Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

The Life of David Gale - ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

The Life of David Gale - ஒரு பார்வை - தமிழ்மாறன்

 

The Life of David Gale - ஒரு பார்வை - தமிழ்மாறன்

214.jpg
 
மரணதண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒருவன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்படுகிறது. தான் நிரபராதி எனக் கூறிக்கொண்டிருக்கும் அவனது கதையைத் தொகுக்க வருகிறாள் ஒரு பத்திரிகை நிருபர்.
  நடந்தவை எல்லாவற்றையும் சொல்வதாக உறுதியளித்து இறுதி மூன்று நாட்களில் தனது கதையைச் சொல்கிறான் அவன். ஒருகட்டத்தில் அவன் குற்றமற்றவனாக இருக்க வாய்ப்புள்ளது என்று உணரும் அவளும் அவளின் உதவியாளனும் அந்த வழக்கின் பின்னாலிருக்கும் சூட்சுமத்தைத் தேடியலைகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? அவன்தான் கொலைகாரனா? போன்ற வினாக்களுடன் இரண்டு மணிநேரத் திரைப்படம் நகர்கிறது. திரைப்படத்தின் முடிவில் அதிர்ச்சி கலந்த ஒருவிதத் துயர உணர்வோடு பார்வையாளர்கள் விடைபெறுகிறார்கள். மரண தண்டனை குறித்த விரிவான விவாதங்கள் எதுவுமே படத்தில் இல்லையாயினும் பார்வையாளரிடத்தில் அதுகுறித்த சிந்தனையை இத்திரைப்படம் எழுப்பி விடுகிறது.

   
  David Gale  பல்கலைக்கழக விரிவுரையாளன். அத்தோடு மரண தண்டனைக்கெதிரான மிகமுக்கியமான செயற்பாட்டாளனும்கூட. மிகத் தீவிரமாக மரணதண்டனைக்கெதிரான போராட்டத்தை அவனும் அவனது தோழர்களும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் தோல்விகளே. யாருக்காவது மரணதண்டனை நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தடவையும் வீதியில் நின்று போராடுவதும், தண்டனை நிறைவேற்றப்பட்ட அதிகாரபூர்வ அறிப்பைத் தொடர்ந்து ஆற்றாமையோடு திரும்புவதுமென்று இவர்களின் போராட்ட வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.
 
  Constance Hallaway என்பவளும் இந்த மரணதண்டனைக்கெதிரான போராட்டத்தில் முக்கிய செயற்பாட்டாளர். மிக உணர்ச்சிபூர்வமாக இதைச் செய்து வருகிறாள். ஒவ்வொரு தோல்வியின்போதும் ஆற்றாமையால் விம்மி வெடிக்கிறாள். Dusty Wright (Cow Boy)என்பவனும் இவர்களுடன் செயற்படும் முக்கியமானவன்.
 
  ஒருநாள் Constance Hallaway கொலையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறாள். உடைகள் களையப்பட்ட நிலையில் முகத்தை மூடி ஒரு பை கட்டப்பட்டு சுவாசிக்க முடியாமல் அவள் கொல்லப்பட்டிருக்கிறாள். Gale மீது கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறது. மரண தண்டனைக்கெதிராக தன் வாழ்வை அர்ப்பணித்துப் போராடிவரும் ஒருவன், அவ்வாறே போராடிவரும் தனது தோழியைக் கொலை செய்தது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. Gale மீது குற்றச்சாட்டு 'நிரூபிக்கப்பட்டு' அவனுக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
 
gale-.jpg
  Gale இன் இறுதிநாட்களில் Bitsey Bloom என்ற ஒரு பெண் பத்திரிகையாளர் அவனைச் சந்திக்க வருகிறாள். Gale -ன் கதையைத் தொகுப்பதுதான் அவளின் பணி. எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்வதென்ற உறுதிமொழியோடு தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறான் Gale. தான் நிரபராதி என்று Gale அவளிடம் திரும்பத் திரும்ப வாதிடுகிறான். ஒருகட்டத்தில் அவனை நம்பத் தொடங்கும் அந்தப் பெண்ணும் அவளது உதவியாளனும் Gale இன் வழக்கின் பின்னாலுள்ள சூட்சுமங்களை ஆராயத் தொடங்குகின்றனர். பல அதிர்ச்சிகரமான உண்மைகளைக் கண்டறிகின்றனர். ஆனால் எல்லாமே காலம் கடந்ததாக அமைந்து விடுகின்றன.
 
  படம் முழுவதுமே பார்வையாளர்கள் தமது முடிவுகளை மாற்றியவண்ணமே இருக்கும்வகையில் படம் நகர்கிறது. திருப்பங்கள், முடிச்சுக்கள் என்று நகர்ந்து எதிர்பாராத வகையில் முடிவை எட்டுகிறது.
 
  Gale குற்றவாளியல்ல நிரபராதி என்ற முடிவுக்கு வரும் பத்திரிகையாளர் இருவரும் அதை நிரூபிப்பதற்குத் தேவையான ஆவணத்தைக் கைப்பற்ற தீவிரமாக முயல்கின்றனர். ஒருகட்டத்தில் தாம் ஒருவனால் தொடர்ச்சியாகப் பின்தொடரப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை உணர்கின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து வரும் Cow Boy மீது அவ்விருவருக்கும் -  ஏன் பார்வையாளருக்குமே சந்தேகம் வருகின்றது.
 
  ஒருகட்டத்தில், Constance  தானேதான் தற்கொலை செய்துகொண்டாள் என்ற முடிவுக்கு வரும்போது, ஏன் அப்படிச் செய்துகொண்டாள்? தன்னை கற்பழித்து கொலை செய்தார்கள் என்ற தோற்றத்தை  தரும்வகையில்ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? என்ற கேள்விகளோடு படம் நகர்கிறது.
 
  Gale க்கு தண்டனையும் நெருங்கி வருகிறது. இன்னும் 24 மணிநேரங்களே உள்ளன என்ற நிலையில் தன்னால் உன்னைக்காப்பாற்ற முடியாது இன்னும் நேரம் தேவை என்று  Bloom சொல்கிறாள், 'நான் எனக்காக இதைக் கேட்கவில்லை. என்னைக் காப்பாற்றவும் தேவையில்லை. எல்லாமே எனது மகனுக்காக. நான் குற்றமற்றவன் என்பதை எனது மகனுக்காவது நிரூபி' என்கிறான். அதிலிருந்து அந்த இருவரின் தேடுதல் வேட்டையும் திரைப்படமும் சூடுபிடிக்கிறது.
 
  தனது தற்கொலையை மிகக்கொடூரமான ஒரு கொலையாகச் சித்தரித்துச் செத்துப்போனவள், மரணதண்டனைக்கெதிராகக் கடுமையாகப் போராடியவள். தான் சித்தரி்த்த கொலைக்காட்சிக்காகக் கொடுக்கப்படும் மரணதண்டனை தவறானது, தவறான வகையில் ஒருவன் மரணதண்டனைக்கு  உட்படுத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதற்காகவே அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்ற முடிவுக்கு பத்திரிகையாளர் இருவரும் வருகின்றனர். அதற்கான ஆதாரத்தை  Constance Hallaway பதுக்கிவைத்திருக்கிறாள்.

  Gale இறந்தபின்னர் இந்த ஆவணம் வெளிவந்தால்தான் மரணதண்டனை முறை தவறான வகையில் ஒருவனைக் கொன்றுள்ளதென்ற உண்மை வெளிப்படும் அதற்குமுன்பே ஆவணம் வெளிப்பட்டால் Gale மரணதண்டனையிலிருந்து தப்பிப்பான், ஆனால் மரணதண்டனை முறை தவறென்று நிருபிக்க முடியாது என்பதை உணர்ந்து  Gale க்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அது வெளிவரக்கூடியவாறு தனது நம்பிக்கைக்குரிய யாரிடமோ கொடுத்துவைத்திருக்கிறாள் என்பதையும் அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.

 
  தண்டனை நிறைவேற்றப்படும் முன்பு அந்த ஆவணத்தை எப்படியாவது கைப்பற்றி Gale ஐ தண்டனையிலிருந்து மீட்கவேண்டுமென்றுபத்திரிகையாளர் இருவரும் வேகமாக செயற்படுகின்றனர். Gale இற்கான வாழ்நாள் நேரம் மணியாக, நிமிடங்களாகச் சுருங்கிக் கொண்டிருக்கிறது.cow boy யிடம்தான் அந்த வீடியோ ஆவணம் இருக்க வேண்டுமென்றுசந்தேகிக்கின்றனர். அவன்தான் Gale இன் மரணத்தின் பின்னர் அதை வெளியிட்டு மரணதண்டனைக்கெதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போகிறானென்றும் அவர்கள் கருதுகின்றனர்.
 
kate-winslet-life-of-david-gale-86.jpg
  Constance Hallaway ம்cow boy ம் சேர்ந்து திட்டமிட்டுச் செய்த இந்த நடவடிக்கையில் Gale என்ற அப்பாவி பாதிக்கப்பட்டு மரணதண்டனைக்கு ஆளாகப் போகிறான் என்ற பரிதவிப்போடும் கோபத்தோடும் பத்திரிகையாளர்கள் - ஏன் பார்வையாளர்களும்கூடப் பயணிக்கின்றனர். ஒரு சூழ்ச்சி செய்து cow boy யை  வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு அவனது அறையை ஆராயும்போது அந்த ஆவணம் கிடைக்கிறது. 
 
  Hallaway கேமராவைப் பார்த்துப் பேசுகிறாள். கேமரா கோணம்  சரிபார்த்துவிட்டு, திட்டமிட்டபடி கொலைக்காட்சிக்கான தடயங்களை ஏற்படுத்துகிறாள். பிறகு தானாகவே தனது உடையைக் களைந்துவிட்டு தனது முகத்தை பாலிதீன் பேப்பரால் மூடி கட்டுகிறாள் மூச்சுத்திணறி மரணத்தை தழுவுகிறாள். அதுவரை கேமராவின் பின்னால்  நின்ற cow boy அவளருகில் சென்று அவள் இறந்ததை உறுதிப்படுத்திவிட்டுத் திரும்புகிறான். இத்தோடு அந்த வீடியோ ஆவணம் முற்றுப்பெறுகிறது.
 
  மரண தண்டனைக்கெதிரான போராட்டத்தின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து தம்மால் செய்யக்கூடிய உச்சபட்ச போராட்டத்தைச் செய்ய  தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாள் Hallaway.  ஆவணத்தோடு Gale ஐக் காப்பாற்ற பத்திரிகையாளர் இருவரும் ஓடுகிறார்கள்.
 
  வீடியோவோடு மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்கு விரைகிறாள் Bloom. காலத்துக்கெதிரான அவளது ஓட்டத்தில் நிமிடங்கள் கரைகின்றன. சிறையின் வெளியே வழக்கம்போல்  மரணதண்டனைக்கெதிரான செயற்பாட்டாளர்கள் போராடுகிறார்கள். ஊடகங்கள் அதிக கவனத்தோடு நிகழ்வை ஒளிபரப்பிக் கொணடி்ருக்கிறார்கள். 'அவன் கொல்லப்படத்தான் வேண்டும்' என்ற ரீதியில் சிலரது கருத்துக்கள் பொதுமக்களின் கருத்துக்களாக தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. Bloom ஒரு நிரபராதியின் வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆனால் நிமிடங்கள் கடந்து Gale க்கு தண்டனை நிறவேற்றப்படுகிறது. அந்த அறிவிப்பைச் சொல்லும் நேரத்தில்தான் Bloom வீடியோ ஆவணத்தோடு வந்து சேர்கிறாள். ஆற்றாமையோடும் ஆத்திரத்தோடும் விழுந்து கதறுகிறாள்.
 
  Bloom வெளியிட்ட ஆவணம் சலனங்களை ஏற்படுத்துகிறது. நிரபராதி ஒருவன் தண்டிக்கப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தபோதும் அது ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்படவில்லை. ஊடகங்கள் அதையும் தமக்கான பரபரப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.  அந்த ஆவண வெளியீட்டின் பின் அது ஏற்படுத்திய தாக்கம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்லாமல்  வேறு திசையில் திரைப்படம் நகர்கிறது.
 
  மணதண்டனைக்கெதிரான போராட்டத்தில் தன்னையே அழித்து ஒருத்தி நடத்திய எதிர்ப்பில் அப்பாவியான Gale தண்டனை பெற்றான் என்கிற நினைப்பில் நாமிருக்கும்போது, சந்தர்ப்பம் வாய்த்தும் அவனைக் காப்பாற்ற முடியாமற்போன குற்றவுணர்வில் Bloom தவித்துக்கொண்டிருக்கும்போது, அவளுக்கு ஒரு பொறி வந்து சேர்கிறது. அந்தப் பொறி  அக்குற்றவுணர்விலிருந்து அவளை விடுவிக்கிறது. ஆனால் வேறொரு தளத்தில் அவளை மட்டுமல்ல நம்மையும் உலுக்கிவிடுகிறது. வந்து சேரும் அந்த வீடியோவைப் போட்டுப் பார்த்தால், ஏற்கனவே அவள் பார்த்த அந்த ஆவணம்தான்.
 
  Constance Hallaway தானே தன்னை மாய்த்துக் கொண்டபின் முன்னகர்ந்து செல்லும் cow boy அவள் இறந்ததை உறுதிப்படுத்திய காட்சியைத் தாண்டியும் இது நீள்கிறபோதுதான் சூட்சுமத்தின் முழுப்பரிமாணமும் தெரியவருகிறது. அவள் இறந்துவிட்டாள் என்பதைச் சொல்லிவிட்டுத் திரும்பும்  cow boy யை  அடுத்து இன்னோர் உருவம் கமராவின் பின்னாலிருந்து வெளிப்பட்டு் முதுகைக்காட்டிய வண்ணமே அவளின் உடலருகே சென்று தனது கைரேகைகளைப் பதித்துவிட்டுத் திரும்புகிறது. மிக நிதானமாக கமரா முன்னால் வந்து நம்மைப் பார்த்து மெலிதான ஒரு சிரிப்பையுதிர்க்கிறான் Gale. அக்காட்சியோடு திரைப்படம் முடிகிறது 
  

  Gale பாத்திரத்தில் Kevin Spacey, Constance Hallaway யாக Laura Linney, பத்திரிகைப் பெண் Bloom ஆக Kate Winslet, வட்டத் தொப்பிக்காரனாக Matt Craven என்று இந்த நான்கு பாத்திரங்களுமே கிட்டத்தட்ட முழுக்கதையையும் தாங்கி நகர்த்துகின்றன. மிக அருமையான பாத்திரத் தேர்வுகள், அளவான இசை, அழகான காட்சியமைப்புக்கள் என இத்திரைப்படம் மிக அருமையாகவே படைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையும் இயக்கமும் பார்வையாளரிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில்  மிக நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 
   மரணதண்டனைக்கு எதிராக வெளிப்படையான பிரச்சாரங்களோ விவாதங்களோ இல்லாமல் திரைக்கதை மூலமும் காட்சியமைப்பாலும் நமது மனங்களில் விவாதத்தைத் தூண்டிவிடுகிறது இத்திரைப்படம்.
 

http://karuppukural.blogspot.in/2011/08/life-of-david-gale.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.