Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியின் வெற்றியும் இந்திய-இலங்கை உறவும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் வெற்றியும் இந்திய-இலங்கை உறவும் - யதீந்திரா

நரேந்திர மோடி - இன்றைய சூழலில் இலங்கை அரசியல் சூழலில் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் சூழலிலும் உன்னிப்பாக நோக்கப்படும் ஒரு பெயராகும். இதற்கு என்ன காரணம்? இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தோல்வியடையும் என்பதும் நரேந்திர மோடியின் தலைமையில் பி.ஜே.பி வெற்றிவாகை சூடும் என்பதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே! ஆனால் பி.ஜே.பி, கூட்டணிக் கட்சிகளின் துணையின்றி தனித்து ஆட்சியமைக்குமளவிற்கு தனிப்பெரும்பான்மையை பெறும் என்பதை எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. மேற்படி வெற்றிதான் அனைவரது பார்வையும் மோடியின் மீது திரும்புவதற்கான காரணமாகும்.

மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்தியாவின் முற்போக்கு சக்திகள் என்போர் (இதில் அனேகர் தங்களை இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள்) கடுமையான எதிர்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தனர். மோடி ஒரு பாசிஸ்ட் என்றும் அவர் ஓர் இனப்படுகொலையாளி என்றெல்லாம் அவ்வாறானவர்கள் எழுதிக் குவித்தனர். படைப்பாளிகள் என்னும் பதாகையின் கீழும் ஓர் அறிக்கை வெளிவந்ததாக ஞாபகம் உண்டு. எழுத்தாளர் அருந்ததி ராய் போன்றவர்கள், இந்தியாவிற்குள் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும் மோடிக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால் மோடியின் வரலாற்று வெற்றி, இவர்கள் அனைவரது முகத்திலும் கரியை சற்று தாராளமாகவே பூசியிருக்கிறது. இவர்களது வார்த்தையில் மோடி ஒரு பாசிஸ்ட், இனப்படுகொலையாளி எனின், இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பாசிசத்தையும் இனப்படுகொலையும்தான் ஆதரித்திருக்கின்றார்கள் என்பதா இதன் பொருள்? தாங்கள் கண்களை மூடிக்கொண்டால், மறுநிமிடம் உலகமே இருண்டுவிடும் என்று நம்பும் இவர்கள், சாதாரண மக்களை எப்போதும் தங்களது கோட்பாட்டு சட்டகத்திற்குள்ளால் மட்டுமே அளவிட முயல்கின்றனர். ஆனால் இவர்கள் ஒரு போதுமே விளங்கிக்கொள்ளாத விடயமொன்றுண்டு, அதுதான் சாதாரண மக்களுக்கும் கோட்பாடுகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென்பது.

மோடியின் வெற்றிக்கு என்ன காரணம்? அவர் ஓர் இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர், இவைகளெல்லாமா காரணம்? அவ்வாறாயின் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இவ்வகை காரணங்கள் ஏன் செல்வாக்குச் செலுத்தவில்லை? மோடி தன்னுடைய கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுத் தேர்ந்திருக்கும் ஒரு ராஜதந்திர அரசியல்வாதி. தான் மூன்று தடவைகள் குஜராத்தின் முதல்வராக இருந்த அனுபவத்தை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பிரயோகித்து வெற்றியீட்டியிருக்கின்றார். காங்கிரஸ் ஆட்சியின் குறைபாடுகளை மிக நுட்பமாக மக்களுக்குள் கொண்டு சென்று, அந்தக் குறைபாடுகளை நிவர்த்திசெய்யும் ஆற்றல் தங்களுக்கே உண்டு என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்தார். இதுவே அவருக்கு ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

சில இந்திய ஆய்வாளர்கள், மோடியின் இன்றைய வெற்றியை, இந்திரா காந்தியின் 1971இல் பெற்ற வெற்றியோடு ஒப்பிடுகின்றனர். 1971 தேர்தலில் காந்தி 352 ஆசனங்களை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வென்றிருந்தார். இதன்போது, காந்தியின் - 'நான் வறுமையை அகற்ற விரும்புகிறேன். ஆனால் எனது எதிராளிகளோ என்னை அகற்ற விரும்புகின்றனர்' (They want to remove me, I want to remove poverty) என்னும் வாசகத்தை தனது பிரதான பிரச்சார சுலோகமாகக் கொண்டிருந்தார்.

இதனையொத்த சுலோகம் ஒன்றையே மோடி 2014இல் பிரயோகித்திருக்கின்றார். நான் அபிவிருத்தியை கொண்டுவர விரும்புகிறேன் ஆனால் அவர்களோ (எதிராளிகள்) என்னை தடுக்க வேண்டுமென்கின்றனர்' (I want to bring development, they say stop Modi). மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே மோடியலையொன்று உருவாகிவருவதாக அபிப்பிராயங்கள் மேலெழுந்தன. ஆனால் அது இவ்வாறானதொரு வெற்றியை கொண்டுவருமென்று அவ்வாறு குறிப்பிட்டவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்திய தேர்தல் வரலாற்றில் இந்திரா காந்திக்கு பின்னர் (முப்பது வருடங்களுக்கு பின்னர்) தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராகும் முதல் தலைவர் என்னும் பெருமையை மோடி பெற்றிருக்கின்றார். இதன் மூலம் தெற்காசியாவின் பலம்பொருந்திய தலைவர் என்னும் தகுதியை அவர் பெறுகின்றார்.

இதுவரை மோடியின் வெற்றி குறித்து சில அபிப்பிராயங்களை இப்பத்தி உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தது. இனி மோடியின் வெற்றி இலங்கை - இந்திய உறவில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பதை பார்ப்போம். இந்திரா காந்திக்கு பின்னர் பலம்பொருந்திய ஒரு பிரதமரை இந்தியா பெற்றிருக்கிறது. இந்திரா காந்தியின் காலத்திலேயே இலங்கை பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையீடு செய்தது. இக்காலத்திலேயே இலங்கையை, இந்திய நலன்களுக்கேற்ப கையாளும் நோக்கில், இலங்கையில் தோற்றம்பெற்ற தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா நேரடியாக பயிற்சிகளையும், ஆயுதங்களையும் வழங்கியிருந்தது. இந்திரா காந்தியால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்சித் திட்டத்தையே, பின்னர் அவரது மகன் ராஜீவ் காந்தி பொறுப்பேற்றார்.

இந்திரா காந்தியின் காலத்திலேயே பாக்கிஸ்தானை துண்டாடும் நோக்கிலான கிழக்கு பாக்கிஸ்தான் பிரிவினைக்கு இந்தியா ஆதரவு வழங்கியிருந்தது. இவைகள் அனைத்தும் அன்று இந்திரா காந்திக்கு இருந்த செல்வாக்கும், அவரது தற்துணிவுடன் முடிவெடுக்கும் ஆற்றலுமே காரணம் எனலாம். ஆனால் இதற்கு அன்றைய பனிப்போர் கால இருதுருவ உலக ஒழுங்கும் கூட காரணம். பாக்கிஸ்தானை துண்டாடுவதில் வெற்றிபெற்றதன் மூலம், இந்தியாவை தெற்காசியாவில் தவிர்க்க முடியாதவொரு அதிகாரமாக முன்னிறுத்துவதில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார். அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன் ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலின் போது, இந்திரா காந்தியை ஒரு நரி என்று குறிப்பிட்டிருந்ததாகவும் தகவலுண்டு. அந்தளவிற்கு அன்று அமெரிக்க-சோவியத் பனிப்போரின் போது, சோவியத் சார்புடன் அரசியலை கையாளும் திறனை இந்திரா பெற்றிருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் இந்திரா காந்திக்கு பின்னர் அத்தகைய தற்துணிவு மிக்க தலைவர்களை காண முடியவில்லை. ஆனால் இன்று மோடி பெற்றிருக்கும் வரலாற்று வெற்றியானது, அவ்வாறானதொரு இடத்தை மோடி பெறுவாரா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. மோடி குறித்து எழுதும் இந்திய ஆய்வாளர்கள் பலரும், மோடி வலுவான, தற்துணிவுமிக்க தலைவர் என்றே குறிப்பிடுகின்றனர்.

எனவே, மோடி இலங்கை விடயத்தில் மன்மோகன் சிங் போன்றும், ஏன் வாஜ்பாய் போன்றும் கூட நடந்துகொள்ள மாட்டார் என்பதே பொதுவான கருத்து. பாக்கிஸ்தான், சீனா ஆகியவற்றை கொண்டு கையாளும் கொழும்பின் மரபார்ந்த ராஜதந்திர அணுகுமுறை மோடியிடம் எடுபடாது. 2009இல் முப்பது வருடங்களாக எந்தவொரு அரசாங்கத்தாலும் தோற்கடிக்க முடியாதிருந்த தமிழ் புலிகள் அமைப்பை அழித்த அரசாங்கத்திற்கு தலைமை வகித்ததன் மூலம், மகிந்த ராஜபக்ச தெற்காசியாவில் மட்டுமல்லாது இதர பல ஆசிய நாடுகளிலும் பிரபலமான ஒரு தலைவராக அறியப்பட்டிருந்தார். ஆனால் மோடியின் வருகை தெற்காசியாவின் அனைத்து நாடுகளையும் மட்டுமல்லாது அனைத்து ஆசிய நாடுகளையுமே இந்தியாவை நோக்கி திருப்பியிருக்கிறது. எனவே இத்தகையதொரு சூழலில், கொழும்பு இந்தியாவிலிருந்து விலகிச் செல்லுமாயின், அது இலங்கை தனிமைப்படுவதற்கே வழிவகுக்கும்.

மோடியின் வருகை தொடர்பில் அபிப்பிராயம் வெளியிட்டிருக்கும் தெற்கின் முக்கிய கருத்தியலாளர்களில் ஒருவரும், இலங்கைக்கான முன்னைநாள் ராஜதந்திரியுமான தயான் ஜயதிலக, மகிந்த ராஜபக்சவும் மோடியும் ஒரே கொள்கைத் தறியில் நெய்யப்பட்ட துணித் துண்டுகளே என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் இது சரியானதொரு கணிப்பு என்று இப்பத்தி கருதவில்லை. தமிழ் புலிகள் அமைப்பின் மீதான வெற்றியை அரசியலாக்குவதில் வெற்றிபெற்ற ராஜபக்சவையும், இந்தியாவை உயர்த்துதல் என்னும் கோசத்தை முன்வைத்து வெற்றியீட்டியிருக்கும் மோடியையும் ஒரு நேர்கோட்டில் நிறுத்த முடியாது. இருவருக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு. ஆனால் தயான் குறிப்பிட்டிருக்கும் பிறிதொரு விடயம் கருத்தில் கொள்ளத்தக்கது. இலங்கை தமிழர் விடயத்திலோ அல்லது பாக்கிஸ்தானுடனான இலங்கையின் பாதுகாப்பு உறவுகள் தொடர்பிலோ, இந்தியாவிற்கு இருக்கின்ற கலக்கங்கள் குறித்து ராஜபக்ச தயக்கம் காட்டினால் அதற்கான விலையை அவரே கொடுக்க நேரிடும் என்பது தயானின் அபிப்பிராயம்.

மோடியின் இந்துத்துவா முகமும், அவரது அதிக செல்வாக்கும் தெற்கின் தேசியவாதிகள் மத்தியில் சில சலசலப்புக்களை ஏற்படுத்தியிருப்பது போன்றே தெரிகிறது. ஆனால் பாதுகாப்பு விடயங்களில் மோடியின் இந்தியா நெகிழ்வாக இருக்காது என்பதே பலரதும் கருத்து. மோடியின் வெளிவிவகார அணுகுமுறை எவ்வாறு அமையும் என்பதை இப்போதைக்கு கணிப்பிடுவது கடினமானாலும், முன்னைய வாஜ்பாய் கால இந்தியாவின் அணுகுமுறைகளை நினைத்துப் பார்ப்பதன் ஊடாக, மோடியின் அணுகுமுறைகள் எவ்வாறிருக்கலாம் என்பதை ஓரளவு ஊகிக்க முடியும். பி.ஜே.பியின் காலத்திலேயே 1998இல் இந்தியா ஐந்து இரகசிய அணுப் பரிசோதனைகளை (underground nuclear tests) மேற்கொண்டிருந்தது. இதனால் ஏற்படப் போகும் பின் விளiவுகளை பொருட்படுத்தாமலேயே வாஜ்பாய் இந்த விடயங்களை இரகசியமாக கையாண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 1999இல் பாக்கிஸ்தானுடனான இராணுவ நடவடிக்கையில் (கார்கில் யுத்தம்) ஈடுபட்டது. எனவே மோடி தலைமையிலான பி.ஜே.பி இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலும், பாக்கிஸ்தானின் எல்லைதாண்டும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பே அதிகம் இருக்கிறது.

தமிழர் விவகாரத்தை எடுத்து நோக்கினால், புலிகளை முன்னிறுத்தி தமிழ் அரசியலை சிந்திப்போர் மத்தியில், பொதுவாக காங்கிரஸ் மீது வெறுப்பும், பி.ஜே.பி மீது ஒரு விதமான கள்ளக் காதலும் வெளிப்படுவதை காணலாம். எப்போதும் காங்கிரசிடம் புலிகளை அழிக்கும் எண்ணமே இருந்தது. ஆனால் பி.ஜே.பியிடம் அப்படியான நோக்கம் இல்லையென்பதே இவ்வாறானவர்களது அபிப்பிராயம். இதற்கு வாஜ்பாய் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், புலிகளின் ஆதரவாளர் போன்று அபிப்பிராயங்களை வெளியிட்டதும் ஒரு காரணம் எனலாம். எனவே காங்கிரஸை விடவும் பி.ஜே.பி நல்லது என்பதே புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளின் அபிப்பிராயம். பெர்ணாண்டஸ் புலிகளின் ஆதரவாளராக தன்னை காண்பித்துக் கொண்டவர் என்பது உண்மையே. ஆனால், அவர் எதற்காக அவ்வாறு நடந்து கொண்டார் என்பதற்கு சான்றில்லை.

பெர்ணாண்டஸ் 1975இல், இந்திரா காந்தி, அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியபோது, அதற்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கைளை மேற்கொண்டவர். இக்காலத்தில் சில குண்டுவெடிப்புக்களையும் இவரது தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருக்கின்றனர். பின்னர் காந்தி அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தார் என்னும் குற்றச்சாட்டின் பேரில், பெர்ணாண்டஸ் கைது செய்யப்பட்டார். இக்காலத்தில் காந்தியின் அரசாங்கத்திற்கு எதிராக கலகங்களை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஜ.ஏயிடம் இவர் உதவிகளை கோரிய சம்பவம் தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. வெளியில் சோலிஸ்டாகவும், தொழிற்சங்கவாதியாகவும் தன்னை காண்பித்துக்கொண்ட பெர்ணாண்டஸ், அமெரிக்க எதிர்ப்பு கோசங்களை எழுப்பிக்கொண்டே, அமெரிக்க உளவுத்துறையிடம் உதவிகளை வாங்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே இப்படியான ஒருவரின் புலி அனுதாபம் சிக்கலுக்குரிய ஒன்றே.

ஆயினும் பி.ஜே.பி மத்தியில் இருந்தால், புலிகளை அழித்தொழிக்கும் நோக்கிலான இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கியிருக்காது என்னும் கணிப்பே புலிகளின் தலைமையிடம் இறுதிவரை இருந்தது. புலிகள், தங்களின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போதும், அவ்வாறானதொரு நம்பிக்கை வைகோவால் வழங்கப்பட்ட போது, அதனை உள்வாங்கிக் கொள்ளும் நிலையிலேயே பிரபாகரன் இருந்திருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசை, குறிப்பாக தமிழ்நாட்டின் ஆதரவின்றி ஆட்சியமைத்திருக்கும் பலமான மத்திய அரசாங்கம் தமிழர் விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளும்? ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எல்லைதாண்டிய பயங்கரவாத ஊடுருவல்கள் குறித்த இந்தியாவின் கவலைகளை கொழும்பால் புறம்தள்ளி செயலாற்ற முடியாதவொரு நிலைமை ஏற்படலாம். இதனடிப்படையிலேயே எதிர்கால இந்திய-இலங்கை உறவு அமையக் கூடும். மோடி இந்தியாவின் எதிர்கால அணுகுமுறைகள் முற்றிலும் மகிந்தவின் எதிர்கால அணுகுமுறைகளிலேயே தங்கியிருக்கிறது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=48a4e849-31ff-46b8-a2b0-8d9930f45dac

  • கருத்துக்கள உறவுகள்

மோடி இலங்கை விடயத்தில் மன்மோகன் சிங் போன்றும், ஏன் வாஜ்பாய் போன்றும் கூட நடந்துகொள்ள மாட்டார் என்பதே பொதுவான கருத்து. பாக்கிஸ்தான், சீனா ஆகியவற்றை கொண்டு கையாளும் கொழும்பின் மரபார்ந்த ராஜதந்திர அணுகுமுறை மோடியிடம் எடுபடாது....

 

ஒரு  உறையில் இருவாள்கள்..........

பார்க்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.