Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் : ஜம்போ, கென்யா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயணம் : ஜம்போ, கென்யா
கமலா ராமசாமி

ஜம்போ, போலே, போலேபோலே போன்ற ஆப்பிரிக்கப் பழங்குடிகள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வார்த்தைகள் சுற்றுலா முடிந்து வந்து வாரங்கள் ஆன பிறகும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.

என் இரண்டாவது மகள் தைலா விடமிருந்து ஈமெயில் ஒன்று வந்தது.

“அம்மா, பிறந்த நாள் பரிசாக ராமும் நானும் உன்னை கென்யா அனிமல் சஃபாரிக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். தம்பி கண்ணனிடம் தெரியப்படுத்து. தடையில்லாமல் லகுவாக, மகிழ்ச்சியாக பிரயாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏஜென்சி மூலம் செய்யவேண்டும். சிறிது காலம் பிடிக்கும். உனக்கான டிக்கட்டை இந்தியாவில் போடுவதுதான் வசதி என்பதால் தேதி உறுதிப்பட்டதும் கண்ணனிடம் பேசுவேன்” என்று.

அன்று என் பிறந்தநாள்.

அருமையான பிறந்த நாள் பரிசு. நான் அமெரிக்காவில் தங்கி இருந்த காலங்களில் டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானட் போன்ற அலைவரிசைகளை விரும்பிப் பார்ப்பேன். அதிலிருந்து கிடைத்த எண்ணமாக இருக்கலாம்.

நானும் சுராவும் முதல் முதலாக அமெரிக்கா சென்றபோதுதான் தைலா, அப்பாவின் அறுபதாவது வயது பிறந்த நாளை சர்ப்ரைஸாகக் கொண்டாடினாள்.

இங்கு நாங்கள், குழந்தைகள் பிறந்த நாளுக்குக்கூட, கேக் வெட்டிக் கொண் டாடும் பழக்கம் அப்போது கிடையாது. கோவிலுக்குச் சென்று அவர்கள் நட்சத்திரத்துக்கு அர்ச்சனைக்குக் கொடுப்பது, வீட்டில் பாயசம், வடை செய்து சாப்பிடுவது என்பதுதான் பழக்கத்தில் இருந்தது. சுராவின் பிறந்த நாளன்று அரிகர மாமா பூஜை செய்யும் நதிக் கிருஷ்ணன் கோவிலுக்கு அர்ச்சனைக்கும் பாயாசத்துக்கும் கொடுத்தனுப்புவேன். வீட்டிலிருந்தே அரிசி, பருப்பு, வெல்லம், நெய் எல்லாம் எடுத்துப் போவார். டம்ளர் சகிதம் வரும் கிராமத்துக் குழந்தைகளுக்குப் பாயசம் கொடுத்துவிட்டு பிரசாதமாக வீட்டிற்கும் சிறிது கொண்டு வருவார். குழந்தைகள் மகிழ்ச்சிகரமாகக் கோவிலிலும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கும் எடுத்துப் போகிறார்கள் என்று அரிகரமாமா சொல்லும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். சுரா ஊரிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் காரியம் நடக்கும். சுராவுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதில் கொஞ்சமும் சிரத்தை கிடையாது. இன்று உங்களுக்குப் பிறந்த நாள் என்றால் ‘அப்படியா’ என்று கேட்டுக்கொள்வார்.

ஒரு தடவை தைலா போனில் அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டு, பிறந்த நாளுக்கென்று பிரத்தேகமாக என்ன செய்தீர்கள் அப்பா? என்று கேட்டாள். புது பிளேடு எடுத்து சவரம் செய்துகொண்டேன் என்றார். (தாடி, மீசையை ஸ்திரமாக வைத்துக்கொள்ள ஆரம்பிக்காத காலம் அது.) தைலா அதை இன்றும் சொல்லிச் சிரிப்பாள். அமெரிக்காவிலிருந்தால், என் இளைய மகள் தங்குவும் தைலாவும் யார் வீட்டில் இருக்கிறோமோ அங்கு எங்கள் இருவர் பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ்வார்கள்.

ராமும் தங்குவும் குழந்தைகள் மனு, நீனியுடன் (நீரத்) சுற்றுலாவில் கலந்துகொள்கிறார்கள் என்கிற செய்தியும், கிடைத்தது தங்குதான் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளை ஏஜென்ஸி மூலம் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் தெரிந்தது. சஃபாரியுடன் இரண்டு மகள்களின் குடும்பத்துடன் பத்து நாட்கள் கழிக்கப் போகிறேன் என்பதும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்லக் கூடியவர்கள் மஞ்சள் காய்ச்சலுக்கான (சீமீறீறீஷீஷ் யீமீஸ்மீக்ஷீ) தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். அதுவும் கொச்சியிலோ, சென்னையிலோ அரசாங்க ஆஸ்பத்திரியில்தான் போட்டுக்கொள்ள வேண்டும். என் பேரன் நந்து அந்தச் சமயந்தான் கோயம்புத்தூரிலிருந்து மாற்றலாகி சென்னை வந்திருந்தான். அவன் மனைவி தேனுகாவுக்கு படூர் ஹிண்டுஸ்தான் பல்கலைக்கழகத்தில் வேலை. கேளம்பாக்கத்துக்குக் குடி வந்தார்கள். அய்யனார்தான் வீடு அமர்த்திக் கொடுத்தார். அய்யனாரும் முத்துப் பிள்ளையும் மிகவும் அனுசரணையாக அவர்களுக்கு உதவி செய்தார்கள். நந்துவின் குழந்தை அபராஜிதாவுடன் (அம்புலி) சில நாட்கள் இருக்கலாம் என்கிற எண்ணத்தில் கொச்சிக்குப் பதில் சென்னை செல்வதென்று முடிவு எடுத்தேன். அந்தத் தடுப்பூசிக்கு தட்டுப்பாடிருந்தது; அய்யனாரின் முழு முயற்சியில்தான் கிடைத்தது. நந்துவுடன் சென்று கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஊசி போட்டுக்கொண்டேன். அம்புலியுடன் இரண்டு வாரங்களை அருமையாகக் கழித்து விட்டு ஊருக்கு வந்தேன்.

kenya-02.jpg

தடுப்பூசி ரசீதுடன் விசாவுக்கு அப்ளை செய்த பின்தான் நைரோபி செல்வதற்கான விசா கிடைத்தது. தைலா, தங்கு எல்லோரும் வெவ்வேறு நேரங்களில் நைரோபி வந்தார்கள். நான் திருவனந்தபுரத்திலிருந்து தோஹா போய், அங்கிருந்து விமானம் மாறி கென்யா தலைநகர் நைரோபி சென்றேன். ராம், தைலா முன்னாலேயே வந்துவிட்டதால், விமான நிலையத்துக்கே வந்து, நைரோபியில் எக்கா என்கிற ஓட்டலுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். தங்கு குடும்பத்துடன் நான் போன அன்று இரவுதான் வந்தாள்.

விமான நிலையத்துக்குப் போகும்போதும் சரி, வரும்போதும் சரி நால்வழிச் சாலையில் நிதானமாக வண்டிகளை முந்திச் செல்லும் பரபரப்பின்றி அவரவர் வேலைகளைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் கூட ஹாரன் ஒலிக்கும் சப்தம் கேட்கவில்லை. சிவப்பு விளக்கு நிறுத்தங்களில் கார்கள் நிற்கும்போது சிறு வியாபாரிகள் சுற்றிச்சுற்றி வந்து கூவி அவர்கள் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறார்கள்; யாருடைய முகத்திலும் பரபரப்பு, எரிச்சல் இல்லை. சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் நாரை, கூழைக்கடா, கழுகு போன்ற பறவைகள் எவ்விதப் பயமுமின்றி கூடு கட்டி வாழ்கின்றன.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் அறுபதுக்கு மேல் தேசங்கள் இருந்தாலும், நெல்சன் மண்டேலாவால் தென்

ஆப்பிரிக்கா முன்னேறி இருப்பதுபோல் கென்யாவும் பாதுகாப்பான தேசமாகப் பெயர் எடுத்திருக்கிறது. அதிபர் கென்யாட் பற்றி குடிமக்களுக்கு நல்ல அபிப்பிராயம் என்று சொல்கிறார்கள். தான்சானியாவின் எல்லையிலிருப்பதால், விரிந்த நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான மிருகங்கள் மேய்வதற்கான பச்சைப் புல்வெளி விசாலமாகக் கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்துவைத்திருக்கிறார்கள்.

மறுநாள் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் காலை உணவு உண்டுகொண்டிருக்கும்பொழுது எங்களை வேனில் அழைத்துச் செல்லும் வழிகாட்டி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆப்பிரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். லெடாமா என்று பெயர்; ஸம்புரு என்ற கிராமத்தில் பிறந்தவர். பதின் பருவத்தில் நண்பர்களுடன் ஸம்புரு காட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து கூர்மையான கத்தியால் ஆண் சிங்கத்தைக் கொன்றிருக்கிறார். சிறு உருவமாக, சாதுவான தோற்றத்துடன் இருந்தார். வேனில் பேசிக்கொண்டு போகும்போதுதான் தெரிந்தது நிறைய சரக்குள்ளவர் என்பது. அப்பா ஆடு, மாடு மேய்ப்பவர். மிகவும் ஏழைக் குடும்பம். ஆடு மாடுகள்தான் அவர்களின் சொத்து. வறண்ட பிரதேசம் என்பதால் புல்வெளி தேடி இடம் மாறிக்கொண்டே இருப்பவர்கள். அதற்குத் தோதாக குடிசைகளைக் கழற்றி மடித்துக் கொண்டு போகும்படிதான் கட்டிக்கொள்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கட்டுப்பாடே அந்த இன மக்களுக்கு கிடையாது போலிருக்கிறது. மூன்று மனைவிகள் ஐந்து மனைவிகள் என்பதெல்லாம் சர்வ சாதாரணம். லெடாமாவின் பாட்டிக்குப் பத்தொன்பது பேரன் பேத்திகள்.

லெடாமா பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு டூரிஸம் படித்திருக்கிறார். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குப் போய் வந்த அனுபவம் இருக்கிறது. அவர் இனத்தில், படித்த பெண்கள் இல்லாததால் புரட்சிகரமாக எத்தோப்பியப் பெண்ணை மணந்து கொண்டிருக்கிறார். மிருகங்கள் பற்றியும் பறவைகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார். எந்தக் கேள்விக்கும் தெளிவாக உறுதியான பதிலைச் சொல்ல முடிகிறது. எதிர்பார்க் காமல் வரும் அவருடைய பதில்கள் எங்களை ஆச்சரியம் கொள்ள வைத்தது. கரடு முரடான அந்தக் காட்டுப் பாதையில், எங்களுக்குப் பயம் ஏற்படாதவாறு அவர் வேன் ஓட்டிச் செல்லும் லாவகம், ஆற்றின் குறுக்கே ஆழத்தில் வேகமாக ஓடும் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு எதிர்பக்கம் ஓட்டிச் செல்வது, பத்தடி ஆழமுள்ள கிடுகிடு சரிவில் வேனை இறக்கி, மறுபுறம் ஏற்றுவது போன்ற சாகஸங்களை அநாயாசமாகச் செய்தார்.

kenya-03.jpg

நக்குரு ஏரிக்கு செல்லும் பாதையில் ஆப்பிரிக்காவின் பிரசித்த பெற்ற ரிஃப்ட் பள்ளத்தாக்கு ஆரம்பிக்கிறது. வறண்ட பிரதேசம். பிரமாண்டம். நம் மூதாதையர்கள் உருவான இடம். உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் மனித இனம் தோன்றிய ஆரம்ப இடம். குரங்கிலிருந்து பிரிந்து உருவான இனந்தான் மனிதன் என்பது ஆராய்ச்சியின் வெளிப்பாடு என்பது நமக்கு தெரிந்த விஷயந்தானே! மிகவும் ஆழத்தில் ஆரம்பிக்கும் அந்தப் பள்ளத்தாக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் விரிகிறது. பல இடங்களில் மேடிட்டு கிராமங்கள் உருவாகி இருக்கின்றன.

சாலையில் போகும்போது பார்க்கும் ஊர்களெல்லாம் வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி போன்ற நம் தமிழ்நாட்டு ஊர்களை ஞாபகப்படுத்துகின்றன. காலை வேளையில் திறந்தவெளி மார்க்கெட்டையும் பார்க்க முடிந்தது. கிராமங்களிலிருந்து வேலைக்குச் செல்பவர்கள் விறுவிறுவென்று நடந்துதான் செல்கிறார்கள். பதினைந்து இருபது கி.மீ. நடப்பதெல்லாம் சர்வ சாதாரணமாம். பத்து, இருபது நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்விடலாம் என்று அவர்கள் சொன்னால் தூரங்கள் அவர்களுக்கு வசப்பட்டுவிட்டதுபோல், நமக்கு இருப்பதற்கான சாத்தியமில்லை. ஆட்டோ, சைக்கிள் போன்ற வாகனங்களைப் பார்க்கமுடிவதில்லை. நகரங்களின் நிலை வேறாக இருக்கலாம்.

நக்குரு ஏரியை அடைந்ததும் கரையை ஒட்டிய தண்ணீரில் பவளநிறக் கால்களுடனும், மூக்குடனும் நிற்கும் ஏராளமான ஃபிளமிங்கோ பறவைகளையும், மஞ்சள் மூக்கு நாரைகளையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தோம். நைரோபியிலிருந்து கிளம்பிய சுமார் மூன்று மணி நேரத்தில் காட்டின் விளிம்பில் இருக்கும் நக்குரு கிராமத்துக்குச் சென்று விட்டோம். போகும் வழியிலெல்லாம் ஆங்காங்கே ஒட்டகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், காட்டுப் பன்றிகள், நரி, ஓநாய், மயில், கழுகு வகைகளைப் பார்க்க முடிந்தது. காட்டின் ஒரு பகுதியில் ஓட்டலும், பயணிகள் தங்குவதற்கான குடில்களும் இருக்கின்றன. வேன் அருகிலேயே வந்து எங்களை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று, குளிர்ந்த பழரசம் தந்து எங்களை அவரவறையில் கொண்டுவிட்டார்கள். சிறிது நேரத்தில் சாப்பாட்டறைக்கு வந்து, விருப்பப்பட்ட உணவைச் சாப்பிடும் முறை (பஃபே) என்பதால் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து அருந்தினோம். சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம். சரியாக நான்கு மணிக்கு லெடாமா வேனுடன் வந்துவிட்டார். எல்லோரும் டீ, பிஸ்கட் அருந்திவிட்டு குஷியாக மிருகங்களைப் பார்க்கக் கிளம்பிவிட்டோம்.

காட்டுக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே சுமார் நூறடி தூரத்தில் ஐந்தாறு பிரம்மாண்ட வெள்ளைக் காண்டாமிருகங்கள் பச்சைப் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் பல ஆரவார சப்தங்களைக் எழுப்பிக்கொண்டு, வேனின் கூரை திறந்த நிலையில் இருந்ததால், இருக்கையில் ஏறி நின்று பார்த்து ரசித்தோம். மனுவும் நீனியும் மகிழ்ச்சியில் கத்தித் தீர்த்துவிட்டாகள். சிறிது தூரத்தில் இன்னும் இரண்டு பிரம்மாண்ட காண்டா மிருகங்கள் குட்டியுடன் மேய்ந்து கொண்டிருந்தன. குட்டி ஒன்று வயிற்றிலும் இருந்ததால் மற்ற மிருகங்களைப் போல் ஆண், பெண் தோற்றத்தில் இரண்டிற்கும் அதிக வித்தியாசமில்லை. கர்ப்பகாலம் கூடுதலாக இருப்பதால் எப்பவுமே வயிறு பெரிதாக, தோற்றத்தில் பெண்ணும் ஆணுக்குச் சமமாக இருக்குமாம். குட்டியை ஈனுவதற்கு காண்டா மிருகத்துக்கு இரண்டு வருடங்கள் ஆகும்.

kenya-04.jpg

தங்குவுக்கு மிகவும் கூர்மையான பார்வை. வேன் போய்க் கொண்டிருக்கும்போதே தூரத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையையோ, மேய்ந்து கொண்டிருக்கும் மிருகங்களையோ கண்டுபிடித்துச் சொல்லிவிடுவாள். லெடாமா வேனை நிறுத்துவார்; எங்கே, எங்கே என்று கேட்டு எல்லாரும் பார்ப்போம். தைலா, தங்கு, ராம்கள் எல்லாருமே மிருகங்களோ பறவைகளோ இருக்கும் திசையைத் தெரிந்துகொள்ள கடிகார முறையைப் பயன்படுத்துகிறார்கள். பன்னிரண்டு மணி பொஸிஷன் இரண்டு மணி, பத்தரை மணி என்று கடிகார முள்ளைச் சுட்டி திசையைக் குறிப்பிடும்போது, அது புதுமையானதாவும் சுலபமாகவும் இருந்தது. முதலில் தூரத்தில் தெரியும் பறவையையோ மிருகத்தையோ கண்களால் பார்த்த பிறகு பைனாக்குலரில் பார்க்கும் போது காட்டெருமையின் முதுகில் அமர்ந்து பூச்சி களைக் கொத்திக்கொண்டிருக்கும் பறவைகளையோ வாலால் விரட்டி அடிக்கும் ஈக்களையோ பார்க்கமுடிந்தது. காண்டா மிருகம், காட்டெருமை போன்ற மிருகங்களுக்கும் குட்டிக் குட்டி பறவைகளுக்கும் உள்ள இணக்கம் சொல்லிமுடியாது. ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதால் உள்ள உறவு. படுத்து இளைப்பாறும் காட்டெருமையின் பெரிய முகத்தருகில் சின்னஞ்சிறு பறவைகள் பயமில்லாமல் அமர்ந்து மூக்கு, காதுக்கிடை யில் இருக்கும் பூச்சிகளைக் கொத்தி தின்பதும், எருமை சுகமாகக் காட்டிக் கொண்டிருப்பதும் ரஸமான விஷயந்தான்.

தங்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான படிப்பில் பறவைகள் பற்றிய பிரிவில் எம்.ஏ. படித்திருக்கிறாள். தைலா சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே தியோடர் பாஸ்கரனுடன் காடுகளுக்குச் சென்று பறவைகளைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து, (ஙிவீக்ஷீபீ ஷ்ணீtநீலீவீஸீரீ) அது சம்பந்தமாக நிறையப் புத்தகங்களும் படித்ததால் அவளுக்கும் பறவைகள் பற்றி ஏகப்பட்ட விஷயங்கள் தெரியும். அவர்களுடன் பேசுவது மூலம் இரண்டு ராம்களுக்கும் (அவர்களின் கணவர்களுக்கும்) பறவைகள் பேரில் ஈடுபாடு வந்துவிட்டது. எல்லாரும் ஆசையுடன் பறவையின் பெயர், நிறம், அதன் பழக்க வழக்கங்கள் எல்லாம் பேசி மகிழ்வோம். பறவைகளின் விசித்திர சுபாவங்களைச் சொல்லிச் சிரிப்போம். ரோலர் என்கிற பறவைதன் ஜோடியைக் கவருவதற்காக அதை சுற்றி சுற்றிப் பறந்து கிறுக்குத் தனமாகச் சுற்றி, தரையில் விழுந்து அடிபட்டு இறந்துவிடுவதும் உண்டாம். ஏகப்பட்ட நிறங்களுடன் அந்த ஆண் பறவை பார்க்க மிக அழகாக இருக்கிறது. பெண் அழகில் சுமார்தான். ஆனாலும் காதலியைக் கவருவது லேசான விஷயமாக இல்லை போலிருக்கிறது. ரோலர் பொருத்தமான காரணப் பெயர்தான்.

அரை பர்லாங்க் தூரத்தில் எங்களுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. வேன் போகும் சாலையின் அருகில் காய்ந்த புல்வெளியில் ஐந்து சிங்கங்கள் படுத்து ஓய்வில் இருந்தன. வேன் கதவைத் திறந்தால் சிங்கத்தின் மேல்தான் கால் வைக்க வேண்டும். அவ்வளவு அருகில்; நம் ஊரில் ஆடு, மாடுகள் ஓய்வெடுப்பது போல். வேன் அவைகளின் அருகில் வந்து நின்ற பிறகும் தலை தூக்கிப் பார்க்கவில்லை. தாய் சிங்கம் பெரிதாக இருந்தது. இரண்டு பெரிய குட்டிகள். அடுத்த பிரசவத்தில் பிறந்த இரண்டு சிறிய குட்டிகள் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தன. வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு அங்கும் இங்கும் புரண்டு கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் எங்களைச் சட்டை செய்யாமல் படுத்திருந்தன. இரை எடுத்துவிட்டால் பசி எடுக்கும் போதுதான் அவைகளுக்கு மீண்டும் சுறுசுறுப்பு வருமாம். ஓய்வு சமயம் அருகில் மானோ, வைல்ட் பீஸ்ட் (கீவீறீபீமீ தீமீணீst-ஒருவகை மான்), அவை ஆகாரமாகச் சாப்பிடக்கூடிய எந்த மிருகம் போனாலும் பொருட்படுத்தாதாம். அந்த மிருகங்களுக்கும் தெரியும் சிங்கங்கள் இப்பொழுது நம்மை தீண்டாதென்பது. என்ன மத மதப்பு, ஆரோக்கியம்.?! இயற்கைச் சூழலில் வாழும் அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வனப்பு அதிகந்தான். ஏதானாலும் சப்தம் போடாமல் அமைதியாக இருக்கும்படி லெடாமா எச்சரித்திருந்தார். திடீரென்று எழுந்து வந்து தாக்காது என்பது நிச்சயமில்லை. வேன் ஸ்டியரிங்கிலேயே கத்தியைச் சொருகி வைத்திருந்தார். காலடியிலும் சில ஆயுதங்கள். வேன் ஓட்டுபவர்கள் எல்லாருமே வழிகாட்டி, பாதுகாவலர் என்கிற மூன்று வேலைகளையும் பார்ப்பவர்கள்தான்.

இம்பாலா மான்கள், வரிக்குதிரைகள், பபூன் குரங்குகள், காட்டெருமைகள், வில்ட் பீஸ்ட்கள் எல்லாம் ஐநூறு ஆயிரம் என்று சாரிசாரியாக மேய்ந்து கொண்டிருக்கும் அழகைப் பார்த்து ரசித்துவிட்டு அறைக்கு வரும்போது, மணி ஏழு.

kenya-05.jpg

மறுநாள் குளியல், காலை டிபனை முடித்துக்கொண்டு, பத்து மணிக்குக் கிளம்பி அபெர்டேர் என்கிற கிராமத்திற்குச் சென்றோம். அங்கு அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் எங்கள் பெட்டிகளை விட்டுவிட்டு ஒரு இரவு தங்குவதற்கான உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, உணவு உண்டு அவர்கள் ஏற்பாடு செய்த பஸ்ஸில் ஆர்க் லாட்ஜ் சென்றோம். இரண்டு மணி நேரம் மலை ஏறிச் செல்லவேண்டும், ரெயின் ஃபாரஸ்ட். சாலையின் இருபுறமும் அடர்த்தியான பசுமையான காடுகள். உச்சியில் படகுபோல் லாட்ஜை வடிவமைத்திருந்தார்கள். ஒரு படுக்கை, இரு படுக்கைகள் கொண்ட அறைகள், பால்கனி சகிதம் கச்சிதமாக இருந்தன. படுக்கை அறை ஜன்னலுக்கு மிக அருகில் தண்ணீர் குட்டை இருந்தது. “எந்த நிமிடமும் காட்டு மிருகங்கள் தண்ணீர் குடிக்க வரலாம். கண்காணித்துக் கொண்டிருப்போம். ஒரு மணி அடித்தால் யானைக் கூட்டம் தண்ணீர் குடிக்க வந்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள் இரண்டு மணி காண்டாமிருகத்துக்கு, மூன்று மணி சிறுத்தைக்கு. எழுந்து உங்கள் அறை ஜன்னல் வழி பார்க்கலாம். பால்கனியில் சென்றும் பார்க்கலாம்” என்றார்கள். படுப்பதற்கு முன்னாலேயே யானைக்கூட்டத்தைப் பால்கனியிலிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. இந்த யானைகள் வெள்ளை கலந்த சாம்பல் நிறத்திலிருந்ததன. குட்டிகளெல்லாம் குட்டையில் குளித்து கும்மாளம் போட்டன. ஆண், பெண் யானைகள் இரண்டிற்குமே பெரிய, நீளத் தந்தப் பற்கள், நம் நாட்டு யானைகளைவிட பெரிய காதுகள். பெரிய உருவம். குட்டைக்கு வெளியிலுள்ள மண்ணில் கனிம உப்புகள் இருக்கிறதாம். அந்த இடம் பார்த்துத்தான் குட்டையை அமைத்திருக்கிறார்கள். அந்த மண்ணை தும்பிக்கையால் சுருட்டி எடுத்து வாயிலிட்டுச் சாப்பிட்டன. இறுகி இருக்கும் மண்ணை, முன் காலை மடக்கி கொண்டு, குனிந்து தந்தத்தின் நுனியால் குத்திக் கிளறி, தும்பிக்கையால் எடுத்து சாப்பிடுவது வேடிக்கைதான். மணிக்கணக்காய் மண் கலந்த உப்பை சாப்பிட்டுவிட்டு குட்டையில் துதிக்கையால் தண்ணீரை பீச்சி அடித்துக் குளித்துவிட்டு சகதிகளை வாரி, தலை, மேலெல்லாம் போட்டுக் கொண்டு காட்டுக்குள் போய் விட்டன. காட்டெருமைகள், காட்டுப்பன்றிக் கூட்டம், வாட்டர் பக், மங்கூஸ், மரநாய் எல்லாம் பார்க்க முடிந்தது. பாதி ராத்திரி மணி சப்தம் கேட்டு எழுந்து, காண்டா மிருகமோ சிறுத்தையோ தண்ணீர் குடிப்பதைப் பார்க்கும் சந்தப்பம் கிடைக்கவில்லை. ஓட்டல் அருகில் நடக்கும் பாதையில் பெரிய பலகையை ஊஞ்சல் போல் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். காலையில் பலகைகளில் தானியங்களை வைக்கிறார்கள். பெயிண்ட் அடித்தது போலுள்ள பல வர்ணக் குட்டிப் பறவைகள் காதைத் துளைக்கும் அளவுக்கு ஒலிகளை எழுப்பிக் கொண்டு தானியங்களை கொத்தித் தின்னும் காட்சியை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். மிக அருகில் நாம் நின்றாலும் பயந்து பறப்பதில்லை. பயணிகளைப் பார்த்து பழகிவிட்டதென்று நினைக்கிறேன்.

குளித்து டிபனை முடித்துக் கொண்டு பஸ்ஸில் கீழிறங்கினோம். வழி நெடுகிலும் ஏராளமான பறவைகள், மிருகங்கள் பார்க்கக் கிடைத்தன.

அபர்டேர் ஹோட்டலில் மதிய உணவைப் பரந்த வெளியிலமர்ந்து சுற்றுச் சூழலையும் ஏராளமான பபூன் குரங்குகளையும் நரிகள் ஓடுவதையும் ஒட்டகச்சிவிங்குகள் நீண்ட கழுத்தை ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு கொஞ்சிக்கொள்வதையும் மயில்கள் தோகை விரித்தாடுவதையும் பார்த்துக் கொண்டே சாப்பிட்டோம். இம்பாலா மான்களை எல்லாக் காடுகளிலும் தாராளமாகப் பார்க்க முடிந்தது. ஆன்டலோப் என்று சொல்லப்படும் மான்களில் பல வகைகள் இருக்கின்றன. சில காடுகளில் தோபி, க்ரேட் காசில் என்கிற மான்கள், இலண்ட், ரெட்பக், புஷ் பக், வாட்டர் பக் என்று பல வகைகள். நம் நாட்டுப் புள்ளி மான் வகைகள் அங்கில்லை. புள்ளி மான்கள் இவை எல்லாவற்றையும்விட அழகு என்றே தோன்றுகிறது. அடுத்ததாக இம்பாலா மான்களைச் சொல்லலாம். இன்னோரு முக்கிய விஷயம் இந்த மிருகங்களின் நிறம், அமைப்பு எல்லாவற்றிலும் இடத்துக்கிடம் வித்தியாசமிருக்கிறது.

வரிக்குதிரைகளின் கோடுகள் நக்குருவில் அகலப் பட்டைகளாகவும் சம்புருவில் அகலம் குறைந்த கோடுகளாகவும் இருந்தன. கலர்களிலும் டார்க்

கலர், லைட்கலர் என்று வித்தியாசம் இருந்தது. வரிக்குதிரையில், கருப்புக் குதிரையில் வெள்ளைக் கோடுகளா? வெள்ளைக் குதிரையில் கருப்புக் கோடுகளா? என்கிற புதிரும் இருக்கிறது. யானை, காண்டாமிருகம், மான் எல்லாமே நிறம், இடத்துக்கு இடம் வித்தியாசந்தான்.

kenya-06.jpg

அங்கிருந்து புவி மையக்கோட்டைத் தாண்டி சம்புரு கிராமத்துக்குச் சென்றோம். சம்புருவில் இரண்டு நாட்கள் தங்கிப் பார்த்த மிருகங்கள் ஏராளம். கிளம்பும்போதே இன்று சிறுத்தை பார்க்கக் போகிறோம் என்பதைச் சொல்லி குஷிப்படுத்தினார் லெடாமா. புதரருகில் சிறுத்தையொன்று ஒளிந்தும் நடுவில் வெளிப்படுவதுமாக அலைந்து கொண்டிருக்கிறது என்கிற செய்தி வேன் ரேடியோ மூலம் பரவி, எல்லா வேன்களும் ஒன்றாகக் கூடிவிட்டன. வேனை புதரைச் சுற்றி ஓட்டியும் புல்வெளியின் குறுக்கே போயும் பல கோணங்களில் சிறுத்தையை பதற்றத்துடனேயே பார்த்து மகிழ்ந்தோம். சட்டப்படி பாதை தவிர புல்வெளியின் குறுக்கே வேன் போகக்கூடாது. இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு மீற வேண்டி வருமாம். காட்டிலாகா அதிகாரிகள் திடீரென்று ரோந்து வருவார்கள். அபராதம் கொடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு.

பதினைந்து நிமிடங்களுக்குள் பெரிய காதுகளையுடைய பிரம்மாண்ட தோற்றமுடைய காட்டானைகள் அசைந்து அசைந்து உடை மரங்களின் இலைகளை முள் குத்தாமல் லாவகமாகத் தின்றுகொண்டே வருவதை பயம் கலந்த பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். ஐம்பது யானைகள்வரை இருக்கும். நல்ல கருப்பு நிறம். பிறந்து ஒரு வாரமான, தும்பிக்கைகூடச் சரியாக வளராத குட்டி முதல் இரண்டு மாதம் ஆறுமாதம் பத்துமாதக் குட்டிகள் வரை பெரிய யானைகளுக்கு இடையில் புகுந்து ஓடிக்கொண்டிருந்தன. எங்கள் வேனுக்கருகில், அதன் முன்னும் பின்னுமாக ரோட்டைக் கடந்து அவை மறுபுறம் போவதற்கு அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. குட்டிகளைப் பார்த்ததும் மனுவும் நீனியும் குதிகுதியென்று குதித்து சந்தோஷத்தை வாரி இறைத்தார்கள்.

சிறிது தூரம் போனதும், தொலைவில் கருப்பு நிற காண்டாமிருகம் ஒன்றைப் பார்த்தோம். பைனாக்குலர் மூலந்தான் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கருப்பு காண்டா மிருகம் அபூர்வமாகத்தான் பார்க்கக் கிடைக்குமாம். மாலை நாலு மணிக்குக் கிளம்பிப் போய் முதலில் பார்த்தது, புதருக்குள் பிறந்த நான்கு குட்டிகளுடன் மறைந்திருக்கும் சிங்கராணியை. வேனிலிருக்கும் ரேடியோ மூலம், எல்லா வேன்காரர்களுக்கும் தகவல் போனதும் பத்து நிமிடங்களில் எல்லா வேன்களும் புதரருகில் கூடிவிட்டன. குட்டிகள் அம்மாவிடம் பால் குடிப்பதையும், ஒன்றுக்கொன்று கட்டிப் பிடித்து உருண்டு, புரண்டு சண்டை போடுவதையும், தாய், வேன்களைப் பார்த்து உறுமிக்கொண்டே தன் குட்டிகளை சர்வ ஜாக்கிரதையாகச் சுற்றிச் சுற்றி வந்து பாதுகாப்பதைப் பார்ப்பதற்கும் போட்டோக்கள் எடுப்பதற்கும் அனுசரனையாக, சப்தம் போடாமல் இருக்கும்படி எச்சரித்துக்கொண்டே, வேன்களை பல கோணங்களில் திருப்பி, ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இடங்கொடுத்துக்கொண்டு எங்களை சந்தோஷப்படுத்திய பாங்கு அருமை. சிறுத்தை, புள்ளிப் புலி போன்றவை மிகவும் வெட்கம் கொள்ளும் பிராணிகள் என்பதால் அதிகம் வெளியில் வராதாம். இரண்டும் அபூர்வமாகத்தான் பார்க்கக் கிடைத்தன. புள்ளிப்புலியின் வாளிப்பும் கம்பீரமும் போஸ் கொடுத்துக் கொண்டே அது நான்கு பக்கமும் பார்க்கும் மிடுக்கும், ஒன்று பார்த்ததே நிறைவை ஏற்படுத்திவிட்டது. ஆப்பிரிக்கக் காடுகளில் கரடி, புலி கிடையாது. மிகப்பெரிய நெருப்புக்கோழி, செக்ரட்டரி பறவை, மரிபௌ ட்டொர்டொ போன்ற பறவைகள் ஜோடியாக அழகு நடனம் ஆடுவதையும், ஊடல் செய்வதையும் மகிழ்ச்சி பொங்கப் பார்த்துவிட்டு அறைக்குச் சென்றோம்.

இரண்டாவது நாள் பார்த்த அபூர்வ காட்சி; இருபத்தைந்து ஒட்டகச்சிவிங்கிகள்வரை உடை மரங்களின் இலைகளை மேய்ந்து கொண்டிருந்ததுதான். சேர்ந்தாற்போல் இவ்வளவு ஒட்டகச்சிவிங்கிகளை ஒரே இடத்தில், ஆப்பிரிக்கக் காடுகள் தவிர வேறு எங்கும் பார்க்கமுடியும் என்று தோன்றவில்லை. மற்ற மிருகங்களைப்போல் கூட்டமாகச் சேர்ந்து நிற்காமல் ஜோடி, ஜோடியாக சிறிது இடைவெளிவிட்டு நின்று கொண்டு, உடைமர இலைகளைச் சாப்பிட்டுக் கொண்டும் ஒன்றுக்கொன்று செல்ல முட்டு முட்டிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டுமிருந்தன. இவை நடந்து செல்வதும் வித்தியாசமானதுதான். ஒரு பக்கத்து முன் கால் பின் கால்களை ஒரே சமயத்தில் எடுத்து வைத்து, பின் அடுத்தப் பக்கத்து முன், பின் கால்களை அதேபோல் எடுத்து வைக்கின்றன.

நாலைந்து கழுதைப்புலிகளும் கொடூரத் தோற்றமும் வளைந்த மூக்குகளும் கொண்ட பலரகத்து கழுகுகளும் கூட்டமாகச் சேர்ந்து சிங்கம், புலிகள் விட்டுச் சென்ற எலும்புகளுக்கிடையிலிருக்கும் மிச்ச மாமிசத்தைத் தின்று கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான வரிக்குதிரைகள், இம்பாலா மான்கள், காட்டெரு மைகள், வைல்ட் பீஸ்ட்களெல்லாம் மேய்ந்து கொண்டிருப் பதைப் பார்க்காமல் நூறடி தாண்ட முடியாது.

மறுநாள் விமானத்தில் மாசை மாரா செல்ல வேண்டும். லெடாமா குட்டி விமானம் நிற்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் விடை பெறும் நேரம் வந்துவிட்டது. இந்த நாலைந்து நாட்களில் எங்களுடன் குடும்ப அங்கத்தினர் போல் பழகிவிட்டார். முக்கியமாக நீனியின் பெரிய விசிறியாகிவிட்டார். இருவரும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து பிரியா விடைபெற்றுக் கொண்டனர்.

நாங்கள் சென்ற ஒரு மணி நேரத்துக்குப் பின் சுற்றுலாப் பயணிகளுக்கான பத்துப் பன்னிரெண்டு

இருக்கைகள் உள்ள தனியாருக்குச் சொந்தமான குட்டி விமானம். காட்டில் புல்வெளியில் வந்து நின்றது.

அதுவரை வேனிலேயே காத்திருந்தோம்; விமான நிலையம் என்று எதுவும் இல்லை. ஆண் பெண் இரு பாலருக்குமான டாய்லெட் வசதி இருந்தது. வேறு

கட்டிடம் ஒன்றும் இல்லை. ஆதிவாசிப் பெண்கள் அவர்களே

தயாரித்த பாசி மணி நகைகளை விற்பனைக்குப்

பரப்பி இருந்தார்கள். லெடாமா தழுதழுத்து

விடைபெற்றுச் சென்றார். விமானம் தாழ்வாகவே பறந்து சென்ற தால், தரைப் பகுதி தெளிவாகத் தெரிந்தது. இருபுறமும் கூட்டமாக மேயும் மிருகங்களும் வட்டமாக அமைந்திருக்கும் குடிசைகளும் ஆறுகளும் சிறிதான தோற்றத்தில் தெரிந்ததைப் பார்த்துக்கொண்டே சென்றோம்.

மாசை மாராவில் விமானத்திலிருந்து இறங்கியதும் தயாராக இருந்த வேனில் ஏறினோம். வழிகாட்டி ஜேக்ஸன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மாசாய் இனத்தைச் சேர்ந்தவர். மாசை போராளி/வீரர் உடை அணிந்திருந்தார். கடும் சிவப்பு கலரில் முட்டுக்கு மேல் நாம் துண்டு உடுப்பதுபோல் சுற்றி இருந்தார். அதே நிறத்தில் கையில்லாத பனியன் மாதிரி மேல் உடுப்பு அணிந்திருந்தார். காது, கழுத்து, கைகளிலெல்லாம் ஏகப்பட்ட, பாசியால் செய்த நகைகள். மாசை போராளி/வீரர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை. பழமையின்பேரிலுள்ள ஈடுபாடு. தோற்றத்தில் ஆடு, மாடு மேய்ப்பவர்போல் இருந்தார்.

kenya-07.jpg

பெண்களும் இதேபோல்தான் உடை, நகை அணிகிறார்கள். ஆண், பெண் இருபாலரின் ஆடை அணிகலன்களும் ஏகதேசம் ஒரேபோல்தான் இருக்கின்றன. ஆண்கள் எல்லோருமே மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் ஆப்பிரிக்க பாணியில் முடி வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடனம் முக்கிய பங்குவகிக்கிறது. ஆண், பெண் சேர்ந்து ஆடுவதில்லை. தனித் தனிக் குழுக்களாக ஆடுகிறார்கள். வீட்டுப் பெரியவர்தான் குடும்பத்தை நிர்வகிப்பார். ஊர் கூட்டத்திலும் உள் வட்டமாக ஆண்கள் விவகாரம் பேசுவார்கள். வெளி வட்டமாக நின்று பெண்கள் விவாதத்தில் பங்கு பெறுவார்களாம்.

ஜேக்ஸன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பாவுக்குப் பதினான்கு மனைவிகள். நைரோபியில் சுற்றுச் சூழல் நிபுணரிடம் கல்வி பயின்றவர். பள்ளி ஆசிரியராக வேலை பார்த்துவிட்டு, வழி காட்டி வேலைக்கு மாறிவிட்டார். மனைவியும் ஆசிரியை. இரு குழந்தைகளும் அதே பள்ளியில் படிக்கிறார்கள். ஜேக்ஸன் வழிகாட்டி வேலை முடிந்து போய் ஆடு, மாடு மேய்ப்பார். குழந்தைகளும், கால்நடைகளுந்தான் ஆதிவாசிகளின் சொத்து. ஆண் குழந்தைகள் மாடு மேய்ப்பதற்கும் போராளி ஆவதற்கும். பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளுக்கும், கிழங்குகள், வேர்கள், விறகுகள், யானைலத்தி போன்றவைகளைச் சேகரிப்பதற்கும் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். காய்ந்த யானை லத்தியை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

பெரியவர்கள் ஆகும்போது இருபாலருக்கும் கட்டாயமாக சுன்னத் செய்யப்படும். குமரிப்பெண்களுக்கு குடிசையில் வைத்தே துருப்பிடித்த பழைய கத்தியை உபயோகித்து வலுக்கட்டாயமாக சுன்னத் செய்கிறார்கள். சடங்கின் போது பெண்கள் வலியால் துடித்துப் போய்விடுவார்கள். காயங்கள் பழுத்து தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டும் பால்வினை நோய் தொற்றியும் ஆயுசுக்கும் அவஸ்தைப்படும் பெண்கள் இருக்கிறார்கள். சிறிது காலமாக கென்யா அரசாங்கம் சுன்னத் செய்வதைத் தீவிரமாகத் தடை செய்தபோதிலும் பெற்றோர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கியபோதிலும் பண்டைய வழக்கத்தை மீறுவது அவர்களுக்கு எளிதாக இல்லை. சுன்னத் செய்து கொண்ட பெண்களும் பையன்களுமே திருமணத்துக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

மாசாய்கள் ஏழெட்டு குடும்பங்களாகச் சேர்ந்து வட்டமாக வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். வீடுகளைச் சுற்றி உள்வட்டமாக முள்செடிகளை வளர்த்து வேலி அமைத்து. ஆடு மாடுகளை வேலி வட்டத்திற்குள் அடைத்து, சிங்கம், சிறுத்தையிடமிருந்து பாதுகாக்கிறார்கள். களிமண், கம்பு, புல், மாட்டுச் சாணம், மாட்டு மூத்திரம் கொண்டு வீடு கட்டுகிறார்கள். பாலும் பசுவின் ரத்தமுந்தான் அவர்களின் முக்கிய உணவு. பசுவின் கழுத்தில் குறிப்பிட்ட இடத்தில் நரம்பை வெட்டிச் சிறு துவாரம் செய்து ரத்தத்தை டம்ளரில் பிடித்து குடிப்பார்கள். மாட்டின் காயத்தை சூடு சாம்பல் வைத்து அடைத்தே குணப்படுத்திவிடுவார்களாம்; காய், கனி, கிழங்கு வகைகளும் உண்பார்கள். மாமிசம் விசேஷ தினங்கள் மட்டுமே. சுன்னச் செயயப்பட்டவர்களுக்கும்கர்ப்பிணிகளுக்கும் நோயாளிகளுக்கும் சத்துணவாக ரத்தம் குடிக்கக் கொடுப்பார்கள். ஒரு வீட்டு மாடு வெட்டப்பட்டு எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். அடுத்த முறை வேறொருவருடைய மாடு. ஆனால் மாட்டுக்குச் சொந்தக்காரர்கள் அந்த மாமிசத்தைச் சாப்பிட மாட்டார்கள், தன் வீட்டு மாடு என்கிற மனநிலையில்.

கடைசி நாள் எங்களுடன் மதிய சாப்பாட்டிற்கு அழைத்தபோது, ஜேக்ஸன் பேண்ட் ஷர்ட்டுடன் வந்து ஆச்சரியப்படுத்தினார். அடையாளமே தெரியவில்லை.

மாசை மாராவில் இல்கிலானி என்கிற இடத்தில் வேனிலிருந்து இறங்கி வரவேற்பறைப் படியில் கால் வைத்ததுமே, ‘‘ஜம்போ, ஜம்போ’’ என்று பல குரல்கள் ஒலித்தன; அவர்கள் பாஷையில் வணக்கம் சொல்லி வரவேற்கும் முறை. விமானத்தில் தருவதுபோல் சூடாக ஆவி பறக்கும் சுருட்டிய வெள்ளை டவலை தட்டிலிருந்து இடுக்கியால் எடுத்துத் தந்தார்கள். முகம் கைகளை துடைத்துக் கொண்டிருக்கும்போதே கண்ணாடி டம்ளரில் ஜில் என்ற பழ ரசம் வந்து விட்டது... அந்த வேளையில் அவர்கள் தந்த அந்த உபசரிப்பு அருமையாகத்தான் இருந்தது. ஆசுவாசத்துடன் எல்லோரும் அமர்ந்ததும், அங்குள்ள சஃபாரி பற்றி விளக்கம் தந்துவிட்டு, பெட்டி சகிதம் எங்களை கூடாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

அடர்ந்த காட்டின் ஆற்றோரம் அமைந்த கூடாரம். ஆனால் நட்சத்திர ஓட்டல் அறைகளின் தரத்திலிருந்தது. சோலார் முறையில் மங்கிய வெளிச்சமுள்ள விளக்கும் வெந்நீரும் வந்தது. தண்ணீரை மிகவும் சிக்கனமாக உபயோகிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

எந்த நிமிடமும் காட்டு மிருகங்கள் ஆற்றில் தண்ணீர் குடிக்க வரலாம். ஒவ்வொரு கூடாரத்துக்கும் மாசை வீரர் ஆயுதங்களுடன் - சிவப்பு மாசை உடையில்தான் காவலிருக்கிறார். இரண்டு நாட்கள் முன்னால், தாக்க வந்த சிங்கத்தைக் கொன்றதாகப் பெருமை பொங்க போராளி சூடான செய்தி சொன்னார். எங்கள் அடிவயிறு கலங்கியது அவருக்குத் தெரியாது. கேன்வாசால் செய்த டென்ட்; கொசுவலைதான் ஜன்னல்; கூடாரத்தின் கதவாகப் பயன்படுவது சூட் கேஸில், நம் உடைகளில் இருப்பது போன்ற ஜிப். குளித்துவிட்டு வந்து இரவு மெல்லிய வெளிச்சத்தில் கூடாரத்திலிருந்து நாங்கள் வெளியில் வந்ததும் அழைத்துப் போக டார்ச் லைட்டுடன் மாசை வீரர் வெளியில் தயாராக நின்றுகொண்டிருந்தார். சாப்பிடும் கூடத்துக்குக் கொஞ்சம் தூரமாகச் செல்லவேண்டும். சாப்பாட்டுக் கூடத்துக்குப் பக்கத்திலும் செடிகளின் மறைவில் இரண்டு, மூன்று கேன்வாஸ் டாய்லெட் அமைத்திருக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளும் அறையில் இன்டர்நெட் வசதியும் செய்திருப்பதால் வெளி உலகத் தொடர்பும் வைத்துக்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் யோசித்துச் செய்திருக்கும் வசதிகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தன.

உணவில் சப்பாத்தி-தால், பலவகைக் கூட்டுகள். ஸாலட், பழவகைகள் போன்ற சுத்த சைவ உணவு வகைகள் தாராளமாக இருந்தன. குழந்தைகளுக்கு எந்த வகை உணவு பிடிக்கும் என்று கேட்டு தனியாகச் செய்து தந்தார்கள். நாங்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்பது ஏஜென்ஸி மூலம் முன்கூட்டியே தெரிந்துவிட்டதால் அதற்கான ஏற்பாடுகளுடன் இருந்தார்கள்.

ஆப்பிரிக்கக் காட்டில் இப்படியொரு அருமையான இந்திய உணவா?! நம்ப முடியவில்லை. நைரோபியிலிருந்து பொருள்களை வரவைக்கிறார்கள் என்பது தெரிந்தது. குடும்பத்தின் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தனிப்பட்ட மதிப்பு கொடுக்கிறார்கள். என்னை அன்புடன் மம்மா என்று அழைத்து, தலைவர்கள் அமரும் நாற்காலியில் அமர வைத்த பிறகுதான் உணவு பரிமாறினார்கள். குடும்பத் தலைவரோ தலைவியோ அந்த நாற்காலியில்தான் அமர்ந்து சாப்பிட வேண்டுமென்பது அவர்களுடைய உபசரிப்பு முறை. ஆசைக்கு ஒரு தடவையாவது மனு, நீனி பக்கத்தில் அமர்ந்து சாப்பிட நினைத்த என் எளிய விருப்பம், அவர்கள் அன்புக் கட்டளையால் நிறைவேறவேயில்லை. பெரிய பீங்கான் தட்டில் பிரட், சப்பாத்தி-தால் போன்ற வகையறாக்களுடன் முட்டையும் வைத்து எனக்கு முதலில் கொண்டு வைத்தார்கள். நான் சுத்த சைவம் என்று சொன்னதும், அவர்களைப் பொறுத்தவரை முட்டைக்குள் இருந்து கோழிக்குஞ்சு எட்டிப் பார்த்தால் தான் அது அசைவம். மீதி எல்லோருமே முட்டை சாப்பிடக் கூடியவர்கள்தான் என்பதால் தட்டை மாற்றி எடுத்துக் கொண்டு, எனக்கு முட்டையில்லாத தட்டு வந்தது. முட்டைக் கறி வகைகளுக்கு மாற்றாக எனக்கு ஸ்பெஷல் அயிட்டம் ஏதாவது வந்துவிடும். பழத் துண்டுகளோ, வெஜ். சாலட்டோ கொண்டு வைத்து விட்டு ஆவலுடன் முகத்தைப் பார்ப்பார்கள். நன்றி... மிக்க நன்றி... என்று சொன்னால் குளிர்ந்து போய்விடு வார்கள். பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள்தான் என்றா லும் இயற்கையாகவே உண்மையான அன்பு உள்ளவர்கள் என்பதும் தெரியும். எப்போதும் சிரித்த முகந்தான்.

ஒவ்வொருமுறை நாங்கள் வேனில் போய்விட்டு வரும்போதும் அறையை சுத்தம் செய்து படுக்கையைச் சரி செய்து ஒவ்வொரு படுக்கையிலும் சாக்லேட் பார் ஒன்று வைத்தும் கம்பிளி போர்வைக்கடியில் கால் பக்கம் வெந்நீர்ப் பை வைத்தும் அசத்தினார்கள். இரவு டிபனை முடித்துக்கொண்டு பத்து மணிக்கு படுப்போம். படுக்கைக்கு கொசுவலை போட்டு, பூச்சிக் கடிக்கான தெளிப்பானும் வைத்திருந்தார்கள். ஆனால் நாங்கள் போயிருந்த சமயம் கொசு, பூச்சி தொல்லை இருக்கவில்லை; என்னதான் ஏற்பாடுகள் செய்திருந்தாலும் கூடாரத்தில் படுத்து உறங்குவதற்கு உள்ளுக்குள் பயம் தோன்றியது உண்மை. கனவில் மாசை வாரியார் சிங்கம் சிறுத்தையுடன் சண்டை செய்து எங்களை காப்பாற்றும் காட்சியும், நடுவில் விழிப்பு வரும்போது குரங்குகளின் கத்தலும், பறவைகளின் கிறீச்சிடலுமாக இரவு கழிந்தது.

ஐந்தரை மணிக்கு ஆவி பறக்கும் காப்பியும், பிஸ்கெட்டுமாக வந்து எழுப்பினார் வாரியார் (மாசை வீரர்). பல் தேய்த்து, கம்பளி போர்வைக்குள் அமர்ந்து காப்பியை உறிஞ்சு குடிப்பது சுகமான அனுபவந்தான். போர்வையை உதறிவிட்டு, ரெடியாகி ஆறு மணிக்கு தங்குமிடத்திலிருந்து, தொங்கு பாலம் வழியாக ஆற்றைக் கடந்து சுருக்குப் பாதையில் வேனில் ஏறிவிடுவோம்.

மாசை மாராவில் தங்கியிருந்த அந்த மூன்று நாட்களும் மிகப் பரந்த புல்வெளியில் நாங்கள் பார்த்த மிருகங்களும் பறவைகளும் கணக்கிலடங்காதவை. அண்ணன் தம்பிகளான இளவயது நான்கு சிங்கங்கள் பிரமாண்ட தோற்றத்துடன், பிடரியிலும், முகத்தை சுற்றியுமுள்ள அடர்த்தியான முடிக்கற்றை காற்றில் பறக்க புல்வெளியில் உருண்டு புரண்டு படுத்துறங்கிக் கொண்டிருந்தன. திடீரென்று எழுந்து கம்பீரமாக நான்குபுறமும் பார்த்தன. அப்பொழுதுதான் நான்குமாகச் சேர்ந்து இரையை விரட்டிப் பிடித்து சாப்பிட்டிருக்கின்றன என்று ஜேக்ஸன் சொன்னார். எதையும் சட்டை செய்யாமல் அவை படுத்திருக்கும் விதம் எங்களுக்கு அவைகளைக் கூர்ந்து கவனிப்பதற்கும், படம் எடுப்பதற்கும் வசதியாயிருந்தது.

நெருக்கமாக நின்று மேய்ந்து கொண்டிருந்த ஐநூறுக்கும் மேலான வரிக்குதிரைகள். தூரத்துப் பார்வைக்கு கோடு போட்ட ஜமுக்காளத்தை விரித்ததுபோல், அற்புதமாக இருந்தன. பெரிய பெண் சிங்கங்களுடன் அக்காள் தங்கை அண்ணன் தம்பிகளாக பத்து, பதினைந்து சிங்கங்கள் இரு பிரிவாகி சாலையின் இருபுறமுள்ள பரந்த புல்வெளியில் ஒருபுறம் வரிக்குதிரையை, மறுபுறம் இம்பாலா மானை விரட்டிப் பிடிக்க முயற்சித்து, அவை தப்பி ஓடிவிட்ட காட்சியை பார்க்கக் கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டந்தான். தாய் சிங்கங்கள் தன் குட்டிகளுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டே வேட்டையாடுகின்றன என்பதும் தெரிந்தது.

வைல்ட் பீஸ்ட் மிகவும் பயந்த சுபாவம் உள்ள மிருகமாம். எப்பவும் தலை குனிந்தபடி நடக்கும் அவைகளின் தோற்றம், சிறு சப்தத்திற்கும் பயந்து துள்ளி ஓடும் விதம் நமக்கு அவைமீது பரிதாபத்தையே ஏற்படுத்தும். ஒரு இடத்தில் புல் தீர்ந்ததும் அடுத்த புல்வெளியைத் தேடி அவை வேறு இடத்துக்கு பிரயாணம் மேற்கொள்ளும்போது அடையும் இன்னல்கள் சொல்லிமுடியாது. இறப்புகளோ கணக்கிலடங்காதவை. ஆறுகளைத் தாண்டும்போது முதலைகள் சாப்பிடுவதும், கடித்து குதறிப் போடுவதும், மேடுகளில் ஏறும்போதும் சரிவுகளில் இறங்கும்போதும், கால்களொடிந்து, ஆகாரம் இல்லாமல் இறப்பது என்பதெல்லாம், வருடத்தில் லட்சத்திற்குமேல் இருக்குமாம். அதன் பிறப்பு விகிதமும் அதிகம். நாங்கள் அங்கிருந்த மூன்றாவது நாள் மாசை மாரா நதியைப் பார்க்கச் சென்று கொண்டிருந்ததோம். வெகு தூரத்திலிருந்தே, வேனிலிருந்து பார்க்கும்பொழுது எதிர்த்தாற்போல் தெரிந்த மிகப் பரந்த புல்வெளியில் பல்லாயிரக்கணக்கான வில்ட் பீஸ்ட்டுகள் மேய்ந்து கொண்டிருந்தது, எறும்புக் கூட்டம்போல் தோற்றம் தந்தது. அருகில் செல்லச் செல்ல அவைகளின் முழு உருவமும் தெளிவாகத் தெரிந்தன. லட்சத்துக்கு மேல் இருக்குமென்றார் ஜேக்ஸன். மிகப் பெரும் கூட்டத்தைப் பார்த்த பிரமிப்பு நீங்க எங்களுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. சிறிது தூரத்தில் இரண்டு பெண் சிங்கங்கள் காட்டெருமையொன்றை கடித்துக் குதறி கிழே சாய்த்துக் கொண்டிருந்ததைப் பார்க்கச் சகிக்காமல் நகர்ந்துவிட்டோம்.

மாராநதியின் கரையில் பார்வை கிடைக்கும் (வியூ பாய்ண்ட்) மேடான இடத்தில் வேனை நிறுத்தினார் ஜேக்ஸன். வேனிலிருந்து இறங்கி நதியின் நடுவிலிருக்கும் பாறைகளுக்கு மேல் வெயில் காயும் ஏராளமான பெரிய முதலைகளையும், தூரத்து பார்வைக்கு பல்லி போல் தோற்றம் தரும் அதன் குட்டிகளையும் பார்த்தோம். மிகப் பெரிய நீர் யானைகள் பாறையோடு பாறையாக இரண்டு பாறைகளுக்கிடையில் தண்ணீரில் படுத்திருந்ததை, மேலிருந்து மனு நீனியுடன் சேர்ந்து கண்டுபிடித்து எண்ணுவது, அவர்களுக்கு வேடிக்கையான விளையாட்டாக இருந்தது. பன்றி குட்டியின் அளவேயுள்ள அவற்றின் குட்டிகள் அருகில் நின்று கொண்டிருந்தன. நீர் யானைகள் அடிக்கடி தண்ணீருக்கு வெளியில் வந்து மூச்சுவிட்டன. ஒன்றிரண்டு கரையில் வந்து படுத்து வெயில் காய்ந்து கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. ஒவ்வொன்றும் ராட்ஸச உருவம்; நாங்கள் போயிருந்த வேளை எல்லா காட்டு மிருகங்களுமே குட்டி போடும் பருவமாக இருந்திருக்கிறது. எல்லா மிருகங்களின் குட்டிகளும் ஒவ்வொரு விதத்தில் அழகழகாய்

இருந்தன.

நதி முடிந்து மேட்டுப்பாங்கான இடத்தில் வேனை நிறுத்தினார் ஜேக்ஸன். ரிஃப்ட் வேலி முடியும் பிரதேசம். பூமியின் முழு வட்டமும் தெரிகிறது. உலகம் பிரமாண்டமாக, பேரழகாகத் தெரிகிறது. அங்கும் இங்கும் ரஸித்தபடி நடந்தோம். சூரியன் மறையும் தருவாய். மேகங்களுக்குள் மறைவதும், வெளிப்படுவதுமான ஜாலங்கள். அதனால் ஆகாயத்தில் ஏற்படும் வர்ணமயமான நிறமாற்றம்.. மனசில்லா மனசுடன் கீழிறங்கினோம்.

நாட்கள் போனதே தெரியாமல் எங்கள் கென்யா சஃபாரி முடிவடைந்தது. மாசை மாராவில் இல்கிலானி காட்டில் கான்வாஸ் கூடாரத்தில் தூங்கிய அந்த மூன்று இரவுகள் மறக்க முடியாதவை. இல்கிலானி வரவேற்பறையில் உண்டியல் பெட்டிபோல் வைத்திருக்கிறார்கள். நமக்கு உதவியாளராக இருந்தவர்களுக்கு தனித்தனியாக இனாம் கொடுக்காமல் மொத்தத் தொகையையும் அந்தப் பெட்டியில் போடச் சொல்கிறார்கள். அவர்களே பிரித்துக் கொள்வார்கள். நமக்கும் பொறுப்பு குறையும். நல்ல ஏற்பாடாகத் தோன்றியது.

மறுநாள் நைரோபிக்குச் செல்ல விமானநிலையம் போவதற்கு முன்னால் ஜேக்ஸனின் மனைவி வேலை பார்க்கும் பள்ளியைப் பார்வையிடச் சென்றோம். லாய்கெரி ஆரம்பப் பள்ளி என்று பெயர். ஃப்ரிடெரிக் க்ரோடடெஸ்க் என்பவரின் அக்கறையால் 1999இல் நிறுவப்பட்ட பள்ளி. பழங்குடி குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. நன்கொடைகள் தாராளமாகக் கிடைக்கின்றன. தரமான கல்வி கொடுக்கப்படுகிறது என்பதை அதன் தாளாளர் புள்ளி விவரங்களுடன் சொன்னார். சுற்று வட்டாரக் கிராமங்களிலுள்ள எழுநூறு, எண்ணூறு, மாணவ, மாணவிகள் வரை படிக்கிறார்கள். அன்று சனி விடுமுறை என்பது தெரிந்தும் வேறு வழி இல்லாததால் போனோம்; கிராமத்தில் பழங்குடிக் குழந்தைகள் படிக்கும் பள்ளி ஒன்றைப் பார்வையிடும் எண்ணத்தில். ஆரம்ப வகுப்பிலிருந்து ஒன்பது வகுப்புவரை பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் மாணவ மாணவிகளைப் பார்த்துப் பேசிப் பழகியது மகிழ்ச்சியாயிருந்தது.

பள்ளியிலிருந்து விமானநிலையம் சென்றோம். ஜேக்ஸனும் எங்களுடன் நன்கு பழகிவிட்டதால் விடைபெறும்போது வருத்தத்துடன் பிரிந்தார். இந்த விமானம் மேலே கிளம்பி உயரத்தில் பறந்து நைரோபி வந்து சேர்ந்தது. எல்லோரும் எக்கா ஹோட்டல் வந்தடைந்தோம்.

நாங்கள் கென்யா நகரம் ஒன்றைப் பார்த்தது நைரோபி விமான நிலையத்திலிருந்து எக்கா ஓட்டலுக்குப் போனதும், டூர் முடிந்து அதே ஓட்டலிலிருந்து விமானநிலையம் சென்றது வரையும்தான். மீதி நாட்கள் காடுகளில்தான்; பசுமையும், வறட்சியும் நிறைந்த மரம், செடி, கொடி, புல்வெளிகளுக்கிடையில் பறவைகள், மிருகங்களுடனும் மிகவும் பிரியத்துடன் குழைவாகப் பழகும் ஆதிவாசி மக்களுடனும் வெளி உலகத்தை மறந்து, லயித்துப்போய் இருந்தோம்.

என்றும் நினைவில் நிற்கும் அனுபவம்.

http://www.kalachuvadu.com/issue-172/page56.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.