Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும்

ராஜ்சிவா

rajsiva%20(1).jpg

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி, மலேசியாவுக்குச் சொந்தமான போயிங் விமானமொன்று, 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தைப் பற்றி, முழு உலகமும் இன்றுவரை பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறது. இதுவே வழமையானதொரு விமான விபத்தாக இருந்திருந்தால், அதுபற்றி ஒரு வாரம் கவலைப்பட்டுவிட்டு, இந்த நேரங்களில் நம் பணிகளைத் தொடர அமைதியாகச் சென்றிருப்போம். ஒவ்வொரு வருடமும் சராசரியாக நானூறுக்கும் அதிகமான விமான விபத்துக்களை, நாம் இப்படித்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மலேசிய விமானமான, ‘MH370’ போயிங் ரக விமானத்தின் (Boeing 777) மறைவைப் பற்றி மக்கள் அவ்வளவு சுலபமாக மறக்கும் நிலையில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, ‘இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகாவிட்டால், அதில் பயணம் செய்த பிரயாணிகள் இன்னும் உயிருடன் இருக்கச் சாத்தியம் உண்டே! அவர்கள் எந்த விதத்திலாவது உயிருடன் திரும்பி வந்துவிட வேண்டும்’ என்று கடைசி வரை பிரார்த்தனை செய்யும் மனிதாபிமானம். இரண்டு, இந்த விமானம் மறைந்ததின் உள்ளே பொதிந்திருக்கும் மர்மம். மர்மம் என்றாலே அறிந்து கொள்ளும் ஆவல் அனைவருக்கும் உண்டு. இந்த மர்மத்தினுள், ‘மனிதனை மிஞ்சிய வேறு ஏதாவது அமானுஷ்ய சக்திகள் விமானம் மறைந்ததற்குக் காரணமாக இருந்திருக்குமோ?’ என்று எண்ணுமளவுக்கு அவர்களைத் தூண்டியது அந்த ஆவல்.

இந்த விமானம் மறைந்ததிலிருந்து இன்றுவரை அந்த விமானத்துக்கு என்ன நடந்திருக்கலாம் என்று, பலரும் பலவிதமான கட்டுரைகளாக எழுதியிருக்கிறார்கள். அவற்றை நீங்கள் படித்துச் சலித்தும் போயிருப்பீர்கள். ஆகையால், நாம் அந்த விசயங்கள் எதையுமே தொடாமல் தனித்துவமாகவே இக்கட்டுரையைக் கொண்டு செல்லலாம். இப்போது, இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது, மலேசிய விமான விபத்துத் தொடர்பாக, உண்மையான முடிவுகள் வந்திருக்கலாம். அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது விபத்துதான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கலாம். இந்தக் கணத்தில், கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு இதில் சொல்லப்பட்டிருப்பவை நகைச்சுவையாகக் கூட இருக்கலாம். ஆனாலும், விமானம் சம்பந்தமாக சரியான தகவல்கள் எதுவும் கிடைக்காத சூழ்நிலையில், அதை மையமாக வைத்தே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அதற்கான சாத்திய, அசாத்தியங்களையும் ஆராய்கிறது. இனி நாம் கட்டுரைக்குள் நுழையலாம்.

rajsiva%20(2).jpg

விமான விபத்திற்குச் சற்று முன்னே நடந்தவற்றைச் சிறு குறிப்புப் போல முதலில் நாம் பார்க்கலாம். மலேசியா நாட்டின் கோலாலம்பூர் நகரிலிருந்து, மலேசிய நாட்டுக்குச் சொந்தமான, ‘போயிங் 777’ ரக விமானமான ‘MH370’, சரியாக நள்ளிரவு 12:41 மணிக்கு, அதாவது மார்ச் மாதம் 8ஆம் தேதி, நள்ளிரவு 12:41க்கு, 12 விமானப் பணியாளர்கள் உட்பட, மொத்தமாக 239 பயணிகளுடன் பீஜிங் நோக்கிப் புறப்படுகிறது. இவர்களில் பதினான்கு வகை இனத்தவர்கள் இருகிறார்கள். மொத்தமாகப் பயணம் செய்ய வேண்டிய தூரம் 2746 மைல்கள். நள்ளிரவானதால் பயணிகளில் பெரும்பாலானோர் விமானத்தில் ஏறிய சில நிமிடங்களிலேயே நித்திரை கொள்ள ஆரம்பித்துவிட்டனர். விமானம் பறக்கத் தொடங்கி முப்பத்தியெட்டாவது நிமிடத்தில் அதாவது அதிகாலை நேரம் 01:19 மணிக்கு விமானத்துக்கும், கட்டுப்பாட்டு நிலையத்துக்குமான தொடர்பு இல்லாமல் போனது. அந்த நேரத்தில் விமானம் மலேசியாவுக்கும் வியட்நாமுக்கு மிடையிலான கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அந்த நிமிடத்திலிருந்து அனைத்துமே மாறிப் போனது. மலேசிய விமானம் MH370, தான் போகும் தடத்தின் திசையிலிருந்து திடீரெனத் திசைமாறித் திரும்பியதை ராடார் திரைகளில் அவதானித்தனர். பின்னர் அதுவும் திரையிலிருந்து மறைந்து போனது. அப்புறம் நடந்ததெல்லாமே அனுமானங்கள்தான். கிடைக்கும் ஒவ்வொரு தகவல்களையும் வைத்து ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்ட அனுமானங்கள். அவை ஒவ்வொன்றாக வெளிவந்தபடியே இன்றுவரை இருக்கின்றன.

rajsiva%20(3).jpg

ஒரு விமானம் வானில் தடம்மாறி, இப்படியானதொரு ஆபத்து நிலைக்குள்ளாக வேண்டுமானால், அதற்கு மூன்றே மூன்று காரணங்கள்தான் இருக்கின்றன. ஒன்று விமானம் எந்திரக் கோளாறினால் வானிலோ, கடலிலோ விபத்துக்குள்ளாவது. இரண்டாவது, திடீரென ஏற்படும் காலநிலை மாற்றங்களினால் பயணம் செய்யும் திசையிலிருந்து விலகி, அவசரமாக எங்கு விமானத்தை இறக்க முடியுமோ அங்கு இறக்கிவிடுவது. மூன்றாவது, தீவிரவாதச் செயல்களின் மூலம் விமானம் கடத்தப்படுவது. இந்த மூன்று காரணங்களை முன்னிட்டும், விமானங்கள் செல்ல வேண்டிய வான்வழிப் பாதையிலிருந்து மாறிச் செல்லலாம். கட்டுப்பாட்டு நிலையத்துடன் உள்ள தொடர்புகளும் இல்லாமல் அறுந்து போகலாம். இதில் சொல்லப்பட்ட, இரண்டாவது காரணமான காலநிலை மாற்றங்களை எடுத்துக் கொண்டால், இன்றுள்ள நவீன அறிவியலில், சாட்லைட்களின் உதவியுடன் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறியக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. விமானங்களுக்கெனப் பிரத்தியேகமான பல வழிமுறைகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் இன்றைய சூழ்நிலையில் இந்தக் காரணத்தை நாம் நீக்கிவிடலாம். அத்துடன் மலேசிய விமானத்தின் பறத்தலின்போது, அப்படியான காலநிலை மாற்றம் எதுவும் வரவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. ஆகையால் நம் கண்முன்னால் எஞ்சியிருக்கும் இரண்டு காரணங்களில், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது விமானம் விபத்திற்குள்ளாகியிருக்கலாம்.

மலேசிய விமானம் எந்திரக் கோளாறுகள் காரணமாக, விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று எடுத்துக் கொண்டால், அந்த விபத்து வானில் நடந்திருக்க வேண்டும் அல்லது கடலில் நடந்திருக்க வேண்டும். வானில் அப்படியொரு விமானம் வெடித்துச் சிதறியதற்கான அடையாளத்தை யாரும் காணவில்லை. அத்துடன் அப்படி நடப்பது அபூர்வத்திலும் அபூர்வம். எஞ்சின் ஒன்று தீப்பற்றி எரிந்திருந்தால் கூட, கடல் மட்டம் வரை விமானத்தை இறக்கி விடலாம். அதனால், விபத்து கடலில் விமானம் விழுந்ததனால்தான் நடந்திருக்க வேண்டும். இங்கு விபத்து என்று நான் சொல்ல வருவது மொத்தப் பிரயாணிகளுக்குமான உயிராபத்துச் சூழ்நிலையின் இறுதிக் கட்டத்தை. எப்படிப் பார்த்தாலும் வியட்நாம், மலேசியாவுக்கிடையிலிருக்கும் கடலில்தான் அந்த மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வேண்டும். ஒரு விமானத்தை அவசர நிமித்தமாக கடலின் மேற்பரப்பில் ‘இறக்கம்’ (Landing) செய்தால் மட்டுமே அந்த விமானத்தின் பாகங்களுக்குப் பெரும் பான்மையான பாதிப்பில்லாமல், கடலின் நீர் மேற்பரப்பிலேயே விமானத்தை வைத்திருக்க முடியும். ஆபத்தான சமயங்களில் விமானிகள் இப்படிக் கடலில் விமானத்தை இறக்கிப் பல உயிர்களைக் காப்பாற்றிய சம்பவங்கள் நிறையவே நடந்திருக் கின்றன. ஆனால், ‘இறக்கம்’ (Landing) என்னும் செயல் இல்லாமல், கடலில் விமானம் விழுமேயானால், அது பல பாகங் களாக உடைந்து சிதறும். விமானத்தில் இருந்த எரிபொருட்கள் எல்லாம் கடல் மேற்பரப்பில் சேரத் தொடங்கும்.

rajsiva%20(4).jpg

பயணிகளுக்கு இது மாபெரும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாகும். விமானத்தின் வால் பகுதி, இறகு, சுவர்ப்பகுதிகள் போன்ற பாகங்கள் மிதக்க, மற்றவை அனைத்தும் கடலின் ஆழத்தில் சங்கமமாகும். இதைக் கருத்தில் கொண்டு, மலேசிய விமானம் விழுந்திருக்கலாம் என்று சந்தேகப்படும் கடல் பிரதேசமெங்கும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால், அப்படியொரு விமான விபத்து சம்பவித்ததற்கான அறிகுறியே இந்தச் சம்பவத்தில் எங்கும் காணப்படவில்லை. விமானத்தின் எந்தப் பாகம் கடலில் அமிழ்ந்தாலும், எரிபொருளான எண்ணெய் மட்டும் ஆங்காங்கே திட்டுத் திட்டாக மிதந்து கொண்டுதான் இருக்கும். அவற்றைக் கண்டுபிடிப்பதும் ஒரு அளவுக்குச் சுலபமானது. ஆனால், அப்படி எதுவும் மிதக்கவில்லை. இந்த சமயத்தில்தான் ஒரு முக்கியமான விசயம் தெரிய வந்தது. ஏதோ ஒரு காரணத்தினால், “மே டே... மே டே...” (விணீஹ் ஞிணீஹ்ஞ். விணீஹ் ஞிணீஹ்ஞ்) என்னும் ஆபத்து நேரத்தில் உதவிக்கு அழைக்கும் அழைப்பு, விமானியினால் விடப்படவில்லை. ஏன் விமானி கட்டளைத் தளத்துடன் தொடர்பு கொண்டு அந்த அவசர அழைப்பைக் கொடுக்கவில்லை என்று ஆராய்ந்தபோது கிடைத்த பதில்தான், ‘இந்த விமானம் விபத்துக்குள்ளாகவில்லை. கடத்தப் பட்டிருக்கலாம்’ என்னும் சந்தேகத்துக்கான திசை திருப்பலுக்கு ஆரம்பப்புள்ளியானது. அது என்ன? என்று தெரிந்து கொள்வதற்கு முன்னர், விமானங்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது, ஏன் ‘மே டே’ (விணீஹ் ஞிணீஹ்) என்கிறார்கள் என்று பார்த்துவிடலாம்.

rajsiva%20(5).jpg

விமானம் ஒன்று ஆபத்திலிருக்கும்போது, உதவி கேட்டு அழைப்பதற்கும், மே மாதத்திற்கும் அல்லது மே மாதத்தின் ஒரு தினத்துக்கும் என்ன சம்பந்தம்? அந்தச் சம்பந்தத்தை எங்கு தேடிப் பார்த்தாலும் நீங்கள் கண்டுபிடிக்கப் போவதில்லை. ஒரு சிலர் மே மாதத்தின் வெப்பமான காலநிலையை வைத்து ஆங்காங்கே ஏதோ தொடர்பற்ற காரணங்களைச் சொல்லியிருந்தாலும், உண்மையான காரணத்துக்கும் மே மாதத்திற்கு எந்தச் சம்பந்தமுமில்லை.’மே டே’ (May Day) என்பதற்கு உலகளவில் உள்ள அர்த்தம், ‘உலகத் தொழிலாளர்கள் தினம்’ என்பதுதான். ஆனால் அதையே, ‘மே டே’, ‘மே டே’ என்று அவசரத்தில் அழைத்தால் அர்த்தமே மாறுபடுகிறது. ‘அப்படியென்றால் உண்மையான அர்த்தம்தான் என்ன?’ என்று கேட்கிறீர்களா’. அது ரொம்பச் சாதாரண காரணம்தான். ஆனால் பெரிய விசயத்துக்குப் பாவிப்பதற்கு உரியதாக மாறிவிட்டது. விசயம் இதுதான்: பிரெஞ்சு மொழியில் வி’ணீவீபீமீக்ஷ் என்னும் சொல்லுக்கு அர்த்தம் பிமீறீஜீ விமீ என்பதாகும். ஆனால் இந்த M’aidez என்ற சொல்லை பிரெஞ்சு மொழியில் உச்சரிக்கும்போது, ‘மே டே’ (மேய்டி) என்பது போல ஒலிக்கும். அதாவது ஹெல்ப் மீ.. ஹெல்ப் மீ.. என்றழைப்பதையே, மே டே.. மே டே.. என்று அழைப்பது என்றாகிவிட்டது. இதுவே, ஆபத்தான சமயங்களில் விமானம் மற்றும் கப்பல்களில் பயன்படுத்தும் சொல்லாகவும் மாறியது. ஆனால், இந்த உதவிக்கான அவசர அழைப்பு எதுவும் மலேசிய விமான ஓட்டிகளால் விடப்படவில்லை. அது ஏன்?

rajsiva%20(6).jpg

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றுதான் முதலில் அறிவித்தனர். ஆனால் ஏதோவொரு தவிர்க்கவியலாத கணத்தில், அது கடத்தப்பட்டிருக்கலாம் என்னும் கருத்துத் தீயாகப் பரவத் தொடங்கியது. அதன்பின், வரிசையாகக் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படக் கூடிய காரணங்கள் அடுக்கப்பட்டன. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினால், அதற்கான காரணங்களை வரிசையாக்கினார்களா அல்லது விமானம் கடத்தப்பட்டிருக்கிறது என்று மக்களை நம்ப வைப்பதற்கு, காரணங்களைத் தேடித் தேடி வரிசையாக்கினார்களா என்பது யாருக்கும் தெரியாது. மலேசிய விமானம் விபத்தில் சிக்கியிருந்தாலோ, கடத்தப்பட்டிருந்தாலோ, நிச்சயம் விமானி அவசர உதவிக்கான அழைப்பை விடுத்திருப்பார். ஆனால் கோலாலம்பூரின் ராடார் நிலையத்துடன், ‘ஆல்ரைட் குட்நைட்’ என்ற இறுதி வார்த்தைகளைச் சொல்லி சுமுகமாகவே விமானியின் தொடர்பு அதற்குப் பின்னர் இல்லாமல் போயிற்று. அதனால், விமானத்தில் இருந்த ரேடியோ தொடர்பு சாதனம், விமானிகளால் திட்டமிட்டே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை முதலில் முன்வைத்தனர். அத்துடன் விமானத்திலிருந்து ராடார் களுக்கு வரும் சமிக்ஞைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றனர். அந்தத் தொடர்புகள் இல்லாமல் போனது என்னவோ உண்மை தான். அப்படியென்றால், விமானிகள் ஏன் அவற்றை நிறுத்தினார்கள் என்ற கேள்வியில் ஆரம்பித்த சந்தேகம் படிப்படியாக வளர்க்கப் பட்டு, விமானிகள் இருவரும் இஸ்லாமியர்களாக இருந்ததால், ‘இது தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட கடத்தல் சதியாகத்தான் இருக்கும்’ என்பதில் கொண்டு வந்து நிறுத்தியது.

rajsiva%20(7).jpg

முதல் விமானியாக ‘சஹாரி அஹ்மட் ஷா’ (Zaharie Ahmad Shah) வும், இரண்டாவது விமானியாக ‘ஃபாரிக் அப்துல் ஹமிட்’ (Fariq Abdul Hamid) உம் மலேசிய விமானத்தில் கடமையில் இருந்திருக்கின்றனர். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அஹ்மட் ஷா, மிகவும் அன்பானவராகவும், நல்ல நடத்தை கொண்டவராகவுமே பலராலும் அறியப்பட்டிருக்கிறார். பல வருடங்கள் விமான ஓட்டியாகப் பணிபுரிந்த அவர் எந்தத் தப்பான செயல்களும் செய்ததாக அறியப்படாதவர். பல இளம் விமானிகளுக்குப் பயிற்சி கொடுக்கும் திறமை வாய்ந்த விமானியாகவும் இருந்து வந்திருக்கிறார். ஆனால் இவரின் மேல்தான் முதல் பழியைச் சுமத்தினார்கள். அதற்கு அவர்கள் ஒரு காரணத்தையும் முன்வைத்தார்கள். மலேசியாவின் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ‘அன்வர் இப்ரஹீம்’ (Anwar Ibrahim) என்பவரை அஹ்மட் ஷா பலமாக ஆதரித்தவர். ஆனால் அந்த எதிர்க்கட்சித் தலைவர், ஓரினச் சேர்க்கையாளர் என்ற குற்றச்சாட்டில் விமானம் மறைவதற்கு முதல் நாள்தான் சிறைக்குச் சென்றிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களையும் உடனே தொடர்பு படுத்தி, இதனாலும் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை விதைத்தனர். சந்தேகத்தின் அடிப்படையில், அஹ்மட் ஷாவின் வீட்டிற்குச் சோதனையிடக் காவலர்கள் சென்றபோது, விமானம் மறைவதற்கு முதல் நாளே மனைவியும், பிள்ளைகளும் அவர்களின் சொந்த ஊருக்குச் சென்றிருந்திருக்கிறார்கள். இதுவும் சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது. கட்டுப்பாட்டறையுடன் தொடர்பு கொண்டு விபரத்தைப் பார்த்தபோது, சக விமானியான அப்துல் ஹமீட்தான் உரையாடலில் பங்குபற்றியிருந்தாரேயொழிய, அஹ்மட் ஷா பங்குபற்றியிருக்கவில்லை. இதுவும் அஹ்மட் ஷாவைச் சந்தேகப்படக் காரணமாகிப் போனது. இத்துடன் முடிந்தால் பரவாயில்லை. மலேசிய விமானநிலையத்தில் இருந்த, ‘ACARS’ (Aircraft Communication Addressing and Reporting System) என்று சொல்லப்படும் விமானத்துக்கும், தரைக்குமிடையிலான தகவல் பரிமாற்றக் கருவி, விமானம் மறைவதற்குச் சற்று முன்னர்தான் இனம்தெரியாத ஒருவரால் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் திட்டமிட்டுச் செய்த காரியமாகவே கருதப்பட்டது. எல்லாமே அதனதன் இடங்களில் மிகச்சரியாகப் பொருந்துவது போல ஆகிவிட்டது. ஆனால், விமானிகள் இருவரையும் சந்தேகப்பட்ட நிலையில், அந்த இரு விமானிகளுமே ஒன்றாகப் பறக்க விரும்பியிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஆனாலும், விமானம் தீவிரவாத நடவடிக்கைகளுக்காகக் கடத்தப்பட்டிருக்கிறது என்பதை முழு நிச்சயமான முடிவாக எடுத்தது போல, அமெரிக்கா அறிக்கை மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தது. இதில் மிகப்பெரிய ஆச்சரியமாக, ‘இந்த விமானத்தைக் கடத்தியதே அதன் விமானிதான்' என்று சொல்லி வைத்தார்கள். அதற்குக் கடந்த காலங்களில் விமானிகளே விமானத்தைக் கடத்திய சில சம்பவங்களையும் உதாரணமாகச் சாட்சிகளாக்கினர். இவையெல்லாம் சேர்ந்து, விமானம் கடத்தப்பட்டுவிட்டது என்றே உலகம் முழுவதுமே நம்பியிருந்தது. ஆனால் இந்த இடைவெளியில் சீனா செய்த ஒரு காரியத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மறந்துவிட்டிருந்தனர்.

விமானம் கடத்தப்பட்ட ஐந்தாம் நாள் சாட்லைட் எடுத்த படமொன்றை சீனா வெளியிட்டது. 25 மீட்டர் அகலமும் 24 மீட்டர் நீளமுமுள்ள ஒரு பொருள் கடலில் மிதப்பதை அப்படம் காட்டியது. அந்தப் பொருள் விமானத்தின் உடைந்த துண்டாக இருக்கலாம் என்று சீனா தெரிவித்தது. ஆனால் விமானம் கடத்தப்பட்டது என்பதை உறுதியாக நம்பிய நிலையில், யாரும் அந்தச் செய்தியைக் கவனத்தில் எடுக்கவில்லை. ஆனால் அதில் சீனா சொன்ன ஒரு தகவல் மிகவும் விசித்திரமாக இருந்தது. விமானம் மறைந்த சில மணிநேரங்களில் சீனாவின் சாட்லைட் அந்தப் படத்தை எடுத்திருக்கிறது. ஆனால் சீனாவோ ஐந்து நாட்களின் பின்னர்தான் இந்தச் செய்தியை வெளியுலகிற்கு அறிவித்தது. ஐந்து நாட்களின் பின்னர் அந்த இடத்தில் அப்படியொரு உடைந்த துண்டைத் தேடினால் கிடைக்கவா போகிறது? அந்த விமானத்தில் சீனர்களே 160 பேர் இருந்த நிலையில், சீனா ஏன் அந்தப் படத்தை உடனே வெளியிடாமல் மறைத்தது என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை. உடனடியாகத் தெரிவித்திருந்தால், அந்த இடத்தில் தேடியிருக்கலாம். ஆனால் சீனா அதைச் செய்யவில்லை. மலேசிய விமான நிலைய அதிகாரிகளின் அறிக்கைகளிலும் பல முரண்பாடுகள் காணப்பட்டன. ‘இந்த விமானம் கடத்தப்பட்டுத்தான் இருக்கிறது’ என்ற முடிவுக்கே நாம் வரவேண்டும் என்ற ஒருவகைத் திணிப்பு நிலைக்கு இவர்கள் கொண்டு சென்றார்கள். விமானம் கடத்தப்பட்டது என்பதை வேறு ஏதும் காரணங்களுக்காகத் திட்டமிட்டுத் திணிக்கிறார்களோ என்றே நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. “விபத்துக்குள்ளான விமானம் ஒன்றை ஏன் கடத்தப்பட்டது என்று அவர்கள் சொல்ல வேண்டும்?” என்ற நியாயமான கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.

rajsiva%20(8).jpg

ஒரு போயிங் 777 விமானம் 400 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான பெறுமதியைக் கொண்டது. அதில் பிரயாணம் செய்த 239 பயணிகளில் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் ஐந்து லட்சம் டாலர்களை இழப்பீட்டுத் தொகையாக உறவினர்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். அப்படிப் பார்த்தால், 239 பயணிகளுக்கு மட்டும் 120 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையாக வருகிறது. மொத்தமாகப் பார்த்தால் கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையாகக் காப்புறுதி நிறுவனம் (Insurance Corporation) கொடுக்க வேண்டும். ஆனால், விமானம் விபத்துக்குள்ளாகிப் பயணிகள் அதனால் இறந்துவிட்டார்கள் என்றால் மட்டுமே இழப்பீட்டுத் தொகையை அந்த நிறுவணம் வழங்கும். விமானம் கடத்தப்பட்டுவிட்டது அல்லது மாயமாகிவிட்டது என்று சொல்லும் போது, அதைச் சரியான வகையில் உறுதி செய்யும் வரையில், அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு வராது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டவர்கள் ஒருநாள் மீண்டும் உயிருடன் வந்தால் என்ன செய்வது என்ற வாதம் அங்கு முன்வைக்கப்படும். மலேசிய விமானம் கடத்தப்பட்டு, அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்ட விவகாரத்தில், அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கவே தேவையின்றிக் கூடப் போகலாம். இதனால் இலாபம் அடைவது காப்புறுதி நிறுவனம் மட்டுமே. விமானங்களைக் காப்புறுதி செய்யும் நிறுவனங்கள், சாதாரணக் காப்புறுதி நிறுவனங்களைப் போன்றது அல்ல. இவை மகாப் பெரியவை. உலக மகாப் பணக்காரர்களின் கைகளிலேயே இந்த நிறுவனங்கள் இருக்கின்றன. அரசுகள் சாராமல், ஆனால் அரசுகளை ஆட்டிவைக்கக் கூடிய வலிமையுடன் அவை உலகெங்கும் கோலோச்சுபவை. இந்த நிறுவனங்கள், தங்களின் நலன் கருதி ஒரு விமான விபத்தைக் கடத்தல் நாடகமாக்க முயற்சிக்கின்றனவோ என்ற சந்தேகம்தான் இறுதியில் மிஞ்சுகிறது.

இந்த இடத்தில் ஒரு சிறு குறிப்பு: இந்த இடம் வரை கட்டுரையை நான் எழுதியபோது (24.03.2014), விமானம் மறைந்திருக்கும் மர்மமான நிலைதான் இருந்தது. இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் போது, விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதை மலேசிய அரசு ஒத்துக் கொள்வதாக தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், எழுதிய கட்டுரையை அப்படியே தொடர்ந்து எழுதி உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். அடுத்து வரும் வரிகளில் மட்டும் விமானம் விபத்தில் சிக்கியது போலவே வார்த்தைகள் அமையலாம். இறந்த அனைத்துப் பயணிகளுக்கும், விமானப் பணியாளர்களுக்கும், விமானிகளுக்கும் என் அஞ்சலிகள். இனி மீண்டும் கட்டுரைக்குச் செல்வோம்.

உண்மையிலேயே மலேசிய விமானம் விழுந்து நொறுங்கியதால் உடைந்த துண்டு ஒன்றைத்தான் சீனா கண்டிருக்கிறது. அது திட்டமிடப்பட்டோ, திட்டமிடப்படாமலோ மறைக்கப்பட்டிருக்கிறது அல்லது மறக்க வைக்க முயற்சிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்து வந்த ஆஸ்திரேலிய அரசு, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது. “எங்கள் சாட்லைட்டுகள் மூலமாக மலேசிய விமானம் சம்பந்தமான இரண்டு தடயங்களைக் கண்டிருக்கிறோம். அவை பற்றிய விபரங்களை இன்னும் இரண்டொரு நாட்களில் முழுமையாக வெளிவிடுகிறோம்” என்று பகிரங்கமாகப் பாராளுமன்றத்தில் ஆஸ்திரேலியா தெரிவித்தது. ஆஸ்திரேலியாவின் இந்த அறிக்கையின் பின்னர், அதுவரை கூட்டுக்குள் ஒளிந்திருந்த சீனா மீண்டும் வெளியே வந்து, தன் சாட்லைட் படங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தது. அத்துடன் வேறொரு புறத்திலிருந்து பிரான்ஸ் நாடும் தன்னுடைய சாட்லைட்டுகளிலும் விமானத்தின் உடைந்த துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. இவர்களெல்லாம் ஆஸ்திரேலியா பகிரங்கமாக அறிவிப்பதற்கு முன்னர் எங்கே ஒளித்திருந்தார்கள் என்றே தெரியவில்லை.

எது எப்படியோ, ஒரு திறமை வாய்ந்த முதல்தர விமானியும், அவரது சக விமானியும் இஸ்லாமியர்கள் என்பதாலேயே மிகவும் மோசமான முறையில் உலகம் முழுவதாலும் விமர்சிக்கப் பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களுக்குக் காப்பீட்டுத் தொகையைக் கொடுத்து ஈடு செய்துவிடலாம். இந்த விமானிகளை அவமானப் படுத்தியவர்கள், எதை, எப்படி, யாருக்குக் கொடுத்து ஈடு செய்யப் போகிறார்கள்?

http://uyirmmai.com/contentdetails.aspx?cid=6514

"முழு உலகமும் இன்றுவரை பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறது"

கொஞ்ச நாள் தான். புட்போல் தொடங்கியபடியால் மறந்தாச்சு.

  • 9 months later...

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்’ என்று இந்திய பெருங்கடலில் உள்ள குட்டித்தீவான குடஹூவாதூ தீவுவாசிகள் தெரிவித்து உள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே மாயமான மலேசிய விமானம், வேண்டுமென்றே அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டது.

அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது திருப்பத்தின்படி அண்டார்டிகா நோக்கி அந்த விமானம் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி பிரபல விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்று உறுதியாக கூறினார்.

அமெரிக்க–தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டு போர் பயிற்சியின்போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்னொரு தகவல் கூறியது. மேலும், ஹிட்ச் என்ற தீவிரவாதிதான் இந்த விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச்சென்றவர். விமானம் பாகிஸ்தான் எல்லையில் காந்தகார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று ரஷியாவில் இருந்து வெளிவரும் மோஸ்கோவ்கி கொம்சோலெட்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

விமானத்தை பார்த்தோம்

இந்நிலையில் ‘மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பார்த்தோம்’ என்று இந்திய பெருங்கடலில் உள்ள குட்டித்தீவான குடஹூவாதூ தீவுவாசிகள் தெரிவித்து உள்ளனர்.

மாலத்தீவு நாட்டின் குடஹூவாதூ தீவை சேர்ந்த மக்கள், விமானம் மாயமானதாக கூறப்படும் மார்ச் 8-ம் தேதி அதிகாலையில் விமானம் ஒன்று தாழ்வாக பறந்து சென்றதை பார்த்தோம். விமானமானது, மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பான புகைப்படங்களில் இருந்தப்படியே இருந்தது. விமானம் மிகவும் பெரியதாக காணப்பட்டது என்று கூறியதாக ஆஸ்திரேலியாவின் வாரநாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

வெள்ளை நிறத்திலான ஜம்போ செட் விமானம் மிகவும் தாழ்வாக வடக்கில் இருந்து தென்கிழக்காக சென்றது, விமானத்தில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்திலான மார்க் காணப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்ற தகவல் மாலத்தீவு நாளிதழில் வெளியாகியது.

இதுதொடர்பாக தீவை சேர்ந்த அப்து ராஷீத் இப்ராகீம் ஆஸ்திரேலியா வாரநாளிதழக்கு பேட்டி அளித்து பேசுகையில், “விமானம் மாயமானது என்று எனக்கு தெரியாது. நான் வேகமாக வீட்டிற்கு சென்று எனது மனைவிடம் நடந்தை கூறினேன். மிகவும் புதுமையான விமானத்தை பார்த்ததாக எனது உறவினர்களிடம் தெரிவித்தேன். நான் இதற்கு முன்பாக பார்த்த விமானங்களைவிட இது மிகவும் பெரிய விமானமாக இருந்தது. நான் மாயமான விமானத்தின் புகைப்படத்தை பார்த்து உள்ளேன். நான் அந்த விமானத்தையே பார்த்து இருப்பேன் என்று நம்புகிறேன். விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் இங்கு வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்து உள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் பேசுகையில், “எங்களுடைய தீவில் இவ்வளவு தாழ்வாக விமானம் பறந்தை நாங்கள் யாரும் இதுவரையில் பார்த்தது கிடையாது. நாங்கள் கடல் விமானங்களை பார்த்து இருக்கிறோம். இது அதுபோன்றது கிடையாது. விமானத்தின் கதவைகூட என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. நான் மட்டுமின்றி தீவில் உள்ள அனைத்து மக்களுமே இதனை பார்த்தனர். அவர்களும் இதே எண்ணத்திலே உள்ளனர். பெரும் சத்தம் கேட்டது என்ன நடக்கிறது என்று பார்க்க வீட்டிற்குள் இருந்து பலரும் வெளியே வந்தனர்.” என்று கூறியுள்ளனர்.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியானது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தை தேடும் பணிகள் நடைபெற்றது. மேலும் விமானத்தை தேடும் பணியில் பரப்பளவு விரிவுபடுத்தப்பட்டது. ஆனாலும் இதுவரையில் விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் விமானத்தை தேடும் அதிகாரிகள் தற்போது தேடும் இடத்தில் இருந்து வெளியே வந்து, அங்கிருந்து சுமார் 5000 கிலோ மீட்டர் தொலைவில் தேடும் பணியினை மேற்கொண்டால் கண்டுபிடிக்கலாம் என்று கிராமமக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதற்கும் சாத்தியம் இருப்பதை மறுக்காத ஆஸ்திரேலியாவின் கார்டின் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், விமானம் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் வேளையில் விமானமானது இங்கு பயணித்து இருக்கலாம். குடஹூவாதூ தீவில் சத்தம் மிகவும் நெருக்மாக கேட்டபோது, விமானத்தில் எரிபொருளானது தீர்ந்து இருந்து இருக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். இதற்கு மற்ற காரணமும் இருந்துதிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். தீவை சேர்ந்த அனைத்து மக்களும், தாங்கள் விமானத்தை பார்த்ததாக உறுதிப்பட தெரிவித்து உள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாலத்தீவு பாதுகாப்பு படை தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.MH370.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/40622.html#sthash.r6hKd7a9.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.