Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன்

- பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

1

வடிவேலு ”வின்னர்” படத்திற்குப் பிறகு வேறுவேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அந்தக் பாத்திரங்களின் வழியாக ஒரு தொடர்ச்சியை கையாண்டார். சமூக உற்பத்தியில் எவ்வித பங்கும் இல்லாத ஒரு உபரியாக, பெரும்பாலும் ”உழைப்பற்ற” ஒரு பாத்திரமாக பல படங்களில் நடித்தார். குடும்பத்தினர், குழந்தைகள், உடனிருக்கும் நண்பர்கள், சமூகம் என யாருமே எவ்வித மதிப்பையும் கொடுக்காத, அவரைத் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்யும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். தமிழ்சினிமா நகைச்சுவை நடிகர்களில் உழைப்பு, உழைப்பிற்கான தகுதியின்மை, உழைத்தாலும் அதில் வெற்றி அடையமுடியாத ஒருவராக நடித்தவர், ஆரம்பகட்ட படங்களில் கூட பெரும்பாலும் கிராமப்புற அடிமட்ட தொழிலாளியாகவே தோன்றுயிருக்கிறார்

ஒரு நகைச்சுவைக் கதாபாத்திர உருவாக்கத்திற்கான இலக்கணங்களாக இருப்பவை முட்டாள்தனமும், மதிப்பிற்குரிய எல்லாவற்றையும் (குறிப்பாக பணிகள், சமூகப் படிநிலைகள்) தகுதிக்குறைப்பிற்கு உட்படுத்தும் பகடியும். இச்சமயத்தில் உடனடியாக சுட்ட முடிகிற கதாபாத்திரங்களாக “மன்னார் அண்ட் கம்பெனி” தங்கவேலு, ”தருமி” நாகேஷ் (காதலிக்க நேரமில்லை “செல்லப்பா”), ”ஆல் இன் ஆல் அழகுராஜா” கவுண்டமணி, ”கைப்புள்ள” வடிவேலு ஆகிய புகழ்பெற்ற பாத்திரங்கள் அனைத்தும் ஒரு வேலை தேடிக் கொள்ள முடியாத, விடையளிக்கும் பாடலொன்றை இயற்ற முடியாத, தன்னுடைய உடைமையாக இருக்கும் பெட்ரோமாக்ஸை பாதுகாக்க முடியாத ,எதிராளியிடம் மீண்டும் மீண்டும் அடிவாங்கியும் தன்னைக் காத்துக் கொள்ள முடியாத பாத்திரங்களே மேற்சொன்ன நகைச்சுவை நடிகர்களுக்கு நீடித்த புகழை ஏற்படுத்திக் கொடுத்தவை. வடிவேலு அதை மிகச்சரியாக அடையாளம் கண்டு மேலும் மேலும் அந்த அடையாளத்தை செம்மைப் படுத்தினார்.

அவரது புகழ் உச்சத்திற்கு சென்ற காலகட்டம் தமிழ் சமூகம் பொருளாதார ரீதியாக ஏற்றம் கண்ட காலம். பல்லடுக்கு சந்தைப்படுத்துதல் (MLM) துவங்கி 16 மணி நேரம் உழைக்கச் சொல்லும் வாசகங்கள் ஸ்டிக்கர்களாக வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஒட்டப்பட்டும், சுய முன்னெற்ற நூல்கள் அதிகம் வாசிப்பிற்குள்ளாகியும், சமூகம் முழுக்க உருவான புதிய புதிய வேலை வாய்ப்புகள், பணியிட பதவிகளை அடைய வேறெந்த கவனச் சிதறலும் இல்லாத குவி உழைப்பும், கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேலைநேரம் தாண்டியும் பணிபுரிதல் வரை “வாய்ப்பும், உழைப்பும்” ஒவ்வொரு நிமிடமும் உச்சாடனம் செய்ய வேண்டிய மந்திர வார்த்தைகளாக குடும்பம் துவங்கி, ஊடகம் வரை போதனை செய்யப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான். சகல துறைகளிலும் தேவைப்படுகிற ஒன்றாக தொழில்நுட்ப அறிவு பரவியதும் அப்போதுதான்.

வடிவேலு இந்தக் காலகட்டத்தின் பைத்தியக்கார பரபரப்பை தன்னுடைய உழைப்பிலிருந்து விடுவித்துக் கொண்ட, வாய்ப்பிற்காக எல்லோரும் சமரசம் செய்துகொண்டு எவ்வித அவமானங்கள் நேர்ந்தாலும் தொடர்ந்து உழைக்கிற சமூகத்தில் அதே அவமானங்களை தன்னுடைய உழைப்பின்மையால் சந்திக்க நேர்கிற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, உழைத்துக் களைத்த சமூகம் அல்லது உடல் உழைப்பிலிருந்து நீங்கிய, நீங்க விரும்பும் சமூக உற்பத்தியில் ஈடுபடும் அனைவருக்கும் திரைப்பட பிரதிபலிப்பாக இருந்தார். இந்தத் தொடர்ச்சியின் உச்சமாக தன்னுடைய மனைவியோடு பாலுறவில் ஈடுபடவதைக் கூட வேலையாகக் கருதி அதனின்றும் தன்னை நீக்கிக் கொள்ளும் சோம்பேறியாக ஒரு படத்தில் நடித்தார். வடிவேலுவை உச்சபட்ச நகைச்சுவை நடிகராக ஏற்றதின் மூலம் உழைப்பு உருவாக்கும் சலிப்பிற்கு எதிர்வினையாக, உழைப்பினின்று நீங்கும் விருப்பத்தை தற்காலிகமாக Park செய்யும் மெய்நிகர் வெளியாக அவரைக் கண்டோம். சோம்பேறித்தனத்தை, முட்டாள்தனத்தை ஓய்வு நேரம் முழுக்க ரசிக்க வைத்தது 21ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தமிழ் சமூகத்தில் நிகழ்ந்தவற்றிற்கான எதிர்வினையாக பார்க்க முடிகிறது.

2

குடும்பத்தில் கூட நகைச்சுவை கதாபாத்திரங்கள் பெருமைப் படுத்தப்படும் வண்ணம் அமைக்கப் பெறுவதில்லை. வடிவேலு திருமணமான ஒரு கதாபாத்திரமாக நடித்தால் கண்டிப்பாக அவரது மனைவியிடம் அடிவாங்குவார் அல்லது அவமானப்படுவார்.

காதலியிடம் அடிவாங்கும் நாயகர்களைக் கூட நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் மனைவியிடம் அடிவாங்கும் நாயகனை ஒரு படத்தில் கூட பார்த்ததில்லை.

நாயகர்களின் மனைவிகளுக்கு கிடைக்காத வாய்ப்பு நகைச்சுவை பாத்திரங்களின் மனைவிகளுக்கு தாராளமாக கிடைத்தது. இந்த வகையிலும் வடிவேலு வேறெந்த நகைச்சுவை நடிகர்களை விடவும் இவ்வாய்ப்பை தனது துணை பெண் கதாபாத்திரங்களுக்கு அதிகமாக வழங்கினார். கவுண்டமணி “என் ஆசை ராசாவில்” மனைவியிடம் அடிவாங்குபவராக நடித்தாலும் வீட்டை விட்டு வெளியே வரும் போது அவர்தான் மனைவியை அடித்தவராக நடித்திருப்பார். ஆனால் வடிவேலுவின் பாத்திரங்கள் பொது இடங்களில் கூட மனைவியிடம் அடிவாங்குபவையாக இருக்கும்.

மனைவி கதாபாத்திரங்களில் மட்டுமல்ல வெளியில் கடைக்காரப் பெண்கள், கூடைக்காரிகள், தெருவில் உணவு தயாரித்து விற்பவர்கள், பயணம் செய்யும்போது உடன்வருபவர்கள் என அனைத்து சமூக மட்டங்களிலும் இயங்கும் பெண்களிடம் அதிகம் “அடிபட்ட” நகைச்சுவை நடிகர் தமிழ் சினிமாவில் இவர் மட்டுமே.

”திமிர்” படத்தில் “பொம்பளை சோடா வேணுமா, ஆம்பளை சோடா வேணுமா?” எனக் கேட்டு அதற்கு விளக்கமும் அளிக்கும் பெண் கதாபாத்திரம் வடிவேலுவின் வழியாக மொத்த ஆண்களையும் ஏளனம் செய்கிறாள்.

பாலுறவிற்கும் வாய்ப்பில்லாத, மனைவி முதலாக அனைத்துப் பெண்களாலும் அவமானத்திற்கும், ஏளனத்திற்கும் உள்ளான பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கும் துணிச்சல் மிக்க, வேறெந்த முன்னுதாரணங்களும் அற்றவர் வடிவேலு.

தமிழ் சினிமாவின் பெண் கதாபாத்திரங்களோடு ஆண் கதாபாத்திரங்கள் கொள்ளும் உறவின் பல வழமைகளை உடைத்தவர்.

அதேபோல சிறுவர்கள். வடிவேலுவுடன் ஒரு சிறுமியோ, சிறுவனோ தோன்றினால் நிச்சயம் அவர்களிடமும் அவர் “மொக்கை” வாங்குவார். “தலைநகரம்” படத்தில் மூடை தூக்கும் காட்சியில் ஒரு குண்டு சிறுவனிடம் காட்டும் உடல்மொழி மற்றும் வசனங்கள் ஒரு நகைச்சுவை நடிகனின் அதிகபட்ச எல்லையைத் தொடுபவை.

3

வடிவேலுவின் மகத்தான பங்களிப்பாக தமிழ் சமூகத்தின் அன்றாட பேச்சு மொழியை மாற்றி அமைத்த அவரது திரைப்பட உரையாடல்களை சொல்லலாம்.

“அது போன மாசம். இது இந்த மாசம்” எனும் வசனம் புழங்காத ஒரு அலுவலகம் இருக்கிறதா?

“வரும் ஆனா வராது”, “அய்யோ அய்யோ”, “பயபுள்ள” என அவர் பயன்படுத்திய வசனங்களும், சொற்களும் தமிழ்சமூகத்தின் மொழிப் பாவனையில் ஊடுருவி நிற்கின்றன.

பெர்டோலுச்சியின் “Dreamers” படத்தில் அண்ணன், தங்கை மற்றும் அவர்களது தோழன் மூவரும் ”புதிய அலை” சினிமாக்களின் தாக்கத்தால் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சினிமாக்காட்சிகளை குறிப்பிடுவதை(Refer) “புதிய அலை” சினிமா ஃப்ரெஞ்ச் சமூகத்தில் எவ்வித மாற்றத்தை உண்டாக்கியது என்பதற்கான ஓர் உதாரணமாக கொள்ளலாம்.

வடிவேலு தோன்றும் திரைப்படங்களை குறிப்பிட்டு, “வடிவேலு ஒரு படத்துல சொல்வானே” எனும் வாக்கியத்தை இன்றைக்கு தமிழ் சமூகம் தன் ஒவ்வொரு நாளின் உரையாடலிலும் அவரை பிரதி செய்து பெருக்கி வைத்திருக்கிறது. வடிவேலு அளவிற்கு தமிழர்களின் பேச்சு வழக்கை மாற்றி அமைத்த சினிமா கலைஞன் தமிழ் சினிமாவின் முக்கால் நூற்றாண்டிற்கும் மேலான வரலாற்றில் ஒருவரும் இல்லை.

வடிவேலு தமிழ் சமூகத்தின் திரைக்கலை வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாபெரும் நிகழ்வு (Phenomenon). நவீன வாழ்க்கையின் நெருக்கடியிலிருந்து வடிவேலு அளித்த தற்காலிக மீட்பை தமிழர்கள் ஒவ்வொரு நாளும் போற்றினர்.

4

Laughter என்பது Malice என்று எஸ். சண்முகம் என்னிடம் சொன்னதுண்டு. வடிவேலு செய்தது தன்னைத் தானே காயப்படுத்துதல் மட்டுமே. அவ்வகையில் அவரது கதாபாத்திரங்களின் தொடர்ச்சி வழியாக அந்த மகத்தான கலைஞன் உருவாக்கிய Laughter தன்னுணர்வுடன் செய்யப்பட்ட ஒரு தியாகம்.

5

யாரும் எதிர்பாராத அவரது வெளியேற்றம் சட்டென துண்டான ஒரு தொடர்ச்சியை எதிர்கொள்ளும் நெருக்கடியை தமிழ் சமூகத்திற்கு உண்டாக்கிவிட்டது. அந்த வெற்றிடத்தை எதிர்கொள்ள உடனடியாக இட்டு நிரப்பிய பதிலிதான் இப்போது முன்னணிக்கு வந்திருக்கும் பிற நகைச்சுவைக் கதாபாத்திரங்கள். இடைவெளியை நிரப்பிய பதிலிகள் திரையின் ஞாபகத்தில் வடிவேலுவை வெகுதூரம் பின்னுக்கு தள்ளிவிட்டார்கள். 6

திரைப்பட மறுபிரவேசம் தியாகராஜ பாகவதர் முதல், கவுண்டமணி, வடிவேலு வரை பெரும் சலனமின்றி கரைந்து போனவையே. வடிவேலுவின் மீள் வருகை ஒரு பெருமை மிகுந்த காலத்தின் சிதிலமடைந்த சித்திரங்களின் மீது பூச்சுக்களை பூசும் முயற்சியே. அவரது, பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மீள்வருகை திரைப்படமான “தெனாலிராமன்” தோல்வியடைந்த ஒன்றே (வர்த்தகம் குறிப்பிடப்படவில்லை). அவரது பயணத்தில் ஏற்பட்ட இடைவெளி நமக்கு ஒரு Referral Pointஐ உருவாக்கிவிட்டது. இனி அவர் தொடர்ந்து நடித்தாலுமே கூட “முன்பு அவர் நடிச்ச மாதிரி இல்லையே” எனவே சொல்வோம்.

வடிவேலுவின் மீள் வருகைக்காக காத்திருக்க யாருக்கும் நேரமில்லாத போதும் இன்றும் தமிழ்சமூகத்தில் ”மொழிவழி தோற்றம் பெரும் மனிதராக” அவர் உலவுகிறார்.

http://malaigal.com/?p=5196

வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன்

வடிவேலுவின் மகத்தான பங்களிப்பாக தமிழ் சமூகத்தின் அன்றாட பேச்சு மொழியை மாற்றி அமைத்த அவரது திரைப்பட உரையாடல்களை சொல்லலாம்.

“அது போன மாசம். இது இந்த மாசம்” எனும் வசனம் புழங்காத ஒரு அலுவலகம் இருக்கிறதா?

“வரும் ஆனா வராது”, “அய்யோ அய்யோ”, “பயபுள்ள” என அவர் பயன்படுத்திய வசனங்களும், சொற்களும் தமிழ்சமூகத்தின் மொழிப் பாவனையில் ஊடுருவி நிற்கின்றன.

இன்றும் தமிழ்சமூகத்தில் ”மொழிவழி தோற்றம் பெரும் மனிதராக” அவர் உலவுகிறார்.

 

இணைப்புக்கு நன்றி கிருபன்.

உண்மையில் பல தரப்பு மக்களின் நகைச்சுவை மொழி நடையை மாற்றியமைத்த கலைஞன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.