Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிஷாவும் திவ்யாவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரிஷாவும் திவ்யாவும்

ராஜ்சிவா

Raj-Siva-(1).jpg

நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம், பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நடந்திருக்கும். அதை அந்தக் கணத்தில் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனாலும் அப்போது அது உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும், ஆற்றாமை யையும் தந்திருக்கும். ‘என்ன இது? நான் நினைப்பது தப்பா? அல்லது இவர்கள் நினைப்பது தப்பா?’ என்று அந்த ஒரு நொடியில், கேள்வியொன்று உங்களுக் குள் உருவாகி மறைந்திருக்கும். ஆனாலும் அந்தக் கணத்திலேயே அதைப் பெரிதுபடுத்தாமல் மறந்து போய்விடுவீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் மறந்து போவதற்கு அது ஒரு சின்ன விசயமே கிடையாது. நவீன அறிவியலில், அதாவது குவாண்டம் இயற்பியலில் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கும் நிகழ்வு அது. ‘நான் இப்போது எதைப் பற்றிப் பேசுகிறேன்’ என்றுதானே யோசிக்கிறீர்கள்? சொல்கிறேன், ஆனால் அதற்குக் கொஞ்சம் அறிவியல் பார்க்க வேண்டும். நீங்கள் தயார்தானே?

நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ அல்லது உறவினர் களுடனோ ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அந்தப் படத்தில் திரிஷா நடித்துக் கொண்டிருப்பார். படத்தில் திரிஷாவின் கேரக்டர் அன்றாடம் நாம் காணும் ஒரு பெண்னின் கேரக்டராக இருக்கும். படத்தில் திரிஷாவைப் பார்த்தவுடன், ‘அட! நம்ம திவ்யா மாதிரியே அச்சு அசலாகத் திரிஷா இருக்கிறாரே!’ என்று உங்களுக்குத் தோன்றும். ‘திவ்யா’ என்பது உங்கள் உறவுப் பெண்ணாகவோ, நட்பு வட்டாரத்தில் இருக்கும் பெண்ணாகவோ, உங்கள் கனவில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யும், நீங்கள் விரும்பும் ஒரு பெண்ணாகவோ இருக்கலாம்.

திரிஷா, திவ்யா மாதிரி இருப்பது உங்களுக்குப் பெரிய ஆச்சரியத்தைத் தரும். அந்தத் திரைப்படத்தில் திரிஷாவின் அனைத்து முகபாவனைகளும் திவ்யாவையே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். அதை மனதுக்குள் வைத்திருக்காமல் அங்கிருப்பவர் களிடம், “திரிஷாவைப் பார்க்க அப்படியே திவ்யா மாதிரி இருக்கு, இல்லையா?” என்று சொல்வீர்கள். அப்போது, உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரும் உங்களை ஒரு வினோத ஜந்து போலப் பார்ப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான அபிப்பிராயம் மனதில் ஓடிக்கொண் டிருக்கும். ஆனால் உங்களைத் தவிர, படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் எவருக்கும் திரிஷா, திவ்யா மாதிரியே தெரிய மாட்டார். ஒரு அசப்பில் கூட திவ்யா போலத் தெரியாது. அனைவரும் உங்களை ஏளனம் செய்வார்கள். “போயும் போயும் திவ்யாவைத் திரிஷா போல இருக்கு என்று சொல்கிறாயே!” என்று கலாய்ப் பார்கள். ஆனால் உங்களுக்கு அதற்கு அப்புறமும் திவ்யா மாதிரியே, திரிஷா தோன்றிக் கொண்டிருப்பார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கும். ‘திவ்யாவில் இருக்கும் ஏதோ ஒருவித அபிமானம்தான், திரிஷா போலத் திவ்யாவை இவனுக்குக் காட்டுகிறது’ என்று அவர்கள் நினைப்பார்கள். நீங்களோ உங்கள் கணிப்பில் மாற்ற மில்லாமல் இருப்பீர்கள். இது போலச் சம்பவங்கள் பலருக்குப் பல சமயங்களில் நடந்திருக்கும். ஒருவரைப் பார்க்கும் போது, வேறு ஒருவரைப் போல இருப்பதாக தோன்றுவது அடிக்கடி நடப்பதுதான். ஆனால் மற்றவர்களிடம் கேட்டால், அப்படி இல்லவேயில்லை என்று மறுப்பார்கள்.

இந்தச் சம்பவங்களில் என்ன நடக்கிறது? இங்கு யாரில் தப்பு இருக்கிறது? உங்கள் பார்வையிலா? அல்லது உங்கள் நட்புகள், உறவினர்கள் பார்வையிலா? அல்லது ஒருவரில் இருக்கும் அதீத ஈடுபாட்டின் வெளிப்பாடா? இது பார்வை சார்ந்த விசயமே இல்லாத வேறு ஒன்றா? இங்கு யார் சொல்வது பொய்? யார் சொல்வது உண்மை? நவீன அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? ‘நீங்கள் சொல்வதும் உண்மை. உங்கள் நண்பர்கள் சொல்வதும் உண்மை’ என்கிறது நவீன அறிவியல். ‘அது எப்படிச் சாத்தியம்’ என்ற கேள்வி இப்போது உங்களுக்குத் தோன்றும். திவ்யா, திரிஷா மாதிரி இருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்றாகச் சாத்தியமாக முடியாதே! இரண் டுமே உண்மையாக இருக்க எப்படி முடியும்? இந்தக் குழப்பமான இடத்தில்தான், அறிவியல், ஆச்சரியமான கருத்து ஒன்றைச் சொல்கிறது.

Raj-Siva-(2).jpg

‘நீங்கள் பார்த்து, உங்கள் மனதில் பதிந்து வைத்திருக்கும் திரிஷாவின் உருவத்தை, மற்றவர்களின் மனது அப்படியே பதிந்து வைத்திருப்பதில்லை. உங்களுக்குத் திரிஷா எப்படித் தெரிகிறாரோ, அதே தோற்றத்தில் மற்றவர்களுக்கு தெரிய மாட்டார்’. அதாவது ஒரு பொருளோ, ஒரு உருவமோ ஒருவருக்குத் தெரிவது போல, அடுத்தவருக்குத் தெரியாது. திரிஷாவைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும், தனித் தனியாக வெவ்வேறு வடிவத்திலான திரிஷாக்களே தெரிந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு திரிஷாவுக்கும் நுண்ணிய வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் நாம் ஒரே திரிஷாவைப் பார்ப்பதாகத்தான் நினைத்துக் கொள்கிறோம். நான் பார்க்கும் திரிஷாவைத்தான் நீ பார்க்கிறாய் என்று எங்கும் நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. என்ன புரிகிறதா?

நவீன இயற்பியலின்படி, குறிப்பாக குவாண்டம் இயற்பியலின்படி, பூமியில் இருக்கும் அனைத்தும் தகவல்களாகவே (Information) அமைக்கப்பட்டி ருக்கின்றன. நான், நீங்கள், அந்த நாற்காலி, வீட்டின் அருகே இருக்கும் கோவில் என எல்லாமே, இன்பார் மேசன்களின் மூலம் அடுக்கப்பட்டு உருவாக்கப் பட்டவை என்கிறது அறிவியல். இது நிச்சயம் புரிந்து கொள்ள முடியாத சிக்கல்தான் இல்லையா? ஒரு உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம். ஒரு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வீடு முழுவதுமே செங்கற்களால் கட்டப்பட்டவை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் வெளியே நின்று அதன் அமைப்பைப் பார்க்கும் போது, அது விதவித மான வடிவங்களில் நவீனமாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அதை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அவையெல்லாம் பல செங்கற்களின் ஒழுங்கான அமைப்பின் மூலம் உருவானது என்பது தெரியும். ஒவ்வொரு செங்கல்லும் செவ்வக வடிவில் காணப் பட்டாலும், அவற்றை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட வீடு, வளைந்து அழகிய வடிவத்தில் காணப்படும். இப்போது, இந்தச் செங்கற்களை ஒழுங்காக அடுக்கு வதற்கு எது உதவியது என்று பார்த்தால், அந்த வீடு கட்டுவதற்கென்று ‘வரைவு’ ஒன்று, இதற்கென்றே படித்துப் பட்டம் பெற்ற ஒருவரால் வரையப்பட் டிருக்கும். அந்த வரைவு, கணினி மூலமாக கணித விதிகளின்படி வரையப்பட்டிருக்கும். அந்த வரைவை அடிப்படையாக வைத்தே அந்த வீடு கட்டப்பட் டிருக்கும். இந்த வரைவை எடுத்துக் கொண்டால், அந்தக் கட்டடம் அமைப்பதற்கான சகல தகவல்களையும் (informations) அது கொண்டிருக்கும். அதாவது, அமைக்கப்படும் அந்த வீடும் இந்தத் தகவல்களைக் கொண்டதாகத்தான் இருக்கும். புரிகிறதா?

இது போலத்தான் ஒரு மனிதனும். ‘கலம்’ (Cell) என்று சொல்லப்படும் மிகச் சிறிய ஒன்றினால் உருவாக்கப்பட்டிருக்கிறான். நேர்த்தியாக அமைக்கப்பட் டிருக்கும் கலங்களின் கட்டட அமைப்பே மனிதன். மனிதன் இந்த வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற தகவல்களை அவனுள் இருக்கும் மரபணுக்கள் (DNA) வைத்திருக்கும். சொல்லப் போனால், ஞிழிகி யில் இருக்கும் இன்பார்மேசன்களின் வெளிப்பாடுதான் ஒரு மனிதன். இது போலத்தான் அனைத்துமே! அணுவிலிருந்து அண்டம் வரை அனைத்தும் ஒரு வகைத் தகவல்களின் அடிப்படையிலேயே அதனதன் உருவங்களை எடுத்திருக்கின்றன. இப்போது கணினியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் பார்க்கும் படங்கள், காணொளிகள், பாடல்கள், பேச்சுக்கள், எழுத்துகள் எல்லாமே 0, 1 என்னும் பைனரி வகைத் தகவல்களாகவே கணினிக்குள் இருக்கின்றன. கணினியில் நீங்கள் பார்க்கும் அழகான ஒரு போட்டோ, இரண்டேயிரண்டு கணித இலக்கங்களால் உருவாக்கப்பட்ட தகவல்கள் என்றால் நம்பவே முடியாமல் இருக்கிறதல்லவா? கணினியை விடுங்கள். தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, சாட்டிலைட் என அனைத்துமே மின்காந்த அலைகள் என்று சொல்லப்படும் தகவல்கள்தான்.

உங்கள் வீட்டுக்குள் இருக்கும் தொலைக்காட்சியில் தெரியும் கமலஹாசன் நடப்பார், இருப்பார், சிரிப்பார், நடிப்பார், எல்லாமே செய்வார். இவையெல்லாம் மேலே பறந்து கொண்டிருக்கும் சாட்லைட் மூலமாக ஒளிபரப்பப்படும் மின்காந்த அலைகள்தான் (Electromagnetic wave). அந்த அலைகளில் கமலஹாசன் தகவல்களாக மாறி, தானும் ஒரு அலையாக நம் வீட்டின் தொலைக்காட்சியிலும் நடக்கிறார், சிரிக்கிறார், வருகிறார்.

Raj-Siva-(3).jpg

அண்டம் முழுவதும் இருக்கும் திடப்பொருட்கள் அனைத்துமே ஒரு தகவல்களின் கட்டமைப்பின் மூலமே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன. தகவல்களின் ஒழுங்கமைப்புத்தான் என்னையும், உங்களையும், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த ‘உயிர்மை’ இதழையும் வடிவமைத்திருக்கிறது. நவீன அறிவியல் இதைத்தான் தெளிவாகச் சொல்கிறது. இதை மையமாக வைத்துத்தான் காலப்பிரயாணத்தின் (Time Travel) சாத்தியத்தையும் கணித ரீதியாக நவீன அறிவியல் நிறுவவும் செய்கிறது. இப்போதும் புரியவில்லை என்றால், ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்கிறேன்.

நீங்கள், உங்கள் காதலிக்கு ஒரு அழகிய கண்ணாடி யிலான தாஜ்மஹால் உருவப் பொம்மையைப் பரிசாக வாங்கிச் செல்கிறீர்கள். அதைக் கைகளில் கொடுக்கும் போது, அவள் அடையப் போகும் மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் சிந்தித்துக் கொண்டே செல்வதால், எதிரே இருக்கும் விளக்குக் கம்பத்தைக் கவனிக்காமல் அதில் மோதிவிடுகிறீர்கள். கையிலிருந்த தாஜ்மஹால் நிலத்தில் விழுந்து சிதறுகிறது. அதன் கண்ணாடிச் சிதறல்கள் நிலம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது. ஆனால் உங்களிடம் இறந்தகாலத்துக்குப் பயணம் செல்லக் கூடிய ஒரு கருவி (Time Machine) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிகமெல்லாம் வேண்டாம், சில நிமிடங்கள் மட்டும் இறந்த காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லும் சக்தி உள்ள கருவி அதுவாக இருந்தால் மட்டுமே போதும். அந்தத் தாஜ்மஹால் பொம்மை சிதறிய அந்தக் கணத்திலிருந்து ஒரு நிமிடம் பின்னாடி பயணம் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

திரைப்படங்களில் காட்டுவார்களே ‘ஸ்லோ மோஷன்’, அதுபோல மெதுமெதுவாக அந்த ஒரு நிமிடம் பின்னோக்கி நகர்கிறது என்று சிந்தியுங்கள். அப்போது என்ன நடக்கும்? கீழே எங்கெல்லாமோ சிதறி விழுந்து கிடக்கும் தாஜ்மஹாலின் ஒவ்வொரு சின்னத் துண்டுகளும், மெதுமெதுவாகச் சேர்ந்து தாஜ்மஹால் உருவம் பெற்று, உங்கள் கைகளை நோக்கி மேலே நகரத் தொடங்கும். நிச்சயம் இந்தக் காட்சியை உங்களால் கற்பனை பண்ண முடியும். விழுந்துடைந்த அதே வடிவத்தில் மீண்டும் அதே தாஜ்மஹால் எப்படி உருவாக முடியும் என்று பார்த்தால், அவையெல்லாம் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்களின் மீளமைப்பு என்பது புரியும். இந்தச் சம்பவத்தில் நடந்த அனைத்தும் சாத்தியம்தான் என்று நவீன குவாண்டம் இயற்பியல் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறது.

Raj-Siva-(4).jpg

அதை முழுமையான இயற்பியல் கணிதச் சமன்பாடுகள் மூலம் சமப்படுத்தி, ‘இது முடியும்’ என்று திடமாகச் சொல்கிறது. இதை எந்த விஞ்ஞானியும் இதுவரை மறுக்கவே இல்லை. ‘என்ட்ராபி’ (ணிஸீtக்ஷீஷீஜீஹ்) என்னும் ஒரு விளைவினால் ஏற்படும் தொடர் சிக்கலினால்தான் இது சாத்தியமாக இதுவரை முடியாமல் இருக்கிறது. இந்த விளைவு சரிசெய்யப்படும் பட்சத்தில் காலப் பயணம் பற்றிய பல முடிவுகளுக்கு நாம் எப்போதோ வந்திருக்கலாம். ‘என்ட்ராபி’ என்றால் என்னவென்று நான் இங்கு விளக்க முயற்சித்தால், ‘தர்மோ டைனமிக்ஸ்’ (Thermodynamics) என்றெல்லாம் போக வேண்டியிருக்கும். அது ரொம்ப நீளமாயிருக்கும். அதனால் இந்த ‘என்ட்ராபி’ பற்றித் தனிக் கட்டுரையாகப் பின்னர் எழுதுகிறேன்.

இப்போது தாஜ்மஹால் சிதறிய சம்பவத்துக்கு நாம் மீண்டும் வரலாம். முழுமையாக இருந்த ஒரு தாஜ்மஹால் கண்ணாடிப் பொம்மை, ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந் ததால்தான், அது சிதறி விழுந்த பின், காலத்தினூடாகப் பின்னோக்கிப் பிரயாணம் செய்யும் போது அந்தத் தகவல்கள் மீண்டும் பெறப்பட்டு ஒரு தாஜ்மஹாலாக உருவாகலாம். அதாவது ஒன்றாக இருந்த தகவல்கள் நிலத்தில் விழுந்து எங்கெல்லாமோ சிதறி, மீண்டும் ஒழுங்கான வடிவத்துடன் தாஜ்மஹாலாக மாறுகிறது. இது தகவல்களாக இல்லாமல் இருந்திருக்கும் பட்சத்தில், அவற்றை நம்மால் ஒன்றாகச் சேர்த்தி ருக்கவே முடியாது. தகவல்கள் அடிப்படையில் சேர்க்கப்படாமல் இருந்திருக்கும் பட்சத்தில், தாஜ்மஹாலின் அடிப்பாகம் மேலேயும், தூண்கள் கிடையாகவும், கோபுர உச்சி சுவரிலுமாகத் தாஜ்மஹால் உருவாகியிருக்கும். சொல்லப் போனால், அது தாஜ்மஹாலாகவே இருக்காது.

இந்தச் சம்பவத்தினூடாக அறிவியல் சொல்ல வருவது என்னவென்றால், நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாமே தகவல்கள்தான். நான் நானாக இருப்பதற்கும், திரிஷா திரிஷாவாக இருப்பதற்கும், திவ்யா திவ்யாவாக இருப்பதற்கும் காரணம், நாமெல்லாம் தகவல்களால் வடிவமைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதுதான். இப்போது நீங்கள் திவ்யாவைப் பார்க்கும் போது, என்ன நடைபெறுகிறது என்பதையும் கொஞ்சம் கவனி யுங்கள். திவ்யாவில் பட்டுத் தெறித்து வரும் ஒளியானது உங்கள் கண்களினூடாகச் சென்று விழித்திரையில் விழுந்து, மீண்டும் அது மூளைக்கு அனுப்பப்பட்டுத் திவ்யா உங்களுக்குத் திவ்யாவாகத் தெரிகிறார்.

இதில் நடப்பது என்ன? திவ்யா என்னும் தகவல் கட்டமைப்பு, ஒளி அலைகளால் வருடப்பட்டு, ஒளி அலைகள் தகவல்களாக நம் கண்களூடாக மூளைக்குச் செல்கிறது. அதுமட்டுமில்லாமல், விழித்திரையில் தலைகீழாக விழும் விம்பம், நியூரான்கள் மூலமாக மின்னலைகள் என்னும் தகவல்களாக மாற்றப் பட்டுத்தான் மூளைக்குள் கொண்டு செல்லப் படுகின்றன. அதாவது, இணையத்தில் நீங்கள் ஒரு திரைப்படத்தை ‘தரவிறக்கம்’ (Download) செய்வது போல, ‘திவ்யா’ என்னும் தகவல்கள் உங்கள் மூளைக்குள் டவுன்லோட் செய்யப்படுகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். நீங்கள் காணும் காட்சிகள் அனைத்தும், நமது மூளை என்னும் மிகப்பெரிய கணினிக்கு டவுன்லோட் செய்யப்படும் தகவல்கள் தான் என்பது புரியும்.

ஒவ்வொரு தனிநபரின் மூளையின் கணிப்புத் திறனும், இன்னுமொருவரின் கணிப்புத் திறன் போல இருக்கவே இருக்காது. அவற்றிற்கிடையில் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கும். ஒருவருக்கு டவுன்லோட் ஆவதைப் போல இன்னுமொருவருக்குத் தகவல்கள் டவுன்லோட் ஆவதே இல்லை. மனிதனின் கண்பார்வையின் திறன், நிறக்குருடு, மூளையின் திறன் என்பன, எப்போதும் மனிதனுக்கு மனிதன் வேறுவேறாகத்தான் இருக்கும். இதனால்தான், உங்களுக்குத் திரிஷா திவ்யாவாகவும் மற்றவர்களுக்கு அப்படி இல்லாமலும் இருக்கிறது. இருவருமே டவுன்லோட் செய்யும் தகவல்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், நமக்கே தெரியாத பல நுண்ணிய வித்தியாசங்கள் அவற்றுள் இருந்துகொண்டே இருக்கும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணமாக அமைகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள்.

உங்கள் நண்பன் மிகவும் அழகாயிருப்பான். ஆனால் அவன் அழகேயில்லாத ஒரு பெண்னை உருகி உருகிக் காதலிப்பான். இதுபோல, அழகான பெண்கள், அழகே யில்லாத ஆணை விழுந்து விழுந்து காதலிப்பார்கள். ஆனால் ‘இவனுடைய அழகிற்குப் பார், இவளைப் போய்ப் பிடித்திருக்கிறானே!’ என்று மற்றவர்கள் நினைப்பார்கள். அவனுக்கோ அவள் தேவதையாகத் தெரிவாள். இந்த எஃபக்டுக்கும் காரணம் நான் மேலே சொன்னதுதான். ஒருவருக்கு மிகவும் அழகாகத் தெரியும் ஒருவர், மற்றவருக்கு அழகில்லாமல் தெரிவதன் காரணத்தில் பொத்தாம் பொதுவில் காதலிப்பவர்களைக் குற்றம்சாட்டுவது எவ்வளவு தப்பு என்பது தெரிகிறதா? எல்லாமே தகவல்களின் டவுன் லோட் செய்யும் மாயம்.

Raj-Siva-(5).jpg

உண்மையைச் சொல்லப் போனால், மேலே சொல்லப்பட்ட சம்பவங்களை நான் சொல்வதற்குக் காரணமே வேறு. திவ்யாவும், திரிஷாவும் மிகப்பெரிய அறிவியல் சிக்கல் ஒன்றின் அடிப்படையைச் சொல்லப் பயன்படுத்தப்பட்டவர்கள். சமீபத்தில் அறிவியலில் பெரும் விவகாரமாகவும், விவாதமாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல் போரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ‘அண்டத்தில் எங்குமே கருந்துளைகள் (Blackholes) இல்லை’ என்று . உலக இயற்பியல் வரலாற்றில் மிகமுக்கியமானவரும், நவீன இயற்பியலில் பெயர் பெற்றவரும், கடந்த பல தசாப்தங் களாக கருந்துளைகளைப் பற்றி ஆராய்ந்து வருபவருமான ‘ஸ்டீவன் ஹாக்கிங்’ (ஷிtமீஜீலீமீஸீ பிணீஷ்ளீவீஸீரீ) அவர்கள் சொன்ன புரட்சிகரமான கருத்துத்தான், நான் திவ்யாவையும், திரிஷாவையும் இங்கு இழுக்கக் காரணமானது. நாஸா உட்படப் பல ஆராய்ச்சி மையங்களில், பல லட்சக்கணக்கான கருந்துளைகளைக் கண்டுபிடித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், ஸ்டீபன் ஹாக்கிங் இப்படியானதொரு கருத்தைச் சொல்லி யிருக்கிறார். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வந்ததற்குக் காரணம் ஒரு போர் (War). கத்தியின்றி, இரத்தமின்றி நடைபெறும் அறிவியல் போர் அது. ஒருபுறம் ஸ்டீபன் ஹாக்கிங்கும், மறுபுறம் ‘லெனார்ட் சஸ்கிண்ட்’ (Leonard Susskind) என்னும் இன்னுமொரு அறிவியல் மாமேதைக்கும் இடையில் நடக்கும் போர். சஸ்கிண்ட் என்பவரும் சாதாரணமானவரல்ல. உலகப் புகழ்பெற்ற ஸ்ட்ரிங்க் தியரியின் (String Theory) கட்டமைப்பாளர் களில் ஒருவர். இவர்கள் இருவரும் கருந்துளையில் நடைபெறும் மிகமுக்கிய நிகழ்வு ஒன்றைப் பற்றித்தான் முரண்படுகிறார்கள். அதனாலேயே இந்தப் போரும் நடந்து கொண்டிருக்கிறது.

ஸ்டீபன் ஹாக்கிங், ‘கருந்துளைக்குள் சென்று விழும் எந்தப் பொருளானாலும், அதன் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு இல்லாமல் போய்விடும்’ என்கிறார். ஆனால் சஸ்கிண்டோ, ‘அண்டத்தில் எதையும் அழிக்க முடியாது. திடப்பொருளாக இருந்தாலென்ன, சக்தியாக இருந்தாலென்ன அவை இன்னுமொன்றாக மாற்றப் பட்டு அண்டத்திலேயே இருக்குமேயொழிய, இல்லாமல் போகாது’ என்கிறார். இதையொட்டி சஸ்கிண்ட் சொன்ன புரட்சிகரமான இன்னுமொரு கருத்துத்தான் நான் இந்தக் கட்டுரையையே எழுதக் காரணமானது. சஸ்கிண்ட் சொல்கிறார், ‘கருந்துளைக் குள் சென்று விழும் பொருட்கள், கருந்துளையின் அதியுயர் வெப்பக் கதிர்களால் சிதைக்கப்பட்டு, அவை தகவல்களாக (Informations), கருந்துளையின் எல்லையாக இருக்கும் ‘நிகழ்வு எல்லையில்’ (Event Horizon) பதிந்திருக்கும்’ என்கிறார். இப்படிப் பார்க்கும் போது சஸ்கிண்ட் சொன்னதை விட, ஹாக்கிங் சொன்னதையே ஏற்றுக் கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், அதிகமான அறிவியல் விஞ்ஞானிகள் சஸ்கிண்ட் சொன்னதையே ஏற்கின்றனர்.

சஸ்கிண்ட் இத்துடன் நிறுத்திவிடவில்லை. ‘சினிமாப்படத்தை ஒளிபரப்பும் புரஜெக்டர் சாதனம் போல, நிகழ்வு எல்லையானது, தன்னுள் பதிந்து வைத்திருக்கும் தகவல்களை, ஹோலோகிராம் படக் காட்சிகள் போல விண்வெளியில் ஒளிபரப்புகிறது. அது ஒளிபரப்பும் திரைப்படக் காட்சிகள்தான் நானும், நீங்களும், அமெரிக்க ஜனாதிபதியும், பூமியில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் என்கிறார். பூமியில் நாம் பார்க்கும் எதுவுமே உண்மையில்லை.

'நாம் அனைவருமே கருந்துளைகள் தெறிக்க விடும் மாயைத் தோற்றங்கள். இந்த ப்ளாக்ஹோல்களின் Even Horizon வெளிவிடும் தகவல்களால் (Informations) வெளிப்படும் தோற்றங்களைத்தான், நாம் நிஜமாக நடப்பதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு ஏமாறு கிறோம். அதாவது வாழ்வதாக நாம் நினைப்பதே பொய்’ என்று கிலியைக் கிளப்புகிறார். இதில் அவர் குறிப்பிட்ட ‘தகவல்களை’ (Informations) விளக்குவதற் காகத்தான், திரிஷா இந்தக் கட்டுரையில் வந்தார்.

கருந்துளைகள் சம்மந்தமாக ஹாக்கிங்குக்கும், சஸ்கிண்டுக்கும் நடைபெறும் போர் பற்றியும், நிகழ்வு எல்லை (Event Horizon) பற்றியும், நிகழ்வு எல்லை ஒளிபரப்பும் ஹோலோகிராம் (Hologram) பற்றியும் இன்னுமொரு கட்டுரையுடன் எதிர்வரும் இதழ்களில் சந்திக்கிறேன்.

http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=6494

  • கருத்துக்கள உறவுகள்

b3f14edb49fd763ec19df7dcf1ff087e.png

Leon

1024px-LeonardSusskindStanfordNov2013.jp

அடிக்கடி The Matrix பார்த்து துளைச்சுட்டுது பெரிசு. :icon_idea: ஆனாலும் நாமும் சிங்கத்தின் பக்கமே ஏனெனில்  ஸ்டீபன் ஹாக்கிங் கருந்துளைக்குள் போனது அழிவுருபெறாதது என சுவாரசியம் அற்று சப்பென்று முடிகின்றார் நன்றி இனைப்பிற்க்கு கிருபன்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)

 

 

 

கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)
 
1511403_253600854824068_7662240638554434     கருந்துளையொன்றுக்கு அருகே செல்லும் அனைத்தும், முடிவில்லா ஈர்ப்புவிசையால் அதன் மையத்திலிருக்கும் ஒருமைப் புள்ளியை (Singularity) நோக்கி இழுக்கப்படும் என்றார் ஸ்டீவன் ஹாக்கிங். ஒளி கூட அதன் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பிவிட முடியாது. தனக்கு அருகே வரும் எதுவானாலும், அதை உள்ளிழுத்துவிடும். அளவில் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கருந்துளையினுள்ளே சென்று, அந்த ஒருமைப் புள்ளியுடன் சங்கமமாகிவிடும். கருந்துளையானது ஆரம்பத்தில் கையளவேயுள்ள மிகமிகச் சிறிய விட்டமுடையதாகத்தான் காணப்படும். அதனுள்ளே விண்வெளியில் உள்ளவை ஒவ்வொன்றாக இழுக்கப்படுவதால், அது படிப்படியாகப் பெரிதாகிப் பிரமாண்டமானதாக மாறிவிடுகின்றது. “மிகச்சிறிய அளவுள்ள கருந்துளைக்குள், எப்படி மிகப்பெரிய கோள்களோ, நட்சத்திரங்களோ புகுந்து கொள்ள முடியும்?” என்று நீங்கள் இப்போது சிந்திக்கலாம். இதற்கான பதிலில்தான் அண்டமும், குவாண்டமும் ஒன்றாக இணையும் செயல் இருக்கிறது. அண்டத்தில் பிரமாண்ட நிலையிலுள்ள நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றுக்கும், குவாண்டம் நிலையில் மிகமிகச் சிறிய அளவிலிருக்கும் உபஅணுத்துகள்களுக்கும் (Subatomic Particles) இடையிலான தொடர்பு கருந்துளையின் மூலம் ஏற்படுகிறது. ‘அண்டமும் குவாண்டமும்’ என்னும் இந்தத் தொடரைக் கூட ஒரு கருந்துளையுடன் நான் ஆரம்பித்ததற்கு இதுவே காரணமாகவும் இருந்தது.

 

10177228_253601094824044_639988726394901

கருந்துளையின் எல்லையாக இருக்கும் ‘நிகழ்வு எல்லை’ வரை யாரும் செல்லலாம் என்று முன்னர் பார்த்திருந்தோம். அந்த எல்லையில் கால் வைக்கும் வரை நமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை. அந்த எல்லையைத் தாண்டிக் கால்வைக்கும் போது, மீண்டு வரமுடியாமல் கருந்துளையின் மையம் நோக்கி இழுக்கப்படுவோம். அதனாலேயே அந்த எல்லைப் புள்ளி, ‘திரும்பவே முடியாத புள்ளி’ (The Point of no return) என்று சொல்லப்படுகிறது. திரும்பி வரமுடியாத அளவுக்கு இழுக்கக் கூடிய ஆற்றலாக, கருந்துளையின் மையமான ‘ஒருமைப் புள்ளி’ இருக்கிறது. “கருந்துளை மிகச் சிறியதாக இருந்தாலும், அதற்குள் மிகப்பெரிய நட்சத்திரம் எப்படிப் புகுந்து கொள்கிறது?” என்ற கேள்வி நமக்குத் தோன்றியதல்லவா? கருந்துளை சிறிதாக இருந்தாலும் அதன் மையத்தின் ஈர்ப்பு விசையும், அடர்த்தியும் முடிவில்லாததாக இருக்கும். ஒரு மிகச்சிறிய கருந்துளையின் அருகே இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் செல்கிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். நிகழ்வு எல்லையைத் தாண்டி உங்கள் வலதுகாலை வைக்கிறீர்கள். அப்போது நீங்கள் கற்பனையே செய்ய முடியாத ஈர்ப்பு விசையால் இழுக்கப்படுவீர்கள். முதலில் உங்கள் கால்பகுதியை அந்த ஈர்ப்புவிசை இழுக்க ஆரம்பிக்கும். நீங்கள் அந்த ஈர்ப்பு விசையின் வீரியத்தால் ஒரு மெல்லிய நூலிழை போல காலிலிருந்து தலைவரை நேராக்கப்படுவீர்கள். ஆறடி நீளமுள்ள உங்கள் ஒவ்வொரு பாகமும் அதீத ஈர்ப்புவிசையினால், அணுக்களாகச் சிதைந்து பின்னர் உபஅணுத்துகள்களாகச் சிதைக்கப்பட்டு, காலிலிருந்து தலைவரை நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டப்பட்டு, பல கிலோமீட்டர்கள் நீளமான ஒரு மெல்லிய நூல் போல மையம் நோக்கி உள்ளே செல்வீர்கள். அதாவது மாவைக் குழைத்து அதை கைகளால் அழுத்தி அழுத்தி மெல்லிய ‘நூடுல்ஸ்’ இழை போல மாற்றுவோமல்லவா? அதுபோல, நீங்கள் மாற்றப்படுவீர்கள். மெல்லிய இழையென்றால், உங்களால் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு மெல்லிய இழையாக நீட்டப்பட்டு மையம் நோக்கி இழுக்கப்படுவீர்கள். இது போலவே, ஒரு நட்சத்திரமும் மிக மெல்லிய பகுதியாக நீட்டப்பட்டு கருந்துளையினால் உறிஞ்சப்படும்.

10170889_253601198157367_539260028460926

உலகிலேயே மிகப்பெரிய கட்டடம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கட்டடம் சீமெந்துக் கற்களினாலோ, செங்கற்களினாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம். செங்கற்களும், சீமெந்துக் கற்களும் அணுக்களால் உருவானவை என்பது உங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டடம் கட்டப்பட்ட கற்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், அவற்றில் மொத்தமாக ட்ரில்லியன் மடங்கு ட்ரில்லியன் அணுக்கள் இருக்கின்றது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுங்கள். அந்த ட்ரில்லியன் ட்ரில்லியன் அணுக்களின் பருமன்தான் அந்தக் கட்டடத்தின் பருமனாக இருக்கும். இப்போது, ஒரு அணுவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அணுவைப் பத்துக் கிலோமீட்டர்கள் பெரிதானது என்று கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். பத்துக் கிலோமீட்டர்கள் பெரிதான அணுவினது அணுக்கரு ஒரு பந்தின் அளவில்தான் இருக்கும். அணுவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு சிறியது அணுக்கரு. அணுவின் கரு தவிர்ந்து மிகுதி எல்லாமே வெற்றிடம்தான். அதாவது, ஒரு அணுவை எடுத்துக் கொண்டால் அதில் 99.9999 வீதமான பகுதி வெற்றிடமாகத்தான் இருக்கும். எஞ்சிய பகுதியில்தான் அணுவின் அணுக்கரு இருக்கிறது. அந்த அணுக்கருவினில்தான் அணுவின் மொத்த எடையும், உபஅணுத்துகள்களும் இருக்கின்றன. இப்போது, அணுக்கருவை எடுத்துக் கொண்டால், அதனுள் 1% பகுதியில்தான் உபஅணுத்துகள்கள் அனைத்தும் இருக்கின்றன. எஞ்சிய 99% வெற்றிடமாகத்தான் இருக்கின்றது. அணுவும் வெற்றிடம். அணுக்கருவும் வெற்றிடம். இதைச் சரியாக நீங்கள் புரிந்து கொள்வீர்களாயின் நான் சொல்ல வருவது எல்லாமே புரிந்துவிடும்.

10173652_253601351490685_387356981828882

உலகிலேயே பெரிதான அந்தக் கட்டடத்தை மீண்டும் எடுத்துக் கொள்வோம். அதன் ட்ரில்லியன் ட்ரில்லியன் அணுக்களில் உள்ள அத்தனை அணுக்கருக்களையும் ஒன்று சேர்த்தால், ஒரு குண்டூசி முனையளவு பருமன் கூட அவற்றிற்கு இருக்காது. அந்த அணுக்கருக்கள் அனைத்தையும் பிளந்து, அவற்றினுள் உள்ள உபஅணுத்துகள்களை மட்டும் ஒன்று சேர்த்தால், கண்ணுக்கே தெரியாத மிகமிகமிகச் சிறிய புள்ளியின் பருமனுடன் அவை இருக்கும். உலகிலேயே பெரிய அந்தக் கட்டடம் உபஅணுத்துகள்களாகச் சிதைக்கப்பட்டால், கண்ணுக்கே தெரியாத ஒரு புள்ளியின் பருமனில்தான் இருக்கும். அந்தக் கட்டடம் கருந்துளையொன்றால் இழுக்கப்பட்டு, அதன் ஒருமை மையத்துடன் சேர்ந்தாலும், மையத்தின் பருமன் அதிகரிக்கவே மாட்டாது. ஒரு நட்சத்திரம் உபஅணுத்துகள்களாகச் சிதைந்தாலும் அவற்றின் மொத்தப் பருமன் கூடக் கண்ணுக்குத் தெரியாத புள்ளியின் அளவாகவே இருக்கும். நட்சத்திரங்களும், கோள்களும் கருந்துளை மையத்தில் ஒன்று சேர்ந்தும், அந்த ஒருமைப் புள்ளி மிகமிகமிகச் சிறிதாகவே இருப்பதன் காரணம் இதுதான். கருந்துளையின் மையப்புள்ளி மிகச்சிறியதாக இருந்தாலும், எல்லையில்லா அடர்த்தியையும், ஈர்ப்புவிசையயியும் கொண்டிருப்பதற்கான காரணமும் இதுதான். இப்படிப்பட்டதொரு நிலையில்தான், அண்டம் உருவாகக் காரணமான, ‘பிக்பாங்’ பெருவெடிப்பிற்கு முன்னர் இருந்த ஒருமைப் புள்ளியும் இருந்தது. அதனால்தான் அதைக் ‘குவார்க் கூழ்’ (Quarck soup) என்றார்கள்.

கருந்துளை மிகச் சிறிதாக இருந்து தனக்கு அருகே வருபவற்றை ஒவ்வொன்றாக விழுங்குவதால், தன் உருவத்தையும் பெரிதாக்கிக் கொள்கிறது. அதிக உணவை உண்பதால் நாம் பெருப்பது போல. கருந்துளைக்கு உணவாக இருப்பவை நட்சத்திரங்களும், கோள்களும், நெபுலாக்களும் ஆகும். நட்சத்திரமாக இருந்தாலென்ன, கோள்களாக இருந்தாலென்ன, நீங்களாக இருந்தாலென்ன, ஒரு நாய்க்குட்டியாக இருந்தாலென்ன அனைத்தும் அணுக்களின் கட்டமைப்பினாலேயே உருவாக்கப்பட்டவை. ஏதோ ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குடன் கூடிய ஒரு கட்டமைப்பின் மூலம் இவையெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் உருவத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். நீங்கள் பார்க்கும் உருவம் மேலோட்டமாகப் பார்க்கையில் அழகாக உங்களுக்குத் தெரிந்தாலும் (ஒவ்வொருவரும் அவரவர் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்), அதில் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு இருப்பதைக் கவனிக்கலாம். நீங்கள் ‘செல்கள்’ என்னும் கலங்களால் அடுக்கப்பட்டு உருவாகப்பட்டவர். இந்தச் செல்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு சதுரமானவராகவோ, நீள்சதுரமானவராகவோதான் இருப்பீர்கள். ‘நான் சொல்வது புரியவில்லையா? சரி, இப்படிப் பாருங்கள்’. நீள்சதுர வடிவமான செங்கற்களை ஒரு ஒழுங்குடன் மேலே மேலே அடுக்கிக் கொண்டு வாருங்கள். அதாவது நீள, அகல, உயரங்களில் அடுக்கும் செங்கற்கள் ஒரே அளவாக இருக்க வேண்டும். அதைத்தான் ஒழுங்கு என்பார்கள். அப்படி அடுக்கும் போது, உங்களுக்குக் கிடைப்பது ஒரு நீள்சதுரமான உருவமாகத்தான் இருக்கும். ஆனால், அதே செங்கற்களை ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கில் அடுக்கிக் கொண்டு வந்தால், அழகான வீடு ஒன்று உருவாகும். ஒழுங்கற்ற ஒழுங்கு என்பது என்னவென்று இப்போது புரிகிறதா? இதுபோலத்தான், நீங்களும் செல்களால் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். முகத்தில் இருக்கும் மூக்கு முன்னோக்கியும், காதுகள் இரண்டு பக்கங்களில் துருத்திக் கொண்டும், கைகள் தனியானதொரு பகுதியாக தோள்களிலிருந்து பிரிந்து வளர்ந்ததும் இந்த ஒழுங்கற்ற தண்மையினால்தான். ஆனாலும், வலது காது உருவாகும் போது, அதேபோல இடது காது உருவாகியதும், வலது கை உருவாகிய போது, அது போலவே இடது கை உருவாகியதும், மொத்தத்தில் உங்களுக்கு ஒரு சமச்சீரான உருவம் கிடைத்தது எல்லாமே கலங்களின் ஒரு ஒழுங்கான அமைப்பின் அடுக்கினால்தான். உங்களை நீங்கள் இனியொரு தடவை கண்ணாடியில் பார்க்கும் போது கவனியுங்கள், உங்கள் உருவத்தில் ஒரு ஒழுங்கும் இருக்கும், அது ஒழுங்கின்மையும் இருக்கும்.

10157365_253601431490677_752749323115838

உங்கள் உருவம் ஒழுங்குடனும், ஒழுங்கற்ற முறையிலும் அமைக்கப்பட வேண்டுமென்றால், அதற்கான தகவல்கள் (Informations) உங்கள் மரபணுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். உங்கள் உருவம் என்றில்லை, மிருகங்கள், பறவைகள், கட்டடங்கள், பொருட்கள் எல்லாமே தகவல்களின் அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. அதிகம் ஏன், நாம் வாழும் பூமி, சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாமே தகவல்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றி விரிவாகக் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். ஒன்று உருவாவதற்கு அடிப்படையாகத் தேவையானவை உபஅணுத்துகள்களும், அவை அமைக்கப்படத் தேவையான தகவல்களும்தான். இவை இரண்டும் எப்போதும் அண்டத்திலிருந்து அழிந்து போய்விடாது. அணுக்கள் மற்றும் உபஅணுத்துகள்களை எடுத்துக் கொண்டால், அவை ஒன்றிலிருந்து இன்னுமொன்றாக மாற்றப்படுமேயொழிய முற்றாக அழிக்கப்பட முடியாதவை. அது போலத் தகவல்களும் அழிக்க முடியாதவை. ஒரு பொருள் கருந்துளையினுள் நுழையும் போது, அது உபஅணுத்துகள்களாக சிதைக்கப்பட்டு மையம் நோக்கிச் சென்றாலும், அந்தப் பொருள் உருவாக்கப்பட்ட தகவல்கள் நிகழ்வு எல்லையின் மேற்பரப்பில் செய்திகளாகப் பதிவு செய்யப்படுகின்றன என்று நவீன அறிவியலில் சொல்கிறார்கள். ஒரு கருந்துளை உருவாகியது முதல் கொண்டு, அதனுள் செல்லும் அனைத்துப் பொட்களினது (பொருட்களா?) தகவல்களும், கணணியொன்றில் பதிவு செய்யப்படுவது போல, நிகழ்வு எல்லையில் பதிவு செய்யப்படுகிறது. இப்படிப் பதிவுசெய்யப்படும் தகவல்கள் அதிகரிக்க அதிகரிக்க, நிகழ்வு எல்லையின் அளவும் விரிவடைந்து பெரிதாகிக் கொண்டே போகும். இதனால் கருந்துளையின் அளவும் பெரிதாகிறது என்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கருந்துளையினால் வெளிவிடப்படும் கதிர்வீச்சின் காரணமாக, ஒரு சினிமாப்படத்தைப் போல விண்வெளியின் மேற்பரப்பில் முப்பரிமாணத்தில் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது. விண்வெளியின் மேற்பரப்பு இரண்டு பரிமாணங்களையுடையது (2D). அந்த இரண்டு பரிமாண மேற்பரப்பில் ஒளிபரப்பாகும் காட்சிகள் ஹோலோகிராம் (Hologram) போல, மூன்று பரிமாணக் காட்சிகளாகத் (3D) தெரிகின்றன. இப்படிப்பட்ட காட்சிகளாகத்தான் நமது பூமியும், அதில் வாழும் நாமும் ஒளிபரப்புச் செய்யப்படுகிறோம் என்று சொல்கிறார்கள். அதாவது விம்பங்களாகத் தெறிக்க்கப்படும் நாம், உண்மையாக வாழ்வதாகக் கற்பனை செய்து கொள்கிறோம் என்கிறார்கள். நான் இதை எழுதுவதாகவும், நீங்கள் வாசிப்பதாகவும் கூடக் கற்பனையே செய்கிறோம் என்கிறார்கள். அனைத்தும் நிஜமாக நடப்பதாகவே நாம் நினைத்துக் கொள்கிறோம். முன்னர் இருந்த பூமியும், அதில் வாழ்ந்த நாங்களும் எப்பொழுதோ கருந்துளையொன்றினால் விழுங்கப்பட்டுவிட்டோம். ஆனாலும் எங்களைப் பற்றிய தகவல்களும், பூமியைப் பற்றிய தகவல்களும் அந்தக் கருந்துளையின் நிகழ்வு எல்லையில் பதிந்து, இப்போது காட்சிகளாக ஒளிபரப்புச் செய்யப்படுகிறது என்கிறார்கள். ‘என்ன, தலை சுற்றுகிறதா?’ இதை வாசிக்கும் போது உங்களுக்குத் தலை சுற்றினாலும், அதுவும் ஒரு கற்பனயே! இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொளும் மாயை. இந்து மதத்தின் மாயைத் தத்துவம் இதற்குள் பொருந்துவது தற்செயலானதோ தெரியவில்லை. அல்லது மாயைத் தத்துவம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும் கற்பனைதான் பண்ணுகிறோமோ தெரியவில்லை. இப்படிப் பார்க்கும் போது எல்லாமே சுலபமாகிவிடும். உங்களுக்கு நெருங்கிய ஒருவர் இறந்தாலும், அதுவும் கற்பனையென்று அமைதியாக இருந்துவிடலாம். இறப்பும் பொய், பிறப்பும் பொய் என்றாகிவிடுகிறது. நவீன அறிவியல் நம்மை ஒரு வழிபண்ணிவிட்டுத்தான் ஓயும் போல.

இப்போது நீங்கள், “ஒருவன் கத்தியால் குத்தினால் வலிக்கிறது, ஒரு பெண்ணை/ஆணைப் பார்க்கும் போது பரவசமான உணர்வுகள் தோன்றுகிறது, பசிக்கிறது, நோய் வருகிறது. இந்த உணர்வுகள் எல்லாமே பொய்தானா? நன்றாகத்தான் கதையளக்கிறார்கள் இவர்கள்” என்று நினைப்பீர்கள். ‘காட்சி வேண்டுமானால் மாயையாய் இருக்கலாம். உணர்வுகள் எப்படி மாயையாக இருக்கும்?’ என்று நீங்கள் நினைப்பதில் தப்பு இல்லை. ஆனால், அதற்கும் அறிவியல் தகுந்த காரணத்தைச் சொல்கிறது.

நமக்கு நடைபெறும் சம்பவங்கள் எப்படிக் கற்பனையான ஒரு காட்சியாக இருக்க முடியும் என்பதற்கு அறிவியல் சொல்லும் காரணத்தையும், இரண்டு பரிமாணத்தில் ஒளிபரப்பாகும் காட்சி எப்படி முப்பரிமாண ஹோலோகிராமாகத் தெரிகிறது என்பதையும் அடுத்த பகுதியில் நாம் பார்க்கலாம்.

-ராஜ்சிவா-

http://rajsiva.kauniya.de/author/RajSiva/

சஸ்கிண்ட் இத்துடன் நிறுத்திவிடவில்லை. ‘சினிமாப்படத்தை ஒளிபரப்பும் புரஜெக்டர் சாதனம் போல, நிகழ்வு எல்லையானது, தன்னுள் பதிந்து வைத்திருக்கும் தகவல்களை, ஹோலோகிராம் படக் காட்சிகள் போல விண்வெளியில் ஒளிபரப்புகிறது. அது ஒளிபரப்பும் திரைப்படக் காட்சிகள்தான் நானும், நீங்களும், அமெரிக்க ஜனாதிபதியும், பூமியில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் என்கிறார். பூமியில் நாம் பார்க்கும் எதுவுமே உண்மையில்லை.

'நாம் அனைவருமே கருந்துளைகள் தெறிக்க விடும் மாயைத் தோற்றங்கள். இந்த ப்ளாக்ஹோல்களின் Even Horizon வெளிவிடும் தகவல்களால் (Informations) வெளிப்படும் தோற்றங்களைத்தான், நாம் நிஜமாக நடப்பதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு ஏமாறு கிறோம். அதாவது வாழ்வதாக நாம் நினைப்பதே பொய்’ என்று கிலியைக் கிளப்புகிறார். இதில் அவர் குறிப்பிட்ட ‘தகவல்களை’ (Informations) விளக்குவதற் காகத்தான், திரிஷா இந்தக் கட்டுரையில் வந்தார்.

 

 

இதனை புரிந்து கொள்வது தான் கடினமாக இருக்கின்றது. நான் உட்பட அனைத்துமே மாயைத் தோற்றங்கள் என்றால் உணர்ச்சிகளும், தூண்டல்களும்,  இறப்பும் பிறப்பும் எவ்வாறு நிகழ்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியுது இல்லை.

 

நல்ல பதிவுகளை பகிர்ந்த கிருபனுக்கும் பெருமாளுக்கும் நன்றி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.