Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் இந்த நந்தகோபன்?

Featured Replies

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான நந்தகோபன் அல்லது கபிலன் என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு  தற்போது இலங்கையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள கட்டமைப்பிலுள்ள   இரு பிரதித் தலைவர்களில் இவரும் ஒருவர் என  தெரிவிக்கப்படுகிறது.  நெடியவன் அல்லது பேரின்பநாயகம் சிவபரனின் கட்டுப்பாட்டிலுள்ள  புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பிலேயே இவர் பிரதித் தலைவராக இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜின் விரிவான கட்டுரை ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை "டெய்லிமிரர்' பத்திரிகை பிரசுரித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது  ;  நந்தகோபனின் உண்மையான பெயர் கபிலனாகும். அரவிந்தன் அல்லது இரும்பொறை என்ற மற்றொரு நபரும் நெடியவன் குழுவின் பிரதித் தலைவராக இருந்து வருகிறார்.  இரும்பொறை ஐரோப்பாவில் இயங்கிவருகிறார். தென் கிழக்காசியா பகுதியில் நந்தகோபன் செயற்பட்டு வந்துள்ளார்.  

 

தெஹ்ரான்

 

நந்தகோபன் போலிக் கடவுச்சீட்டில் பயணம் மேற்கொண்டிருந்தார். தெஹ்ரான் வழியாக லண்டன் செல்லும் விமானத்தில் மலேசியாவிலிருந்து புறப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை இலங்கை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருந்த போது அவரின் பயணம் இடம்பெற்றது. தென் கிழக்காசியாவிலுள்ள வட்டாரமொன்றின் தகவலின் பிரகாரம் புலிகளின் தலைவரின் நடமாட்டங்கள் குறித்து விழிப்பூட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர்கள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டுள்ளனர். தெஹ்ரான் விமானநிலையத்தில் பயணிகள் இடைத்தரிப்பு நிலையத்தில் வைத்து நந்தகோபன் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர அனுமதி மறுக்கப்பட்டது. போலி கடவுச்சீட்டின் மூலம் அவர் பயணம் செய்கின்றார் என்ற அடிப்படையில் அவர் மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோலாலம்பூருக்கு திரும்பி வருவதா அல்லது தெஹ்ரானில் காலவரையறையற்ற விதத்தில் தடுத்து வைத்திருப்பதா என்ற நிலையில் நந்தகோபன் மலேசியாவுக்கு திரும்பி வருவதையே விரும்பியிருந்தார். நெடியவனின் முக்கியமான பிரதித் தலைவர் கோலாலம்பூரை வந்தடைந்தவுடன் மலேசிய அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டார்.  அதேவேளை இலங்கை அதிகாரிகளும் மலேசியாவிற்கு சென்றிருந்தனர். நந்தகோபனின் விபரம் தொடர்பாக மலேசியாவிலுள்ள அதிகாரிகளுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்ததன் பிரகாரம் அவர்கள் அங்கு சென்றிருந்தனர். அதன் பின்னர் அவர் இலங்கை அதிகாரிகளினால் கையேற்கப்பட்டு மார்ச் 6 இல் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற தருணத்தில் ஷெல் வீச்சினால் நந்தகோபன் காயமடைந்திருந்தார். விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் சுப்பைய்யா பரமு தமிழ்ச்செல்வன் போன்று கைத்தடியின் உதவியுடனேயே நடமாடி வந்தார்.  

 

பரிவிரக்கம்

 

 இலங்கை அதிகாரிகள் நந்தகோபனை தந்திரோபாயமான பரிவிரக்க உணர்வுடன் நடத்துவதாக அறியவருகிறது. சௌகரியமான வாசஸ்தலத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  விசேட நிபுணர்கள் உட்பட மருத்துவர்கள் அவரை கவனித்துள்ளனர். ஐரோப்பாவிலுள்ள தனது மனைவியுடன் தொடர்பு கொள்வதற்கும் நிலைமையைத் தெரியப்படுத்துவதற்கும் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனது குடும்பத்துடன் இணைந்து கொள்ளச் சென்றபோதே அவர் ஈரானில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரின் மனைவியும் 4 பிள்ளைகளும் தற்போது ஜேர்மனியில் உள்ளனர்.  இலங்கை அதிகாரிகளுக்கும் நந்தகோபனுக்குமிடையிலான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சூழ்நிலைக்கு அதிகளவுக்கு இசைவான தன்மையை நந்தகோபன் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இலங்கை அதிகாரிகளுடன் அதிகளவுக்கு ஒத்துழைப்புடன் செயற்படும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் தேவைப்படும் தகவல்களை வெளியிடுவதற்கு ஒத்துழைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் தென்படுகின்றது.  இதேவேளை விடுதலைப்புலிகளின் வெளிநாடுகளிலுள்ள தற்போதைய நடவடிக்கைகள் பற்றிய  விபரங்களை அதிகளவுக்கு அறிந்துள்ளவராக  நந்தகோபன் இருக்கிறார் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள்  கருதுகின்றனர்.  நோர்வே அதிகாரிகளினால் அழுத்தங்கள் ஏற்பட்டதன் காரணமாக விடுதலைப் புலிகளின் தலைவர் சிவபரன் அல்லது நெடியவன் தாழ்ந்த மட்டத்தில் செயற்படும் நடவடிக்கைகளை உள்வாங்கும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள கிளைகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் அன்றாட நிர்வாகத்தைக் கவனிப்பதற்கான இலக்கு  நெடியவனின் நம்பிக்கைக்குரிய பிரதித் தலைவர்களான நந்தகோபனிடமும் இரும்பொறையிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  

 

இரும்பொறை

 

இரும்பொறை நியூஸிலாந்து கடவுச்சீட்டைக் கொண்டுள்ளார். அதன் மூலம்  ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது  அவர் ஜேர்மனியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை நந்தகோபன் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தில் அகதியாக பதிவு செய்துள்ளார். தாய்லாந்திலுள்ள யு.என்.எச்.சி. ஆர்.ரிலே அகதியாக பதிவு செய்திருக்கிறார். ஆயினும் அவர் போலிக் கடவுச்சீட்டுகளில் தாய்லாந்து ,  மலேசியா ,  இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு இரும்பொறை பொறுப்பாக இருக்கும் அதேவேளை ,  நந்தகோபன் பிரசார நடவடிக்கைகளில் கவனத்தை செலுத்தி வந்துள்ளார்.  ‘விடுதலைப் புலிகள் அனைத்துலக செயலகம்‘ என்ற பெயரில் அவர் புலிகளின் சார்பில் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளார். உலகளாவிய ரீதியில் புலிகளின் பிரசார நடவடிக்கைகளுக்கு அவர் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வந்துள்ளார். தொலைக்காட்சி கட்டமைப்புகள் ,  வானொலி நிலையங்கள் ,  பத்திரிகைகள் ,  சஞ்சிகைகள் ,  இணையத்தளங்கள்  போன்ற  புலிகளின் பல்வேறு ஊடகப் பிரிவுகளை  அவர் இயக்கி வந்துள்ளார். அதற்கப்பால் தமிழ்நாடு மற்றும் இலங்கையிலுள்ள பலதரப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்துறையினருடன் நந்தகோபன் தொடர்பாடல்களை கொண்டுள்ளார். இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள  தற்போதைய புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான சிறப்பான தகவல்களை  நந்தகோபனால் வழங்கக்கூடியதாக இருக்குமென்ற நம்பிக்கையை இலங்கை அதிகாரிகள் கொண்டுள்ளனர்.  “புலம்பெயர்ந்த புலிகள் பற்றிய தகவல்களை அவர் வழங்குவார். அந்த விடயம் பிந்திய விபரமாக உண்மையில் அமையும். அத்துடன் பெறுமதியானவையாகவும் அவை விளங்கும். ஏனெனில் அவர் கைது செய்யப்படும் வரை புலிகளின் வெளிநாடுகளிலுள்ள கட்டமைப்புகளுடன் அவர் கிரமமான தொடர்புகளை கொண்டிருந்தார் என்று அதிகாரபூர்வ வட்டாரமொன்று டெய்லி மிரருக்கு கூறியுள்ளது.  

 

வர்த்தமானி

 

இதேவேளை 2014 மார்ச் 21 இல் வர்த்தமானியொன்று பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வர்த்தமானியில் 16 அமைப்புகள் மற்றும் 422 தனிப்பட்டவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதனைத் தயாரிப்பதற்கு நந்தகோபனிடமிருந்து பெறப்பட்ட விபரங்கள் எதுவும் பயன்படுத்தப்பட்டிருக்க வில்லையென அந்த வட்டாரம் விபரித்துள்ளது.   இந்த வருடம் பெப்ரவரி 25 இல் வர்த்தமானியிலுள்ள விபரங்கள் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாக அந்த வட்டாரம் விபரித்திருக்கிறது. வர்த்தமானி மார்ச்சில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் மார்ச் 6 இலேயே நந்தகோபன் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் வர்த்தமானியின் இறுதி வடிவம் பெப்ரவரியிலேயே பூர்த்தியடைந்திருந்ததாக அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.  தற்போது அவர் மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். படிமுறையான விசாரணைகள் அதன் பின் ஆரம்பிக்கப்படும்.  புதிய மற்றும் பெறுமதியான அதிகளவு தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதிகளவான  பெயர்களுடன்  புதியவர்த்தமானி அறிவித்தல் கூட நந்தகோபனிடமிருந்து பெறப்படும். புதிய தகவல்களின் அடிப்படையில் விடுக்கப்படக் கூடும் என்று அந்த வட்டாரம் அழுத்தி உரைத்துள்ளது. சுப்பிரமணியம் கபிலன் அல்லது நந்தகோபன் யாழ்ப்பாணம் ஏழாலையைச்  சேர்ந்தவரான கிராமத் தலைவரான சுப்பிரமணியத்தின் மகனாவார்.   மணியம் விதானையார் என தகப்பனார் நன்கு அறியப்பட்டவர். நந்தகோபன் 1969 நவம்பர் 4 இல் பிறந்தவர். மிகவும் மதிப்பு பெற்ற வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் 1989 இல் புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார். இலங்கையின் வட ,  கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் இவர் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.  புலிகளின் 4 ஆவது ஆட்சேர்ப்பு பிரிவிலிருந்தும் இவர் பயிற்சி பெற்று வெளியேறியிருந்தார்.  முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மணலாறு /  வெலிஓயாவிலிருந்த இரகசிய இடத்தில்  இவர் பயிற்சி பெற்றிருந்தார்.

 

காஸ்ட்ரோ

 

1990 மார்ச்சில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் வட பகுதியை  புலிகள்  எடுத்திருந்தனர்.  நந்தகோபன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார்.  வீரகத்தி மணிவண்ணன் அல்லது காஸ்ட்ரோ என்பவர் அச்சமயம்  யாழ்ப்பாணத்திற்கு அப்பால் உள்ள தீவுப் பகுதிக்கு பொறுப்பாளராக இருந்தார். அவரின் பிரதித் தலைவராகவும் மெய்ப்பாதுகாவலராகவும் நந்தகோபன் பணியாற்றினார்.   ஆயினும் 1990 நடுப்பகுதியில்  வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை மூலம் தீவுப் பகுதி இராணுவத்தின் வசம் வந்திருந்தது. அதன் பின்னர் யாழ். குடாநாட்டில் நந்தகோபன் பணிக்கமர்த்தப்பட்டிருந்தார். காஸ்ட்ரோவின் குழுவில் அங்கமாக அவர் செயற்பட்டார். காஸ்ட்ரோ வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவர் ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவன். 1991 இல்  ஆனையிறவு இராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதலை ஆரம்பித்த போது  காஸ்ட்ரோ காயமடைந்திருந்தார். தோல்வியில் முடிந்த இந்தத் தாக்குதலில் 700 க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தனர். காஸ்ட்ரோவும் கடுமையாகக் காயமடைந்திருந்தார். கழுத்துக்கு கீழ்ப் பகுதியில் இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் சக்கர நாற்காலியில் முடங்கியிருந்தார். புலிகளின் வெளிநாடுகளிலுள்ள கிளைகளுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளுக்கு வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் பணியும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அச்சமயம் செல்வராஜா பத்மநாதன் அல்லது கேபி ஆயுதக் கொள்வனவு ,  சர்வதேச நிதி சேகரிப்பு ,  வெளிநாடுகளிலுள்ள புலிகளின் கிளை நிர்வாகம் ஆகிய மூன்று முக்கியமான விடயங்களுக்கு முழுப் பொறுப்பாளியாக  இருந்தார்.  கேபிக்கும் காஸ்ட்ரோவுக்கும் இடையில் அதிகளவு முரண்பாடு இருந்து வந்தது. புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புகள் தொடர்பான தத்தமது அதிகாரங்கள் குறித்து அவர்களிடையே முறிவு இருந்து வந்தது.

 

நந்தவனம்

 

பின்னர்  விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் நிர்வாகத்தைக் கையாள்வதற்கு தனியான திணைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இந்த அலுவலகத்தின் கடமைகள் வெளிநாடுகளிலுள்ள கிளைகளுடனும் புலம்பெயர்ந்தோர் மத்தியிலுள்ள முக்கியமானவர்களுடனும் தொடர்புகளை பேணுதலும் ஒருங்கிணைந்தது செயற்படுவதுமாக இருந்தது.   வடக்கிற்கு வருகை தரும் புலம்பெயர்ந்த தனிப்பட்டவர்கள் மற்றும்  குடும்பத்தவர்களுக்காக விசாவுடன் தொடர்புபட்ட பாஸ் முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த நடைமுறை இருந்துவந்தது. வெளிநாட்டு விடயங்களுக்காக  "நந்தவனம்' என்ற தனியான அலுவலகம் அமைக்கப்பட்டது. வெளிநாட்டுக் கிளைகள் ,  புலம்பெயர்ந்த உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த அலுவலகம் கையாண்டது.  காஸ்ட்ரோவுக்கு நேரடியாக உத்தியோகபூர்வமான அன்றாட அறிக்கை சமர்ப்பிக்கும் பணியில் நந்தகோபன் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். 2002 இல்  கேபி பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் காஸ்ட்ரோவின் ஆட்கள் மேலெழுந்தனர்.  கேபியின் கட்டமைப்பை காஸ்ட்ரோ கலைத்துவிட்டார். தனக்கு விசுவாசமானவர்களை நியமித்தார். 2002 இல் ஏற்பட்டிருந்த யுத்த நிறுத்தம் அதிக எண்ணிக்கையான புலம்பெயர்ந்த தமிழர்களை வடக்கிற்கு வருகை தர வைத்தது. இதன் பெறுபேறாக காஸ்ட்ரோவின் திணைக்களம் தனது தனியான புலனாய்வு பிரிவை வெளிநாடுகளில்  விரிவுபடுத்தியது. நந்தகோபன் அதற்குப் பொறுப்பாக இருந்தார். நந்தவனம் அலுவலகத்தில் வைத்து பல வெளிநாட்டுத் தமிழர்கள் நந்தகோபனால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தம் முடிவடைந்து 2005 இல் யுத்தம் தீவிரமடைந்த பின்னரும் வெளிநாட்டு நிர்வாகப் பிரிவானது காஸ்ட்ரோவின் கீழ் செயற்பட்டிருந்த நிலையில் நந்தகோபன் அவரின் கீழ் தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் வன்னியில் ஷெல் தாக்குதலில் அவர் காயமடைந்திருந்தார்.  இரகசியமாக இந்தியாவிற்கு மன்னார் கரை வழியாக  கொண்டு செல்லப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர்  அவர் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். அங்கு யு.என்.எச்.சீ.ஆரில் அகதியாக பதிவு செய்திருந்தார். அத்துடன் தனது மனைவியையும் 4 பிள்ளைகளையும் ஐரோப்பாவுக்கு இடமாற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். காயங்கள் குணமடைந்த பின்னர் கைத்தடியின் உதவியுடன் நடக்கக்கூடிய நிலை ஏற்பட்டதையடுத்து  நந்தகோபன் போலி கடவுச்சீட்டுகளைப் பெற்று தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் பயணம் மேற்கொண்டிருந்தார். அதேவேளை புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் ,  முன்னணி அமைப்புகளின் கட்டுப்பாட்டை நெடியவன் பெற்றுக் கொண்டிருந்தார்.   நோர்வே அமைப்புகளின் கட்டுப்பாட்டினால் நெடியவனின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நிர்வாக ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு இரும்பொறை மற்றும் நந்தகோபனிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் நந்தகோபன் நெடியவனிலும் பார்க்க  புலிகள் இயக்கத்தில் சிரேஷ்ட உறுப்பினராவார். ஆனால் புலிகளின்  வெளிநாட்டுக் கிளைகளில்  அவர் நெடியவனுக்கு பிரதித் தலைவராக பணியாற்றியிருந்தார்.  

 

பிரசாரம்  

 

நியூஸிலாந்து பிரஜையான இரும்பொறை ஐரோப்பாவிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த வேளையில்  நந்தகோபன் தென்கிழக்காசியாவிலிருந்து இயங்கி வந்துள்ளார். அவர் அதிகளவுக்கு பிரசார செயற்பாடுகளில் கவனம் செலுத்தியிருந்தார். ஊடக அமைப்புகளுடனும் ஊடகவியலாளர்களுடனும் அவர் அதிகளவுக்கு தொடர்பாடல்களை கொண்டிருந்தார். அதேவேளை இலங்கையிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் ,  ஊடக துறையினருடன் தொடர்பை கொண்டிருந்தார்.  தனது குடும்பத்தினருடன் மீள இணைந்து கொள்வதற்காக திட்டமிட்டிருந்த அவர்,  மலேசியாவிலிருந்து ஈரான் வழியாக ஐரோப்பாவிற்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டிருந்த போதே பிடிபட்டிருந்தார். அதன் பின்னர் அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.  முன்னர் குறிப்பிட்டிருந்தது போல் அவர் தகவல் சுரங்கமாக கருதப்படுகின்றார். புலிகளின் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் ,  தற்போதைய கட்டமைப்புகள் பற்றிய தகவல்களின் சுரங்கமாக அவர் கருதப்படுகின்றார். நந்தகோபன் தொடர்பாக "அங்குலிமாலா' அணுகுமுறையை இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே உள்ளீர்த்துக் கொண்டுள்ளதாக  தெரிகின்றது. இந்த அணுகுமுறை பௌத்தர்களுக்கு நன்கு அறியப்பட்டதொன்றாகும். அங்குலிமாலா என்பவர் இரக்கமற்ற கொலைகாரனாவார்.   அவர் இதயசுத்தியுடன் மாற்றமடைந்தவர். பௌத்த போதனைகளின் சக்தியின் பெறுபேறாக அங்குலிமாலா மாற்றமடைந்ததாக கருதப்படுகின்றது.  ஆன்மீக முன்னேற்றமானது ஒருவரின் பின்னணியைக் கொண்டதல்ல என்ற போதனையாக அது காணப்படுகிறது.   கதையின் பிரகாரம் “ கைதிகள் சிலர் தடி மூலமோ அல்லது சாட்டை மூலமோ வழங்கப்படும் தண்டனையினால்  திருத்தப்படுகின்றார்கள். ஆனால் நான் எந்தத் தடியோ ஆயுதமோ இல்லாமல்  திருந்தினேன்.  புத்த பிரானின் பரிவிரக்கம் கொண்ட அன்பான வார்த்தைகளினால் மூர்க்கத் தன்மை குறைக்கப்பட்டு வசப்படுத்தப்பட்டேன்“ என்று  அங்குலிமாலா கூறுகிறார்.  

 

அங்குலிமாலா  

 

இலங்கை அதிகாரிகளின் பிரகாரம் ,  கைது செய்யப்பட்டுள்ள  புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் தொடர்பாக அங்குலிமாலா அணுகுமுறை ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. அவர்களில்  பிரதானமானவர் செல்வராஜா பத்மநாதன் அல்லது கேபி ஆவார். அவர்  புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவின் பின்னர் குறிப்பிட்ட சில காலத்திற்கு புலிகளின் தலைவராக  இருந்தவர். அவரை தண்டிப்பதற்குப் பதிலாக இலங்கை அதிகாரிகள் அவர்  சமூக சேவை ஆற்ற இடமளித்திருந்தனர்.  இப்போது கேபி 3 ஆதரவற்றோர் நிலையங்களை நடத்திவருகின்றார். அவற்றில் 250 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ளனர். முத்தையன்கட்டு ,  முள்ளியவளை ,  கிளிநொச்சி ஆகிய இடங்களில் அன்பு இல்லம் ,  பாரதி இல்லம் ,  செஞ்சோலை என்ற பெயர்களில் சிறுவர் இல்லங்கள் இயங்குகின்றன.   மற்றொரு சிறிய உதாரணம் சுப்பிரமணியம் சிவகுமார் அல்லது மலேசியா ராஜன் ஆவார். அவர் மலேசியாவில் புலிகள் அமைப்புக்கு பொறுப்பாக இருந்தவர். இதற்கு முன்னர் அவர் கொழும்பில் புலிகளின்  புலனாய்வு செயற்பாட்டாளராக இயங்கி வந்தவர்.  கண்ணன் ,  சாந்தலிங்கம் என்ற பெயர்களில் அவர் செயற்பட்டவர். அத்துடன் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவிலும் மலேசியா ராஜன் சம்பந்தப்பட்டவர். மலேசியாவில் வைத்து அவர் 2010 இல் கைது செய்யப்பட்டார்.  அவர் தற்போது ஒப்பீட்டளவில் சுதந்திர மனிதராக கொழும்பின் புறநகர் பகுதியில் அமைதியான வாழ்வை முன்னெடுத்து வருகிறார். இதேவேளை  கேபியையும் மலேசியா ராஜனையும் இப்போது நந்தகோபனையும் பிடிப்பதற்கு முக்கியமான பங்களிப்பை மலேசிய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். அதேவேளை கேபி மற்றும் ராஜனைப் போன்றே நந்தகோபன் தொடர்பாகவும் அங்குலிமாலா அணுகுமுறையை உள்வாங்கியிருப்பது சுவாரஸ்யமாக காணப்படுகிறது.  இவர்கள் மூவரும் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் அரங்கேற்றப்பட்ட நபர்களாகவுள்ளனர். வெஞ்சினம் தீர்ப்பதிலும் பார்க்க இந்த மாதிரியான ஆக்க நலம் தருகின்ற விடயத்தை உள்ளீர்த்துக் கொள்ளுதல் அதாவது  அக உறுத்தல் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தொடர்பான அணுகுமுறையானது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய  ராஜபக்ஷவின் புதிய கருத்தென்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தக் கொள்கைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கீகாரமளித்திருப்பதாகவும் கூறியுள்ளன.  நந்தகோபன் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள பெறுமதியான தகவல்களைப் பற்றி தெரிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமாதிரி வெளிப்படுத்தப்படும் விடயங்களின் பெறுபேறுகள் எதிர்காலத்தில் உணரப்படும் சாத்தியம் காணப்படுகிறது.

 

 http://www.thinakkural.lk/article.php?article/htdtdpz9tg94865cce25ff8c19292xfkdt3ce169488fe6c6f1ad3c97pevoe#sthash.4Ozeu5O5.dpuf

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அதிகாரிகளின் பிரகாரம் ,  கைது செய்யப்பட்டுள்ள  புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் தொடர்பாக அங்குலிமாலா அணுகுமுறை ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. அவர்களில்  பிரதானமானவர் செல்வராஜா பத்மநாதன் அல்லது கேபி ஆவார்.

 

 

 

இவரிடம் இருந்த பணம் கோத்தபாயாவின் வங்கி இலக்கத்துக்கு மாறியதால் கே.பிக்கு தண்டனை கிடைக்கவில்லை. சுதந்திரமாக திரிய அனுமதிக்கப்பட்டார். 
 
அங்குலிமாலா முறை ஏன் பாலகுமார், யோகி போன்றோருக்கு பயன்படுத்தப்படவில்லை?? ஏனெனில் அவர்களிடம் பணம் இல்லை.
  • தொடங்கியவர்
நந்த கோபனைப் பற்றி என் நண்பர் ஒருவர் கூறியதை அப்படியே தருகிறேன். (உண்மையாக இருக்கலாம்).
 
நந்தகோபன் கைது செய்யப்பட்டது ஒரு நாடகம் என்றே நான் நினைக்கிறேன்.அவர் முள்ளிவாயக்காலில் இருந்து தப்பி வந்தபின்னர் சிறீலங்கா அரசாங்கத்துக்கே வேலை செய்திருந்தார்.2011ம் ஆண்டு சிங்களத் தரப்பு ஒன்றால் சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த காணொளி ஒன்றில் அதுவும் கேத்தபாய வன்னிக்கு சென்ற போது சிறீலங்கா அரச தொலைக்காட்சி நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்ட காணொளியில் நந்தகோபன் ஊன்றுகோலுடன் அங்கே ஒரு இடத்தில் நிற்கும் காட்சியை நான் பார்த்தேன்.இது தொடர்பாக அப்போதே(2011மே) இங்குள்ள அமைப்பு முக்கியத்தர்களர் பலருக்கு இதுபற்றி தெரிவித்தும் இருந்தேன்.
புலம் பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் அங்கேயிருந்து தப்பிவந்த ஏராளமான போராளிகளுக்கு துரோகிபட்டம் வழங்கியதில் வழங்கவைத்தில் நந்த கோபனின் பங்கு முக்கியமானது.
விடுதலைப்புலிகள் புலத்தில் மீண்டும் ஒருங்கிணைந்துவிடக் கூடாது என்கின்ற திட்டத்தை நந்தகோபனை வைத்து சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது.அவர் அனைத்தலக தொடர்பகத்தை சேர்ந்த பலரை தனது வலையில் விழுத்தி காரியத்தை சாதித்துக்கொண்டார் என்று தான் நான் நினைக்கிறேன்.அவர் கடந்த 3 வருடத்தில் 4 தடவைகள் இரகசியமாக கொழும்புக்கு சென்று வந்ததாக எனக்க மிகவும் நம்பிக்கையான சிலர் (கொழும்பில் அரசாங்கமட்ட தகவல்களை கறக்கக் கூடிய ஒரு ஊடவியலாளர் உட்பட) நந்த கோபன் இரும்பொறையின் பேச்சு தொடர்பான காணொளி வெளிவந்த காலகட்டத்தில் தெரிவித்திருந்தனர்;
புலம்பெயர்ந்த தமிழ் செயற்பாட்டாளர்களையும் தாயக விடுதலைக்கு ஆதரவான மக்களையும் அச்சுறுத்துவதற்காக நந்த கோபன் கைது என்ற நாடகத்தை சிறீலங்கா அரசு நடத்தியிருக்கவேண்டும் அல்லது அவர் சிறீலங்கா அரச தொடர்பை துண்டித்துவிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து சொந்த வாழக்கை வாழ முற்பட்டதனால் ஆத்திரமடைந்த சிறீலங்கா அரச தரப்பு தந்திரமாக அவரை கைது செய்திருக்கவேண்டும்.

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

Athavan CH உங்கள் நண்பருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவரை சாத்திரக்காரனாகச் சொல்லுங்கள். வெளங்கிடுவியள். இன்னும் எத்தினை பேரைத்தான் துரோகியாக்கி தியாகிகள் ஆகப்போறீர்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.