத்தை மத அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என பிரித்ததையும்- இனக்கலவரங்களில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தது உட்பட - அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளையும் புகழ்ந்து பாராட்டியிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பிரித்தானியர் அதையே இலங்கையில் செய்து இருந்தால்- வடக்கிலும் கிழக்கிலும் ஒரு இந்து ஈழத்தையும் தெற்கில் பெளத்த ஸ்ரீலங்காவையும் ஸ்தாபிதம் செய்து இருந்தால்- அது உங்களின் முன்நோக்கை பூர்த்தி செய்யப் பங்களிப்புச் செய்வதாக இருந்திருக்கும்.
ட்ரொட்ஸ்கிச இயக்கம் அந்தச் சமயத்தில் அத்தகைய பிற்போக்கு போக்கினை சரியான முறையில் எதிர்த்தது. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி (BLPI) தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு கட்சியை கட்டியெழுப்ப வெறுமனே இலங்கையில் மட்டுமன்றி இந்தியத் துணைக் கண்டம் பூராவும் ஒரு கட்சியை கட்டியெழுப்பும் முன்நோக்கையே அடிப்படையாகக் கொண்டு இருந்தது. இலங்கை முதலாளி வர்க்கத்துடன் சேர்ந்து, இலங்கையில் ஒரு தனியான அரசை அமைப்பது என்று பிரித்தானியா எடுத்த தீர்மானம் கொந்தளிப்பு நிறைந்த துணைக் கண்டத்தில் தனது நலன்களைக் கட்டிக் காக்கும் பொருட்டு ஒரு பாதுகாப்பான நடவடிக்கை தளத்தை ஸ்தாபிதம் செய்வதை இலக்காகக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டியது. பிரித்தானியா இலங்கையை ஒரு "ஆசிய அல்ஸ்டர் (அயர்லாந்து)- நீண்டகால பாக்கியான இந்தியப் புரட்சிக்கு எதிரான ஒரு கோட்டை" ஆக்க முயற்சிப்பதாக இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி விளக்கியது. " பிரித்தானியா இலங்கையில் இருந்து இந்தியாவின் இருதயத்துக்கு கைத்துப்பாக்கியை நீட்ட இடமளிப்பதற்கு இலங்கை முதலாளித்துவ வர்க்கம் இலஞ்சம் பெறவும் சலுகை பெறவும் பெரிதும் தயாராக உள்ளது" எனவும் அது மேலும் குறிப்பிட்டது.
இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி இலங்கையிலும் வேறு இடங்களிலும் அடைந்த சுதந்திர தீர்வுகளின் போலித்தன்மையை சுட்டிக் காட்டியது. ஏகாதிபத்தியம் தனது நலன்களை பேணும் பணியை சுதேச முதலாளி வர்க்கத்திடம் கையளித்தது. அது பொருளாதார ரீதியில் பெரும் வல்லரசுகளில் அடியோடு தங்கியிருந்ததோடு அரசியல் ரீதியில் அவற்றுக்கும் கீழப்படிந்தும் வந்தது. இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் இதை விளக்குகையில் கூறியதாவது: "புதிதாக அவர்கள் அடைந்து கொண்டதாக கூறுவது சுதந்திரம் அல்லாதது மட்டுமன்றி உண்மையில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கான இலங்கையின் அடிமைத்தனத்தின் சங்கிலியை புதுப்பாணியில் செய்து கொள்வதாகும். இது பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது பாத்திரத்தை இட்டு நிரப்பும் விதிமுறையை தொடர்வதாகும்... பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை இலங்கையில் நன்கு பூரணமாக நிர்வகிக்கும் பொறுப்பு இலங்கையின் சுதேச சுரண்டல் வர்க்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது."
அத்தகைய ஏற்பாடுகளின் இழிவான தன்மை இலங்கையில் சிறப்பாக தெளிவாகியுள்ளது. அங்கு டீ.எஸ்.சேனநாயக்க போன்ற முதலாளி வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள் -ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு வளர்ச்சி கண்டு வரும் ஆதரவுக்கு குழிபறிக்க- சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.1946ம் ஆண்டிலேயே- வரலாற்று ரீதியில் சொன்னால் இறுதி நிமிடத்தில்- முதலாளி வர்க்கம் தனது சொந்த அரசியல் கட்சியை- ஐக்கிய தேசிய கட்சியைக் (UNP) கூட ஸ்தாபிதம் செய்தது.
இந்தப் போக்கினை விபரிக்கையில் ஒரு வரலாற்றாசிரியர் பின்வருமாறு வருணித்தார்: "(1947ல்) லண்டன் வெள்ளை மண்டபத்தில் (white hall- colonial office in London) பேச்சுவார்த்தைகள் ஓ.ஈ.குணதிலகவினால் (அரச சபை அமைச்சர்) சேனாநாயக்கவின் சார்பில் கையாளப்பட்டன. சேனநாயகவும் அவரது சகாக்களும் இடதுசாரி சக்திகளிடம் இருந்து அதிகரித்த அளவிலான நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டது. ஏனைய விமர்சனங்களுக்கு அப்பால் அவர்களின் அரசியல் உயிர் வாழ்க்கையை ஊர்ஜிதம் செய்வது அவசியமானால் டொமினியன் அந்தஸ்தை உடனடியாக வழங்குவது இப்போது அவசரமாகியுள்ளது."
இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி இந்த அதிகாரக் கையளிப்பு வைபவங்களை பகிஷ்கரித்ததோடு சுதந்திரத்தின் மோசடி தன்மையையும் பிரித்தானியாவால் திணிக்கப்பட்ட அரசியலமைப்பையும் எதிர்க்கும் பொருட்டு கொழும்பு காலிமுகத் திடலில் ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கும் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்புக்கு இணங்க 50.000க்கும் அதிகமான மக்கள் இதில் கலந்து கொண்டனர். தொழிலாளர் வர்க்கம் யூ.என்.பி. அரசாங்கத்தை வசதிவாய்ப்புகள் படைத்த பிரமுகர்களின் கையாளாகக் கணக்கெடுத்து சவால் விடுத்தது.
சுதந்திரத்தைத் தொடர்ந்து நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதற்கு முரணான விதத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் தொழிலாளர் வர்க்கத்தினுள் -தமிழ், சிங்களத் தொழிலாளர்கள்- ஒரு கணிசமானஅளவு ஆதரவை வெற்றி கொண்டது. இதற்குக் காரணம், அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காக்க அது நடாத்திய கொள்கைப் பிடிப்பான போராட்டமே. யாழ்பபாண தமிழ் முதலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இலட்சக் கணக்கான தமிழ் தோடட்த் தொழிலாளர்களின் குடியுரிமையை ஒழித்த யூ.என்.பி. அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்கிப் போன அதே வேளையில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி பிற்போக்கு குடியுரிமைச் சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்ததோடு, யூ.என்.பி. "அரசு தேசியத்துடனும் தேசியம் இனத்துடனும் சமமாகக் கொள்ளப்பட வேண்டும்" என்ற பாசிசக் கொள்கையை பிரயோகிப்பதாக எச்சரிக்கையும் செய்தது.
 
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-5)
 
 
சிங்கள தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கம் தவறியமை ''இந்த சமூக சக்திகள் இருதரப்பிலும் உள்ள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு அடிபணியச் செய்தது. இதன் மூலம் வளர்ச்சி கண்டு வந்த சிங்கள பெளத்த மறுமலர்ச்சிப் பிரச்சாரம் காலனித்துவத்திற்கு பிந்திய முதலாவது முதலாளித்துவ அரசாங்கமான யூ.என்.பி. யுடன் மோதிக் கொள்ளச் செய்தது. நன்கு ஸ்தாபிதம் செய்யப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி கையேலாகாத நிலையில் நிற்கையில் புதிய முதலாளித்துவ அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனைப் பதிலீடு செய்யத் தோன்றியது'' என நீங்கள் எழுதுகின்றீர்கள்.
நீங்கள் இரண்டு விடயங்களை தவறாக நோக்குகின்றீர்கள்.
முதலாவதாக, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோன்றியமை தொழிலாளர் வர்க்கத்தினுள் லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) செல்வாக்கின் வளர்ச்சியின் பேரிலான முதலாளி வர்க்கத்தின் பிரதிபலிப்பாக விளங்கியது. இது 1953ம் ஆண்டில் தீவு பூராவும் இடம்பெற்ற ஹர்த்தாலில் பெரிதும் வெளிப்பாடானது. விலைவாசி உயர்வுக்கு எதிரான கதவடைப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் பிரச்சாரங்களுடன் கூடிய பொது வேலைநிறுத்தம் யூ.என்.பி. அரசாங்கத்தினை முழந்தாளிடச் செய்ததோடு அதனை பின்வாங்கவும் செய்தது.
இரண்டாவதாக, லங்கா சமசமாஜக் கட்சி செய்யத் தவறியமை கையேலாத நிலையில் நிற்கவில்லை. மாறாக ஆனால் நீங்கள் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுவதையே அதாவது ஒரு பிற்போக்கு இயக்கத்திற்கு ஜனநாயக முற்போக்கு வர்ணங்களால் கலர் தீட்டுவதன் மூலம் தன்னை பெளத்த மறுமலர்ச்சி வாதத்திற்கு இயைந்து போவதையே அவர்கள் செய்தனர். அங்ஙனம் செய்வதன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சி பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான தனது முன்னைய விமர்சனங்களைக் கைநழுவிவிடத் தொடங்கியது. இது சாதாரணத் தொழிலாளர்களினதும், ஒடுக்கப்பட்ட மக்களின் கண்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பற்றிய அரசியல் நற்சாட்சிப் பத்திரத்தை தூக்கிப் பிடித்தது. இது லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவுக்கும் காட்டிக் கொடுப்புக்கும் வெகுவேகமாக இட்டுச் சென்ற செங்குத்துச் சரிவாகும்.
1953ம் ஆண்டின் ஹர்த்தால் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு ஒரு பிரமாண்டமான அரசியல் அதிர்ச்சியாக விளங்கியது. இது நகரங்கள், பட்டினங்கள், கிராமங்களில் வசித்த சாதாரண உழைக்கும் மக்களுக்கும் - யூ.என்.பி.க்கும் இடையே இருந்து வந்த பிரமாண்டமான பிரிவை எடுத்துக் காட்டியதோடு, மொத்தத்தில் முதலாளி வர்க்க ஆட்சிக்கு ல.ச.ச.கட்சியினால் தலை தூக்கியுள்ள ஆபத்தையும் சுட்டிக் காட்டியது. காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் பெறுபேறாக காந்தி, நேரு போன்ற உறுதியான தலைவர்கள் எவரும் இலங்கை முதலாளித்துவ அரசியல்வாதிகளிடையே தோன்றியது கிடையாது. சிங்கள, நகர்ப்புற, கிராமப்புற குட்டி முதலாளி வர்க்கத்திடையே ஒரு சமூக அடிப்படையை ஸ்தாபிதம் செய்யும் அவசியத்திற்கு முகம் கொடுத்த நிலையில் அவர்கள் (முதலாளி வர்க்கம்) பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் பாரம்பரியங்களின் பக்கம் திரும்பினர்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் ஒரு பெரும் ஆதரவாளரான ஒக்ஸ்போட்டில் கல்வி கற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1930பகளில் சிங்கள மகா சபையை அமைத்தார். இவர் 1951ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபிதம் செய்தார். ஆனால் ஹர்த்தாலின் பின்னர் இடம் பெற்ற 1956 பொதுத் தேர்தலின் பின்னர் பண்டாரநாயக்க பெளத்த மறுமலர்ச்சிவாதத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு அரசியல் மேடையாகப் பரிணாமம் செய்தார். புத்த ஜயந்தியின் 2500 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை அவர் இதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தினார்.
அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச வார்த்தையாலங்களை தாராளமாகக் கையாள்வதன் மூலம் வேலையின்மை, சேவைகள் பற்றாக்குறை வறுமை காரணமாக சிங்கள விவசாயிகளிடம் உருவான விரக்தியை சுரண்டிக் கொள்வதனூடாக, இதனை பிரித்தானியர் ஆட்சியின் கீழ் வாய்ப்புகள் பெற்ற ஆங்கிலம் பேசும் பிரமுகர்களுக்கும் ஆங்கிலேயரின் ஆட்சியில் சலுகைகளை அனுபவித்த தமிழர்களுக்கும் எதிராகத் திருப்பினார். பெளத்தத்தை அரச மதமாக்கியதன் மூலமும் சிங்களத்தை ஒரே அரச மொழியாக்கியதன் மூலமும் பண்டாரநாயக்க ஒரு புதிய 'மத-ஜனநாயக சோசலிசத்தை' உருவாக்கும் எனவும் அதில் சிங்களவர்கள் ஒரு மேலாதிக்க அந்தஸ்த்தைப் பெறுவர் எனவும் விளக்கினார். இக்கொள்கைகளுக்காக வக்காலத்து வாங்குவதன் மூலம் பண்டாரநாயக்க பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தர்க்கவியலில் இயற்கையாக அமைந்தது என்ன என்பதை தெளிவுபடுத்தினார். அது சிங்களவர்கள் ஒரு இணையற்ற இனத்தவர்கள், ஆதலால் இலங்கையின் விவகாரங்களில் அவர்களுக்கு ஒரு சிறப்புரிமையான அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
இந்த வாய்வீச்சின் வாசனையை பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்ட "பெளத்தத்தை காட்டிக் கொடுத்தல்" என்ற தலைப்பில் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை சுமந்து வந்தது. அது கூறியதாவது: "இந்த நாட்டில் இப்போது ஒரு காலனித்துவ அரசாங்கத்தின் வடிவில் ஒரு வெளிநாட்டு அடிமைத் தளையை வெளிப்படையாக காணக் கூடியதாக இல்லாது போனாலும், நாம் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதற்கு முன்னர் இருந்தது போன்ற மறைமுகமான ஞானம்பெறாத போதனைகள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், வழக்காறுகள் போன்ற பிரித்தானியரால் போஷித்து வழங்கப்பட்ட கருத்துக்களுக்கு அடிமைப்பட்ட பிரஜைகளாகவே இருக்கின்றோம். இதன் மூலம் நாம் இன்னமும் மேற்குலகுடன் தார்மீக பிணைப்புக்களைக் கொண்டுள்ளோம்."
இந்த அறிக்கை ஆலயங்களுக்கு கட்டாய உழைப்பை வழங்குவதைக் கொண்ட நிலமானித்துவ முறையை உடைத்ததற்காகவும் ஆலய நிலங்களை திருடியதற்காகவும் பிரித்தானியரைக் கண்டனம் செய்தது. கிறிஸ்தவ, பெளத்த பாடசாலைகளுக்கு நிதி உதவி செய்யும் போது காணப்பட்ட சமத்துவமின்மையை சுட்டிக் காட்டியதோடு, கிறிஸ்தவர்களுக்கு அளவுக்கு அதிகமான செல்வாக்கு வழங்கியமைக்காக அரசாங்கத்தை கண்டனமும் செய்தது. அது மேலும் ''கிறிஸ்தவம் முடிசூடிக் கொண்டுள்ளது'', இலங்கையின் கையும் காலும் கட்டப்பட்டு சிலுவையின் காலடியில் வைக்கப்பட்டுள்ளது எனக் கூறியது. சிங்கள மன்னர்களுக்கு உள்ளது போன்ற அதிகாரங்களைக் கொண்ட புத்த சாசன சபைகளை (Buddha Sasana Council) அமைக்கும்படி கோரியதோடு கடந்த காலத்தவறுகளைத் திருத்த அரசு நிதியுதவி செய்யவேண்டும் எனவும் கோரியது.
பண்டாரநாயக்கவுக்கு உயர் பெளத்த மதபீடம் ஆதரவு வழங்கியது. அது தனது பிக்குகளை நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பிரச்சாரத்திற்காக அனுப்பியும் வைத்தது. யூ.என்.பி. பிரதமர் சேர்.ஜோன். கொத்தலாவலை தீய ஜீவனாக- விஸ்கி குடிக்கும், ஆங்கிலம் பேசும் ஒழுக்கங்கெட்ட புள்ளியாகப் பெயர் சூட்டப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு அபார வெற்றி கண்டது. அது பண்டாரநாயக்கவையும் கூட அதிர்ச்சியடையச் செய்தது. ஒரு பேட்டி காண்பவரிடம் பேசுகையில் அவர் "என் அன்பின் நண்பா, இந்த (சிங்கள) மொழி விவகாரம் மக்களை எழுச்சியடையச் செய்ததை போன்ற எதனையும் நான் ஒரு போதும் காணவில்லை" எனத் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்ததுதான் தாமதம் பண்டாரநாயக்க தனிச் சிங்களக் கொள்கையை அமுல் செய்தார். இதனால் ஆங்கிலத்திற்கு பதிலாக சிங்களம் அரசகரும மொழியாக்கப்பட்டது. இது தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு நேரடிப் பாரபட்சமாக விளங்கியது. அவர்கள் அரசாங்க தொடர்புகளுக்காகப் பேசவோ அல்லது எழுதவோ பாவித்திராத ஒரு மொழியை பயன்படுத்தும் படி கட்டாயப்படுத்தப்பட்டனர். முன்னர் சிங்கள, தமிழ், ஆங்கில, மொழிகளை போதனா மொழியாகக் கொண்டிருந்த பல கல்லூரிகள் சிங்களத்தில் போதிக்கும்படி நெருக்கப்பட்டன. 1960பகளின் முற்பகுதியில் அரசாங்கத்தினால் கையேற்கப்பட்ட மதப் பிரிவுப் பாடசாலைகளுக்கும் இக் கொள்கை விஸ்தரிக்கப்பட்டது.
1958ல் அரசாங்கம் சகல அரச ஊழியர்களையும் சிங்களத் தகுதிகாண் பரீட்சைக்குத் தோற்றும்படி கட்டாயப்படுத்தியது. பரீட்சைக்குத் தோற்ற மறுத்தவர்களும் பரீட்சையில் சித்தியடையாதவர்களும் கட்டாய ஓய்வில் செல்ல நெருக்கப்பட்டனர். அரச அதிகாரத்துவத்தினதும் இராணுவத்தினதும் உயர் மட்டங்களை சிங்கள பெளத்த மேலாதிக்கத்தின் பிடிக்குள் கொண்டிருப்பதை ஊர்ஜிதம் செய்வதே இதன் நோக்கமாக விளங்கியது. இதற்கு பிரபல பெளத்த கல்லூரிகள், பாடசாலைகளில் இருந்து அதிகரித்த அளவில் ஆட்திரட்டல் இடம்பெற்றது.
 
தமிழர்களின் எதிர்ப்புக்கள், இனக் கலவரங்கள் அரச அடக்குமுறைகள் மூலமாக பதிலளிக்கப்பட்டது. சோவினிச இன உணர்வைத் தூண்டி விடுவதில் முக்கிய பாத்திரம் வகித்த பண்டாரநாயக்க, சிங்கள தீவிரவாதிகளுக்கு வேண்டிய விதத்தில் செல்லத் தவறியதால் 1958ல் ஒரு பெளத்த பிக்குவினால் கொலை செய்யப்பட்டார்.
 
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில் (பகுதி-6)
 
 
லங்கா சமசமாஜக் கட்சியின் பொறுப்பு
1950ல் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியுடன் (BLPI) ஒன்றிணைக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி சரியான விதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்த்ததோடு அதன் தனிச் சிங்கள கொள்கைக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை வகித்தது. ல.ச.ச.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மொழியை உயர்ந்த அந்தஸ்த்துக்கு உயர்த்துவதன் மூலமும் மற்றொரு மொழிக்கு பாகுபாடு இழைப்பதன் மூலமும் முதலாளி வர்க்கம் ஒரு இன மோதலுக்கும் யுத்தத்திற்குமான அடிப்படையை உருவாக்குவதாக எச்சரிக்கை செய்தது. "(சிங்கள, தமிழ் மொழிகளுக்கான) சம அந்தஸ்து எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் ஐக்கியத்திற்குமான பாதை என நாம் நம்புகின்றோம். இல்லையேல் ஒரு சிறிய அரசில் இருந்து இரண்டாக பிளவுண்டு போன சிறிய இரத்தம் சிந்தும் இரண்டு அரசுகள் தோன்றலாம்" என கொல்வின் ஆர் டி சில்வா எச்சரிக்கை செய்தார். லங்கா சமசமாஜக் கட்சி தமிழர்களையும் அவர்களது வீடுகளையும் சிங்கள இனவாதக் காடையர்களிடமிருந்து உடல் ரீதியில் காப்பாற்ற கொழும்பின் பகுதிகளில் உள்ள தனது இளஞர் கழக (Youth leagues) உறுப்பினர்களை அணிதிரட்டியது.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சாரத்தின் நெருக்குவாரம் காரணமாக ல.ச.ச.கட்சி பாராளுமன்ற அரசியலின் கட்டுமானத்திற்கும் சிங்கள இனவாதத்திற்கும் இயைந்து போகத் தொடங்கியது. பெளத்த மதத்தின் பேரிலான அதனது மனோபாவம் இரண்டுபட்டது. ல.ச.ச.கட்சி பெளத்த மதம் ஒரு "தனிமனிதனின் விடயம்" எனக் கூறிக் கொண்டது. இது தனி மனிதனின் மதச் சுதந்திரத்தை அரசின் தலையீட்டில் இருந்து பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டில் சரியாக விளங்கியது. ஆனால் இந்த வடிவம், அரச விவகாரங்களில் பெளத்த மதத்தின் ஒருங்கிணைப்பின் வளர்ச்சியை விமர்சனம் செய்ய கட்சி தவறியதை மூடிமறைக்கும் ஒரு திரையாகியது. மார்க்சிஸ்டுகள் அரசும் மதங்களும் (State & Church) தனித்தனியே இயங்குவதை எப்போதும் வலியுறுத்தி வந்தனர். 18ம் 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் ஜனநாயகப் புரட்சிகளின் போது சமய நம்பிக்கையை கருத்தில் கொள்ளாமல் சகலரினதும் சம உரிமையை ஊர்ஜிதம் செய்யும் இந்த அடிப்படைக் கொள்கை உருவாகியது.
ல.ச.ச.கட்சியின் முன்னணித் தலைவர்களில் என்.எம்.பெரேரா போன்ற சில பாராளுமன்றவாதிகள், பெளத்த மதத்தை கடைப்பிடிப்பதை ஒரு போதும் கைநழுவ விட்டது கிடையாது. ஒரு மார்க்சிச கட்சியினுள்ளும் தொழிலாளர் வர்க்கத்தினுள்ளும் ஒரு விஞ்ஞான ரீதியான சோசலிச கலாச்சாரத்திற்கான போராட்டத்தில் மதம் ஒரு போதும் ஒரு "தனிப்பட்ட விவகாரம்" ஆக இருந்ததில்லை. மதரீதியான துன்புறுத்தல்களை சகல கட்டத்திலும் எதிர்த்து வந்த அதேவேளையில் மார்க்சிஸ்டுகள் சமயத்தின் சகல வடிவங்களையும் கடவுள் நம்பிக்கையையும் அடிப்படையில் எதிர்த்து வந்தனர். மதத்தையும் கடவுள் நம்பிக்கையும் ஏற்றுக் கொள்வதாவது சமூக மாற்றமானது தொழிலாளர் வர்க்கத்தினாலும் ஒடுக்கப்படும் வெகுஜனங்களாலும் அல்லாது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளாலேயே பெற்றுக்கொள்ளமுடியும் என்ற கருத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளது.
லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் சீர்கேட்டிற்கு அக்கட்சி மட்டும் பொறுப்பாக இருக்கவில்ல. இது நான்காம் அகிலத்தினுள் (Fourth International) மைக்கல் பப்லோவினதும் ஏர்ணஸ்ட் மண்டேலினதும் தலைமையில் தலையெடுத்த ஒரு சந்தர்ப்பவாதப் போக்கினால் ஊக்குவித்து வளர்க்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பப்லோவாதிகள் முதலாளித்துவத்தின் மறு ஸ்திரப்பாட்டுக்கும் தொழிலாளர் அதிகாரத்துவங்களின் வெளிப்படையான பலத்திற்கும் அடிபணிந்து போய் தொழிலாளர் வர்க்கத்தின் அல்லது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் சுயாதீனமான எந்த ஒரு அரசியல் பங்கினையும் கைவிட்டனர். "ஒவ்வொரு நாட்டினுள்ளும் வெளிப்பாடாகும் வெகுஜன இயக்கங்களுள் நிஜமாக ஒன்றிணைந்து கொள்ள வேண்டும்" என இவர்கள் அழைப்பு விடுத்தனர். ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் பகுதிகள் ஆளுமையான ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அல்லது முதலாளித்துவ தேசியவாத தலைமைகளுடன் இயைந்து போகவேண்டும் என பப்பலோ வலியுறுத்தினார். இலங்கையில் இந்தப் போக்கானது லங்கா சமசமாஜக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிங்கள-பெளத்த இனவாதத்திற்கும் அதிகரித்த அளவில் இயைந்து போனதன் மூலம் வெளிப்பாடாகியது.
ஆரம்பத்தில் சமசமாஜக கட்சித் தலைவர்கள் குறைந்த பட்சம் இலங்கைக்குவெளியிலான பிரச்சனைகள் சம்பந்தமாக சில பாரம்பரியமான நிலைப்பாடுகளைஎடுத்து வந்துள்ள போதிலும் அவர்கள் பப்பலோமண்டேலில் இருந்து பிரிந்துகொள்ளாததுடன்மார்க்சிசத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாக்க 1953ல்அமைக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் அவர்கள்ஒருபோதும் இணைந்து கொள்ளவில்லைபப்பலோவாத ஐக்கிய செயலகத்திற்கும்(United Secretariat) ...கட்சிக்கும் இடையேயான உறவுகள் சந்தர்ப்பவாதஅடிப்படையில் அமைந்து இருந்தனலங்கா சமசமாஜக் கட்சியை "உலகின்மாபெரும் ட்ரொட்ஸ்கிசக் கட்சிஎனத் தூக்கிப் பிடிப்பதன் மூலம் அதுபண்டாரநாயக்கவுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் அதிகரித்த அளவில்இயைந்து போவதற்கான அரசியல் ஆசீர்வாதங்களை ஐக்கிய செயலகம்வழங்கியது.
லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் நெறிகேடுகள், அது பண்டாரநாயக்கவின் விதவை மனைவியால் தலைமை தாங்கப்பட்ட ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தினுள் 1964ல் நுழைந்து கொண்டதோடு உச்சக்கட்டத்தை அடைந்தது. புதிய சமசமாஜக் கட்சி அமைச்சர்களின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதும், புத்தரின் பல் எனக் கூறிக்கொள்ளப்படும் புனித சின்னம் கொண்ட தலதா மாளிகைக்குச் சென்று, பகிரங்க வழிபாட்டில் ஈடுபடுவதுமாக விளங்கியது. ல.ச.ச.க. தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாக நடாத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, தோட்டத் தொழிலாளர்களின் பெரும்பான்மையினரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பண்டாரநாயக்கவுக்கும் இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும் இடையியான உடன்படிக்கையை ஆதரித்தது.
1970ல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வந்தபோது ல.ச.ச.கட்சி அமைச்சர் கொல்வின்.ஆர்.டி சில்வா 1940 பதுகளிலும் 1950 பதுகளிலும் தாம் கூறியவற்றுக்கும் எழுதியவற்றுக்கும் நேர் எதிரான முறையில் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்குப் பொறுப்பாக இருந்தார். இது புத்த மதத்தை அரச மதமாகவும், சிங்களத்தை அரசாங்க மொழியாகவும் உள்ளடக்கி இருந்தது.
1970பகளில் அமைக்கப்பட்ட பண்டாரநாயக்க அரசாங்கம் இன்னும் பல பாகுபாடுகள் கொண்ட நடவடிக்கைகளையும் அறிமுகம் செய்தது. பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை மேலாதிக்கம் பெறும் விதத்தில் இனக்குழு கோாட்டா முறை அமுலுக்கு வந்தது. இது தமிழர்களுக்கு எதிராக அப்பட்டமாகத் தயார் செய்யப்பட்ட கேவலமான தரப்படுத்தல் (Standardisation) முறை மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டது. அரசாங்கத் துறையிலும் இத்தகைய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. புதிதாக தேசியமயமாக்கப்பட்ட வர்த்தகக் கூட்டுத்தாபனங்களின் உயர் பதவிகள் அனைத்தும் சிங்களம் பேசும் பெளத்தர்களுக்கே வழங்கப்பட்டன. தமிழ் பேசும் தொழிலாளர்களை பாரியளவில் கொண்டிருந்த பெருந்தோட்டத் துறையிலும் கூட இப்படியே நடந்தது. அரசாங்கக் கடன்களும், போக்குவரத்து, தொடர்பு சாதன அமைப்புக்களும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களுக்கு நலன் பயக்கும் முறையில் ஏற்படுத்தப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிஜ மூல வேர்கள் இங்குதான் இருக்கின்றனவே அல்லாது கடந்த காலத்தில் இருந்த தமிழ் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் அல்ல.
பண்டாரநாயக்கவின் கொள்கைகள் இனப் பதட்ட நிலைமைக்கு எண்ணெய் வார்த்ததுடன், விரக்திகளை இன, மத அடிப்படையில் வழி திருப்பி விட்டது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் புதிய அரசியல் போக்குகள் தலையெடுத்தன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் திட்டமிட்ட பாகுபாடுகளாலும் தமிழ் அரசியல் கட்சிகளின் சமரச போக்கினாலும் விரக்தியடைந்தனர். இதனால் இவர்கள் அதிகரித்த அளவில் போர்க்குணம் கொண்ட பிரிவினைவாதப் பக்கம் திரும்பினர். முதலாளித்துவ தமிழரசுக் கட்சியின் (Federal Party) இளைஞர் அணியின் அங்கத்தவர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இவர்கள் தமது தனித் தமிழ் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பயங்கரவாத தாக்குதல்களை நடாத்துவதிலும் ஈடுபட்டனர்.
இதற்கு சமாந்தரமாக நாட்டின் தென் பகுதியில் ஒரு போக்கு தலையெடுத்தது. கடந்த காலங்களில் கிராமப்புற மக்களில் கணிசமான பகுதியினர் தாம் முகம் கொடுத்த கடினமான நிலைமையில் இருந்து விடுபட லங்கா சமசமாஜக் கட்சியும், தொழிலாளர் வர்க்கமும் வழிகாட்டும் என எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது ல.ச.ச.கட்சி வேலையின்மைக்கும் பரந்தளவிலான வறுமைக்கும் காரணமான ஒரு அரசாங்கத்தின் பாகமாகியது. அதிருப்தி கண்ட சிங்கள கிராமப்புற இளைஞர்கள் தமது தலைவிதிக்கு தொடர்ந்தும் ஒரு வர்க்கத் தீர்வைக் காணும் சாத்தியம் இருப்பதாகக் காணாததோடு இவர்கள் ஜே.வி.பி.யினாலும் ஈர்க்கப்பட்டனர். இந்த ஜே.வி.பீ. மாஓவாதம் (Maoism), காஸ்ரோவாதம் (Castroism), சிங்கள இனவாதம் போன்றவற்றின் கலவையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இனவாத அடிப்படையிலான இந்தக் குட்டி முதலாளித்துவ இயக்கம் பெரிதும் பிரபல்யம் அடைந்ததற்கான முக்கிய பொறுப்பு லங்கா சமசமாஜக் கட்சியை சார்ந்ததாகும். தனது சோசலிச அடிப்படைக் கொள்கைகளை கைகழுவிவிட்டு விட்டு ஒரு சுயாதீனமானதும் புரட்சிகரமானதுமான தொழிலாள வர்க்க இயக்கம் வளர்ச்சி பெறுவதை தடை செய்தது. முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடிக்கு தனது சொந்த வர்க்கத் தீர்வை தொழிலாள வர்க்கம் வழங்குவதை இது தடுத்தது. 1953ம் ஆண்டின் ஹர்த்தால், சமசமாஜக் கட்சியின் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் கணிசமான அளவு சிங்கள, தமிழ் கிராமப்புற ஒடுக்கப்படும் மக்களை தன்பக்கம் வெற்றி கொள்வதற்கான அதன் சக்தியை வெளிக்காட்டியது. சிங்கள பெளத்த இனவாதத்தை தழுவிக் கொண்டதன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சி இந்த சமூகத் தட்டுக்கள் ஒன்றில் இரு பெரும் முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றின் செல்வாக்குக்கு ஆட்படுவதை அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை நோக்கியும் ஜே.வி.பியின் பக்கமும் திரும்புவதை ஊர்ஜிதம் செய்ததது.
(தொடரும்...)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.