Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்மாடிக் கட்டிடம்

Featured Replies

தொடர்மாடிக் கட்டிடத்தின் அறையொன்று அதிர்ந்துகொண்டிருந்தது. வயலின் கருவியின் தந்திகளிற்குள்ளால் மனித மனமொன்று பேசிவிட முனைந்து கொண்டிருந்தது. பேச்சு, யாரையும் நோக்கியதாய்த் தோன்றவில்லை. பேசவேண்டியது தவிர்க்கமுடியாததாய்த் தந்தி அதிர்ந்துகொண்டிருந்தது.
 
நேற்றைய இரவில் ஓரு உணவகத்தில் மாயை கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. 'நம்புங்கள்' என்ற கோரிக்கைக்கு அவசியமற்று நம்பிக்கை பிரவாகித்துக்கொண்டிருந்தது. எதிர்ப்பின்றிப் பிரவாகிப்பதாய்த்தோன்றும் ஆற்றில் துருத்திக்கொண்டு வெளித்தெரியும் மரக்கட்டைபோல, இந்த வயலின்காரன் அங்கு துருத்திக்கொண்டமர்ந்திருந்தான். பேச்சால் நிறைந்திருந்த மண்டபத்தில் இவன்மட்டும் வார்த்தைப்பிரவாகம் வெளிவராது, ஆட்டுக்குட்டியினை விழுங்கிக்கொண்டிருக்கும் பாம்பைப் போலப் புடைத்துக்கொண்டிருந்தான்.
 
இப்போது அதிர்கின்ற வயலினின் கொதிப்பு இவன் எழுதியது அல்ல. தனது மனநிலை தனக்கு மட்டுமானது அல்ல என்றுணர்ந்த பொழுதொன்றில், தன்னால் பேசமுடியாததை முன்னால் எவனோ பேசியது மட்டுமன்றி ஆவணப்படுத்தியும் வைத்துள்ளான் என இவன் அறிந்தபோது, வார்த்தை தேடுவதை நிறுத்திவிட்டிருந்தான். வயலின் தந்திகள் கொண்டு முன்னையவனின் ஆவணத்தை வாசித்தவன், கரைந்துபோனான். வார்த்தைகள் அனைத்தும் அன்று முதல் இவனிற்கு மலடாகத் தெரிந்தன—ஏனெனில் வார்த்தை என்பது கேட்போனிருப்பினே வினைத்திறனுடையது. கேட்போர் இலகுவில் இவனிற்குக் கிடைத்தார்கள். ஆனால் சடங்களாய் இருந்தார்கள். வார்த்தைகளின் கனதியினைக் கைப்படுத்தும் கற்பனை அற்றவராய் இருந்தார்கள். அதனால் வார்த்தைகள் இவனிற்குள் ஏற்படுத்திய பிரளயத்தைக் கேட்போரிற்குள் இவனால் கடத்திவிட முடியவில்லை. 
 
வயலின், தொண்டை மட்டுமல்ல அது கேட்போனின் செவியாகவும் இருந்தததை உணர்ந்தபோது, இவன் பறந்துகொண்டிருந்தான். தனக்குள் நினைப்பதைத் தான் வயலின் தந்திகளில் அழுத்தியதையே இவன் தனது பேச்சாகக் கருதிக்கொண்டான். தனது அழுத்தத்தால் வயலினில் இருந்து எழுந்த இசையினைத் தனது கேட்போனின் பதிலாக இவன் புரிந்து கொண்டான். அப்படிப் பார்க்கையில், தான் என்ன சொல்ல முனைகிறானோ, அதே அலைவரிசையில் தனது கேட்போன் எப்போதும் தன் முன் அமர்ந்திருக்கிறான் என்பது இவனிற்குப் புரிந்தது. சுதந்திரமடைந்த அடிமைபோன்று நெஞ்சில் அடித்துக் கூச்சலிட்டு விடுதலையினைக் கொண்டாடினான். பின்னர், வயலினோடு அடங்காது பேசத்தொடங்கிவிட்டான்.
 
************************************************************
 
'உருவான குழந்தையினைப் பிரசவிப்பது பற்றியே நீ சிந்திப்பதாய் உனக்குத் தோன்றவில்லையா? வயலின் கேட்கிறது என்பதனால், அறுந்து தொங்கும் குதிரை மயிர்களைப் புடுங்கி எறிந்தபடி நீ பேசிக்கொண்டிருக்கிறாய். பேசவேண்டியவை என்று எவையும் தோன்றாதபடி இருக்கும் ஒரு நிலையினை நீ எப்படிப் பார்ப்பாய்? தடையின்றிப் பேசுவது விடுதலையா இல்லைப் பேசுவதற்கான அவசியமற்றிருப்பது விடுதலையா?' புதிதாய் அடைந்திருந்த சமநிலையினைக் குழப்பிப் போடும் இந்தக் கேழ்வியினை நேற்றைய இரவில், அந்த உணவக மண்டபத்தில் இவனை நோக்கி அவள் கேட்டிருந்தாள். 
 
வார்த்தைகள் கொண்டு இவன் உரையாடுவதற்காய் மிஞ்சியிருக்கும் ஒரு சிலரில் மிக முக்கியமானவள் அவள். அவளோடு பேசிய அனைத்துத் தருணங்களிலும் தனது சமநிலை சிதைவது இவனிற்குத் தெரியும். ஆனால், உயரிய விடுதலை நோக்கிய ஓயாத முன்னேற்றத்திற்கு இவனும் அடிமை. விடுதலைக்கு நேரெதிரான பொருளுடைய அடிமை என்ற சொல்லின் உயிரின் ஆழம், விடுதலை பற்றிய அவாவில் மட்டுமே இவனிற்குப் புலப்படும். விட்டு விடுதலையான நிலையொன்று மனிதனிற்குச் சாத்தியம் என்ற நம்பிக்கை இவனிற்குள் எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. அதனால், சமநிலை என்ற கழ்ளுண்டு மயங்கிக் கிடக்கும் இலகு காலங்களிலும், அவளை நோக்கி இவன் வந்துகொண்டே இருந்திருக்கிறான்.
 
வயலினை நிசப்த்தமாக்க இப்போது இவன் முனைந்துகொண்டிருக்கிறான். தனது அழுத்தல்கள் நிசப்த்தமாகவே வெளிவரும் நிலைவேண்டி வயலின் தந்திகளை அழுத்திக்கொண்டிருக்கிறான். வாழ்வின் நிலையின்மையினைக் கணந்தோறும் மறவாதிருக்கவேண்டி, பிணங்கள் மத்தியில் உழன்று பிணங்களை உண்ணும் அகோரிகள், தாமுண்ணும் பிணங்களின் ஊட்டத்தால் வாழ்வின் நிலையின்மையினை நீட்டிக்கொண்டிருக்கும் முரண்நகை போல, பேசுவது அவசியமற்றுப்போகும் நிலைவேண்டி இவன் இப்போது பேசிக்கொண்டிருக்கிறான்.
 
****************************************
 
"ஓம் என்று சொல்லும் அனைத்துப் பெண்ணோடும் உறவுகொள்ளும் எந்த ஆணும் உயிர்ப்பற்றவன். சுய பச்சாதாபத்தில் ஊறிக்கிடப்பவன். கதாநாயகியினை மட்டும் கலப்பவன் உயிர்ப்பானவன்." 
 
வயலின் கேட்கிறது என்பதனால் பேசிக்கொண்டிருக்கும் பேச்சுக்கள் ஆழத்தோண்டுகையில் சுய பச்சாதாபங்கள். எத்தனை குதிரை முடியினைப் புடுங்கி எறியினும், எத்தனை உயிர்ப்பானதாய்த் தந்தி பிறசெவிகளில் அதிரினினும், இப்பேச்சுகள் ஓமென்று சொல்லும் அனைத்துப் பெண்ணோடும் கலப்பதனை ஒப்பனவே...என்று இவன் உணர்ந்த தருணத்தில்...
 
நாண் ஒன்று அறுந்த அதிர்வினால் நாயொன்று துடித்தது. அந்தத் தொடர்மாடிக்கட்டிடம் வயலின் இசைதொலைத்துக் காற்றைத் தடுத்துத் தானாய் நின்றது. 
 
 

Edited by Innumoruvan

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்! உங்கள் கதையை வாசிக்கத் தொடங்கவே முகத்துக்கெதிரே எதுவோ ஒன்று வாசிக்க விடாது தடுப்பது போன்ற பிரமை. தொண்டையில் உமிழி விழுங்கமுடியாது எதோ இறுக்குவது போல் ...... ஏனென்று விளங்கவே இல்லை எனக்கு.

  • தொடங்கியவர்
வணக்கம் மெபொப்தேமியா சுமேரியர்.
 
ஏதாவது ஒன்று உள்ளுர ஏற்படுத்தும் தொணதொணப்பில் ரைப்பண்ணத் தொடங்கியது தான் யாழ்களத்தின் எனது அனைத்துப் பதிவும். ரைப்பிங் முடிகையில் தொணதொணப்பு திருப்த்திப்படுத்தப்பட்டிருக்கும். மிகச் சொற்பமானவை தான் பதிவிடத்தோன்றும். மற்றவற்றை நான் சேமித்துக் கூட வைப்பதில்லை. அழித்துவிட்டுச் சென்றுவிடுவது.
 
இந்தக் கதை மே மாதம் 18ம் தேதி பதியப்பட்டது. ஆனால் உண்மையில், இதை எழுதிய அதிகாலைப்பொழுதில் எனக்கு அது மே.18ம் தேதி என்பது நினைவில் இருக்கவில்லை. எங்கோ ஒரு இடத்தில் எப்போதோ படித்தேன், அதிகாலையில் ஆழத்தூங்கி எழுந்தபின் எதையுமே வாசிக்காது எழுதத்தொடங்குகையில் எமது பிரக்ஞை எமது எழுத்தில் வெளிப்படும் என்று. ஏறத்தாள அதில் உடன்பாடு இருககவே செய்கிறது. அந்தவகையில் இதை எழுதிப் பதிந்த பின்னர் தான் அன்று மே.18 என்பது தெரிந்தது. தொணதொணப்பிற்கு இன்னுமொரு அர்த்தம் கிடைத்தது.
 
ஒருவேளை, இந்தக்கதையினை எழுதிய எனது தருணங்கள் உங்களிற்கானவை அல்லாதாதக இருக்கலாம். சில புத்தகங்களை வாசிக்கும்போது எனக்கும் இவ்வாறு இருக்நிருக்கிறது. எவ்வளவு முயன்றும் மனம் ஒருமிக்க மறுத்துவிடும். ஒரு புத்தகத்தை ஏறத்தாள 7 ஆண்டுகளாக வாசிக்க முயல்கிறேன். 100 பக்கங்களைத் தாண்டி அது நகர்வதாய் இல்லை. ஏறத்தாள அதை வாசிப்பதில்லை என்று விட்டுவிட்டேன்.
 
இந்தப் பதிவு சார்ந்த உங்களது கருத்து எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.