Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி நாட்டார் பாடல்களில் ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி நாட்டார் பாடல்களில் ஒரு பார்வை

vanni.jpg

வன்னி விவசாயக்கிராமங்கள் நிரம்பியது.இங்கு குளங்களும் கோயில்களும் காடுகளும் நிரம்பியுள்ளன.வன்னிவள நாட்டின் பாரம்பரியமிக்க வாழ்வியல் வழி பாடுகள் சடங்குகள் தொழில்கள் என்பன பற்றிய நாட்டார் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவை பெரும்பாலும் பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் எனவும் கூத்து, கதைப் பாடல்களாகவும் அமைந்துள்ளன.

பிள்ளையார் சிந்து, விறுமன்சிந்து, வதனமார்சிந்து ஐயனார் சிந்து, முருகையன்சிந்துஎன வழிபாட்டிலும், பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு, குருவிச்சிந்து இகொட்டுக்கிணற்றடிப்பிள்ளையார் கும்மி, கமுகஞ்சண்டை, என வகைவகையாக வழக்கிலுண்டு.

“முடியோடு தேங்காயைக் கையிலெடுத்தோம்

மூத்ததோர் கணபதியைத் தோத்திரம் செய்தோம்”

என என்ன வேலை செய்யப்புகுந்தாலும் விநாயகனைத்தொழுது செய்வது தமிழர் பழக்கம். ஏர் பூட்டும் போதே

“பட்டி பெருக வேணும் தம்பிரானே

பால்பானை பொங்க வேணும் தம்பிரானே” எனத்தொடங்கி…

“மேழிபெருகவேணும் தம்பிரானே

மாரிமழை பெய்யவேணும் தம்பிரானே”

என்று மழை வேண்டிப்பாடித் தொடங்கும் விவசாயியின் பெரும் சொத்து மாடுகள்தான். இவைகளைக் குடும்பத்தில் ஒருவராகவே கணித்து வளர்ப்பார்கள். அப்போ அவைகளை வேலை வாங்கும் போது பாடிக்கீடி சமாளித்து வேலை வாங்குவார்கள்.

“சார்பார்த்த கள்ளனடா…

தாய்வார்த்தை கேளாண்டா..

பாரக்கலப்பையடா செல்லனுக்கு…

பாரமெத்தத் தோணுதடா…

வரம்போதலகாணிஸ செல்லனுக்கு

வாய்க்காலோ பஞ்சுமெத்தை”

இப்படியே வேலை வாங்கும் விவசாயி இன்று வெள்ளாண்மை செய்யும் வேளாண் குடிமக்களாக உள்ளனர். மாரிமழை பெய்து வெள்ளம் வர அதை தன் தேவைக்கேற்ப வழி நடத்தும் திறமைக்காக அவன் வெள்ளத்தை ஆள்பவனானான். வெள்ளத்தை ஆள்பவன் வெள்ளாளன்.

மன்னராட்சி ஒழுக்கப்பட்டகாலத்தில் மன்னனுக்குரிய நிலங்களை குடக்கூலிக்கு விட்டவர்கள் அந்த நிலங்களுக்கே சொந்தக்காரராகி விட்டனர். இந்த நிலங்களைப் பண்படுத்தி பள்ளம் பார்த்துப் பயிர்செய்தவன் பள்ளனாகினான். இவாகளை வைத்து வேலை வாங்கியவர் “ஆண்டே” எனப்படும் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். வேலை செய்வவன் அடிமை அந்த அடிமையின் மகனும் அடிமை என கொத்தடிமை முறை நடைமுறையிலிருந்தது இவர்களது குடும்பப் பிரச்சனைகளில் கூட இந்த ஆண்டானே முடிவெடுத்தார். இதற்கு எடுகோளாக உள்ள பாடலடிகள்…

“பள்ளி பள்ளி பள்ளன் எங்கடி போனான்

பள்ளம் பாத்துப் பயிர்செய்யப் போனான்

கொத்தப்போனான் குழலுதப்போனான்

கோழிக்கூட்டுக்கு மண்வெட்டபபோனான்

தெந்தனா தன தெந்தந்தினானா தெனதெனா தெந்த தினதெந்தினானா”

இந்த இறுதியடிகளைத் தருப்போடுதல் என்பார்கள். உங்களுக்கு நினை விருக்கமோ தெரியாது கிராமத்தில் யாராவது கோள் சொல்லும்போது “ஓமோம் இவன்தான்” என்று யாராவது சேர்ந்து பேசினால் “நீ என்னடா தருப்போட வாறியே” என்று கூறுவது, இந்தப்பாடல்களின் வரிகள் எல்லொருக்கும் பாடமிருக்காது, எனவே தெரிந்தவர் பாட மற்றவர்கள் தருப்போடுவார்கள்.

நாங்கள் பாடலுக்கு வருவோம்….

பள்ளன் வயலில் வேலை சய்துகொண்டிருக்கிறான். பசி வாட்டுகிறது உணவு கொணடு வரும் பள்ளி மெதுவாக வருகிறாள். பள்ளன் கோபத்தோடு போய்…

“என்னடி பள்ளி நீ ஏகாந்தக்காறி..

இந்நேரம்மட்டும் என்னடி செய்தாய்?”

ஏன்று ஏசியபடியே கஞ்சிக்கலயத்தை எட்டி உதைத்துவிடுகிறான். பள்ளிக்குப் பொறுக்க முடியவில்லை. ஆண்டையிடம் போய் முறையிடுகிறாள்,

“ஆறுபோநதங்கு தண்ணீருமள்ளி

அழுதபிள்ளைக்குப் பாலும் புகட்டி

சீறுபூறென்று சிறுநெல்லுக்குத்தி

கமுகம்பூப்போலரிசியும் தீட்டி

காலத்தாலே நான் காச்சின கஞ்சியக்

காலாலே தட்டிப் போறானெயாண்டே ஆண்டே “

பள்ளனைக்கூப்பிட்டு விசாரிக்கிறார். அவனோ பள்ளியின் மீது குற்றம் சுமததுகிறான்.

“அருககுவாள் சற்றே விழிக்குமையெழுதுவாள்

ஆழகான கூந்தலை அள்ளிமுடிப்பாள்

செருக்குவாள் சற்றே செல்லங் கொண்டாடுவாள்

தேனுடன் கொஞசம் பாலும் கலப்பாள்

உருக்குவாள் ஊரில் பெடியளெல்லோரையும்

உச்சியம் பொழுதூணுக் கழைப்பாள்

நொருக்குவேன் கையில் மண்வெட்டியாலேநான்

ஆண்டைக்காகப் பொறுத்து விட்டேனே”

என்றுகூறி சமாளித்துவிடுகிறான் இதுபோல பள்ளனின் இரு தாரங்களுக்கிடையேயான சண்டைப்பாடல்களும் உண்டு.

கமக்காரனுடைய உழவுமாடுகள். காணாமற் போய்விடும் அப் போதெல்லாம் அவற்றைத்தேடி அலைய வேண்டிவரும். காடு மேடெல்லாம் சுற்றியலையும் போது தன்னைக்காக்க உடற்கட்டு மந்திரம் சொல்லிக்கொள்வான். ஊர் எல்லையெங்கும் ஐயனாரைக்காவல் வைத்திருப்பார்கள். மாடு தேடிப்போகும்போது நல் கேட்டித்தடி வெட்டி காட்டெல்லைக்கோயிலுக்குச் சாத்திவைப்பார்கள்.

“நாவியும் கீரியும் நுழையாத குருமனில

நாங்கள் நுழைந்தொரு குறும் பொல்லு வெட்டி

பொல்லு நல்லபொல்லு வெட்டிக்கட்டிய பொல்லு

மட்டடக்கும் பொல்லு இது…”

என வதனமார் சிந்தில் வரும் பாடல்வரிகளை நினைவில் கொள்ளலாம்.

“ஆட்டதிசையெல்லாங் கவரிவீச

ஆடர்ந்து சில மனிதர்வந்தடிபணிந்தேத்த

மட்டுலவுமச்சிலாய் வாழுமையனாரை

மலரடிகளென்று மனதிலயராமே…..” என்ற வரிகளும்

“சல்லியொரு கொம்பு முழவதிர

வெள்ளையானை மேலேறிவரும்

ஆதி சடவக்குளம்வாழுமையனாரே… ” எனவரும்வரிகளும்

“தொநதத் தொகுத்தியென மத்தள முழங்க

திசை தோறுமதிகாரர் சூழவே நிற்க

பங்கப்படுத்தியே மதகரிகள் தம்மையும்

பரிசுபெறவே வைத்து அரசாள நின்றாய்

துங்கப்பிரதாபனே எங்களுடையவனே

சொல்லரிய நரசிங்கமென்னுநாயகனே…”

எனவும் மிக இனிமையான சந்தக் கட்டுகள் கொண்டபாடல்கள் வன்னியில் இன்னும் வழக்கிலுள.

அறுவடைக்காலங்களில் பாடும் அரிவி வெட்டுப்பாடல்கள் பரந்த புகழ் கொண்டவை. பள்ளு இலக்கிய வகையில் பன்றிப்பள்ளு தனக்கென ஒரு பிரபந்தச் சிறப்பைக் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு அடியும். படிக்கவும் ரசிக்கவும் பின்னர் நினைத்துச் சிரிக்கவும் வியக்கவும் வைக்கும் தன்மை கொண்டன. வன்னியில் மட்டுமல்ல வேளாண்மை செய்யும் எந்த மக்களாலும் இதன் ஒவ்வொரு அடிக்கும் உள்ள நகைச்சுவைப் பண்பை வியக்காமல் இருக்க முடியாது.

சாதரணப் பன்றிகள் மனிதர்களைப் போல உணவு தேடி உண்டு களைத்து உறங்கும் போது பெண்பன்றி ஒருகனவு கண்டு திடுக்கிட்டெழுகிறது ஆண்பன்றி கனவின் பலனை ஆராய்ந்து சொல்கிறது. பின் மனிதர்களுடைய விளைவையழிக்கப் போகின்றன.

“மனிதர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்……

வனத்தையறுத்து நெருப்பைக் கொழுத்தி மரத்தின் தடிகள் பொறுக்கியே

வளைத்து வேலி நிரைத்துகட்டி வளர்நெல்விதைகள் துர்வியே

புனத்தில் அடரும் கரி கண்டுடனே புள்ளிமான் பல சாதிக்கு

பிரித்துக் கொடுத்து தனக்கு மிஞ்சிய பொருள் கொண்டேகும் மனிதரே

கனக்க விளைவிங்கிருக்கும் செய்தியை நமக்கிங் கொருவர் உரைத்திடார்

கன்னிதுயிலில் கண்ட கனவை கழறக் கேளும் மனிதரே

இனத்தில் பெரிய சாதி நாங்கள் பிழைக்க வழியில்லாமலே

ஏவர்க்கும் பெருமை கொடுக்கும் செந்நெல் விளைவு தறைக்குள் ஏகினோம்”

மிகப்பவ்வியமாக இன்னுமொரு வேண்டுகோள்…

“சொன்னபடிக்கு உடனே கமத்தை

சூழ்ந்து பண்டிகள் யாவரும்,

சுறுக்கு விளையும் தறைக்குள் வந்தோம்

துரத்த வேண்டாம் மனிதரே…”

ஏப்படி இருக்கிறது கதை? பன்றிதான் தன் மனைவியின் அழகை எப்படி வருணிக்கிறது! மனிதக்காதலாகவே இந்த அன்பும் குடும்பச் சண்டையும் இருக்கிறது.

“பன்னும் அடியும் நுனியும் தறித்த பனந்துண்டம் போல் அழகியே

புhவை எனது ஆசைக்கிசைந்த பருத்த உரல் போல் இடையினாய்” இதேபன்றிப்பெண்ணின் மொழியழகு வேறு.

“வுங்கண வடிவே என்கிளி மொழியே வஞ்சியரே குண ரஞ்சிதமே!

புண்புடனுனது பரு வயிறதுதான் பருகிற நினைவது தானோடி

கண்படுமெனது மைந்தரைத் தனியே கடுவழி நீவிடலாமோடி…”

பன்றிக்குட்டிகளைத் தனி வழி விட்டதற்காக தன மனைவியைக் கண்டிக்கும் போதுகூட எவ்வளவு அன்பாக விளிக்கிறது என்பது பலர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடந்தான. பன்றிப்பள்ளிலே பிள்ளைச் செலவ்ம் பற்றிய செய்தியும் உள்ளது

“நாடியே ஒரு பிள்ளையில்லாமல்

நாள்கள் தோறும் தவங்கள் புரிந்து

தேடியே எங்கள் சிவலிங்கப் பிள்ளையார்

சுpந்தை கூர்ந்தொரு மைந்தரைத ;தந்ததார்…”

பன்றி தறைக்குள் பாயும் வித்தை ஆம் அதை வித்தையென்றுதான் பாடல் வருணிக்கிறது.

“ அந்தியும் சந்தியுமறிந்தே பல விந்தைகள் சிந்தைகள் புரிந்தே”

“காலையும் மாலையும் பார்த்தே கரு மேகம் போலே கிளை சேர்த்தே”

“நாலுகால் சத்தமுமடக்கி நாய்க்குட்டி போல் மேனியை ஒடுக்கி

கூளைவால் கொள்ளியை மினுக்கிபண்டி கூட்டத்தோடோடி வந்ததுவே”

என ஒவ்வொ பாடலும் சுவைததும்பப் பண்ணியுள்ள அந்தக் கவி நாட்டார் பாடல் மரபின்படி காணாமல் போக்கடிக்கப் பட்டுள்ளார். அருவிச்சிந்துகள் பல முன்னர் குறித்தவைகூட அரிவி வெட்டுப்பாடல்கள்தான்

“மட்டுக்கருக்காலே அரிவாளைத்தீட்டி மாவிலங்கம்பிடி தன்னில் இறுக்கி

வெட்டும் பிடியைச் சிறக்கவே வெட்டி வெள்ளித்தகட்டாலே விரல்கூட்டமிட்டு…”

என்று கத்தியின் சிறப்பு கூறப்படுகிறது மட்டுஎன்பது மட்டக்களப்பின் சுருக்கம் மட்டககளப்பு தாக்கத்தி ஒன்றரை அலலது இரண்டங்குல அகலமான முனை சுருட்டிய வளைவு; கத்தி வீசிக் கோலினால் ரெண்டு முன்று வீச்சுக்கு கைநிறையும். மூன்று கைக்கு ஒரு உப்பட்டி விழும். பாடலும் அதற்கெற்ற தொழில் சார் சந்தம் அமைந்திருப்பதை கவனிக்கலாம்.

1.மட்டுக்கருக்காலே 2. அரிவாளைத்தீட்டி 3. மாவிலங்கம்பிடி நாலாவது சொல்லுக்கு உப்பட்டி கீழே விழும். ஏல்லாப் பாடலகளிலும் இந்த ஒழுங்கைக் காணலாம்.

“கூழாவடியாம் குளிர்ந்த நிழலாம் குளக்கட்டு நீளம் புளியமிணலாம்….

யாடா எந்தன் குளக்கட்டுத்தனிலே?

நாங்கள்தான் அந்த சிந்துகவி பாடியோர்.

நூயைப்pடித்ததன் தௌ;ளையுறந்து

நல்லதோர் ஈட்டிவாள் கையிலெடுத்து

பாசக்கயிறுருவி பண்டிக்கு நாய்விட்ட

பரமசிவனையனைப் பாடியே வாறோம்”

குருவிச்சிந்தும் குருவிகளின் அடாவடித்தனத்தைப் பற்றியதாகவே அமைந்திருக்கிறது.தேர்ந்த ஒரு விவசாயியால் உய்த்துணரப்பட்ட விடயங்களே பாடலாகவுள்ளது எதுவும் மிகையல்ல என்பதை சக விவசாயிகளால் புரிந்து கொள்ளமுடிகிறது.

“கோலமலை நீலமலை குருந்துமலை கண்டல்

கொக்கிளாய் பரந்தமலை மெம்மலை குருந்தேர்

கன்னியங் குமரிமலை ஒதியமலையேகி

பொதியமலை நாயாறு தட்டாமலைக்குருவிமுதலாய்

தோற்றமுள்ள கந்தளாய் குளமேவு மலையினொரு

சோல்லரிய பூநேரிசூழுமலையாளம் ………

குருவிக்கிளை பறந்துவருதே……

பாலர்பாடல்கள் கதைப் பாடல்கள், குருவிச்சி நாச்சியார் சலிப்பு, வன்னிச்சி நாச்சியார் மான்மியம், கொட்டுக்கிணற்றடிப் பிள்ளையார் கும்மி, அரியாத்தை ஒப்பாரிஇபோன்ற கதைப் பாடல்கள் இன்றும் வழக்கிலுள்ளன.

ஓப்பாரி என்ற அருமையான பாடல்களும் பாடும் திறமையும் இருக்கிற தலைமுறையுடன் மறைந்து போய்விடுமோ என்ற அச்சமுள்ளது. இறந்து போன ஒருவரைப்பற்றி அவரதுகுணநலங்களையும் அவருக்கும் தனக்குமுள்ள பந்தத்தை பாட்டாகப் பாடுவதே ஒப்பாரி ஒப்பு ஆரம் வன்னியில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழுமிட மெங்கும் ஒப்பாரி வழக்கிலுள்ளது. சாமானிய படிப்பறிவேயில்லாத பெண்கள் கட்டியழும் போது பாடும். இந்தப்பாடல்களில் எதுகைமோனை வருணனை ஏசல் வசை பாசம் என்ன இல்லை?

கொழும்பிலுள்ள மகள் தந்தை இறந்த செய்தி கேட்டு ஓடிவருகிறாள். ஆய்யோ என் அப்பன் உயிர் பிரியுமுன் வர முடியவில்லையே! ஏன்ற ஆதங்கம் பாடலில்வருகிறது

“வாடமுன்னம் வந்தனில்லே…உன்

வண்ணமுகம் பார்ப்பதற்கு….

சோரமுன்னம் வந்தனில்லே

உன்ர சோதிமுகம் பார்ப்பதற்கு

அருகிருந்தோ பாக்கயில்லை நான்

அள்ளிப்பால் வார்க்கயில்லை

கிட்டருந்தோ பாக்கயில்லை அய்யா நான்

கிள்ளிப்பால் வார்க்கயில்லை…”

என்ற ஒப்பாரியாகவே தன் சோகத்தைச்சொல்கிறாள்.

கணவனை இழந்து விட்ட்பெண்ணின் சோகம் இது…

“கோடடை வாசலய்யா…இப்ப கூகை குடிகொள்ளுதய்யா…

மாளிகைத் தோப்பையா இண்டைக்கு

மங்கலமிழந்ததையா”

மகன் இறந்து போனான் பாடலிலே பாசமழை அவள் கண்களில் மகனின் பிரிவு ஏதோ தன்னால்தான் ஏறபட்டதாக எண்ணிப்பாடுகிறாள்…

“அய்யா நான் மல்லிகைப்பூமாலையிட்டு

மடியில் வைச்சுப் பாக்காம….

எருக்கம்பூமாலையிட்டோ எடுத்தெறிஞ்சேன் பூமியிலே…”

நாட்டார் பாடல்கள் என்பது கடலளவு அதில் ஒருசிறு துளியை ரசித்தோம். தொட்டிலில் தொடங்கி சுடுகாடுமட்டும் தொடர்வது பாடல்கள் இதனாலே” “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்”என்ற பழமொழி உருவானது.

“தமிழ்க்கவி”

http://www.aambal.co.uk/vanni-nattar-padal/

கொஞ்ச நாட்களுக்கு முன் நாட்டார் பாடல்களைப் படிக்க வேண்டும் போல் ஆவல் வந்தது. மட்டக்களப்பு , வன்னி,  யாழ்ப்பாணம், மலையக நாட்டார்பாடல்கள் இருந்தால் பகிருங்கள். பத்தாம் வகுப்பில் படித்ததில் ஒரு சில வரிகள் தான் ஞாபகம்.
 
தேசிப் பழத்தழகி,
தேங்காய் ‍ ‍*** அழகி...  :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வெட்கம் ஈசன்?

தேசிப் பழத்தழகி

தேங்காய் முலையழகி

பாசிப் பழத்தழகி

பக்கத்தில் நான் வந்திடுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

 மலையக நாட்டார் பாடல்கள்  சில


கட்டுச்சோறு


நம் தழிர்களின் வாழ்வில் கட்டுச்சோறும் சின்னப்பிள்ளைகளின் வாழ்வில் கூட்டாஞ்சோறும் மிகவும் பிரிக்க முடியாத ஒன்றாய் கலந்த ஒரு அம்சமாகும். கதிர்காமம்,மற்றும் பயணம் செல்லும் இடங்களுக்கு கட்டுச் சோறு கட்டிக் கொண்டு போவது நம்மில் பிரிக்க முடியாது....

ஒரு சோறு, கருவாட்டுக் கறி, கத்திரிக்காய் குழம்பு.. வாழைக்காய் பிரட்டல், இப்படி ரெண்டு மூன்று சாப்பாட்டு ஐட்டங்களுடன் ஒரு வாழையிலையில் சுற்றி அப்படியே எடுத்துக் கொண்டு..... அல்லது ஒவ்வொரு பானையாக அடுக்குப் பானையாக்கி... அல்லது டிபன் கெரியரில் எடுத்துச் சென்று விளையாட்டுத் திடலிலோ பயணம் செய்யும் இயற்கை இடத்திலோ உட்கார்ந்து ஆறஅமர அதனைப் பிரித்து அதிலிருந்து வரும் கமகம வாசனையோடு....... ச்சா.... என்ன அருமை........ நளபாகம் தோற்றுப் போகும்.... ஆனால்....


இந்த ஏழைகளின் கட்டுச்சோறு.......... அது வெறும் இருக்கும்............. ஆனால் இருக்காது............. கட்டுச் சோறு கட்டுவதற்கு கருவாடு.......? வீட்டில் சின்னப் பிள்ளைகள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு பயணம் செல்வோமே என்று கேட்டுவிடுவார்களோ என்று பயந்து அந்தக் காலத்தில் வானத்தில் இல்லாத வெள்ளைக் காக்கா பறக்குத புர்ர ஏனு;று சொல்லி பிள்ளையின் எண்ணத்தை திசை திருப்பும் அழகு நம் தமிழரின் கற்பனைக்கும் களவுத் தமிழுக்கும் புதிய இனிமை தான். கட்டுச்சோறு  பாடலைப் பாருங்கள்......................


காக்காயே காக்காயே
எங்கம்மாவ கண்டிங்களா!
கச்சை கருவாட்டுக்குக்
கையேந்தி நிக்கறிhங்க!
மாங்க பொளப்புக்கு
மாருமேல நிக்கிறாங்க!
தேங்காயப் பொளப்புக்கு
தேருமேல நிக்கிறாங்க!

இங்கு பாருங்கள். ஒரு கள்ளக் காதலின் வரிகளை. ஆன்மீகக் காதல்.தெய்வீகக் காதலுக்கு அப்பால் ஒரு உணர்வுபூர்வமான கள்ளக் காதலையும் நாட்டார் பாடல்கள் விடவில்லை. சுவைத்துப் பாருங்கள்!

ஏரியின்னா ஏரிதாண்டி...
ஏரி நான் உலுக்கரண்டி-பெண்ணே
தாவி என்ன புடிச்சுகிடி

தாவி நல்லா புடிச்சேனே மாமா
கை வளையல் சேதமாகும்
என் புருசன் கேட்டு நின்னா-நான்
என்ன பதிலச் சொல்லுறது?

குனிஞ்சு சாணி அள்ளயிலே
வெறகு ராட்டி தட்டயிலே
தவறிட்டு உடைஞ்சுதின்னு
தந்திரமா சொல்லியழுதேன்!

இங்கு காதலன் தன் தொழிலிடத்தில் காதலியை உவமிப்பது, அன்பை வெளிக்காட்டுவது, கால நேரங் கடந்து தேயிலைக் காடுகளிலே வேலை செய்யும் பெண் என்பதற்கபப்பால் காதலியின் அழகை சுவைபட வாய்மொழி அழகால் தந்திருக்கும் பாங்கு இன்றைய சினிமாப் பாடல் வரிகளைக் கூட ஒரு காலத்தில் மிஞ:சும் அளவிற்கு தந்திருப்பது காதலின் பால் கொண்ட வெறியா? அல்லது மக்களுடைய இயல்பு வாழ்க்கைச் சித்திரிப்பா என்பது இரசிப்பவரின் உள்ளங்களைப் பொறுத்தது தான். பாருங்கள் இந்தத் தொழிற் பாடலை.......

கொத்தமல்லித் தோட்டத்திலே
கொழுந்து கிள்ளிப் போற பெண்ணே
கொண்டு வந்தேன் மல்லிகைப் பூ
ஒன் கொண்டையிலே சுட்டிவிட

அஞ்சு மணியாச்சு
ஐயா வர நேரமாச்சு
கொஞ்சு விளையாடாதீங்க
கோளுக்காரன் கங்காணி

சவுக்கு மரம் போல
சரடா வளர்ந்த புள்ள
இன்னும் செத்த நீ வளர்ந்தா
செத்திருவேன் ஒன் மேல

அஞ்சுங் கிளியழகே
ஆடு தொடை ரெண்டழகே
கொஞ்சுங் கிளியழகே
கொந்தரப்பா வெட்டப் போற

இப் பாடல் தொழிற்பாடலாக அமைந்தாலும் காலத்தை வெல்லும் காதல் வரிகளால் அணிகளின் சிறப்பு அழகாக வாய்மொழி இலக்கியம் தருவது நமது கல்வி அறிவில்லாத காலத்தில் நம்மவரின் மொதழி ஆற்றல் சிறப்பு சிந்தை கவருகிறதல்லவா?

பல்லக்கு .......... பாடை.................. இந்த இரண்டில் ஒன்று நாம் உடலை மறக்கும் போது நாலு பேரால் தூக்கப்படும்... ஆனால் பள்ளக்கு? இது உயரிய கௌரவம் கிடைத்தாலும் தூக்கப்படும்.. ஒரு சிலருக்கு மரணத்தின் பின்னரும் தூக்கப்படும். இப்டிப்பட்ட ஒன்றான மரணப்படுக்கையாகிய பள்ளக்கை இந்த நாட்டார்பாடல்கள் வெகு அருமையாகத் தருகின்றன.

மனிதன் இறந்த பின்பு அவனை சுமந்து செல்லும் ஊர்திகள் எத்தனை அலங்காரம் செய்யப்பட்டிருந்தாலும் அவருக்குப் புரியுமா என்னஃ அதுபோல இந்தப் பல்லக்கின்  அலங்காரமும் போற்றப்படுகின்றது. அதுவும் உறவுககளால்.. தங்களுடன் வாழ்ந்த ஒரு ஆன்மாவிற்கான இறுதிப் பயத்தில் எப்டியெல்லாம் அலங்காரமிடப்பட்டிருக்கும் என்பதை இந்த எழுதா இலக்கியம் உயிர்த்துடிப்புடன் சொல்கின்றது. பாருங்கள்..........

பல்லக்கு செம்புங்களாம் எங்கப்பாவுக்கு
பளபளக்கும் முத்துக்களாம்
பட்டு பளபளக்குஎங்கய்யாவுக்கு
பல்லக்கு ஆடிவரும்
ஈனாத வாழைகளும் எங்கய்யாவுக்கு
இருபுறமும் ஆடிவரும்
பல்லக்கில் குடையிருக்க
எங்கய்யாவுக்கு பட்டுபோல்
தெரையிருக்க
பல்லாக்க விலை மதிப்பார்
எங்கய்யாவுக்கு
பட்டோலை யார் தருவார்?

தேயிலைச் சாரலில்
பெரியசாமிப்பிள்ளை லோகேஸ்வரன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிச் சீமை! சொந்த ஊரில் வறுமை என்பதனால் இங்கு வந்து எதை எதை இழந்தோம்? எல்லாவற்றையும் இழந்தோமே! இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டதால் நாம் இழந்தவைகள் எத்தனை? எத்தனை?

இழந்தவைகளையெல்லாம் சொல்லி, ஏண்டி நீயும் இங்கே வந்தே? என வினா தொடுத்து தன் சோகங்களை அள்ளித் தெளிக்கும் வார்த்தைக் கவிகளின் சிறப்புகள்.....

எதையெல்லாமோ நாம் இழந்தோம்.. கடைசியில்.. பெத்த தாயையுமல்லவா நாம் இழந்தோம்? இதைவிட இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கின்றது? கண்டிச் சீமைக்கு வந்த பின் நம் நிலைமை தான் என்ன? இந்த பாடல் அழகாக தருகிறது. சுவைத்துப் பாருங்கள்.....

கண்டிக்கு வந்தமினு
கனத்த நகை போட்டமினு
மஞ்ச துளிச்சமினு
மனுச மற்க தெரியலியோ

பாதையிலே வீடிருக்க
பழனிசம்பா சோறிருக்க
எருமே தயிரிருக்க
ஏண்டி வந்தே கண்டிச் சீமை

ஊரான ஊரிழந்தேன்
ஒத்தபனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயே நாமறந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

கோண கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே     
ஒரு பழம் தப்பிச்சுன்னு
உதைச்சானைய்யா  சின்னத் துரை. :D

  • கருத்துக்கள உறவுகள்

 1972 -‍‍ 1976ம் ஆண்டுகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது ஏற்ப்படுத்தப்பட்ட சுய உற்பத்திக் கொள்கையினால் (உள்நாட்டு உற்பத்தி) அதிகமாக மலையக மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சொந்த விவசாய நிலமற்ற தோட்ட தொழிலாளர்கள் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்க்கு வழியிலாம் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அந்த வேதனை எடுத்து கூறும் பாடலே இது!


பண்டாவின் ஆட்சியிலே.. - நாங்கள்
பட்டினியில் வாடலானோம்...
அதை நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம்
பதை பதைத்து துடிக்குதடீ தங்கமே தங்கம்

அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுயில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கமே - நமக்கு
சோளம் மாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

மலைநாட்டு மக்கள்ளெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க‌
மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் - நாங்க‌
மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்

சேந்து மடியலாமோ தங்கமே தங்கம் - நமக்கு
சேமங்கீரை பஞ்சமாச்சி தங்கமே தங்கம்

தட்டு முட்டுச் சாமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே

தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம்
தவிடு பொடியாச்சுதடி தங்கமே தங்கம் - நம்ம‌
தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்..!

ஒரு ராத்தல் பானுக்குத்தான் தங்கமே தங்கம் - நாம‌
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம்
ஓடி யலைஞ்சோமே தங்கமே தங்கம் - நாம‌
ஒரு யாரு சீத்தைக்குதான் தங்கமே தங்கம்.

(அரிசியில்ல)



நன்றி - கலை இராகலை

ஊரான ஊரிழந்தேன்

ஒத்தபனை தோப்பிழந்தேன்

பேரான கண்டியிலே

பெத்த தாய நாமறந்தேன்

 

 

இந்த வரிகளையே தேடினேன். எத்தகைய வருத்தும் வரிகள்.
 
அந்தப் பாமரர்கள் பட்ட வேதனைகள் தான் எவ்வளவு ?
 
மலையக்த்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
 
நன்றி வாத்தியார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.