Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பந்தத்தின் இறுதிச் சடங்கினை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தை

Featured Replies

தமிழர்களின் வடக்கு - கிழக்குத் தாயகப் பிரதேசங்களை அந்நிய நாடாக சிறிலங்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவே நடக்கும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பால் வேறுபாடின்றி இனப்படுகொலைகள், மூடிய எல்லைகளுக்கப்பால் பொருளாதாரத் தடை, பெரும் படை நகர்வை மேற்கொண்டு சிறு துரும்பை ஆக்கிரமித்தவுடன் ஆனந்தப் பெருங்களிப்பு முதலியன இப்படித்தான் கருத வைக்கின்றன.

புலிகளின் ஆட்லறி நிலைகளைத் தகர்க்கவே படை நடவடிக்கை மேற்கொள்வதாக சர்வதேசத்திற்கு கண்துடைப்புக் காரணங்கள். அத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் வரையறுக்கப்படாத புதிய சரத்துக்களை தாமாகவே பின்னிணைப்பாக அரசு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

இப்புதிய சரத்துக்களில் ஆட்லறி நிலைகளை அகற்றுதல், பொங்கு தமிழ் ஏற்பாட்டாளர்களை புகைப்படம் மூலம் இனங்கண்டு கொலை செய்தல், இரணைமடு விமான ஓடு பாதைகளை குண்டு வீசித் தகர்த்தல், அரச சார்பற்ற தமிழ் உதவு அமைப்புக்களின் வங்கி நிதியை முடக்கல், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது பொருளாதாரத் தடை விதித்தல் போன்ற இன்னும் பல விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையில் அனுசரணையாளர்கள் உள்ளனர். மேற்கூறிய சரத்துக்களை புலிகள் தமது நிகழ்ச்சி நிரலில் இணைத்துச் செயற்பட்டால் கடுங் கண்டனத்துடன் சன்னதம் கொள்வார்கள்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமது விமானத்தாக்குதல்களை ஒரு இடத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மேற்கொண்டுள்ளது.

ஆயினும் கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் சமாதானச் செயலகத்தின் மீது எப்போது குண்டு விழுகிறதோ அன்றோடு சமாதானப் புறா அங்கிருந்து பறந்தோடி விடும். அதேபோன்று நடைபெறும் போரில் வான் புலிகளின் பகிரங்கப் பிரசன்னம் எப்போது இடம்பெறுகிறதோ அன்றிலிருந்து எல்லாமே முடிந்த முடிவாகி விடும்.

வான் புலிகளின் பரப்பும் சமாதானச் செயலகத்தின் தகர்ப்பும் முழுமையான யுத்தமொன்றிற்கான ஆரம்பக்குறியீடாக அமையும். பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் பிரகடனப்படுத்தப்படுதலின் சமிக்ஞையாகவும் இதைக் கருதலாம்.

இறுதிப் போர் ஆரம்பமாகி தொடர்கின்ற இன அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்கிற ஆதங்கம் பெரும்பான்மை தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனடிப்படையில் தந்திரோபாயப் பின்னகர்வுகள் அதிருப்தியை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது.

முதல் தடவையாக சர்வதேச அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமும் அதனோடிணைந்தே செயற்பாடும் நுணுக்கமான விதத்தில் கையாளப்பட வேண்டுமென்கிற அரசியல் சார் வளர்ச்சி விடுதலைப் புலிகளிடம் காணப்படுகிறது.

இணைத் தலைமை நாடுகளின் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி ஒக்டோபர் மாதமளவில் இன்னுமொரு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கிடையில் சம்பூரையும் ஆனையிறவையும் கைப்பற்றும் பெருந்திட்டமொன்று அரச தரப்பின் நிகழ்ச்சி நிரலில் முன்வைக்கப்பட்டிருந்தது.

தமக்குச் சாதகமான இராணுவ கள நிலைமைகளை உருவாக்கவே இத்திட்டம் வகுக்கப்பட்டது. இருப்பினும் சம்பூர் பிரதேச இழப்பினை, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் போடப்பட்ட ஒரு பொறியாக ஏற்றுக்கொண்டாலும் ஆனையிறவையும் இழந்து பொறியைப் பெரிதாக்க புலிகள் விரும்பமாட்டார்கள்.

சம்பூர் வெற்றிச் செய்தியினால் புத்துணர்ச்சி பெற்ற அரச படையினரின் மனோநிலை முகமாலை முன்னரங்க மோதலில் ஏற்பட்ட பாரிய இழப்புகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன.

இந்நிலையில் அனுசரணையாளர்களினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பேச்சுவார்த்தை முன்னெடுப்பு, அரசின் நிகழ்ச்சி நிரலை நிச்சயம் பாதித்திருக்கும். இழப்புக்களை வெளிப்படுத்தாமல் இலக்கை அடைய அரசு எடுக்கும் நகர்வுகள் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன் அதிகரிக்கப்படலாம்.

சம்பூர் இழப்பை, பொறியை உருவாக்கும் பின்னகர்வுத் தந்தரோபாயமாகக் கொண்டால் பேச்சுவார்த்தையில் புலிகள் கலந்துகொண்டு அரசின் அத்துமீறல்களை வெளிப்படுத்தலாம்.

ஏற்கனவே பல தடவைகள் முறிக்கப்பட்ட போர் நிறுத்தங்கள் குறித்து விடுதலைப் புலிகள் மீதே சிறிலங்கா அரசு சோடிக்கப்பட்ட கண்டனங்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக நடைபெற்ற ஜெனிவா சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட ஆணைக்குழுக்கள் விவகாரம், பேச்சுவார்த்தையுடன் முற்றுப் பெற்றது. அனுசரணையாளர்களும் அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. உடன்படிக்கையில் எழுதப்பட இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி மக்களை மீளக்குடியமர்த்தல், இயல்பு வாழ்விற்காக ஏது நிலைகளை உருவாக்கல் என்று எதுவுமே நடைபெறவில்லை.

ஆனாலும் பேசியே தீரவேண்டுமென விடாப்பிடியாக உள்ளார்கள். இவர்களின் இந்த அசமந்தப் போக்கினை நீடிக்கவிட்டால் நீண்டகால போராட்ட வரலாறு வேறு திசையில் நகரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.

ஆதலால் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில் அரசுடன் நேரடியாகப் பேசுவதைத் தவிர்த்து அரசின் ஒப்பந்த மீறல்கள் குறித்தும் அதுபற்றி இதுவரை அரசைக் கண்டிக்காத இணைத்தலைமை நாடுகளின் மௌனம் குறித்தும் அனுசரணையாளர்களுடன் முதற் சுற்றுப் பேச்சுவார்த்தையை நிகழ்த்த வேண்டும்.

அதனூடாக அரசின் அப்பட்டமான யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை இணைத்தலைமை நாடுகள் ஏற்றுக்கொள்வதாயின் அப்புள்ளியிலிருந்து பேச்சுவார்த்தையை நோக்கி நகர உடன்பாடு காணலாம்.

இப் பாதையைத் தவிர்த்து அரசுடன் நேரடியாகப் பேச முற்பட்டால் ஜெனிவாவில் நடைபெற்றது போன்று முறுகல் நிலை உருவாகும். சிலவேளை சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக சம்பூரிலிருந்து விலகுவதாக அரசு அறிவித்தாலும் நாடு திரும்பியதும் ஆணைக்குழு விவகாரத்திற்கு ஏற்பட்ட நிலையே மறுபடியும் உருவாகும்.

சம்பூர் பொறியென்பது அனுசரணையாளர்களின் காலநீட்சித் தந்திரத்தினை முறியடிக்க உருவாக்கப்பட்ட பொறியே தவிர அரசுக்கானதல்ல. ஆகவே அனுசரணையாளர்களுடன் முதற் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் உத்தரவாதம் பெறப்பட்ட பின்பே அரசுடன் பேசுவது உசிதமானது.

இல்லையேல் இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற அரசின் முன்னெடுப்புக்கள் தொடர்ந்த வண்ணமிருக்கும். சம்பூர் ஆக்கிரமிப்பிற்கு கொடுத்த புதுப்புது வியாக்கியானங்கள் போன்று அடுத்து வரும் இராணுவ நகர்வுகளுக்கும் விளக்கமளிப்பார்கள்.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென்றும் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி படைத்தளத்தை காப்பாற்ற ஆனையிறவிற்கப்பால் புலிகளின் ஆட்லறி நிலையை பின்தள்ள வேண்டுமெனவும் கூறுபவர்கள் வவுனியா படைத்தளத்திற்கு ஆபத்து இருப்பதால் ஓமந்தையையும் கைப்பற்ற வேண்டுமென்றும் புதிய இலக்குகளை தொடர்ந்து முன்வைப்பார்கள்.

அரசின் ஆக்கிரமிப்புச் சதித்திட்டங்களை சர்வதேசத்திற்கு அம்பலமாக்கும் இறுதிப் பேச்சுவார்த்தையாக இது அமைந்தால் விடுதலைக்கான தூரம் குறுகியதாகவிருக்கும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (17.09.06)

http://www.tamilnaatham.com/articles/2006/...chandran/17.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.