Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது!

 
-எஸ். ஹமீத்-
 

 
ன்றைய இலங்கைச் சூழலில் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டோர் திட்டமிட்ட வகையில், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடியொற்றி சிறுபான்மைச் சமூகங்களின் மீது மேற்கொள்ளும் கருத்தியல் மற்றும் பௌதீகத் தன்மை வாய்ந்த தாக்குதல்களைக் கிஞ்சித்தேனும் குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீதான இத்தகு தாக்குதல்களுக்கு அரசாங்கத்தின் அதியுயர் பீடம் தொடக்கம் சாதாரண தரத்திலுள்ள இனவெறி இதயம் தாங்கிகளினால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கப்படுகின்றதென்பதும் மறுக்க முடியாத உண்மையே.
 
 
தன்னுடைய எதிர்கால அரசியல் இருப்பை இலங்கையின் அரச சிம்மாசனத்தில் இருத்தி அழகு பார்க்கும் கற்பனைகளையும் கனவுகளையும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு தனி நபரின் அப்பழுக்கற்ற சுயநலத்தின் வெளிப்பாடுகளாகவே சிறுபான்மையினங்களின் மீதான இன்றைய மிலேச்சத்தனமானதும் அதேநேரம் கோழைத்தனமானதுமான வன்முறைகள் நேர்மையான அரசியல் ஆர்வலர்களினால்  இனம் காணப்படுகின்றன. இந்த உண்மை, இன்றைய இலங்கை நாட்டின் அதியுயர் கனவானுக்குத் தெரிந்திருந்தும் அதனைக் கட்டுப்படுத்தவோ அல்லது கண்டிக்கவோ முடியாத சூழ்நிலைக் கைதியாக அவர் இருப்பதின் பின்னால் பல மர்மங்கள் நிறைந்து கிடக்கின்றன.
 
 
இலங்கையின் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையினரான தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் கடந்த காலங்களில் சிங்களப் பெருந்தேசியவாதக் கும்பலினால் தாராளமாகவே அரங்கேற்றப்பட்டுவிட்டன. புறக்கணிக்க முடியாத அளவுக்குப் பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன; தமிழ் மக்களின் பொருளாதாரமும் கல்வியும் மற்றும் பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களும் சீரழிக்கப்பட்டு விட்டன; நிலங்கள் அபகரிக்கப்பட்டுவிட்டன; உயிர் வாழ்தலின் மீதான சந்தேகங்களும் அச்சமும் தமிழ் மக்களின் இதயங்களில் புகட்டப்பட்டு விட்டன.
 
 
இனி என்றைக்குமே கிளர்ந்தெழ முடியாத அளவுக்குத் தமிழ் மக்களின் முள்ளந்தண்டுகள் உடைக்கப்பட்டுவிட்டதான உண்மையற்ற இறுமாப்பின் நுனியிலிருந்து முளைத்த மற்றுமொரு குரூர இனவாத சிந்தனைதான் தற்போது முஸ்லிம் மக்களின்  அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி இன்னும் மத, கலாச்சார, பண்பாட்டுப் பொக்கிஷங்களின் மீது பெரு நெருப்பாய்ப் பொழியத்  தொடங்கியுள்ளது.
 
 
தாம் சார்ந்த சமூகத்தின் மீது பகிரங்கமாக நிகழ்த்தப்படுகின்ற சிங்கள இனவாதத்தின் வன்மம் மிகுந்த செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வழியற்று நிற்கும் முஸ்லிம் அரசியற் செயற்பாட்டாளர்களின் 'கையறு நிலை'மைக்குப் பல்வேறு தரப்பினராலும் பல வேறு காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. இதிற் பிரதானமானது, அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் உள்ள முஸ்லிம்கள் தங்களின் பதவி சுகபோகத்தை இழந்து விடாதிருப்பதற்காகவே, முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களைக் கண்டும் காணாதிருக்கின்றனர் அல்லது ஒப்புக்குக் கண்டன அறிக்கைகளை விட்டும் மேலோட்டமான சில கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதாகும்.
 
 
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மேற்கண்ட ஆதங்கம் அல்லது குற்றச்சாட்டு, ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் அதற்கான நிகழ்தகவுகளைப் புறம் தள்ளிவிட முடியாது.
 
 
இலங்கையைப் பொருத்தவரை அமைச்சர், பிரதியமைச்சர் பதவிகள் என்பது சொர்க்க வாழ்வுக்கான நுழைவுச் சீட்டுகளுக்கு ஒப்பானவை. ஓட்டாண்டியாய் வாழ்ந்தவனையும் மிகக் குறுகிய காலத்தில் உச்சாணிக் கொப்பில் ஏற்றிவிடும் மந்திரக் கோல்கள் அவை.
 
 
கொளுத்த சம்பளம், கொமிஷன், அலவன்ஸ்,கொந்தராத்து வருவாய், இலஞ்சப் பணமென்று மாதாந்தம் பல இலட்சங்களை ஈட்டித் தரும் அந்தப் பதவிகள், சமூகத்தில் செல்வாக்கையும் பெருமையையும் பெற்றுத் தருகின்றன. வீட்டிலும் வீதியிலும் ஆயுதம் தாங்கிய காவலர்கள்-ஆடம்பர வாகனங்கள்-உல்லாசப் பயணங்கள்-ஓய்வு விடுதிகள் என வாழ்வே அலங்காரங்கள் போர்த்து அற்புதமாக மின்னும். போதாக்குறைக்கு ஆதரவாளர்களின் கூழைக் கும்பிடு, அதிகாரிகளின் முகஸ்துதி என இன்னும் எத்தனையோ...!
 
 
இத்தனையையும் அள்ளி வழங்கும் அட்சய பாத்திரத்தை இழப்பதற்கு யாருக்குத்தான் மனசு வரும்...? அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு, பதவியினால் கிடைக்கும் பெரும் சுகத்தை-பேரின்ப வாழ்க்கையை- இழந்துவிட இந்த அரசியல்வாதிகள் ஒன்றும் பைத்தியக்காரகள் அல்லவே...!
 
 
ஒரு சமூகத்தின் அல்லது ஒரு மாவட்டத்தின் பிரதிநிதியாகப் பாராளுமன்றம் வருகின்ற அரசியல்வாதி, மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே தன்னைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களை மறந்து விடுகின்றான் என்பது இலங்கை அரசியலின் அழிக்கமுடியாத தலையெழுத்தாகிவிட்டது. எந்த மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் அவனைத் தம் பிரதிநிதியாக அனுப்பி வைத்தார்களோ, அந்த மக்களுக்கு வெறும் சில்லறைச் சலுகைகளைக் கொடுத்துத் தனக்கான கோடிகளைச் சாதுர்யமாய் இந்த அரசியல்வாதி அமுக்கிக் கொண்டு விடுகிறான்.
 
 
225 அங்கத்தினர்களை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 18 முஸ்லிம் உறுப்பினர்களில் இந்த அரசாங்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டு அதற்கு ஆதரவு வழங்கி வருபவர்கள் 16 பேர். இந்தப் பதினாறு பேரில் நான்கு அமைச்சர்கள்,மூன்று பிரதியமைச்சர்கள் இருக்கிறார்கள்.
 
 
இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றெல்லோரும் சுயநல அரசியலில்தான் மூழ்கிக் கிடக்கிறார்கள். அரச ஆதரவுடன் நடைபெறும் தாம் சார்ந்த சமூகத்துக்கெதிராக நிகழ்த்தப்படும்  நடவடிக்கைகளுக்கெதிரான தமது குரல்களையும் செயற்பாடுகளையும் அரச உயர் மட்டத்தின் அதிருப்திக்கும் கோபத்துக்கும் உள்ளாகாதவாறு, மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  வைத்துக் கொள்வதில் இந்த அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
 
 
இன்றைய அரசாங்கம் எல்லாக் கட்சிகளிலுமிருந்தும் அங்கத்தினர்களைப் பெரும் விலை கொடுத்து வாங்கி இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய திமிருடன் உள்ளது. அரசில் இருக்கும் 16 முஸ்லிம் அங்கத்தவர்களும் ஒட்டு மொத்தமாக அரசிலிருந்து விலகினாலும் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்துக்கு எவ்வித சேதாரங்களும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆக, தமது சமூகத்திற்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகளுக்கெதிராகத் தாம் ஆட்சியிலிருந்து விலகப் போவதாக இந்த அரசியல்வாதிகளினால் பூச்சாண்டி காட்டவும் முடியாது.
 
 
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் ஒன்றிற்கான திகதி அறிவிக்கப்படும் வரை இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தமது சமூகம் எதிர்நோக்கியுள்ள பாரிய அச்சுறுத்தல்களுக்கெதிரான எவ்வித காத்திரமான செயற்பாடுகளையும் எதிர்பார்ப்பதென்பது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகத்தான் முடியும்.

ஓர் ஆறுதலைத் தருவது போல அடுத்த ஆண்டு 'தேர்தல் ஆண்டாக' இருக்குமென்ற கோடு காட்டல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போதிருந்தே தமது சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவரும் விடயத்தில் தீவிரமாகச் செயலாற்ற முடியும். அதைவிடுத்து, அடுத்த தேர்தல் வரை முடியுமான அளவுக்குச் சம்பாதிப்போம்-பதவியின் அனுகூலங்களை அனுபவிப்போம் என்று நினைப்பார்களாயின், இலங்கை முஸ்லிம் சமூகம் இன்னுமின்னும் நெருக்கடிகளையே சந்திக்கும்.

இலங்கையில் உள்ள எல்லா முஸ்லிம் அரசியற் கட்சிகளும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட்டுத் தமது சமூகத்தின் உரிமைகளையும் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமென்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். ஆனால், துரதிருஷ்டவசமாக  முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் இப்போதைக்கு ஒன்று பட்டியங்கும் சாத்தியக் கூறுகள் எவற்றையுமே காண முடியாதிருக்கிறது. எனினும், தங்களது தனிப்பட்ட பாசறைகளிலிருந்து கொண்டே, சமூக விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

போருக்குப் பின்னரான சூழலில் பிரதான தமிழ் அரசியற் கட்சிகளின் செயற்பாடுகள், தமிழ் மக்களிடையே ஒரு நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்தியிருக்கின்றது. சோரம் போகாத-பதவிகளுக்கு மண்டியிடாத-சலுகைகளுக்காகச் சமரசம் செய்து கொள்ளாத-அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத அவர்களின் அரசியலிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் கட்சிகளும் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.


எல்லாவற்றுக்கும் மேலாக, தம்மீது நிகழ்த்தப்பட்டதும் இன்னமும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பதுமான அடக்குமுறைகளுக்கெதிரான தமிழ் மக்களின் தற்போதைய போராட்டங்களோடு முஸ்லிம் சமூகமும் தன்னை இணைத்துக் கொண்டு, 'தமிழ் பேசும் சமூகத்தின்' விடுதலை'க்காக ஒன்றித்து இயங்குமெனில், வெகு விரைவிலேயே அந்த விடுதலையை அடைந்து விடலாம்.
 
 
ஆமாம்...தமிழ் மக்களோடு இணைந்து போராடி, தமது உரிமைகளையும்  வென்றெடுக்க முஸ்லிம் மக்களுக்குக் கிடைத்திருக்கும் சரியான தருணம் இதுவே!

 

           

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது!
 
தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது!
 
தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது!
 

நன்றி  ஐயா

(எத்தனை  முறையும் சொல்லலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு ஏற்ற கட்டுரைக்கு நன்றி.

சுயநலம் பிடித்த அரசியல்வாதிகள் ஓர் இனத்தின் நீண்டகால இருப்பைக் கருத்தில்கொண்டு அரசியல் நடாத்துவதில்லை. இயன்றவரை தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதே அவர்களின் முக்கிய வேலையாக இருக்கும். இதில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதம் கிடையாது.

இலங்கைத் தீவில் இரு நாடுகள் உருவாவதற்கான சாத்தியங்கள் குறைந்துபோயுள்ள நிலையில், சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஓரணியில் நின்று தங்களைத் தாங்களே ஆட்சி செய்யக்கூடிய அதிகாரங்கள் உள்ள தீர்வுத் திட்டத்தை நோக்கிச் செயற்படவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துரைத்திருக்கும் அன்பர் விசுகு, அன்பர் கிருபன் ஆகியோருக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்...!

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்து, காத்திருந்து ... காயப்பட்டுப் போனவர்கள் தான் யாழில் அதிகமாக இருக்கின்றார்கள் ! :o

 

காரணம், எஸ்.ஹமீத் என்ற தனிப்பட்ட மனிதனல்ல! :lol:

 

வீடொன்று எரிந்து கொண்டிருக்கும் போது, அதிலிருந்து 'கொள்ளி' பிடுங்கிய 'அரசியல் வாதிகளின்' செயல்கள், ஆழமான வடுக்களை விட்டுச் சென்றிருக்கின்றன, என்பது தான் 'உண்மை' !

 

ஆயினும், எரிப்பதற்கு வீடுகள் இல்லாதபோது, 'கொள்ளிகளால்' கட்டப்பட்ட வீடுகளே, எரிக்கப் படப்போகின்றன! :o

 

எரித்தவனின் கரங்கள் என்றுமே, சும்மா இருக்கப்போவதில்லை, சகோதரனே!

 

அது இப்போதே ஆரம்பித்து விட்டதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்! :icon_mrgreen:

 

இதைத் தடுப்பதற்கு, ஒரே வழி, எல்லோரும் 'தமிழர்கள்' என்னும் அடையாளத்தின் கீழ் இணைவதே !

 

நீங்களும், நானும் பேசிய முதல் வார்த்தை, 'அம்மா' அல்லது 'உம்மா' என்பதே தவிர, 'முருகா' என்பதோ அல்லது 'அல்லா' என்பதோ அல்ல என்பது தான் 'நிதர்சனம்' !

 

நாம் மதங்களால் பிரிந்திருந்தாலும், 'மொழியால்' இணைந்தவர்கள் என்பதே, முன்னிலைப் படுத்தப் படவேண்டும் என்பது தான் எனது, பணிவான கருத்து !

 

மொழியை இழப்பது, தாயை இழப்பதற்குச் சமனானது! :icon_mrgreen:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயத்தில் யாழ்.இணையத்தளத்தின் வாசகப் பெருமக்களிடமிருந்து மேலும் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தடுப்பதற்கு, ஒரே வழி, எல்லோரும் 'தமிழர்கள்' என்னும் அடையாளத்தின் கீழ் இணைவதே !

இதற்குக் காலம் கடந்துவிட்டது. தமிழர்களாகிய நாங்கள் எம்மை இலங்கையர்கள் என்ற அடையாளத்தின் கீழ் இணைய விரும்பாத மாதிரி முஸ்லிம்களும் தமிழர்கள் என்ற குடைக்குள் ஒதுங்குவதை விரும்புவதில்லை. ஆனால் பெரும்பான்மையினமான சிங்கள இனத்தின் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்று ஓரணியில் சேர்ந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகவே முஸ்லிம்களின் தனித்துவத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அம்மா, உம்மா என்ற வார்த்தைகளை வைத்து இனங்களை வரையறை செய்யமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குக் காலம் கடந்துவிட்டது. தமிழர்களாகிய நாங்கள் எம்மை இலங்கையர்கள் என்ற அடையாளத்தின் கீழ் இணைய விரும்பாத மாதிரி முஸ்லிம்களும் தமிழர்கள் என்ற குடைக்குள் ஒதுங்குவதை விரும்புவதில்லை. ஆனால் பெரும்பான்மையினமான சிங்கள இனத்தின் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்று ஓரணியில் சேர்ந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகவே முஸ்லிம்களின் தனித்துவத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அம்மா, உம்மா என்ற வார்த்தைகளை வைத்து இனங்களை வரையறை செய்யமுடியாது.

தமிழ் நாட்டில் உள்ள சில நண்பர்களுடன், நெருங்கிய தொடர்பு ஏற்படும் வரை, உங்கள் கருத்துடன் தான் நானும் இருந்தேன், கிருபன்!

 

முதலில் நான் தமிழன், இரண்டாவதாக நான் முஸ்லிம் என்று அவர்களில் ஒருவர் கூறியபோது, என்னையே நான் கிள்ளிப்பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது! :D

 

இந்திய மாநிலங்களும் மொழி வாரியாகவே பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை, மதவாரியாகப் பிரிந்து போய்விடக்கூடாது என்பதில், மகாத்மா காந்தியும் மிகவும் தெளிவாகவே இருந்தார். கனடா தவிர்ந்த, மற்றைய நாடுகள் அனைத்தும் மொழிவாரியான அடிப்படையிலேயே வெற்றிகரமாக இயங்குகின்றன!

 

இலங்கையர்கள் என்ற அடையாளத்தின் கீழ், செல்வதற்கு எனக்கு எந்த விதமான 'ஆட்சேபனையும்' இல்லை! ஆனால், இலங்கையன் என்று பெயரில் மட்டுமே, அடையாளப்படுத்தப் படுவதிலும் பார்க்க, இலங்கையனாக, நடை முறையில் என்னை ஏற்றுக்கொள்ளாத வரைக்கும், 'அடிமையாகவே' நான் கணிக்கப்படுவேன். இதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை! அது இல்லாத கட்டத்தில் தான், 'பிரிவினை' நோக்கிய பயணத்துக்கான தேவை ஏற்பட்டது!

 

இஸ்லாம் என்பது மத அடிப்படையிலான 'பிரிவு' !

 

'புத்தம்' என்பதும் மத அடிப்படையிலான பிரிவு!

 

சிங்களம் என்பதிலும் பார்க்கப் 'புத்தம்' என்பது எம்மீது நிகழ்த்தப்பட்ட அழிவுகளுக்கு முக்கியமான காரணம் என்பேன்!

 

எந்த மதமும் 'வெறியாக' மாறும்போது, அங்கு 'மதத்தின்' நோக்கம் சிதைந்து விடுகின்றது! வெறி மட்டுமே மிஞ்சுகின்றது!

 

'போயர்' யுத்தங்களும், சிலுவை யுத்தங்களும், 'கலீபாக்களின்' யுத்தங்களும் காட்டி நிற்கின்ற 'வரலாறு' இது தான்!

 

'மகாலையா' என்னும் சிவன் கோவிலின் மீது 'தாஜ் மகால்' கட்டப்பட்டிருக்கின்றது!

 

அதே போல, 'நாலந்தா' என்ற பல்கலைக்கழகமும் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது!

 

மதத்திற்காக 'மனிதர்கள்' என்ற நிலை மாறி, மனிதருக்காக 'மதங்கள்' என்னும் நிலை வர வேண்டுமென்பது தான் எனது 'அவா'!

 

தவிர, மொழி வழியாக நாம் இணைந்தால், இரு இனங்களுக்கிடையிலான போராட்டமாக அமையும்!

 

மத வழியாக நாம் போராடினால், 3!x 2!=12 ----> பன்னிரண்டு பிரிவுகளுக்கான போராட்டமாக அமையும்! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.