Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சலரோகம் எனும் நீரழிவு நோயும் அதற்கான காரணிகளும் சிகிச்சிகளும் - யாழ் வைத்தியபீட மாணவர்களினால் வெளியிடப் பெற்ற வீடியோ இணைப்பு

Featured Replies

diabetic.jpg

 

 

 

சலரோகம் - நீரழிவு நோய் என்றால் என்ன? இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? 

 

 

நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள ”குளுக்கோஸ்” வழங்குகின்றது. இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை திசுக்களில் பெற்றுக் கொள்வதற்கு ”இன்சுலின்” என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது.

வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி அமைந்துள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும்போது, உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெற முடியாது போகின்றது. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோசின் அளவு அதிகமாகிறது. இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரையானது இதயம், சிறு நீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. 

 

கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. காரணம், போதுமான அளவு இன்சுலினை சுரக்கும் தன்மையை அது இழந்து விடுவிடுவதால் உடம்பில் உள்ள கலன்கள் தமக்குத் தேவையான குளுக்கோஸைபெறமுடியாது போவதுடன், இரத்தத்தில் குளுக்கோசின் செறிவு அதிகரிக்கின்றது. இந் நிலையே சலரோகம் - நீரழிவு என அழைக்கப் பெறுகின்றது.

 

 

இரத்தத்தில் குளுக்கோசின் அளவை கட்டுப்பாடில் வைத்திருக்க உதவும் உடல் உறுப்புகளில் ஒன்றான சதையி என்றழைக்கப் பெறும் கணயம் பற்றி அறிந்திருப்பது முக்கியமாகின்றது.

 

 

”சதையி” என்னும் கணையம்” 75 கிராம் எடையும், சுமார் 15 செ.மீ. நீளமும் உடைய ஓரு உறுப்பு. வயிற்றின் பின்புறத்தில் அடிவயிற்றுக்கும், முதுகெலும்புக்கும் நடுவே உள்ளது. ஒரு பக்கம் முன் சிறுகுடலின் வளைவிலும், மறுபக்கம் மண்ணீரலையும் தொட்டுக் கொண்டிருக்கும்.

கணையம் ஜீரணத்திற்கான “என்ஸைமைகளை” மட்டுமன்றி மூன்று ”ஹார்மோன்களையும்” சுரக்கின்றது. ”என்ஸைமை” சிறு குடலுக்கும்,”ஹார்மோன்களை” இரத்தத்துக்கும் அனுப்பும். 

கணையத்தின் வால் பகுதியின் உட்புறத்தில் ”லாங்கர்ஹான்” திட்டுகள் என்னும் நாளமில்லாச் செல்களினால் ஆன திட்டுகள் எண்ணிக்கையில் சுமார் பத்து லட்சம் உள்ளன. இந்த லாங்கர்ஹான் செல்கள் “ஆல்பா” செல்கள் எனவும் “பீட்டா” செல்கள் எனவும் இருவகைப்படுகின்றன. 

 

 

இதில் ”ஆல்பா” செல்கள் குளுகோகான்” என்னும் ஹார்மோனையும், “பீட்டா” செல்கள் ”இன்சுலின்” என்னும் ஹார்மோனையும் சுரக்கின்றன. நமது உடலில் நடைபெறுகின்ற வளர்சிதை மாற்றத்தில் பெரிதும் பங்கு கொள்ளும் இந்த இரண்டு ஹார்மோன்களும் கீழ்ப்பெரும் சிரையினுள் சுரக்கப்பட்டுக் கல்லீரலைசென்றடைகின்றன.

இந்த இரண்டு ஹார்மோன்களை தவிர “சோமடோஸ்டேசன்” என்ற ஹார்மோனும் கணையத்தால் சுரக்கப்படுகிறது. இந்த மூன்று ஹார்மோன்கள்.
 

 

1. இன்சுலின் – திசுக்களுக்கு குளுகோஸை கொண்டு சேர்க்கிறது.
 

2. குளுகோகான் – இன்சுலினுக்கு எதிர்மாறான தன்மை உடைய ஹார்மோன். ரத்தத்தில் சர்க்கரை குறைந்தால் கல்லீரலை தூண்டி அது சேமித்து வைத்திருக்கும் குளுக்கோஸை ரிலீஸ் செய்யுமாறு தூண்டும்.
 

3. சோமடோஸ்டேசன் – மேலே சொன்ன 2 ஹார்மோன்களையும் தேவைப்படும் போது, சுரக்காமல் தடுக்கும்.

 

 

கணைய பாதிப்படைய காரணங்கள்.
 

1. மல்டிபில் என்டோக்ரைன் நாளமில்லா சுரப்பிகளின் புற்றுநோய் / புற்று நோயில்லாத கட்டிகள், வீக்கம் இந்த வியாதி நாளமில்லா சுரப்பிகளை தாக்கும் அபூர்வ வியாதி.
 

2. தசை அழிவு நோய்: இந்த வியாதி உடலின் தசைகளை தாக்கும் கொடிய நோய் தீவிரமானால் டயாபடீஸ், மற்றும் பல தீவிர நோய்களை உண்டாக்கும்.

 

3. அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிக் கலவைகள், இதர துணை நோய்கள்.

 

4. மரபணுக்களின் மாற்றம்.

 

5. சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்.

 

6. ஹேமோகுரோமடோசிஸ் இந்த பரம்பரை வியாதி, உடலில் அதிக அளவு இரும்புச்சத்து சேருவதால் வரும்.

கணையத்தின் “பீடா” செல்கள் இன்சுலின் உற்பத்தி செய்வது ஒரு தொடர்ச்சியான நிரந்தர செயல்பாடு. இந்த செயல் ரத்தத்தின் உள்ள குளூக்கோஸ் அளவை சார்ந்திருப்பதில்லை. அதிகமானால், பீடா செல்களில் (செல்லின் சைடோப்ளாஸத்தில் உள்ள இடம்) சேமித்து வைத்து கொள்ளும்.

 

சாப்பிட்டவுடன் ரத்த குளூக்கோஸ் அளவுகள் ஏறும். கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் திட்டுக்களில் உள்ள ‘பீடா’ செல்கள் உடனே இன்சுலினை சுரக்கும். சுரந்து ரத்தத்துக்கு செலுத்தும். உடலில் உள்ள செல்களில் மூன்றில் இரண்டு பங்கு செல்களுக்கு குளூக்கோஸை கொடுக்க இன்சுலின் உதவுகிறது.

 

எரி சக்தியாகவோ. இல்லை சேமித்து வைக்கவோ என்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது இன்சுலின். கல்லீரலில் மற்றும் தசை செல்களில் அதிக குளூக்கோஸ் கிளைக்கோஜன் என்ற பெயரில் சேமிக்கப்படும். குளூக்கோஸ் லெவல் குறைந்தால் உடனே குளூக்கோஸாக உருவெடுத்து குறையை நிறை செய்யும். இதற்கு உதவுவது இன்சுலினுக்கு எதிர்மாறான ஹார்மோன் குளுகோகான். இந்த பரிமாற்றம் நேர்வது கல்லீரலால் மட்டுமே. தசை திசுக்கள் இந்த பரிமாற்றம் செய்யும் திறன் அற்றவை.

முதலில் கீழ்க் காணும் அறிகுறிகள் ஏதேனும் ஒன்று அல்லது எல்லமே உங்களுக்கு தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம்.

 

 

 

சலரோகம் பற்றிய விளிப்புணர்வு வீடியோ

 

பகுதி - 1

 

பகுதி - 2

 

பகுதி - 3

 

குதி - 4

 

குதி - 5

 

பகுதி - 6

 

பகுதி - 7

 

 

 

சலரோகம்-நீரழிவு நோய்க்கான அறிகுறிகள்:

 

·    அதிகப்படியான தாகம்
·    அடிக்கடி சிறுநீர் போகுதல்
·    அதிகமாப் பசித்தல்
·    காரணமில்லாத எடை குறைவு
·    உடம்பில் வலியெடுத்தல்
·    சோர்வு
·    காயங்கள் எளிதில் ஆறாமை
·    அடிக்கடி சிறு சிறு நோய்கள் தொற்றுதல்
·    சில நேரங்களில் பார்வை தெளிவின்மை.

 

 

 

சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் சுயகட்டுப்பாடுடன் வாழ வேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.

 

 

நீரழிவு நோய் மூன்று வகைப்படும்

 

 

வகை- 1: நீரழிவு நோய் பற்றிய விபரங்கள்

 

 

Juvenile diabetes-- இள வயது நீரழிவு நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM)- இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் நீரழிவு நோய். 

 

இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள்.

எதிர்ப்பு சக்தி வலு இழக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pயnஉசநயள) இன்சுலின் உற்பத்தி செய்யும் “பீடா” செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது.

 

இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.

இவ்வகை நீரழிவு நோயானது தாய், தந்தையினரின் வழியாகவும், நெய், பால், கள், இறைச்சி போன்ற உணவுப் பதார்த்தங்களை பயன்படுத்துவதாலும், ஈரப் பொருள்கள் மற்றும் வெறுப்பைத் தரக்கூடிய உணவுப் பொருள்களை உட்கொள்வதாலும் ஏற்படுகிறது.

 

 

நீரழிவு நோயின் அறிகுறிகள்:
 

 

சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். சிறுநீருக்குரிய நிறம், நிறை, எடை, மணம் போன்றவற்றுள் நிறம் தண்ணீரைப்போலும், நிறை அளவுக்கு அதிகமாகவும், எடை கனத்தும், மணம் தேன் போன்றும் காணப்படும். சிறுநீரானது, தெளிந்த நீர் போன்று அடிக்கடி வெளியேறும். வெளியேறிய சிறு நீர்த்துளிகள் சற்று உலர்ந்தவுடன் பிசுபிசுத்துக் காணப்படும். உடல் வலிமை நாளுக்குநாள் குறைந்தும், நாவறட்சி அதிகமாகவும் காணப்படும்.

 

 

நோய்க்கான அறிகுறிகள்:
 

 

உடல் மெலிவடைந்தும், தோலில் நெய்ப்பசையற்று வறண்டு சுருங்கி வெளுத்த மஞ்சள் நிறத்தையும் அடையும். நாவறட்சி, அதிக நீர் வேட்டை,

அதிகமாக பசியெடுத்தும், உணவு சாப்பிட்ட சற்று நேரத்திற்குள் மீண்டும் பசியெடுப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்நோய் முதிர்ந்து தனக்கு துணையாகப் பலவகையான கேடுகளையும் உண்டாக்கும். உடல் சத்தை உருக்கிச் சர்க்கரையாய் நீர் வழியே வெளியேற்றும்.

 

சொறி, சிரங்கு, கட்டி முதலியவைகளை உருவாக்கி பல கேடுகளை உண் டாக்கும். பித்த நாடி விரைந்து நடக்கு மாயின் நீரிழிவு நோய் வரலாம்.

 

 

வகை- 1: நீரழிவு நோயின் குணாதிசியங்கள் 

 

பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது 

 

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். 

 

இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல 

 

இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

 

சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது. 

 

உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

 

 

 

வகை- 2: நீரழிவு நோய்
 

 

 

Adult onset diabetes - முது வயது நீரழிவு நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) 

 

 

இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத நீரழிவு நோய் இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும்.

பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.

 

இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம்.

 

இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.

 

 

 

வகை- 2: நீரழிவு நோயின் குணாதிசியங்கள்

 

 

பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள் 

 

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும் 

 

பொதுவாக இது பரம்பரை நோய் 

 

பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.

 

இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

 

 

வகை - 3: ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்:
 

 

மூன்றாவது வகையாக கர்ப்ப கால நீரழிவு நோய் (gestational diabetes). கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள்.

 

பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் ஐஐ நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

 

 

 

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருமா?
 

 

சர்க்கரை நோய் என்றதும், ஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை. 

 

 

உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை என்கிறார்.

அதேசமயம், அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருக்கறது.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை. அதேசமயம், ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக்காரணிகளும் ஏற்கெனவே அதிகமாக இருக்கும் பின்னணியில், அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிட்டால், அதனால் அவரது உடல் எடை அதிகரித்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும்

அடுத்ததாக, சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல் லையா என்பதை தெரிந்துகொள்வதற்கு பொதுவான அறிகுறி கள் சில இருக்கின்றன. அதிக தாகம், அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல், ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு நோய் வந்திருப்பதை குறிப்புணர்த் துவதாக கருதப்படுகின்றன.

 

 

 

இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அவர்கள் அவசியம் நீரிழிவுநோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்துகொள்வது மிகவும் அவசியம். அதே சமயம் இத்தகைய அறிகுறிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை. நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம்.

இப்படியான அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க் கரை நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்க ளில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதை போக்க வேண்டுமானால், நீரிழிவுநோயை ஆரம்ப நிலையி லேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.

 

 

இதன் ஒருபகுதியாக, பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது அவர்கள் கண்டிப்பாக நீரிழிவுநோய் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியம். 

அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும்

 

 

அறிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. 

அதாவது ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின் அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு, மற்றும் அவரது பெற்றோ ருக்கு நீரிழிவுநோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக்கொள்ள முடியும் என்கிறார் மோகன்.

யார் வேண்டுமானாலும் இந்த வழிமுறையின் மூலம், தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியப்பாடு இருக்கிறதா என்பதை சுமார் 80 சதவீதம் சரியாக கணிக்க முடியும்.

 

 

இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப்படுத்துவதும் எளிது. நீரிழிவுநோய் உண்டாக்ககூடிய இதர உடல்நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும்

நீரிழிவு நோயின் பாதிப்பு, படிப்படியாகத் தலையிலிருந்து பாதம் வரை பரவி, பல்வேறு உடல் உறுப்புகளைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. உடலில் கட்டிகள் ஏற்படுவது, பிளவை உண்டாவது மற்றும் பல சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்.

 

 

 

அவற்றுள் அச்சமுறுத்தும் நோய்கள் சில:

 

 

·    கண்பார்வை பாதித்தல்
·    சிறுநீரகங்கள் பழுதடைதல்
·    இதய நோய்
·    கால்களில் புரையோடிய புண்

 

 

 

நீரழிவு நோய் ஆரம்பித்த ஓரிரு நாட்களில் இவை வந்துவிடுதில்லை. நீரழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காமல் ஆண்டுக் கணக்கில் தொடர விடுவோமானால் இவ்விளைவுகள் உண்டாகும். முதலில் தொடக்க கால அறிகுறிகளான தாகம், சிறுநீர் அடிக்கடி போதல் போன்றவை ஏன் ஏற்படுகிறது.

 

 

நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் அங்கு தேவையான சோதனைகளைச் செய்வார்கள். அவற்றுள் சில…

 

 

இரத்தம்:
 

 

·    குளுக்கோஸ் அளவு – ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.- கொழுப்பின் அளவு
·    யூரியா(உப்பு)வின் அளவு
·    ஈரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ள உதவும் சில சோதனைகள்

 

 

சிறுநீர்:
 

 

·    சிறுநீரில் குளுக்கோஸ் அளவு – ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.
·    சிறுநீரில் புரதம், அசிடோன்
·    மேலும் சில சோதனைகள்

 

 

மேலும் ஒரு தேவையான சோதனை HbA1c எனப்படும் ஒரு குறுதிச் சோதனையாகும். இந்த சோதனை வசதி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. நீரழிவு நோய் சிறப்பு நிலையங்களிலோ அல்லது பெரிய இரத்தச் சோதனை நிலையங்களிலோ இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களின் குளுக்கோசின் அளவின் சராசரியை இந்தச் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

அவ்வப்போது செய்யப்படும் குளுக்கோஸ் சோதனைகள் உணவிற்குத் தக்கவாறும் நேரத்திற்குத் தக்கவாறும் மாறுவதால் இந்த HbA1c சோதனை ஒரு சரியான அளவுகோலாகக் கருதப்படுகிறது.

 

 

அச்சம் தவிருங்கள் இனி ஆக வேண்டியவைகளைக் காண்போம். இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை எப்படி மேலாண்மை செய்வது? எவ்வாறு மேலும் சிக்கல்கள் நேராமல் பார்த்துக் கொள்வது? கட்டுரையின் இந்த இரண்டாவது நோக்கத்தை இனிக் காண்போம்.

 

 

 

நாம் மூன்று தலையாய விஷயங்களை தவறாது செய்வதனால் இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
 

1.     உணவுக் கட்டுப்பாடு
 

2.     தேவையான மருந்துகளைத் தவறாமல் எடுத்தல்
 

3.     தேவையான அளவு உடற்பயிற்சி.

 

 

 

1. உணவுக் கட்டுப்பாடு 
 

 

இரத்தத்தில் சேரும் அதிகப் படியான குளுக்கோசை சேமிக்கும் சக்தியை உடல் (இன்சுலின் இல்லாது) இழந்து விட்டதால்; ஏதாவது ஒரு வழியில் அதிகப்படியான குளுக்கோசை சேரவிடாமல் செய்து விடுவதற்காகவே உணவுக் கட்டுப்பாடு அவசியமாகின்றது. இந்த உணவுக் கட்டுப்பாட்டைக் கைக்கொள்ள வேண்டுமானால் முதலில்.உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரி(சக்தி) தேவைப்படும் என்று அறிய வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் கலோரியின் அளவு வேறுபடும். ஒருவரின் உடல் வாகு, செய்யும் வேலை, அவர் உடல் சக்தியை எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பன கருத்திற் கொண்டு அவை நிர்ணயிக்கப் பெறுகின்றன. ஒரு நல்ல ”Dietitian”(சத்துணவு நிபுணர்) இதனை கணக்கிட்டுச் சொல்வார்கள்.

 

 

2. தேவையான மருந்துகளை எடுத்தல்

 

 

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் தகுந்த அளவுப்படி தகுந்த நேரங்களில் எடுக்கவேண்டும். சில மாத்திரைகள் கணையத்தைத் தூண்டி இன்சுலினை அதிகம் சுரக்கவைக்கும் வகையாக இருக்கலாம். சில, இன்சுலின் உடம்பில் தேவையான அளவு இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலிருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றலாம்.

சிலருக்கு இன்சுலினை ஊசிமூலம் தேவைக்கேற்ற அளவு ஒரு நாளில் ஒருமுறை, இருமுறை அல்லது மும்முறை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அவற்றிலும்விரைவாச் செயல்படக் கூடியது, மெல்லச் செயல் படக்கூடியது என இருக்கின்றன. அவை இரண்டும் கலந்த வகையும் கிடைக்கிறது. இதையும் சரியான நேரத்தில் சரியான அளவு எடுக்க வேண்டும்.

 

 

 

3. உடற்பயிற்சி:உடற்பயிற்சி மிக இன்றியமையாததாகும். வயதிற்கேற்ற, அவரவர் தேவைக்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். எவ்வகையானது எவருக்கு உகந்தது என்பதையும் மருத்துவர் அறிவுறுத்துவார். உடற்பயிற்சிகளில் எல்லாம் சுலபமானது, எவ்வயதினரும் செய்யக் கூடியது நடையாகும். ஒரு நாளில் குறைந்த அளவு 40 நிமிடம் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நடப்பது மிகத் தேவையான ஒன்றாகும். மேற்சொன்ன மூன்றையும் முறையாகச் செய்வோர் அச்சத்தைத் தூர வைத்துவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடரலாம்.

 

 

இறுதியாக, இந்நோயாளிகள் செய்யக் கூடியன, கூடாதன பற்றியும் மேலும் சில தகவல்களையும் காண்போம்.

 

 

“உங்களுக்கு நீரழிவு நோயா? அரிசிச் சோறு உண்ணாதீர்கள் கோதுமை உண்ணுங்கள்” என்றும் “கேழ்வரகு இதற்கு நல்ல மருந்து” என்றும் பலர் உபதேசம் செய்யக் கேட்டிருக்கிறோம். அதனால், நீரழிவு நோயாளி, தான் ஏதோ ஒதுக்கி வைக்கப் பட்டவர்போல் உணரத் தொடங்கி விடுவார். நீரழிவு நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்ற பத்தியமில்லை. அடிப்படையை விளங்கிக் கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.

 

 

 

நீரழிவு நோயாளிகள் உண்ணும் உணவு மெதுவாகச் செமிக்கக் கூடிய  தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் செமிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும். கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு ஒன்றும் மருந்தல்ல. ஆனால் அதில் நார்ப்பொருள்(தவிடு) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம்.

 

 

மற்றப்படி அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே (70%) மாவுப் பொருள் இருக்கிறது. மேலும். எந்த வகை உணவு உண்கிறோம் என்பது பொருட்டல்ல் எவ்வளவு உண்கிறோம் என்பதே முக்கியம். பொதுவாக கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நலம். கீரை வகைகள் மிக நல்லது. ஒரு நாள் உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் குளுக்கோஸ் அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

 

 

மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். நாம் முன்பு கண்டபடி மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவர்.

 

 

இது தவறாகும். மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர் பரிந்துரைத்தாரோ அவ்வாறே செய்தல் வேண்டும்.

மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மறந்து விட்டால் போகட்டும் என விட்டுவிட வேண்டும். அவ்வாறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும்.

 

 

 

அடுத்து உடற்பயிற்சி. பெரும்பாலும்  நடையே பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்குள் ஒரு “வாக்” உறுதி(வாக்குறுதி) எடுத்துக்கொண்டு அதைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இதுவும் மருத்துவர் குறிப்பிட்ட அளவோடுதான் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செயதால் சர்க்கரை அளவு குறைந்து போகக்கூடும். ஆக, எதுவாயினும் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கவேண்டும்.

 

 

சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். குளுக்கோஸ் குறைவதற்குத்தானே இவ்வளவும் செய்கிறோம். குறைவதற்காக ஏன் அச்சப் படவேண்டும்? உங்களுக்குத் தெரியுமா? குளுக்கோஸ் கூடியிருப்பதைவிட வேண்டிய அளவில் மிகக் குறைந்திருப்பது அபாயகரமானதாகும். மயக்கம் வரலாம். இந்நிலை அதிக நேரம் தொடர்ந்தால் “கோமா”(Coma) நிலைக்குக் கூட போகலாம்.

 

 

 

நீரழிவு நோயாளிகள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
 

 

o    உங்கள் சிறுநீரை அடிக்கடி (குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக் கொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.

 

o    வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காகக “One touch”, “Gluco meter” போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவுக்குப்பின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வேண்டும்.
 

HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாததிற்கொருமுறை செய்து கொள்ள வேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சராசரியைக் காட்டும்.

 

 

 

அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்: 
 

o    5.6%  க்குக் கீழே – நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது

 

o    5.6% to 7% – சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள்

 

o    7% to 8% – ஒரளவு கட்டுப்பாடு

 

o    8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை

 

o    + 10% க்கு மேல் – கட்டுப்பாடு மிக மோசம்

 

 

 

நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புக்கள்:
 

 

உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் குளுக்கோஸ் அளவு குறையலாம். அப்போது இது கை கொடுக்கும்.

உங்களுடன் இருப்பவர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு குளுக்கோஸ் திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.

 

 

உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பை காலை நெருக்காத அளவுக்குத் தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று கவனியுங்கள்.

 

 

கையிலோ அல்லது காலிலோ சூடு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

 

 

இரத்த அழுத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.

 

 

வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள்.

 

 

எல்லாவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள்.

 

 

உங்கள் உடம்பை நீங்கள் ஆளக்கற்றுக் கொள்ளுங்கள்

 

 

1. உணவு முறை
 

 

சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ-ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.
 

 

1. கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.
 

2. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.
 

3. சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.
 

4. கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
 

5. சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
 

6. மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

 

 

 

நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?
 

 

நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.

 

 

நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்
 

 

உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

 

 

மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?
 

 

ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமபோசாக்கு இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை. ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.
 

 

1. காய்கறிகள்.
 

2. கார்போஹைட்ரேட்ஸ்.
 

3. பழங்கள்.
 

4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்.
 

5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்.
 

6. தானியங்கள்.
 

7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.

 

 

2. உடற்பயிற்சி
 

 

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,
 

1. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
 

2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 

3. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
 

4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.

 

 

உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை
 

 

உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.
 

1. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்.
 

2. மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும்.
 

3. காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
 

4. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
 

5. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

 

 

 

3. மாத்திரைகள்
 

 

சில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.
சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
சில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.

 

 

4.இன்சுலின்
 

 

நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.

 

 

இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?
 

 

இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.

 

 

இன்சுலினின் வகைகள்
 

 

இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.
இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

 

 

இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
 

இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?

 

1. முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.

 

2. உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.

 

3. இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.

 

4. தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.

 

5. ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.

 

6. இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.

 

7. தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

 

 

 

நினைவில் வைத்திருக்க வேண்டியவை
 

1. நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.
 

2. உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.
 

3. நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
 

4. சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.
 

5. தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.
 

6. ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.
 

7. உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.

 

 

சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.

 

 

 

நீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்!
 

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள குளுக்கோசின்அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

 

 

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் குளுக்கோஸ் பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும்,
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

 

 

எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

 

 

கிவி கிவி பழம் :
 

நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

 

செர்ரி :
செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

 

கொய்யா :
கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ’ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

 

நாவல் பழம் :
கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.

 

பீச் :
மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

 

 

பெர்ரிப் பழங்கள் :
 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

 

ஆப்பிள் :தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

 

அன்னாசி :
அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.

 

 

பேரிக்காய் :
சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

 

 

பப்பாளி :
பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

 

 

அத்திப்பழம் :
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

 

 

ஆரஞ்சு :
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் `சி’ இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

 

தர்பூசணி :
தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.

 

 

கிரேப் ஃபுரூட் :
ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும்.

 

 

மாதுளை :
அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

 

 

பலாப்பழம் :
பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.

 

 

நெல்லிக்காய் :
கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

 

 

முலாம்பழம் :
முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

 

 

நட்சத்திரப் பழம் :
இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

 

 

வெள்ளை கொய்யா :
நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் என்பது பரம்பரை வியாதியா அல்லது பருவத்தில் வரும் வியாதியா என்ற பட்டிமன்றம் நடத்தாமல் வந்த பின்னர் என்னசெய்யவேண்டும் என்று யோசியுங்கள்.

 

 

உணவு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்து வந்தால் எல்லா நோயுமே நம்மை விட்டு அகன்றுவிடும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட பழ வகைகளை மட்டும் உண்டு வாழ்வை மட்டும் இனிப்பாக்குவோம்.

 

 

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=10262:2014-01-31-18-16-38&catid=54:what-ails-you&Itemid=411

"கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை."

இந்த கணையம் ஏன் பங்க்ச்சராகிறது என்று புதிய மருத்துவம் கண்டறிய விரும்புவதில்லை.

இதற்கு காரணி 1950 இன் பின் வந்த இரசாயன உணவுகளே காரணம்.

இது காரில் அல்டர்நெட்டர்(மின் பிறப்பாக்கி) அடித்தால் அதை திருத்தாமல் ஒவ்வொரு கிழமையும் கார் பட்டரியை மாற்றுவது போல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.