Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு அரசியலும், இடிப்பு அரசியலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு அரசியலும், இடிப்பு அரசியலும்

ஷண்முகசுந்தரம்

sanmugam%20(1).jpg

ஒருமுறை ஐயா நல்லக்கண்ணுவுடன் முள்ளி வாய்க்கால் நினைவுமுற்றம் செதுக்க ஆரம்பிக்கப் பட்ட ஆரம்ப நாட்களில் அதனைப் பார்வையிடச் சென்றிருந்தேன். தமிழ்ப்பாவை சிலைக்கு நீளமான ஒற்றைக்கல் வந்தநேரம் அது. மற்ற சிற்பங்களுக்கும் கூட பொருத்தமான கற்கள் வந்து கொண்டிருந்தன. அக்கற்களைத்தேடி நீண்ட தொலைவு சென்று வந்தது பற்றியும், கற்களின் தன்மையைப் பற்றியும், அது எப்படி கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அங்கு பணிபுரிந்து வந்த தோழர்கள் சொல்லக்கேட்டு பிரமித்து நின்றோம். அவ்விடத்தில் ஏராளமான தேர்ந்த சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். உளிச்சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருந்தன. மகேந்திரவர்மப் பல்லவன் உயிரோடு இருந்திருந்தால் இம்முற்றத்தை மற்றுமொரு மாமல்லபுரமாகக் கண்டி ருப்பான். ஆனால் மாமல்லபுரத்துச் சிற்பிகளின் மனதில் கரைபுரண்டு ஓடியிருக்கும் மகிழ்ச்சி இச்சிற்பிகளுக்கு நிச்சயம் இருந்திருக்காது. உற்சாகமாக வேலை செய் தாலும் அவர்கள் மனதில் சொல்லொணா வேதனையும் ஓடிக்கொண்டிருந்திருக்கும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவாக உருவாக்கப் பட்டிருக்கும் நினைவுச் சின்னம். முள்ளிவாய்க்காலில் இக்கொடும் உலகத்தாரால் கைவிடப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களின் கடைசி நிமிடங்களைச் சித்தரிக்கும் சிற்பங்களின் தொகுப்பு. அப்படுகொலைகளைத் தடுக்கவேண்டி தமிழகத்தின், உலகத்தின் பல பகுதிகளில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தமிழர்களின் சிற்ப அணிவகுப்பு. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் அமைதியையும், கம்பீரத்தையும் நமக்குள் ஏற்படுத்தும்.முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றச் சிற்பங்கள் ஆற்றமுடியாத மனவேதனையையும், கண்ணீரையும் நமக்குத் தரும். அந்நினைவிடத்தின் ஓவியங்களும், புகைப்படங்களும், சிலைகளும் தமிழினத்திற்குக் கிடைத்த அற்புதமான கொடைகள். தமிழின், தமிழரின் வரலாற்றைப் பறைசாற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.

படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினை வாகத் தமிழகத்திலும், உலகெங்கிலும் யார் வேண்டுமானாலும் நினைவுச் சின்னங்கள், ஸ்தூபிகள், நடுகல்கள் எழுப்பலாம்.தொல்தமிழரின் மரபு அது. தமிழர்களிடம் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும்கூட உலகப்போர்களில் உயிர்நீத்த மக்களின், போர்வீரர்களின் நினைவுச் சின்னங்கள் ஆயிரக்கணக்கில் எழுப்பப் பட்டிருக்கின்றன. ஈழத்தில் இலங்கைப் படையினருடனான போரின்போது உயிர்நீத்த ஆயிரக்கணக்கான புலிகளின் நினைவாக மாவீரர் துயிலகங்கள் ஏற்படுத்தப் பட்டன.2009க்குப் பிறகு அந்நினைவிடங்களை மிகக்கேவலமாக இடித்துத் தள்ளி தானும் ஒரு சிங்கள தலிபான்தான் என்பதை இலங்கை அரசு காட்டிவிட்டது. ஈழத்தில் நடைபெற்ற போர் சாட்சியங்கள் எல்லா வற்றையும் சிங்கள அரசு தொடர்ச்சியாக அழித்து வருவதைக் கண்ணுற்ற உலகத்தமிழர் பேரமைப்பைச் சேர்ந்த பழ.நெடுமாறன் அவர்கள் தஞ்சாவூரில் இம்முற்றத்தை வடிவமைத்திருக்கிறார். மூன்று வருடங்கள் அதற்காக மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். எண்ணற்ற தேர்ந்த சிற்பிகளும், பொறியாளர்களும் அதே அளவு உழைத்திருக்கிறார்கள். உலகெங்கும் ஏராளமான தமிழர்கள் இந்நினைவகம் உருவாக நிதி கொடுத்தி ருக்கிறார்கள்.

இந்நினைவு முற்றத்தை தமிழகத்தின் தலைநகரில், சென்னையில், தமிழக அரசாங்கமே தனது செலவில் ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஈழத்தமிழர்களை மையமாகக் கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் நடத்தி, மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் மிதந்து வந்திருக்கும் சுயநல அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து தங்கள் தவறுக்குப் பிராயச்சித்தமாக இந்நினைவிடத்தை அமைத்திருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல்வாதிகள் ஏரிகளை விழுங்கியிருக்கிறார்கள். ஏராளமான முதலாளி கள் கடற்கரைகளைக் கூட ஏப்பமிட்டிருக்கிறார்கள்.ஏராளமான முதலாளிகள் சென்னையின் சாலைகளையும், தெருக்களையும் ஆக்கிரமித்து வணிக நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைத் துறையினரின் சாலைத் திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான சாமானியர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கி யிருக்கிறது. இதுவெல்லாம் அரசின் கண்களுக்குத் தெரிவதில்லை. அனுமதி பெற்று எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரும்,அதன் பூங்காவும், விலை மதிப்புமிக்க நீரூற்றும்,விளக்குகளும் அரசின் கண்களுக்கு ஆக்கிரமிப்பாகத் தெரிகின்றன.முற்றத்தில் ஆயிரம் அரசியல் இருக்கலாம்.ஆனால் ஜெய லலிதாவின் அரசு செய்த இச்செயல் அறமாகுமா? அறமில்லாத செயலைச் செய்யும் ஒரு அரசு வீழ்ந்து அழிந்தல்லவா போகும்!

sanmugam%20(2).jpg


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாக்கப்பட்ட விதத்தில் எவ்வித அரசியலும் இல்லை என நான் சொல்லவரவில்லை. அரசியலற்ற தமிழ்த்தேசிய அரசி யலை யாராவது சுட்டிக்காட்ட முடியுமா? தமிழருக்கான ஒரு நினைவுச் சின்னத்தை நடராஜன் என்ற தனிநபர் சார்ந்து உருவாக்கியவிதம் எவருக்கும் ஆச்சரியத்தைத் தரவில்லை.ஏனென்றால் தஞ்சையில் தமிழ்த்தேசியம் சம்பந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகள் நடராஜனின் தமிழரசி மண்டபத்தில்தான் வழக்கமாக நடக்கும். தமிழ்த்தேசிய நிகழ்ச்சிகளின் புரவலர் அவர்.சென்ற ஆண்டு அவர் நடத்திய வழக்கமான பொங்கல் விழாவின்போது தான் அணிந்திருந்த நகைகளையும், தன்னுடைய வாகனத்தை விற்று அதிலிருந்து வரக்கூடிய நிதியையும்கூட நெடுமாறனால் எழுப்பப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கே தானமாகக் கொடுத்தி ருந்தார். எப்போதுமே நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்குப் புரவலர்களைப் பிடிக்கும்தானே! சில புரவலர்கள் மேடைக்குக் கீழே காட்சி தருவார்கள். சிலர் மேடையில்.சிலர் அவர்களே எல்லாம். இப்படியாக உருவானதுதான் தமிழ்த்தேசியர் நடராஜன் நட்பு. மொழிப்போர் வீரர் என்பது அவரின் கூடுதல் மதிப்பு. முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவாக ஒரு நினைவிடம் ஒன்று சென்னை யில் அமைக்கப்படவேண்டும் என்றுதான் தமிழ்த் தேசியர்கள் விரும்பினார்கள்.நிதிப்பிரச்சினையும், இடப்பிரச்சினையும் அம்முயற்சியைத் தோற்கடித்தது. பின்னர் நடராஜனின் முன்னெடுப்பால் அந்நினைவிடம் தஞ்சைக்கு மாற்றப்பட்டது.நெடுமாறனைப் பொறுத்த வரை தமிழ்த்தேசியத்திற்கு யார் உதவி செய்தாலும் துரோகிகளைத் தவிர-அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள் பவர்.அந்தப் பக்குவ மனநிலைதான் நடராஜனையும் ஏற்றுக் கொண்டது.அவருடைய அரசியல் பின்னணி நெடுமாறன் அறியாதது அல்ல.ஒருமுறை நெடுமாறன் சிவசேனைத்தலைவர் பால்தாக்கரேவின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.அங்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளம் பூரித்துப் போனார்.தாக்கரேவைப் புகழ்ந்தார்.ஆனால் இதே தாக்கரேதான் தமிழர்களை பம்பாய் நகரத்திலிருந்து துரத்தியவர்.பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் பம்பாயில் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற தாக்குதல்களில் முன்னணியில் இருந்தவர்.இதனையும் நெடுமாறன் அறியாதது அல்ல.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஏற்படுத்தப்பட்ட, அது திறக்கப்பட்ட விதங்களில் நிலவிய அரசியல் கூத்துகள் வெளியே சொல்லப்படுவதற்கு முன்னர் அதன் சுற்றுச்சுவர் இடிப்பு அரசியல் கிளைபரந்து விரிந்து விட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்புவிழா அரசியல் சற்று சுவாரசியமாக இருக்கும். முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்புவிழா நிகழ்வுகளுக்கு தமிழினத் துரோ கிகளுக்கு அழைப்பு கிடையாது என நெடுமாறன் அறி வித்தார். தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியையும் அவரது டெசோ கூட்டத்தாரையும்தான் இப்படி சொல்லியிருக்கிறார்.இன அழிப்புப்போரின் இறுதிக் கட்டத்தில் கருணாநிதி அவர்களின் கையாலாகாத்தனத் தினைச் சுட்டிக்காட்டும் நெடுமாறனின் கோபம் நமக்குப் புரிகிறது. ஆனால் திறப்புவிழா நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சி அழைக்கப்பட்டிருந்தது.பொன்.ராதா கிருஷ்ணன் முதல்நாள் நிகழ்ச்சியில் பேசினார்.நம்முடைய கேள்வி இதுதான்.

பாரதிய ஜனதா கட்சிக்கும், தமிழ்த்தேசியத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? சமீபத்திய திருச்சிப் பொதுக்கூட்டத்தில்கூட நரேந்திர மோடி, இந்தியாவின் மொழிவாரிப் பிரிவினையைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்.இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்களை அங்கீகரிக்காதவர்கள் இவர்கள்.முதல்நாள் நிகழ்வில் பொன்ராதாகிருஷ்ணன் பேசுகிறார்:”இன்று சூரசம்ஹார நாள். நான் மௌனவிரதம் பூண்டிருக்கும் நாள். ஒவ்வொரு வருடமும் இதே தினத்தன்று திருச்செந்தூர் சென்று அமைதியாக இருப்பேன். யாரிடமும் பேசமாட்டேன்.” சம்ஹாரம் நடக்கும்போது மௌனமாகிவிடுவேன் என்று அவர் பேசியது எனக்கு நன்றாகப் புரிந்தது.2002இல் குஜராத்தில் முஸ்லிம்களின் சம்ஹாரம் நடந்தபோது பொன்னாரின் தலைவர் நரேந்திரமோடி அமைதியாக இருந்தது ஏன் என்பதும் எனக்குப் புரிந்தது. மோடியோ, பொன்னாரோ, இவர்களின் கூடாரமாகிய பா.ஜ.க.வோ குஜராத் படுகொலைகள் பற்றிய எந்த ஒரு சுய விமர்சனத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

பாரதீய ஜனதாக் கட்சித் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (திமுக,மதிமுக,பாமக இவர்கள் அதில் அங்கம்) மத்தியில் ஆட்சியில் இருந்தபோது விடுதலைப்புலிகளுக்கு, ஈழப்போராட்டத்திற்கு அவர்கள் உதவினார்கள் என்னும் கருத்து தமிழ்த்தேசியர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது? 2000ம் ஆண்டின் ஆனையிறவுப் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி பெற்று யாழ்ப்பாணம் சுற்றி வளைக்கப்பட்டு, இராணுவமுகாமில் இருந்த 40000க்கும் மேற்பட்ட வீரர்கள் சரணடையும் நிலைக்கு வந்தநிலையில், தனி ஈழம் பிரகடனப்படுத்தப்பட்டுவிடும் என்னும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் சிங்கள ராணுவம் எப்படி அம்முற்றுகையிலிருந்து மீண்டது? இந்திய அரசின் உதவியோ, ஆலோசனையோ, உத்தரவோ இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.அப்போதைய மத்திய அரசு என்பது மதிமுகவும், திமுக வும் அங்கம் வகித்த வாஜ்பாய் அரசு.தனி ஈழம் மலர இருந்த வாய்ப்பு இப்படியாக அன்று பறிபோனது.

இந்நிகழ்வுக்குப் பிறகு 2002 பிப்ரவரியில் அன்றையத் துணைப் பிரதமர் அத்வானி இலங்கையிடம் விடுத்த கோரிக்கை என்ன தெரியுமா? "பிரபாகரனைப் பிடித்து எங்களி டம் ஒப்படையுங்கள்.” அப்போதும் மதிமுக கூட்டணியில் நீடித்தது.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரான ஒரு நாடாளுமன்ற விவாதத்தின்போது பா.ஜ.க.வின் தலைவர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார்: ‘‘இலங்கையில் நடந்ததை இனப் படுகொலை எனக்குறிப்பிடக்கூடாது.” பின்னர் அவர் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்றது. ராஜபக்சே அளித்த அன்புப் பரிசான நெக்லஸ் ஒன்றையும் வாங்கி வந்தார்.

ராஜபக்சேவை பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச அரசு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றது. வைகோ அங்கு சென்று போராடிவிட்டு வந்தது தனிக்கதை. அன்று ஆயுதபாணிகளாக இருந்த 40000 சிங்கள ராணுவ வீரர்களைக் காப்பாற்ற அக்கறை கொண்ட பா.ஜ.க.வினர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது கொல்லப்பட்ட 150000 நிராயுதபாணியான தமிழ் உயிர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்பதுதான் வரலாற்று சோகம். பாரதீய ஜனதாக் கட்சியினர் ஈழம் சார்பாகக் குரல் தரும்போதெல்லாம் அங்குள்ள தமிழர்களை இந்துக்களாக விளிப்பார்கள். இந்துகோவில்கள் இடிபடுவது மட்டும் அவர்களது கண்களுக்குத் தெரியும்.எல்லாவற்றிற்கும் மேலாக ஈழப்போராட்டத்தை ஆரம்பம் முதலே வெறுக்கும் சுப்பிரமணியசாமி இப்போது பா.ஜ.கவில். பின்னர் எதற்காக தமிழ்த் தேசியர்கள் பா.ஜ.க.வோடு கூட்டுசேர வேண்டும்?சரி, தமிழ்த்தேசியர்கள் நடராஜன் கூட்டுக்குத் திரும்புவோம்.முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்புவிழாவிற்காக சாதிச்சங்கங்கள் நடராஜனை மையப்படுத்தி வாரஇதழ்களில் கொடுத்த விளம்பரங்கள் மிகவும் அருவருப்பூட்டுபவையாக இருந்தன. இது ஒரு சாதிச்சங்க நிகழ்வோ என்னும் தோற்றம் ஏற்பட்டது. விழாப் பந்தலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சாதிச்சங்கங்களின் விளம்பரப் பலகைகள் எப்படி நெடுமாறன் அவர்களின் பார்வைக்குப் படாமல் போயின அல்லது பார்வையில் பட்டும் அதை அவர் அனுமதித்தாரா?

sanmugam%20(3).jpg

முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழ்த்தேசிய உணர்வு இன்று அதிகம் தேவைப்படுகிறது.மத்திய அரசின் பாராமுகத்துடன் தமிழக மீனவர்களின் வாழ் வாதாரம் பறிக்கப்படுகிறது.நதிநீர்ப் பகிர்வில் நேர்மை யான உரிமைகள் தமிழகத்திற்கு மறுக்கப்படுகின்றன.தமிழகம் அணுமின்கழிவுகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. கூடங்குளம் போராட்டம் இரண்டு ஆண்டுகளைக் கடந்தபின்பும் அரசுகளால் அலட்சியம் செய்யப்படுகிறது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றிய சர்வதேச விசாரணை இன்னமும் முன்னெடுக்கப் படவில்லை. இனப்படுகொலைக்குப் பின்னரான ஈழத்தில் தமிழ்மக்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகிறது. எல்லாக் கடமைகளையும் முன்னெடுக்க தமிழகத்தில் வலுவான தமிழ்த்தேசிய இயக்கமும், தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்ட இயக்கமும் வலுவாகத் தேவைப்படும் இந்நேரத்தில் தமிழ்த் தேசியர்களின் சாதி நோக்கிய,இந்துத்வா நோக்கிய போக்குகள் தமிழ்த்தேசியத்திற்கு சீர்செய்ய முடியாத நோயை ஏற்படுத்திச் செல்லும்.

சரி.தமிழ்த்தேசியத்திற்கு வருவோம்.தமிழ்த்தேசியம் என்றால் என்ன?அதன் மையச்சரடு என்ன?பெரியார் தமிழர் இனம், திராவிடர் இனம் பேசினார்.எதற்குப் பேசினார்? தமிழர்களின் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற் காக, பார்ப்பனீயத்திலிருந்து விடுதலை பெற,சாதி வெறியிலிருந்து விடுதலை பெற,முக்கியமாக இந்துத்வா சக்திகளை அம்பலப்படுத்திட பெரியார் இனப்பெருமை பேசினார். அப்போது தமிழினம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது. சுயமரியாதை பெற்றது.தமிழ்த்தேசியத்திற்கான உயிர் சாதிகளற்ற,சாதிவெறி நீங்கிய ஒரு தமிழர் சமுதாயத்தில்தான் தங்கியிருக்கமுடியும்.அதன் உடலில் இந்துத்வா சக்திகளுக்கு கடுகளவும் இடமிருக்கமுடியாது.தமிழர் ஒற்றுமை என்பது ஒடுக்கப்படும் மக்களின் ஒற்றுமை.

உழைக்கும் மக்களின் ஒற்றுமை. தமிழ்ச்சமூகத்தில்

தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட,சிறுபான்மையின, விளிம்பு நிலையில் வாழும் தமிழர்களுக்குத்தான் தமிழ்த்தேசியம் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. சமூகத்தின் உயர் தட்டில் இருக்கும் ஒரு சிறுபான்மைக்கூட்டத்திற்கு அது எப்பொழுதும் தேவைப்படுவதில்லை. “தமிழ்ச்சமூகத்தில் உயர்நிலையிலிருக்கிற, சிறுபான்மைகளாகயிருக்கிற உயர்நிலைசாதியினர், அவர்களின் ஒடுக்குமுறைக் கெதிரான சமூகநீதிக்கான போராட்டம் எப்படி பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையைக் கோருகிறதோ, அதேபோல் பிறவகையில் பிற்பட்டவராக இருந்துகொண்டே தீண்டாமை,வன்கொடுமை இவற்றில் ஆதிக்கசாதியினராகச் செயல்படுகிறவர்களுக்கெதிரான போராட்டமும் தமிழர்களின் உண்மையான, புரட்சிகரமான ஒற்றுமைக்குத் தேவைப்படுகிறது” என்ற தோழர் தியாகுவின் வார்த்தைகளைத்தான் தமிழ்த் தேசியத்தின் மையநீரோடையாக நான் பார்க்கிறேன். மூன்று நாட்கள் நிகழ்வுற்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்புவிழா நிகழ்வு ஒரு தமிழ்த்தேசியப் போர்க் களமாகத்தான் எனக்குத் தோன்றியது.ஆனால் பல்வேறு பகைசக்திகள் ஒரே அணியில் இருந்ததைக் கண்டுதான் நானும் குழம்பிப்போனேன்.தாங்கள் யாரை எதிர்த்துப் போராடப்போகிறோம் என்ற பிரக்ஞை அவர்களுக்கு வருவதற்குள் அப்போர் முடிவுக்கு வந்திருக்கும்.தமிழ்த் தேசியம் குறித்த உண்மையான தெளிவை இவர்கள் பெற்றபிறகுதான் இவர்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஒன்றுசேரமுடியும். தங்கள் பொது எதிரியை இவர்கள் அடையாளம் காணவும் முடியும்.அந்த அணியில் சாதியத்தலைவர்களும்,மதவாத சக்திகளும் இருக்க மாட்டார்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களும், சிறுபான்மை இனத்தவர்களும் தமிழ்த்தேசிய அணியில் இடம்பெற்றிருப்பார்கள்.அந்த அணியின் பின்னால் சாதி, மதம் பாராமல் தமிழர்களாக தமிழ்மக்கள் ஒன்றிணைவார்கள்.


http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=6435

இணைப்புக்கு நன்றி கிருபன்.  விமர்சனங்களுக்கு அப்பால் வரலாறு பாதுகாக்கபட்டு அடுத்த சந்ததியிடம் கையளிக்கபடுவது நாகரீக மனித குலத்தின் பண்பு. உலகம் எங்கும் இதனை பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.