Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுப்பு மூலை: வன்னியிலிருந்து ஓர் அலைபேசி அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு மூலை: வன்னியிலிருந்து ஓர் அலைபேசி அழைப்பு

நந்தி முனி

இம்முறை மாசிப் பனி மூசிப் பெய்யவில்லை. எனினும், விடியப்புறம் எழும்ப மனமில்லாமல் சுருண்டு கிடந்தேன். அலைபேசி அலறியது. திடுக்கிட்டு எழும்பி யார் என்று பார்த்தேன். புதுக்குடியிருப்பில் இருந்து ஒரு சிநேகிதன் எடுத்திருந்தான்.

சிநேகிதன்: என்னடாப்பா நித்திரையை குழப்பிட்டனே?

நந்திமுனி: இல்லை. பறவாயில்ல கத.

சிநேகிதன்: என்ன புதினங்கள்?

நந்திமுனி : ஒண்டுமில்ல. எல்லாம் வழம போலதான்... அது சரி அதென்ன பின்னணியில ஒரு இசைபோகுது?

சிநேகிதன்: ஓ..அதுவா? அதுதான் பேக்கரிக்காரர்களின் தேசிய கீதம்.

நந்திமுனி: தேசிய கீதமோ.

சிநேகிதன்: ஓம். பருத்தித்துறையில இருந்து தெய்வேந்திரமுனை வரைக்கும் ஒரே இசைதான். கொழும்பில கேட்கிற அதே இசைதான் புதுக்குடியிருப்பிலயும் கேட்குது. அதுவும் காலம்காத்தால. எங்கள காலமையில சேவல் எழுப்புதோ இல்லையோ பேக்கரிக் கீதம் மட்டும் தவறாமல் வந்து எழுப்பும்.

நந்திமுனி: உண்மைதான். இப்ப பேக்கரி வீடு தேடி வருகுது என்ன?

சிநேகிதன்: பேக்கரி மட்டுமா வருகுது? காப்பற் வீதி வருது, லீசிங் கொம்பனி வருது, வங்கி வருது, கதிர, கட்டில் எல்லாம் வீடு தேடி வருது. இன்ர நெற் வருது, கரண்ட் வருது. கேபிள் ரி.வியில தியட்டர் வீடு தேடி வருது. நாடு வரவர சிறுத்துக்கொண்டே போகுது.

நந்திமுனி: அதுதான் மகிந்த கிட்டடியில அம்பாந்தோட்டையில வைத்துச் சொன்னவர்தானே. கொழும்பில இருந்து அம்பாந்தோட்டைக்கு அதிவேகப் பாதையில வந்தவராம். முந்தின பயணங்களோட ஒப்பிடேக்க வலு கெதியில வந்திட்டாராம். அதுதான் சொன்னவராம் தன்னுடைய ஆட்சிக் காலத்தில நாடு சரியாச் சிறுத்திட்டுது எண்டு.

சிநேகிதன்: சிறுத்திட்டுதான். ஆனால் அது அவயின்ர நோக்கு நிலையில இருந்துதான். எங்கட நோக்கு நிலயில இருந்து இல்ல.

நந்திமுனி: அதென்ன அவயின்ர நோக்கு நிலை?

சிநேகிதன்: நாடு சிறுத்ததால அவைக்குத்தான் நன்மை. எங்களுக்கு இல்ல... எல்லாம் வருகுதுதான் ஆனா எது வெளியில போகுது எண்டு கேள்.

நந்திமுனி: எதடாப்பா போகுது?

சிநேகிதன்: மண் போகுது. இரும்பு போகுது. மரம் போகுது. காசு போகுது. எது போகக்கூடாதோ அதெல்லாம் போகுது. வன்னியில காட்டுக்க விறகுக்கு மரம் வெட்டினா, வீடு கட்டக் கதியால் வெட்டினா அதுக்கு சட்டம் கதைக்கினம். சின்னச் சின்ன வியாபாரியள், சின்னச் சின்ன வாகனங்களில மரத்தக் கடத்தினா பிடிச்சுக்கொண்டுபோய் நீதிமன்றத்தில நிறுத்தினம். ஆனா யார் கொண்டுபோறது எண்டு தெரியாமலே பெரிய பெரிய கொண்டெயினர் வாகனத்தில மரம் போகுது. கடசிச் சண்டையில கைவிடப்பட்ட இரும்பு போகுது.

நந்திமுனி: இப்பவும் போகுதே.

சிநேகிதன் : ஓம். இப்பவும் தான். வடக்கில பெரியளவில அவயளும் மர வியாபாரம் செய்யினம். உனக்கு கொண்டைமடு காட்டைத் தெரியும்தானே. கேப்பாபுலவுக்க போனா அதுக்குள்ள இருந்து ஒரு உட்பாதை போகுமே?

நந்திமுனி: ஓமோம்... கேப்பாபுலவிலேயே முன்னடிக்கு மட்டும்தானே சனம் இருக்கு. மிஞ்சின பகுதி முழுக்க அவ தானே இருக்கினம். கொண்டைமடுவும் அவயிட்ட தானே.

சிநேகிதன்: கொண்டைமடு காட்டில இருந்து பெறுமதியான மரங்கள எல்லாம் அறுத்தெடுத்து வெளியில கொண்டுபோறங்கள்... பொக்கணை, மாத்தளன் வெளியில கிடந்த பழைய இரும்பு முழுதும் ஏத்திட்டாங்கள். இந்த லீசிங் கொம்பனிகள், வங்கிகள் எல்லாம் வரப்போய் காசு வெளியில போகுது. உண்மையான பொருளாதார வளர்ச்சி எண்டா காசு உள்ள வரோணும். ஆனா இஞ்சயிருந்து காசு வெளியில போகுது. இத யாருக்கு இலாபம்?

நந்திமுனி: நீ சொல்லுறது உண்மைதான். யாழ்ப்பாணத்திலயும் இதுதான் நிலம. அதுதான் முதலாளியள் தற்கொல செய்யினம். தலைமறைவாயினம்.

சிநேகிதன்: கடசியா எப்ப முள்ளியவளைப் பக்கம் வந்தனீ... முல்லைத்தீவு மெயின் றோட்டுக்கும் அதின்ர இரண்டு பக்கத்திலயும் இருக்கின்ற சனங்களிண்ட குடியிருப்புக்கும் இடயில ஏதேனும் சம்பந்தம் இருக்கே. காப்பற் பாதையின்ர இரண்டு பக்கத்திலயும் இன்னமும் முழுசா மீண்டெழாத கிராமங்கள் இருக்கு. அதுகள் ஏதோடயும் சம்பந்தப்படாதது போல காப்பற் வீதி ஒரு அந்நியனைப்போல போகுது... இப்பிடித்தான் நாடு சிறுத்தது.

நந்திமுனி: ஏனடாப்பா கிளிநொச்சியில உள்கிராமங்களுக்கும் கரண்ட் வந்திட்டு. றோட்டுப் போடுறாங்கள். அங்கயெல்லாம் சனங்கள் மீண்டெழத் தொடங்கிற்றுத்தானே?

சிநேகிதன்: சனங்களிட்ட காசு இல்ல. போருக்குப் பின்னரான அபிவிருத்தி எண்டது கிளிநொச்சி நகரத்தில இருக்கிற தெரு விளக்குகளப் போலத்தான்.

நந்திமுனி: நீ என்ன சொல்ல வாறாய்.... எனக்கு விளங்கேல்ல.

சிநேகிதன்: ஜனாதிபதி வந்து திறக்கேக்கயும், அதுக்கும் பிறகு கொஞ்சக் காலத்துக்கும்தான் அந்த விளக்குகள் எரிஞ்சது. இப்ப ஏ-9 வீதி இருட்டுக்க கிடக்குது.

நந்திமுனி: ஆன அதுக்கு பிரதேச சபையும் பொறுப்பு எண்டு சொல்லினமே. பிரதேச சபை கூட்டமைப்பிட்ட தானே இருக்கு?

சிநேகிதன்: உண்மை தான். ஆனா பிரதேச சபையிட்ட காசு இருக்கவேணுமே... யாரிட்டதான் இப்ப காசு இருக்கு? அது தான் நான் சொன்னனான் காசு வெளியில பாயுறதத்தான் அவயள் நாடு சிறுத்திட்டு எண்டு சொல்லினம்... ஆனா புதுக்குடியிருப்பில இருந்து கேப்பாபுலவு றோட்டில இறங்கிப் பார். உன்ர இடக்கைப் பக்கம் ஒரு காட்டுத் துண்டுக்க ஒரு தகரக் குடியிருப்பு இருக்கும்.

நந்திமுனி;: ஓமோம். நானும் கவனிச்சனான்.

சிநேகிதன்: அதுக்குப் பெயரும் மீளக்குடியேற்றம் தான். வெளிநாட்டில உறவு இருக்கிறவனுக்கு காசு வருகுது. ஏற்கனவே கல்வீட்டில இருந்தவன் உடஞ்ச வீட்டைத் திருத்துறான் அல்லது புது வீட்டைக் காட்டுறான். ஆனா ஏற்கனவே மண் வீட்டில இருந்தவனும் வெளிநாட்டில இருந்து காசு வராதவனும் தகரக் கொட்டிலுக்கதான் மீளக்குடியரமவேணும். சண்டயில செத்த கன பிள்ளயள், காணாமற்போன கன பிள்ளயள், கையைக் காலைக் கொடுத்த கன பிள்ளயள் இப்பவும் லோயருக்கு காசு கட்ட வழியில்லாம சிறயில இருக்கிற கனபேர் இப்பிடிப்பட்ட தகரக் கொட்டிலுக்க இருந்த வந்தவதான். எல்லாப் பேப்பரிலயும் உந்தச் சனம் தான் தலைப்புச் செய்தி. ஆன அதுகளுக்கு எப்பவுமே மண்வீடும், தகரக்கொட்டிலும், கிறவற்சாலையும் தான்.

நந்திமுனி: நீ சொல்லுறது உண்மைதான். எல்லாப் பேப்பர்களிலயும் அந்தச் சனங்கள் தான் தலைப்புச் செய்தி. ஆனா பேப்பர் முதலாளிமாரோ பெரிய தலைவர்களோ ஆய்வாளர்களோ, புத்திஜிவிகளோ அந்தச் சனங்களைப் போய் பார்க்கிறது இல்ல.

சிநேகிதன்: ஓமடப்பா. இப்ப எல்லாத்துக்கும் கிளிநொச்சிதான் கவர்ச்சி மையம். புதுக்குடியிருப்புக்கும் முல்லைத்தீவுக்கும் எத்தின பிரமுகர்மார் வந்துபோகினம்? மண் வியாபாரியும், இரும்பு வியாபாரியும் லீசிங் கொம்பனிக் காரரும்தான் வந்து போறாங்கள். தேசியம் கதச்சுக்கொண்டு எல்லாரும் தங்கட தங்கட இடத்தில பாத்திரமா இருக்கினம். விழாக்களுக்கு மட்டும் மாலையும் கழுத்துமா வந்து நிற்கினம். அவயின்ர பிள்ளையள் பி.ஏ.படிக்குது. எம்.ஏ.படிக்குது. கலாநிதி பட்டம் எடுக்குது, வெளிநாட்டுக்குப் போகுது. எங்கட பிள்ளையள் தியாகி பட்டத்தோட செத்துப்போயிற்று அல்லது படிப்பும் இல்லாமல் இயக்கமும் இல்லாமல், காசும் இல்லாமல் உழைக்கிற வழியும் தெரியாமல் நடுத்தெருவில நிக்கிது.

நந்திமுனி: உண்மை தான்ராப்பா... கேட்க குற்ற உணர்ச்சியா இருக்கு. எங்கட அரசியல் எப்பவும் சில கவர்ச்சியான மையங்களத்தான் சுற்றிச் சுற்றி வருகுது. விளிம்பு நிலை சனங்கள, தகரக் கொட்டில்ல மீளக் குடியமர்ந்துகள, தடுப்பில உள்ளதுகள, தடுப்பால வந்ததுகள, சிறையில இருக்கிறதுகள வசதியா மறந்திட்டம்.

சிநேகிதன்: நாடு சிறுக்கச் சிறுக்க இன்னுமின்னும் மறக்கப்போகிறம் பார்.

நந்திமுனி: உண்மைதான்... அதுசரி காலங்காத்தால ஏன் எடுத்தனீ?.

சிநேகிதன்: ஓமாடப்பா. எனக்கும் போனில காசு முடியப் போகுது. அரசியல் கதச்சதில அத மறந்துபோயிற்றன். நான் ஏன் எடுத்தனானெண்டா வாற கிழம என்ர புது வீட்டுக்கு குடிபூறப்போறம். நீ கட்டாயம் வரோணும்.

நந்திமுனி: வருவன்...வருவன்.. அதுசரி எப்பிடியடாப்பா வீடு கட்டினனி. பெரிய வீடே.

சிநேகிதன்: இல்ல. அது ஒரு கோழிக்கூடு. அரைச் சுவர் கட்டின தகர வீடு. காப்பற் தெருக்களக் கடந்து கே.எவ்.சி. சதுக்கத்த கடந்து கார்கில்ஸ் ஷோ ரூமைக் கடந்து கரண்டில்லாத எங்கட வீட்டுக்கு நீ கிறவற்சாலையால வரவேண்டியிருக்கும். மீளக்குடியமர்ந்த வன்னி அகதியின் தகரக் கொட்டில் உன்னை எதிர்பார்த்திருக்கிறது...

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=6f212045-bf43-4cd8-b976-651733b45bbe

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.