Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் தனிநாயக அடிகள்

Featured Replies

பேராசிரியர் தனிநாயக அடிகள்

வ.அய்.சுப்பிரமணியம்

 

[ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தனிநாயக அடிகளார் நெடுந்தீவில் 1913 ஆகஸ்டு 2ஆம் திகதி பிறந்தார்.அவர் 1980 செப்ரெம்பர் 1ஆம் திகதி காலமானார். அவரின் நூற்றாண்டுவிழா சில மாதங்களின் முன்பாக  கனடாவிலும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.அவரின் நீண்டகால நண்பரான பேராசிரியர் சுப்பிரமணியம் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக இருந்தவர்.அவரின் கட்டுரையின் 'தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்' கீழே தரப்படுகிறது]

 

1944ஆம் ஆண்டு, கோடைகால விடுமுறையின் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் துவங்கின. நான்காம் தமிழ்ச் சிறப்பு வகுப்பில் பாதிரி உடையணிந்து மிடுக்கான நடையுடைய ஏறத்தாழ முப்பது வயதினர் ஒருவர் என் அருகே அமர்ந்தார். வகுப்பு துவங்கியது. கேள்வியும் விடையும் தொடர்ந்தன. திரு.பூவராகம்பிள்ளை தமக்கே உரிய நகைச்சுவையுடன் தமது வகுப்பை நடத்தினார். வகுப்பின் இறுதியில், “தாம் தனிநாயகம்” என்றும் தமிழ் படிக்க வந்திருப்பதாகவும் கூறினார். உடனிருந்த மாணவர்களிற் பலர் எதுவும் அவரிடம் பேசவில்லை. சிலர் வணக்கம் கூறி அகன்றனர். நான் அருகிலிருந்ததால் அடுத்த வகுப்பு ஆரம்பமாவது வரை அவருடன் என் பேச்சு தொடர்ந்தது.

 

“இலக்கண இலக்கியங்களை இனிமேல்தான் நன்கு படித்தறிய வேண்டும்" என்றார்.’ இங்குள்ள பலரும் அந்த நிலையில் தான் இருக்கிறோம்” என்றேன். “உங்கள் கேள்விகள் அதனைப் பொய்யாக்குகின்றன” என்றார். அவ்வாறு ஆரம்பமான நட்புறவு எங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

 

சனி, ஞாயிறுகளில் நான் நூல்நிலையம் சென்று படிப்பது வழக்கம். அதனைக் கவனித்த அடிகள் புதுச் செய்திகளிருப்பின் அவற்றைத் தன்னுடன் விவாதிக்க அழைப்பார். அப்போது பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் அவர் தங்கியிருந்தார். ஒரு சிற்றாள் அவருக்கு உதவியாக எடுபிடிவேலை செய்தான். அவன்தான் என் அறைக்கு வந்து ஏதேனும் அவர் குறித்து அனுப்பும் செய்திகளை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்வான். ஒருநாள் மதிய உணவிற்கு அழைத்திருந்தார். நான் அறையிற் சென்றதும், “சுப்பு என்று உங்களை அழைக்கலாமா!” என்றார். “தாரளமாக” என்றேன். அன்று ரிக் வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர் படித்து முடித்திருந்த சமயம்.

“தரமான பாக்கள் ரிக் வேதத்தில் குறைவாகக் காணப்படு கின்றன. அவற்றை நோக்கச் சங்க இலக்கியப் பாக்கள் எவ்வளவோ மேல்” என்றார். அவற்றின் உண்மையை நான் அப்போது தெரிந்திடவில்லை. பின்னர்தான் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பு வழி படித்தறிந்து கொண்டேன். ஆனால் என் கேள்வியனைத்தும் “கிறித்துவப் பாதிரியான அவர், இந்து வேதங்களைப் படிக்க அனுமதிக்கப்படுகிறாரே” என்பது பற்றித் தான் இருந்தன. “எல்லா மதங்களின் அடிப்படை நூற்களையும் நாங்கள் படித்துத் தெளிவோம். அது மட்டுமன்றுப் பிரம்ம சரியம் மேற்கொள்ளும் நாங்கள் மனிதக் காதல்நிலை பற்றிய பல நூல்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. பல துறைகளைத் தெரிந்த பின் துறவு பூண்பது, தெரியாமல் துறவு பூண்பது என்ற இரண்டில், முதல் முறையை நாங்கள் கடை பிடிப்போம். தேவார திருவாசக முதலிய நூற்கள் மனதை உருக்குவனவாக இருக்கின்றன. இறைவனை வழிபடும் எந்த மதமும் அந்த நூற்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது” என்றார். தனிநாயக அடிகளின் பரந்த படிப்பும் பிற மதங்களைப் புறக்கணிக்காத நிலையும் என்னைக் கவர்ந்தன. கிறித்துவ மதத்தில் ஆழமான பற்று உடையவராயினும் தமிழ்மொழி மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அளவற்ற மதிப்புடையவராக இருந்தார். அவர் பேச்சிலும் தமிழ் எழுத்திலும் இலங்கை வழக்குப் பளிச்சிடும். ஆங்கில எழுத்து எடுப்பான நடையில் இருக்கும்; அவருடைய பின்னணிக்கும் என் படிப்பிற்கும் எவ்வளவு வேறுபாடு!

 

வகுப்பறைகளில் பாடம் நடந்த பின்னரும் உடன் உணவு உண்ணும் வேளைகளிலும் அடிகளின் பேச்செல்லாம் தமிழின் இலக்கிய வளத்தை உலகறியச் செய்ய வேண்டும்; தமிழ் ஆசிரியர்களும் மாணவர்களும் சமுதாயத்தில் பிறருடன் ஒன்றாமல் தனித்து நிற்பது நன்றன்று. எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண்டும். தமிழாய்வின் தரம் உயரவேண்டும். பல நாடுகளுக்குத் தமிழ் ஆய்வாளர்கள் சென்று தமிழ் இலக்கியச் செல்வங்களை உலகறியச் செய்திட வேண்டும் என்பன பற்றித்தாம் இருந்தன.

 

அடிகள் அண்ணாமலைக்கு வருவதற்கு முன்னர் ரோமில் உள்ள வாடிக்கனில் குருமார்களுக்குரிய வகுப்புகளில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பயின்று தெய்வ தத்துவத்தில் முனைவர் பட்டம் (Doctot of Divinity) பெற்றிருந்தார். தமது ஆய்வறிக்கைக் கிறித்துவத் தொண்டர் பலரைப் பற்றியது. பின்னர் வெளிநாட்டில் வெளியிடப்பட்டது. அதன் படியொன்றையும் பலவாண்டுகள் கழித்து தமது கையெழுத்திட்டு எனக்குத் தந்தார். ஸ்பானிய மொழி, ரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர். உயர்மட்ட மக்களிடம் எளிதில் பழகி அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்று தமிழிற் காணும் அறக்கருத்துக்களின் உலகளாவிய தன்மையையும் அதன் சங்க இலக்கியச் செல்வத்தையும் அவர்களிடையே விளக்கித் தமிழ்ப் பண்பாட்டில் பற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கு அவரால் முடிந்தது.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புதிய விடுதியின் அன்று எனக்குத் தங்குவதற்குத் தனியறை கிடைத்திருந்தது. தனிநாயக அடிகள் அடிக்கடி அங்கு வருவார். ஒருநாள் முற்பகல் பத்துமணி அளவில் எதிர்பாராத விதமாக அறைக்கு வந்தார். என் படுக்கையில் போர்வை தலையணை முதலியவை உரிய இடத்தில் வைக்காமல் அலங்கோலமாகக் கிடந்தன. உள்ளே வந்த அவர் தாமே அவற்றை ஒழுங்காக அடுக்கி வைத்துப் புன்முறுவல் பூத்தார். அது எனக்கு நல்ல பாடமாகப் பட்டது. வீட்டில் அன்னையால் மிகவும் ஆதரிக்கப்பட்ட என் போன்றோர் அறைகள் அலங்கோலமாகத்தான் இருக்கும். எனினும் ஒழுங்கு, சிட்டை முதலியவற்றை மறைமுகமாகத் தம் செயலால் செய்து காட்டுகின்றவர்கள் எத்தனைபேர்?

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், அன்று தரைப் படை, விமானப்படை முதலியவற்றில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. விமானப்படையின் மேலாளர் அடிகளின் நண்பர். ‘சுப்பு! ஏன் நீ விமானப்படைப் பயிற்சியில் சேர்ந்து இந்த வேனல் விடுமுறையில் விமானம் ஓட்டக் கற்றுக்கொள்ளக் கூடாது. தமிழ் மாணாக்கர்கள் எல்லாத்துறைகளிலும் பங்கு பெறவேண்டும்; முன்னணியில் நிற்க வேண்டும்’ என்றார். அதனை ஒத்துக் கொண்ட நான் உடற் பரிசோதனைக்குச் சென்றேன். அதில் வெற்றிபெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அடிகள் பின்னர் கூறினார். அந்த வேனல் விடுமுறையில் இறுதித் தேர்வு எழுதியதும் என் தந்தையின் உடல் நலம் சீர்கெட்டு விட்டதை அறிந்து ஊர் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனவே பயிற்சியில் சேரவில்லை. எனினும் ஒரு வாய்ப்பை இழந்து விட்டேனே என்ற வருத்தம் இருந்தது. அடிகளிடம், ஊர் திரும்பும் நிர்ப்பந்த நிலையைக் கூறிய பின்னர்தான் புறப்பட்டேன்.

அவர் கிறித்துவப் பாதிரியாயினும் என்னிடம் கிறித்துவ மதத்தின் பெருமையையும் இந்து மதத்தின் குறைபாடுகளையும் என்றும் கூறியதில்லை. அதற்கு நேர் மாறாகத் தேவார திருவாசகத்தின் பெருமையைக் கூறிப் பாராட்டியது இன்றும் நினைவிருக்கிறது. அடிகள் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றிக் கூறிய செய்திகள் மிகக் குறைவு. யாழ்ப்பாணத்தில் பிரபல இந்துக் குடும்பம் ஒன்றில் பிறந்து கிறித்துவக் குருமார் நிலையைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்று பிறர் கூறக் கேட்டிருக்கிறேன். யாழ்ப்பாணத்தின் இந்து கிறித்துவ மதக் காழ்ப்பில்லை. இரு மதத்தினரும் மன ஒருமைப்பாட்டுடன் வாழ்க்கை நடத்துகின்றனர்.

 

கிறித்துவக் குருமார்களுக்கு இருநிலைகளுண்டு. ஒன்று மதத் தளம் (Priesty Order). மற்றொன்று மதச் சார்பற்ற தளம் (Secular Order). இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்களுக்குக் கட்டுப்பாடு மிகக் குறைவு. பிற நிலையங்களில் பணிசெய்து அந்த வருவாயின் ஒரு பகுதியைத் தன் செலவுக்கும் மீதத்தை கிறித்துவ சபைக்கும் கொடுத்துவிடுவர். வாரம் ஒருநாள் கிராமங்களில் மதப் பிரச்சாரத்திற்குச் செல்வர். படிப்பிற்காக ஈழத்திலிருந்து மேல்நாட்டிற்கோ இந்தியாவிற்கோ செல்லும்போது பயணச் செலவு, தங்கல் செலவு முதலியவற்றைத் திருச்சபை ஏற்கும். எனவே அடிகள் சுதந்திர வாழ்க்கையை விரும்பி இரண்டாவது பிரிவை ஏற்று உழைத்தார் என்று பிறர் கூறக் கேட்டிருக்கிறேன்.

 

ஒருமுறை இராஜா முத்தையாச் செட்டியார் அவர்கள் கொழும்பு சென்றிருந்த போது அவரை அணுகித் தான் தமிழ்ப்படிக்க அண்ணாமலை செல்ல விரும்புவதாகவும் அதற்குத் துணை நிற்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்ட போது விதி விலக்காக, மூன்றாம் ஆண்டு சிறப்பு வகுப்பில் சேர அனுமதியும், அந்த ஆண்டுநடக்கும் ஆங்கிலத் தேர்வை அடிகள் எழுத வேண்டாமென்றும், விருந்தினர் விடுதியில் தங்கிப் படித்திட அனுமதியும் அடிகளுக்கு வழங்கப்பட்டன என்று கூறியது நினைவிருக்கிறது. அப்போது துணைவேந்தராக இருந்த இரத்தினசாமி ரோமன் கத்தோலிக்கர். அவர் குடும்பத்தினர் அனைவரும் கடவுள் பக்தி மிக்கவர்கள். எனவே அடிகள் அந்தக் குடும்பத்தின் நெருங்கிப் பழகும் வாய்ப்பு மிகுத்து இருந்தது. எனினும் துணைவேந்தருடன் தாம் கொண்டுள்ள தொடர்பை அளவு மீறிப் பயன்படுத்தியதில்லை. அகலாது அணுகாது அதிகாரிகளுடன் நடந்து கொண்டார். அவர் காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றிரண்டு பாதிரிமார்களும் கன்னியாஸ்திரீகளும் படித்துவந்தனர். கிறித்துவக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவார்கள். அதன் பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து பழகுவதை நான் கண்ட தில்லை. எனவே அடிகளாரின் மதச்சார்பு மிகக் குறைவாக இருந்ததால் இந்து மதத்தில் பற்றுள்ள என் போன்றோர் அடிகளாருடன் நெருங்கிப் பழக தடையேதும் ஏற்படவில்லை.

 

1946 ஆம் ஆண்டு நான் தேர்வு எழுதி வீடு திரும்பிய பின் அடிகளாருடன் கொண்ட தொடர்பு குறைந்துவிட்டது. ஆனால் அற்றுவிடவில்லை. அடுத்த ஆண்டு இறுதிச் சிறப்பு வகுப்பில் இரண்டாம் வகுப்புடன் அடிகள் தேறினார். அதன் பின்னர் ஆய்விற்காக எம்.லிட். பட்டத்திற்குப் பதிவு செய்திருந்தார். ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் அவர் படைத்த ஆய்வுக்கட்டுரை பின்னர் அச்சாகி வெளியிடப் பட்டது. அது தமிழ் ஆய்வாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

 

1948 ஆம் ஆண்டு முதல் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக நான் பணியாற்றியபோது தூத்துக்குடிக்கு வரவேண்டுமென்று அடிகள் தந்தி ஒன்று அனுப்பியிருந்தார். ஒரு ஞாயிறன்று அங்கு சென்றேன். விசாலமான ஒரு பங்களாவில் தமிழ் ஆய்வுக் கழகம் ஒன்றை உருவாக்கிப் பல நூற்களை அச்சிட்டு வெளியிடும் பணியில் முனைந்து நின்றார். வெளிநாடு சென்று, குருமார் ஒவ்வொருவரும், தமது அறப்பணிக்குப் பொருள் திரட்டலாம் என்றும், அதன்படித் திரட்டிய பொருளால் அந்தப் பெரும் வீட்டைச் சொந்தமாக வாங்கி, பல வெளியீடுகளைக் கொண்டு வரும் தமது திட்டத்தை விரிவாகக் கூறினார். அப்போது பாளையங் கோட்டையில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு. மாசிலாமணி அவருக்குத் துணையாக நூல்களைச் செப்பனிட்டு வந்தார். 1961 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture ) ஒன்று சென்னையில் நிறுவித் தமிழ்ப்பண்பாடு (Tamil Culture ) என்ற அரையாண்டு இதழை வெளியிட ஏற்பாடு செய்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளராகப் பதவி வகித்து ஓய்வு பெற்ற அ.சுப்பையா அந்த அகாதமி நிறுவுவதற்கும், ஆங்கில அரையாண்டு இதழ் ஒன்றை வெளியிடவும் மிகவும் துணைநின்றார். அதன் பதிப்பாசிரியர் குழுவில் நானும் உறுப்பினராக நியமிக்கப் பட்டேன். எனது கட்டுரைகள் சில, அதில் வெளியிடவும் வாய்ப்பு ஏற்பட்டது. கல்வெட்டு பற்றி கட்டுரையொன்றை அடிகள் எழுதுமாறு கூறி, அதன் நகலை அடிகளே செம்மை செய்து என்பெயரில் மட்டும் வெளியிட்டதும் மறக்க இயலாத நிகழ்ச்சி. அந்த சஞ்சிகை வெளியானதும் ஆங்கிலம் அறிந்த தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

1950ஆம் ஆண்டுவாக்கில் ஒருநாள் திரு.பால்நாடாருடன் அடிகள் பாளையங்கோட்டை எனது இல்லத்திற்கு வந்து குற்றாலத்தில் உறையும் டி.கே.சி.யைக் காண அழைத்துச் சென்றார். நான் வாழ்ந்த வீடு சிறிது. என் வருவாய்க்குள் வாழ நினைத்ததால் அந்தச் சிறிய வீடுதான் வாடகைக்கு அமர்த்த முடிந்தது. எனினும் அந்தச் சிறிய வீட்டில் திரு. பால்நாடாரும் அடிகளும் மகிழ்ச்சியுடன் சிறிதுநேரம் தங்கி, காப்பியருந்தி விட்டுப் புறப்பட்டனர். அடிகள்தான் கார் ஓட்டினார். தென்காசியில் அப்போது முன்சீப்பாகப் பணிசெய்த திரு. மகாராஜன் வீட்டிற்கு முதலில் சென்றோம். அன்புடன் வரவேற்ற அவர் இரவு அங்கு உண்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று வற்புறுத்தவே அங்கேயே உண்ட பின்னர் குற்றாலம் சென்றடைந்தோம். திரு.மகாராஜன், டி.கே.சி.யை மிகவும் மதிப்பவர். அவர் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர். இரவு டி.கே.சி.யைக் கண்டபோது எடுப்பான தோற்றமும் முறுக்கிய அடர்ந்த மீசையும் குழந்தையின் சிரிப்பும் உடைய ஒரு ஞானியைக் கண்ட உணர்வு என்னுள் ஏற்பட்டது.

 

அடிகளை அன்புடன் வரவேற்றார். அடுத்துத் திரு. பால்நாடாரை அதன்பின் வயதில் சிறியவனான என்னை டி.கே.சி.யிடம் அறிமுகம் செய்யவே அவர் வீட்டில் ஒருவனாக உடனே என்னை ஏற்றுக்கொண்ட உணர்வு என்னுள்ளே தோன்றியது. செட்டி நாட்டு அரசர் பங்களாவில் நாங்கள் இருநாள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்நாள் இரவு தூங்குவதற்கு முன்னர் அடிகள் தந்த தமிழ்க் கல்ச்சரின் கட்டுரைகளைப் படித்து அதிற்காணும் பிழைகளைக் கூறினேன். அச்சடித்த பின்னர்தான் சிலருக்குப் பிழைகள் கண்ணில்படும். அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவன் நான். எனவே சற்று வருத்தத்துடன் அடிகள் என் விமர்சனத்தைக் கேட்டுக்கொண்டார். இரண்டு நாள் அங்குத் தங்கினோம். அந்த நாட்களில் டி.கே.சி. கூறிய தமிழ்ப்பாடலின் விளக்கங்கள் சுவையாக இருந்தன.

 

அவரிடம் புலமைச் செருக்கில்லை. இலக்கண நுணுக்க விளக்கமில்லை. ஆனால் அவர் விளக்கம் மனதைத் தொட்டு எழுச்சியூட்டியது. இறுதியில் நாங்கள் பிரியும்போது என்னை நோக்கி தமிழ் உலகில் தோன்றிய கோடரிக்காம்பு என்று சிலாகித்தது நினைவிருக்கிறது. நான் அந்த உவமையைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகச் தப்புத் தவறுகளை அகற்றித் தமிழ் நிலத்தைத் திருத்த வந்திருக்கும் காம்பு என்று டி.கே.சி.கருதுகிறார் என்றார் அடிகள். அந்தத் தகுதி எனக்கு இல்லாததால் அந்தக் கௌரவத்தைப் பற்றிய உணர்வு இல்லாதிருந்தது. ஊர் திரும்பினோம். டி.கே.சி.யுடன் ஏற்பட்ட தொடர்பு அது முதல் நிலைத்தது. இலக்கிய நயமிக்க பல எழுத்துக்களை நான் அவரிடமிருந்து பெற அது வழி செய்தது. அடிகள் அறிமுகம் செய்திராவிட்டால் அந்த வாய்ப்பு கிடைத்திராது.

 

1951ஆம் ஆண்டு நான் திருவனந்தபுரத்திலுள்ள தமிழ்த் துறையில் எஸ்.வையாபுரிப்பிள்ளை பேராசிரியராக நியமிக்கப் பட்டதால் அங்கு ஆய்வு மாணவனாகச் சேர்ந்தேன். அப்போது திருவனந்தபுரத்தில் வாழும் அறிஞர்கள் சிலரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று நான் அனுப்பினால் அவை தமிழ்க் கல்ச்சரில் உடன் அடிகள் வெளியிடுவார். ஒருமுறை பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையைக் காணவந்திருந்தார். அப்போது மகிழ்வுந்து ஒன்றை வாங்கியிருந்தார். தூத்துக்குடியிலிருந்து தாமே அதனை ஒட்டி இரவில் திருவனந்தபுரம் இரயிலடியில் வந்து சேர்ந்ததாகவும் அறையெதுவும் அமர்த்தாது காரினுள்ளே தூங்கிப் பக்கத்துக் கடைகளில் விசாரித்து என் மாமனார் வீட்டை அடையாளங்காண அங்குள்ள ஒரு சிற்றாள் துணையுடன் தேடிப்பிடித்து வந்தார்.

 

அவரை அன்று காலையில் காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையைக் காணச் சென்றோம். போகும் வழியில், ‘ஏன் உற்சாகமில்லாமல் இருக்கிராய் சுப்பு’ என்றார். ‘விரிவுரையாளராக இருந்தபோது மாதம் 120 ரூபாய் சம்பளம். இப்போது இங்கே கிடைக்க இருக்கும் தகமை முப்பது ரூபாய் மட்டும் தான். அதுவும், இதுவரை கிடைத்திடவில்லை. எனவே பணமுடையின் கடுமை; ஆய்வாளனின் வறுமையின் கூர்மை இப்போது என்ன என்று தெரியவருகிறது’ என்றேன். அப்போது ஒன்றும் பதில் சொல்லவில்லை. பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் ஆய்வு முடிவுகளை அடிகள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவருடைய ஆய்வுத் திறமையையும் வாதத் திறமையையும் மிகவும் அடிகள் மதித்தார். எனவே அவர்களிடையே நடந்த உரையாடல் மிகவும் மதிப்பைத் தெரிவிப்பதாக இருந்தது. லக்னோவில் நடந்த கீழ்த்திசை மாநாட்டுத் திராவிடப் பிரிவில் நிகழ்த்திய தலைமை உரையை தமிழ்க் கல்ச்சரில் வெளியிடுவதற்கு எஸ். வையாபுரிப்பிள்ளையிடம் அனுமதி பெற்றார்.

 

அன்று மாலையே நாகர்கோவில் திரும்ப வேண்டியதால், விடைபெறும் போது இருநூறு ரூபாய்க்கு ஒரு காசோலையை அடிகள் எழுதித் தந்தார். பின்னர் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற உறுதியால் அதனைப் பெற்றுக் கொண்டேன். நிலையறிந்து உதவும் மனநிலையை உள்ளூரப் பாராட்டினேன்.

 

ஒரு சில மாதங்கள் கழிந்ததும் பூனாவிலுள்ள டெக்கான் கல்லூரி இராக்கிப் பெல்லர் நிலையம் வழங்கிய மானியத்தால் மொழியியலுக்குக் குளிர்கால வேனிற்காலப் பள்ளிகள், டாக்டர் கத்ரே தலைமையில் நடந்தது. தமிழ் மொழி வரலாறு என்ற பாடத்தைக் கற்பிக்கும் பேராசிரியராக அதற்கு அழைக்கப் பட்டிருந்தேன். அங்கு இராக்கி பெல்லர் நிலையத்தின் துணை மேலாளரான சாட்போர்ன் பாட்ரிக்கைச் சந்தித்தபோது அமெரிக்கா சென்று படிக்கும் வாய்ப்புக் கிடைத்தற்குரிய வழிவகை கூறினார்.

 

குறிப்பாக அன்று திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரான சர்.இராமசாமி முதலியாரின் பரிந்துரையைப் பெற்று அனுப்புமாறும் கூறினார். சர். இராமசாமி முதலியாரிடம் அதைக் கூறவே புன்முறுவலுடன் பரிந்துரை ஒன்றைத் தந்தார். இராக்கி பெல்லர் தகமை கிடைத்ததும் ஐக்கிய அமெரிக்காவில் முதலாண்டு கார்னேல் பல்கலைக்கழகத்திலும் இரண்டாவது ஆண்டு இந்தியானாவிலும் படிக்க நேர்ந்தது. இந்தியானாவில் படிக்கும்போது ஒருநாள் எதிர்பாராதவிதமாக தொலைபேசியில் அடிகள் தொடர்பு கொண்டார். ‘தாம் நியுயார்க் வந்திருப்பதாகவும் மேலும் இரண்டு வாரம் அங்கே தங்குவதாகவும் இயலுமாயின் எழுபத்தைந்து டாலர் அனுப்புமாறும்’ கூறினார். முன்கடன் ஒன்று வட்டியுடன் அப்போது தீர்ந்திட்ட மனநிம்மதி எனக்கு ஏற்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சித் துறையில் அப்போது பணிசெய்து வந்த அடிகளார் இலண்டனில் மூன்றாண்டு அந்தத் துறையில் டாக்டர் பட்டம் பெற உழைத்தார். அதன் பின்னர் மலேயாப்பல்கலைக்கழக இந்தியத் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். அந்த வேளையில் என்னுடன் கொண்ட தொடர்பு நலிந்திருந்தது.

 

1964இல் டெல்லியில் அகில உலக கீழ்த்திசை ஆய்வு மாநாடு நடந்தது. அதற்கு ஏறத்தாழ இரண்டாயிரம் பேராளர்கள் உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்தனர். மாநாடு துவங்குவதற்கு முன்னர் விஞ்ஞான பவன் முகப்பில் பேராளர்கள் பெருங்கூட்டம் கூடியிருந்தது. பலவாண்டு காணாத நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்து பேசி நின்றனர். அங்குத் தனிநாயக அடிகளை எதிர்பாராத விதமாகக் காணநேர்ந்தது. இருவருக்கும் சொல்ல முடியாத பெருமகிழ்ச்சி. பழைய நட்புறவு மீண்டும் தளிர்விட்டது. அந்த மாநாடு நடந்த நாலைந்து நாளும் அடிக்கடி சந்தித்தோம். முன்னர் சென்னையில் தோற்றுவித்த தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் அதன் வெளியீடான தமிழ்க் கல்ச்சரும் மிகவும் செயலிழந்துவிட்டன என்றார். தமிழ்க்கல்ச்சர் பணமுடையால் நிறுத்திவிட அன்று பொறுப்பு வகித்த செயலாளர் தமது அறையில் கூடுமாறு எழுத்து ஒன்றை எழுதியிருந்ததும் அதற்கு எப்பாடுபட்டாவது தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று நான் பதில் எழுதியதும் நினைவிற்கு வந்தன.

 

‘சுப்பு நாம் தமிழுக்கென உலகமாநாடு ஒன்று நடத்த முயல வேண்டாமா? அதற்குரிய கூட்டம் ஒன்றைக் கூட்டி ஒரு நிறுவனம் அமைக்க வேண்டாமா?’ என்றார்.செய்ய வேண்டியதுதான். டெல்லியில் ஜீன் பிலியோசா (பிரான்சு) டி.பர்ரோ (இங்கிலாந்து), எல்.பி. ஜே. கைப்பர் (நெதர்லாந்து) ஹெர்மன் பெர்கர் (ஜெர்மனி) கமில்ஸ்வலெபில் (செக்கோஸ்லோவாகியா) ஆர். ஆஷர் (பிரிட்டன்) முதலிய அயல்நாட்டு ஆய்வாளர்கள் பலரும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராஜன், மொ.அ.துரை அரங்கசாமி முதலியவர்களும் மாநாட்டிற்கு வந்திருப்பதாக தெரிகிறது. அவர்களிடம் எல்லாம் கலந்து கொள்க’ என்றேன்.

 

ஓரிரு நாட்களில் அந்தத் திட்டத்தைப் பற்றிப் பிறரிடம் உசாவிய அடிகள் தமிழ் நாட்டிலிருந்து வந்த அறிஞர்களுக்குத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உடன்பாடில்லை. எனவே விண்ணப்பம் ஒன்றில் நீ கையெழுத்திட்டு, கூட்டம் ஒன்றைக் கூட்டுவதற்குரிய அறிவிப்பு ஒன்றை எல்லோருக்கும் அனுப்புவோம் என்றார். இந்தியாவிலுள்ள தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் அதில் கையெழுத்திட வேண்டுமென்று உறுதியாக நினைத்திருந்தார். ஆனால் மற்றுள்ளவர்கள் அதற்கு ஊக்கமளிக்க வில்லை. மனம் தளர்ந்து அடிகள் அன்று காணப்பட்டார்.

“நீங்கள் மேற்கொள்ளும் எந்த முடிவிற்கும் என் துணையும் ஒத்துழைப்பும் உண்டு. எனவே நீங்கள் முதல் கையெழுத்தாக அந்த விண்ணப்பத்திலிட வேண்டும். அதன் பின்னர் நான் இடுகின்றேன்” என்றேன். அவரும் மறுப்புக் கூறாது ஒப்புக் கொண்டார். விஞ்ஞான பவனில் சுற்றுப்புறத்திலிருக்கும் அறைகளிலுள்ள அலுவலர் பெயர்ப்பலகை ஒவ்வொன்றையும் நடந்து கவனித்தோம்.

 

திரு.இராமன் துணைச்செயலாளர் (அந்தப் பெயர் சரியாக இருக்கும் என நம்புகிறேன்) என்ற ஒரு பெயர்ப் பலகையைக் கண்டோம். அவர் தமிழராக இருப்பார். உதவி செய்வார் என்ற எண்ணத்துடன் அவர் அறைக்குச் சென்று, எழுதி வந்த விண்ணப்பத்தில் இருநூறு படி எடுத்துத்தருமாறு இருவரும் வேண்டினோம். அவரும் அதற்கு இசைந்து மதியம் பன்னிரண்டு மணிக்குள் தருவதாகக் கூறினார். அவ்வாறே கூறியபடி பன்னிரண்டு மணியளவில் தந்தார்.

 

தமிழ் ஆய்வாளர்கள், பற்றாளர்கள், நண்பர்கள் முதலியவர்களுக்கு அந்த அறிவிப்பு வழங்கப்பட்டது. எல்லோரும் குறிப்பிட்ட அறையன்றில் ஏறத்தாழ மாலை நான்கு மணியளவில் கூடினர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரைத் தலைமை ஏற்குமாறு வேண்டிக்கொண்டு உலகளாவிய தமிழ் ஆய்வு மையம் ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டிய தேவையை அடிகள் விளக்கினார். கூட்டத்திலுள்ள உறுப்பினர்கள் பலர் அந்தக் கருத்தை வரவேற்றனர். சிலர் மௌனமாக ஒப்புக்கொண்டனர். ஜீன்பிலியோசா (பிரான்சு) தலைவராகவும் தெ.பொ.மீனாட்சி சுந்தரம், டி.பர்ரோவும் எல்.பி.ஜே.கைப்பர், எம்.பி.எமனோ முதலிய நால்வர் துணைத்தலைவர்களாகவும், தனிநாயக அடிகள் செயலாளராகவும் கமில்ஸ்வலபில் துணைச்செயலாளராகவும் இருக்கலாம் என்றார்.

 

பின்னர் என்னைச் சந்தித்தபோது “உன் பெயரைக் கூற மறந்து விட்டேனே” என்றார். “அதற்குத் தேவையில்லை நீங்களிருக்கிறீர்கள் அது போதும். பதவியின்றி பிறருக்குத் துணை நிற்பதுதான் என் குறிக்கோள்” என்றேன். அந்தக் கூட்டத்தில் கையெழுத்திட்டவர்களின் நிழற்படம் விண்ணப்பத்தின் நகல் முதலியவற்றை கோலாலம்பூரில் நடந்த முதல் மாநாட்டு நிகழ்ச்சி பதிவில் பின்னிணைப்பாக அச்சிட்டுள்ளார். அந்த நிறுவனம் தோன்றுவதற்குத் தாம்தான் காரணம் என்று பின்னர் உரிமை கொண்டாடியவர்கள் அந்த ஆவணத்தைக் காண முற்படவில்லை.

அந்தக் கூட்டத்தில் எல்.பி.ஜே.கைப்பரை முதன் முதலாகக் கண்டேன். அதன் முன்னர், புறநானூற்றுப் பாடபேத அடிப்படையில் அதன் பூர்வ உச்சரிப்பை மீட்டுரு அளித்து எழுதிய என் கட்டுரையன்றின் உருளச்சுப்படியைப் பார்த்து ஏறத்தாழ பத்து பக்க அளவில் விரிவாகத் தடைகளை எழுப்பிக் கடிதம் எழுதியிருந்தார்.”என் கட்டுரையை ஆழமாகப் படித்தாரே என்ற மகிழ்ச்சியுணர்வு” மேலோங்கியிருந்தது. அவரெழுப்பிய தடைகள் சில எளிதில் மறுக்கத்தக்கன. பல ஏற்கத்தக்கன. அன்று முதல் அவருடன் கடிதத் தொடர்பு இருந்ததேயழிய நேர் முகத் தொடர்பில்லை. அம்மகாநாட்டில் அவரைக் கண்டு அளவளாவியது பெரும் வாய்ப்பாக அமைந்தது. ஒருநாள் டி.பர்ரோவையும் எல்.பி.ஜே.கைப்பரையும்  என்னையும் அசோகா ஓட்டலில் இரவு விருந்திற்கு அடிகள் அழைத்திருந்தார். கமில்ஸ்வலபில்லும் அதற்கு வந்திருந்தார். அன்று மொழி ஆய்வு பற்றிய பேச்சு விரிவாக நடந்தது. டி.பர்ரோவின் எளிமையான போக்கு அன்று எல்லோருக்கும் தெளிவானது.

 

உலகக் கீழ்த்திசை மாநாடு முடிவடைந்த ஒரு சில மாதங்களுக்குள் முதல் உலகத்தமிழ் மாநாடு கோலாலம்பூரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. மலேயர்களும் சீனர்களும் பெரும்பாலும் வாழும் அந்த நாட்டில் அத்தகைய மாநாடு நடத்த ஒப்புக்கொண்டது பெரும் வெற்றியாகும். தனிநாயக அடிகள் பிறரிடம் தன் கருத்தை விளக்கும் ஆற்றலும் அவர்களைத் தன் திட்டத்தில் ஈடுபடுத்தும் சக்தியும் எல்லோருக்கும் அப்போது தெளிவாயிற்று. திரு.பக்தவத்சலம் தமிழக முதலமைச்சராக அப்போது இருந்தார். இந்தி எதிர்ப்புஇயக்கம் வலுவாகநடந்து முடிந்த சமயம். தமிழ் ஆசிரியர்கள், எதிர் கட்சிகள் ஆகியவர்களிடையே கசப்பு மனப்பான்மை குறையாத நேரம். எனவே, தென்னகத்திலிருந்து தமிழ் அறிஞர்கள் பலரை மாநாட்டுக்கு அரசுச் செலவில் அனுப்புவது பற்றி முதலமைச்சரிடம் எளிதில் ஒப்புதல் பெறப்பட்டது. அவரும் கலந்து கொள்வதாக ஒப்புக் கொண்டார். அப்போது எதிர்கட்சித் தலைவராக வி.ஆர்.நெடுஞ்செழியன் இருந்தார். அவரும் மாநாட்டில் பெருந்தன்மையுடன் பங்கு கொண்டார்.

 

மலேசியா செல்லும் பேராளர் குழுவில், மதிப்புறு அரசியல்வாதிகளில் பலர் இடம்பெற்றிருப்பது மாநாட்டிற்குத் துணைசெய்யாது என்று நான் அ.சுப்பையாவுக்குக் கடிதம் எழுதியது நினைவிருக்கிறது. அதனை அன்று கல்விச் செயலாளராக இருந்த திரு.க.திரவியத்திடம் காட்டி அரசியலாளரின் எண்ணிக்கை யைக் குறைக்கக் கேட்டுக் கொண்டதாகப் பின்னர் சுப்பையா தெரிவித்தார்.

 

 சமஸ்கிருத மகாபாரதத்தில் தென்னக ஏடுகளில் காணும் பிரதி பேத மாற்றங்களை பற்றிய என் கட்டுரை ஒன்றையும் நான் அந்த மகாநாட்டில் படித்திடவும் ஒத்துக் கொண்டேன். நானும் சில நண்பர்களும் மாநாடு துவங்குவதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் கோலாலம்பூர் போய் சேர்ந்தோம். அப்போது பேராளர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் தயாராக இராததால் அங்குள்ள ஓட்டலில் இரண்டு நாள் தங்கினோம். அடுத்த நாள் அடிகள் தன் துறைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆய்வுப் பணியை விளக்கினார். மகாநாட்டு ஏற்பாடுகளையும் கூறி அதிற் காணும் குறைபாடுகளையும் தெரிவித்தார்.

 

மாநாடு கூடுவதற்கு ஒரு நாள் முன்னர் என்னென்ன ஆய்வுக் கட்டுரைகளை உருளச்சிட்டுள்ளனர். அவை ஒழுங்காக பேராளர்களின் கோர்ப்பில் வைக்கப்பட்டுள்ளனவா என்று பார்த்தபோது பல உருளச்சிடாமல் இருப்பதைக் கண்டேன். தனிநாயக அடிகளிடம் ஆலோசித்தபோது அதன் பொறுப்பாளர் வரலாற்றுத் துறை நண்பர் என்று தெரிந்தது. அவர் இல்லத்திற்குச் சென்று நிலையை விளக்கினேன். கீழ்மட்டத்திலுள்ளவர்கள் செய்திடவில்லை என்று அவர் பொறுப்பைத் தட்டிக் கழித்தார். எனவே மாநாட்டு அலுவலகத்திற்குத் திரும்பிச் சென்று எந்தெந்த ஆய்வுக் கட்டுரை முதல்நாள், இரண்டாம் நாள் படித்திடுவதற்குரியன என்று பிரித்து அவற்றை உருளச்சிட்டு கோர்ப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். அந்தப் பணி முடிவதுவரை அந்த அறையினிலேயே இருந்து கவனித்தேன். அடிகள் அகல இருந்து கவனித்து நின்றிருந்தார்.

 

ஒருவரைப் பற்றி தனிநாயக அடிகள் நேராகக் குறை கூறுவதில்லை. மற்றுள்ளவர்களிடம் கூறி மாற்றுவழிக் காணக் கேட்டுக் கொள்வார். பல பொழுது அதனால் பணிமுடக்கம் ஏற்பட்டு அவர் தத்தளிப்பதைக் கண்டிருக்கிறேன். “நேராகச் சொல்லுங்களேன்” என்று நான் கூறுவேன். “அது என் பழக்க மில்லை. உன்னைப் போன்றவர்களிடம் சொன்னால் மன ஆறுதலும் மாற்று வழியும் பிறக்கும் என்று கருதித்தான் சொல்கிறேன்.” என்றார்.

 

அடுத்தநாள் காலை மலேசியப் பிரதமர் மாண்புமிகு துங்கு அப்துர் ரஹ்மான் மாநாட்டைத் திறக்க ஒப்புக்கொண்டிருந்தார். பேராளர்கள் எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காலை ஒன்பதரை மணிக்கு, கோலாலம்பூர் டவுன் ஹாலுக்கு வந்துவிட்டனர். அழைப்பு நுழைவுச்சீட்டும் சிலருக்குக் கிடைக்கவில்லை. எனவே காவலர்கள் உள்ளேவிட சிலரை மறுத்தனர். எனது கோட்டில் மாநாடு முக்கிய அழைப்பாளர்களுக்குரிய தங்கமுலாம் பூசியசின்னம் குத்தப்பட்டிருப்பதால் என் பின்னே வந்தவர்களனைவரும் உள்ளே தடங்கலின்றி நுழைந்தனர்.

 

மேடையில் மலேசியப் பிரதமருடன், தமிழ்நட்டு முதலமைச்சர் திரு. பக்தவத்சலம், மாநாட்டுத் தலைவர் டாக்டர் பிலியோசா அடிகள், அ.சுப்பையா ஆகியோர்களிருந்தனர். தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களில் சிலரிடையே என்ன, நமக்கு மேடையில் இடமில்லையே என்று முனகல் எழுந்தது. அந்த மாநாடு நடப்பதற்கு மிகவும் துணைநின்ற சுப்பிரமணியமே பொதுமக்கள் வரிசையில் இருந்தாரே! எனவே குறுகிய மேடையில் எல்லோருமிருக்க இயலாதாகையால் சிலரைக் குறிப்பாக முதியவர்களை மேடையில் இருத்தியிருந்தோம் என்று அடிகள் பதில் கூறியதாக நண்பர்கள் சொன்னார்கள்.

 

அடுத்த நாள் காலையில் “எனக்கும் பொன்முலாம் பூசிய சின்னம் வேண்டும்; வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக உழைத்த எனக்கு அது தராவிட்டால் நான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று எப்பொழுதும் அன்பாகப் பழகும், ஆனால் சற்று முன்கோபமுடைய முதிய நண்பர் ஒருவர் அடம்பிடித்தார். ம.பொ.சிவஞான கிராமணியார் “அவர் அடம்பிடிக்கிறார். சமாதானப் படுத்துங்கள்” என்று என்னிடம் கூறினார்.  நான் என்னால் ஆனமட்டும் முயன்றேன். “முலாம் பூசிய என் முத்திரையை தங்கள் தோள்பட்டையில் குத்திவிடுகிறேன். தமிழ் நாட்டிலிருந்து திரளாக வந்து, கோலாலம்பூர் நண்பர்களிடையே மனஉளைச்சல் ஏற்படுமாறு நடப்பது நன்றல்ல” எனக் கூறினேன். அவர் என் சொற்களைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் தனிநாயக அடிகள் அவரிடம் சில சமாதானச் சொற்கள் கூறியிருக்க வேண்டும். அடம்பிடித்த நண்பர் கருத்தரங்கில் முதல் வரிசையிலிருப்பதைப் பின்னர் கண்டேன்.

 

அந்த மாநாடு ஆய்விற்கு முதலிடம் கொடுத்து, ஒவ்வொரு நாளும் பிற நிகழ்ச்சிகள் நடப்பதற்கும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

மாநாடு நடக்கும்போது ஒருநாள் காலை அடிகள் நான் தங்கும் அறையில் வந்து “முக்கியமான ஒன்றிரண்டு பேரை நாம் சென்று சந்திப்போம்; நீயும் என்னுடன் வா என்றார்” “போவோம்” என்று கூறி “1935ஆம் ஆண்டு வாக்கில் திருவனந்தபுரத்தில் நடந்த அகில இந்திய கீழ்த்திசை மகாநாட்டுப் பேராளர்கள் தங்கியிருந்த ஒவ்வொரு அறைக்கும் சென்று, அன்று திவானாக இருந்த சர்.சி.பி.இராமசாமி ஐயர் குசலம் விசாரித்ததும் அதனால் பேராளர்கள் மிக மகிழ்ந்ததையும்” கூறினேன். எனவே, எல்லா அறைகளுக்கும் சென்று ஒவ்வொருவருடைய நலனையும் அவர் விசாரிக்க முற்பட்டார். நான் அவர் பின்னே புன்முறுவலுடன் சொல்லாடாமல் நின்றிருந்தேன். அன்று நடந்த நிகழ்ச்சியால் பேராளர்கள் தமக்கிருந்த ஒருசில குறைகளைக் கூட மறந்துவிட்டனர். ஆட்களுடன் எளிதில் பழகும் ஆற்றல் அடிகளுக்கு வாய்ந்த பெருங்குணம். துறவை மேற்கொண்டிருந்ததால், பழகுபவர்கள் மிக மதிப்புடன் அவரோடு உரையாடினர். நீடிக்கும் நட்புறவை பலருடன் அடிகள் கொண்டிருந்ததற்கு அவைதாம் காரணம்.

 

மாநாடு நடந்து முடிந்ததும் பேராளர்கள் ஈப்போ போன்ற அயல் நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நானும் சில நண்பர்களும் கோலாலம்பூர் மாணவர் விடுதியிலேயே தங்கிவிட்டோம்.

 

அந்த இடைவேளையில் ஒருநாள் ஒரு மலையிடத்தில் உல்லாச பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு மலைக் காட்சிகளைப் பார்ப்பதுடன் பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் வருங்கால வளர்ச்சி ஆய்வு நிறுவனம் ஒன்றை நிறுவுவது தமிழ் ஆய்வுக்கென ஒரு அரையாண்டு இதழ் ஒன்றை வெளியிடுவது போன்ற திட்டங்கள் உருவாயின. பிறர் கருத்தைக் கேட்பதும், அவர்கள் கேட்டால் அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நானறிந்த மட்டில் தெரிவிப்பதும் என் போக்காக இருந்தது.

 

நான் ஊர் திரும்பும் முன் ஒருநாள் “சுப்பு! உன் செலவிற்கு மலேசிய டாலர் தரட்டுமா? “என்றார் அடிகள்.

‘இலக்கியக் கொள்கை’ என்ற நூலை மொழிபெயர்த்த திருமதி. குளோறியா சுந்தரமதிக்கு முன்னூறு ரூபாய் சிறப்பு ஊதியம் கொடுக்கத் தீர்மானித்திருப்பதால் அந்தப் பணம் மட்டும் தந்தால் போதும். கடன் பெற்று செலவு செய்வது நன்றன்று என்றேன். எனது கையில் ஏறத்தாழ எழுநூறு ரூபாய் இருந்ததால் எனக்குப் பொருள் ஏதும் தேவைப்படவில்லை.

 

சென்னையில் 1968இல் நடைபெறவிருக்கும் மகாநாட்டிற்கான ஆரம்ப ஏற்பாடுகள் துவங்கின. அதற்குச் சற்றுமுன் நடந்த பொதுத் தேர்தலில், மகாநாட்டுக்கு அழைப்பு விடுத்த திரு. பக்தவத்சலமும் காங்கிரஸ் கட்சியும் தோல்வியுற்றன. திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. எனவே தமிழ் மீதும் தமிழ்ப்பண்பாடு மீதும் புத்துணர்வும் எழுச்சியும் அன்று வெளிப்படையாகத் தெரிந்தது.

அன்று முதலமைச்சர் திரு. அண்ணாதுரையும் அமைச்சர்களும் தமிழக அரசின் மாநாடு நடத்துவதில் முனைப்புடன் செயல்பட்டனர். அரசியலும் பிரச்சாரமும் கலவாத ஆய்வு மாநாடு ஒன்றை நடத்த பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் விரும்பியது. அரசியல் பேச்சாளர்கள் தாங்கள் தாம் தமிழ் வளர்ப்பவர்கள் பாதுகாவலர்கள்; எனவே, தாம் தாம் முன்னின்று நடத்த வேண்டும் என்று அடம்பிடிக்கவே மாநாடு இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, பொதுமக்களுக்குத் தீவுத் திடலிலும் ஆய்வாளர்களுக்குப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திலும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் விரும்பும் ஆரவாரப் பேச்சுக்கள் கேளிக்கைகள் முதலியவற்றை ஆய்வாளர்கள் விரும்புவதில்லை. பல நாட்டிலிருந்து மாநாட்டிற்குப் பேராளர்கள் வந்திருந்தனர். விழாக் கோலம் கொண்டிருந்த சென்னையில் ஆய்வுக்கட்டுரைகள் படைக்கும் நூற்றாண்டு மண்டபத்தில் தேர்ந்தெடுத்தவர்கள் மட்டும் நுழைவு அட்டைகளுடன் அனுமதிக்கப்பட்டனர். எனவே அறிஞர்களும் ஆய்வாளர்களும் மட்டும் கூடிய கூட்டமாக நூற்றாண்டு மண்டபக் கூட்டம் அமைந்தது.

 

‘ஒரு கொள்கையாக்கச் சொற்பொழிவாற்ற வேண்டும்’ என்றும் அமைப்பாளர் குழுவின் சார்பில் அ.சுப்பையா என்னைக் கேட்டுக்கொண்டார். “தமிழ் இலக்கியத்தில் சில மைல்கற்கள்” என்பது என் தலைப்பு. என் கட்டுரை 1960 முதல் 1965 வரை நடந்த ஆய்வைச் சீர்தூக்கிய பின்னர் சில புதுச் செய்திகளையும் கொண்டிருந்தது. திரு.அ.சுப்பையாவுக்கு அந்தக் கட்டுரையின் போக்கு பிடிக்காததால், கட்டுரையில் வேறுசில செய்திகளையும் சேர்த்திடுமாறு அப்போது செயலாளராக இயங்கிய கமில்ஸ்வலபில் வழி எனக்குக் கடிதமொன்றை எழுதச் செய்தார்.

 

“என் கட்டுரையில் எவ்வித மாற்றத்தையும் செய்ய இயலாது. மாநாட்டில் அதனைப் படைத்திட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை” என்று எழுதினேன். நான் பதில் எழுதுவதற்கு முன்னர் கமில்ஸ்வலபில் தமது கையெழுத்தில் தன் கருத்தாக “அது நல்ல கட்டுரை, அதை மாற்ற முனையாதீர்கள்” என்று எழுதியிருந்தார். அவருடைய பரிந்துரையைப் பாராட்டினாலும் “திரு.அ.சுப்பையாவிடம் அதனைக் கூறியிருக்கலாமே” என்று எனக்குத் தோன்றியது. எனவே மாநாட்டுக்குச் செல்லும் உள்ளுந்தல் எனக்கு இல்லாமலிருந்தது. திருவனந்தபுரத்திலுள்ள தமிழ்த்துறையிலும் மொழியியல் துறையிலும் பணிசெய்யும் எல்லா ஆய்வாளர்களையும் பங்குபெறுமாறு அனுப்பிவிட்டு நான் மட்டும் செல்ல மனமில்லாமல் ஊரில் தங்கினேன். அதனை அறிந்த அடிகள் மாநாட்டிற்கு உடனே வருமாறு தந்தியொன்றை அனுப்பினார். செய்தித்தாள்கள் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகளை மிக விரிவாக ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வந்தன.

தமிழ் அபிமானிகளுக்கு அந்தச் செய்திகள் எழுச்சியூட்டின. எனவே நான் மாநாட்டிற்குச் செல்வதாக அது துவங்கும் நாள் காலையில் முடிவு செய்து விமானத்தில் மதுரை வரைச்சென்று அதன்பின் சென்னை செல்ல இடம் கிடைக்காததால், இரயிலில் அடுத்தநாள் காலை சென்று சேர்ந்தேன். துவக்க நாளில் நடந்த பேரணிகளும், பெருந்திரளான மக்கள் கூட்டமும் அன்று ஜனாதிபதியாக இருந்த டாக்டர் சாக்கீர்உசேன் அவற்றைப் பார்வையிட்டுக் கடற்கரையின் மைதானத்தில் மாநாட்டினைத் துவக்கி வைத்ததும் செய்தித் தாள்களில் வெளியிடப்பட்டிருந்தன. கூட்டம் அலைமோதியதாகவும் செய்தித்தாள்கள் தெரிவித்தன.

 

சென்னை சென்றதும் அறையெதுவும் விடுதிகளில் கிடைக்காததால் கீழ்ப்பாக்கத்தில் என் தம்பி வீட்டில் தங்கி ஒன்பதரை மணிக்கு நான் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்குச் சென்றேன். மண்டபத்தின் உள்ளே நுழைவதற்கு அட்டை எதுவுமில்லை. திரு.வி.எஸ்.தியாகராய முதலியார் வாயிலில் என்னை அடையாளங்கண்டு கொண்டு உள்ளே செல்ல ஏற்பாடு செய்தார். பார்வையாளர் பகுதியில் அமர்ந்தேன். திருவனந்தபுரத்திலிருந்து வந்த மாணவர்கள் முகத்தில் ஆசுவாசம் பிறந்தது. அப்போது முதல் அமர்வு தொடங்கியது. அதன் முடிவில் அடிகள் நானிருக்கும் இடம் வந்து மதிய உணவிற்கு அழைத்துச் சென்றார். அப்போது ‘நான் வரமாட்டேன் என்று திருவனந்தபுரம் ஆய்வாளர்கள் கூறிய  செய்தியை’ யும் பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக்கழகம் துவங்குவதற்கு முனைந்த இருவருள் ஒருவன் வராமல் இருப்பது பெருங்குறையாகும் என்று தான் கருதித் தந்தியனுப்பியதாகவும், முந்தியநாள் கடற்கரைத் திறப்பு விழாவில் நடந்த நிகழ்ச்சிகளையும் கூறினார். மாநாடு நடந்த ஏழு நாட்களும் அடிகளுடன்தான் பெரும்பாலும் நான் செலவழிக்க நேர்ந்தது.

 

எனது கட்டுரை அரங்கேற்றுவதற்கு மாநாடு நடக்கும் காலை புதன்கிழமை ஒதுக்கப்பட்டது என நினைவு. நான் அன்று அதன் நகலொன்றைக் கையில் எடுத்துச் சென்றிருந்தேன். திரு.வி.எஸ். தியாகராய முதலியார். அந்தக் கட்டுரையை அலுவலகத்தில் தேடியும் கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறும்போது, என் கையில் அதன் நகல் இருக்கிறது என்றேன். கருத்து வேறு பாட்டால் என் கட்டுரையை அலுவலகம் அச்சேற்றவில்லை. அந்தக் கட்டுரை சுருக்கமானதாக இருந்ததால் இருபது நிமிட நேரந்தான் நீடித்தது. ஆனால் கேள்வியும் அதற்குரிய பதிலும் ஏறத்தாழ ஒன்றரை மணியளவு நீண்டு நின்றது. அதன் முழு விவரங்களை ஈழ நண்பர் டாக்டர் கைலாசபதி இலங்கை நாளிதழ் ஒன்றில் பலநாள் வெளியிட்டு எனக்குத் தொகுத்துப் பின்னர் அனுப்பியிருந்தார். தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தரமான முற்போக்கான கட்டுரை என்று பாராட்டியிருந்தார்.

 

கட்டுரை படிக்காமல் விடப்பட்டிருந்தால், மாநாட்டு நல்ல நிகழ்ச்சி ஒன்று, பிறர் கண்ணில் படாமல் போயிருக்கும் என்று அடிகளும் திரு.சுப்பையாவும் பின்னர் கூறினர். அந்த மகாநாட்டில் இந்தியத் தேசிய அமைப்பின் செயலாளராக என் பெயரை அடிகளும், சுப்பையாவும் செயற்குழுக் கூட்டத்தில் கூறிட அதனைப் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் எதிர்த்தாராம். நான் அந்தக் கூட்டத்திற்குப் போகவில்லை. எனவே அடுத்த நாள் உலகக் குழுவின் பொதுச் செயலாளராக என்னை உயரிடத்தில் நியமித்தனர். அன்று இரவு எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின் உரிமையாளர் திரு.கோயங்கா அளித்த விருந்திடத்தில் கண்ட அடிகள், "என்னுடன் நீயும் பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் செயலாளர் ஆக்கப்பட்டு விட்டாய். இருவரும் சேர்ந்து பணி செய்வோம்" என்றார். பதவியால் எதுவும் சாதித்துவிட முடியாது என்ற எண்ணம் உறுதியாக என் மனதில் பதிந்திருந்ததால், அடக்கத்துடன் அவர் கூறிய செய்திகளனைத்தையும் கேட்டுக்கொண்டேன். ஒருநாள் மாலை, தீவுத் திடலுக்கு அடிகளுடன் நானும் சென்றேன். அங்குச்சென்ற நேரம் மாலை ஆகையால் நிகழ்ச்சி எதுவும் அப்போது நடைபெறவில்லை. பல கடைகள் (டீஸ்டால், வெற்றிலைப் பாக்குக் கடை)  முதலியவை அரசியல் தலைவர்களின் பெயரில் அங்கே இயங்கின. அவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

 

ஆய்வு மாநாடு எது, இலக்கிய விளம்பர மாநாடு எது என்பது பிரித்தறிய அன்று வாழ்ந்த அறிவுச் செல்வர்கள் முயலவில்லை. தமிழ் செய்தித்தாள்களில் சில பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டப நிகழ்ச்சிகளையும் அதன் அமைப்பாளர்களையும் விமர்சித்து செய்திகளை வெளியிட்டன. ஆனால் பன்னாட்டுத் தமிழ் ஆய்வுக் கழகம் எவ்வித பதிலும் அவற்றிற்கு அளிக்க முயலவில்லை. புறக்கணித்துவிட்டது. மாநாடு முடிந்தபோது அடிகள் வேலைப் பளுவால் களைப்புடன் ஆனால் உற்சாகமாக காணப்பட்டார். நானும் அடுத்தநாள் ஊர் திரும்பினேன்.

அந்த மாநாட்டில் முடிவு செய்த தீர்மானங்களுள் ஒன்று உயர் ஆய்வு மையமொன்றைத் துவக்குவது; ஆங்கிலத்தில் அரை யாண்டு இதழுக்கு அடிகள் ஆசிரியர், நான் இணையாசிரியர், திரு.அ.சுப்பையா பொருளாளர் என இவ்வாறு பொறுப்பு ஒதுக்கப்பட்டது. உயர் ஆய்வு மையத்தின் திட்ட அமைப்புக் குழுவுக்கு நான் உறுப்புச் செயலாளருமாக நியமிக்கப்பட்டேன்.

 

கல்வி அமைச்சர் வி.ஆர்.நெடுஞ்செழியன் அதன் தலைவர் எனவே என் பொறுப்பு கணிசமாகப் பெருகியது. அன்று கல்வி அமைச்சராக இருந்த வி.ஆர்.நெடுஞ்செழியனின் ஆதரவு இந்த இரண்டு திட்டத்திற்கும் மிகவும் கூடுதலாக இருந்தது. அவர் மூலமாக என்னை ஓரிரு மாதங்களுக்குப் பணிவிடுப்பில் அனுப்புமாறு கேரளப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த திரு.சாமுவேல் மத்தாயிக்கு திரு.சுப்பையா எழுதியிருந்தார். நானும் அந்த வேனல் விடுமுறையில், சென்னை சென்று பன்னாட்டுத் தமிழாய்வு மையத்தின் அறிக்கையையும் செயல்படுத்தும் திட்டத்தையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன். திரு.சுப்பையா வேனல் விடுமுறையாகையால் வழக்கம்போல் கொடைக்கானல் சென்றுவிட்டார். எனவே ஓரிரு மாதங்களுக்குள் நான் மட்டும் சில உதவியாளருடன் திட்டத்தின் கரடு வரைவைத் தயாரித்தேன். அதனை திருத்தி கல்வி அமைச்சகத்திற்கு சமர்ப்பிப்பதன் முன்னர், அறிஞர்கள் சிலரை  அழைத்து வரைவை ஆய்ந்து அவர்கள் பரிந்துரையுடன் அனுப்புவது நல்லது என்ற எண்ணத்துடன் ஆய்வுக்குழு ஒன்றும் நிறுவப்பட்டது.

 

அந்த ஆய்வுக் குழுவில் எஸ்.கே.சட்டர்ஜி (கல்கத்தா), ஆர்.என்.தாண்டேகர் (பூனா), மொ.அ.துரை அரங்கனார், மு.வரதராசனார், இரஷ்யத் தூதரகப் பிரதிநிதி, அமெரிக்க தூதரகப் பிரதிநிதி முதலியவர்கள் திரு.வி.ஆர். நெடுஞ்செழியன் தலைமையில் ஒருநாள் ஆய்ந்தனர். அந்தக் கூட்டத்திற்கு தனிநாயக அடிகள் வர இயலவில்லை. கூட்டம் நடந்து முடிந்ததும், வெளியூர் அறிஞர்களை இரயிலேற்றிவிட்டு அன்றே திருத்தங்களைச் செய்து அறிக்கையின் மூன்றுபடி எடுத்து அப்போது துணைச் செயலாளராக இருந்த திருமதி. இரமேசத்திடம் கொடுத்துவிட்டு திருவனந்தபுரம் திரும்பி விட்டேன்.  அந்த அறிக்கை உருவாக்கும் காலத்தில், ஒரு ஆய்வு நிறுவனத்திற்கு என்ன என்ன தேவை, எவர் எவர் துணையை நாடவேண்டும். எவ்வாறு எழுத்து எழுதி அறிஞர்களை அதில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பது போன்ற பல அடிப்படை அனுபவங்களை நான் பெற்றிட வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்து இந்திய திராவிட மொழியியற் கழகமும், பன்னாட்டு மொழியியல் ஆய்வு நிறுவனமும் உருவாக்குவதற்கு அந்த அனுபவம் மிகவும் துணை செய்தது.

 

தமிழ் ஆய்வு நிறுவனத் திட்டம் சென்னையில் செயல் படுத்தப்பட்டது. மாறுபட்ட சூழ்நிலை காரணமாகத் தனிநாயகஅடிகள் மலேசியாவிலுள்ள பேராசிரியர் பதவியை விட்டு விலகிவிட்டார். அவரைப் புதிதாக அமையவிருக்கும் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தால் மிகச் சிறப்பாக நடத்துவார் என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஆய்வில் உனக்கு அடிகளை விடக் கூடுதல் அனுபவமும் உலகோர் ஒப்புதலும் உண்டு என்று பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தில் பெரும்பொறுப்பு வகித்த நண்பர் ஒருவர் என்னிடம் ஒருநாள் கூறினார். “எங்கள் நட்பு பலவாண்டுகள் நீடித்து வரும் ஒன்று. பலதுறை அறிஞர்களைக் கவரும் தெய்வசக்தியும் தமிழின் ஏற்றத்தைப் பல மொழியாளர்களிடம் கூறி ஒப்புதலைப் பெறும் வல்லமையும் அடிகளிடம் உண்டு” என்று கூறி  அவர்கள் சொற்களை மீண்டும் கூறக் கேட்க நான் விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டேன். மலேசியா பதவியை விட்டு அடிகள் விலகிய போது, சென்னை ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க அழைக்கப்படுவார் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. ஆனால் நாளாவட்டத்தில் அந்த நம்பிக்கை குறைந்தது. நானும் அந்த நிறுவனப் பணியிலிருந்து மெள்ள மெள்ள அகலத் துவங்கினேன்.

 

ஆய்வு நிறுவனத்திற்கு மைய அரசு ஏதேனும் நல்கைத் தந்திட வேண்டும் என்று அ.சுப்பையா முயன்றார். அதற்காக சி.சுப்பிரமணியம் உடன்வர அ.சுப்பையா, அன்று கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் வி.கே.ஆர்.வி. இராவை டெல்லி யில் சென்று சந்தித்தனர். அவர் தமிழ் வளர்ச்சிக்கு ஐந்தாண்டுகளுக்குத் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாயிலிருந்து செலவிடுக என்று கூறிவிட்டார். அன்று வி.கே.ஆர்.வி.இராவ் நடந்துகொண்ட முறை எரிச்சல் ஏற்படுத்தியதாகவும் அ.சுப்பையா கூறினார். வி.கே.ஆர்.வி. இராவ் நேரத்திற்கேற்ப மனம் மாறும் நிலையினர். அறிஞர்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் பெரும் சினமும் அதன்பின் சினத்தணிவும் அவரிடமுண்டு. ஆனால் மொழி வளர்ச்சியில் நல்லெண்ணம் உடையவர். தாமே வகுத்துக் கொண்ட திட்டப்படிச் செயல்படுபவர். பிறர் கூறுவதை அனுசரிப்பது மிகவும் குறைவு. எனினும் அவரைக் கண்ட பின்னரும் அதிக ஆதரவு கிடைக்கவில்லையே என்று சுப்பையா வருந்தினார்.

 

பன்னாட்டுத் தமிழாய்வு குழுவுடன் நான் கொண்ட தொடர்பு படிப்படியாகக் குறைந்தது. பாரீசில் நடந்த மூன்றாம் உலக மாநாட்டின் பின் அந்தத் தொடர்பு அறவே குறைந்துவிட்டது. உள்ளேயிருந்து ஒரு நிறுவனத்தின் அமைப்பை எதிர்ப்பதைவிட அதனை விட்டு விலகுவதுதான் என் வழக்கம். எனவே 1970ஆம் ஆண்டுவாக்கில் என் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் விலகிக் கொண்டேன். அதன் பின்னர் டாக்டர் மு.வரதராசனார் ஈடுபடுத்தப்பட்டார். தனிநாயக அடிகளும் தொட்டுத் தொடாமலும் அதில் தொடர்ந்தார்.

 

பாரீசில் நடந்த உலகக் கீழ்த்திசை மாநாட்டில் அடிகளைச் சந்தித்தபோது மிகவும் தன்னம்பிக்கை இன்றி காணப்பட்டார். தமிழாய்வு நிறுவனம் வேறொரு வழியில் இயங்குவது பற்றியும் குறிக்கோளனைத்தும் நிலைகுலைந்து போவதையும் கூறினார். அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் வாழ்வதாகவும் நீரிழிவு நோய் இருப்பதாகவும் பல குருக்கள்மார் முதுமையில் சித்த பிரமையால் அவதிப்படுவது போன்று தாமும் அவதிப்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். கேட்பதற்கு வருத்தமாக இருந்தது. அவர் செய்த பெருந்தொண்டினைக் கூறி அவரைத் தேற்றினேன்.

 

1972ஆம் ஆண்டில் திராவிட மொழியியல் கழகம் உருவானது. எதிர்பாராத இடங்களிலிருந்து ஆதரவு அதற்குக் கிடைத்தது. அது வலுவுற்றபோது இலங்கையிலிருந்த அடிகள் எழுதிய எழுத்துக்கள் மிகவும் ஊக்கம் தந்தன. ஒருகடிதத்தில் “தன்னைச் சேர்த்துக் கொள்ளாதது ஏன்” என்று கேட்டிருந்தார். “மொழியியல் ஆய்வில் மட்டும் ஒதுங்கி நிற்கும் அந்த நிறுவனத்தில் அடிகளைச் சேர்ப்பது பொருந்தாது.  அதுமட்டுமன்று நானிருக்கும் இடங்களில் எல்லாம் அடிகள் அல்லவா இருக்கிறார் என்ற தேற்றினேன். அடிகள் வயது முதிர்வில் எழுதிய கையெழுத்துக் கடிதங்கள், தெளிவாக நடுக்கம் எதுவுமின்றி இருந்தன. அவருடைய அன்பு ஒரு துளியளவு கூட குறைந்திடவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் இருவரும் சந்திப்பது மிகக் குறைவாகவே நடைபெற்றது.

 

யாழ்ப்பாணத்திற்கு நான் 1983இல் சென்றபோது அங்குள்ள அரசப் பிரதிநிதியின் தந்தை திரு நேசையா அடிகளைப் பற்றியும் பல நுணுக்கச் செய்திகளைத் தெரிவித்தார். சிங்களவரின் ஆதிக்கம் மேலோங்கியதும் தமிழர்களின் இன்னல்களைப் பொறுக்காத தனிநாயக அடிகள் அரசுக்கு எதிராகத் தமது கருத்தைத் தெரிவித்தார் என்றும், காவல் கண்காணிப்பு மிகவே பல்கலைக்கழகத்தில் தான் தங்கியிருந்த அறையைப் பூட்டி திரு. நேசையா கையில் சாவியைக் கொடுத்து நூல்களையும் ஏனைய உடைமைகளையும் தனது வீட்டில் எடுத்துச் சென்று காக்குமாறு கூறிவிட்டு தமிழகத்திற்குத் தனிநாயக அடிகள் வந்து தங்கிய செய்தியைத் தெரிவித்தார்.

 

அடிகள் தனிமனித சுதந்திரத்தைப் போற்றியவர். பிறர் சுதந்திரத்தைத் தடை செய்யும் எந்த முயற்சியையும் எதிர்த்தவர். அதற்காக அவர் மேற்கொண்ட இன்னல்கள் சிறிதல்ல என்று பிறர் கூறக் கேட்டேன். ஆனால் இலங்கை நிகழ்ச்சி பற்றி என்னிடம் எதுவும் சொன்னதில்லை.

1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற விருந்த உலகத் தமிழ் மகாநாட்டிற்குரிய அமைப்புக் குழுவில் என்னையும் ஓர் உறுப்பினராகத் தமிழக அரசு நியமித்திருந்தது. அங்கும் ஆய்விற்கும், பொதுமக்கள் பங்கெடுப்பதற்கும் இரு கூறாக மாநாடு நடத்த முடிவெடுத்திருந்தனர். ஆய்வு மாநாடு மதுரைப் பல்கலைக்கழக வளாகத்திலும் பொதுமக்கள் பங்கெடுக்கும் பிரச்சார மாநாடு தமுக்கம் மைதானத்தில் நடத்த ஏற்பாடாகி யிருந்தது.

 

1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த ஆய்வு மாநாட்டு அமைப்புக் குழுக் கூட்டத்திற்குத் திரு.ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். சென்னை இந்திரா நகருக்கு அருகாமையிலுள்ள வெங்கடரத்தின நகரிலுள்ள ஓர் இல்லத்தில் அதன் அலுவலகம் இயங்கியது. அந்தக் கூட்டத்திற்கு நான் பயணம் செய்த விமானம் காலந்தாழ்த்திச் சென்னை சென்று சேர்ந்ததால் சற்று நேரம் கழித்துதான் கூட்டத்தில் பங்கேற்க முடிந்தது. என்னைக் கண்ட வ.சுப.மாணிக்கனார், “தனிநாயக அடிகள் காலமாகிவிட்டதாக நேற்று ஒரு தந்தி வந்திருந்தது. நீங்கள் தெரிந்திட வேண்டும் என்று அதனை இப்போதே கூறுகிறேன்” என்றார்.

 

ஒரு கணம் அந்தச் செய்தியைக் கேட்டு நிலையிழந்துவிட்டேன்; நா வறண்டது. “என்னைவிட என் அருகிலிருந்த அ.சுப்பையா அவர்கள் மிகவும் வருத்தமடைவார்” என்றேன். எனினும் கூட்டம் நடந்து முடிந்தது. நான்காம் உலக மாநாடுகளுக்கு அடிகோலிய, வழிகாட்டியாக விளங்கிய அடிகள் இல்லாமல் மதுரை மாநாடு பொலி விழந்துவிடப் போகிறதே என்ற வருத்தம் என்னை வாட்டியது. எனினும் மாநாடு தோற்றுவிடக் கூடாதே என்ற எண்ணத்தால் அன்றையக் கூட்டத்திலும் அதன் பின்னர் நடந்த கூட்டத்திலும் பங்கேற்றேன். அதன்பின் நடந்த மதுரை மாநாட்டில், மூன்று நாள் கலந்துவிட்டு ஊர்திரும்பினேன்.

 

தனிநாயக அடிகளின் உருவச் சிலையை கல்வியமைச்சர் செ.அரங்கநாயகம் மாநாட்டின் முதல்நாள் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என் கடமையாகக் கருதி அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். ஈழத்து நண்பர்கள் பலர் வந்திருந்தனர். நண்பர் மதுரை நெடுமாறன் அங்கிருந்தார். என்னைப் பேசுமாறு அவர் கேட்டுக்கொள்ள கல்வியமைச்சர் அழைத்தார். எதிர்பாராத அழைப்பு அது. உலகோர் பலர் தமிழ்மொழியைப் போற்றுமாறு செய்த பெரும் தொண்டை மேற்கொண்டவர் அடிகள். பிறரைத் தன் வயப்படுத்தும் தெய்வ சக்தியைக் கொண்டவர். தமிழுக்கு ஏற்றம்; தமிழுக்கு நல்வாழ்வு ஆகியவற்றைத் தமது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவர் என்று கூறியது நினைவிருக்கிறது. அதன் பின்னர்தான் மதுரைப் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றேன். அந்த மாநாடு நடப்பதற்குப் பெரும் பொருள் செலவாயினும் ஆய்வில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாக்கவில்லை.

அந்த மாநாட்டில்தான் தமிழுக்கு என ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்கும் முடிவை முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனார் இறுதிநாள் முடிப்புச் சொற்பொழிவில் தெரிவித்தார் என்று செய்தித்தாள்கள் தெரிவித்தன. அந்தப் பல்கலைக்கழகம் துவங்கியபோது முதன்மைச் செயலாளர் க.திரவியம் துணை வேந்தராகப் பொறுப்பு ஏற்க இசைவு தரவேண்டுமென்று தொலைபேசியில் என்னை அழைத்துத் தெரிவித்தார். எதிர்பாராத அழைப்பு. அதன்பின்னர் முதலமைச்சர் எம்.ஜி.இராமச் சந்திரனார் 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் தஞ்சையில் நடக்கும் பல்கலைக்கழகத் துவக்க விழாவில் கலந்திட வேண்டுமென்று அழைத்தார். எல்லாம் விரைவாக எதிர்பாரா விதமாக நடந்தது. ஓரிரு ஆண்டுக்குள் பட்டமளிப்பு விழா நடத்த ஏற்பாடாகி இருந்தது. அந்தப் பல்கலைக்கழக குழுக்கள் செய்யும் பரிந்துரைப்படி நடக்கும் நான், அன்று விதிவிலக்காக அடிகளுக்குச் சிறப்பு முனைவர்பட்டம் அளிக்கும் தீர்மானத்தைக் கூறவே ஆளுநர் குழுவும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டது. அடிகளின் மருமகன் மலேசியாவிலிருந்து வந்து அந்தப் பட்டத்தை, மேன்மை தங்கிய ஆளுநர் குரோனாவிடமிருந்து பெற்றார்.

 

தமிழ்மொழி பழமையானது. அதன் சங்க இலக்கியம் ஏற்றமுடையது. அதன் பக்தி இலக்கியம் மனதை உருக்கும் இயல்புடையது. சிலப்பதிகார காவியம் உலக இலக்கியங்களில் சிறப்பிடம் பெறத்தக்கது என்று பிறநாட்டார் அறிந்திடச் செய்தவர் அடிகளாவார். உலகமாநாடு மலேசியாவில் நடத்தியதும், அதன்பின்னர் சென்னை, பாரீஸ், யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் நடத்துவதற்கு வழிகாட்டியாக நின்றவரும் அடிகளாவார். அதன் பின்னர்தான் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி முதலிய மொழிகள் உலக மகாநாடுகளை நடத்த முயன்றன. அவற்றிற்கெல்லாம் முன்னோடி அடிகளாவார். தமிழகம் அவர் செய்த பெருந்தொண்டை முழுமையாக உணர்ந்திடவில்லை. அவரால் உலக அரங்கில் தமிழுக்கு ஏற்பட்ட சிறப்பை, இதுவரை விலை மதித்திட வில்லை. தமிழ்நாட்டில் நல்ல தொண்டுகளை சீர்தூக்கிப் பாராட்டப் பலவாண்டுகளாகும். வளராத மனநிலை உடையவர்கள் பலராகையால் அந்த மனநிலை மாற பலவாண்டு நீடித்திடும். ஆனால் விரைவில் அந்த நிலை மாறாமல் இருக்காது. அன்று தனிநாயக அடிகளைச் சிரமேற்கொண்டு தமிழர் போற்றுவர்.

 

குறிப்பு:மேலுள்ள கட்டுரையை முழுதுமாக வாசிப்பதற்கும், அடிகள் பற்றிய ஏனைய அறிஞர்களின் கட்டுரைகளை வாசிப்பதற்கும், அடிகளாரின் ஆக்கங்களை வாசிப்பதற்கும் கீழேயுள்ள இணைப்புகளைச்  சொடுக்கவும்.

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25802:2013-12-20-11-16-02&catid=1663:2013&Itemid=909

 

  தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகளார் / ம.பிரிட்டோ , 06 செப்டம்பர் 2013

 

கீழைத்தேயவியல் - தமிழியல்: பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களின் வகிபாகம் /வீ.அரசு , 20 டிசம்பர் 2013

 

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானது’ - தமிழியல் ஆய்வின் கதை /அரசு, 20 டிசம்பர் 2013

 

பேராசிரியர் தனிநாயகம் அடிகள்: அரசியல் நுண்ணறிவாளர்தெ.மதுசூதனன் , 20 டிசம்பர் 2013

 

தமிழ் உலகின் சின்னம் தனிநாயகம் அடிகளார்/ரா.பி.சகேஷ் சந்தியா, 05 அக்டோபர் 2013

 

பேராசிரியர் தனிநாயகம் அவர்களின் நூற்றாண்டு / உங்கள் நூலகம் ஆசிரியர் குழு , 22 அக்டோபர் 2013

 

One Hundred Tamils of the 20th Century / Rev.Father Xavier Thaninayagam Adigalar

 

தமிழர் பண்பாடு / பேராசிரியர் சேவியர் தனிநாயகம் , 20 டிசம்பர் 2013

 

பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அவர்களின் ஆக்கங்கள்/வி.தேவேந்திரன் , 20 டிசம்பர் 2013

 

நிலக்கிடக்கையும் கவிதையியலும் : இயற்கைப் பாடல்களின் ஒப்பீடு பேராசிரியர் சேவியர் தனிநாயகம் வெள்ளி, 20 டிசம்பர் 2013

தமிழ் பேசும் இனத்தார்க்கு வேண்டுகோள் / பேராசிரியர் சேவியர் தனிநாயகம் வெள்ளி, 20 டிசம்பர் 2013

 

உலகப் பரப்பில் தமிழியல் ஆய்வு / பா.ரா.சுப்பிரமணியன் , 20 டிசம்பர் 2013

 

Tamil Culture: Its Past, Its Present and Its Future/ With special reference to CEYLON

Rev. Dr.Xavier S.Thani Nayagam 

 

'Tamil Studies in Ceylon'  by K.P. Ratnam, 1968

 

 Tamil Studies in Ceylon  A review essay of 1968 by S. Vithiananthan

 

 

==================================================================================================

இந்த வீர மகானுக்கு இசையால்  சமர்ப்பிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றிகள் 

 

 

 

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

மிகப்பொருத்தமான சிறப்பான தங்கள் இணைப்புக்கு மிக்க மிக்க நன்றிகள். வேறு பொருத்தமான விடயங்கள் இணைக்கப்படின்

அடிகளாருக்குச் செய்யும் சிறப்பான அஞ்சலித் தொகுப்பாக அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.