Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியலும் பழந்தமிழ்ப் பாடல்களும்

Featured Replies

கலீலியோ

 

கலீலியோ கோபுரம் ஒன்றில் மேலிருந்து வெவ்வேறு எடைகள் கொண்ட பொருட்களை ஒரே நேரத்தில் கீழே போட்டு அவை ஒரே சமயத்தில் தரையை வந்தடைகின்றன என்பதை நிறுவிய சம்பவம் அனைவரும் அறிந்ததே. கலீலியோவின் கூற்று உடனடியாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் படவில்லை. அவரது கூற்று தவறு அரிஸ்டாடில்தான் சரி என்பதை நிறுவுவதற்காக பேராசிரியர் ஒருவர் பைசா கோபுரத்தின் உச்சியிலிருந்து வெவ்வேறு எடைகள் உள்ள பொருட்களை கீழே போட்டார். அவை கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தரையை வந்தடைந்தன என்றாலும் எடை குறைவான பொருள் தரையைச் சேர்வதற்கு ஓரிரு தருணங்கள் அதிகம் தேவைப்பட்டது (பின்னால் இதற்குக் காரணம் காற்றினால் ஏற்படும் உராய்வினால் என்பது தெரிந்தது). பேராசிரியர் கலீலியோ பெருந்தவறு செய்து விட்டார், அரிஸ்டாடில்தான் சரி என்று வாதிட்டார்.

 

இதற்கு கலீலியோ அளித்த பதில் புகழ் பெற்றது. க்ரிபின் தனது புத்தகத்தில் அதைக் குறிப்பிடுகிறார்:

அரிஸ்டாடில்  நூறு பவுண்ட் எடையுள்ள பொருள் நூறு க்யூபிட் ( ஒரு க்யூபிட் = 45.72 செண்டிமீட்டர்) உயரத்திலிருந்து தரையை அடையும் போது ஒரு பவுண்ட் எடையுள்ள பொருள் ஒரு க்யூபிட்டைத்தான் தாண்டியிருக்கும் என்று சொல்கிறார். நான் இரண்டும் ஒரே சமயத்தில் தரையை அடையும் என்று சொல்கிறேன். நீங்கள் சோதனை செய்து ஒரு பவுண்ட் எடையுள்ள பொருள் இரண்டு இஞ்சுகள் பின்னால் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறீர்கள். இந்த இரண்டு இஞ்சுகளுக்குப் பின்னால் அரிஸ்டாடிலின் தொண்ணூற்று ஒன்பது க்யூபிட்டுகளை மறைத்து,என்னுடைய சிறிய தவறைப் பற்றிப்பேசி அரிஸ்டாடிலின் பெரிய தவறைக் குறித்து மௌனம் காக்கிறீர்கள்.

 

இந்தச் சம்பவம் முக்கியமான ஒன்றை உணர்த்துகிறது. எந்தக் கூற்றும், யார் சொன்னதாக இருந்தாலும், சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சோதனையின் முடிவை – அது நாம் எதிர்பார்த்தற்கு எதிர்மாறாக இருந்தாலும்- ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த எளிய கோட்பாடு மனித குலத்திற்குப் பிடிபடுவதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்தன.

 

நக்கீரர்

 

நமது நக்கீரர் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொன்னதுதான் சரி. கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது. ஆனால் நக்கீரரால் சோதனை செய்து பார்த்து விடலாம் என்று சொல்லத் தோன்றவில்லை. ஏனென்றால் சோதனைகள் செய்து கூற்றுகளை நிறுவ முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

நர்லீகர்

 

எனவேதான் அறிவியல் என்று நாம் இன்று சொல்வது கலீலியோ காலத்தில் இருந்து பிறந்தது என்கிறோம். நான் நர்லீகரை நேர்காணல் செய்தபோது ‘நீங்கள் ஒரு நீண்ட பரம்பரையில் வந்தவர். அது ஆரிய பட்டரிடமிருந்து தொடங்குகிறது’ என்று சொன்னேன். அவர் அதை உடனடியாக மறுத்தார். ‘இல்லை என்னுடைய பரம்பரை கலீலியோவிடமிருந்து தொடங்குகிறது’ என்றார்.

 

நர்லீகர் என்னிடம் அறிவியல் என்றால் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கினார்:

 

அறிவியல் என்பது கோட்பாடு சோதனை, கண்டறிதல் இம்மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடாக உருவாகி வந்துள்ளது. இந்தச் செயல்பாட்டில் ஒரு சுழற்சி முறையுள்ளது. இது முடிவறாச் சுழற்படிக்கட்டுகளைப் போல, இயற்கையைப் பற்றித் தெளிவான புரிதல்களை நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். படிகளில் பயணம் செல்லும் போது எதிர்பாராத திருப்பங்களும் இடர்களும் ஏற்படலாம். அறிவியலின் வரலாறு பல பொய்யான கோட்பாடுகளையும், தவறான கோட்பாடுகளையும் பிழையான் கண்டறிதல்களையும் பார்த்திருக்கிறது. இதை ஒப்புக்கொள்பவர்களில் முதலாதவாக விஞ்ஞானிகள் இருப்பார்கள்.

 

அறிவியலால் எல்லாப் பதில்களையும் சொல்ல முடியாது என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். மாறாக படிகளில் ஏற, ஏற புதிய கேள்விகள் எழும் என்பதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆக அறிவியல் என்பது என்ன? ஓர் அறிவியல் கோட்பாடு தனது அடிப்படைத் துணிபுகளை தெளிவாக முன் வைக்க வேண்டும். இந்தத் துணிபுகள் அன்றைய அறிவியல் ஆதாரங்களோடு ஒத்துப் போவதாக அமைய வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே தர்க்க பூர்வமான வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்தக் கோட்பாடு ஏற்கனவே சொன்னவற்றை வேறு வார்த்தைகளில் கூறுவதாகவோ. ஒவ்வொரு நிரூபணத்தின் போதும் தனது அடிப்படைக் கொள்கைகளை மாற்றிக் கொள்வதாகவும் இருக்கக் கூடாது. அதன் துணிபுகள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

 

நர்லீகர் கூறிவற்றை நாம் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். எழுத வேண்டும். அறிவியல் மொழி சார்ந்ததன்று, அது மனிதகுலத்திற்குப் பொதுவானது என்பதையும் மறுபடியும் மறுபடியும் வலியுறுத்த வேண்டும். ஆனால் நவீன அறிவியல் பிறந்தது பதினாறாம் நூற்றாண்டில் கலீலியோவின் தோற்றத்திற்குப் பின்புதான். அதற்கு முன் எழுதப்பட்டவற்றில் அறிவியலின் கூறுகள் இருக்கலாம். ஆனால் அவை அறிவியல் தேடல்களின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

 

பழந்தமிழ்ப் பாடல்கள்

 

இந்தப் பின்புலத்தில் நாம் பழந்தமிழ்ப் பாடல்களை நோக்கலாம்.

 

பழந்தமிழ்ப் பாடல்களில் வானம், விண்மீன்கள், ஐம்பூதங்கள், பூக்கள், செடிகள், உயிரினங்கள், பற்றிய தகவல்கள் இருக்கின்றன. இந்தத் தகவல்கள் பார்த்தவற்றைப் பற்றிக் கூறுபவை. அல்லது கேட்டவற்றைப் பற்றிக் கூறுபவை. பார்ப்பவற்றைப் பற்றியும் கேட்பவற்றைப் பற்றிக் கூறுவதும் அறிவியல் கோட்பாடுகளாக ஆகி விட முடியாது. இயற்கையின் புதிர்களை விடுவிப்பதற்கான பயணத்தில் அன்றைய மக்களுக்குக் கருவிகளாக அவை உதவியிருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்று தான் கூற முடியும். பல்லாயிரக்கணக்கான பாடல்களில் ஒரு சில பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு வலிந்து பொருள் கொண்டு அவை அறிவியல் கோட்பாடுகளை நிறுவுகின்றன என்று நான் சொல்கிறேன், அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், தமிழ்த் துரோகி, வடமொழி அடிவருடி, என்று குற்றம் சாட்டப்பட்டு கழுவில் ஏற்றப்படுவீர்கள் என்ற வகையில்தான் இன்று பலர் எழுதி வருகிறார்கள்.

இது தமிழர்களுக்கு மட்டும் உரித்தான வியாதி அல்ல. வடமொழி ஓர் அறிவியல் ஊற்று, உபநிடதங்களிலும் வேதங்களிலும் சொல்லப்படாத அறிவியல் தகவல்கள் அளவிட முடியாதவை என்று சொல்லிக் கொண்டு அலைபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் நான் தமிழன். தமிழன் இந்த வியாதியிலிருந்து குணமடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
இவர்கள் மேற்கோள் காட்டும் முக்கியமான பாடல்களைப் பார்ப்போம்.
 
தொல்காப்பியர்

 

பொருளதிகாரம் மரபியலில் தொல்காப்பியர் இவ்வாறு கூறுகிறார்:
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
புல்லு மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் மாக்களும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

 

வையாபுரிப் பிள்ளை தனது “தமிழ்ச் சுடர்மணிகள்” என்ற நூலில் ’இவ்வாறு உயிர்வகைகளைப் பகுத்துணர்ந்து கோடல் ஜைன சமய ஆசாரத்துக்கு மிக அத்தியாவசியகமாவதாகும்’ என்று கூறுகிறார். மேலும் அவர் தொல்காப்பியர் ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’ என்று கூறுவதால் இந்தப் பாகுபாடு தொல்காப்பியரின் சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல என்றும் கூறுகிறார். அதாவது தொல்காப்பியர் ஜைன சமயத்தைச் சார்ந்தவர் என்பதற்கு ஆதாரமாக இந்தச் சூத்திரங்களைக் காட்டுகிறார்.
இந்தப் பாகுபாடு தொல்காப்பியர் பரிணாமத் தத்துவத்தை அறிந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது என்று சில தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 

இந்தப் பாகுபாடு ஒரு தகவலாகத்தான் நமக்கு வந்திருக்கிறது. மிகக் கூர்ந்து கவனித்து நெறிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் இந்தப்பாகுபாடு உயிர்கள் எவ்வாறு உருவாயின, அவற்றின் வளர்ச்சிகள் எவ்வாறு நிகழ்ந்தன போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்காது. மேலும் டார்வினின் பரிணாமக் கொள்கை கூறுவது என்ன? எல்லா உயிரினங்களும் மற்ற இனங்களோடு போட்டியிடுகின்றன. உயிரோடுவாழ்வதற்காக தேவையான முயற்சிகளைச் செய்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன. இவையனைத்தும் தொடர்ந்து நடைபெறுவதற்காக இயற்கைத் தேர்வு என்ற முறையின்படி அவைப் படிப்படியாக மாறுதல்களை அடைகின்றன. எவ்வுயிரினங்களின் இயற்கைத் தேர்வுகள் வெற்றியடைகின்றனவோ அவ்வுயிரினங்கள் பிழைக்கின்றன. மற்றவை மறைகின்றன.

 

இந்தக் கொள்கைக்கும் தொல்காப்பியரின் பாகுபாட்டிற்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பாகுபாடும் முழுப்பாகுபாடு இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பறவைகள், மீன்கள் இல்லை. பாலூட்டிகள், முட்டையிடுவன என்ற பிரிவுகளைப் பற்றிய தகவல் இல்லை. எலும்புடையவை, எலும்பு இல்லாதவை என்ற பாகுபாடு இல்லை. இவ்வகைப் பிரிவுகள் எல்லாம் கண் கூடாகத் தெரிபவை. இவற்றைப் பற்றி அவர் ஏன் சொல்லவில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக மாக்கள் என்ற மனிதர்கள் (பகுத்தறிவு இல்லாதவர்) ஐந்தறிவு படைத்தவர், அவர்களும் மிருகங்களும் ஒரே நிலையில் இருப்பவர் என்று தொல்காப்பியர் சொல்லியிருப்பதை நாம் நினைவு கூற வேண்டும். இதுவும் ஜைன மதக் கொள்கைதான் என்று வையாபுரிப் பிள்ளை விளக்குகிறார். எனவே அறிவியலுக்கும் இந்தச் சூத்திரங்களுக்கும் தொடர்பு கிடையாது என்பது தெளிவாகிறது.

 

புறநாநூறு

 

இவை தமிழில் அறிவியல் கூற்றுகள் இருந்தன என்பதை நிறுவுவதற்காக எழுதப்பட்ட வரிகள்:
“இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவு தமிழர்களிடம் இருந்தது. நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என்ற ஐம்பூதங்களால் ஆனது இயற்கை என்ற அறிவியல் அறிவு தமிழர்களுக்கு இருந்தது. வடமொழி வாணர்களான ஆரியர்கள் கூட ‘சதுர்பூதம்’ என்று நான்கு கூறுகளை மட்டுமே அறிந்திருந்தனர். காற்று வேறு அது இயங்கும் வெளி வேறு, அதன் பெயர் விசும்பு (ஸ்பேஸ்) என்ற தெளிவு

தமிழர்களிடம் இருந்தது.

 

 

‘மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை’
என்று சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது.”

 

”நீர், நெருப்பு, நிலம் காற்று, விசும்பு என்பவற்றைக் கொண்டது இயற்கை” என்பது காண்பதை, அல்லது உணர்வதைப் பதிவு செய்வது. நிலம் நீர், வானம், நெருப்பு ஆகியவற்றை மனிதன் பார்க்கிறான். காற்றை உணர்கிறான். இவை அடங்கியது இயற்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றைக் கூறுவது. ஆங்கிலத்தில் சொல்லப்போனால் “stating the obvious”. இது அறிவியல் கூற்றாக ஆக முடியாது. நிலனேந்திய விசும்பு? நிலத்தை வானம் தாங்குகிறதா?

 

மேலும் பஞ்ச பூதங்கள் என்பதை தமிழன் மட்டும் சொல்லவில்லை. சுவேதாசுவதர உபநிடதம் கூறுகிறது. வடமொழியில் மகாபூதங்கள் என்று இவை அழைக்கப்படுகின்றன. இந்து மதம் ஐந்தாவது பூதமாக ஆகாயத்தை எடுத்துக் கொள்கிறது. பௌத்தம் சூனியத்தைச் சொல்கிறது. மேலும் நிலமும், நீரும், காற்றும், தனிமங்கள் சேர்ந்து உருவானவை என்பதையும் நெருப்பு ஒரு வேதியல் செயல்பாடு என்பதையும் மனிதன் புரிந்து கொள்வதற்கு அவன் பல நூற்றாண்டுகள் கடந்து வர வேண்டியிருந்த்து. இத்தகைய புரிதல்கள்தான் அறிவியல் புரிதல்கள். பாடலில் சொல்லப்பட்டவை அல்ல.
இந்தப் பாடலை முழுவதும் சொல்ல சிலர் தயங்குவார்கள். ஏனென்றால் இந்தப்பாடல் பாரதப் போரில் இருதரப்பினருக்கும் சோறு அளித்தவன் சேரன் என்ற “அறிவியல்” செய்தியைக் கூறுகிறது. நான்கு வேதங்களின் நெறிகளைப் பற்றிக் கூறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீயில் (முத்தீ விளக்கு) தூங்கும் இமயமலையையும் பொதிகையையும் பாடல் பேசுகிறது!

 

மற்றொரு புறநானூற்றுப் பாடலைப் பார்ப்போம்:

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
“வலவன் ஏவா வான ஊர்தி“
எய்துப என்ப,

 

இந்தப் பாடலை வைத்துக் கொண்டு தமிழனிடம் விமானம் இருந்தது, விமான ஓட்டியில்லாத விமானத்தைப் பற்றி அறிந்திருந்தான் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்த வரிகளுக்கு முன்னால் “மரை இலை போல மாய்திசினோர் பலரே” என்ற வரி வருகிறது. இது பயனின்றி வாழ்ந்து மடிந்தவரைக் குறிப்பிடுகிறது. இந்த வரிகள் புகழுடைபவர்கள் இறந்த பிறகு வானத்தின் ‘வலவன் ஏவா வான ஊர்தி”யை அடைவார்கள் என்று கூறுகின்றன. எனவே இந்த வான ஊர்தியில் சென்றால் திரும்ப பூமிக்கு வர முடியாது என்பது தெளிவு. திரும்ப வர முடியாத விமானத்தை அன்றே தமிழர் கண்டுபிடித்து விட்டனர் என்று கூறலாமா?
உலக வரலாற்றின் எல்லா கலாச்சாரங்களிலும் பறப்பதைப் பற்றிய கற்பனைக் கூற்றுகள் பல இருந்திருக்கின்றன. எகிப்து நாகரிகம் விமானங்களை அறிந்திருந்தது என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்கள் பலர் இருக்கிறார்கள்
நான் முன்னால் எழுதிய கட்டுரை ஒன்றில் இதைப் பற்றி எழுதியிருந்தேன்.

 

பறப்பது என்பது மனிதனின் கனவுகளில் ஒன்று. இந்தக் கனவு நனவாவதற்கு அறிவியல் பல மைல்கற்களைத் தாண்ட வேண்டியிருந்தது. உதாரணமாக எரிபொருள் இல்லாமல் விமானம் பறந்திருக்க முடியுமா?. அக்கனற்சிப் பொறியில்லாமல் (Internal Combustion Engine) விமானம் பிறந்திருக்க முடியுமா? ரப்பர், அலுமினியம் போன்ற பொருள்கள் இல்லாமல் அது உருவாக்கப்பட்டிருக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக பெர்னூலி கொள்கை (Bernouli’s principle) தெரியாமல் , நியூட்டனுடைய விதிகள் தெரியாமல், பறப்பது பற்றிய ஒரு அடிப்படைப் புரிதல் இருந்திருக்க முடியுமா?
இந்தக் கேள்விகளுக்கு இதுவரை பதில்கள் கிடையாது.

 

பரிபாடல்

கருவளர் வானத்திசை யிற் தோன்றி
உருவறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த உளமுழ் ஊழியும்
சென்தீச் சுடரிய ஊழியும் பணியொடு
தன்பெயல் தலை இய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு
உள்ளிபிகிய இருநிலத் தூழியும்”

 

 

இந்தப் பாடல் தமிழனுக்கு உலகம் எப்படிப் பிறந்தது என்பது பற்றி அறிவியற் புரிதல் இருந்தது என்பதற்காக ஒரு எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றிப் பேசுபவர்கள் பாடல் திருமாலைப் பற்றி எழுதியப் பாடல் என்ற தகவலையோ அல்லது குறிப்பாக இந்த வரிகள் வராக அவதாரத்தைப் புகழ்வதற்காக எழுதப்பட்டது என்பதையோ சொல்ல மாட்டார்கள் பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்: திருமாலே! மண்ணுலகமும் விண்ணுலகமும்பாழ்பட மதியமும் ஞாயிறும் கெடுதலால் அழகிழந்தவானமும் கெட்ட ஊழிகள் முறையே கழிய அதன்பின் ஆகாயஊழியும், காற்றுத் தோன்றிய ஊழியும், அதனினின்றுசெந்தீயும் அதனினின்று மழை முதலியனவும் அவற்றினின்றுநிலமும் தோன்றிய ஊழிகளுமாகிய அளவில்லாத காலம்கழிந்தபின் உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத்திருக்கோலம்கொண்டு நீ நிலத்தினை யெடுத்தாய்.
இதில் கூறியிருக்கும் எந்தத் தகவலையாவது அறிவியல் சார்ந்தது என்று கொள்ள முடியுமா?

 

 

தொலைந்து போய் விட்டது

இவை போன்று பல பாடல்கள் மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன. அணுவைப் பிளப்பதைப் பற்றி அன்றே நாம் அறிந்திருந்தோம், பித்தாகரஸுக்கு முன்பே நாங்கள் செங்கோண முக்கோண விதிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லிக் கொள்பவர்களும் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பதில் சொல்வது மிகவும் கடினம். உதாரணமாக போதையனார் பாட்டுஎன்று தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஒரு பாடல் வலம் வருகிறது. இது பித்தாகரஸுக்கு முன்பே எழுதப்பட்டது என்று பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர் ஒருவர் என்னிடம் சொன்னார். பாடல் இது:

 

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.

 

இந்த பாடல் பித்தாகரஸுக்கு முந்தியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நான் சொன்னால் அவர் நம்பத் தயாராக இல்லை. மேலும் இது மிகவும்தோராயமானது, வேலைக்காகாது என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் ‘துல்லியமாக போதையனார் எழுதியது தொலைந்து போயிருக்கலாம். நமக்கு கிடைத்திருப்பது பாதிதான்.”

கணிதமும் வானியலும்

கணிதம் குறித்தும் வானியல் பற்றியும் இந்திய மொழிகளில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன என்பது உண்மை. தமிழ் இலக்கியத்தியத்திலும் இவை பற்றிச் செய்திகள் இருக்கின்றன. இவற்றைக் குறித்து விரிவாக மற்றொரு கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

 

 

முடிவாக

கலீலியோவிற்கு பின் வந்ததுதான் அறிவியல் என்று நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம். ஆனால் அறிவியல் என்றால் என்ன என்பதற்கு இன்று உலகத்தில் பெரும்பாலான அறிவியலாளர் ஏற்றுக் கொள்ளும் வரையறை நர்லீகர் கூறிய வரையறைதான்.
நம்மிடம் எல்லாம் இருந்தது என்று சொல்லிக் கொள்வது நம்மிடம் ஒன்றுமே இருந்திருக்க முடியாது என்று மற்றவர்களை நினைக்க வைக்கும். எல்லாம் இருந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏதும் கிடையாது. தமிழ் நமது மொழி. அதற்கு இருக்கும் உண்மையான அழகுகளே போதும். நம்மைப் பொறுத்த வரையில் தமிழ் மதனற்கும் எழுதவொண்ணா அழகுகளை உடைய மொழி. இதற்கு இல்லாத அழகுகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
- See more at: http://solvanam.com/?p=32171#sthash.IuzTIL3b.dpuf
 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புறநானூறு பாடல் – இல்லாமை தீர்ப்பவன் பாடியவர் – இரும்பிடர்த் தலையார் பாடப்பெற்றவர் – பாண்டியன் கருங் கை ஒள் வாட்பெரும்பெயர் வழுதி திணை: பாடாண் திணை துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் பாடல்: உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, ஏம முரசம் இழுமென முழங்க, நேமி உய்த்த நேஎ நெஞ்சின், தவிரா ஈகை, கவுரியர் மருக ! செயிர் தீர கற்பின் சேயிழை கணவ ! பொன் ஓடைப் புகர் அணி நுதல், துன் அருந் திறல் கமழ் கடாஅத்து. எயிறு படையாக எயிற் கதவு இடாஅ, கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின், பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து, மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக் கருங் கை ஓள் வாட் பெரும்பெயர் வழுதி ! நிலம் பெயரினும், நின் சொல் பெயரால்; பொலங் கழற் கால புலர் சாந்தின் விலங்கு அகன்ற வியல மார்ப ! ஊர் இல்ல, உயவு அரிய, நீர் இல்ல, நீள் இடைய, பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின், செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் உன்ன மரத்த துன் அருங் கவலை, நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் – அது முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் இன்மை தீர்த்தல் வன்மையானே. எளிய உரை: உன் உயர்ந்த வெண்குடை போல நிலவு கடல் வரம்பு பரந்த நாட்டில் காவல் முரசு முழங்க ஆட்சி செய்யும், கொடுப்பது தவறாத பாண்டியன் மரபினில் கற்புள்ள மனைவியின் கணவர் பொன் முகப்படத்தை நெற்றியில் அணிந்த யானையின் பிடரிமேல் உட்கார்ந்து மின்னும் வாளுடன் போர் செய்யும் வழுதி ! இடையில் ஊர் ஏதும் இல்லாது கானல் வீச, நீரில்லாமல் நீண்ட இடைப்பாதை, வழிப்பரிக்காரர்களை கண்மேல் கை குவித்துப் பார்த்திருக்கும் மறவர்கள், அவர்களின் குறி தவறாத அம்புகள், அம்பு பட்டவர்களை மூடியிருக்கும் கற்க்குவியல்கள், அவ்வுடல்களை உண்ண மரத்திலிருந்து பார்த்திருக்கும் பருந்து, உன்னைக் காணும் ஆர்வத்துடன் இரவலர்கள் வருவார்கள். அவர்கள் இச்சையை முகத்தைப் பார்த்தே உணர்ந்து அவர்கள் வறுமையை தீர்க்கும் வலிமை பெற்றவனே ! http://thamizharukkaaga.blogspot.in/

அறிவியல் தமிழுக்குத் தொடர்பில்லாதது!
� அறிவியலை ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் வாயிலாகத் தான் படிக்கமுடியும் என்ற தமிழனின் சிந்தனையும் நம் அறிவியல்சிந்தனைகள் உலகறியப்படாமல், நடைமுறைப்படுத்தப்படாமல் போனதற்கு ஒருகாரணமாக
அமைகிறது.



அறிவுக்கு மொழி தடையல்ல!
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!!


முதலில் தாய்மொழிவழியே படித்து கண்டறிந்து..
தன் படைப்பை உலகத்துக்கு அறிவிக்க பிறமொழிகளைப் பயன்படுத்தலாம் தவறில்லை..

ஆனால் இங்கு தாய்மொழிவழியே,
படிப்பதும்?
கண்டறிவதும்?
இன்னும் கேள்விக்குறியாகத்தானே உள்ளது..

பன்னாட்டுமொழியை முழுவதும் தள்ளுவது நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வதற்குச் சமமானதுதான்.

அதே நேரம் தாய்மொழியைப் புறக்கணிப்பது என்பது நாம் தற்கொலை செய்து கொல்வது போன்றது..

என்பது எனது எண்ணம்..

 

 

தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும்    

 

 

NAVIN-01-300x255.jpg

Geocentric view: இவ்வரைப்படம் புவி மையக் கோட்பாடை குறிக்கிறது. அரிஸ்தோட்டல் ஊகித்த புவி மையக் கோட்பாடை இப்படமானது சித்தரிக்கிறது. மையப்பகுதியில் பூமியும், அதனைச் சுற்றியும் ஞாயிறும் இதர கோள்களும் வரையப்பட்டிருக்கின்றன. படத்தின் வெளிப்பகுதியில், தெய்வங்களின் வரைப்படம் இருப்பதையும் காணலாம்.

தொன்மங்களை (Myths) பொதுவாகக் கற்பனையின் உச்சத்தில் விரித்துரைக்கப்பட்ட கதைகள் என வரையறுத்துக் கூறுவர். காலங்களைக் கடந்து அவை எல்லா சமூகங்களிலும் தொடரப்பட்டு வருவது கண்கூடான ஒன்று. எச்சமயத்தைச் சார்ந்ததாக இருப்பினும் இக்கதைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளானது விண்ணுலகம் மற்றும் மண்ணுலகைச் சார்ந்தவையாக பெரும்பாலும் இருக்கும். விண்ணுலக கதைகள் பெருவாறாக கற்பனைக் கதைகள் எனக் கொள்ளப்பட்டாலும், மண்ணுலகம் சார்ந்த ஒரு சில கதைகள் வரலாற்றுக் கதைகளாகவும் விளங்குகின்றன. பெருவாறாக தெய்வங்கள், வீரர்கள், இராட்சச விலங்குகள் என இவர்களை மையப்படுத்திக் கதைகள் நகர்த்தப்பட்டிருக்கும். சமயம், சடங்குகள் குறித்த குறிப்புகளும் தொன்மங்களில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் பூர்வக் குடி மக்களான செவ்விந்தியர்களின் தொன்மங்களும் பழமரபுக் கதைகளும் (Legend) இன்றளவும் கோப்புகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1492-ம் ஆண்டுகளுக்கு முன்னமே குடிக்கொண்டிருந்த செவ்விந்தியர்கள், தங்களின் கதைகளில் தெய்வங்கள் மற்றும் மனிதர்களைக் முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள். இக்கதைகளில் இடம்பெறும் பாத்திரங்கள் அமானுசஷ்ய விசயங்களுடன் தொடர்புக் கொண்டிருப்பதோடு பலமிக்கவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறியப்படுகையில், இக்கதைகளினுள் வீற்றிருக்கும் மர்மம் நிறைந்த எழுத்து மற்றும் மொழி வகைகள், நம்பிக்கைகள், சடங்குகள், ஆசாரங்கள், நம் முன்னோர்களின் உண்மை நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

பழைய கற்கால மனிதன் அறிவாலும் ஆற்றலாலும் ஓங்கி நின்றான். அறிவியலுக்கு முன்னதாகவே தொழில்நுட்பம் தோன்றி ஆதிமனிதனின் தேவைகளை பூர்த்தி செய்தது. தன் உறுப்புகளை உபயோகித்துப் பசியைப் போக்கிக் கொண்டான். தேவைகள் அதிகரிக்க, உணவுப் பொருட்களை எடுக்க, தோண்ட, பறிக்க கற்கருவிகளையும் மரக்கருவிகளையும் பயன்படுத்தினான். சக்கி முக்கி கற்களைக் கொண்டு நெருப்பு உண்டாக்கினான். வேட்டையாடிய பொருட்களை பதப்படுத்தி உண்டான். இதனை அடுத்து வில், அம்பு எனப்பல கருவிகள் உருவெடுத்தன. வேட்டையாளனாக இருந்தவன் வேளாண்மையை நோக்கினான். இதன் வாயிலாக ஏர், கலப்பைக் கொழு எனப்பல உழுக்கருவிகள் உருப்பெற்றன. குன்று, குகை, காடுகள் என வாழ்ந்தவன் பாதுகாப்பாக வாழ்வதற்கு வீடுகளை கட்டத் தொடங்கினான். இவ்வாறான தொழில்நுட்பத்தை, முறையான கையாழுதலின் மூலம் செம்மைப்படுத்த அறிவியல் பயன்பட்டது .

5,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய, ஆசிய மக்கள் இவ்வுலகினை கூர்ந்து கவனித்து தங்களின் மொழிகளில் உரைக்க முற்பட்டனர். மொழி என்பது நாளடைவில் அதைப் பேசுகிற மக்களின் கருத்துக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப வளர்ச்சியடைந்து வளம்பெறும் என்பது எமது மதிப்பு. இவ்வாறு தங்களின் அறிவுச்சார்ந்த உள்ளீட்டை வெளிக்கொணர தொன்மங்கள், பழமரபுக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், இலக்கியம், இலக்கணம் போன்ற பதிவுகள் உருவாக்கப்பட்டன. வரலாற்றாசிரியர்கள், பழந்தமிழ்ச் சமுதாயத்தில் இடம்பெற்ற அறிவியல் உணர்வு, தொழில்நுட்பத்திறன் பற்றிய கூறுகளை அறிய பண்டைய இலக்கிய இலக்கணங்களும் அவற்றின் உரைகளும் பேருதவியாக இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளனர். பண்டைய தமிழ் சமுதாயத்தைப் பற்றிப் பேசுகையில் சிந்துவெளி நாகரிகத்தையும் எட்டிப் பார்க்கத் தூண்டுகிறது.

சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்கிற கருத்தை ஏற்று, வரலாற்றை பல நூற்றாண்டுகளுக்கு முன்னோக்கிப் பார்த்தால் திராவிடரின் தொழில்நுட்பத்திறன் வியப்பைத் தரும். தமிழ் இலக்கியங்கள், இதரச் சமயம் சார்ந்த பழங்கதைகளுடன் வேறுபட்டிருப்பதை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று பெரும்பாலோர் தமிழில் உள்ள தொன்மங்கள் வடமொழியில் இருந்து வந்தவை என நம்பிக்கொண்டிருக்கின்றனர். பொதுவில், தமிழ் புலவர்கள், தாங்கள் கண்டிட்ட, கேட்டிட்ட, உற்றறிந்த, பட்டறிந்த விசயங்களை குறிப்புகளாக தங்களின் பாடல்களில் பொதித்து வைத்தனர். அவற்றோடு தொடர்புடைய இயற்கை நிகழ்ச்சிகளையும் பதிவு செய்தனர். இவ்வாறு பொருத்திப்பாடிய வரிகளிலிருந்தே நாம் அறிவியல் சார்ந்த சான்றுகளைப் பெறலாம். அறிவியலை குறிப்பிட்டு எந்த பாடலும் இயற்றப்படவில்லை என்பதே உண்மை. தங்கள் பாடல்களில் அறிவியல் புகுந்திருந்தாலும் அறிவியலை மையமிட்டோ அதன் தேவையைக் கருதியோ பாடல்களின் கரு மையமிடவில்லை என்பதை ஏற்க வேண்டியுள்ளது. செடி கொடிகள், பறவை, விலங்குகள் என குறிப்புகளை சில வரிகளில் பொதித்து வைத்துள்ளனர். அவற்றில் பல இன்றைய தாவரவியல், விலங்கியல் உண்மைகளோடு பொருந்திவருவது கண்கூடு. திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் ‘மருந்து’ எனும் அதிகாரம், தமிழர்களின் அறிவியல் சார்ந்த அனுகுமுறைகள் இலக்கியம் மற்றும் இலக்கண படிமங்களில் உயிர்ப்பித்திருந்ததை மெய்ப்பிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தைவானிலுள்ள தேசிய அருங்காட்சியகம் (National Palace Museum),

சீன நாட்டில் கி.மு 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே காந்த விசை நடைமுறையில் இருந்ததை கண்டறிந்தது. அங்குபங்சர் அல்லது குத்தூசி மருத்துவம் எனப்படும் இயற்கை மருத்துவ வழிமுறை கி.மு 2,300-க்கு  முன்பே மருத்துவர்கள் மனித நரம்பியல் சிகிச்சையில் தலைசிறந்து இருந்ததைக் குறிக்கிறது. சுமார் 3,650 ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் மற்றும் விண்மீன்களின் அசைவுகளை கணக்கெடுக்க வட்ட அமைப்பிலான ‘ஸ்டோன் ஹெஞ்ச்’ (Stonehenge) உருவாக்கப்பட்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சரக சம்ஹிதை எனும் நூலில் மருத்துவச் செய்திகள், நோயறியும் முறைகள், மருந்து வகைகள், மருந்தூட்டும் முறைகள் போன்றவை குறிக்கப்பட்டிருக்கின்றன. அவை இன்றைய மருத்துவத்தோடு ஒத்துப் போவதைக் காணலாம். இன்றையளவில் மருத்துவ அறிவியலில் சோதனை முறை (experimental) அங்கத்துவம் பெற்றுள்ளது. அன்று, பெரும்பாலும் பட்டறிவு பயன்பட்ட போதிலும், சோதனை முறை கையாளப்பட்டதற்கு சான்றாக, மனித இரத்தத்தை எடுத்து நாய் அல்லது காக்கைக்குக் கொடுத்து அதன் தன்மையை அறிந்ததைக் குறிக்கலாம் (மருத்துவர் சரகர், தமிழ் வளர்க்கும்  அறிவியல், முதல் பதிப்பு 2009, ப.272- 278 ). பரந்த தொல்லியல் களமான ஆதிச்சநல்லூரில், தொல்தமிழர்கள் 3,000 ஆண்டுகளுக்கு முன்னமே இரும்பை பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘சுல்வசூத்திரம்’ எனும் சமஸ்கிருத நூலில் ‘இஷ்டிக’ எனும் சொல், சிந்துவெளி நாகரிகத்தில் வீடுகள் கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கல்லைக் குறிக்கிறது. தமிழில் ‘இட்டிகை’ என அழைக்கப்படுகிறது. மேலும் இதனை வலுபடுத்த அகநானூறு போன்ற சங்கப் பதிவுகள் துணைபுரிகின்றன.

NAVIN02-300x228.jpg

Helio-centric view: இவ்வரைப்படம் சூரிய மையக் கோட்பாடை விளக்குகிறது. நிக்கோலஸ் கோப்பர்னிகஸ் வரைந்த இப்படம், ஞாயிறை மையப்படுத்தி வரையப்பட்டிருக்கிறது. அதனைச் சுற்றியும் இதர கோள்கள் இடம்பெற்றுள்ளன. (Taylor, 1949,p.73)

“இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென” (அகநானூறு 167-13)

“நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை” (அகநானூறு 287-6)

வரலாற்றாசிரியர், மயிலை சீனி வேங்கடசாமி, தமிழகக் கட்டிடக் கலையைச் (Architecture) சிறப்பித்துப் பேசியுள்ளார். முந்தையக் காலத்தில் தமிழகக் கோயில்கள் மரத்தினால் அமைக்கப்பட்டன. பின்பு, செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பாறைகளைக் குடைந்து குகைக்கோயில்கள் (Rockcut Cave Temples) அமைக்கப் பெற்றன. இறுதியாகக் கருங்கற்களைக் கொண்டு கற்றளிகள் (கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் செயல்முறை) அமைக்கப்பட்டன. அக்காலம் தொட்டு இன்றுவரை பல்வேறு அமைப்புகளில், பல தொழிற்முறைகளைக் கொண்டு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குடிசை, குரம்பை, வீடு, மனை, கோட்டை, அரண், மதில், வளமனை, கொட்டாரம் எனும் சொற்களை கட்டிடக்கலையின் சிறப்பைக் கூறும் சான்றுகளாகக் கொள்ளலாம். வாயில், கதவு, அறை, இடைகழி, முற்றம் முதலியன வீட்டின் உட்பகுதிகளைக் குறிக்கும் சொற்களாகும். சங்க இலக்கியங்களில் மனைகள் மற்றும் மதிகளின் உயர்ச்சி குறித்த சில குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன. ‘சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பின்’ (பெரும்பாணாற்றுப்படை, 405) , செங்கல்லாலான வீடு பற்றிய குறிப்பாகும். ‘திண்சுவர் நல்லிற் கதவம் கரைய’ (மதுரை காஞ்சி, 667), திண்ணிய சுவர்களை உடைய நல்ல வீடுகளின் கதவுகள் ஒலிக்க என பொருள்படுகிறது. அக்காலத்திலே இக்கதவுகள் கிறிச்சிடா வண்ணம் நெய்யிட்டுள்ளனர், ‘நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்..’ (மதுரை காஞ்சி, 354). இவ்வாறு, நெசவுத்தொழில், கணிதம், தாவரவியல், விலங்கியல், வேதியல், மருந்தியல் தொடர்பான சில குறிப்புகளும் சங்ககால இலக்கிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன (கட்டிட தொழில் நுட்பம், தமிழ் வளர்க்கும் அறிவியல், முதல் பதிப்பு 2009, ப.238-239).

கிடைக்கப் பெற்ற நூல்களிலிருந்து சான்றுகளோடு குறிப்புகளை நியாயமான முறையில் தொகுத்தெடுப்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. ‘வானுர்தி’ குறித்த குறிப்புகள் தமிழ் மற்றும் வட மொழி கதைகளில் காணப்பட்டாலும், இன்றைய நடப்பில் அவை சான்றுகளோடு உறுதிப்படுத்தப்படாமலிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. சீவகசிந்தாமணியில், சச்சந்தன், மயன் என்ற தெய்வத் தச்சனை அழைத்து மயில் பொறி ஒன்றைத் தயாரிக்கச் சொன்னான். மயனும் பார்ப்பதற்கு உயிருள்ள மயிலைப் போன்றதொரு பொறியைத் தயாரித்தான். அதிலேறி அமர்ந்து ஒரு ‘திருகை’த் திருகினால் அது விண்ணில் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றிருந்தது. அந்தப் பொறியை இயக்கும் பயிற்சியை விசயைக்கு நன்கு கற்றுக் கொடுத்தான்.

அந்தரத்தார் மயனே என ஐயுறும்

தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்

வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர்

எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். (சீவகசிந்தாமணி, 234)

பல் கிழியும் பயினும் துகில் நூலொடு

நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன

அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்

செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே. (சீவகசிந்தாமணி, 235)

ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி

மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்

பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து

ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். (சீவகசிந்தாமணி, 238)

பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி

விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய

புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை

கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. (சீவகசிந்தாமணி, 239)

மணிமேகலையில், காஞ்சனாபுரத்தில் வசித்த, காஞ்சனன், காயசண்டிகை இருவரும் வான் வழியாகப் பயணித்ததைக் குறிக்கும் வரிகள் உள்ளன.

“ஓங்கிய மூதூர் உள்வந் திழிந்து” (மணிமேகலை, 20-28)

 ”வானம் போவுழி, வந்தது கேளாய்” (மணிமேகலை, 20-115).

ஆயினும், இவர்களது வான்வழி பயணமென்பது மந்திரத்திலானது எனும் கூற்றினை விருச்சிக முனிவர் இட்ட சாபம் தெளிவடையச் செய்கிறது, “அந்தரஞ் செல்லும் மந்திரம் இழந்து” (மணிமேகலை, 17-43). ‘வைமானிக்க சாஸ்திரம்’ எனும் நூல், 1952-ம் ஆண்டில் G.R. Josyer என்பவரால் வெளியிடப்பட்டது. சமஸ்கிருத மொழியிலான இக்குறிப்புகள் இந்தியில் 1959-ம் ஆண்டிலும், சமஸ்கிருதம்- ஆங்கிலம் அடங்கிய நூல் 1973-ம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. 1974-ம் ஆண்டில் Indian Institute of Science எனும் கல்வி நிறுவனம் தனது தீவிர ஆய்வின் முடிவில், இந்நூலில் குறிப்பிட்டிருக்கும் விமானம் குறித்த செயல்முறைகளைக் கொண்டு விமானம் ஒன்றை உருவமைக்க இயலாது என்ற கருத்தை தெரிவித்தது. இக்கட்டுரையில், நூலின் வரலாற்று அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அதன் தொழில்நுட்ப உள்ளடக்கமானது தீவிரமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நூலில் அடங்கியிருக்கும் சுலோகங்கள், 1904 ஆண்டிற்கு முந்தைய காலத்தில் எழுதப்பட்டிருக்க முடியாத வகையில், அவை தற்போதைய அறிவு அடைப்படையில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

வைமானிக்க சாஸ்திரம் எழுதப்பட்ட கால அளவீட்டை பல்வேறு கோணங்களில் நோக்கலாம். நூலில் பொறிக்கப்பட்டுள்ள சமஸ்கிருத எழுத்துருக்கள் நவீன இலக்கணத்தை பயனில் கொண்டு தொன்மையை ஆங்காங்கே செருகியிருப்பது தெரியவருகிறது. இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் விமானங்களின் பயன்பாடு குறித்து நுணுக்கமாக கையாளப்படவில்லை எனும் கூற்றினையும் முன் வைக்கின்றனர். இராமாயணத்தில் புகழ்ந்துரைக்கப்பட்ட ‘புட்பக விமானம்’ பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், அவ்விமானமானது மந்திர தந்திர செயலைக் கொண்டு பறக்கும் பண்போடு நின்றுவிட்டது. தொழில்நுட்ப சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. தெளிவான நுட்பங்கள் புலப்படாத பட்சத்தில், எழுத்து வடிவிலான சான்றுகளை ஏற்று, இவ்வாய்வின் முடிவில் மகரிஷி பரத்வாஜரை ஆசிரியராக கொண்ட ‘வைமானிக்க சாஸ்திரம்’ சுப்பராய சாஸ்திரி என்பவரால் 1900- 1922-க்கும் இடைப்பட்டக் காலத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.

இவ்வாறாக தமிழர் மற்றும் இந்து மதவாதிகள் மத்தியில் கதைகளாகவும் கற்பனைகளாகவும் வானுர்தி மற்றும் வான்வழிப் பயணம் குறித்த குறிப்புகள் காணப்பட்டாலும், இவ்வறிவானது இவர்களுக்கு எதன் அடிப்படையில் கிட்டியது எனும் கேள்வியை மட்டும் முன் வைக்கலாம். பறக்கும் பண்பை கொண்ட பொருளொன்றை குறிப்பிட்டு, அதன் செயல்பாடுகளைக் காரண காரிய விளக்கத்தோடு வரையறுப்பதே அறிவியல்.

சிந்தனை மாற்றமென்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரிய அளவிலான எதிர்வினையை அனுபவித்திருக்கும். இவ்வாறு வாழ்க்கை மற்றும் உலகினை திட்டமிட்ட அறிவியல் மற்றும் கற்றல் வாயிலாக மிகத் துள்ளியமாக கண்டறிய தொன்மங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க மக்கள் வெகுண்டெழுந்தனர். இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் ஆராய எழுந்த பிற்கால விஞ்ஞானிகள் பலவாறான சிந்தனை சிதைவுகளில் சிக்கி அல்லல் பட்டனர். பெரும்பாலானோர் ‘கடவுள்’ இவ்வுலகை ஆட்கொண்டிருக்கிறார் எனும் முடிவுக்கும் வந்தனர். மாந்திரிகவாதிகள், ஜோதிடர்கள் இவ்வகையான உலகங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் நம்பப்பட்டது. இக்காலத்தில், ஒரு பொருளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப விளக்கம் தருவதென்பது பல கருத்து முறண்பாடுகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவை பெரிதாக விவாதித்திருக்க கருத்தடக்கங்கள் இல்லாமற் போயிருக்கலாம். எடுத்துக்காட்டாக, உலகில் நடக்கும் விசயங்களை அப்படியே ஏற்று, அடுத்து இவ்வாறு நிகழுலுமாயின் இதே மாதிரியான தரவுகளையே பெறுவோம் எனும் முடிவுக்கு வந்திருப்பர்.

வானத்தில் கறு மேகங்கள் குவிந்தால் மழை வரும் என்பது அக்காலத்தில் ஆதாரமாக ஏற்கப்பட்டிருக்கும். மழையின் பெருமையையும் இன்றியமையாமையையும் உலகத்தில் எல்லா மக்களும் அறிந்திருந்தனர். ஏனையர் அறிந்ததைவிட தமிழர் நன்கு அறிந்திருந்ததற்கு சான்றாக திருவள்ளுர் ‘வான்சிறப்பு’ என்னும் ஓர் அதிகாரம் எடுத்தோதியுள்ளதையே எடுத்துக் கொள்ளலாம். காவியப் புலவர்கள் பாடிய பாட்டுக்களிலே, வெண்மேகங்கள் சென்று கடலில் படிந்து வயிறு நிறைய பெய்கிறது எனப் பாடியதை நம் முன்னோர்கள் புலவர்கள் கற்பனையில் மிதந்திருப்பதை உணர்த்தினார்கள். ஆனால், வெயிலின் சூட்டினாலே நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகச் சென்று வானத்தில் மேகமாகி மழையாகப் பெய்கிறது என்ற விஞ்ஞான சாயலைக் கண்டுக் கொள்ளவில்லை. எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடலில் அகத்திய விண்மீனைக் குறிக்கும் வரிகள் உள.

“..பொதியின் முனிவர் புரைவரை கீறி

மிதுனம் அடைய விரிகதிர் வேனில்

எதிர்வரவு மாரி இயைகென இவ்வாற்றான்

புரைகெழு வையம் பொழிமழை தாழ..” (பரிபாடல், 11.11-14)

அதாவது, அகத்திய விண்மீன் மிதுன இராசியில் தோன்றும் காலத்தில் கடல் நீரானது ஆவியாக மாறுவதால் கடல் வற்றுகிறது.  இவ்விண்மீன் மறையும்போது மழை பொழிந்து கடலின் நீர் மட்டம் அதிகரிக்கிறது. அகத்தியர் கடலை குடித்ததாகவும், மீண்டும் கடல் நீரை அவர் உமிழ்ந்ததாகவும் (“தூய கடன் நீர் அடிசில் உண்டு அது துரந்தான்” – 3.3.38), ஆரணிய காண்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

பிற்கால விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் ஆய்வினை மேற்கொள்ளவில்லை. தற்கால அதிநவீன விஞ்ஞான யுக்திகளை கையாளவில்லை. ஆனால், இவ்வுலகினை முழுமையாக அனுபவித்து பதிந்தார்கள். தாங்கள் கண்டிட்ட விசயங்களுக்கு விளக்கவுரைத் தந்து அதனை செயல்படுத்த முயன்றபோது விஞ்ஞானிகளாக உருவெடுத்தார்கள். இருப்பினும், தொடக்கக் கால விஞ்ஞானிகளால் சரியான விளக்கவுரையை தர இயலவில்லை. அதாவது, விவாதிக்க முடியாத பட்சத்தில் ஒரு கூற்றானது ஒரே இடத்தில் தங்கிவிடும். நாள்மீன் (star) கோள்மீன் (planet) பற்றிய சில குறிப்புகளை பழந்தமிழர்கள் தங்களின் இலக்கிய குறிப்புகளில் குறிப்பிட்டிருந்தார்கள். அன்று, ஞாயிறு பூமியைச் சுற்றுவதாக நம்பப்பட்டது. ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு ஞாயிறு’ என நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் (1) பாடினார். இதனை புவிமையக் கொள்கை (Geocentric Theory) எனக் குறிப்பிட்டனர். தாலமி (Ptolemyஇரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பூமியைசுற்றியே ஞாயிறுகோள்கள்மற்றும் விண்மீன்கள் சுற்றிவருகின்றன என்பதனை வகுத்தார்.இரவு நேரங்களில் விண்மீன்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டிட்டவர்கள் இம்முடிவுக்கு வந்திருக்களாம். பெரிய வட்டப்பரிதிகளில் ஞாயிறும் கோள்களும் சுற்றி வருவதாக அறிவித்தார். இந்தப் பரிதிகளின் மேல், சிறிய வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றி _வந்தன. இச்சிறிய வட்டப்பாதைகள் மேல்மிசை வட்டங்கள் (epicycle) என அழைக்கப்பட்டன. கி.மு. 270-ல், அரிஸ்தர்கஸ் (Aristarchus) பூமிதான் ஞாயிறைச் சுற்றி வருவதாகக் கூறி தாலமியின் முடிபினைக்கு எதிரான மாற்று வாதத்தை முன் வைத்தார். இருப்பினும், அவரது வாதமானது அன்று பொருட்படுத்தப்படவில்லை.1,800 ஆண்டுகளுக்குப் (1543) பிறகு நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (Nicholas Copernicus) சூரிய மையக்கோட்பாட்டை (Heliocentric Theory) முன்வைத்தார். அதாவது, சூரியன் மையப்பகுதியில் இருக்கையில், பூமியானது அதனைச் சுற்றியே வலம் வருகிறது எனக் குறிப்பிட்டுக் காட்டினார். இவரது கூற்றானது சமயவாதிகளால் மறுக்கப்பட்டது. பொதுவாகவே அண்மையக்காலக்கட்டத்தில் மதக்கொள்கைகளுக்கு எதிராக எழுப்பப்படும் கூறுகள் மறுக்கப்பட்டு புறந்தள்ளப்படுவது வழக்கம். இவரைத் தொடர்ந்து கலீலியோ கலிலி (Galileo Galilei) கோப்பர்னிக்கஸின் கூற்றை வழுபடுத்த தொலைநோக்கியின் வாயிலாக வான்வெளியை ஆராய்ந்து ஞாயிறுதான் மையப்பகுதி என்று கூறினார். அவருக்கும் மதவாதிகளால் நெருக்கடிகள் வந்ததை வரலாறு இன்றும் பதிவு செய்துள்ளது. பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் ஞாயிறைச் சுற்றி வருகின்றன என நிருபித்தார். இவரை அடுத்து, ஜொஹன்நஸ் கெப்லர் (Johannes Kepler) கோள்கள் ஞாயிறை ஒரு நீள்வட்ட (oval) பாதையில் சுற்றி வருகின்றன என்பதனை கண்டுபிடித்தார். இதற்கு முன்னர் கோப்பர்னிக்கஸ் மற்றும் கலீலியோ இருவரும் பூரண வட்டப்பாதையில் கோள்கள் சுற்றுகின்றன எனக் குறிப்பிட்டிருந்தனர். கணிதவியலின் துணைக்கொண்டு ஐசாக் நியூட்டன் (Isaac Newton) கோள்களின் வட்டப்பாதையை கணக்கிட்டார். அறிவியல் புரட்சியானது தலைத்தூக்க தொடங்கியக் காலம் இது.

 சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு Francis Bacon என்பவரின் “advancement of learning” நூலில் மக்கள் இவ்வுலகத்தைப் பற்றிய தவறான வழிகாட்டுதலில் சிக்கி திணறிக் கொண்டிருப்பதை பதிவுச் செய்துள்ளார். ‘அறிவு’ என்பதை ஓர் இருண்ட குகைக்குள்ளிருந்து வெளியே பரந்து கிடக்கும் உலகினை கிரகிக்க முற்படும் செயலாகவே குறிப்பிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து Rene Descartes, தனது ஆய்வுகளின் உச்சத்தில் இவ்வுலகில் தமது இருப்பை ஒரு பிம்பமாகவே கருதினார். இவரது பார்வையில் விஞ்ஞானி என்பவர் ஒரு பொருளின் தன்மையை விளக்கும் பொழுது தனது கற்பனையில் உதிக்கும் விசயங்களை ஆய்வின் முடிபுகளில் கோர்த்து இணைக்காமலிருப்பதே சிறப்பு என்கிறார். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை ஆய்வுக்கு உட்படுத்தும் போது அதன் நுண் பாகம் வரைக்கும் கேள்விகளை எழுப்பி விளக்கம் கண்டுக் கொள்ள வேண்டும். நுண் பாகங்களின் செயல்பாடுகள் அறியப்படும் வேளையில் பெரியதொரு கண்டுபிடிப்பிற்கு அவை வழி வகுக்கும் என்கிறார். இவ்வாறான சிந்தனைகளின் அடிப்படையிலேயே அறிவியல் செயல்முறைகள் வெளிப்படுகின்றன. அறிவியல் செயல்முறையை பல்வேறு வகைகளாகக் குறிப்பிடலாம். ஆனால் அடிப்படையில் இச்செயல்முறையானது, உலகினை உற்று நோக்குதலின் அம்சமாகவே கருதப்படுகிறது. பொதுவாக, அறிவியல் செயல்முறையின் படிநிலைகள், நாம் அவற்றை எவ்வாறு பகுத்தெடுக்கிறோம் என்பதை பொறுத்தே உறுதிபடுத்தப்படுகிறது. பிரச்சனை எதுவென்று கண்டறிந்து, அனைத்து தரவுகளையும் சேகரித்து, ஒரு கருதுகோளை (hypothesis) முன்மொழிந்து, அதனை சோதித்துப் பார்த்து விடை காண்பதென்பது, அடிப்படை அறிவியல் செயல்முறைப் படிநிலைகளாகக் கொள்ளலாம். கருதுகோள் ஒன்றை தொடர்ந்தார் போல ஆய்வுக்குட்படுத்தியிருப்பதே சிறந்ததோர் அறிவியல் சிந்தனையாளரின் பண்பாகும் என்பது எமது வாதம். நமக்கு மேலே விரிக்கப்பட்டிருக்கும் வளிமண்டலத்தையும் கடல் பரப்பையும் பார்த்து தங்களின் தேடலை தொடங்கினர் அறிவியளாளர்கள். பிரபஞ்சத்தின் சக்தியினை உள்வாங்கி மனிதனின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகுத்தனர். அறிவியலும் தொழில்நுட்பமும் இன்றைய சூழ்நிலையில் வளர்ச்சி பெற்று வருகின்றன என்றாலும், இந்நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள மனித சமூகம் நூற்றாண்டுகளாக இயற்கையோடு இணைந்தும் முரண்பட்டும் வாழ நேரிட்டது.

இவ்வாறு, அறிவியல் தன் சாரம்சத்தை உலக மக்களின் சிந்தையுள் மிதக்கவிட்டு பல்வேறு மொழிகளில் உருக்கொண்டது. வாய்வழி கதைச்சொல்லல் பாரம்பரியமாகத் தொடங்கிய பழங்காலக் கதைகள், கால ஓட்டத்தில் மிகைப்படுத்தப்பட்டு பல பதிப்புகளாக நூல் படிமத்தில் இன்றளவும் உலாவிக் கொண்டிருக்கின்றன. தற்கால அறிவியல் அளவீட்டைக் கொண்டு இவை உண்மையாக நிகழ்ந்தனவா என ஆராய்வது இலகுவான காரியமல்ல. இயற்கையோடு ஒன்றினைந்து வாழ்ந்தோரின் மொழியினை, எந்திர சூழலுக்கு கொண்டு வந்து நியாயப்படுத்த நினைப்பதும் பொருத்தமற்றதே. பண்டையக்கால மத்திய அமெரிக்கா நாகரிகமான, மாயன் நாகரிகம் கி.மு. 2,600 வாக்கில் தோன்றி மறைந்ததை அறிவோம். கணிதம், எழுத்துத்துறை, வானியல் போன்ற துறைகளில் மேம்பட்டிருந்தவர்கள், தங்களின் தொன்மங்களில் தெய்வங்களின் இருப்பை கொண்டாடினர். இவர்களின் கட்டிடக் கலை, வானியல் கணக்கெடுப்புகள் இன்றளவும் அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்று நிறுவப்படும் கருத்தானது நாளை நிராகரிக்கப்படும் என்பதே எதார்த்தம். இவ்வாறு ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்தார் போல அரங்கேறிக் கொண்டே இருக்கும். இன்றைய உலகம் அழிந்து, மனித இனமும் மறைந்து போகும் நிலையில், நடப்பில் இருக்கும் குறியீடுகள்  (signs & symbols) நாளைய மனித இனத்தின் பார்வையில் எவ்வாறு அடையாளப் படுத்தப்படும் என்பதை சிந்தித்தால், மொழியின் வாயிலாக, காலத்தைக் கடந்து பல பரிமாணங்களில் அறிவியல் பயணிக்கப் போவதை உணரலாம். இவ்வாறு நிகழுமாயின், அடுத்தக்கட்ட கதையுலகமாக (New Mythology), அறிவியலை முன் வைத்து, எல்லாம் முடிந்து தொடரும் போக்கில் இன்றைய கொண்டாட்டங்கள் நாளைய தொன்மங்களாக மீண்டும் மீட்டெடுக்கப்படும்.http://vallinam.com.my/version2/?p=1101

 

**தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி** இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும். ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த... இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார். இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (ஆடொம்) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர். அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். இறைவனை வருணிக்க வந்த உபநிஷத் “அணுவோர் அணீயாம் மஹதோர் மஹீயாம்” என்று (அணுவுக்கும் சிறியவன் , பிரமாண்டமான மலைக்கும் பெரியவன்) கூறுகிறது. எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி” என்று கூறினர்.

 

புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும். “இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது. அதை இறுதியில் காண்போம். அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(னுcலெஅர் fஇச்சிஒன்) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (னுcலெஅர் fஇச்சிஒன்) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது. இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும். பரிபாடல் (3௫3), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் “உலகம் அணுக்களால் ஆனது” என்றும் “அணுச் செறிந்த உலகம்” என்றும் எழுதியுள்ளனர்.

 

இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிற்¢ய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர். ஒரு கடுகில் 2,62,144 அணு! ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது. 8 அணு = ஒரு தேர்த்துகள் 8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை 8பஞ்சிழை = ஒரு மயிர் 8 மயிர் = ஒரு மணல் 8 மணல் = ஒரு கடுகு 8 கடுகு = ஒரு நெல், 8 நெல் = ஒரு விரல் 12 விரல் = ஒரு சாண் 2 சாண் = ஒரு முழம் 4 முழம் = ஒரு கோல் 500 கோல் = ஒரு கூப்பீடு 4கூப்பீடு = ஒரு காதம் “அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி லச்சாணிரண்டு முழமாம்.” (செந்தமிழ் தொகுதி 12 P127) ஐம்பது ண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (னுcலெஅர் ப்ஹ்ய்சிcஇச்ட்) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார். திருமூலர் கணக்கு உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார். 100 க்ஷ் 1000 க்ஷ் 100 000=100 000 00 000 அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல. “மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவியது கூறது ஆயிரமானால் ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே” ( திருமந்திரம்`1974) 

 

 

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.