Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவில் கொண்டாட்டம் ஈழத்தில் கண்ணீர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் கொண்டாட்டம் ஈழத்தில் கண்ணீர்

தீபச்செல்வன்

இலங்கையில் எப்பொழுதும் இருவேறு மனநிலைதான் நிலவுகின்றது. இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு தெற்கில் கொண்டாட்டமும் வடக்கில் கண்ணீரும் நிலவியது. இலங்கைத் தலைநகர் கொழும்பே கோலாகலமாக இருந்தது.தெருக்களில் எல்லாம் பொதுநலவாய மாநாடு தொடர்பான பதாகைகள். பலர் வாகனங்களில்கூட அதனைப் பொருத்தியிருந்தனர். சிங்கள ஊடகங்கள் எல்லாம் பொதுநலவாய மாநாட்டைக் கொண்டாடுகின்றன. இது சிறீலங்காவின் நேரம் என்றும் இது சிறீலங்காவுக்குப் பெருமை என்றும் சித்தரிக்கின்றன.தமிழ் ஊடகங்களோ இக்காலத்தில் கண்ணீரோடு புரண்டழும் தமிழ்ச்சனங்களைக் காட்டுகின்றன.

பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாதெனவும் இலங்கைக்கு எதிராகவும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்தன. மாநாட்டிற்கு எதிராக வடக்கு கிழக்கில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. இலங்கை அரசாங்கத்தின் விழாக்களையோ இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் மாநாடுகளையோ எதிர்க்க வேண்டிய தேவை வடக்கு கிழக்கு மக்களுக்கு இல்லை. ஏனெனில் அவை சிங்கள அரசின் மாநாடு. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழமைபோல கலந்துகொள்வதா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது.தமிழகம், மாநாட்டிற்கு இந்தியா செல்லக்கூடாது என்று போராடும்பொழுது இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டும் என்று விக்கினேஸ்வரன் அழைப்பு விடுக்கின்றார். இந்த மாநாட்டை ஈழ மக்களின் பிரச்சினையைக் கவனப்படுத்தும் வகையில் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் வழமைபோல தமிழ்கூட்டமைப்பினரிடம் குழப்பமே மிஞ்சியது. இதனாலே அவர்களுக்கு எதிரான மனநிலையும் எழுந்தது.

ஆனால் இந்த மாநாட்டை ஈழ மக்கள் தக்கமுறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மாநாடு கொண்டாட்டம் என்பது தெற்கிற்கு மாத்திரமே, வடக்கிற்கு அல்ல என்பதை இலங்கை அரசும் தனது நடவடிக்கைகளின் மூலம் உணர்த்தியுள்ளது.இந்த நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரே விதமாக நடத்தப்படவில்லை என்பதையும் தமிழ் மக்களுக்கு என்னவெல்லாம் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், இந்த மாநாட்டுக்காலம் உணர்த்தியிருக்கிறது.வடக்கிலிருந்து சென்ற காணாமல் போனவர்களின் உறவினர்கள் மதவாச்சியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

அதில் ஒரு சிறுமி கேட்கிறாள், ‘சிங்களவர்கள் எங்கும் போகலாம்? நாங்கள் போகக்கூடாதா?’ என்று. காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொதுநலவாய மாநாட்டிற்கும் இலங்கைக்கும் இடைஞ்சல் தரக்கூடும் என்றே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இந்த நாட்டில் யாரும் எங்கும் போகலாம், எங்கும் வசிக்கலாம் என்று ராஜபக்சே சொல்லிக் கொண்டிருப்பவர். ஆனால் அன்று ஈழமக்கள் சிங்களத் தலைநகர் கொழும்புக்குச் சென்ற பொழுது மதவாச்சி என்ற சிங்கள நாட்டின் எல்லையில் வைத்து தமது தாயகத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இதைப்போல பொதுநலவாய மாநாட்டிற்கு வந்த சானல்4 ஊடகவியலாளர்கள் அனுராதபுத்தில் வைத்து இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பட்டத்தினைக் காரணம் காட்டி திருப்பி அனுப்பப்பட்டார்கள். பொதுநலவாய மாநாட்டின் கொள்கையின் பிரகாரம் மாநாடு நடக்கும் நாட்டின் எந்தவொரு பாகத்திற்கும் ஊடகவியலாளர்கள் செல்ல முடியும். இந்த மாநாட்டின் காரணமாகவே சானல்4 ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்கு வர அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் வடக்கிற்குச் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. யுத்தம் நடந்த நிலத்தின் சாட்சியங்களை அவர்கள் திரட்டக்கூடும் என்பதற்காகவே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுநலவாய மாநாட்டுக் கொள்கைகளின் பிரகாரம் மாநாடு நடக்கும் சிறீலங்காவில் ஒரு பகுதியாக வடக்கு இல்லையா என்கிற கேள்வியும் எழுகிறது. அத்துடன் வடக்கில் மனித உரிமை, ஊடக சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்று எல்லாமே மறுக்கப்பட்ட நிலையில் திறந்த ஒரு முள்வேலிச் சிறையிலேயே தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மையும் அம்பலமாகியுள்ளது. இலங்கைக்கு ஹாலும் மக்ரே வரலாம் என்றும், இதுவரை பொய் பேசி வந்த அவர் இனி நிலைமையைப் பார்த்துவிட்டு உண்மையைப் பேசலாம் என்றும் இலங்கை அரசு சொன்னது. ஆனால் தனது தொலைக்காட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற காணொளிகளில் ஈழத்தைப் பார்த்த சானல்4 ஊடகவியலாளர்கள் இன்னமும் துயரங்கள் நீங்காத ஒரு நிலமாகவே இருக்கிறது என்ற உண்மையை இந்த சந்தர்ப்பத்தில் உணரக்கூடும்.

இலங்கை அரசு தனது இன அழிப்புக்கும் உரிமை மறுப்புக்கும் அவ்வப்போது பல போலி முகங்களைப் பயன்படுத்துவதுண்டு. சானல்4க்கு எதிராகத் தமிழ் மக்கள் என்ற பெயரில் இராணுவம் எங்கிருந்தோ கொண்டு வந்த மக்களை இறக்கி எழுத்துப் பிழைகள் மிகுந்த இராணுவ மொழியிலான பதாகைகளுடன் போலி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது. இவற்றை இராணுவத்தினர்தான் நடத்துகின்றனர் என்பதனைத் தெரியாதவர் யாரும் இல்லை. ஆனால் இவ்வாறான போராட்டங்களை நடத்துவது தமிழ் மக்கள் என்று எல்லோரும் நினைப்பார்கள் என்று இராணுவத்தினர் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையானது.

வடக்கிற்கு வருகை தந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டுள்ளார்.வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப்போல இன்று வீட்டுக்கு வீடு புகைப்படங்களை ஏந்தியபடி காணாமல் போனவர்களின் உறவினர்கள் அலைகின்றார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த டேவிட் கமரூனைச் சந்திக்க முற்பட்டனர். கமரூனைப் பார்த்து தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோர வேண்டும் என்பதற்காக காணாமல் போனவர்களைத் தேடும் உறவினர்கள் எழுப்பிய அழுகையால் யாழ் நகரமே அதிர்ந்தது. நல்லூர்த் தெருவிலும் யாழ் நூலகம் முன்பாகவும் மக்கள் கண்ணீர் பொங்கத் திரண்டார்கள். “கொழும்பில சந்தோசமாய் பொதுநலவாய மாநாடு நடத்திக் கொண்டிருக்கினம். நாங்கள் இஞ்ச கண்ணீரோடு தெருத்தெருவா திரியிறம்” என்று ஒரு ஈழத் தாய் இந்தப் போராட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரசு இந்த சாட்சியங்களையும் நிலைமைகளையும் தனது ஒடுக்குமுறையின் மூலம் மறைக்கிறது என்பதும் இங்கு அம்பலமாகியுள்ளது. ஈழமண்ணின் நிலவரம் தொடர்பிலும் அத்தாய் கொந்தளிப்போடு பேசினாள்.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடத்தி தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் ஒன்றுக்கும் கமரூன் சென்றிருந்தார். அங்குள்ள மக்களின் நிலைமைகளைப் பார்த்தார். பொய்க்காலுடன் இருந்த ஒரு மூதாட்டியின் காலை அவர் தொட்டுப் பார்த்தார். எங்கள் துயரங்களைத் தொட்டுப் பார்ப்பதாகவே அந்த முகாம் மக்கள் ஆறுதல் அடைந்தனர். ஈழத் தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை நிலம். ஈழத் தமிழர்கள் தமது நிலம் மறுக்கப்பட்டவர்களாகவும் நிலத்திற்குப் போராடுபவர்களாகவும் இருப்பதை கமரூன் நேரடியாக அறிந்துகொண்டுள்ளதுடன் தமிழ் பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்குச் சென்று ஊடக சுகந்திரத்தின் நிலவரத்தையும் பார்த்தார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு கமரூன் காலக்கெடு ஒன்றை விடுத்துள்ளார். ஆனால் உடனடியாகவே மகிந்த ராஜபக்சே கமரூனின் கோரிக்கையை நிராகரித்தது மட்டுமன்றி, தன்னை எச்சரித்த கமரூனுக்கு Òகண்ணாடி வீடடுக்குள்ளிருந்து கல்லெறிய வேண்டாமென” எச்சரிப்புத் தொனியில் பதில் அளித்துள்ளார். பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு வரப்பிரசாதமாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் அதுவே ஈழத் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு தேசத்தில் எந்த நிலையில் வாழ்கின்றார்கள் என்பதை இலங்கைக்கு வந்த அத்தனை தலைவர்களுக்கும் காட்டியிருக்கும். அவர்கள் எவ்வாறானவர்களாக இருப்பினும் எவ்வாறான பார்வையுடன் பார்ப்பினும் இங்கு தமிழர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதைப் பார்க்க நேரிட்டுள்ளது. அந்த வகையில் பொதுநலவாய மாநாடு இலங்கையைச் சிக்கலில் மாட்டிவிடும் சந்தர்ப்பத்திற்குத் தள்ளியிருக்கிறது.

பொதுநலவாய மாநாட்டின் கவனத்தை ஈர்க்கும்முகமாக கிழக்கு ஈழத்தில் உள்ள சம்பூர் பகுதி மக்களும் தமது நிலத்தைக் கோரி மீள்குடியேற்றப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மாநாடு நடைபெற்றிருந்த சந்தர்ப்பத்தில் ஈழத் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட மாபெரும் அநீதிகள், மறுக்கப்பட்ட உரிமைகள் அம்பலமாகியிருக்கிறது. கொழும்பு கொண்டாட்டத்துடன் இருக்கும்பொழுது வடக்கு போர்க்களமாக கண்ணீர் தேசமாகக் காட்சி அளித்தது. அடக்கி ஒடுக்கி அழிக்கப்படும் ஈழ மக்கள் பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டுத் தமது நிலைமையைக் கவனப்படுத்தும் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

பிரித்தானிய இளவரசி எலிசபெத் பொதுநலவாய நாடுகளின் அரசியாக உள்ளார். கமரூன் அந்த நாட்டின் பிரதம அமைச்சர். இலங்கையை இறுதியாக ஆண்டவர்கள் கமரூனின் முன்னோர்கள். இலங்கையை விட்டுச் செல்லும்பொழுது இந்த நாட்டைப் பிரிக்க வேண்டாம் என்றது தமிழர்கள். அதனால் இன்று தமிழர்களின் நிலை என்ன கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடும். அன்று பிரிவினைவாதத்தை எதிர்த்த தமிழர்கள் பின்னர் பிரிவினை கோர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அத்துடன் சரித்திரத்திற்கும் இனங்களுக்கும் பொருத்தமற்ற வகையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் பிரித்தானியர்கள் யாப்புக்களை நடைமுறைப்படுத்தினார்கள். அதுவே தமிழர்களின் உரிமையைப் பறித்தது. அந்த வகையில் இலங்கைத்தீவில் ஏற்பட்ட அழிவுக்குப் பிரித்தானியர்களும் காரணமானவர்கள்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்று கமரூன் சொல்கிறார். இனப்படுகொலை செய்யப்படுவதற்கான போர்க்குற்றங்கள் அவை. எனவே இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவை. அவை நடந்திருக்கின்றன என்பதே எல்லோருக்கும் தெரியும். அதற்கான ஆதாரங்கள் பலவும் வெளியாகியுள்ளன. சாட்சியங்களை மக்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதற்கான நீதியையே இப்பொழுது வழங்க வேண்டும். அந்த நீதி என்பது தமிழர்களுக்குப் பாதுகாப்பான ஒரு தீர்வாக இருக்க வேண்டும். காலனித்துவ ஆட்சிக்கு முந்தைய வரலாற்றின் அடிப்படையிலும் சுகந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றின் அடிப்படையிலும் தமிழர்களைத் தமிழர்கள் ஆள்வதே பொருத்தமான தீர்வாக உள்ளது.

பிரித்தானியர்களால் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்கு அடிமைகளாக்கி கொண்டுவரப்பட்ட மலையகத்திற்கு முடிக்குரிய இளவரசர் சார்லஸ் சென்றிருக்கிறார். உலகம் எவ்வளவோ வளர்சியை அடைந்துள்ளபோதும் சுமார் 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் மலையக மக்களின் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அன்று பிரித்தானியர்களின் அடிமை யாக்கப்பட்ட மக்கள் இன்று இலங்கைக்கு அடிமையாகவுள்ளனர். இலங்கைத் தீவிற்கு அழைத்து வரப்பட்ட மக்களையும் இலங்கைத் தீவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களையும் இலங்கை அரசு ஒரே அடிமைகளாகவே நடத்துகின்றது என்பது பிரித்தானியாவுக்கான செய்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கானது.

எல்லோரும் போர்க்குற்றவாளிகள், எல்லோரும் இனப்படுகொலையாளிகள். அதனால் எத்தகைய கொலை புரிந்தாலும் எத்தகைய குற்றங்கள் செய்தாலும் யாரும் நம்மைத் தட்டிக்கேட்க முடியாது என்றே ராஜபக்சே நினைக்கின்றார். அதனாலேயே அவர் ஈழத்தமிழ் இனத்திற்கு மாபெரும் குற்றங்களை இழைத்து இனப்படுகொலை செய்தார். இப்பொழுது அந்தத் தைரியத்திலேயே கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிய வேண்டாம் என்று கமரூனை எச்சரித்தார். தான் இழைத்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்காகத் தன்னை ஒருபோதும் தண்டிக்க முடியாது என நம்புகிறார். உலகத்தில் ஒடுக்கப்படும் இனங்கள்மீதான போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளின் பின்னால் ஒளிந்திருக்க ராஜபக்சே முற்படுகிறார்.

பிரித்தானியாவை மீட்பர் என்றோ குற்றமற்றவர்கள் என்றோ குறிப்பிடவில்லை. கேட்க யாருமற்ற நிலையில் ஒடுக்கப்படும் ஈழமக்களுக்கு இந்த மாதிரியான வருகைகள், எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாதது. தவிரவும் இலங்கைத் தீவை இறுதியாக ஆண்டதன் அடிப்படையிலும் தமிழ் மக்களுக்கு விரோதமான ஒற்றை ஆட்சி யாப்பை நடைமுறைப்படுத்திய அடிப்படையிலும் தமிழர் உரிமையை சிங்கள அரசியல்வாதிகளிடம் கையளித்த அடிப்படையில் பிரித்தானியா இனப் பிரச்சினையுடன் தொடர்புபடுகின்றது.பிரித்தானியாவின் போர் நடவடிக்கைகள் தொடர்பில் எல்லோருக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் அதனைப் பயன்படுத்தி இலங்கை தப்பித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கக்கூடாது என்பது முக்கியமானது. போர்க் குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்குமான அர்த்தமுள்ள தண்டனை என்பது தமிழர்களுக்கு உறுதியானத் தீர்வை தருவதாகவே அமையும்.


http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=6439

  • 2 weeks later...

தீபச்செல்வன் மிகவும் துணிந்த எழுத்தாளர்.

இவர் ஒரு பேனா தூக்கிய மாவீரன்.

எழுத்து நடையும் மிகவும் சீராக பல விடயங்களை தொட்டு செல்கிறது.

பெரிய ஊடகவியலாளர் ஆக வளர வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.