Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கானா மட்டுமல்ல வரிசையில் நிற்கும் பல புதிய மாநிலக் குரல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரமும் தெலுங்கானமும் இணைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவை மீண்டும் ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாக பிரிக்க ஒப்புதல் நல்கியுள்ளது. 
 
இந்தியா 125 கோடி மக்கள் வாழும் மிகப் பெரியதொரு தேசமாகும். கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியா ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பலம் பொருந்திய பொருளாதார சக்தியாக உருமாறி இருக்கின்றது. ஆன போதும் இந்தியா இன்னமும் கல்வி, உள்கட்டுமானம், சுகாதாரம், மருத்துவம், சுற்றுச்சூழல் போன்ற விடயங்களில் பாரிய முன்னேற்றத்தை எட்ட வேண்டியும் இருக்கின்றது.
 
இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையே அதன் அதீத மக்கள் தொகைப் பெருக்கம் தான். இவ்வாறான அதிகளவு மக்கள் தொகையை கொண்ட ஒரு தேசத்தில், சாமன்ய இந்திய குடிமகனுக்கும், அரசு நிர்வாகத்துக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரியதாக அமைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. இத்தகைய இடைவெளி இருப்பதால் தான் ஜனநாயகத்தின் பலனை மக்கள் முழுமையாக பெற இயலாமல் போய்விட்டது எனலாம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பதும் இந்திய மாநிலங்களின் மிகப் பெரிய அளவே எனலாம். 
 
இந்தியாவின் மொத்தமுள்ள 28 மாநிலங்களில், ஐந்து மாநிலங்கள் எட்டு கோடி பேர் கொண்ட ஐரோப்பாவின் மிகப் பெரிய தேசமான ஜெர்மனியை விட பெரியதாகும் என்பதை நம்ப முடிகின்றதா. ஆளுமை நிறைந்த இந்திய முதல்வர்களான குஜராத்தின் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தின் சிவராஜ் சௌகான், பிகாரின் நிதிஷ் குமார் போன்றோராலேயே தத்தமது மாநிலங்களை வழிநடத்திச் செல்ல திணறுகின்றனர் என்றால் இந்திய மாநிலங்களின் பெருத்த அளவே காரணம்.
 
அதே சமயம் புதிய சிறிய மாநிலங்களான சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட் போன்றவை அவை உருவாகி பத்தாண்டுகள் கடந்த நிலையில் பாரிய வளர்ச்சியை அவை எட்டியுள்ளன என்பதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. இந்திய மாநிலங்களின் சராசரி மக்கள் தொகையின் அளவு 4.2 கோடியாக இருக்கின்றன, ஆனால் இந்திய மாநிலங்களை ஒத்த ஐரோப்பிய ஒன்றியத்திலோ, சராசரி மக்கள் தொகை வெறும் 1.8 கோடியாகவே இருக்கின்றன. ஐம்பது மாநிலங்களை கொண்ட அமெரிக்கா ஐக்கிய மாநிலங்களில் சராசரி மக்கள் தொகை வெறும் 62 லட்சம் மட்டுமே. இவற்றை எல்லாம் வைத்து நோக்கும் போது சராசரியாக இந்திய மாநிலங்களின் நில அளவானது, 40, 000 ச.கி.மீ முதல் 120, 000 ச.கி.மீட்டருக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். சராசரி மாநிலங்களின் மக்கள் தொகையும் 2 கோடி அளவினதாக இருந்திருக்க வேண்டும். 
 
ஆனால் உண்மையில் மாநிலங்களின் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் மிகப் பெரியதாகவே இருக்கின்றது. இதனால் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பிரதேச வளர்ச்சி குறைபாடுகள், கலாச்சார வேறுபாடுகள், அரசியல் காரணங்கள், நிர்வாக வசதிகள் என பல்வேறு காரணிகள் இன்று பல சிறிய தனி மாநிலக் கோரிக்கைகளை எழுப்ப வைத்துள்ளது.
 
கடந்த 2000-ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி முறையே உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஜார்கண்ட் என வளர்ச்சி குன்றிய பகுதிகளை பிரித்து மூன்று புதிய தனிமாநிலங்களை உருவாக்கியது.  இந்த தனி மாநில உதயங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு மட்டுமின்றி அவை பிரித்தெடுக்கப்பட்ட தாய் மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியுள்ளன.
 
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலப் பகுதியில் சத்தீஸ்கர் மாநிலம் 9.2 % வளர்ச்சி கண்டுள்ளது. அதே போல ஜார்க்கண்ட மாநிலம் 11.1% வளர்ச்சியையும், உத்தரகாண்ட் 8.8 % வளர்ச்சியையும் பெற்றுள்ளன. இத்தகைய வகையில் புதிய மாநிலங்களின் தோற்றம் பொருளாதாரம், கல்வி, சமூக வளர்ச்சியின் பின் தனியுள்ள பகுதிகளை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையும் பலரால் முன் வைக்கப்படுகின்றது. 
 
இத்தகைய காரணிகளையும், கலாச்சார வேறுபாடுகளையும், பொருளாதார வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு தெலுங்கானா, விதர்பா போன்ற மாநிலக் கோரிக்கைகளை பலர் எழுப்பி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் என்பது முன்னாள் ஐதரபாத் சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்டு பின்னர் ஆந்திரப் பிரதேசத்தில் இணைக்கப்பட்ட ஐதரபாத் மாநகரத்தையும் உள்ளடக்கிய பத்து மாவட்டங்களைச் சேர்த்த பகுதியாகும். தெலுங்கானத்தின் மொத்த மக்கள் மூன்றரைக் கோடி ஆகும். ஐதரபாத்தை தவிர ஏனைய மாவட்டங்கள் பொருளாதார, தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய பகுதிகளாகவும் இருக்கின்றன. இதனால் ஏற்பட்ட தொடர் மக்கள் போராட்டத்தின் விளைவாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தெலுங்கானா தனி மாநில சட்ட மசோதா பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 
 
தெலுங்கானா, விதர்பா பகுதிகள் பெரும்பாலும் வேளாண்மை தொழிலை நம்பி வாழும் மக்கள் அதிகம் வாழ்கின்ற பகுதிகளாகும். ஆனால் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களால் புறக்கணிக்கப்பட்டும், தவறான வளர்ச்சித் திட்டங்களாலும், சாதி மற்றும் கலாச்சார பாகுபாடுகளாலும் இம் மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் விவசாயிகள் இந்த பிராந்தியங்களில் தற்கொலை செய்துள்ளனர் என ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. 

 

இந்த பிராந்தியத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பகுதி வட கருநாடகம் ஆகும். கருநாடக மாநிலம் தொழில்நுட்பத் துறை, ஏற்றுமதி, கல்வி, சுகாதாரம் என அதிகளவு வளர்ச்சியடைந்து வருகின்ற போதும், அவை யாவும் வொக்கலிகர் என்ற வேளாண் சாதி அதிகம் வாழ்கின்ற தென் கருநாடக பகுதி மட்டுமே. ஆனால் மழை நீர் பொய்த்தும், வேளாண் தொழில் நசிந்தும்,  போதிய உள்கட்டுமானங்கள், தொழில் வாய்ப்புக்கள் இன்றியும் வட கருநாடகம் தொடர்ந்து வறுமை, வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. விதர்பா, தெலுங்கானா போன்று இங்கும் ஆயிரக் கணக்கான ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளனர் என்ற செய்தி பெரிதும் வெளியில் தெரியாமலேயே போய்விட்டது. 
 
இந்திய மாநிலங்கள் பிரிவினையும் போதே அம்பேத்கார் மராட்ட மாநிலத்தை நான்கு பகுதிகளாக பிரிக்குமாறு வலியுறுத்தினார். அவற்றில் விதர்பா மற்றும் மும்மை நகரத்தையும் தனி மாநிலங்களாக்கும் யோசனையை முன் வைத்திருந்தார். 
 
விதர்பா மாநிலம் என்பது இன்றைய மராட்ட மாநிலத்தின் கிழக்குப் பகுதி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். நாக்பூர் மாநகரம் இதன் தலைநகராக செயல்படுகின்றது. நாக்பூர் நல்ல வளர்ச்சி பெற்ற நகரமாக உருமாறி வருகின்ற போதும், ஏனைய ஊரகப் பகுதிகள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றன. பெரும்பான்மையாக தலித் மற்றும் பழங்குடி சமூகங்களை உள்ளடக்கிய விதர்பா தனி மாநிலக் கோரிக்கை 1938-யிலே முன் வைக்கப்பட்டதாகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் கொஞ்ச காலம் விதர்பா தனி மாநிலமாக இருந்த போதும், 1960-யில் மராத்திய மொழி பேசுவதன் அடிப்படையில் மராட்ட மாநிலத்தில் இணைக்கப்பட்டது. அன்றிருந்து இன்று வரை விதர்பா மாநிலம் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இந்த பகுதியின் மொத்த மக்கள் தொகை 1.8 கோடி ஆகும், மொத்த நிலப்பரப்பு 97411 ச.கி.மீ ஆகும். இது கேரளத்தை விடவும் இரு மடங்கு பெரியதாகும். 
 
 

indiamap1.jpg
பல்லின சமூகம் குழுமி வாழ்கின்ற மும்பை பகுதியை தனி மாநிலமாக்கும் யோசனை சிலரால் முன் வைக்கப்பட்டு இருந்தது. முதலில் டாக்டர் அம்பேத்கார் அதன் தனித் தன்மை மற்றும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மும்பை பகுதியை தனி மாநிலமாக்கும் முன் யோசனையை கூறி இருந்தார். கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் வாழும் மும்பை நகரம், இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார மையமாகவும் இருக்கின்றது. அது போக மும்பை மாநிலத்தின் மாநகராட்சி பெரிதும் மாநில அரசை நம்பி இருப்பதால், பல வளர்ச்சி திட்டங்களில் இடர்பாடாகவும் அமைகின்றது எனவும் கூறப்படுகின்றது. 
 
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக திகழ்வது உத்தர பிரதேசமாகும். கிட்டத்தட்ட 20 கோடி பேர் வசிக்கும் உத்தரபிரதேசம் பிரேசில் நாட்டின் மக்கள் தொகையை விடவும் அதிகமாகும் என்பது தான் உண்மை. இது இந்திய மாநிலங்களின் சராசரி மக்கள் தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கின்றது. ஒரு முதல்வரால் இவ்வளவு பெரிய மாநிலத்தை திறம்பட ஆள முடியுமா என்பதே கேள்விக் குறி? அதுவும் போக பல்வேறு மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலம் இந்தியாவின் துயரம் என்று அழைக்கும் அளவுக்கு சமூக பொருளாதாரத்தில் பின் தங்கியும் இருக்கின்றது. கட்டுபடுத்தப்படாத அளவுக்கு மக்கள் தொகை பெருக்கமும், வேலை வாய்ப்பின்மையும், சமூக சிக்கல்களைம் எதிர்நோக்கி இருக்கின்றது. 
 
உத்தர பிரதேச மாநிலம் உண்மையிலேயே வளர்ச்சியடைய வேண்டுமானால், அம் மாநிலத்தை மூன்று பகுதிகளாக பிரிப்பது மிக மிக அவசியமாகும். 1955-யில் மாநிலப் பிரிவினைக்கான குழு அமைக்கப்பட்ட போது பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை மூன்றாக பிரிப்பதே சமூக இனங்களுக்கு இடையிலான சமத்துவத்தையும், நிர்வாக வசதியையும் பெற இயலும் என அம்பேத்கார் அப்போதே தெரிவித்து இருந்தார். சில காலம் முன்பு கூட அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி மாநிலத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் மத்திய அரசின் அக்கறையின்மையும், ஆட்சி மாற்றமும் அந்த கோரிக்கையை கிடப்பில் போட்டது. ஜெய்ராம் ரமேஷ் கூட அண்மையில் மீண்டும் இக் கோரிக்கை எழுப்பியது இங்கு நினைவில் கொள்ளத் தக்கது. 
 
உத்தர பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்கள் மிகவும் வளர்ச்சியடைந்த பகுதிகளாக இருக்கின்றன. இதனை அரித் பிரதேசம் என்றழைக்கின்றனர். இப் பகுதியின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி நசிவடையாமல் இருக்க இப்பகுதிகளை பிரித்து தனி மாநிலமாக்க மத்திய அமைச்சர் அஜித் சிங் கோரிக்கை வைத்தார். இந்த மாநிலத்தின் அங்கமாக மிகவும் வளம் பொருந்திய மேல் கங்கை, மற்றும் தோப் யமுனா பகுதிகளையும் உள்ளடக்கி கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 
 
உத்தரபிரதேசத்தின் மற்றுமொரு பகுதி பந்தல்கண்ட் ஆகும். இப் பகுதியை தனி மாநிலமாக்க மாயாவதி உள்ளிட்ட பலரும் கோரிக்கை எழுப்பிய போதும், நிலப்பரப்பு மற்றும் தனித்து இயங்கவல்ல பொருளாதார சக்தி இல்லை எனக் கூறி அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மிகவும் பின் தங்கிய பந்தல்கண்ட் பகுதி தற்சமயம் உத்தரபிரதேசத்தின் தெற்கு பகுதியாகவும், மத்திய பிரதேசத்தின் வட பகுதியாகவும் பிரிந்து கிடக்கின்றன. நடிகரும், அரசியல்வாதியுமான ராஜா பண்டேலா இப் பகுதிகளை பிரித்து தனி பந்தல்கண்ட் மாநிலம் அமைக்க ஒரு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசத்தின் மற்றொரு பகுதியான பாகல்கண்டையும் இப் பகுதியோடு சேர்க்கும் போது தனித்த பொருளாதார பலமுடைய மாநிலமாக மாற்ற இயலும் எனவும் சிலர் கருதுகின்றனர். 
 
அதே போல போஜ்பூரி மொழி பேசும் கிழக்கு உத்தரபிரதேச பகுதியை போஜ்பூர் என்ற தனி மாநிலமாகவும், அவாதி மொழி பேசும் பகுதியை அயோத்தி மாநிலமாகவும் பிரிக்க கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 
 
பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர் பிரகலாத் பட்டேல் மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளை பிரித்து மகாகோசலை மாநிலம் உருவாக்கும் எண்ணத்தை முன் வைத்தார். திராவிட பழங்குடிகளும், தலிதக்ளும் அதிகம் வாழ்கின்ற மிகவும் பின் தங்கிய இப் பகுதிகள் தனி மாநிலமாக உருமாறினால் அதிகளவு வளர்ச்சி காணும் என சமூக ஆர்வலர்கள் சிலரும் கருதுகின்றனர். ஜபல்பூர், மாண்ட்ல, திந்தோரி, சியோனி, பாலகாட், சிந்த்வாரா, நரசிங்கபூர், கட்னி ஆகிய எட்டு மாவட்டங்களே மகாகோசல் பகுதியாக அறியப்படுகின்றது. கலாச்சார மற்றும் மொழி அடிப்படையில் இப்பகுதி ஏனைய மத்திய பிரதேசத்தில் இருந்து தனித்துக் காணப்படுகின்றது. வரலாற்றுக் காலங்களில் திராவிட மொழி பேசிய கோண்டு மகாராஜாக்களால் ஆளப்பட்டது. இன்றளவும் இப் பகுதிகளில் கணிசமான பெரும்பான்மையினராக கோண்டு மொழி பேசும் திராவிட பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அகில பாரதிய மிதிளா ராஜ்ய சங்கிராஷ் சமிதி என்ற இயக்கம் பிகாரின் வட பகுதியில் உள்ள மிதிளா மொழி பேசும் மாவட்டங்களை பிரித்து தனி மிதிளை மாநிலம் கோரி வருகின்றனர். இதிகாச கால சீதை பிறந்த தேசமாக மிதிளை அறியப்பட்டது. ஆனால் மாநிலப் பிரிவினையின் போது மிதிளா மொழியை இந்தியின் துணை மொழி எனக் கூறி பிகார் மாநிலத்தோடு தொடர்ந்து இருக்கச் செய்தனர். ஆனால் சாந்தாளி மொழி பேசிய ஜார்க்கண்ட் தனி மாநிலமாக பிரிந்த பின்னர். மிதிளா மொழி பேசும் மக்களும் தமது மாவட்டங்களை பிரித்து தனி மாநிலமாக்க கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். மிதிளா மொழி, கலாச்சாரம் ஆகியவற்றாய் பேணவும், இந்தியாவிலேயே மிகவும் வளமான ஆனால் வளர்ச்சி குன்றிய பகுதியாக இருக்கும் மிதிளா பிராந்தியம் இதனால் வளர்ச்சியடையவும் மிதிளா மாநிலக் கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. 
 
இந்தியாவின் பழங்குடி மக்கள் அதிகளவு வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஒரிசா மாநிலங்கள் தான் அதிகளவு மாவோயிச நக்சலாபாரி போராளிகளால் பாதிக்கப்பட்டும் இருக்கின்றது. பழங்குடி மக்களின் மொழி, கலாச்சாரம், தாயகம் மற்றும் அவர்களின் இயற்கை வளங்கள் மீதான உரிமைகளை தட்டிப் பறித்து பெருநிறுவன முதலாளிகளிடம் தாரை வார்த்து வரும் மத்திய அரசினாலும், வெளியார்களின் அதிகளவு ஊடுறுவல் மற்றும் பயங்கரவாத பிரச்சனைகளால் சிக்கி தவிக்கும் மத்திய இந்திய தண்டகாரண்ய பகுதிகளில் தொடர்ந்து தனி மாநிலக் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 
 
தமிழோடு ஒத்த கோண்டு மொழி அதிகளவு பேசப்பட்டு வருவதும், அதிகளவு இயற்கை கனிம வளங்கள் நிறைந்த பஸ்தார் பகுதியோடு, ஒரிசா, மராட்டா, ஆந்திராவின் கோண்டு மக்கள் மற்றும் பிற திராவிட பழங்குடிகளான குபி, குவி, போன்றோரின் பகுதிகளையும் இணைத்து கோண்டாவன மாநிலக் கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றது. ஆன போதும், மாவோயிச சிக்கல்களை காரணம் காட்டி இவர்களின் தனித்துவ தாயகப் பகுதிகளை மத்திய அரசு கூறு போட்டு வருகின்றது. கோண்டு மொழி இன்றளவும் கூட அங்கீகரிக்கப்படாமல் இருப்பதோடு, ஆரம்ப கல்வியை அவர்கள் அவர்களின் தாய் மொழியில் பெறும் சூழலும் இல்லாமல் இருக்கின்றன. அந்நிய மொழியான இந்தியில் பாடங்களை பயிற்றுவிப்பதாலும், இந்தி பேசும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருவதாலும் பெரும்பாலான கோண்டு மக்கள் கல்வி கற்பதிலும், அரசு உதவிகளை பெறுவதிலும் தயக்கம் காட்டுவதோடு புறக்கணித்தும் வருகின்றனர். 
 
ஆதிவாசி சம்க்ஷீம பரிஷத் என்ற இயக்கம் ஆதிவாசிகளின் நலன்களுக்காக தொடர்ந்து போராடி வருவதோடு, கேரளாவை விட மிகப் பெரிய நிலப்பரப்புடைய பஸ்தாரை பிரித்து கோண்டாவன மாநிலம் உருவாக்கி தரக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் திராவிட பழங்குடிகளின் மொழி, கலாச்சாரம் பேணப்படுவதோடு, சமூக - பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைய முடியும். இது நிச்சயம் நக்சல்பாரி இயக்கத்தின் செயல்பாட்டையும் குறைக்கவும் செய்யும். 
 
மேற்கு ஒரிசா பகுதியில் கோசல் என்ற மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். பண்டைய கலிங்க கலாச்சாரத்தின் வாரிசுகளாக வாழ்ந்து வரும் இவர்கள் தொடர்ந்து ஒரிசா அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதால் தமது பகுதியை பிரித்து தனி மாநிலமாக்கித் தருமாறும், தமது மொழியை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். 
 
இவ்வாறான கோரிக்கைகள் குஜராத் மாநிலத்திலும் எழுப்பப்படுகின்றது. பிரித்தானிய இந்தியாவில் மும்பை மாநிலத்தோடு இருந்து பிரிக்கப்பட்டு குஜராத்தில் இணைக்கப்பட்ட அகமதாபாத், பரோடா, சூரத் போன்ற பகுதிகள் பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் பாரியளவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் சௌராஷ்ட்ரா மொழி பேசும் பகுதிகளும், கச்சி மொழி பேசும் ராணா கச்சி பகுதிகளும் தொடர்ந்து குஜராத் அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பொருளாதாரம், கல்வி வளர்ச்சி பெறாமல் இருக்கின்றன. அது மட்டுமின்றி சௌராஷ்ட்ரா மொழியும் தொடர்ந்து அரசால் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. சௌராஷ்ட்ரா சங்காளன் சமிதி என்ற இயக்கம் தனி சௌராஷ்ட்ரா மாநிலக் கோரிக்கை முன் வைத்து போராடி வருகின்றது. 1956- வரையில் சௌராஷ்ட்ரா தனி மாநிலமாக விளங்கியது. பின்னர் பம்பாய் மாநிலத்தோடு இணைக்கப்ப்ட்டது. 1960-யில் குஜராத் மாநிலத்தோடு இணைக்கப்பட்டது.
 
இதே போல கச்ச் ராஜ்ய சங்கல்ப சமிதி என்ற இயக்கம் கச்ச மொழி பேசும் பகுதியை தனி மாநிலமாக பிரித்து தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது. இப் பகுதி கேரள மாநிலத்தை விடவும் நிலப்பரப்பில் ( 45,652 ச.கி.மீ ) மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இவை யாவும் இந்தியாவின் பெரிய நிலப்பரப்பையும், அதிகளவு மக்கள் தொகையையும் கொண்ட வகையில் தனி மாநிலங்கள் கோருகின்ற பகுதிகளாகும். ஆனால் மிகச் சிறிய நிலப்பரப்பையும், சிறிய மக்கள் தொகையையும் கொண்டுள்ள பல பகுதிகள் நாடு முழுவதும் தனி மாநிலக் கோரிக்கையை முன் வைத்து வருகின்றன. பொருளாதார அளவில் தனித்து இயங்கும் ஆற்றல் தில்லியை தவிர கோரிக்கை வைக்கும் சிறிய பகுதிகளுக்கு இல்லை என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது. 
 
அவற்றில் பெரும்பாலானவைகள் வட கிழக்கு இந்தியப் பகுதியைச் சார்ந்தவை ஆகும். பெரும்பாலான கோரிக்கைகளை அங்கு வசிக்கும் பழங்குடி மக்களே முன் வைக்கின்றனர். வடகிழக்கு இந்தியாவில் மேற்கு வங்கம், அசாம் தவிர்த்து ஏனைய மாநிலங்களான மணிப்பூர், சிக்கிம், அருணாச்சால பிரதேசம், மிசோராம், திரிபுரா, மேகலாயா ஆகியவை மிகச் சிறிய மாநிலங்கள் ஆகும். அதனால் அவற்றால் போதிய பொருளாதார வளர்ச்சியை எட்ட இயலாமல் தவிக்கின்றனர். பெரும்பாலான நிதி உதவிகளை மத்திய அரசிடம் இருந்து பெறுகின்ற இம் மாநிலத்தில் அதிகளவு தீவிரவாதங்களும் காணப்படுகின்றன. அத்தோடு வங்கதேசத்தில் இருந்து நிறைய சட்டவிரோத வாசிகளும் அங்கு குடிபுகுந்து வருவது பல்வேறு இனச் சிக்கல்களுக்கு வழி வகுத்துள்ளன.
 
இந்த வகையில் மேற்கு வங்கத்தின் வட பகுதியில் கூர்காலாந்து மாநிலம் கோருகின்றனர், கூர்க்கா இன மக்கள். அது போக காம்தாபூரிகள், கோச் ராஜ்பாங்கிஷிகள், போடோக்கள், கரிபிக்கள், திமாசாக்கள் போன்றோர் வட வங்கம், அசாமில் தனி மாநிலம் பல கோரி வருகின்றனர். மணிப்பூரின் குக்கிகள், மேகலாயாவின் காரோக்கள், அசாமின் தானிக்கள் என இருபதுக்கும் அதிகமன பழங்குடிகள் பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். 
 
இத்தகைய சிறிய மாநிலக் கோரிக்கைகள் கருநாடகத்தின் குடகு மாவட்டத்தில் வாழும் குடகு மக்களும் எழுப்புகின்றனர். அது போல துளுநாடு கோரிக்கையையும் மேற்கு கருநாடக மாவட்டங்களான உடுப்பி, மங்களூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கி துளு மொழி பேசும் மக்களும் முன் வைக்கின்றனர். காலனித்துவத்தின் எச்சங்களாக விளங்கும் புதுவை, டாமன் டையு, தத்ரா நாகர்காவேலி போன்ற யூனியன் பகுதிகளை அந்தந்த மொழி பேசும் மாநிலங்களோடு இணைத்து விடுவது, அந்த பிரதேச மக்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 
 
சிறியளவிலான மாநிலங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்ற போதும், மிகச் சிறிய அளவிலான மாநிலங்களும், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களும் தனித்த மாநிலமாக இயங்கும் ஆற்றலற்றவை என்பது தான் உண்மை. ஒரு தனி மாநிலமாக இயங்கவல்ல நிலப்பரப்பையோ, பொருளாதாரத்தோயோ, மக்கள் தொகையையோ கொண்டிருக்கவில்லை என்பதால் எந்தளவுக்கு இவர்களின் தனி மாநிலக் கோரிக்கைகள் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே ஆகும். 
 
லக்னோவில் உள்ளா கிரி வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் அஜித் குமார் சிங் என்பவர் தனித்து இயங்கவல்ல ஆற்றல்மிக்க சிறிய மாநிலங்கள் மிக அவசியம் எனக் கூறுகின்றனர். ஏற்கனவே சிறிய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, இமாச்சல் பிரதேசம், கேரளம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட, சத்தீஸ்கர் போன்றவை பாரிய வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார். அத்தோடு மட்டுமின்றி அதிகார பரவலாக்கலையும் அது ஊக்குவிக்கும். நிர்வாக வசதிக்கும், பொது மக்களின் நேரடிப் பங்களிப்புக்களுக்கும் சிறிய மாநிலங்கள் வழி வகுக்கும் என்பதிம் ஐயமில்லை. பல்வேறு மொழி, மதம், கலாச்சாரம் உடைய பன்முக இந்தியாவில் ஒவ்வொரு மொழி பேசுகின்ற மக்களின் தனித்துவங்களை பேணவும் சிறிய மாநிலங்கள் உதவியாக இருக்கும். 
 
ஆனால் அனைத்து மாநிலக் கோரிக்கைகளையும் ஏற்பது சாத்தியமற்ற ஒன்றாகும். பல மொழிகள், பல மதங்கள் குழுமி வாழும் பகுதிகளை தனி மாநிலமாக்குவது சிக்கலையே உண்டாக்கும். ஒரே மொழி பேசுகின்ற தொடர்ச்சியான நிலப்பரப்புடைய பகுதிகளை மாநிலங்களாக்கலாம். அதே சமயம் மண் வளம், நில அளவு, வேளாண் வளம், தட்ப வெட்பம், சமூக கலாச்சார கூறுகள், இயற்கை மற்றும் மனித வள அளவு, மக்கள் தொகை நெருக்கம், மாநிலத்தை ஒற்றுமைப் படுத்தவல்ல மக்களின் கலாச்சார தகைமை, பொருளாதார ஆற்றல், நிர்வாக வசதி போன்றவற்றையும் கவனத்தில் கொண்டே ஒரு தனி மாநிலம் உருவாக்கப் படல் வேண்டும். பொருளாதார ஆற்றலோ, சட்ட பாதுகாப்போ அற்ற சிறிய மாநிலங்கள் தோல்வியே காணும் என்பதையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 
 
1956-யில் வெறும் மொழி அடிப்படையிலான மாநிலங்களே அமைக்கப்பட்டன, ஆனால் மொழி, கலாச்சார அளவீட்டோடு மேற்கூறிய பொருளாதார வளங்களையும் ஆராய்ந்தே இனி புதிய மாநிலங்கள் உருவாக்கப் படுதல் காலத்தின் கட்டாயமாகும். தெலுங்கானா மாநிலத்தின் உதயம் இந்தியாவில் மேலும் பல புதிய மாநிலங்களை உருவாக்க வழி சமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

மாநிலங்களாவதை விட நாடுகளாக வருவதே இந்திய உப கண்டத்துக்கு நல்லது

 

  • கருத்துக்கள உறவுகள்

துளு பேசும் மக்கள் மொழிவாரியாக மாநிலங்கள் பிரியும்போது தங்களைத் தமிழகத்தோடு இணைக்கச் சொல்லிக் கேட்டதாகவும் கமராசர் அது எங்கிருந்தாலும் இந்தியாவில் தானே இருக்கப் போகின்றது என்று ஆர்வம் கட்டாவில்லை என்றும் படித்த ஞாபகம். அவர்களின் எழுத்துரு வடிவம் என்பது சென்ற நூற்றாட்டில் தான் உருவானது. உண்மையில் 20 லட்சம் மக்கள் தமிழ் எழுத்திருவினைப் பாவிக்கும் சந்தர்ப்பத்தினை மட்டுமல்லாமல், தமிழகத்தின் நிலப்பரப்பு என்னமும் அதிகமாக இருந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களையும் கவனக்குறைவால் தவறவிட்டுவிட்டார்கள். ஏன் ஐஸ்வர்யா ராய் கூட தமிழ் பேசக்கூடியவராக இருந்திருக்கும் சந்தர்ப்பத்தையும் தவறவிட்டாச்சு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.